மக்கள் மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தையும் இந்தியாவின் மிகச்சிறந்த முன்னுதராண களச்செயல்கள் எனலாம். மக்களையும் மருத்துவர்களையும் ஒன்றிணைத்து அவர் உருவாக்கிய கூட்டுறவு மருத்துவமனைகள் தேசிய அளவிலான முன்மாதிரி. மருத்துவம், சூழலியல், வரலாறு, சமூக அரசியல், கல்வி, இலக்கியம் என பரந்துபட்ட களத்தில் மருத்துவர் ஜீவா செயலாற்றினார். காந்தியம் மற்றும் பொதுவுடைமைக் கருத்துகளின் ஒத்திசைவுச் சித்தாந்தமென தன் வாழ்வை வாழ்ந்துகாட்டியவர். போதை மீட்பு மருத்துவமனை மூலமாக பலநூறுக் குடும்பங்களைச் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிய பெருமனிதர் ஈரோடு வெ. ஜீவானந்தம்.
ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, மருத்துவர் ஜீவா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அவர் விட்டுச்சென்ற செயற்கனவுகளை சிறுகச்சிறுக நிறைவேற்றுவதே இம்முயற்சியின் நோக்கம். அதன் நீட்சியாக, தங்கள் பங்களிப்பால் சமூகத்திற்குத் தொண்டாற்றும் ஆளுமைகளுக்கு வருடந்தோறும் ‘பசுமை விருதுகள்’ அளிக்கப்படுகின்றன. வருடந்தோறும் ஜீவா நினைவேந்தல் நிகழ்வில் இவ்விருதளிப்பும் நிகழ்கிறது.
இதுவரையில் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர் சமஸ், இளம் சூழலியலாளர் விஷ்ணுப்ரியா, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வறிஞரான அய்யா அ.கா.பெருமாள் அவர்களுக்கும், திருநங்கைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வுநலனுக்காகச் செயலாற்றும் தோழமை சுதா அவர்களுக்கும் சுற்றுச்சூழல் களசெயல்பாட்டாளர் தியடோர் பாஸ்கரன் கிணறு புனரமைப்புப் பணியாளர் மதுமஞ்சரி ஆகியோருக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் நீட்சியாக இந்த ஆண்டு இரு ஆளுமைகளுக்கு மருத்துவர் ஜீவா : பசுமை விருதுகள் 2025 பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.
பேரா.முனைவர்.க.பழனித்துரை
பல்கலைக்கழக சுவர்களைக் கடந்து சமூகம் சார்ந்து சமூகத்துடன் செயல்படும் களச் செயல்பாட்டாளர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பணியாற்றி காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு வந்து காந்திய நிறுவனங்களுடன் இணைந்து 34 ஆண்டு காலம் பணி செய்து இன்றும் களத்தில் நிற்பவர்.
இவரின் ஒருங்கிணைந்த பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பொறுப்புகளிலும் தடம் பதித்தவர்.தற்போது பணி ஓய்வுக்கு பிறகு பாண்டிசேரியில் ஆரோவில் லின் அரவிந்தர் சமூகம் நடத்திவரும் ஊரக வளர்ச்சி செயல்பாட்டகத்திற்கு கௌரவ இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
தேஜாஶ்ரீ இங்வாலே ~
1988 ஆம் வருடம் பிறந்த இவர் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டவர். சிறு வயது முதலே கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டவரான தேஜாஶ்ரீ ஐந்தாண்டு கல்லூரி படிப்பாக ஓவியத்தை தேர்வு செய்து படித்து முடித்தார்.
இந்தியா முழுவதும் இருக்கிற மிக முக்கியமான இசை சார்ந்த ஆசிரியர்களை சென்று சந்தித்து அந்தந்த பிராந்திய இசைக்கான நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறார்.
தான் சந்திக்கும் பழங்குடி மக்களின் தனித்த இசையையும், அவர்களின் இசைக் கருவிகளையும் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வருகிறார்.
இதன் வாயிலாக அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய பாடல்களையும், இசைக் கருவிகளையும் மீளுருவாக்கம் செய்யும் பணியை தொடங்க இருக்கிறார்.
சொற்களையும், தத்துவங்களையும் தாண்டி தொடர்ச்சியாக களத்தில் நின்று சமூகம் சார்ந்தும், கலை சார்ந்தும் தீவிரமாக இயங்கி வரும் மூத்த மனமும், இளைய மனமுமான க.பழனிதுரை ஐயா மற்றும் தேஜாஶ்ரீ இங்வாலே இருவரும் இவ்விருதைப் பகிர்வதென்பது மகிழ்ச்சியாகவும் , நம்பிக்கையாகவும் இருக்கிறது.
மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மா, டாக்டர் எஸ்.எஸ்.மீனாட்சி சுந்தரம் IAS அவர்கள் , அக்னி தங்கவேலு ஐயா ஆகியோரின் முன்னிருப்பில் வருகிற மார்ச் 2ம் தேதி காந்திகிராம பல்கலைக்கழக வளாக ஊழியரகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கிறது. விருதுத்தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாயும் விருது சான்றிதழும் விருதாளர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
எளிய மக்களின் வாழ்வுமீள்கைக்கான எத்தனையோ செயலசைவுகளின் முதற்துவக்கமாக அமைந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் இறையிருப்பை வணங்கி மனதிலேந்துவோம். அவரது வாழ்நாள் கடந்து நம்மிடம் எஞ்சிய செயற்கனவுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். தோழமைகள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அன்புகூர்ந்து அழைக்கிறோம்.
நன்றியுடன்,
மருத்துவர் ஜீவா அறக்கட்டளை
