அஷேரா – 4

4

எகெரி ஏரிக் கரையோரச் சதுப்பு நிலத்திலிருந்து செங்குத்தாக மேலெழுந்த குன்றின் அப்பால் பச்சைப் புல்வெளிகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளுமாக நிலம் விரிந்திருந்தது. அது சுவிற்சர்லாந்தின் ஆதி நிலங்களில் ஒன்று. மரச் சட்டங்களாலான வீடுகளும், செம்மறி ஆடுகள் மேயும் பண்ணைத் தோட்டங்களும் என இன்னமும் பழைமையின் முகம் சிதையாத கிராமம். வளைந்து வளைந்து மேலேறும் ஒரேயொரு பாதையைத் துண்டித்துவிட்டால் உலகத்திலிருந்தே வெளியேறிவிடும்போல. அங்கிருந்த ஒரு அகதி முகாமிற்குத்தான் அருள்குமரனை அனுப்பி வைத்தார்கள்.  

அன்றைக்குக் கடும் பனி. குளிரில் உறைந்த வெண் மேகத்தைச் சீவிச் சீவிக் கீழே தள்ளுவதைப்போல கொட்டிக் கொண்டேயிருந்தது. அவன் தொடருந்தில் இருந்து இறங்கி தபால் நிலையத்தை நோக்கி நடந்தான். அங்கிருந்துதான் அகதி முகாமிற்குப் பேருந்துகள் புறப்படுகின்றன. ஐந்து மணிக்கே நடுச் சாமம்போல இருட்டிவிட்டது. தெரு விளக்குகள் மஞ்சள் ஒளியைச் சிந்தின. பெரிய பெரிய தேங்காய்த் துருவல்களைப்போல இறங்கிய பனியை வழித்து ஓரமாகக் குவித்திருந்தார்கள். இரண்டு பக்கமும் பனியாலான அணை எழுப்பிய பதுங்கு குழிபோன்ற பாதை. கரித்தாஸ் நிறுவனம் கொடுத்த தடித்த குளிராடையை அணிந்திருந்தாலும், தேங்காயத் துருவல்கள் பின் கழுத்தில் விழுந்து சில்லிட்டபடி ஊர்ந்தன. கால்களில் கூதல் ஏறியது. முகத் தசைகள் விறைத்திருந்தன. வாயைத் திறந்தாலே புகையாக வெளியேறியது. தபால் நிலையத்திலிருந்து கடைசி பஸ் ஆறு மணிக்குப் புறப்பட்டிருந்தது. இப்போது சரியாக ஆறு மணி மூன்று நிமிடம். 

அருள்குமரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரையாவது கேட்கலாமென்றால் ஊரடங்கு மாதிரி ஆளரவமே இல்லை. முதுகுப் பையிலிருந்த நேர அட்டவணையை எடுத்து வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தான். நிறைய ஊர்ப் பெயர்கள் ஒரே மாதிரி இருந்தன. ஒன்றிரண்டு எழுத்துக்கள்தான் வித்தியாசம். அப்படியொன்றில் குழம்பி, தொடருந்தில் மாறி ஏறியதில் நேரம் போய்விட்டது. இரண்டாவது தரிப்பிடத்தில் ரிக்கெற் பரிசோதகர்தான் கண்டுபிடித்தார். “நண்பரே.. இந்தப் பாதை ரோமுக்குச் செல்லாது.” என்று சிரித்தவாறு அவனை இறங்கச் சொன்னார். திரும்பவும் புறப்பட்ட இடத்திற்கே போய், சரியான தொடருந்தில் ஏறி.. 

ஒரே இடத்தில் நிற்கக் குளிர் தின்றது. அங்கும் இங்குமாக நடந்தான். ஒண்டுக்கு வருமாப்போல இருந்தது. அடிக்கடி வருகிறது. பக்கத்தில் எங்காவது கழிவறைக்கான அடையாளக் குறி தென்படுகிறதா என்று பார்த்தான். அந்த நிலமே பனி யுகக் காலத்தைப்போல தோன்றியது. வீட்டுக் கூரைகளையும் கார்களையும் மூடிக் கொட்டிய பனி. பாதையை ‘க்ர்..’ என்று வழித்தவாறு ஒரு புல்டோசர் போனது. அருள்குமரன் சற்றுத் தூரத்தில் ஓர் ஏரியைக் கண்டான். கரையோர வெளிச்சங்களில் தண்ணீர் மினுங்கி மினுங்கித் தணிந்தது. அதை நோக்கி நடந்தான்.

0

ஏரியின் கரையில் தண்ணீர் ‘சளக் சளக்’ என்று முட்டித் தளம்பியது. பரந்து விரிந்த நீர்ப் பரப்பாக இருக்க வேண்டும். எதிர்ப் புற கரை எங்கோ தொலைவில் இருட்டுக்குள் தொலைந்திருந்தது. காற்றிலும் பலத்த குளிர். அருள்குமரன் அகதி முகாமிற்கு நடந்தே போய்விடுவதென்று தீர்மானித்தான். இருட்டுத்தானே ஒழிய ஏழு மணி கூட ஆகவில்லை. எப்படியும் ஏற்றப் பாதையாகத்தான் இருக்கும். பரவாயில்லை. திரும்பி நடந்தான். அப்போதுதான் அவன் முதன் முதலாக அற்புதத்தைச் சந்தித்தான்.

அற்புதம் கம்பளியாலான தலைக் குல்லாவும் கழுத்தைச் சுற்றிச் சால்வையும் அணிந்திருந்தார். குல்லாவும் மீசையும் முகத்தின் பெரும் பகுதியை மறைத்தன. ‘எப்பிடியோ.. ஒரு தமிழரைக் கண்டாச்சு.’ அருள்குமரன் பெருத்த ஆசுவாசமாக உணர்ந்தான். அவரை நோக்கி நடந்தான். ஐந்தாறு எட்டுகள்தான். கால்கள் திடீரென்று தயங்கி நின்றன. ‘ஒருவேளை எரித்திரிய ஆளோ?’ முன்னர் தங்கியிருந்த இடைத் தங்கல் முகாமில் ஏழெட்டு எரித்திரியர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அச்சு அசல் தமிழ் முகம். யோனாஸ் என்ற ஒருவன் முதல் தடவை சிநேகிதபூர்வமாகச் சிரித்தபோது “அண்ணை.. யாழ்ப்பாணத்தில எந்த இடம்” என்றுதான் அருள்குமரன் கேட்டான். யோனாஸ் எப்பொழுது கண்டாலும் “ஹலோ.. தமிழ் ரைகர்..” என்று கூப்பிடுவான். ஓர் இரகசியத்தைப் பகிர்வதைப்போல “புலிகளுடைய விமானங்கள் எங்களுடைய நாட்டிலேதான் தரித்து நிற்கின்றன. அவர்களுடைய கப்பல்களுக்கு எங்களுடைய துறைமுகங்களிலேதான் டீசல் நிரப்புவோம்.” என்று சொல்வான். போகிற போக்கில் ‘பொட்டம்மானுக்கு’ நான் தான் வாகனச் சாரதி என்று சத்தியம் செய்வான்போல. இங்கே தஞ்சம் கோருகிற பத்துத் தமிழர்களில் இரண்டு பேராவது பொட்டம்மானுக்குச் சாரதியாக இருந்தவர்களாம். பிற்காலங்களில் ஒருநாள் “இங்க எண்பதாம் ஆண்டுக் காலத்தில தஞ்சம் கேட்ட பத்துத் தமிழர்களில பத்துப் பேருமே துரையப்பாவைச் சுட்ட வழக்கில தேடப்படுகிற ஆட்களாகத்தான் இருந்தாங்கள்.” என்று அற்புதம் சொன்னார். 

எரித்தியர்கள், சோமாலியர்கள், சூடான்காரர்கள் எல்லோரையும் முகாமிலிருந்த தமிழ்ப் பெடியன்கள் ‘கறுப்பன்கள்.’ என்றுதான் விளித்தார்கள். “கறுப்பன்கள் கள்ளன்கள்.” “கறுப்பன்கள் கதைக்கிறது சண்டை பிடிக்கிறது மாதிரியிருக்கும்.” “கறுப்பன்களுக்குப் பெரிசு.”

அருள்குமரன் தனித்த ஓர் ஆளாக நின்று தயங்கியதை அற்புதமும் கண்டிருக்க வேண்டும். “நீங்கள் தமிழா மகன்..?” என்று கேட்டவாறு கிட்ட வந்தார்.

“ஓம்.” என்று தலையாட்டினான்.

“மேலே முகாமுக்கு அனுப்பியிருக்கினமா?”

“ஓம்.”

“இப்பதானே கடைசி பஸ் போனது. இனி விடிய ஆறுக்குத்தானே வரும்.”

அருள்குமரன் அவர் ஏதாவது தீர்வு சொல்லுவார் என்பதைப்போல கொஞ்ச நேரம் காத்திருந்தான். பிறகு “முகாமுக்கு நடந்து போகலாமா?” என்று கேட்டான்.

“ரோட்டுப் பாதை சரியான தூரம். நடக்கக் கூடிய ஒற்றையடி மலைப் பாதைகள் இருக்கு. வெயில் காலத்தில் மேலேயிலிருக்கிற மாதா கோவிலுக்கு நடந்தே போவார்கள். ஆனால் குளிர் காலத்தில் ஏலாது. பனி வேறு கொட்டுகிறது. கொஞ்சம் சறுக்கினாலும் உருண்டு பிரண்டு கீழேதான் வரவேண்டும்.” அவர் பெரியதொரு ப்ளாஸ்ரிக் பையில் வெற்று மதுப் போத்தல்களும், பியர் ரின்களும் நிரப்பி வைத்திருந்தார். “சரி வாங்க. யோசிப்பம்.” என்றுவிட்டு நடந்தார். அருள்குமரன் பின்தொடர்ந்தான். தபால் நிலையத்திற்கு அருகில் குப்பைத் தாங்கிகள் இருந்தன. அவற்றில் பச்சைப் போத்தல்கள், வெள்ளைப் போத்தல்கள், அலுமினிய ரின்கள் என்று பிரித்துப் பிரித்து உள்ளே தள்ளினார். போத்தல்கள் வழுக்கிச் சென்று சிதறி உடைந்தன. பையை உதறிக் கொட்டினார். சுருட்டி குளிராடைக்குள் செருகி வைத்தார். நடந்து தெருவில் ஏறியபோது அருள்குமரனும் வருகிறானா என்று திரும்பிப் பார்த்தார். “மத்தியானம் என்ன சாப்பிட்டீங்கள்?” 

“இன்னும் சாப்பிடேல்லை.”

குத்தெனச் சாய்ந்த மேற் கூரையையும் மரச் சட்டங்களைப் பொருத்திய சுவரையும் கொண்ட ஒரு வீட்டிற்கு முன்னால் வந்து நின்றார்கள். உள்ளே வெளிச்சம் இருந்தது. அற்புதம் வாசலை நோக்கி நடந்து வலது புறத்தில் நிலத்திற்குள் தாழும் படிகளில் இறங்கினார். “பார்த்துக் கவனமா இறங்க வேணும். பனி வழுக்குது.”

அருள்குமரன் பாதாளக் குகைக்குள் இறங்குவதைப்போல காலடிகளை வைத்தான். கதவைத் திறக்கும் வரைக்கும் காத்திருந்ததுபோல மீன் பொரித்த எண்ணெய் மணம் வெளியேறியது. காலணியைக் கழற்றி வைத்தான். காலுறை இருக்கட்டும். வரவேற்பறையில் இருந்த கார்ப்பெட்  விரிப்பு அழுக்கேறி, ஓரங்களில் கிழிந்திருந்தது. ஒரு குட்டி மேசையில் தொலைக்காட்சிப் பெட்டி. எதிரில் மூன்று பேர் நெருக்கிக்கொண்டு அமரத்தக்க ஒரு சோபா. பஞ்சைப் பொதித்த கதகதப்பான வெள்ளைப் போர்வை சோபாவில் குமைந்து கிடந்தது. பக்கத்தில் ஒரு பழைய கொம்யூட்டர். ‘இங்க இன்டர்நெட் இருக்குமோ?’ தொலைக்காட்சியில் மேலே மிச்சச் சாப்பாட்டோடு இருந்த பீங்கான் கோப்பையை அற்புதம் எடுத்துக்கொண்டு குசினிக்குப் போனார். போகிற வழியில் ஒரு கதவைக் காட்டி “இதுதான் பாத்ரூம். போறதெண்டால் போங்க.” என்றார்.  

நெருப்புப் பெட்டி அளவு வீடுதான். குசினி, குளியலறை, தொலைக்காட்சியும் சோபாவும் இடத்தை விழுங்கிய வரவேற்பறை, உடுப்புக் கொழுவிகளையும் ஒற்றைக் கட்டிலையும் கொண்ட படுக்கையறை. இவ்வளவும்தான். “மேல் வீட்டில் வெள்ளைக்காரக் கிழவனும் கிழவியும் இருக்கிறாங்கள். பெரும் காசுக்காரர். சொந்தமா ஒரு செம்மறி ஆட்டுப் பண்ணையும் மேய்ச்சல் நிலமும் வீட்டுக்குப் பின்னாலயே இருக்கு. மேல வீடு பெரும் மாளிகைதான். கீழ்த் தளத்தை மட்டும் ரெண்டாப் பிரிச்சு ஒண்டை வாடகைக்கு விட்டிருக்கிறாங்கள். இன்னொன்றுக்குள்ள முழுக்கவும் வைன் போத்தல்கள்தான். நான் பத்துப் பன்னிரெண்டு வருசமா இதுக்குள்ளதான். தனிச் சீவனுக்குத் திருப்தியாப்போதும்.”

அற்புதம் அகதிகள் முகாமின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து ஜெர்மன் மொழியில் பேசினார். வெட்டியெடுத்த கட்டித் துண்டுகளாக சொற்கள் விழுந்தன. அவர் சரளமாகவா அல்லது உடைந்த மொழியிலா பேசினார் என்று தெரியவில்லை. தொலைபேசியை வைத்துவிட்டு “நீங்கள் நாளைக்கு விடியத்தான் வருவீங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

0

பியர் ரின்னின் வாயை இழுத்துத் திறக்கவும் பால் பொங்குவதைப்போல நுரை தள்ளியது. அற்புதம் உதடுகளைக் குவித்து உறிஞ்சியவாறு சோபாவிற்குள் முழுக்கப் புதைந்தார். மீசையை நனைத்த ஈரத்தை புறக் கையால் தேய்த்து விட்டார். “நான் கொஞ்சம் தண்ணி பாவிப்பன். உங்களுக்கு அந்தரமா இல்லைத் தானே?”

அருள்குமரன் அவருக்கு வசதியாக, போர்வையை இழுத்து ஒதுக்கினான். அவனுக்கு நித்திரை சுழன்றது. இந்த சோபாவில்தான் படுத்துக்கொள்ள வேண்டும்போல. கார்ப்பெட் விரிப்பு குளிர்ந்தது. என்னதான் வெப்பக் கணப்பியிலிருந்து சூடு கிளர்ந்தாலும் நிலத்திற்கு அடியில் இருக்கின்ற நிலம்தானே.. தொலைக்காட்சித் திரையில் ஏதோ குத்துச் சண்டைப் போட்டி நடந்துகொண்டிருந்தது. நான்கு பக்கமும் கயிறு கட்டிய மேடையில் நின்று காட்டுக் கூச்சலோடு பொருதினார்கள். பிடரியைச் சிலுப்பிக்கொண்டு கத்தினார்கள். குதித்தார்கள். அற்புதம் அவர்களை வைத்த கண் நீங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சியின் வெளிச்சம் அவருடைய கண்களில் ஒளிர்ந்தது.

“என்னைப் பற்றிச் சொல்லுறதுக்கு பெரிசா எதுவும் இல்லை. எப்பிடியும் இங்க இருக்கிற தமிழ்ச் சனம் என்னைப் பற்றி உங்களுக்கு எதையாவது சொல்லும். அதுக்குப் பிறகு நீங்கள் வருவீங்களோ.. வரமாட்டீங்களோ.. யாருக்குத் தெரியும்.. அதனால இண்டைக்கே கொண்டாடி விடுவோம்.” அற்புதம் இரண்டாவது பியர் ரின்னை கவிழ்த்துக் குடித்த பிறகு சிவாஸ் விஸ்கியை குவளைக்குள் ஊற்றினார். கை நடுக்கத்தில் குவளையின் விளிம்புகளில் மது சிந்தியது.

“இவங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்.. தளையத் தளைய வேட்டியும் சீலையும் கட்டிக்கொண்டு கலியாண வீட்டுக்கும் சாமத்திய வீட்டுக்குப் போய்த் திரிஞ்சால் மட்டும் ‘நாங்கள் தமிழர்’ எண்டு நெஞ்சு நிமிர்த்தலாமா? தமிழாம்.. தமிழீழமாம்.. இவங்களுக்குத் தமிழீழம் பற்றி என்ன தெரியும்? அது என்ன நிறமெண்டாவது தெரியுமா? சரி உனக்காவது தெரியுமா.. நீ சொல்லு தமிழீழம் என்ன நிறம்?”

சிவப்பும் மஞ்சளும் என்று வாய்வரை வந்துவிட்டது. ஆனால் சொல்லவில்லை.  அவர் ‘வா.. போ..’ என்று ஒருமைக்குத் தாவியபோதே ‘முழு வெறி’ என்று புரிந்துவிட்டது. இந்த நேரத்தில் சீண்டக் கூடாது. அருள்குமரன் அமைதியாக இருந்தான்.

அற்புதம் திடீரென்று “டேய்..” என்றார். “நானும் இயக்கம்தான் தெரியுமோ உனக்கு?” என்று நெஞ்சை அறைந்துகொண்டு கேட்டார். குத்துச் சண்டை வீரனைப்போல தலையைச் சிலுப்பினார். “இங்க எவனுக்கும் தெரியாது. தெரிஞ்சுது எண்டால்…” சட்டென்று அமைதியாகி மேலே வெறித்தார். கண்களில் நீர் கோர்த்திருந்தது. அடங்கிய குரலில் “தெரிஞ்சு என்ன செய்ய..? எட்டப்பன்.. காக்கை வன்னியன்.. துரோகி.. ஒட்டுக்குழு.. இந்த வரிசைதானே எனக்கும்..”     

தொன்னூறாம் வருடம் இந்திய இராணுவத்தினர் இலங்கையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது அற்புதம் சுவிட்சர்லாந்துக்கு வந்தாராம்.  அதற்குச் சரியாகப் பத்து மாதங்களுக்கு முன்னர் அவரைக் கொழும்பிலிருந்து வழியனுப்பி வைத்த முகவர் “ஐரோப்பாவில அகதிக் கேஸ் கொடுக்கும்போது இந்தியன் ஆமியோடு இருக்கிற தமிழ் ஒட்டுக் குழுக்களால் உங்கடை உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லுங்கோ. அப்பதான் கேஸ் கெதியில வெல்லும்.” என்று சொல்லியிருக்கிறான். அற்புதம் அங்கிருந்து பழைய சோவியத் யூனியனுக்குப் போய் காடு, மேடு, ஆறு, பனி எல்லாம் கடந்து ஒருவாறாக போலந்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு வைத்து அவரைச் சந்தித்த முகவர் “இந்தியன் ஆமி வெளியேறின பிறகு அந்த ஒட்டுக் குழுக்களுக்குத்தான் இலங்கையில இப்ப உயிராபத்து. அதனால உங்களுக்குப் புலிகளால ஆபத்து என்று சொல்லுங்கோ. கேஸ் உடனை வெல்லும்.” என்றிருக்கிறான்.   

0

அற்புதம் சுவிற்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியபோது அந்த வழக்கு நீண்டகாலமாக இழுபட்டது. அதிகாரிகள் நிறைய ஆவணங்களைக் கேட்டு அலைய வைத்தார்கள். இந்தச் சத்தியக் கடதாசி ஒரு முக்கியமான துணை ஆவணம். 

பெயர்: சிவப்பிரகாசம் அற்புதராஜா
வயது: 24
முகவரி: பாத்திமா அவெனியு கல்முனை, இந்து சமயம்

1.  யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்குப் பின்னாலிருந்த வீட்டுக்கு யார் ‘கந்தன் கருணை’ என்று பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. அங்குதான் புலிகள் கைதிகளை அடைத்து வைத்திருந்தார்கள். திடீரென்று ஒருநாள் அங்கிருந்த முப்பது ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களையும், ஏழு மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர்களையும், மூன்று கடை முதலாளிகளையும், நான்கு ரெலோ இயக்க உறுப்பினர்களையும் இந்து மகளிர் கல்லூரிக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு மேல் மாடி வீட்டுக்கு இடம் மாற்றினார்கள். என்னை அவர்கள் ரெலோ இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கைது செய்திருந்தாலும் நான் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல.

2. புலிகளுடைய உளவுத் துறை உறுப்பினர்கள் எங்களை விசாரணை செய்தார்கள். எஸ்-லோன் பைப்புகளாலும், மண்வெட்டிப் பிடிகளாலும் குழறக் குழற அடிவிழும். நாங்கள் பதின்நான்கு பேர் மேல் மாடியில் அடைக்கட்டிருந்தோம். கீழே இடதும் வலதுமாக இருந்த இரண்டு அறைகளில் மற்றயவர்கள். ஒண்டுகிருக்கப் போவதற்குக் கூட, காவலிருந்த புலிகளிடம் கெஞ்ச வேண்டும். சாப்பாட்டு நேரத்தில் மட்டும் அறையைத் திறந்து விடுவார்கள். கைதிகளுடைய சொந்தக்காரர்கள் வந்து பார்ப்பதற்கு அனுமதி இருந்தது. என்னைப் பார்க்க யாரும் வந்ததில்லை.

3. 1987ம் ஆண்டு, மார்ச் மாதம், 30ம் திகதி. இரவு ஒன்பது மணி இருக்கும். நான் சாப்பிடுவதற்காக இறங்கிக் குசினிக்கு வந்தேன். கொஞ்சப் பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மிச்சப் பேர் அறைகளிலேயே இருந்தார்கள். திடீரென்று வெளியே துவக்குச் சுடுகிற சத்தம் கேட்டது. முதலில் ஏதோ மாறி அமத்திவிட்டார்கள் என்றுதான் நினைத்தேன். என்றாலும் ஓர் உள்ளுணர்வு, ‘ஓடு.. ஓடு.. ஓடிப்போய் ஒளி..’ என்று கொண்டேயிருந்தது. குசினியின் அடுப்பு மேடையில் ஏறி ஒரே தாவலில் புகைக் கூட்டிலிருந்த வெளிச்ச ஓட்டையில் கால்களை வைத்து மறைந்து கொண்டேன்.

4. அவனுடைய பெயர் அருணா என்று எனக்குப் பிறகுதான் தெரியும். அவனைப் பிடித்து வைத்திருந்த சிங்கள ராணுவத்திற்கே அவன்தான் அருணா என்று தெரியாதாம். அவனும் இன்னும் இரண்டு பேரும் காட்டுக் கூச்சலோடு வீட்டுக்குள் நுழைந்தார்கள். பச்சைத் தூஷணம் புகைக் கூண்டு வரை கேட்டது. அருணா வந்த வேகத்திலேயே வலப் புற அறையில் இருந்தவர்களை நோக்கி எம் 16 துவக்கால் சுட்டுத் தள்ளத் தொடங்கினான். என்ன நடக்கிறது என்று அறிய முன்னமே அங்கிருந்தவர்கள் செத்துச் செத்து விழுந்திருப்பார்கள். அழுகுரல்களும் சா ஓலமும் காதுகளைச் செவிடாக்கின.  

5.  கொஞ்சம் அமைதி. ஒருவாறாக வெடிச்சத்தம் ஓய்ந்து விட்டது என்று நினைத்தேன். இல்லை. அருணா கத்திக் கொண்டு மாடிப் படிகளில் ஓடினான். அங்கிருந்தவர்களை நோக்கி அவனுடைய துவக்கு சன்னங்களைத் துப்பத் தொடங்கியது. ‘சுட வேண்டாம். சுட வேண்டாம்.’ என்று கெஞ்சினார்கள். ரவைகள் தீருமட்டும் அருணா சுட்டுக்கொண்டே இருந்தான். மறுபடியும் அமைதி. இப்போது அவன் வெளியேறி இருக்க வேண்டும். தப்பிச் செல்வதற்கு இருந்த ஒரேயொரு சந்தர்ப்பத்தை நான் பரீட்சித்துப் பார்ப்பதென்று முடிவு செய்தேன். கீழே குதித்து வாசலை நோக்கி ஓடத் தொடங்கினேன். வழியெல்லாம் ரத்தம். வெடிமருந்து மணமும் இரத்த வாடையும் மூக்கைத் துளைத்தன. செத்துக் கிடந்தவர்களைக் காணச் சகிக்கவில்லை. மரக் கிளைகளை முறித்துப் போட்டதைப்போல உடைந்து கிடந்த கை, கால்கள்.. வயிறு பிளந்து வெளியே நொளு நொளுத்த குடல்.. ரத்தக் கண் குழி.. காலடியில் ‘தண்ணி.. தண்ணி..’ என்ற முனகல் கேட்டது. யாரோ சாகவில்லை. குரல்வளை அறுபட்ட ஆட்டின் கதறலைப்போன்ற குரல். என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஓடினேன்.

6. நான் மட்டுமல்ல, இன்னும் நான்கு ஐந்து பேரும், உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்தோம். வெளி வாசலைத் தாண்டி ஓட முற்பட்டபோது காவலுக்கு இருந்த புலிகள் ‘யாரடா அது?’ என்று கூச்சலிட்டவாறே எஸ்.எம்.ஜி துவக்கை எங்கள் மீது திருப்பினார்கள். அது  சடசடத்துவிட்டு ஓய்ந்தது. நான் சடலங்களோடு சடலமாகக் கீழே விழுந்தேன். எனக்கு மேலே தங்கா விழுந்தான். அவனுடைய மூளை சிதறி என்னுடைய கழுத்தில் கொழுப்புப்போல வழிந்தது. நேற்றுத்தான் அவனுடைய மனைவி, குழந்தையைத் துணியில் சுற்றிக்கொண்டு வந்து காவலுக்கு இருந்த புலி உறுப்பினனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். “பாருங்கோ.. ரெண்டு மாசமும் ஆகாத பிஞ்சுக் குழந்தை. ஒரே ஒருக்கா தகப்பன்ரை முகத்தைக் காட்டுங்கோ.” அவளை அனுமதிக்கவே இல்லை. “பிள்ளைப் பெத்த வயித்தோடை வேகாத வெய்யிலில இந்த மாதிரி இடங்களுக்கு நீங்கள் வரக்கூடாது அக்கா. நீங்கள் போங்கோ. அவர் ஆறேழு நாளில வீட்டுக்கு வந்து விடுவார்.” என்று திருப்பி விட்டார்கள். இன்னொரு வயதான ஐயா, பாவம். அவர் காலையில் புலியில் இருக்கின்ற தன்னுடைய மகனைச் சந்திப்பதற்காக வந்தவர். அவன் எங்கோ வெளியில் போயிருந்தான். வரும் வரைக்கும் காத்திருக்கச் சொன்னார்கள். அருணா அவரையும் சுட்டு விட்டான். 

7. அந்த முகாமிற்குப் பொறுப்பாளராயிருந்த சந்தியா கொஞ்ச நேரத்தில் அங்கு வந்தான். எதிரியே ஆனாலும் தன்னுடைய பொறுப்பில் இருந்தவர்கள் செத்துக் கிடந்ததைக் கண்டு கலங்குவான் என்று எதிர்பார்த்த நான் ஒரு முட்டாள். அவன் தண்ணீர் கேட்டு முனகிக் கொண்டிருந்தவர்களையும் குறி பார்த்துச் சுட்டான். எல்லோரும் செத்துவிட்டார்களா என்று உறுதி செய்யத்தான் அவன் வந்திருக்க வேண்டும். போய் விட்டான். மயான அமைதி. நான் மெதுவாகத் தலையை உயர்த்திப் பார்த்தேன். யாருமே இல்லை. எழுந்து கால் ஊன்றியபோது தேங்கிக் கிடந்த ரத்தம் தெறித்தது. குசினியை நோக்கி நடந்தேன். அங்கிருந்து பின் வளவுக்கு இறங்கும் கதவு திறந்து கிடந்தது. வளவு மதிலை ஏறிக் குதித்தேன். எத்தனை மதில்கள், எத்தனை வேலிகளைப் பாய்ந்தேன் என்று தெரியவில்லை. குச்சொழுங்கைகளைத் தாண்டி தெருவில் ஏறியபோது யாரோ ஒரு வழிப்போக்கர் தெய்வம்போல சைக்கிளில் வந்தார். ‘அண்ண.. என்னையும் ஏத்திக்கொண்டு போக முடியுமா?’

8. அவர் ஏற்றிக்கொண்டார். போகிற வழியில் பிள்ளையார் கோவில் கிணற்றடியில் உடுப்புக்களைக் கழற்றி தண்ணீரில் கழுவினேன். கழுவக் கழுவ இரத்தம் கரைந்து ஓடியது. முறுக்கிப் பிழிந்து திரும்பவும் போட்டுக் கொண்டேன். சைக்கிளில் ஏறிக் கொஞ்சத் தூரம்தான் போயிருப்போம். எதிரில் வீதியை மண்ணெண்ணெய் பரல்களைப் போட்டு தடுத்து வைத்திருந்த புலிகள் ஒவ்வொருவரையும் நிறுத்திச் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். 

9. அவர்களுடைய யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவிற்கு, யாரோ குண்டு எறிந்துவிட்டார்களாம். தாக்குதலைச் செய்தவர்கள் தப்பிப் போகாதபடிக்கு நகரத்தையே சுற்றி வளைத்திருக்கிறார்கள்போல. “எங்க போகிறீங்கள்?” என்று கேட்டார்கள். நானே முந்திக்கொண்டு “கோவிலுக்குப் போயிட்டுப் போறம்.” என்றேன். எங்களைப் போக அனுமதித்தார்கள். என்னை ஏற்றிச் சென்றவரிடம் இருட்டில் விடைபெற்றேன். அதற்குப் பிறகு கருணை உள்ளம் கொண்ட ஒரு தம்பதியினர்தான் எனக்குத் தஞ்சம் அளித்தார்கள்.  

மேற்படி சத்தியக்கூற்று சத்தியம் செய்பவருக்கு வாசித்து விளங்கப்படுத்தப்பட்டு அவர் விளங்கியதன் மேல் அதனை ஏற்றுக்கொண்டு 1987 சித்திரை மாதம் 12ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து ஒப்பமிட்டார்.

சமாதான நீதவான்

சத்தியக்கடதாசியில் கையொப்பம் பெறுவதற்காக அற்புதம் ஒரு சமாதான நீதவானை அணுகியிருந்தான். அவரோ அதை முழுவதும் வாசித்துப் பார்த்துவிட்டு, “ஐயோ.. நான் கையெழுத்திட்ட விசயம், அவங்களுக்குத் தெரிய வந்தால், என்ர உயிருக்கு உத்தரவாதமில்லை. நான் மாட்டேன்.” என்று மறுத்துவிட்டார். 

0

அற்புதம் சொன்னவற்றில் இருந்து அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்று அருள்குமரனால் ஊகிக்க முடியவில்லை. அவர் இந்தியாவில் தமிழ்நாடு மலையடிவாரக் கிராமங்களில் ஆயுதப் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆகக் குறைந்தது ஐந்து இயக்கங்களாவது அப்படிப் பயிற்சி எடுத்திருக்கின்றன. ஓரிடத்தில் திடீரென “தமிழீழம்.. அதுதானே ஒரு காலத்தில் எனக்கும் கனவு.” என்று சொன்னார். அந்தக் காலத்தில் அது ஆகக் குறைந்தது நாற்பது இயக்கங்களுடைய கனவு. 

0

நள்ளிரவு பன்னிரெண்டு மணி தாண்டியது. கண் துஞ்சிய போதெல்லாம் “இதைக் கேள்.. இதைக் கேள்..” என்று அற்புதம் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். அவருக்கு முழு வெறி. ‘இதற்கு மேல் குடிக்க வேண்டாம்.’ என்று சொல்வோமா.. சொன்னால் திட்டுவாரா என்று குழப்பமாயிருந்தது. அவர் கார்ப்பெட் விரிப்பில் கால்களைப் பரப்பிக்கொண்டு உட்கார்ந்தார். தொலைக்காட்சியின்  அலைவரிசையை மறந்துபோன இலக்கம் ஒன்றைத் தேடுவதைப்போல மாற்றிக்கொண்டே இருந்தார். திரையில் மேலாடை அணியாத பெண்களைக் கண்டவுடன் ரிமோட்டை வைத்துவிட்டு குவளையை ஏந்தினார். “நான் கொஞ்சம் இந்த மாதிரிப் படங்கள் பாப்பன். உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே?”

அருள்குமரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையைத் தாழ்த்திக் கொண்டாலும், பார்வை அனிச்சையாகத் திரையில் விழத்தான் செய்தது. அவனையும் அறியாமல் கண்கள் விரிந்தன. ஒரே வயதுக்காரர்கள் என்றால் அந்தரமாக இருந்திருக்காது. இவனுக்கு அற்புதத்தின் அரைவாசி வயதிலும் குறைவு. அந்த எண்ணம் தோன்றவும் குன்றிப் போனான். தொலைக்காட்சி மேசையின் கீழே ஒரு விளம்பரப் புத்தகம் இருந்தது. நேரத்தைக் கடத்த சும்மா என்றாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதை எடுத்து விரித்தான். ஒரு பேரிளம் பெண் திறந்திருந்த தன்னுடைய பெரிய மார்புகளைக் கைகளில் ஏந்தியவாறு சிரித்துக்கொண்டு நின்றாள்.

0

எப்பொழுது தூங்கிப் போனான் என்று தெரியவில்லை. அற்புதம்தான் தட்டி எழுப்பினார். “தம்பி.. எனக்கு ஐஞ்சு மணிக்கு வேலை. நான் இறங்கப் போறன். நீங்கள் ஆறுதலாப் படுத்து எழும்புங்க. போகிற நேரம், கதவைப் பூட்டி மேல் வீட்டுக்காரக் கிழவனிட்டை குடுத்து விடுங்க. பண்ணையில நிப்பான். கிழவியிட்ட கொடுக்க வேண்டாம்.” அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினார். பக்கத்தில் எங்கேயோதான் ஓர் உணவு விடுதியில் சமையல் உதவியாளராக வேலை செய்கிறாராம். நடந்தே போய்விடுவார்போல.

அருள்குமரன் கதகதப்பான போர்வையிலிருந்து வெளியேறினான். சோபாவின் விளிம்பில் கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டே படுத்ததில் கொஞ்சம் விறைப்பாக இருந்தது. எழுந்து உட்கார்ந்தான். தலை கனத்தது. நித்திரை காணாதுபோல. காலடியில் அந்த விளம்பரப் புத்தகம் கிடந்தது. எடுத்துப் புரட்டிப் பார்த்தான். அடித்து மூடி ஒரு பக்கமாக வைத்துவிட்டு மூச்சை இழுத்து வாயால் ஊதினான். திரும்பத் திரும்பச் செய்தான். என்ன நினைத்தானோ புத்தகத்தைக் காவிக்கொண்டு கழிவறைக்குப் போனான். முகத்தைக் கழுவிக்கொண்டு திரும்பியபோது தலைப் பாரம் நீங்கியிருந்தது.

இப்பொழுது புறப்பட்டால் முதலாவது பேருந்தைப் பிடித்துவிடலாம். கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டான். படிகளில் ஏறியபோது பதுங்கு குழிக்குள் இருந்து வெளியே வந்தததைப்போல இருந்தது. எதிரில் தொக்கை உடம்புடைய ஒரு கிழவி ‘குத்தெ மோர்ஹென்’ என்றாள். எழுபது வயதாவது இருக்கும். தடித்த மண்ணிறக் குளிராடையும் முழந்தாள் அளவு நீளமான சப்பாத்தும் அணிந்திருந்தாள். மூச்சு விடுவதற்கே சிரமப் படுவதைப்போல உடலை நகர்த்தி நகர்த்தி செம்மறி ஆட்டுப் பண்ணையை நோக்கி நடந்தாள்.  

செம்மறி ஆடுகள் உயரக் கூரையுள்ள பெரிய கூடாரங்களில் அடைந்து நின்றன. ஏதோ அஞ்சலி நிகழ்வில் நிற்பதைப்போல ஒவ்வொன்றினதும் முகம். மேய்ச்சல் நிலத்தைப் பனி மூடியிருந்தது. வெள்ளை நிலம். வீட்டுக்காரக் கிழவன் தேர்ச் சில்லு அளவில் பெரிதாக இருந்த புல்லுக் கட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அருள்குமரன் நேரத்தைப் பார்த்தான். பேருந்து போகப் போகிறது என்ற பதற்றத்தோடு கிழவனிடத்திற்கு ஓடினான். திறப்பை நீட்டவும் ‘யார் நீ?’ என்பதைப்போல கிழவன் பார்த்தான். “அற்புதம்.” என்று சொல்லி திறப்பை கையிற்குள் திணித்துவிட்டு ஒரேயோட்டமாகத் தபால் நிலையத்திற்கு ஓடினான். அவன் தாவி ஏறவும் பேருந்து கதவைப் பூட்டிக்கொண்டு புறப்படவும் நேரம் சரியாக இருந்தது.  

பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரண்டொரு நிமிட நடை தூரத்தில் பக்கத்தில்தான் அகதி முகாம் இருந்தது. வெளியில் நின்று பார்த்தான். ஐந்தாறு பச்சை நிற, இரும்புக் கப்பல் கொள்கலன்களை அடுக்கி அதை ஆக்கியிருந்தார்கள். நிலத்தில் இருந்து ஓர் அடிக்கு உயரம். ஏனோ அந்தக் குளிரிலும் தகரக் கூடாரத்திலிருந்து இறங்கும் அவிந்த வெக்கை நினைவில் பரவ உள்ளே நடந்தான். நடைபாதைப் பனியை அளைந்து விளையாடியதைப்போல சப்பாத்துக் கால்த் தடங்கள். வாசற் படியில் காலை உதறிவிட்டு நுழைந்தான். வரவேற்பு மேசையில் உட்கார்ந்திருந்த கிழவனுக்கு பழுதாய்ப் போன சீஸ் கட்டி நிறத் தோல். சோளப் பொத்தித் தும்புபோல பெரிய தொங்கு மீசை. தொப்பி அணிந்திருந்தான். உள்ளே வழுக்கைத் தலையாக இருக்க வேண்டும். கதிரையைக் காட்டி உட்காருமாறு சைகை செய்தான்.

“அ..ரு..ல்..கு..ம..ர..ன்.. ஹ.. இது இலகுவான பெயராக இருக்கிறது. இல்லையென்றால் ரா..ஜ..கு..ல..சே..க..ர.. என்றெல்லாம் வாய்க்குள்ளேயே நுழையாது. அருல்குமரன், நான் முல்லர், இந்த முகாமுடைய பொறுப்பாளர். அதற்காக இருபத்தநாலு மணி நேரமுமே உங்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்க மாட்டேன். இடது பக்கத்தில் உங்களுடைய தங்குமிடம் இருக்கின்றது. அதை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இன்னொருவரும் பகிர்ந்து கொள்கிறார். அவ்வளவுதான். நீங்கள் போகலாம்.”

அருள்குமரன் இரும்புக் கொள்கலனுக்குள் நுழைந்த கணத்திலேயே மின்சார வெப்பம் தடித்த மணத்தில் நாறியது. முகம் காய்ந்து ஏதோ ஊர்ந்து திரிவதைப்போல உணர்ந்தான். குளிராடையைக் கழற்றி படுக்கையில் வைத்தான். மூன்று ஒற்றைக் கட்டில்கள் இருந்தன. அங்கும் இங்குமாகச் சிந்திய உடுப்புகள், தட்டுமுட்டுச் சாமான்கள். மேசையில் கழுவாத உணவுக் கோப்பைகள். ஒரு மூலைக்குள் இரும்புச் சுவரில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்திருந்தவன்தான் ஆப்கான்காரனாக இருக்க வேண்டும். பெயர் நஜிபுல்லா. அவனுக்கு மங்கோலிய முகம். ஒரேயொரு தடவை நிமிர்ந்து அருள்குமரனைப் பார்த்தான். பதிலுக்குச் சிரிக்க முன்னரே தலையைக் குனிந்துகொண்டான். நல்ல உயரம். எழுந்தால் இரும்புக் கூரையைக் கிழித்துக்கொண்டு நிற்பான்போல, முதிரை மரம் மாதிரி..

-தொடரும்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *