சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் – சு.வேணுகோபால்

1977 முதல் 2011 வரையிலான ஈழப்போர்ச் சூழலில் தமிழ்க் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிந்தது என்பதை ‘ஆதிரை’ நாவல் விவரிக்கின்றது. டெலோ, ஈபி.ஆர்.எல்.எப், எல்.டி.டி போன்ற தமிழ் ஈழவிடுதலை இயக்கங்களுக்குள் நிகழ்ந்த அரசியல் நிலைப்பாடுகள், அழித்தொழிப்புகளின் பக்கம் என நாவல் பயணிக்கவில்லை. மாறாக, சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமான நீண்டகாலப் போர்ச் சூழலிலும், இந்திய அமைதிப்படை வந்தபின் நிகழ்ந்த சிக்கல்களிலும் தமிழ்க் குடும்பங்கள் அடைந்த அலைக்கழிப்புகள், அவமானங்கள், மானபங்கங்கள், வன்மங்கள், குரூரங்கள், சிதைவுகள் குறித்தான பல்வேறு பாதிப்புகளை அதிகமாகப் பேசுகிறது.

இரு தேசிய இனங்களின் போர்ச் சூழலில் ஏழைத் தமிழ்க் குடும்பங்கள் அடைந்த வரலாற்று சோகத்தைச் சித்திரங்களாக வரைந்திருக்கிறது ஆதிரை நாவல். போர்ச் சூழலில் இருந்து விலகி மண்ணை நம்பி வாழ முற்பட்ட ஏழை விவசாய குடும்பங்களையும் போர் நெருக்கித் தாக்குகிறது. தாய், தந்தை, அக்காள், தங்கை, தம்பி, அண்ணன், நண்பர்களைச் சிங்கள இராணுவம் தாக்கி நாசமாக்குகிறது. நேரடியாக இளம் பருவத்தினரை அடித்துக் கொல்கிறது. விடுதலைப்புலிகளின் மீது இருந்த கோபத்தை, ஒதுங்கி வாழும் தமிழ்க் குடும்பங்களின் மீது இராணுவம் காட்டுகிறது. பெண்களைப் பாலியல் வன்முறைகுள்ளாக்குகிறது. சிறுவர்களின் உடலைச் சிதைக்கிறது; கொல்கிறது. இந்த இளவதையிலிருந்து தப்பித்த இளைஞர்கள், நாசத்தைப் பார்த்து இதயம் குமுறி விடுதலை இயக்கத்துடன் இணைந்து போராடுகின்றனர். இந்தப் போராட்டங்களின் வெற்றி தோல்விகள் போரிலிருந்து ஒதுங்கி வாழும் தமிழ்க் குடும்பங்களைத் தாக்கியபடியே இருக்கிறது.

முப்பதாண்டுகால ஈழப்போரில் விடுதலைப் புலிகளின் இயக்கம் தவறுகளைச் செய்திருக்கலாம். சில விடயங்களைக் காது கொடுத்துக் கேட்காமல் தன் போக்கில் வழி நடத்தியிருக்கலாம். அவையெல்லாம் விமர்சிக்கப்படத்தக்கவைதான். ஆனால், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போரில் அதன் இடத்தை எக்காலத்திலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. விடுதலைப் புலிகளின் இயக்கம் என்பது காலத்தின் விளைச்சல். வரலாற்றின் முடிவு. தமிழ் இனத்தை அழிக்க முற்பட்ட சிங்கள இனவெறிக்கு எதிராக எழுந்த சுதந்திர உணர்ச்சியின் தன்மான வடிவம்தான் இயக்கம். அப்படியொரு இயக்கம் தோன்றாமல் இருந்திருக்குமானால் அது வரலாற்றிற்கு முரணான விடயம்; உண்மையில் ஈழத்தமிழர்கள் இதைவிட கொடூரமான அழிவிற்கும், கேவலத்திற்கும் உள்ளாகியிருப்பார்கள். மிகக்குறைந்த காலத்திலேயே தமிழர்கள் மீதான கொடூரங்கள் நடந்தேறி இருக்கும் என்ற புரிதலில் போர்ச் சூழலை உள்வாங்கி இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால், இன விடுதலைக்கான போரில் அதிகம் பாதிக்கப்பட்டது வசதி வாய்ப்புள்ள தமிழர்கள் அல்ல. ஏழை, எளிய தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந் நாவல். வசதிபடைத்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர். வறிய குடும்பத்துப் பிள்ளைகள் விரும்பியும் விரும்பாமலும் இயக்கத்திற்குள் வந்தனர். ஈழப்போர் என்பது வசதி வாய்ப்புள்ள தமிழ்ப் பிள்ளைகளின் போராக அமையவில்லை. ஏழைத் தமிழர்களின் போராக வடிவம் கொண்டதை நுட்பமாகக் கண்டு சொல்கிறது. விடுதலைப் போரில் சகல அழிவையும் சகல அவமானங்களையும், இழிவுகளையும் அதிகம் சந்தித்தது ஏழைத் தமிழ்க் குடும்பங்கள் என்பதை நிகழ்ந்த சம்பவங்களின் வழியே காட்டியுள்ளார் சயந்தன். சந்திரா போன்ற உயர் சாதியினர் சிலர் குடும்பத்தை எதிர்த்து, இயக்கத்திற்காகப் போராட வீட்டிலிருந்து வெளியேறி வந்திருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இயக்கத்தில் இருந்தவர்கள் ஏழைகள்.

தமிழர்களைச் சிங்களவர்கள் இந்திய வம்சாவழியினர்களாகப் பார்க்கின்றனர்; இந்தியாவிலிருந்து வந்த வந்தேறிகள் என்று வெறுக்கின்றனர்; மலையகத்தில் பிழைக்க முடியாமல் அடிவாரங்களுக்கு வந்தால் தங்கள் மண்ணை அபகரித்து உழுது பயிரிடும் கள்வர் கூட்டமாகச் சிங்கள இனம் அவர்களைப் பார்க்கிறது. தமிழர்களைத் துரத்தி அடித்துவிட்டு சிங்கள ஏழைகளைக் குடியேற்ற முயல்கிறது.

தமிழர்களின் உரிமைக்காக எளியவர்கள் போராடினாலும் பெரும்பாலான மேட்டுக்குடி உயர்சாதி மக்கள், இவர்களின் தியாகத்தை அசட்டை செய்கின்றனர். காமத்திற்காகக் காதலிக்கின்றனர். பின் கைவிட்டுப் போய்விடுகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்து தனிக்கல்லடிப் பக்கம் வந்து குடியேறும் தமிழர்களை விலக்கி வைக்கின்றது அமைப்பு. விமானம் குண்டுகளைப் பொழிந்து தமிழர்களின் வீடுகளை அழித்தாலும், சாதிய முரண் அவர்கள் இரத்தத்தில் ஓடியபடியே இருக்கிறது. போர் உக்கிரம் பெற்றுத் தெருத்தெருவாகத் தமிழர் பிணங்களை இலங்கை அரசு குவித்துக் கொண்டிருக்கும்போதும் மேலைநாட்டு கனவு அவர்களை விடுவதில்லை. எவ்வளவு பணம் செலவானாலும் குண்டு விழுந்தபடியே இருக்கும் பகுதியிலிருந்தும் பிள்ளைகளைப் பெருந்தொகை செலுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் தான் அவர்கள் ஒரே மூச்சாக இருக்கின்றனர். அதற்கு எந்த வடிவத்தை எடுக்கவும் தவறுவதில்லை. மகனைக் காப்பாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்ப அவசர அவசரமாக ஒரு பொய்க் கல்யாணத்தை நிகழ்த்தி இயக்கப் பொடியன் இல்லை என்று காட்டிக்கொள்வதிலேயே தீவிரம் காட்டுகின்றனர். இதற்கும் பலியாவோர் ஏழைத் தமிழ்ப் பெண்கள்தான். போர் உக்கிரமாக நடக்கிறது. வசதியுள்ள தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இந்தியாவிற்கோ, வெளிநாடுகளுக்கோ கடத்திவிட படகுத்துறைகளில் ஒளிந்து கெஞ்சியபடி இருக்கின்றனர். பணம் சிங்கள இராணுவத்தினரையும் விடுதலைப் புலிகளின் அமைப்பையும் தன்வசப்படுத்தி காரியம் சாதிக்கிறது.

புலிப்படையில் ஆட்களின் பலம் குறையக்குறைய 14, 15 வயது குமருகளையும், விடலைப் பையன்களையும் விடுதலைப் புலிகள் இழுத்துச் செல்கின்றனர். இந்த மாபெரும் ஈழத் தமிழரின் போரில் வசதி படைத்த இளைஞர்கள் பெரும் பாலும் இல்லை. அவர்கள் இந்தப் போருக்குத் தந்தது சில கட்டுரைகளையும், அதை விளக்க சில கோட்பாடுகளையும், ஏழேட்டு வரி கவிதைகளையும்தான் என்று விமர்சிக்கிறது இந் நாவல். இந்திய சுதந்திரப் போரில் வசதி படைத்த நேதாஜி, காந்தி, நேரு, பகத்சிங், திலகர், வ.உ.சி, சாவர்கர், பூபேந்திரசிங், அரவிந்தர் என எண்ணற்றோர் முன் நின்று அவரவர் கொள்கை வழி விடுதலையை வடிவமைத்து போராடியது போல ஈழத்தில் நிகழவில்லை. ஈழப்போரில் இறுதியில் நின்றவர்கள் வெளிநாடு செல்ல ஏலாத ஏழைத் தமிழர்கள்தான். வெளிநாடு சென்ற தமிழர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் பண உதவி, பிற பொருள் உதவிகள் செய்திருக்கலாம். இவர்கள் களத்தில் நிற்காது போனதும் தோல்விக்குக் காரணமாகப் பார்க்க வைக்கிறது. ‘ஆதிரை’ நாவலில் ஏழைகள்தான் தன்னியல்பாகவும், தன்னெழுச்சியோடும் போர்முனைக்குச் செல்கின்றனர். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்ட தமிழர்கள் முன்நிலை வகிக்கின்றனர். மதம்தான் கிறிஸ்துவமே தவிர அவர்களும் ஏழைகள்.

உயர்சாதி இந்துக்கள் ஈழப்போருக்கு மனரீதியான பணரீதியான ஆதரவை தந்து வந்திருக்கிறார்கள். இவ்விடத்தில் வரலாற்றில் ஒரு பிழையும் நேர்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழர்கள் தங்கள் ஊர்க்காவல் படையைச் சிங்கள இராணுவத்துடன் இணைத்து தமிழர்களை அடித்து துரத்துகிற நிலைப்பாட்டிற்கும் செல்கின்றனர். தொடர்ந்து புலிகள் இயக்கம் முஸ்லிம்களை வன்னியைவிட்டுத் துரத்துகிற மற்றொரு பிழையும் நேர்கிறது.

மதம், சாதி, பணம் மூன்றும் தமிழரின் ஈழப்போரைப் பலவீனப்படுத்திய சக்தியாகக் காணமுடிகிறது. தமிழ் ஈழப்போர் என்பதே ஏழைகளின் போராக நாவல் முழுக்க காட்சி அளிக்கிறது. தமிழ்ப் பெண் போராளிகளின் தியாக உணர்வு மகத்தான செயலாக இந்நாவலில் உருவாகிறது. காதலால் ஏமாற்றப்பட்ட, சாதியால் நிராகரிக்கப்பட்ட, இராணுவத்தால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட, வசதியின்மையால் படிப்பைக் கைவிட்ட சின்ன வயது குமருகள் தன்னெழுச்சியோடு போராளிகளாக மாறி உயிர் நீத்த தியாக வரலாறுகள் இந் நாவலில் பதிவிடப்படுகிறது. இவர்கள் தலைமையிட்ட கட்டளையைச் (சரியோ தவறோ) சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தேசப்பற்றோடு முன்னெடுத்துப் போராடி வீழ்ந்த துக்கத்தின் வரலாறு இது. புலிப்படை ஒவ்வொரு கணமும் வீழ்ந்து வீழ்ந்து பலவீனமாகிக்கொண்டு வந்த காலத்தில் பெண் போராளிகள் தீவிரத்துடன் போராடுகிறார்கள். உயிரைப் பணையம் வைக்கிறார்கள். வெல்வோம் என்ற கனவோடு போரில் மடிகிறார்கள். இனி ஈழம் இல்லை என்ற நிலை உருவாகி தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் போர்ச் சூழலுக்குள் சிக்கி சிதறிக் கொண்டிருக்கும்போதும் ஓடி ஓடி உதவுகிறார்கள். இந்தப் பெண் போராளிகளின் தியாகத்திற்கும் காருண்யத்திற்கும் மிக மிக உயர்வான இடத்தைக் கொடுத்திருக்கிறார் சயந்தன். இந்த நாவல் அவர்களின் வாழ்வை உணர்ச்சியோடு ஆராதிக்கிறது. இந்நாவலை ஒருவகையில் போருக்கு சம்பந்தமற்றவர்களின் சம்பந்தப்பட்ட வரலாறு எனலாம். ஈழப்போர் என்பதைச் செய்திகளாக அறிய நேர்ந்தவர்கள்; போரின் விளைவுகளை விவசாயம் செய்து கொண்டே செவி வழியாகக் கேட்பவர்கள்; காட்டை ஒட்டி வாழ்பவர்கள்; காட்டுடன் உறவைக் கொண்டாடுபவர்கள்; இவர்களையும் இந்தப் போர்ச்சூழல் விரிந்து வந்து தாக்கி, அந்த சுழலுக்குள் இழுத்துப்போட்டு சிதைத்து நாசமாக்குகிற அவலத்தைச் சொல்கிறது.

போர் முடிந்த பின்னும் இவர்கள் குழந்தைகளின் பசியைப் போக்க மற்றொரு ஆபத்தில் இறங்கி வேலை செய்கிற துயரத்திற்கு ஆளாகிறார்கள். தமிழர்களின் சாம்ராஜ்யம் வீழ்ந்த நிலமெங்கும் புதைத்து வைக்கப்பட்ட மிதிவெடிகளைத் தோண்டி எடுக்கும் பணிக்குச் செல்கின்றனர் முன்னாள் விடுதலைப்புலிகள். இப்படியொரு பிழைப்பும் பிழைக்க வேண்டியதாகிறது. விசுவமடுவில் மாவீரர்களின் நினைவு இடமாகப் போற்றப்பட்ட வீரர்களின் கல்வெட்டு அடையாளங்கள் பொக்லைன்களால் தோண்டி உருட்டி குழியில் தள்ளும் சுவடு அழிப்பு வேலையும் நடக்கிறது. அதே விசுவமடுவில் சிங்கள ராணுவ வீரன் செய்த சாகசத்தின் அடையாள எச்சத்தை அம் மக்கள் திரண்டு வந்து கண்டு போற்றும் இடமாக மாறுகிறது. தமிழர்கள் இருந்த பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறது அரசு. தமிழர்களின் கைவசம் இருந்த நிலங்களைப் பறித்து சிங்களவர்களுக்குத் தருகிறது. தங்கள் நிலம்தான் எனத் தமிழர்கள் உறுதிப்படுத்த ஆவணங்களைத் தூக்கி அலைந்தாலும் அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். சிங்கள ஆதிக்கத்தின் கீழ் அவர்களுக்குத் தொண்டுழியம் செய்யவும் வேலைக்குச் செல்ல வேண்டியவர்களாக மாறுகிறார்கள். ஒரு விடுதலைப் போருக்காகக் கைகளை இழந்து, கால்களை இழந்து, ஷெல்லடியில் காயமடைந்த போர்வீரர்களும், பெண் போராளிகளும் வாழ்வு தேடி கிராமங்களுக்கு வந்து குடிசைகளைப் போடுகின்றனர்.

இறுதிப்போருக்குப் பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த பொடியன்களையும் சிறுபெண்களையும் விசாரணை என்ற பெயரில் இராணுவம் இழுத்துச் சென்று கொன்று குவிக்கின்றனர். பெண்களை வன்கொடுமைகளைச் செய்து சீரழிக்கின்றனர். இவற்றையெல்லாம் கையறுநிலையில் பார்த்துக் கொண்டு புதிய வாழ்வை வாழத் தலைப்படுகின்றனர். மாபெரும் அபத்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவிட முனைகையில் கூனிக் குறுகி, ஏளனத்தை ஏற்றுப்போக விழைகின்றனர். காலம் என்ற அரக்கன் கொடூரமாகப் பழிவாங்கிய நிகழ்வாக சாட்சியம் இது.

முப்பதாண்டுகாலப் போர்ச்சூழலின் மையமான வரலாற்றில் மானிடரின் துயரத்தை அதன் சாதக பாதகங்களை மக்கள் அனுபவிக்கின்றனர். ஈழத்தமிழரின் எல்லா நிகழ்வுகளும் இல்லை. குறிப்பாக, சிக்கலான அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள் விவாதிக்கப்படவில்லை. முக்கியமாகப் போராளிகள் தோற்றுப்போனதற்கான உள்விவகாரங்கள் ஆராயப்படவில்லை. அதேபோல, சிங்கள இந்திய இராணுவத்தின் விவகாரங்கள் ஆராயப்படவில்லை. இந்நாவல் பொதுமக்களின் பார்வையிலிருந்து அவர்களின் அனுபவத்திலிருந்து போரின் அழிவுகளைச் சொல்கிறது. ஓயாமல் இடம் பெயர்ந்தபடியே மக்கள் இருக்கின்றனர். பிள்ளைகளை, கணவன்மார்களை இழந்தபடியே மக்கள் நகர்கின்றனர். எங்கு சென்றாலும் உயிரையும் உடைமைகளையும் இழந்து மற்றொரு இடத்திற்கு ஓடிப்போய் ஒளிகின்றனர். அங்கும் போரின் தாக்குதல் நிகழ்கிறது. முப்பது ஆண்டுகளாக நிம்மதியற்ற வாழ்வுதான் நாவல் முழுக்க விரிந்து கிடக்கிறது.

1977-இல் கொழும்பு நகரில் கலவரம் மூழ்கிறது. சிங்களக் காடையர்கள் தமிழர்கள் வீடுகளுக்குத் தீ வைக்கிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள். வெட்டிக் கொல்லுகிறார்கள். ரயிலில் வந்த தமிழர்களை இறக்கிவிட்டு விரட்டி விரட்டி அடிக்கிறார்கள். 13 வயது சிறுமியை இழுத்துச் சென்று வல்லுறவு செய்து கொல்கிறார்கள். தோட்டக்காடுகளில் குடியிருக்கும் தமிழர்களின் வீடுகளுக்கு சிங்கள வெறியர்கள் தீ வைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து தமிழர்கள் சிலர் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வேறு இடத்திற்கு ஓடுகின்றனர்.

மறுபடியும் 1983-இல் காட்டுப்புலவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்கிறது. அத்தோடு கலவரம் மூழ்குக்கிறது. அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். வெலிக்கடைச் சிறையில் குட்டி மணியின் கண்களைத் தோண்டி எடுத்துச் சிங்களவன் காலில் போட்டு மிதித்த செய்தி வருகிறது. 1987-இல் திலீபனின் உண்ணாவிரதமும் அவரது மரணமும் உணர்ச்சிகரமான சூழலை மக்களிடையே உருவாக்குகிறது. அதனால் எந்த பிரயோசனமும் இல்லாமல் போகிறது. இப்படி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் வரை மிக முக்கியமான சில தகவல்கள் நாவலின் இடையே செய்திகளாக வருகின்றன.

0

ஒரு ஊருக்குள் நாட்டின் அரசியல் பிரச்சினைகள், கலவரங்கள், போர் அழிவுகள், திடீர் தாக்குதல்கள், மரணங்கள், வன்முறைகள் செய்திகளாக வந்து சேர்வது இயல்பு. அதன் பாதிப்பு வாழும் வாழ்க்கையில் புதிதாகத் தோன்றவும் செய்யும். பயணமோ, கல்வியோ, வாணிபமோ தடைப்படும். அச்சம் ஏற்படும். செய்திகளுக்குப் பின் ஏற்படும் நேரடிப் பாதிப்புகள் இவை போன்றவை நாவலில் செய்திகளாக வெளிப்படுத்திக் கொள்வது இயல்பானதுதான். அதேசமயம், ஒரு ஊரை களமாகக் கொண்டு இயங்கும் நாவலில் வரும் மக்களின் சில மரணங்கள், பாலியல் வன்கொடுமைகள், பயணங்கள், கடத்தல்கள், மோதல்கள் செய்திகளாகச் சொல்லப்படும்போது படைப்பின் வீரியத்தைக் குறைக்கின்றன. மலரின் முதல் காதல்; சிங்களமை காட்டில் தலையற்ற முண்டாகக் கிடப்பது; சங்கிலி பன்றி தாக்கி வீழ்வது; போன்ற சில நிகழ்வுகள் செய்தியாகத் தரப்படுகின்றன. படைப்பாளி காட்சிகளின் வழியாக நிகழ்த்திக் காட்டியிருக்க வேண்டிய இடங்களைச் செய்தியாகத் தரும்போது படைப்பின் வீச்சு மங்கிப்போகிறது. கதாசிரியர் ஒரு வசதிக்காக ஒதுங்கிக் கொள்கிறார் போல் தெரிகிறது. போர்ச் சூழலில் ஒருவரின் தலை துண்டித்து கிடக்கலாம். இந்த மரணம் அதிர்ச்சிக்குரியதுதான். ஆனால் அந்த மனிதன் நம்மிடையே (நாவலில்) பிரிக்க முடியாத அம்சத்தில் வாழ்ந்திருந்தவராக இருந்தால் கூடுதல் ஆழமும் அழுத்தமும் பெறும். அப்படியான மாந்தர்களுக்குச் சாவுக்கு முன் கூடுதல் உறவு சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த கூடுதல் பகுதிகள்தான் நாவலில் இல்லை. பல கதாபாத்திரங்கள் நம் இதயத்தைத் தொந்தரவு செய்யாமல் போனதற்கு வாழ்வில் நின்று விரியவில்லை என்பதுதான் காரணம்.

மனிதர்களின் உறவுகள் போரினால் சிதைவுறுவதைப் படைப்பிற்கு நெருக்கமாகச் சொல்லிவிடுகிற சயந்தன் அவர்கள் புற உலகின் பிணைப்பினைத் துல்லியமாக உருவாக்கவில்லை. இந்தத் துல்லியத்தன்மை இல்லாததால் வரலாற்றின் செய்திகளுக்கு ஒரு கதை வடிவம் கொடுத்து எழுதப்பட்ட நாவலாக மாறும் இடங்கள் நிறைய இருக்கின்றன. வாழ்ந்து அனுபவப்பட்ட சம்பவங்களாக உருவாகாமல் மாதிரிச் சம்பவங்களாக இருக்கின்றன.

தனிக்கல்லடியில் இவர்கள் செய்யும் உழவு, விதைப்பு, களையெடுப்பு, நீர்ப் பாய்ச்சுதல், அறுவடை, மாடுமேய்த்தல் என்ற நிலையில் நாவலில் அவை ஒரு இயக்கமாக உருவாகி வரவில்லை. காட்டுடனான உறவில் ஒரு பன்னிறட்டை மட்டும் இருக்கிறது. அம்மக்களின் பொதுவான காட்டுறவு இல்லை. ஊரின் எல்லைச்சாமியாக நின்ற இத்தி மரத்தின் பிரமாண்டமும் அதனுடனான சிறியவர் பெரியவர்களின் உறவும் ஆழமாகத் துலக்கம் பெறவில்லை. பெரும்புயலில் இத்தி மரத்தின் வீழ்ச்சி அடர்த்தி கொள்ளவில்லை. ஒரு குறியீடாக இதனைக் காட்ட வந்ததுபோல இருக்கிறது. பிற்பகுதியில் அதே இடத்தில் அதன் வேரிலிருந்து தோன்றிய புதிய இத்தி மரமும் அப்படியே. இதெல்லாம் மேலைநாட்டு இலக்கிய உத்திபோல இருக்கிறது. இத்தி மரம் ஆழமான பிணைப்பை கொண்டு எழவில்லை.

சிங்களவர்களின் குடியேற்றம் அவ்வப்போது சொல்லப்படுகிறது. நிலத்தில் அவர்களின் குடியேற்றத்தின் துல்லியத் தன்மை இல்லை. இந்திய இராணுவம் வருகிறது. மலரைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்குகிறது. போய்விடுகிறது. அதன் நடமாட்டம் சிறப்பாக நாவலில் சித்திரிக்கப்படவில்லை. மலருக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகூட நாவலில் திட்டமிட்ட நிகழ்வாக வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகப் போகிறவர் என்று ஊகித்து விட முடிகிறது. மீனாட்சி பசு வைத்திருக்கிறாள் என்பதற்கு மேல் பசுவிற்கும் அவளுக்கும் தனித்துவமான எந்த உறவும் இல்லை. ஒரு நாள்கூட பசுவிற்கு அவர் தண்ணீர் வைக்கவில்லை. வரப்போரங்களில் அதனைப் பிடித்து மேய்க்கவில்லை. போர் உண்டாக்கிய சிக்கலின் ஊடே பாடசாலை இயங்குகிறது. அது எப்படி இயங்குகிறது, அதன் சிதிலம் எப்படி இருக்கிறது என்று இல்லை. இறுதிப் போரில் மக்கள் ஊர்விட்டுச் செல்லும் சித்திரங்கள், அவர்கள் தங்கும் இடங்கள், ஏரிகள், மரத்தடியில், நடையிடையே மிதித்த சேறுகள், பரல்கற்கள் எதுவுமே துல்லியம் பெறவில்லை.

புற உலகம் சார்ந்த உறவுகளில் துல்லியத்தன்மை இல்லாத நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. ஒரு கிராமத்தின் அழிவு மிக நுட்பமாகப் பதிவு செய்யப்படவில்லை.

அத்தார் – சந்திரா இருவரின் மணவாழ்க்கை, அவர்களின் கருத்தியல் முரண், லட்சுமணனின் இயக்க வாழ்க்கை சரியாக உருவாகவில்லை. சிங்களமை தன் மகனை சந்திரா – அத்தார் தம்பதிகளிடம் ஒப்படைக்கிறாள். இதற்கு வலுவான காரணம் ஏதும் இல்லை. மகனை வளர்ப்பவர் மகனை வளர்க்கமாட்டாரா? சரி அத்தார் வீட்டில்தான் அவனுக்கு என்ன வேலை. ஒன்றுமில்லை. வெள்ளையன் பாத்திரம் முன்பகுதியில் வலுக்கொள்ளவில்லை. குண்டடிபட்டு இயக்கத்திலிருந்து விடுபட்டு வந்தப்பின் அவனின் வாழ்க்கை அழுத்தம் கொள்கிறது. பின் பகுதி சிறப்பாக வந்திருக்கிறது. இயக்கத்திற்குள் அவனின் செயற்பாடு இல்லை. பின்பகுதியில் மிதிவெடி வைக்கும் வேலை என்று செய்தி குறிப்பாக சேர்க்கப்படுகிறது. அவனுடைய மனனத்திற்குப் பெரிய அர்த்தம் இல்லை. சந்திரா – அத்தார் குடும்பமாக வாழும் இடத்திற்குத் தேடி வரும் சந்திராவின் தாயின் சாதிப் பற்று வெளிப்படும் இடம்தான் அழுத்தமாக இருக்கிறது.

‘ஆதிரை’ நாவலைப் படித்த நண்பர்கள் ஈழப்போரின் வலிமிகுந்த நாவல் என்றனர். இந்த நாவலில் வரும் பல பகுதிகள் ஏற்கனவே படித்திருப்பதுபோலவும் இருந்தது. ஒரே சந்தர்ப்பத்தில் ஈழப்போர்ச்சூழலில் எழுதப்பட்ட பல சிறுகதைகளைப் படித்தேன். சிறுகதைகளின் தீவிரம் என்னை ஆட்கொண்டன. உமாவரதராசனின் ‘அரசனின் வருகை’, சேரனின் ‘எல்லாவற்றையும் மறந்து விடலாம்’ கவிதை, மலைமகள், தமிழ் நதி, தமிழ்ச்செல்வியின் கதைகள், சு. வில்வரத்தினத்தின் கவிதைகள் என்று யாவற்றையும் படித்ததின் விளைவு ‘ஆதிரை’ நாவல் என்னை உலுக்கி எடுக்கவில்லை. போர்ச்சூழலில் எழுதப்பட்ட 50 கதைகளேனும் ஒரே சமயத்தில் படித்திருப்பேன். அந்த வாசிப்பு, அறிந்த விடயங்களைப் படிப்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தந்தது. இந்தக் கதைகளைப் படிக்காதிருந்தால் ‘ஆதிரை’ இன்னும் கூடுதலான பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தியிருக்கும்.

நாவலில் புனைவின் வெற்றிகூடிய இடங்களாக சங்கிலியின் பன்றிவேட்டை, ஆச்சி முத்துக்கிழவி தன் பேரன் பேத்திகளைப் பார்த்து வர மூட்டையைச் சுமந்து செல்கிற பகுதி; இலங்கை இராணுவம் தனிக்கல்லடியில் இறங்கி 16 வயது தம்பியை அடித்து சிதைப்பதும் அக்காவின் ஓலமும், நடராசனை இராணுவம் கொன்ற இடமும் வெள்ளையனுக்கு வரும் யானைக் கனவும் போர் உண்டாக்கிய மானிட துக்கத்தைப் புதிதாக வெளிப்படுத்தியிருக்கின்றன. உணவு விநியோகம் நடக்கும்போதே விழும் ஷெல்லுக்குத் தப்பி ஓடும்போது பேரனுக்காக உணவு வேண்டி நிற்கும் கிழவியின் துயரம் போன்ற சிறிய அளவிலான பல வெளிப்பாடுகளைச் சொல்லலாம்.

பெண் போராளி மலர், வினோதினி, ஆதிரை இவர்களின் உலகம் அசலாக உருவாகி இருக்கிறது. வெள்ளையன், சிங்கமலை போல மற்ற மாந்தர்கள் சிறப்பாக உருவாகவில்லை.

ஈழப்போரின் இறுதிநாட்களில் மக்கள் பட்ட அவதிகளையும், அழிவுகளையும், ஆசைகளையும், அலைச்சல்களையும், இழப்புகளையும் சொல்லும் பகுதிகள் அழுத்தத்துடன் வந்திருக்கின்றன. போர் செய்த மானிட அழிவை இப்பகுதி பதட்டத்துடன் கொடுக்கிறது. இறுதி 200 பக்கங்கள் தமிழர்களின் கையறுநிலையைப் பெருந்துக்கத்தோடு விவரிக்கின்றது. நாவலின் பலமான பகுதி இது. இந்த பெரிய வரலாற்றுத் துயரம் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் முக்கியமான நாவலாக ஆகிறது.

ஈழத்தமிழர்களின் எழுச்சியும் வீழ்ச்சியுமான இந்த வரலாற்றுப் பின்னணியை ஒட்டி தமிழர்கள் பட்ட பேரவலங்கள், அபத்தங்கள், உணர்ச்சிகரமான தருணங்கள், நம்பிக்கை இழப்புகள், பற்றுக்கோடுகள் என வாழ்வின் பல்வேறு வெளிப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வாழ்க்கை இங்கு புனைவாகத் திரட்டப்பட்டிருக்கும் விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அசலான இலக்கியப் பிரதியாகவும் மாறுகிறது. சயந்தனின் படைப்பாளுமையின் தனித்துவத்தால் வடித்தெடுக்கப்பட்ட வெற்றி என்பதைவிட போர் உண்டாக்கிய பேரழிவின் விளைவால் உண்டான இலக்கிய வெற்றி எனலாம்.

நிகழ்வுகள் அனுபவமாகி, அனுபவங்கள் மொழியின் சாரத்தில் இறங்கி வெளிப்பட்ட இலக்கியத்துவமான, சில இடங்கள் இந்நாவலில் வருகின்றன. ‘வதை சாவைத் தட்டித்தட்டி திறக்க முயற்சிக்கும்’, ‘இந்திய நாய் என்றான் விஜேயரத்ன. முகத்தில் கணச்சலிப்பு, நான் புழுதி கிளறும் காலக் குதிரையொன்றில் காற்று நெஞ்சிலறைய என் மூதாதையரின் தலைமுறைகளைக் கடந்து பயணித்து மீண்டேன்’, ‘ஒரு மின்னல் பளிச்சென்று வெட்டியது. தொடர்ந்து ஆகாயம் ஒரு பிரமாண்டமான கண்ணாடியைப் போல சிதறிப் பூமியில் கொட்டுவதைப் போல மழை பொழியும் ‘சத்தம்’, என்று எழுதிய இடங்களைச் சொல்லலாம்.

விடலைப் பையனின் மனநிலையை ஒரு பன்றி வேட்டையை முன்வைத்து சொல்லியிருக்கும் இடம், ‘சங்கிலி மும்முரமாக வாரினார். பன்றி வெள்ளை நிற இளங்கன்றைப்போல உருமாறிக் கொண்டிருந்தது. தலையை வேறாக்கினான். முண்டம் லட்சுமணனை கலவரப்படுத்திற்து. அதுவரை அவனை ஆட்கொண்ட உற்சாகம் சடுதியில் காலடியில் வழிந்து தகித்த நிலத்தில் ஆவியாகிப் போனது.’, ‘பக்கத்து காணியில் செவலையின் வீடு அமைதியாகக் கிடக்கிறது. அவன் குடும்பத்தோடு கண்டிக்குப் போயிருக்கிறான். பிள்ளைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் கிழவியின் முகத்தைப் போல ஆளரவமற்ற அந்த வீட்டில் துயரம் படிந்திருந்தது’ என்று எழுதுகிறார். இம்மாதிரியான கவிதைக் கணங்களும், மனம் அடைகிற விநோதங்களுமான படைப்பு முழுக்க இயல்பாக வெளிப்படவில்லை. முதல் இரண்டு அத்தியாயத்தோடு இந்த மனவெழுச்சி மறைந்துவிட்டது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் சம்பவங்களைத் தொகுத்து செல்ல முனைந்துவிட்டது. மனவெழுச்சி ததும்ப எழுதப்பட்ட நாவலாக ‘அம்மா வந்தாள்’, ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ முதலானவற்றைச் சொல்லலாம். இம்மாதிரியான வரலாற்றைச் சார்ந்து எழுதப்படும் நாவலில் இம்மாதிரியான பார்வைத் தேவையும் இல்லை.

சில இடங்களில் சொருகப்பட்ட பகுதிகள் சென்டிமெண்டாக இருந்தாலும் பொருத்தப்பாடாக இருக்கின்றன. சில இடங்களில் இயல்பாகவும் கூடி வந்திருக்கின்றன. போர்முனையில் மரத்திற்குப் பின் ஒளிந்திருந்த இரு குழந்தைகள் திடுக்கென ஒருவரைக் கண்டதும் பயந்து அப்பா கிழித்து தந்த வேட்டியின் துண்டு பகுதியை வெள்ளை கொடியாக அசைப்பதும், ஆளற்றுப்போன ஊரில் வயதான பூசாரி கடமையைச் செய்வதும், குழந்தைகளால் ஊதி ஒலி எழுப்பமுடியாத சங்கை வாங்கி மலர் ஒலியெழுப்புவதும் மனதிற்குள் புதிய மனவெழுச்சியை, துக்கத்தைக் கிளர்த்துகின்றன. இத்தோடு, தமிழ் நாவல் இலக்கிய வகைக்கே புதிய களத்தில் நின்று இயங்குவதால் இந்நாவல் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் வரிசையில் சயந்தனின் ‘ஆதிரை’யும் ஒன்று.

நன்றி தாய்வீடு, நவம்பர், 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *