அஷேரா – 3

3

நீரோடையில் சலனமே இல்லை. மழைக்காலம் என்றால் சோ என்று இரைந்துகொண்டே இருக்கும். அருகில் சமாந்தரமாக நீண்ட பாதையில் காய்ந்து முறுகிய சருகுகள் குவியலாகக் கிடந்தன. ஒவ்வொரு காலடியிலும் உடைந்து நொருங்குகிற சத்தம். அருள்குமரன் பாதையின் விளிம்பில் புற்களுக்குள் கால் பதித்து நடந்தான். ‘செருப்பைப் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம்.’ சமையற் கூடம் நெருங்கியது. ஒரேயொரு மங்கிய மின்சார விளக்கின் வெளிச்சம் தூரத்தில் தொங்கியது. இயக்கத்திலிருந்து விலகுவதற்காகக் ‘கடிதம்’ கொடுத்தவர்களை அங்கேதான் வைத்திருந்தார்கள். ஐந்து பேர், எட்டு மாத காலத் தண்டனையில் இருந்தார்கள். கிட்டத்தட்ட நூற்றைம்பது பேருக்கு காலையும் மதியமும் இரவும் சமைத்துக் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அருள்குமரன் சாப்பாடு எடுத்துச்செல்ல அங்கே வந்து போயிருக்கிறான். பெரிய கிடாரங்களில் ஏற்றி மாட்டு வண்டிலில்தான் கொண்டு போவார்கள். அங்கிருந்த ஒரு பெடியன் எப்போது பார்த்தாலும் ‘மாங்கிளியும் மரங் கொத்தியும் கூடு திரும்பத் தடை இல்லை. நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.’ என்று பாடிக்கொண்டு இருப்பான்.

சமையற் கூடத்தில் ஆளரவமே இல்லை. ஐந்து பேரும் அடித்துப் போட்டதைப்போல நித்திரை கொள்கிறார்கள் போல. பாவங்கள்.

ஊருக்குச் செல்லும் பிரதான செம்மண் சாலைக்கு இன்னமும் பத்துப் பன்னிரெண்டு காலடிகளே மீதமிருந்தன.   

0

நீண்ட காலங்களுக்குப் பிறகு ஒருநாள் எகெரி ஏரிக் கரையில் வரிச்சுத் தடிகளை ஞாபகப்படுத்தும் ஓர் இருக்கையில் அருள்குமரன் உட்கார்ந்திருப்பான். அவனுக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் அபர்ணா என்ற பெண்ணிடம் ‘ஆராதனாவைப்போல எனக்கு ஒரு அம்மா இருந்திருக்கலாம்.’ என்று நீரை வெறித்தபடி சொல்வான். அதற்கு அவள் அவனுடைய கண்களை ஊடுருவியவாறு “ஏன்..? நான் இல்லையா?” என்று வினாவுவாள்.

ஆராதனாவுடைய ஓரிரு இடது புறப் பற்கள் வரிசை குழம்பி ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி இறங்கி இருந்தன. அவளுடைய பரவசமான புன்னகைக்கு அதுதான் காரணம். கண்களிலும் அப்படியே.. இடது கருவிழி மட்டும் கொஞ்சம் விலகி நோக்கும். அதனாலேதான் அமைதி அளிக்கின்ற பார்வை. கொஞ்சம் ஏறு நெற்றி. அதனாலேயே கருணை ததும்பும் முகம்.  

திடீரென்று மண்ணில் இறங்கிய மழை மாதிரி, ஒருநாள் ஆராதனா மாலை நேர ரியூசனுக்கு வந்தாள். அன்றைக்குப் புதிய வகுப்புக்கள் ஆரம்பித்து இரண்டாவது நாள். அந்த ஞாபகத்திற்கு மழையின் வாசம். ஓலையால் வேய்ந்த ரியூசனின் கூரையிலிருந்து நீர் வழிந்து கொண்டிருக்க, நிலத்திலிருந்து அந்த வாசம் பரவியது. அந்த நாளுக்கு ஒரு பாடலும் உண்டு. அன்றைக்கு கேணல் கிட்டுவின் நினைவு தினம். அருகிலிருந்த நினைவு மண்டபத்திலிருந்து பாடல் ஒலித்தது. ‘தளராத துணிவோடு களமாடினாய்..’

ஆராதனா எல்லோருக்கும் புன்னகையால் முகமன் சொன்னாள்.  இருப்பதற்கென ஓர் இடத்தைக் கண்கள் தேடின. அருள்குமரனுக்கு பக்கத்தில் கண்டுகொண்டு சிநேகிதமாகச் சிரித்தாள். மெல்லிய துள்ளலோடு நடந்து வந்து உட்கார்ந்தாள். ‘வேறு யாருமென்றால் வெட்கத்தில் கொஞ்சம் நெளிந்துவிட்டுத்தான் அமர்ந்திருப்பார்கள்.’ அதுதான் அவளைப் பற்றிய முதல் நினைப்பு. இடையில் ஒருமுறை “நான் இரண்டு நாள் வரேல்லைத்தானே.. வகுப்பு முடிய உங்கடை கொப்பியைத் தாறியளா? எழுதிவிட்டு நாளைக்குத் தாறன்.” என்று கேட்டாள். வேறு யாருமென்றால் சிணுங்கிவிட்டுத்தான் கேட்டிருப்பார்கள். இவள் அச்சொட்டாக அருள்குமரனுக்குத் தெரிந்த ஒரு கன்னியாஸ்திரி போல. நேரான பார்வை. கனிவும் அதிகாரமும் கலந்த குரல்.

நாளாக நாளாக அவளுடைய அருகாமையை விரும்பத் தொடங்கினான். அவனைப் பீடித்திருந்த அந்தரிப்பும் ஆற்றாமையும் நீங்குவதாக ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறப்பதைப்போன்ற உற்சாகம். முகம் பிரகாசித்திருந்தது. மாலைப் பொழுதுகளில் நண்பர்களோடு விளையாடப் போனான். களைத்து வியர்த்துத் திரும்பி அள்ளிக் குளித்துவிட்டு ஆழ்ந்து தூங்கினான். இப்படியொரு தெளிந்த மன நிலையைக் கடைசியாக அம்மா இருந்த காலங்களில், அதுவும் சரவணபவன் வருவதற்கு முன்பு அனுபவித்த ஞாபகம். இடையில் காலச் சனியன் அர்த்தமற்றதாக நீண்டு விட்டது. நல்ல வேளை ஆராதனா வந்துவிட்டாள். அவளுடைய நேரற்ற பார்வையில் இப்பொழுது அன்பின் ஊற்று. ஒன்றும் வேண்டாம். அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிற நாட்கள் வாய்த்தாலேபோதும்.

அடுத்தடுத்த மாதங்களில் ஆராதனாவும் அருள்குமரனும் இயல்பாகப் பேசத் தொடங்கியிருந்தார்கள். யார் கேட்டார்கள், யார் சொன்னார்கள் என்று தெரியாமலேயே காதல் முளைவிட்டிருந்தது. அவன் எழுதிய ஒரு கடிதத்தில் ‘நாங்கள் முதன் முதலாகச் சந்தித்துக்கொண்டபோது தேவதைகள் தமக்குள் அர்த்தத்துடன் புன்னகைத்தார்கள்.’ என்று எழுதினான். ஒரு துர் இரவில் அமலி அக்காவில் படர்ந்திருந்தபோது ஒருவேளை தேவதைகள் அருவருப்புடன் காறித் துப்பியிருப்பார்களோ என்று தோன்றவும் செத்துப் போகலாம்போல இருந்தது.   

0

“அம்மாவும் அப்பாவும், அக்காவைச் சந்திக்கப் போயிருக்கினம். திரும்பி வர ரெண்டு நாளாகும்.” என்றாள் ஆராதனா. கமத் தொழில் திணைக்களத்திற்கு முன்னாலிருந்த ஒழுங்கையை மரங்கள் சடைத்து மூடியிருந்தன. நிழலில் இரண்டு பேரும் சைக்கிளை நிறுத்தியிருந்தார்கள். கரியரில் பாடப் புத்தங்கள். ஆராதனா அரைப் பாவாடையும் சந்தன நிறத்தில் ரீ சேர்ட்டும் அணிந்திருந்தாள். ஏறு நெற்றியில் ஓரிரு கற்றைக் கேசங்கள் சுருண்டு இறங்கியிருந்தன. 

“ஓ.. நீ போகேல்லையா..?” என்று அருள்குமரன் கேட்டான். அவளுடைய மூத்த அக்கா நான்கு வருடத்திற்கு முதல் இயக்கத்திற்குப் போய்விட்டாள் என்று முன்னரே சொல்லியிருக்கிறாள்.   

“இல்லை.”

“உனக்குத் தனியாக இருக்கப் பயமில்லையா?”

ஆராதனா ஏளனமாக அவனைப் பார்த்தாள். பிறகு கண்கள் தாழ்ந்து கொண்டன. வார்த்தைகளைத் தணிப்பதைப்போல உதடுகளில் அசைவு. “சரியான மொக்கு.” என்றபோது புன்னகைத்தாள். “இரண்டு நாளுக்கு நான் தனிய இருப்பன் எண்டுறன். பயமில்லையோ எண்டு கேக்குது.”

அருள்குமரன் பெத்தம்மாவிடம் ‘நண்பர்களோடு படிக்கப் போகிறேன். ரெண்டு நாளைக்கு வர மாட்டன்.’ என்றபோது ‘கவனம். நேரத்திற்குச் சாப்பிடு’ என்று சொல்லி அனுப்பி வைத்தாள். நல்லவேளை புறப்பட்டபோது அமலி அக்கா இல்லை. அல்லது “எங்கே?” “யாரோடு?” என்று விசர்க் கேள்விகள் கேட்பாள்.

சைக்கிளை கமத் தொழில் திணைக்கள சைக்கிள் தரிப்பிடத்தில் வைத்துப் பூட்டினான். ஆராதனா ஒழுங்கை முகப்பில் காத்து நின்றாள். அவளைக் கிட்ட நெருங்கியதும் “என்னோடை கதைக்காமல் யாரோ மாதிரிப் பின்னாலேயே வா. பக்கத்து வீட்டில யாரும் பாக்காட்டி நான் கேற்றைத் திறந்து உள்ளை போவன். நீயும் வா.” என்று பதற்றமில்லாமல் சொல்லிவிட்டு நடந்தாள்.

பக்கத்து வீட்டில் யாருமில்லை.

0

ஆராதனா வெள்ளை அரிச் சோற்றுடன் முருங்கை இலையை வதக்கிப் போட்ட பால் சொதியும் நல்லெண்ணையில் பொரித்த முட்டையும் பரிமாறினாள். மொறு மொறுத்த பொரியலை சோற்றில் பிசைந்து சாப்பிட அமிர்தமாக இருந்தது. சிறு வயதிலிருந்தே முட்டைப் பொரியல், கருவாட்டுப் பொரியல், கத்தரிக்காயை வதக்கிய வெங்காயப் பொரியல் என்றால்போதும். வேறு கறிகள் தேவையில்லை.

அருள்குமரன் சுவரோடு சாய்ந்து கால்களை நீட்டி சாப்பாட்டுக் கோப்பையை கையில் ஏந்தி வைத்திருந்தான்.

“உனக்கு சாப்பாட்டுக்கு மரியாதை குடுக்கத் தெரியாதா?” என்று பொய்க் கோபத்தோடு கேட்டாள்.

“என்ன செய்ய? சொல்லி வளர்க்க ஆளில்லை” சிரித்துக்கொண்டே கால்களை மடக்கினான்.

ஆராதனா அவன் ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். “இன்னொரு நாளைக்கு இறைச்சி, மீன் எல்லாம் சமைக்கிறேன். இப்போதைக்கு இதைச் சாப்பிடு.”

“நீதான் ஒவ்வொரு நாளும் வீட்டுச் சமையலா?”

“இல்லை. அம்மாவுக்கு ஒத்தாசைதான். அவவுக்கு ஆஸ்த்துமா வருத்தம். அப்பப்ப ஓய்ஞ்சு போயிடுவா. பாவம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தீராக் கவலையைக் குடுத்திட்டு அக்கா இயக்கத்துக்குப் போயிருக்கக் கூடாது. அந்த ரெண்டு பேரும் ஒரு நாள் கூட அக்காவோடை சண்டை பிடிச்சதில்லை. ஏன்? அவையள் தங்களுக்குள்ள சண்டை பிடிச்சதையே நான் பார்த்ததில்லை.”

“என்ர அம்மாவும் அப்பாவும் கூட அப்பிடித்தான்.” சட்டென்று அருள்குமரன் சொன்னான். வார்த்தைகள் குழறப் பார்த்தன. ஆழமாக மூச்சிழுத்து விடுவித்தான். “அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து செத்த ரெண்டாம் நாளே அம்மாவும் செத்துப் போனா. நேசித்த சீவன்கள் இப்படித்தான் ஒண்டாகப் போகுமெண்டு ஊரிலே கதைத்தார்கள்.” 

“அக்கா சரியான பிடிவாதக்காரி. அவள் வீட்டை விட்டுப் போன பிறகு அம்மாவும் அப்பாவும் ஒவ்வொரு இயக்க முகாமாக அலைந்து திரிந்தார்கள். ‘அவளை விட்டு விடுங்கள்.’ என்று கெஞ்சினார்கள். அவள் கல் நெஞ்சக்காரி. ஏதோ ஒரு முகாமின் உள்ளே இருந்துகொண்டு ‘அப்பாவைப் பார்த்தால் மனம் மாறிவிடுவேன். அவர்களைப் போகச் சொல்லுங்கள்.’ என்று சொல்லி அனுப்பினாளாம். ரெண்டு வருசத்துக்குப் பிறகு நான் சாமத்தியப்பட்டிருந்தபோதுதான் வீட்டுக்கு முதன்முதலாக வந்தாள்.”

ஆராதனா ஒரு சிறிய புகைப்பட அல்பத்தைக் கொண்டுவந்து காட்டினாள். அவளுடைய சாமத்திய வீட்டுப் படங்கள். ‘சரியான சின்னப் பெட்டையாக’ அவற்றில் தெரிந்தாள். அந்தக் குஞ்சு முகத்திற்குப் பொருத்தமே இல்லாமல் அலங்காரத்தை அள்ளிக் கொட்டியிருந்தார்கள். கடைசியாக இருந்த படங்களில் முகம் வியர்த்து வழிய பயந்துகொண்டு நின்றாள்.

“இந்தா.. எனக்குப் பக்கத்தில நிக்கிறான் பார். இவன் என்ர மச்சான். எங்கள் ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் எண்டு சின்னனில சொல்லுவினம். நீ பதறாதை. இவனும் இயக்கத்துக்குப் போயிட்டான்.”

“அதெல்லாம் போகத்தான் வேணும். நாடு முக்கியம்.” அருள்குமரன் கமுக்கச் சிரிப்பை உதடுகளுக்குள் மறைத்துக்கொண்டு சொன்னான். “நாட்டுக்காக கவலைப்படுற ஆளைப் பார்.” ஆராதனா புகைப்பட அல்பத்தாலேயே முதுகில் அடித்தாள். அவளுடையை கைகளைத் தடுத்துப் பிடித்து உயர்த்தியபோது முகத்திற்கு நேராக நெருங்கி வந்தாள். குறு குறுவென்று விழிகளை உருட்டி கூர்ந்து பார்த்தாள். “என்னடா.. ராஸ்கல்.” அவளுக்குச் சிரிப்பு வந்தது. அங்கே ஒரே சிரிப்பும் பம்பலுமாக இருந்தபோது ‘நிச்சலனம்’ என்ற வார்த்தையின் அர்த்தம் அருள்குமரனுக்கு அறிமுகமானது.  

ஆராதனா அமைதியாகினாள். இமை வெட்டாத பார்வை. “நீ குழந்தைப் பிள்ளையில எப்பிடி இருந்திருப்பாய் என்று யோசிக்கிறன்.” அவளுக்குக் குழந்தைகள் என்றால் காணும். அவ்வளவு விருப்பம். இயக்கத்தின் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பகம் ஒன்றில்தான் அக்கா இணைப் பொறுப்பாளராக இருந்தாள். அவளைச் சந்திக்கப் போகிற வேளைகளில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்க ஆராதனா குழந்தைகளோடு விளையாடப் போய்விடுவாள். “ஆரா அக்காச்சி வாறாள். உங்களை உருட்டி எடுப்பாள். கண்ணை மூடி நித்திரை மாதிரிப் படுங்கோ.” என்று ஜனனி அக்கா சொல்வாளாம். அவள்தான் முதன்மைப் பொறுப்பாளர். ஆனால் குழந்தைகள் கண்களை மூடவே மாட்டார்களாம்.

இரண்டு கன்னங்களிலும் காற்றை நிறைத்து ‘உப்’ என்று அருள்குமரன் ஊதிக்காட்டினான். “நான் குழந்தைப் பிள்ளையாக இருந்தபோது இப்படித்தான்.. குண்டுச் சொக்கையும்.. கத்தரிக் காய்களைப் பொருத்திய மாதிரி கை கால்களும்.. இப்ப மாதிரித்தான் கன்னக் குழி. ஒரு இடத்தில் இருத்திவிட்டால் கொளுக் மொளுக் என்று அங்கேயே இருப்பேனாம். அசையவே மாட்டேனாம். அம்மாவிடமிருந்து என்னைப் பறித்து இடுப்பில் தூக்கி வைச்சிருக்க பக்கத்து வீட்டு அக்காக்கள் நீ.. நான் என்று சண்டை பிடிப்பார்களாம்.”

ஆராதனா ‘கொளுக் மொளுக்’ என்று மூன்று நான் தடவைகள் உச்சரித்துப் பார்த்தாள்.

0

இரண்டாம் நாள் காலையில், அருள்குமரன் புறப்படுவதற்குத் தயாராகினான். முதல்நாள் இரவே அந்த நினைவு ஏக்கமாக அவனைத் தொற்றியிருந்தது. ஆராதனா ஒரு பாயும் தலையணையும் எடுத்துவந்து கொடுத்துவிட்டு உள்ளே போய்ப் படுத்துக்கொண்டாள். எத்தனை அமைதியான இரவு அது! நினைவுகள் ஒன்றை அடுத்து ஒன்று என்று நீண்டன. வெறும் இருபத்து நான்கு மணி நேரம் கூட ஆகாது இந்த வாழ்க்கைக்கு. ஆனால் ஏதோவொரு முழுமை. இந்த முழுமைதான் நிரந்தரமாகக் கிடைக்கப் போகிறது. கண்ணயர்ந்தான். காலையில் விழித்தபோது பக்கத்திலிருந்து ஆராதனா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “என்ன?” என்று கண்களாலேயே கேட்டான். தலைமயிரில் விரல் நுழைத்து ‘உணாவத்’ தொடங்கினாள். எழுந்து உட்கார்ந்தான். கண்கள் நீர் கோர்த்திருந்தன. “உன்னை ஏன் எனக்கு இப்பிடிப் பிடிக்கிறது?” என்று கேட்டாள். ஒரு கண்ணாடியைக் கையாள்கிற அவதானத்தோடு அவனுடைய பிடரியைப் பிடித்துக்கொண்டு குழந்தையின் கன்னத்தில் பவுடரை ஒத்துவதைப்போல நெற்றியிலும் கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிடத் தொடங்கினாள். முகத்தை ஏந்தி கழுத்திற்குள் புதைத்தாள். அருள்குமரன் கண்களை மூடினான். நீர்த் துளி தன்னைத் தானே துண்டித்துக்கொண்டு விழுந்தது. அவன் மூச்சை நிறுத்தவில்லை. உடலில் வெம்மை மூளவில்லை. விலுக்கென்ற நடுக்கம் இல்லை. அசைவற்ற நிசப்தத்தில் மனம் அலைவற்றிய கடலாக இருந்தது.

ஆராதனா பரிசளித்த காமம், கோவிலின் நிவேதனம்.

0

அருள்குமரன் மறுபடியும் தினச் செயல்களைத் திட்டமிட்டு எழுதி சுவரில் ஒட்டி வைத்தான். காலையில் ஆறுக்கு எழுந்துவிட வேண்டும். உடையார் வளவைத் தாண்டி நடந்தால் விரியும் வயல் வெளிக்குச் சென்று கொஞ்ச நேரம் அங்கும் இங்குமாக நடப்பான். மூச்சை இழுத்து விடுவிப்பான். கொஞ்ச நாட்களாக பாலகுமாரனின் கதைப் புத்தகங்களில் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. காதல் கதைகள்தான் என்றாலும் மனதைக் குவித்துக் கவனத்தைச் செலுத்துவது, எண்ணங்களை அலைய விடாமல் ஒரு கற்றையாகக் கட்டி சீராக்குவது பற்றியெல்லாம் அவர் எழுதியிருந்தார். அவற்றையெல்லாம் முயற்சித்தான். நெஞ்சுக் கூட்டுக்குள் இதயத்தின் மேற் சுவரில் ஒரு மெழுகுப் படை மூடியிருப்பதுபோலவும், எண்ணங்களின் குவியச் சூட்டில் மெழுகு உருகி வழிந்து இதயம் பளிச்சென்று புலப்படுவதாகவும் தோன்றும் கற்பனைகள் புத்துணர்ச்சியாக இருந்தன. தேகமெல்லாம் புதிய இரத்தம்.

அமலி அக்காவோடு பேச்சுவார்த்தைகள் குறைந்து முற்றிலுமாக நின்றுவிட்டது. “என்னோடு ஏதாவது கோபமா?” என்று ஒருநாள் கேட்டாள். “இல்லையே..” என்றான். அவளுடைய தையல் வகுப்புக்கள் முடிகின்றனவாம். வீட்டுக்குப் போகப் போவதாக பெத்தம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். பெருத்த நிம்மதி. “எனக்குக் கழுத்து நோகுது. கட்டிலின் தலைமாட்டில் ரெண்டு மூன்று தலையணைகளை வைத்துப் படுத்தால் நல்லாயிருக்கும்.” என்று பெத்தம்மாவிடம் கட்டிலை வாங்கினான். அவள் கீழே படுத்துக் கொண்டாள். அமலி அக்காவும் அறையை விட்டு வெளியே வருவதில்லை.

இருபதோ இருபத்தியோராவதோ இரவு. அருள்குமரனுக்கு திடீரென்று விழிப்பு வந்தது. வானொலி இரைந்தது. அதை நிறுத்தாமலேயே தூங்கிவிட்டிருந்தான். இப்பொழுதும் நிறுத்தத் தோன்றவில்லை. நிகழ்காலத்திலிருந்து துண்டித்துக் கொண்டு ஏதோ பழைய காலத்திற்குள் மிதப்பதைப்போல தோன்றியது. இருட்டு தூலமற்ற அச்சத்தை உண்டாக்கியது. நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். மெலிதான உடல் சூடுதான். ‘நெருப்பு மூளுமோ?’ கண்களை மூடி எண்ணங்களின் அலைவை மூக்கு நுனியில் செலுத்த முயன்றான். அது நழுவிகொண்டு வெளியேறியது. படபடப்புக் கூடியது. கழுத்தில் வியர்ந்தது. தொண்டைக் காய்வு. எழுந்தான். சுற்றிலும் அடர்த்தியான இருள் பசை. அதிலிருந்து ‘பெயர் அன்ட் லவ்லியின்’ வாசனை. நடுங்கிப் போனான். ஆராதனாவை நினைவில் குவிக்க முயன்றான். வரிசை பிறழ்ந்த பற்களின் சிரிப்பு.. ஒற்றை விழியின் நேரற்ற பார்வை.. கனிவு.. அதிகாரம்.. கோபம்.. நிவேதனம் போன்ற காமம்.. எவ்வளவு முயன்றும் இயலவில்லை. ‘பெயர் அன்ட் லவ்லி’ மூக்கை அரித்துக் கொண்டே இருந்தது.

அருள்குமரன் ஒரே வீச்சில் எழுந்து வெளியே ஓடினான். வேலிக் கரையில் ஒண்டுக்கு இருப்பதைப்போல கொஞ்ச நேரம் சும்மா நின்றான். உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடாக்கி முகத்தில் தேய்த்தான். இரவு ஒரு நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. காறித் துப்பினான். இரவைப் பழித்துச் சிரிப்பவனைப்போல நின்ற நிலையில் கைமதுனம் செய்யத் தொடங்கினான். பற்கள் நருமின. நரம்புகளை முறுக்குவதைப்போன்ற கூச்சம். கடலின் மேற்பரப்பை முட்டித் திறந்ததைப்போல தலையை உதறிச் சிலுப்பினான். தேகம் பாரம் இழந்தது. கையை உதறினான். இரவைப் பார்த்துக் குரூரத்தோடு சிரித்தான். திரும்பிச் சென்று படுத்தபோது ஆசுவாசமாயிருந்தது. யாரையோ தோற்கடித்துவிட்ட திருப்தி. ‘யாரையும் அல்ல.. என்னை நானே தோற்கடித்தேன்.. ஒருவேளை வென்றேனா..’ இன்னும் கொஞ்ச நேரத்தில் நித்திரை வந்துவிடுமென்று காத்திருந்தான். இரவு நீண்டது. நித்திரை வரவில்லை. எழுந்து முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு இருந்து பார்த்தான். இருட்டு எங்கோ ஒளிந்து நின்று குறுகுறுப்போடு பார்க்கிறது. ‘பார்த்தால் பார்க்கட்டும்.’ அமலி அக்கா படுத்திருந்த அறைக்கு ஓசைப்படாமல் நடந்து போய் அவளுக்கு அருகில் குந்தி இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இருள் பழகிவிடும். அவள் துலக்கமாகத் தெரியத் தொடங்குவாள். அதற்காகக் காத்திருந்து அவளுடைய வயிற்றைப் பொத்துமாற்போல கையை வைத்தான்.

அடுத்த இருபதாவது நிமிடத்திலேயே அருள்குமரனுக்குத் தற்கொலை நினைவுகள் தோன்றத் தொடங்கின. அதற்குப் பிறகு தூங்கவே இல்லை. காலையில் முதல் வேலையாக சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் குழந்தை யேசு தேவாலய மதிலோடு சாய்த்துவிட்டு அருகிலிருந்த இயக்க முகாமிற்குள் நுழைந்தான். மரக் கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ஒரு போராளிதான் முதலில் நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய நடையில் செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறான் என்று தெரிந்தது. அவனிடம் “அண்ணா.. நான் இயக்கத்தில் சேரப் போகிறேன்.” என்றான்.

0

செம்மண் சாலை! கிரவல் மண்ணை அள்ளிக் கொட்டி இயந்திரங்களால் அழுத்திவிட்டிருந்தார்கள். பகல் என்றால் செம்பாட்டுப் புழுதி அலைந்து கொண்டே இருக்கும், இரவில் தண்ணீர் தெளித்ததைப்போல அடங்கியிருந்தது. அதில் ஏறி இரண்டு மணித்தியாலம் என்றாலும் நடக்க வேண்டும், ஒரு பெரிய நாற் சந்தி வரும். அங்கிருந்து இடப்புறமாகத் திரும்பினால் விடிகிற நேரத்தில் வீட்டுக்குப் போய்விடலாம். செம்மண் சாலைக்கு இன்னமும் இரண்டு காலடிகளே தூரம்.

அருள்குமரன் நடப்பதை நிறுத்திவிட்டு வானத்தை நிமிர்ந்து பார்த்தான். நிறைய நட்சத்திரங்கள். எப்படியும் நாளைக்கு சூரியன் உதித்த கொஞ்ச நேரத்திற்குள் இயக்கக்காரர்கள் என்னைத் தேடி வீட்டுக்கு வந்துவிடுவார்கள். “என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. பெத்தம்மாவை விட்டுட்டு இருக்க முடியேல்லை. அவவும் இருக்க மாட்டா.” என்று கெஞ்சிப் பார்க்கலாம். என்ன செய்வார்களோ தெரியாது. இழுத்துக்கொண்டு வந்து சமையல் கூடத்தில் விடக் கூடும். எட்டு மாதமோ.. பத்து மாதமோ..? ஒருவேளை “சரி இருந்து தொலை. இனிமேல் வந்திடாதை.” என்று திட்டிவிட்டும் போகலாம். பெத்தம்மா என்ன செய்வாள்? அவள் எதுவும் சொல்லமாட்டாள். பாவம். மாதா சொரூபத்தின் முன்னால் முழந்தாளிட்டு கண்ணீர் சொரிவாள். ஆராதானாதான் துடிக்கப் பதைக்க ஓடி வருவாள். பெயரைச் சொல்லி கூவி அழைப்பாள். நேரில் கண்டதும் கைகளால் நெஞ்சில் குத்துவாள். “என்ன தைரியமிருந்தால் இப்படிச் செய்வாய்?” என்று அழுவாள். அவளை நிமிர்ந்து பார்க்க கண்களில் நேர்மையும் இல்லை. பதில் சொல்ல சொற்களில் உண்மையும் இல்லை. ‘நான் உனக்குச் சரியான ஆள் இல்லை ஆராதனா..’ அப்போது அமலி அக்கா வீட்டில் இருப்பாளா?

அருள்குமரன் சரேலென்று திரும்பினான். அனிச்சையான நினைவாக ‘முகாமுக்கே திரும்பிப் போய்விடலாம்’ என்று தோன்றியது. மொட்டையப்பா விழித்திருக்கக் கூடும். நேரத்தை சரியாக மட்டுக்கட்ட முடியவில்லை. திரும்பவும் நட்சத்திரங்களைப் பார்த்தான். அவற்றிலிருந்து நேரத்தைக் கணிப்பதைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. வந்த வழியிலேயே நடக்கத் தொடங்கினான். ‘ஏதாவது சாட்டுச் சொல்லலாம். ஒண்டுக்கிருக்கப் போன இடத்தில் வழி மாறிவிட்டேன். இருட்டுக்குள் இடம் பிடிபடவில்லை.’ மொட்டையப்பா நம்புவான். ஒருவேளை ரொக்கெட் விழித்திருந்தால் அவனை ஏமாற்ற முடியாது. அவனிடம் உண்மையைச் சொல்லிவிடவேண்டும். ‘நான் இயக்கத்திற்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை. அதனால் திரும்ப வந்துவிட்டேன்.’ அதுகூட பொய்தான். பரவாயில்லை, அற்பமான காரணங்களுக்காக இயக்கத்திற்கு வந்தவர்கள், பிறகு அற்பமான காரணங்களுக்காக போக நினைத்தவர்கள், எல்லோரும் பிறகு அற்புதமான காரியங்களைச் செய்வார்கள்.’

‘ஆமென்.’

தொடரும்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *