அஷேரா – 1

1

மாநில அரசின் அகதிகள் திணைக்களத்தின் நான்காவது மாடி அறையில் கோடை வெயில் குபு குபு என்று புகுந்ததில் சுவர்களும் மேசைகளும் பிரகாசமாயிருந்தன. அருள்குமரனுக்கு எதிரிலிருந்த அதிகாரி தடித்த வில்லைகளுடைய கண்ணாடியை அணிந்திருந்தான். அவனுக்கு இலங்கையின் நிலவியல், அரசியல், இயக்கவியல் – இது வேறு இயக்கம் – மட்டுமல்ல உளவியலும் தெரிந்திருக்கும் என்பதால் எதிரில் இருப்பவனின் சொற்களையும் தாண்டி கண் அசைவிலும் உடல்மொழியிலும் கூட குறிப்பு எடுப்பான் என்று அருள்குமரனுக்குத் தோன்றிற்று. முகத்தில் படரவிட்டிருந்த அப்பாவித்தனத்தை இருபத்தியிரண்டு வயதிலிருந்து பதினாறு வயதிற்குக் கீழிறக்க முயற்சித்தான். ஒரு திருவிழாவில் தொலைந்த பரிதவிப்புடன் கழுத்தை வளைத்துச் சுற்றுமுற்றும் பார்த்தான்.

ஜன்னலின் வெளியே தூரத்தில் மலையடிவாரங்களுக்கு இடையில் பச்சை நிறத்தில் எகெரி ஏரி விரிந்திருந்தது. அகதிகளுக்கான அடிப்படை ஜெர்மன் மொழி வகுப்பில் ஆசிரியை திருமதி மார்ட்டின் ‘மலைகளின் இளவரசி’ என்று சொன்ன பாறைகளாலான மலை, ஏரியின் இடது புறத்தில் தெரிந்தது. அதன் கூர்முனையில் வெயிலை ஏமாற்றிவிட்டு இன்னமும் கவிந்திருந்த வெண்பனி ஒரு முலைக்காம்பைச் சுற்றிப்படர்ந்திருந்த கருமையைப்போலத் தோன்றவும் அருள்குமரன் வெடுக்கெனத் திரும்பி மொழிபெயர்ப்பாளரைப் பார்த்தான். அவருடைய முகத்தில் மீசை இல்லை. அவர் “தண்ணீர் வேண்டுமா” என்று கேட்டார். ‘வேண்டாம்’ என்று தலையசைத்துவிட்டு கண்ணாடிக் குவளையில் தண்ணீரைக் கவிழ்க்கின்ற சத்தம் யாருக்கும் கேட்கக்கூடாதென்ற அவதானத்தோடு வார்த்து ஒரு மிடறு குடித்தான். அன்றைய விசாரணை ஆரம்பித்தது.

“அருள்குமரன்.. நீங்கள் இயக்கத்தில இருந்தனீங்களா?”

இதற்கு முன்னர் நடந்த முதலாவது விசாரணையில் சொன்ன பதில்களும் இனிச் சொல்லப் போகும் பதில்களும் அச்சு அசல் ஒன்றாயிருக்க வேண்டும். யாரோ ஒருவர், முதலாவது விசாரணையில் தன்னை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்து அடித்தார்கள் என்றும் இரண்டாவது விசாரணையில் கயிற்றால் கட்டி வைத்து அடித்தார்கள் என்றும் சொன்னதால் அதையே காரணமாகக் காட்டி அவருடைய தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்களாம். அருள்குமரர் அவதானமாக “ஓம்.” என்றான்.

“எதுக்காக இயக்கத்தில சேர்ந்தீங்கள் என்று சொல்ல முடியுமா?”

“அது பெரிதாக ஒரு காரணமும் இல்லை. என்னுடைய பெத்தம்மா நிறையக் கண்டிப்பாக என்னை வளர்த்தா. சின்னப் பிழை விட்டாலும் காலுக்குக் கிழே கம்பு முறியும் வரை அடிப்பா. அப்படியிருக்க நான் காதலிக்கு எழுதிய கடிதத்தை ஒரு நாள் இரவு அவ எடுத்துப் படித்துவிட்டா. காலையில் என்னை அடித்தே கொன்றுவிடுவா என்ற பயத்தில் விடிய முதலே ஓடிப்போய் இயக்கத்தில் சேர்ந்துவிட்டேன்”

அதிகாரி சலித்துக்கொண்டான். “பிறகு என்ன நடந்தது?”

“அங்க இரண்டு மாதங்கள் வரை இருந்தேன். பிறகு விலகி வந்துவிட்டேன்.”

“பிறகு..?”

“மறுபடியும் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் மூன்றாவது மாதம் படகில் ஏறி இந்தியாவிற்குத் தப்பிப் போனேன்”

“பிறகு..?”

“அங்கே நான் இயக்கத்தில் இருந்து வந்தவன் என்ற சந்தேகத்தில் விசாரணைக்காகக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். அதனால் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கள்ள ஆவணங்களைத் தயாரித்து கொழும்பிற்குப் போய்விட்டேன்.”

யாரும் “பிறகு..?” என்று கேட்கவில்லை.

“கொழும்பில் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கஷ்டகாலம், அங்கே ஒரு குண்டு வெடித்தது. அருந்தப்பில் உயிர் தப்பினேன். ஆஸ்பத்திரி வார்ட்டில் ஒரு மாத காலம் தூக்கிப் போட்டுவிட்டார்கள். திடீரென்று ஒரு நாள் அந்தக் குண்டு வெடிப்பில் எனக்குச் சம்மந்தம் இருக்கென்று சொல்லிக்கொண்டு வந்த ஆமிக்காரர்கள் ஆஸ்பத்திரியிலிருந்த என்னைத் தர தரவென்று இழுத்துக்கொண்டு போனார்கள்.” 

“நீங்கள் உண்மையிலேயே சம்மந்தப்பட்டிருந்தீர்களா?”

அருள்குமரன் திகைத்துப்போய் “ஆண்டவரே..” என்று கூவினான். மொழிபெயர்ப்பாளரைப் பார்த்து “அந்தக்காலத்தில் எனக்கு வெறும் பத்தொன்பது வயதுதான் நடந்துகொண்டிருந்தது. நான் ஒரு சின்னப் பெடியன்” என்றான்.

அந்தக் கணத்தில் அவனுடைய கண்களை ஆழ ஊடுருவிய அதிகாரி “ஆனால், உங்களுடைய இயக்கத்தில் முதலாவது கடற் கரும்புலி வெடித்துச் சிதறியபோது அந்தச் சின்னப் பெடியனுக்கு வெறும் பதினாறு வயதுதான் நடந்துகொண்டிருந்தது என்று படித்திருக்கிறேன்.” என்றான்.

0

நடுச்சாமம். காடு அடங்கியிருந்தது. அருள்குமரன் சரேலென்று கண்ணைத் திறந்தபோது புத்தம் புதியதாக அந்த நினைப்புத் தோன்றிற்று. ‘இயக்கத்திலிருந்து இப்பொழுதுதே தப்பி ஓடுவோம்.’

பாயிலிருந்து தலையை மெல்லத் தூக்கினான். இரு புறமும் கிழங்கு அடுக்கியதைப்போல பெடியங்கள் நித்திரை கொண்டார்கள். பகல் முழுக்க வெயிலைச் சேகரித்த தகரக் கூரையிலிருந்து இறங்கிய வெக்கை கீழே அலைந்த கொண்டிருந்தது. எழுந்து முழந்தாளில் முகத்தை வைத்தபடி கொஞ்ச நேரத்திற்கு உட்கார்ந்திருந்தான். வீரை மரத்தில் கட்டியிருந்த மின்சாரக் குழல் விளக்கிலிருந்து பரவிய வெளிச்சம், அந்த இடத்தில் மட்டும் வட்டமாகக் குவிந்திருந்தது. அதற்கு வெளியே அடர் வனத்தின் இருளுக்கு முன்னால் மண்டியிட்ட மாதிரித் தணிந்தது. வெளிச்சத்தைக் கீழே கவிழ்த்துவிட்டு மேலே படர்கின்ற இருட்டும், காட்டின் அமைதியும் நிறைவேறாத ஆசையொன்றைப் பற்றிய துயரத்தை அவனில் வரையத் தொடங்கின.

தூக்கத்தின் இடையில் எப்போதெல்லாம் விழிக்கிறானோ அப்போதெல்லாம்  தூலமற்று படரும் ‘இந்தத் துயரத்தை’ அமலி அக்காவின் உடலை இருளுக்குள் அளையத் தொடங்கிய அந்த நாளிலிருந்து அருள்குமரனுக்குத் தெரியும். அத் துயருக்கு ஒரு வாசனை உண்டென்றால் அது அவளுடைய தேகத்திலிருந்து கசியும் ‘பெயர் அன்ட் லவ்லியின்’ வாசனையை அசலாக ஒத்திருக்கும். இருளின் பின்னணியில் அமலி அக்கா வெறும் அசைவுகளாகத்தான் ஞாபகத்தில் இருக்கின்றாள். சற்றுப் பெருத்த முலைகளே அவளுடைய அடையாளம். ஓரிரு இரவுகளின் அடையாளமாக கண்ணீரும் மின்னியிருக்கிறது. கண்ணீரின் உப்பைச் சுவைக்க நேர்ந்த போதெல்லாம்  துக்கமும் மூர்க்கமும் மாறி மாறி அவனை உன்மத்தமாக்கின. அது யாரையோ பழிவாங்குவதைப்போன்ற வெறி. தொலை தூரத்திலிருந்து அமலியின் காதலன் அனுப்புகின்ற கடிதங்கள் நினைவுக்கு வரும். வலிப்பு வருவதைப்போல உடல் விதிர்க்கும். அதைத் தணிக்க அவளுடைய மார்புகளுக்கிடையில் அசையும் சங்கிலியின் வெள்ளிக் குருசின் குளிர்மையை வலது கண் மடலில் ஒற்றிக்கொள்வான்.

0

வியர்வை கசகசவென வழிந்தது. அருள்குமரன் கைகளைப் பின்னால் ஊன்றிச் சாய்ந்தான். கால்களை நீட்டிக்கொண்டான். பக்கத்தில் படுத்திருந்த ரொக்கெட், வலது கையை இவனுடைய தொடையில் வீச அதை பக்குவமாக விலக்கினான். அவனும் ரொக்கெட்டும் இரவு பத்து மணிவரை காவல் கடமையில் இருந்தார்கள். அது இயக்கத்திற்குப் புதிதாக வருபவர்களைத் தங்க வைக்கின்ற முகாம். அங்கிருந்து யாராது தப்பிச் செல்கிறார்களா என்று கண்காணிப்பதைத் தவிர வேறெந்தக் கடமையும் கிடையாது. முன்னிரவுப் பனி. மூக்கு உளைந்துகொண்டே இருந்தது. அருள்குமரன் தும்மிக் கொண்டே இருந்தான்.

ரொக்கெட் “உனக்குப் பனி ஒத்துக் கொள்ளவில்லை.” என்றான். “நெருப்பில் மிளகைச் சுட்டு மூக்கில் மணக்கக் கொடுத்தால் உடனே நிற்கும். தங்கச்சிக்கும் இந்தக் குணம் இருந்தது. அம்மா இப்படித்தான் செய்து கொடுப்பா.. நாங்கள் மடுத் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்தபோது அந்தச் ஷெல் அம்மாவிற்குப் பக்கத்திலேயே விழுந்திருக்க வேணும். அவவின் சிதறிய உடம்பை விளக்குமாற்றாலதான் கூட்டியள்ளினோம். ஒரு சாக்குப் பொட்டலத்துக்குள்ள அதைப் போட்டுக் கட்டிச் சுடலையில் எரிக்கக் கொடுத்துவிட்டு நான் நேராக இயக்கத்திற்கு வந்தேன்.”

அருள்குமரன் கட்டியிருந்த கைலியை உயர்த்திக் காதுகளை மூடினான். வெறுமையாக “ம்” என்றான். அவனுடைய அம்மாவின் இருண்ட முகம் நினைவில் கிளர்ந்தது. அவளைக் கல்லறைத் தோட்டத்துப் புதைகுழியில் வளர்த்தியிருக்கிறார்கள். ‘வான தூதர்கள் உம்மைப் பேரின்ப வீட்டில் சேர்த்திடுவார்களாக’ என்ற குரலை எட்டு வயதேயான ஒரு சிறுவன் பெத்தம்மாவில் சாய்ந்து நின்று கேட்கின்றான். பெத்தம்மா அவனுடைய கன்னங்களை வருடியபடி விசும்புகிறாள். வெண்ணிறச் சேலையில் அம்மாவின் முகம் இருண்டுபோய் அழுதுகொண்டிருக்கும் என்று சிறுவனுக்குத் தோன்றிற்று.

அருள்குமரனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல், பிறகொருநாள் வியாகுல மாதா கோவிலின் பின்வளவிலிருந்து அரளிச் செடி விதைகளைப் பறித்து வந்து அம்மிக்கல்லில் அரைத்துத் தின்றது வரை அம்மாவுடைய முகம் அப்படித்தான் இருந்தது. அம்மாவும் அப்பாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நாட்களில் அவளுடைய புன்னகைத்த முகத்தை ஓரிரு புகைப்படங்களில் பார்த்திருக்கிறான். அவன் பிறந்த காலம் அது. அதற்குச் சிலகாலம் கழித்து அப்பா வெளிநாட்டிற்குப் போனார். மத்திய கிழக்கு நாடொன்றில் கட்டிடத் தொழில் ஒப்பந்தம். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விடுமுறை.

அப்பாவிடமிருந்து வாரத்திற்கு இரண்டு கடிதங்களாவது வரும். தொடக்கத்தில் அம்மாவும் கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தாள். மாலை நேரங்களில் முற்றத்தில் நின்ற மா மர நிழலில் உட்கார்ந்து பக்கம் பக்கமாக எழுதுவாள். அவள் கடிதம் எழுதுவதைக் குறைத்துக்கொண்டபோது சரவணபவன் வந்தானா அல்லது சரவணபவன் வரத் தொடங்கியபோது கடிதங்களைக் குறைத்தாளா என்று தெரியவில்லை. அவன் எதிர் வீட்டில் தன்னுடைய முதிய தாயாரோடு இருந்தான். அம்மாவை விடவும் ஐந்தாறு வயது இளையவன். 

அருள்குமரன் தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கிரகிக்கத் தொடங்கிய காலங்களிலேயே சரவணபவனுடைய வருகையும், அம்மாவுடன் பேசிச் சிரிப்பதுவும், அவர்களுடைய தனிமையும் இயல்பாக மாறிவிட்டிருந்தன. ஓர் இரகசியத்தைப் பகிர்வதைப்போன்ற சரவணபவனின் பகிடிகளுக்கு அம்மா வெட்கத்தோடு சிணுங்குவதை அருள்குமரன் பார்த்திருக்கிறான். அப்போது அம்மாவிற்கு முப்பத்தொரு வயது. நாளாக நாளாக அவர்கள் சிரித்துப் பேசுவதைக் கண்டால் ‘சுளீர்’ என்று கோபத்தில் அருள்குமரன் குமைவான். அதைப்போலவே அவர்கள் திடீர் திடீரென்று சண்டைபிடித்துக் கதைக்காமலும் இருப்பார்கள். அருள்குமரனுக்கு இன்னதென்றே தெரியாத சந்தோஷம் பொங்கி வழியும். அந்நாட்களில் அம்மா கண்ணைக் கசக்கி அழுவாள். மாதா சொரூபத்தின் முன்னால் முழந்தாளில் நின்று மன்றாடித் தீர்ப்பாள். 

0

ஒருநாள் கருக்கல் பொழுது. சரவணபவன் வேலியிலிருந்த இரும்புக் கதவைத் திறந்துகொண்டு வந்தான். அம்மா நிதானமாக அருள்குமரனைக் கூப்பிட்டு தனக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டாள். “எங்கையும் போகாமல் இதிலேயே இரு.” என்றாள். சரவணபவன் கொஞ்ச நேரத்திற்கு முற்றத்திலேயே காத்து நின்றான். பிறகு கதவை உதைந்துவிட்டு வெளியே போனான். அன்றைக்குத்தான் ‘நிம்மதி’ என்ற வார்த்தையின் முழு அர்த்தமும் அருள்குமரனுக்கு அறிமுகமானது. அப்போது அவனுக்கு ஏழோ எட்டு வயதுதான். இன்னொருநாள் மத்தியானம்போல சரவணபவன் நுழைந்தபோது அம்மா அருள்குமரனைக் கூப்பிட்டு “ஆச்சியண்ணன் கடைக்குப் போய் கால்கிலோ பச்சை மிளகாயும் வெங்காயமும் வாங்கிக் கொண்டு வா.” என்று துரத்தினாள். அவன் விர்ரென்று ஒரேயோட்டமாக ஓடிப்போய் பொருட்களை வாங்கிக்கொண்டு ஒரேயோட்டமாகத் திரும்பி வந்து கதவைத் தட்டினான். ‘சஞ்சலம்.’ என்ற வார்த்தையின் அறிமுகம்.

இரண்டு வருடங்களில் அப்பா விடுமுறையில் வந்தார். அம்மா சரவணபவனுடன் முகம் கொடுத்துப் பேசுவதை முற்றாகவே நிறுத்தினாள். ஏதேனும் சாட்டுக்களைச் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வரும் சரவணபவனின் கண்களில் வழிந்த எரிச்சலை அருள்குமரன் குதூகலத்துடன் பார்த்தான். ‘குதூகலம்’ என்ற வார்த்தை. ஒரேயொரு மாதம்தான். அப்பா புறப்படத் தயாரானார். அவரை மறுபடியும் வெளிநாட்டுக்குப் போக வேண்டாம் என்று அம்மா கெஞ்சினாள். “இங்கிருந்து என்ன செய்வது.? இன்னொரு நான்கு வருடங்கள் உழைத்துக்கொண்டு ஒரேயடியாக வந்து விடுகிறேன்.” என்றார் அப்பா. ‘ஏமாற்றம்.’

ஒருநாள் காலை, கேற்றடியில் வைத்து அருள்குமரன் அப்பாவிற்குக் கையசைத்தான். அவர் அம்மாவின் நெற்றியில் ஆசீர்வதிப்பதைப்போல வருடி “கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் இரண்டு வருசம் ஆகிவிடும். இந்த வாசலில் வந்து நிற்பேன்” என்றார். அம்மா தலையைக் குனிந்து விம்மினாள். அவர் வெளியேறிப்போன பின்னரும் அழுதுகொண்டேயிருந்தாள்.

பின்னேரம் யாருடையதோ செத்தவீடென்று பெத்தம்மா புறப்பட்டுச் சென்றுவிட்டாள். சொற்ப நேரத்திலேயே சரவணபவன் வந்தான். அம்மா புறங்கையினால் அழுகையைத் துடைத்தாள். விறுவிறுவென எழுந்து கேற்றடிக்குப் போனாள். சரவணபவனை நேராகப் பார்த்து “வெளிய போ பவன். இனிமேல் இங்கே வராதே” என்றாள். அவர்கள் கேற்றடியில் நின்று மாறி மாறி வாக்குவாதப்பட்டார்கள். சரவணபவன் கோபப்படுவதையும் குரூரமாகச் சிரிப்பதையும் கெஞ்சுவதையும் அருள்குமரன் அந்தரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஒன்பது வயது.

சரவணபவன் திடீரென்று அம்மாவின் காலில் நெடும்சாண் கிடையாக விழுந்தான். கைகளைக் கூப்பி குழந்தைப் பிள்ளை மாதிரி அழுதான். அம்மா தலையைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். சரவணபவன் எழுந்து நடந்து வீட்டுப் படியில் ஏறினான். நேராக படுக்கையறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான். அம்மா ஓடி வந்து கதவைத் தட்டினாள். “வெளிய வா பவன்” என்று கத்தினாள். திரும்பவும் தடார் தடார் என்று கதவில் அறைந்தாள். கதவு மெல்லத் திறந்தது. உள்ளே கூரையின் குறுக்கு மரத்தில் ஒரு தூக்குக் கயிற்றைப்போல அம்மாவின் சேலையை முடிச்சிட்டிருந்த சரவணபவன் கதிரையில் ஏறி தலையை முடிச்சிற்குள் செருகினான். “வேண்டாம் பவன்.. வேண்டாம்” அம்மா உறுக்குவதைப்போலவும் கெஞ்சுவதைப்போலவும் கத்தினாள். அவன் “இன்றைக்கு மட்டும்.. ஒரேயொரு தடவையாவது..” என்று அவளைப் பார்த்துக் கேட்டான். அம்மா “ஐயோ.. ஐயோ” என்று தலையிலடித்து அரற்றினாள். அருள்குமரனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அம்மா அவனிடம் ஏதேனும் உதவி கேட்பாள் என்று பார்த்துக்கொண்டு நின்றான்.

0

அருள்குமரனுடைய அப்பாவிற்கு வேலையிடத்தில் மாரடைப்பு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டார். செய்தி கிடைத்தபோது ஒரு வாரம் ஆகியிருந்தது. போர்ச் சூழலால் பாதைகள் அடைபட்ட ஊருக்கு உடலைக் கொண்டுவர முடியவில்லை. அம்மா தலையைச் சுவரில் அடித்துக் கத்திக் குழறினாள். அருள்குமரன் ஓடிச்சென்று அவளுடைய இடுப்பைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதான். அம்மாவின் தேகம் நடுங்குவதைப்போல தோன்றிற்று. அந்த உலுக்கத்தில் சரவணபவனுடைய கெட்ட பகிடிகளுக்கு அம்மாவுடைய வெட்கச் சிரிப்புக்கள் நினைவில் எழ அவளிடமிருந்து உதறிக்கொண்டு வாசலுக்கு ஓடினான். சரவணபவன் அதற்குப் பிறகு அந்த வீட்டிற்கு வரவேயில்லை.

மூன்றோ நான்கோ மாதங்களில் அவனுக்குத் திருமணம் நடந்தது. தெருவை பூச் சரப் பந்தல்களாலும் தோரணங்களாலும் சோடித்திருந்தார்கள். வாசலில் குலை தள்ளிய வாழை மரங்கள். பாடல்கள் இரவு பகலாக ஒலித்தன. திருமண நாளன்று அம்மா நேரத்தோடேயே எழுந்து தலைக்குத் தோய்ந்தாள். அருள்குமரனையும் அழைத்துக்கொண்டு வியாகுல மாதா கோவிலுக்குப் போனாள். நீண்ட நேரமாக மன்றாடினாள். திரும்பத் திரும்ப செபம் சொன்னாள். திரும்பும் வழியில் சரவணபவனும் திருமணப்பெண்ணும் ஒரு கறுப்பு நிறக் காரில் ஏறிப் போவதைக் காண நேர்ந்தது. அவன் அருள்குமரனின் கண்களை ஒரு முறை நேராகப் பார்த்தான். 

இரவு நித்திரைப் பாயில் அம்மா அழுகின்ற சத்தம் கேட்டது. இரண்டாம் நாள் இருட்டிய பிறகு, அம்மா யாருக்கும் தெரியாமல் வியாகுலமாதா கோவில் வளவிலிருந்து அரளி விதைகளைப் பறித்து வந்தாள். ‘வயிறு உளைகிறது. இஞ்சி அரைத்துச் சாப்பிடப் போகிறேன்.’ என்று அம்மிக் கல் முன்னால் குந்தி இருந்தாள். அருள்குமரன் உள்ளே பள்ளிக்கூடப் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான். அம்மிக் கல் ‘க்ர்க்.. க்ர்க்..’ என்று சத்தமிட்டது. அம்மா உடனேயே வழித்துத் தின்றிருக்க வேண்டும். அவள் தீனமான குரலில் அருள்குமரனைக் கூப்பிட்டாள். குடுகுடுவென்று ஓடிப்போய் நின்றான். உட்கார்ந்திருந்தவாறே அவனைக் கட்டிப்பிடித்தாள். தலை மயிரில் விரல் நுழைத்து கொஞ்ச நேரத்திற்கு ‘உணாவி’ விட்டாள். கன்னங்களை ஏந்தி முகத்திற்கு நேராக வைத்துக்கொண்டு “அம்மாவைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அம்மாவை எப்பவும் வெறுக்கக்கூடாது.” என்றபோது அவளுடைய கடைசிக் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

தொடரும்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *