திசை ஒன்பது வாசிப்பு / நா.கதிர்வேலன் – விகடன்

ஈழத்திலிருந்து தமிழர்கள் உலகத்தின் எல்லா திசைகளுக்கும் ஓடத் தொடங்கி 40 ஆண்டுகளாகிறது. அலைந்து அலைந்து காடுகள், கடும் குளிரான பனிநிலங்கள், உறைந்த நதிகளையெல்லாம் கடந்துபோன வரலாறுகள் அவர்களுக்கு உண்டு. எங்கே போகிறோம், எப்படிப் போகிறோம் என்றே தெரியாத பயணங்கள்கூட இருக்கின்றன. அப்படியொரு பின்னணியில் எழுந்ததே சயந்தனின் இந்த ‘திசை ஒன்பது’ நாவல். ஆனால், மிகச் சமீபத்தில் நடக்கும் கதை.

அவருடைய ‘ஆறாவடு’, ‘ஆதிரை’, ‘அஷேரா’ நாவல்கள் ஈழப் போராட்டப் பின்னணியில் எழுதப்பட்டவை. நான்காவது நாவலான ‘திசை ஒன்பது’ அங்கிருந்து வெளியேறி ரஷ்யாவிலும் உக்ரைனிலும் நிலைகொள்கிறது. “துயரங்களை அனுபவித்த எல்லா மனிதர்களும் அவற்றுக்கு எதிராகப் போராடுவதில்லை. தப்பித்துப்போகவே விரும்புகிறார்கள்” என்று நாவலில் ஒரு குரல் வரும். அவ்வாறே போருக்கும் சாவுக்கும் சலித்து ஒதுங்கும் மனோபாவத்தைக்கொண்டதாக இந்த நாவலைச் சொல்லலாம். இலங்கையிலிருந்து தாய்லாந்து, அங்கிருந்து ரஷ்யா, உக்ரைன் என்று அலையும் இளங்கோ, வழியில் சந்திக்கும் இமையா என்ற பெண்ணின் கதையை நாவலுக்கு உள்ளேயே எழுதத் தொடங்குகிறான். அவனுடைய சொல்லித் தீரவேண்டிய கதையும், அவன் சந்தித்த இமையாவின் கதையுமே இந்த நாவல். மாஸ்கோவின் புறநகரில் இளங்கோவை ஓரிடத்தில் அடைத்துவைக்கிறார்கள். அங்கே சிரியா நாட்டுக்காரர், பாகிஸ்தானி, ஒரு தமிழ்நாட்டவர் என அவன் சந்திக்கும் மனிதர்களும், எரித்திரியா, குர்திஷ் பெண்கள் என இமையா சந்திக்கும் மனிதர்களும் வேருடன் பிடுங்கப்பட்டு, தேசாந்திரிகளாக அலையும் உலகளாவிய அகதிகளின் பிரதிநிதிகளாக நாவலில் தோன்றுகிறார்கள்.

உக்ரைனில் செஞ்சிலுவைச் சங்க முகாமிலுள்ள சிரியா பெண்ணான யூராவின் கதை, அரசியல் அழுத்தங்களும் சமூக அழுத்தங்களும் ஓர் அகதியை எப்படித் துரத்துகின்றன என்பதைச் சொல்கிறது. அவ்வாறே இளங்கோ சிறையில் சந்திக்கும் அருந்தவத்தின் கதை, அகதிகளின் தனிப்பட்ட வாழ்வு எப்படிச் சிதைகிறது என்பதைக் கூறுகிறது.

சயந்தனுடைய முந்தைய நாவல்களில் போருக்குள்ளும் வன்முறைக்குள்ளும் இடையிடையே வரும் பகடி, இந்த நாவலிலும் வருகிறது. அது எல்லா அரசியல்களையும், சித்தாந்தங்களையும் கேலி செய்கிறது. அது அதிகாரங்களை நோக்கிய எளியவர்களின் கேலி.

பொல்லாத அரசியல் நெருக்கடியிலிருந்து தப்பி சரணடைவதற்காக, வரிசையில் கைகளை உயர்த்தியபடி நிற்கும் இந்த அகதிகளை அடக்கிவைத்து, துன்புறுத்தும் இந்தக் காலம் எப்போது மாறும் என்ற கேள்வி இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் எல்லோருக்கும் எழும்.

நூல்: திசை ஒன்பது, ஆசிரியர்: சயந்தன், வெளியீடு: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை-600 051. பக்கங்கள்: 216, விலை: ரூ.280/-, தொடர்புக்கு: 98842 25776

ஆனந்த விகடன் | 10.6.26 | vikatan.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *