அஷேரா – 2

2

‘இயக்கத்திலிருந்து இப்பொழுதுதே தப்பி ஓடுவோம்.’ என்ற எண்ணம் புகையாகி மூளைக்குள் அலைந்தது. அருள்குமரன் தகரக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து வரிச்சுத் தடிகளால் செய்த இருக்கையில் உட்கார்ந்தான். உள்ளே பெடியங்கள் அடித்துப் போட்டதைப்போல தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை மொட்டையப்பா விழித்திருக்கக் கூடும். நேற்றிரவு பத்து மணியிலிருந்து அதிகாலை மூன்று மணி வரை அவனைக் காவல் கடமையில் விட்டிருந்தார்கள். இந்நேரத்திற்கு அவன் கக்கூசுக் கிடங்குகளுக்குப் பக்கமாக நடை பாதையில் சாக்கை விரித்துவிட்டு நித்திரை கொண்டிருப்பான். இன்னமும் முறையாகப் பொறுப்பாளரிடம் அகப்படவில்லை. நண்பர்கள் எச்சரிப்பார்கள். “நீ சென்ரிக்கு இருக்கிற நேரத்தில் யாராவது தப்பி ஓடினால்.. அதுக்குப் பிறகு நீ செத்தாய்.” மொட்டையப்பா அதை அலட்டிக்கொள்வதே இல்லை. “ஒருவன் தப்பிப் போகப் போறான் என்றால் பிறகு எதுக்கு அவனை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்?” 

அருள்குமரன் வெளியே வந்த பிறகு காட்டின் ரீங்காரங்கள் ஒரு கூட்டுச்செயலாக தாள கதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்டன. இந்த முகாம், புதிதாக இயக்கத்தில் சேர்பவர்களுக்கு ஓர் இடைத்தங்கல் முகாம் என்ற அளவில் சிறியதாக இருந்தது. மரங்களைப் பெரிதாகத் தறிக்காத வளாகம். பிரதான கூடாரத்தின் உள்ளேயே ஏழெட்டு முதிரை மரங்கள் கூரையைக் கிழித்துக்கொண்டு மேலேறி நின்றன. ஒவ்வொன்றும் ஓர் ஆள் அளவு தடிப்புள்ளவை. வெளியே அடர்த்தியாக கிளை பரப்பிய பெரிய மரங்கள் கூடாரத்தை வானத்திற்கு மறைத்து வைத்தன. சற்றுத் தள்ளியிருந்த உணவருந்தும் கூடாரத்திலும் பொறுப்பாளரின் கூடாரத்திலும் கூட பகலின் வெளிச்சத்தை முழுவதும் காண முடியாது. 

எழுந்து மரங்களைச் சுற்றி நெளிந்த பாதையில் நடக்கத் தொடங்கினான். சொற்ப நேரத்திலேயே நாயுண்ணிப் பற்றைகளுக்கு இடையில் ஒடுங்கி வெளியேறிய ஒற்றையடிப் பாதையில் வெளிச்சத்தின் கடைசித்துளியும் விடைபெற்றது. அங்கே இருளுக்கும் ஒளிக்கும் இடையில் துலக்கமான ஒரு பிரிப்பு இருந்ததைப்போலவும், வெளிச்சத்திலிருந்து நொடியில் சறுக்கி இருட்டுக்குள் விழுந்தைதைப்போலவும் தோன்றிற்று. அது கரியைப் பசையாக்கி காலத்தில் அப்பிவிட்டதைப்போன்ற இருள். ‘இருள் பிளந்து வழி உருவாகும்’ அருள்குமரன் நெஞ்சில் குருசுக்குறி இட்டான்.

ஓரிரு வளைவுகள், மெல்லிய சீரான சலசலப்போடு பாய்கிற ஒரு நீரோடை, அதற்குச் சமாந்தரமாக வண்டில் பாதை, சற்றுத் தூரத்தில் சமையற்கூடம், அதில் ஒரு காவல் கூடு.. அவற்றைக் கடந்துவிட்டால் பிரதான செம்மண் சாலை.

எண்பது நாட்களுக்கு முன்னர், குண்டும் குழியுமான செம்மண் சாலையில் ஓர் உழவு இயந்திரத்தில் அவனை அழைத்து வந்த இராவணேசன் இதே பாதையால்தான் காட்டுக்குள் நடத்திக் கூட்டிச் சென்றார். வியர்வையில் தொப்பலாக நனைந்த சேர்ட்டைக் கழட்டி அருள்குமரன் தலையில் கட்டியிருந்தான். அவனுக்குப் பதினாறு வயது என்றால், இராவணேசனுக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பதுதான் இருந்திருக்கும். அவர்தான் முகாமின் இரண்டாவது பொறுப்பாளர் என்று அப்போது தெரியவில்லை. இடைவழியில் திரும்பி “என்னடா? காதல் தோல்வியாடா?” என்று கேட்டார். அருள்குமரன் மௌனமாகப் பின்தொடர்ந்தான். “சரி விடு பரவாயில்லை. அற்பமான காரணங்களைச் சொல்லிக்கொண்டு இயக்கத்திற்கு வந்தவர்கள் பிறகு நிறைய அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.” என்றார் இராவணேசன்.

0

பதின்ம வயதுகளில் முதன் முதலாகக் காமம் பற்றிய நினைவுச் சுழலுக்குள் நுழைந்தபோது அதைப் பச்சையாக அனுபவிப்பதற்கு பதினைந்து ஆண்டுகளாவது ஆகுமென்று அருள்குமரன் சோர்ந்திருக்கிறான். ஒருங்கே கிளர்ச்சியும் பதற்றமுமான அந்த நினைவுகளில் முதன்முதலாகச் சரவணபவனின் மனைவிதான் வந்தாள். ஒவ்வொரு நாளும் காலையில் அவள் கலைந்த தலைமயிருடனும் கழுவாத முகத்துடனும் அவர்களுடைய வேலியோரத்தைக் கூட்டுவாள். முழங்காலுக்குச் சற்று மேலேறிய, நீல வர்ணத்தில் வெள்ளை வட்டங்கள் இட்ட சீத்தைத் துணியிலான ‘சோர்ட்டியைப்’போலவே அவளிடம் சிவப்பு, பச்சை நிறங்களிலும் சோர்ட்டிகள் இருந்தன. காலையிலேயே அக்குளின் ஈரம் சோர்ட்டியில் ஊறியிருக்கும். வழுவழுத்த கழுத்தின் கீழே நெஞ்சு மேடேறும். அருள்குமரனைக் கண்டால் வெள்ளெந்தியாகச் சிரிப்பாள். அக் கணத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடு வைத்ததைப்போல துடித்துப் போவான். அவள் சிரிக்கக் கூடாது. கோபத்தோடு அவனைப் பார்க்க வேண்டும், திட்ட வேண்டும் என்றெல்லாம் மனது ஆசைப்படும். ஆசை, வன்மம், குற்ற உணர்ச்சி.. இப்படி எல்லா வார்த்தைகளின் அர்த்தங்களும் அக் காலத்தில்தான் அறிமுகமாயின.

காலத்திற்கு இரக்கமேயில்லை. அருள்குமரனுடைய தூரத்துச் சொந்தக்காரியான அமலியை அது வீட்டிற்கு அழைத்து வந்தது. உயர்தரப் பரீட்சையில் இரண்டு தடவைகள் தோல்வியடைந்த பிறகு நகரத்திலிருந்த தையல் வகுப்புக்களுக்குச் சென்று வர வசதியாயிருக்கும் என்று பெத்தம்மாவிடம் கேட்டபோது அவள் மறுக்கவில்லை. “அதுக்கென்ன? ஒரு கிழவியும் குழந்தைப் பெடியனுமாயிருக்கிற வீட்டில ஒரு குமர்ப் பெட்டையும் இருக்கட்டுமே.”

அமலி அக்காவிற்கு வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் தையல் வகுப்புக்கள் இருந்தன. அதுவும் மாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மட்டும். அவள் வந்த பிறகு பாத்திரங்களைக் கழுவி வைப்பது, உடுப்புக்களைத் தோய்ப்பது, வீட்டைத் துப்பரவாக்குவது எல்லாம் கிரமமாக நடந்தன. நூலகத்திலிருந்து கதைப் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவாள். படுத்திருந்து விரிந்த புத்தகத்தின் கீழ் விளிம்பை கையால் பொத்தி உயர்த்திப் பிடித்து வாசிப்பாள். கொஞ்ச நாட்களிலேயே அவள் வெளிநாட்டில் இருக்கின்ற யாரையோ காதலிக்கிறாள் என்று அருள்குமரனுக்குத் தெரிந்துவிட்டது. அடிக்கடி தபாற்காரன் வந்து நீலமும் சிவப்புமான விளிம்புள்ள கடித உறைகளை நீட்டினான். அவனுடைய அப்பாவிடமிருந்தும் அதே உறையிட்ட கடிதங்கள்தான் முன்னர் வந்தன. அமலி அக்கா முற்றத்தில் நின்ற பலா மரத்தின் கீழே ஆறுதலாக உட்கார்ந்திருந்து கடிதங்களைப் படித்துக்கொண்டிருக்கிறபோது அவளுடைய உதடுகள் தம்பாட்டில் புன்னகைக்கும். கண்கள் தம்பாட்டில் மின்னும்.   

0

கிணற்றடியைச் சுற்றி ப வடிவில் கிடுகு வேலி அடைத்திருந்தார்கள். அமலி அக்கா உள்ளே நின்று கத்தினாள். “டேய்.. துவாயை மறந்துவிட்டேன். எடுத்துக் கொண்டு வா..” நாளாக நாளாக இயல்பாகவே இப்படியொரு அதிகாரம் அவளிடம் உருவாகி விட்டிருந்தது. அருள்குமரன் “எங்கை கிடக்கு?” என்று கேட்டான்.

“அறைக்குள்ளை என்ர தோய்ச்ச உடுப்புக்களுக்குள்ளை இருக்கும் பார்.”

அவளுடைய ஆடைகளை ஒவ்வொன்றாகக் கிளறி துவாயை உருவினான். கிணற்றடி வேலிக்கு அடியில் அமலி அக்காவுடைய நீரில் நனைந்த கால்கள் தெரிந்தன. வெள்ளத்தில் சாய்ந்த புற்களைப்போன்ற ரோமங்கள். வெளியில் நின்று வேலியில் துவாயை விரித்தான். “பெரியவரே.. உள்ளை கொண்டுவந்து தந்தால் உங்கடை கற்புக்குப் பங்கம் வருமோ?” அவள் பகிடிக்குத்தான் சொல்லியிருக்க வேண்டும். அருள்குமரன் துவாயை இழுத்தெடுத்து கையில் சுருட்டியபடி உள்ளே நுழைந்தான். சவுதிக் கைலியால் குறுக்குக் கட்டு கட்டியபடி நின்றாள். கழுத்தில் சிலுவைக் குருசு தொங்கிய வெள்ளிச் சங்கிலி மின்னியது. காலடியில் சவர்க்கார நுரை நீரில் கரைந்து கொண்டிருந்தது.

அமலி அக்காவுடைய அதிகாரமும் இந்த மாதிரியான சீண்டல்களும் ஏனோ பிடித்திருந்தன. “வாடா.. வந்து தேத்தண்ணியைக் குடி.” என்றால் வேண்டுமென்று தாமதிப்பான். அடுத்ததாக அவள் திட்டுவதைக் கேட்பதில் அவ்வளவு ஆசை. அறைக்குள் திடீரென்று நுழைவாள். “இன்னமும் விளக்கைக் கொளுத்தாமல் இருட்டுக்கை தனிய இருந்து என்ன செய்யிறாய்?”

“ஒழுங்காச் சாப்பிடு. இப்பிடியே மெலிஞ்சு மெலிஞ்சு ஒன்றுமில்லாமல் ஆகப் போகிறாய்.”

“என்ன இது? இந்தக் கொப்பியில ஒரு பெட்டையின்ர பெயரை ஏன் தொடர்ந்து எழுதி வைத்திருக்கிறாய்?”

ஓர் அக்கினி நட்சத்திர நாள். பகலைப்போலவே இரவும் வெந்தது. பெத்தம்மா வெளியே விறாந்தையிலிருந்த ஒற்றை மரக் கட்டிலில் செபம் சொல்லிவிட்டு “மாதாவே” என்று சாய்ந்து படுத்தாள். அருள்குமரன் கட்டிலுக்கு அருகிலேயே தரையில் பாயை விரித்து வானொலி அலைவரிசைகளைத் திருகிக் கொண்டிருந்தான். இன்னமும் விளக்கை அணைக்கவில்லை. அமலி அக்கா சினந்துகொண்டு பாயைச் சுருட்டிக் காவியபடி அறைக்குள்ளிருந்து வந்தாள். “என்ன வெக்கை.. உள்ளை அவிந்து ஊத்துகிறது. காத்தாட நானும் இதில படுக்கிறனடா.” என்று பக்கத்திலேயே விரித்தாள்.

“சரி, அப்ப நான் உள்ளே போகிறேன்” வானொலியைத் தூக்கிக்கொண்டு எழுந்தவனை “ஏன்.. உள்ளே போய் வெந்து வேகப்போகிறாயா.. இதிலயே படு.” என்று உறுக்கினாள்.

வானொலி அங்குமிங்குமாக இரைந்த பிறகு உயிர் பெற்றுப் பாடியது. அதை தலைமாட்டில் வைத்துவிட்டு மண்ணெண்ணெய் விளக்கை ஊதி அணைத்தான். பக் என்ற சத்தத்துடன் இருளானது. சாய்ந்து படுத்தான். இமைகளைச் சில முறை மூடித் திறக்கவும் பலா மரத்தின் கிளைகளில் இலைகளின் அசைவுகள் புலப்பட்டன. ஏதேதோ நினைவுகள். அவன் வயதொத்த பெடியங்கள் எல்லோரும் பள்ளிக்கூடத்தால் வந்தால்போதும், உடையார் வளவுக்கு விளையாடப் போய்விடுவார்கள். மாரி காலத்தில் வெள்ளம் பார்க்கக் கூட்டமாகக் கிளம்புவார்கள். ஆரம்பத்திலிருந்தே யாரோடும் ஒட்டு இல்லாமல் போய்விட்டது. ‘நல்லாப் படிக்கிற பெடியன், விளையாட எல்லாம் வரமாட்டான்.’ என்று அவர்களும் கண்டுகொள்வதில்லை. திடீரென்று ‘மாலை முழுதும் விளையாட்டு’ என்று எழுதி சுவர்களில் ஒட்டி வைப்பான். காலையில் எத்தனை மணிக்குக் கண் விழிப்பதிலிருந்து இரவு எத்தனை மணிக்கு நித்திரைக்குச் செல்வதுவரை அடுக்கடுக்கான திட்டமிடல்கள். ஒன்றிரண்டு நாட்களுக்கு உற்சாகம் பீறிடும். எல்லாம் மூன்று நாட்களுக்குத்தான். ‘யாராவது என்னை உறுக்கி வெருட்டிக் கொண்டேயிருந்தால் நான் ஒழுங்காக இருப்பேன். பெத்தம்மா என்ன செய்வாள்? பாவம்.’   

வானொலியில் மூன்று பாடல்களும் தீர்ந்தன. அது திரும்பவும் இரையத்தொடங்கியது. மல்லாந்து கிடந்தவன் தேகத்தைத் திருப்பி நெஞ்சை உயர்த்தி வானொலியை நிறுத்தினான். பக்கத்திலேயே படுத்திருந்த அமலி அக்காவிலிருந்து ‘பெயர் அன்ட் லவ்லியின்’ வாசனை கசிந்தது. எப்போதுமே கண்ணாடி மேசையைச் சுற்றியிருக்கிற நெடிதான் என்றாலும் இருட்டில் அதற்கு இன்னோர் அழுத்தம். இருட்டைப் பிசைந்து பசையாக்கினால் இப்படித்தான் மணக்குமோ?

அருள்குமரன் தொண்டையில் தேங்கியிருந்த எச்சிலை மிண்டி விழுங்கினான்.  கண்களை இறுக்கி மூடினான். இமை மடல்களுக்குள் காலை புலர்ந்தது. சரவணபவனின் மனைவி வெறுங்காலுடன் நின்று தெருவைக் கூட்டுகிறாள். ‘சரக்.. சரக்..’ என்று விளக்குமாறு சீராக நகர்கிறது. காலைப் புழுதி அவளுடைய சோர்ட்டியில் படிகிறது. நல்ல சதைப்பிடிப்பான கைகள் அவளுக்கு. இடது தோளுக்குச் சற்றுக் கீழே சிறு வயதில் தடுப்பூசி போட்ட இரண்டு வட்ட அடையாளங்கள். ஏதோ கோயிலில் நேர்ந்த சிவப்பு நூல் கட்டியிருந்தாள். ‘சரக்.. சரக்..’ ‘சரக்.. சரக்..’ கண்களைத் திறந்தான். திடீரென்று கழுத்துப் பக்கத்தில் வியர்த்தது. தலையை உயர்த்தி கட்டிலில் படுத்திருந்த பெத்தம்மாவைப் பார்த்தான். அவள் நல்ல நித்திரை. தடக்கித் தடக்கிக் கேட்குமாற்போன்ற மூச்சு ஓசை மட்டும் கேட்டது. தலையைத் தாழ்த்தி குப்புறப் படுக்க முயன்றான். எதேச்சையாகத் தோள்மூட்டு அமலி அக்காவின் இடது மார்பில் உரசியது. மூச்சே நின்றுவிட்டது. கால்களுக்கு இடையில் விறகைப்போட்டு எரித்ததைப்போல குபுகுபுவென்று வெம்மை. ‘காய்ச்சலோ..?’ எழுந்து ஓடிச்சென்று ஒண்டுக்கு இருந்துவிட்டு வந்து படுக்கலாமா என்று யோசித்தான். தண்ணீர் விறாய்த்தது. கட்டில் காலோடு பெத்தம்மா தண்ணீர்ச் செம்பு வைத்திருப்பாள். அமலி அக்கா தூக்கத்தில் என்னவோ வாய் புசத்தினாள். அலுப்பு முறிப்பதைப்போல தேகத்தை அசைத்து மல்லாந்து திரும்பினாள். அருள்குமரன் அவளுடையை வயிற்றைப் பொத்திப் பிடிப்பதைப்போல கையை வைத்தான். சூடான வயிறு. 

அன்றைக்கு இரவு முழுக்க அமலி அக்காவின் தேகத்திலிருந்து ‘பெயர் அன்ட் லவ்லியின்’ வாசனை கிளர்ந்து கொண்டேயிருந்தது.

காலையில் கண்ணைத் திறக்க முடியவில்லை. நித்திரை முழித்த எரிவு. அமலி அக்கா நேரத்திற்கே எழுந்து குளித்து முடித்திருந்தாள். துவாயைக் குறுக்குக் கட்டாகக் கட்டிக்கொண்டு அறைக்குள் சென்று ஆடை மாற்றிக்கொண்டு வெளியேறினாள். கண்ணாடி மேசையின் முன்னால் நின்று ‘பெயர் அன்ட் லவ்லியை’ விரல்களில் பிதுக்கி கன்னத் தசைகளில் பூசித் தேய்த்தாள். அருள்குமரன் எழுந்து சுவரில் சாய்ந்தான். அவளை நிமிர்ந்த பார்ப்பதற்கே அந்தரமாக இருந்தது. முன்னைய இரவு அதுபாட்டுக்கு நினைவுக்கு வர துரத்தித் துரத்திவிட்டான். ‘நேற்று விளையாடப் போயிருந்திருக்கலாம். அந்தக் களைப்பிலேயே இரவு நித்திரை வந்திருக்கும். இண்டைக்குக் கட்டாயம் போவேன்.’

“டேய்.. ஏழு மணி ஆச்சுது. எழும்படா..” அமலி அக்கா உறுக்கினாள்.  

0

ஒரே வயதுக் காரர்களுடன் ஒன்றாகப் பள்ளிக்கூடம் போய்த் திரும்பிக்கொண்டிருந்தவனுடைய உலகம் எந்த இடத்தில் இன்னொரு பாதையில் திரும்பியது என்று புரியவேயில்லை. நண்பர்களுடைய வாழ்வும் தன்னுடையதும் முழுக்க முழுக்க வேறானவை என்ற பிரமை அருள்குமரனுக்கு ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய கதைகளில் மெதுவாகக் ‘பெண் உடல்’ நுழைந்து ஆளாளுக்கு குசுகுசுத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். எப்போது பார்த்தாலும் ‘அப்பிடியாம்.. இப்பிடியாம்..’ என்று அத்தனை பேருக்கும் எதையோ அறிந்துகொள்ளத் துடிக்கின்ற ஆர்வம். அருள்குமரன் அதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதைப்போல உட்கார்ந்திருப்பான். ‘ஒருவேளை அவர்களைப்போலவே இருந்திருக்கலாமோ?’ என்று தோன்றும். அவர்களோ ‘நல்லாப் படிக்கிற பொடியனுக்கு இதெல்லாம் பிடிக்காது.’ என்று சொன்னார்கள். ஆனால் படிப்பில் கவனம் சிதறத் தொடங்கியிருந்தது. எங்கோ வழியில் பெத்தம்மாவைச் சந்தித்த நிர்மலா ரீச்சர் “திடீரெண்டு படிப்பில கவனம் குறையுது. இப்பிடி இருந்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்குப் போயிடுறாங்கள். கவனிச்சுக் கொள்ளுங்கோ.” என்று சொன்னாளாம். பெத்தம்மா வருந்தினாள். “என்ன செய்ய? ஆண்டவர் எனக்கு வயசையும் திடத்தையும் தரவில்லையே..”

அவளைப் பற்றி எப்போது நினைத்தாலும் ‘பெத்தம்மா பாவம்.’ என்றுதான் தோன்றுகிறது. நோய் தொற்றிய உடம்பு. ‘உன்னை ஒரு ஆளாக்கும் வரைக்கும் நான் குழிக்குள்ளே இறங்கக் கூடாது. அதுதான் நான் மாதாவிடம் கேட்கிறது.’ அவளுடைய கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அமலி அக்கா “நீ இப்ப ஒண்டிலும் கவனமில்லை” என்று திட்டுகிறபோதுதான் வாயில் வரக்கூடாத வார்த்தைகள் வரப் பார்க்கின்றன. கோபத்தில் அவளுடைய கழுத்தைப் பிடித்து.. ஐயோ.. கழுத்தென்றாலே ‘பெயர் அன்ட் லவ்லியின்’ வாசனைதான்.  

மழைக்காலம் ஆரம்பித்தது. இரண்டு நாள், மூன்று நாள் என்று தொடர் அடை மழை. அன்றைக்கு அமலி அக்கா பாயையும் போர்வையையும் சுருட்டிக்கொண்டு வந்து விறாந்தையில் விரித்தாள். “உள்ளே பயங்கரக் குளிர். விறைத்தே செத்துவிடுவேன். வெளியே என்றால் காத்துப் படும்போது குளிர் தெரியாது.” என்றாள். வானொலி இசைக்கத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் ஓய்ந்து இரைந்தது. அருள்குமரன் அதை நிறுத்தினான். தலையை உயர்த்திப் பெத்தம்மாவைப் பார்த்தான். மல்லாந்து சரிந்தான். அமலி அக்கா ஓர் அலுப்பான சிணுங்கலுடன் திரும்பினாள். அவளுடைய வயிற்றைப் பொத்துவதைப்போல கையை வைத்தான். குளிரான வயிறு.

இன்னொரு நாள் இருள் அவர்களைப் புதைத்து வைத்திருந்தது. அருள்குமரன் அவளில் உழன்றான். இலக்கற்ற தேடல். பதகளிப்பு. கண்களை மூடியபோது அவளுடைய சதைத் திரட்சியான கையில் தடுப்பூசி இட்ட இரண்டு வட்ட அடையாளங்கள் பிரகாசமாகத் தெரியத் தொடங்கின. பொத்தென்று அவளில் விழுந்தான். அவளிலிருந்து தன்னைப் பிய்த்துக்கொண்டு ஓட வேண்டும்போல நடுங்கத் தொடங்கியது. இது முதல் முறையல்ல. ஒரு தடவை அமலி அக்காவின் கண்ணீரை, கன்னத்தில் வைத்து உதடுகள் சுவைக்க நேர்ந்தபோதும் இப்படி ஆகியிருந்தது. பாவத்தைச் செய்த பதைப்போடு விலகினான். இரண்டு தடவைகளிலும் அவனைக் கால்களாலும் கைகளாலும் அழுத்திப் பிடித்து தனக்குள் புதைத்தாள் அமலி அக்கா.    

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *