வண்டல் நிலம். குருதிபோலச் சிவந்த புழுதி சுழியாக விரிந்து எழுந்தது. ஒரு புயல்காற்றின் பின் மீந்த எச்சங்களென மரங்கள் தூர்ந்துபோயிருந்தன. மரங்களின் பச்சையத்தை வெம்மை கருக்கித் தின்று விட்டிருந்தது. கடலொன்று புகுந்தபோது அலை காவி வந்த மண்டையோடுகளையும், தோள்ப்பட்டை எலும்புகளையும், பற்களையும் பின்னர் அனாதரவாக விட்டுச் சென்றிருந்தது. மேற்கில் காட்டெருமைகள் மிகச் சாதுவாக நடந்து சென்றன. சர்ப்பங்களின் மூச்சொலியில் திரும்பிய பல்லிகளின் கண்களிலிருந்து ஊதா நிறம் ஒளிர்ந்தது. ஒரு பெரு மழையைப்போல பிரகாசித்தபடி கீழிறங்கிய வெயிலில் வளர்கின்ற நிழலாக அவள் தோன்றினாள். திசைகெட்டு ஓடிய மேகங்கள் ஸ்தம்பித்து நின்றன. கருநிற உதடுபோல திரண்டிருந்த அவற்றுக்கிடையில் புன்னகையைப்போல ஒரு மின்னல். சிரிப்புப்போல இடிமுழக்கம்! அந்தப் பூதாகாரச் சிரிப்பில் உடல் குலுங்குவதைப்போல அவளுடைய நிழலில் அசைவு தெரிந்தது. வெயில் மேற்குத் திசையில் ஒதுங்கிற்று. அவள் ஒரு ஜீவ விருட்சத்தின் கீழே முழுதாகப் புலப்பட்டாள். கேசத்தில் பாம்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன. முகத்தில் இன்னமும் அவளுடைய பழைய யௌவனம். மார்புகள் திறந்திருந்தன. முலைக்காம்பின் பதினொரு துளைகளிலும் சொட்டிய பால் துளிகள் மடியில் ஓர் ஏரியாகத் தேங்கின. அவளுடைய கால்களில் ஏரி முட்டித் தளும்பியது. இடையைப் பற்றி நெளிந்த ஒரு சர்ப்பம் ஏரியை நாவினால் துளாவிய கணத்தில் முலைப்பால் இரத்தமாக நிறம் மாறத்தொடங்கிற்று. அவள் ஓவென்று அலறினாள். ஒரு காசாவரிப் பறவையின் அலறலைப்போல அது வனாந்தரத்தில் ஒலித்தது.

அவளின் முன்னால் கானானின் ஆண்களும் பெண்களும் மண்டியிட்டிருந்தனர். அவர்களோடு நானும் முழந்தாளில் நின்றேன். நான் கம்பளியால் நெய்யப்பட்ட, அழுக்கும் புழுதியும் படிந்த போர்வையால் தலையையும் தேகத்தையும் மூடியிருந்தேன். ஓர் இரகசியப் பயணத்தின் அலைச்சலும் களைப்பும் எங்களில் தீராதிருந்தன. மேற்கிலிருந்த யாஹ்வேயின் இராட்சியத்திலிருந்து சினாயின் அரபா பள்ளத்தாக்கையும் கர்மேல் பர்வதத்தையும் கடந்து எல்லோரும் வந்திருந்தார்கள். அங்கே அஷேராவின் விக்கிரகங்களையும், புனித பலிபீடங்களையும் நொருக்குமாறு யாஹ்வே கட்டளையிட்டிருந்தான். ‘நானே வைராக்கியமுள்ள இரட்சகன்’ என்று பிரகடனம் செய்தான். யௌவனம் சுடரும் அவளுடைய விக்கிரகங்களை ஆலயத்திலிருந்து பெயர்த்தெடுத்து ஜெருசேலமிற்குப் புறத்தே கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான். அவற்றைத் துகள்களாக்கி, சிரசு அறுக்கப்பட்ட அவளது முப்பத்தியெட்டு புத்திரர்களினதும் புதைகுழியின் மேல் தூவச்செய்தான். அஷேராவிடம் மன்றாடியவர்களை மொசப்பத்தேமியாவின் இராச்சியத்திற்கு அடிமைகளாக வழங்கினான். யாஹ்வேயின் சீடர்கள், தங்களுடைய ஆண்டவரின் மனைவியாக இருந்தவள் பாவங்களைப் புரிந்தவள் என்றும் ஒழுக்கம் கெட்டவள் என்றும் போதனைகளைச் செய்தார்கள். ஆனால் கானானியர்களோ, இராட்சியத்திலிருந்து விலக்கப்பட்ட தங்களுடைய வானரசியை ஒவ்வொரு மழைக்கும் முதல் நாளில் வனாந்தரத்திலே தொழுதார்கள். அவர்களுடைய நீண்ட பயணத்தின் பொருட்டு இரவு விடியாது நீண்டது.
திராட்சை ரசக் குடுவைகளையும் தேனில் ஊறிய ஊனையும் தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் அவளுக்கு முன்னால் படையலிட்டார்கள். ஓர் அநீதிக்குச் சாட்சியாக இருக்க நேரிட்டதற்காக மன்னிப்புக் கோரினார்கள். தோத்திரங்களைச் சொன்னார்கள். மன்றாடினார்கள். என் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.
பிருட்டத்தை மூடிய நெளியான கூந்தலுக்குள் ஒளித்து வைத்திருந்த குழந்தைகளை வாஞ்சையோடு கையிலேந்திய கானானியப் பெண்கள் தலைக்குமேலே உயர்த்திப்பிடித்தவாறே “ராக்கினியாகிய மாதாவே, இக்குழந்தைகளுக்கு உம் உதிரத்தைக் காணிக்கையாய் அருளும்..” என்றார்கள். குழந்தைகளை அஷேராவின் மடிக் குருதிக்குள் கிடத்தினார்கள். சர்ப்பங்கள் கேசத்தினின்றும் இறங்கிச்சென்றன. குருதி பாலாகிற்று. அஷேரா முப்பத்தியெட்டுக் குழந்தைகளுக்கும் முலையூட்டத்தொடங்கினாள்.
நான் அவளுடைய தரிசனத்தைக் காண நின்ற கானானியர்களின் நீண்ட வரிசையிலிருந்து வெளியேறி வரண்ட மலைகளின் உச்சியை நோக்கி நடக்கலானேன்.
‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’ என்ற நூலில் இருந்து..
0
24.02.2005
ஆதியிலே சுவிட்சர்லாந்து மலைகளால் சூழப்பட்ட வெறும் மூன்று மாநிலங்களின் கூட்டரசாக இருந்தது. அந்த நிலத்தைக் காலடிகளால் நடந்தே சென்று கைப்பற்றுவேன் என்று அருகிலிருந்த ஒஸ்திரியா என்ற நாட்டின் இளவரசன், லியோபோல்ட் பிரகடனம் செய்தான். இருபதாயிரம் வீரர்கள் மூன்று தாக்குதல் அணிகளாகத் தயாராகினர். மூன்றாவது அணிக்கு லியோபோல்ட்டே தலைமை தாங்கினான். அவன், இரண்டாயிரம் குதிரை வீரர்களோடும் நான்காயிரம் காலாட்படை வீரர்களோடும் மோர்கார்த்தென் எல்லையில் எகெரி என்ற இந்த ஏரிக் கரையில் அணிவகுத்து நின்றபோது இரவு படரத் தொடங்கியிருந்தது. அடுத்த இரண்டொரு மாதங்களில் கண்ணாடித் தகடுபோல உறையக் காத்திருந்த ஏரியின் நீர் கடும் குளிரில் விறைத்துக் கிடந்தது. மரங்கள் இலைகளை உதிர்த்திருந்தன. காற்று ஓசையற்று உலாவியது. பேயுலக நிசப்தம்.
நள்ளிரவை நெருங்கிய நேரத்தில் கரையோரச் சதுப்பு நிலத்திலிருந்து செங்குத்தாக உயர்ந்த ஒரு குன்றின் உச்சியிலிருந்து ஒஸ்திரியப் படைகளின் அசைவுகளையும் குதிரைகளின் குளம்பொலிகளையும் அவதானித்துக் கொண்டிருந்தான் சுவிட்சர்லாந்துக் கூட்டரசின் அப்போதைய தளபதி வெர்னர் ஸ்ராபாஹர். அவனுடைய உதடுகள் ‘கிட்ட வரட்டும். திட்டம் இருக்கு’ என்று முணுமுணுத்தன. அவனும் சொற்ப எண்ணிக்கையிலான படையினரும் குன்றின் உச்சியில் முகாமிட்டிருந்தார்கள். வெர்னர் ஸ்ராபாஹர் அவர்களின் மத்தியில் எழுந்து நின்று தீக்குச்சியைப் பற்ற வைத்து வெளிச்சத்தை உண்டாக்கினான். “கவனமாகக் கேளுங்கோ. எதிரி இவ்வளவு தூரத்துக்கு உள்ள வந்திட்டான் என்று நீங்கள் சோர்ந்து போகக் கூடாது. இந்த இரவோடு எல்லாம் தலை கீழாக மாறப் போகுது. உள்ள வரவிட்டு அடிப்பதென்றால் என்னவென்று இண்டைக்கு லியோபோல்ட்டுக்குக் காட்டுவோம். இந்த இடத்திலேதான் அவங்களைச் சுற்றி ‘பொக்ஸ்’ அடிக்க வேணும். அவங்களில ஒருத்தர் கூட உயிர்ப் பிச்சை கேட்க வாயைத் திறக்கக் கூடாது.” என்றான் என்றபோது தாழ்ந்திருந்த முகத்திலிருந்து கண்களை மட்டும் உயர்த்திய அற்புதம் அண்ணன் “நீ இயக்கத்தில் இருந்தனியா?” என்று என்னைக் கேட்டார்.
‘இயக்கத்தில் இருந்தனியா? ’ இந்தக் கேள்வியை எத்தனையாவது முறை கேட்கின்றேன் என்று யோசித்தேன். முதன்முதலாக வலைப்பாடுக் கிராமத்தின் கடற்கரையில் ஒரு கடற்புலிப் பெடியன் என் கைகளை முறுக்கிப் பிடித்து குண்டியில் உதைந்தபோது கேட்டான். அதற்குப் பிறகு மண்டபம் அகதிகள் முகாமில் வைத்து ஒரு கியூ பிராஞ் அதிகாரி. பிறகும் யார் யாரோவெல்லாம் விசாரித்திருக்கிறார்கள். நெடுங்காலத்தின் பின்னர், சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்தபோது அங்கிருந்த விசாரணை அதிகாரி கேட்டான். மாநில அரசின் இரண்டாவது விசாரணையின்போதும் கேட்டார்கள். இப்போது அற்புதம் அண்ணனின் முறை. கேட்கட்டும். ஒவ்வொருவருக்கும் என்னிடம் ஒவ்வொரு பதில் இருக்கின்றது.
அருள்குமரனின் நாட்குறிப்பிலிருந்து..
தொடரும்..