
அன்புள்ள ஜெ,
தமிழிலும் வேற்று மொழிகளிலும் சென்ற காலங்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடு பல வகைகளில் இருந்துள்ளது. ஆனால் ஒன்று குறிப்பாக வந்துகொண்டே இருக்குறது. எல்லா மொழிகளிலும் சில பெண் எழுத்தாளர்கள் அந்தந்த காலகட்டத்தின் ஒழுக்கக்காப்பாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து இல்லையென்றாலும் மிகப்பரவலாக வாசிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.
அவர்கள் நல்லுபதேசம் செய்கிறார்கள். குடிக்காதே என்கிறார்கள். அடிமை முறையை எதிர், பெண்களை ஒழுங்காக நடத்து, குழந்தைகளை அடிக்காதே என்றெல்லாம் கூறுகிறார்கள். அக்காத்தனமாகவும் அம்மாத்தனமாகவும் மாறி மாறி கொஞ்சியும் அதட்டியும் பேசுகிறார்கள்.

இவர்களில் சிலர் மரபுவாதிகள். சிலர் இலட்சியவாதிகள். பலர் நடைமுறைவாதிகள். மரபுவாதிகளாவது ஒரு மதிப்பீட்டின் பின்புலத்திலிருந்து பேசுகிறார்கள். நடைமுறைவாதிகள் சொல்வதெல்லாம் நடைமுறை சார்ந்து மட்டுமே. அத்தகைய அறிவுரைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுகிறது. எழுத்தாளர் அவ்வாறு அறிவுறுத்தத் தகுதி உள்ளவரா?
ஆனால் அத்தகைய அறிவுரை எழுத்துக்கு ஒரு இலட்சியத்தன்மை உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. “இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது,” என்று சிவசங்கரியைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
என் கேள்வி, ஒரு சூழலில் ஒரு வகையான எழுத்தாளராவது இப்படி ஓர் ஒழுக்கக்காப்பாளராக (moralist), அறிவுறுத்துபவராக இருக்க வேண்டும் என்று ஏதாவது தேவை இருக்கிறதா? சூழலுக்கு இவர்களது பங்களிப்பு என்ன?
அன்புடன்,
சுசித்ரா

அன்புள்ள சுசித்ரா,
இந்தக்கோணத்தில் நான் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் சொன்னபிறகு இது ஒரு சுவாரசியமான பார்வை என நினைக்கிறேன்.
இந்த விவாதத்தில் நாம் செய்யக்கூடுவது பொதுமைப்படுத்தலை விட தனித்தனியாக நூலாசிரியர்களைக் கருத்தில்கொண்டு அவர்களின் எழுத்தையும், தனியாளுமைகளையும் பரிசீலனை செய்வதுதான். ஏனென்றால் எழுத்தாளர்கள், அதாவது பொருட்படுத்தத் தக்க எழுத்தாளர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைப்பட்டவர்கள். அவர்களின் இயல்புகள் நாட்டுக்கும், பண்பாட்டுக்கும் ஏற்ப பெரிய மாறுதல்களையும் கொண்டுள்ளன.
எனக்கு நன்கு தெரிந்த ஓர் ஆளுமையை எடுத்துக் கொள்கிறேன். கவிஞர் மலையாளக் கவிஞர் பாலாமணி அம்மா கடுமையான ஒழுக்கவாதத்தை முன்வைத்தவர், அதை வலியுறுத்தும் கவிதைகளையும் எழுதியவர். குறிப்பாக பெண்களின் பாலியல் விழைவு அல்லது வெளிப்பாட்டை அவர் தீவிரமாக எதிர்த்தார்.பெண்கள் பாலியல் கவற்சி அற்ற தோற்றத்துடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தினார். அவர் மகள் மாதவிக்குட்டி என்னும் கமலாதாஸ் பெண்களின் பாலியல் விடுதலையை முதன்மைப்படுத்தி எழுதிய படைப்பாளி.

ஆனால் பாலாமணி அம்மா காந்தியவாதி. சமூகசீர்திருத்தவாதி. களமிறங்கிப் போராடியவர். பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும், சிறைசெல்லவேண்டும் என வாதிட்டவர். இடதுசாரி இயக்கங்களில் பெண்கள் ஈடுபட்டு சிறைசெல்வதைக்கூட ஆதரித்தவர். மாறாக கமலாதாஸ் முழுமையாகவே அரசியலற்றவர். சொல்லப்போனால் சமூகநோக்கங்களோ, பொதுப்பார்வையோ அற்ற தூய சுயமைய நோக்கு வெளிப்படும் அகவுலகை உருவாக்கியவர்.
கமலா தாஸின் சமகாலத்தவரான சுகதகுமாரி பாலுணர்வு வெளிப்பாடற்ற நோக்கு கொண்டவர், ஒழுக்கமதிப்பீடுகளின் பிரச்சாரகர் என்றும் சொல்லலாம். ஆனால் அவர் ஒரு மாபெரும் சூழியல் போராளி. பெண்ணுரிமைக்காக வாழ்நாள் முழுக்க களம் நின்று போராடியவர், அதற்கான அமைப்புகளை உருவாக்கியவர்.
தமிழிலும் வை.மு.கோதைநாயகி அம்மாள், குமுதினி , கிருபா சத்தியநாதன், மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார் போன்ற தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களில் கடும் ஒழுக்கவாதிகளாகத் திகழ்ந்தவர்கள் கூடவே சமூகப்பணி, அரசியல்போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்தவிழைந்தவர்களாகவும், தாங்களும் ஈடுபட்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம். அவர்களின் எழுத்துக்களிலேயே உபதேச அம்சம் மிகுதி.

இந்த பொருள் விரிவாக விவாதிக்கவேண்டிய ஒன்று. இந்தியச் சூழலில் பெண்கள் பொதுவெளிக்கு வந்து பேசவும் எழுதவும் முற்பட்டது 1900 ங்களின் தொடக்கத்தில்தான். ஆனால் அந்தத் தலைமுறைப் பெண்கள்தான் அரசியல் சமூகக் களங்களில் நேரடியாக ஈடுபட்டுப் பணியாற்றியவர்கள். அடிப்படையில் அவர்கள் இலட்சியவாதிகள். பெண்களில் அடுத்தடுத்த தலைமுறையினரின் இலட்சியவாத நோக்கம் குறைவுபடுவதையும் ,அவர்கள் நேரடியான களச்செயல்பாடுகளில் ஈடுபடுவது இல்லாமலாவதையும், அவர்கள் தங்களையே மையமாக்கி யோசிப்பதையும் காண்கிறோம்.
அப்படியென்றால் அந்த தொடக்ககால ஒழுக்க அக்கறையின் பின்னணி என்ன? பெண்கள் இல்லங்களுக்குள் இருந்து வெளிவந்து சமூகவெளியில் செயல்படத் தொடங்கிய அக்காலகட்டத்தில் மெய்யாகவே இது பெரும் பிரச்சினையாக இருந்திருக்கவேண்டும். அப்பெண்கள் மேல் ஒழுக்கம் சார்ந்த தாக்குதல்களை அக்காலத்துக் கட்டுப்பெட்டிகள் நடத்தியிருக்கலாம். ஆகவே தாங்களும், தங்களைப்போல வீட்டைவிட்டு வெளிவந்து செயல்படும் பெண்கள் அனைவருமே, கடுமையான ஒழுக்கவாதிகள் என்பதை நிறுவவேண்டிய தேவை அப்பெண் முன்னோடிகளுக்கு இருந்திருக்கலாம்.

கூடவே, நடைமுறையில் கல்வி,தொழில், சமூகப்பணி, அரசியல் என பெண்களுக்கு உருவாகிவந்த அந்த தொடக்ககால பொதுவெளியை பாலியல் சுரண்டலுக்காகப் பயன்படுத்தும் ஆண்களும் அன்று இருந்திருக்கலாம் . அதற்கு அடிமைப்பட்ட பெண்களும் இருந்திருக்கலாம். இந்தியாவின் பல தொடக்ககால தன்வரலாற்றுப் பதிவுகளில் அந்த சான்றுகள் உள்ளன. ஆகவே பெண்களை நோக்கி தொடர்ச்சியான எச்சரிக்கையை அவர்கள் எழுதவேண்டியிருந்தது.
லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி போன்ற அடுத்தகாலப் பெண் எழுத்தாளர்கள் வேலைக்குச்செல்லும் பெண்கள் எப்படி ஒழுக்கத்தை தங்கள் கவசமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை பல கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் மெய்யாகவே வேலைக்குப் போகும் பெண்களுக்கு அது பெரும் அறைகூவலாக இருந்திருக்கிறது. எண்பதுகளில்கூட ஆனந்தவிகடன், குமுதம் ‘ஜோக்கு’களில் கணிசமானவை டைப்பிஸ்ட், நர்ஸ் போன்ற வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதை முன்வைப்பவையாகவே இருந்தன. (இதைப்பற்றி நான் விகடனுக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதியிருக்கிறேன்)
இன்றும்கூட பொதுவெளிக்கு வரும் பெண் கொஞ்சம் ‘விட்டுக்கொடுப்பவள்’ என்னும் எண்ணம் ஏராளமான முதிர்ச்சியற்ற இந்திய ஆண்களிடம் இருக்கிறது. பெண் அடையவேண்டிய ‘பாலியல் விடுதலை’யை திரும்பத் திரும்ப அந்த ஆண்கள் ஏதோ புரட்சி போல முன்வைக்கிறார்கள், ஆனால் அது அப்பெண்களைப் பாலியல்ரீதியாக சுரண்டுவதற்கான ஒரு முன்முயற்சி மட்டுமே.

இன்னொரு கோணமும் யோசிக்கத் தக்கது. 1900ங்களில் தமிழிலும் மலையாளத்திலும் (பொதுவாக இந்தியாவெங்கும்) எழுதவந்த பெண்கள் பெரும்பாலும் உயர், உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்த முதல்தலைமுறையினர். அவர்கள் கல்விபயின்ற கிறிஸ்தவக் கல்விநிறுவனங்களும் சரி, அன்று உருவாகிவந்திருந்த தேசியக் கல்வி இயக்கத்தின் கல்விநிறுவனங்களும் சரி ஒழுக்கநெறிகளை கடுமையாக வலியுறுத்தியவை. அந்தச் செல்வாக்கு இந்தப் பெண் எழுத்தாளர்களிடம் இருந்திருக்கலாம்.
அந்தக் கல்விநிறுவனங்களில் நகர்ப்புற, படித்த பெண்களிடமே பொதுநாகரீகம், ஒழுக்கநெறிகள் ஆகியவை ஓங்கியுள்ளன என்றும், கிராமப்புறப் படிக்காத பெண்கள் பொதுநாகரீகம் அறியாதவர்கள் என்றும், அவர்கள் பலசமயம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் அடிமைகள் என்பதனால் பாலியல் ஒழுக்கத்திற்கான சுதந்திரம் இல்லாதவர்கள் என்றும், அவர்களுக்கு படித்த பெண்கள் இவற்றைக் கற்பிக்கவேண்டும் என்றும், அது கற்றவர்களின் கடமை என்றும் திரும்பத்திரும்ப கற்பிக்கப்பட்டது. அது பெருமளவும் அன்றைய நடைமுறை உண்மையும்கூட.

கிருபா சத்தியநாதன் அசலாம்பிகை போன்றவர்களிடம் இப்பார்வையைக் காணலாம். ஹெப்சிபா ஜேசுதாசன் இதே பார்வையை பிற்காலத்திலும் கொண்டிருந்தார். இதன் உச்சகட்ட வெளிப்பாடு மீனாட்சிசுந்தரத்தம்மாள் . இந்த அம்மையாரின் எழுத்து நேரடியான பிரச்சாரம் மட்டுமே. அது இரண்டு கோணங்கள் கொண்டது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான சீற்றம், பெண்கள் ஒழுக்கமாகவும் சுதந்திரமாகவும் நாகரீகமாகவும் இருக்கவேண்டியதன் தேவை. அதாவது ஆங்கிலம் படித்து, நவநாகரீக உலகுக்குள் சென்றாலொழிய கிராமிய வாழ்வில் அது இயல்வதும் அல்ல என்கிறார். அன்றைய சூழலில் இந்த இரண்டு பட்டைகள் கொண்டதாகவே பெண்விடுதலை இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
பெண்கள் ஈடுபட்ட அன்றைய அரசியலியக்கங்கள் காந்திய இயக்கம், திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் ஆகிய மூன்றுமே பெண்களின் ஒழுக்கத்தை வலுவாகவே பிரச்சாரம் செய்தவை என்பதை நாம் கருத்தில்கொள்ளவேண்டும். அந்த இயக்கங்களைச் சார்ந்தே இங்கே தொடக்ககாலப் பெண்ணுரிமைநோக்கு உருவானது, அதை முன்வைக்கும் படைப்பாளிகளும் உருவானார்கள்.

இதைத் தவிர உண்மையிலேயே பழமைவாதத் தரப்பைச் சேர்ந்த ஏராளமான படைப்பாளிகளும் இருந்தார்கள். அன்றைய சூழலில் எழுத்துக்கு வந்த படித்த உயர்குடிப்பெண்களில் பலர் ஆசாரமான, பழமைவாத நோக்கு கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக, வி. விசாலாட்சி அம்மாள் ,வி.சரஸ்வதி அம்மாள் போன்றவர்கள் வி. கிருஷ்ணசாமி ஐயரின் குடும்பத்துப் பெண்கள். பழமைவாதியான அவர் தன் பெண்களுக்கு குழந்தைமணம் செய்து வைத்தவர். அத்தகைய பின்னணிகொண்ட பெண்கள் பழமைவாத நோக்கை வலியுறுத்தியதில் வியப்பில்லை.
இப்படிச் சொல்லலாம். ஒரு முன்னோக்கிய நகர்வு உருவாகும்போது மறுபக்கம் அதற்கான எதிர்விசைகளும் செயல்படுகின்றன. ஒன்று, அந்த முன்னகர்வை எச்சரிக்கையுடன் கட்டுப்படுத்தும் விவேகத்தின் விசை. இன்னொன்று, பின்னிழுக்கும் பழமையின் விசை. இரண்டுமே நீங்கள் கேட்ட வகையான எழுத்துக்கான காரணங்கள்.

இதெல்லாம் பெண்களின் எழுத்தை, தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வதற்கான நம் முயற்சியின் ஒரு பகுதி மட்டுமே. நாம் அவர்களின் காலகட்டம், சூழல் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்தமாக அவர்களின் படைப்புகளைப் பார்ப்பதற்கான பயிற்சிகள் இவை. இதை முன்னிட்டு அவர்களைப் பற்றிப் பேசுவது நிறைவளிக்கிறது
ஜெ
- அசலாம்பிகை
- அம்மணி அம்மாள்
- அழகியநாயகி அம்மாள்
- ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்
- ஆர்.சூடாமணி
- ஆர்.பொன்னம்மாள்
- எஸ். விசாலாட்சி
- எஸ். அம்புஜம்மாள்
- கமலா சடகோபன்
- கமலா பத்மநாபன்
- கமலா விருத்தாசலம்
- கிருத்திகா
- கிருபா சத்தியநாதன்
- கி.சரஸ்வதி அம்மாள்
- கி.சாவித்ரி அம்மாள்
- கி.சு.வி.இலட்சுமி அம்மாள்
- குகப்பிரியை
- குமுதினி
- கெளரி அம்மாள்
- சகுந்தலா ராஜன்
- சரஸ்வதி ராம்நாத்
- சரோஜா ராமமூர்த்தி
- செய்யிது ஆசியா உம்மா
- செய்யூர் சாரநாயகி அம்மாள்
- ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்
- டி.பி.ராஜலட்சுமி
- நீலாம்பிகை அம்மையார்
- மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்
- மீனாட்சிசுந்தரம்மாள்
- வி. விசாலாட்சி அம்மாள்
- வி.சரஸ்வதி அம்மாள்
- விசாலாட்சி அம்மாள்
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- ஹெப்சிபா ஜேசுதாசன்