ஆதிரை வாசிப்பு / கார்த்திக் பிரகாசம்

ஈழத்து இலக்கியங்களின் மீது பெரும் ஆர்வமும், தீராத நேசமும் எப்பொழுதும் எனக்கு உண்டு. உலகின் வேறெந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் அதன் மேன்மையுறு சாரத்திற்குச் சற்றும் சளைக்காத ஓர் உள்ளொளியை ஈழ இலக்கியங்களிலும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். வாசிப்புக்குள் நுழைந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே ஈழ இலக்கியங்கள் அறிமுகமாகி விட்டன. முதன்முதலில் வாசித்தது, “கே.டானியல் படைப்புகள்”. இப்படைப்பைத் தீவிர வாசிப்பின் மூலம் தேடிக் கண்டடைந்தேன் என்று பொய் சொல்ல முடியாது. இலக்கியம் குறித்தான குறைந்தபட்ச அறிமுகமும், பரந்துபட்ட பார்வையும் இல்லாத முதிர்ச்சியற்ற பருவத்தின் தொடக்கக் காலகட்டம். தியாகராய நகரில் இருந்த “நியூ புக் லாண்ட்ஸ்” கடையில் ஒரு நாள் எதேச்சையாகத் தூண்டப்பட்ட ஓர் உள்ளுணர்வின் பேரில் எடுத்த புத்தகம் அது. பிறகே கே.டானியல் என்ற படைப்பாளியைத் தலித் இலக்கிய முன்னோடியாகவும், இலக்கிய ஆளுமையாகவும் உட்கொணர்ந்து கொண்டேன். அதன் பின்பு தொடர்ச்சியாகத் தமிழ்நதி, ஷோபாசக்தி, அகரமுதல்வன், அ.முத்துலிங்கம், தெய்வீகன், வாசு முருகவேல், தீபச் செல்வன், அனோஜன் பாலகிருஷ்ணன், ஸர்மிளா ஸெய்யித், குணா கவியழகன், டிலுக்ஸன் மோகன் ஆகியவர்களின் படைப்புகளை வெவ்வேறு சூழல்களில் இதுவரையில் வாசிப்புக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் வசிக்கும் சயந்தனின் முதல் படைப்பு, “ஆதிரை”. 2016ல் வெளியாகி இருக்கிறது. பத்து வருடங்கள் கடந்துவிட்டன. மிகத் தாமதமாகத் தான் வந்திருக்கிறேன். இந்நாவல் போரின் பாதிப்புகளை, குருதி தோய்ந்த அதன் நொளு நொளுப்பை முழுக்க முழுக்க மக்களின் பார்வையில் வலியும் வேதனையுமாக முன்வைக்கிறது.

1970 களின் பிற்பகுதியில் முதன்முறையாகத் தொடங்கும் இடப்பெயர்வானது மரபணு பரிமாற்றமாக இறுதிப் போர் முடியும் காலக்கட்டம் வரைக்கும் அடுத்தடுத்த சந்ததியினருக்குப் போர் அரக்கனால் கையளிக்கப்படுகிறது, இல்லை… வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. பஞ்சம் பிழைக்கச் சென்ற மலையகத் தமிழர்களைக் கள்ளத் தோணிக்காரன்கள், தோட்டக் காட்டான்கள் என்று இனவெறி பிடித்த சிங்களக் கூட்டம் எதிர்ப்படும் தமிழர்களைக் கண்மூடித்தனமாகக் கொன்று குவிக்கிறது. குடிசைகளுக்குத் தீயிட்டு கொளுத்துகிறது. அவர்களது சொற்ப உடைமைகளைக் கொள்ளையடிக்கிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சனங்கள் அங்கிருந்து கால்நடையாக இரவோடு இரவாகப் புறப்படுகின்றனர். வரலாற்றில் இந்த அவலக் காட்சி ஒருமுறை இருமுறை அல்ல, ஐந்து வருடம், பத்து வருடம் அல்ல. எண்ணற்ற முறை நாற்பது வருடங்களுக்கு இடப்பெயர்வு நீள்கிறது. இங்கு மனிதக்குல வரலாறு என்பதே இடையறாது புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் வரலாறுதான்.

போரின் நேரடித் தாக்குதலுக்கு ஆளான மக்களின் துயர்மிகு வாழ்வையே “ஆதிரை” மூலமாக சயந்தன் முன்வைக்கிறார். இங்குப் படைப்பாளி எந்தப் பக்கச் சார்பும் எடுக்கவில்லை. எந்தவொரு தத்துவத்தையும், கோட்பாட்டையும் தமது சுய அபிப்ராய நம்பிக்கைகளையும் நிறுவ முயலவில்லை. யாருக்கும் வக்காலத்து வாங்கும் முனைப்போ, அதன் பிரதிபலிப்பாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் நோக்கமோ வெளிப்படவில்லை. மாறாக அவர் திரும்பத் திரும்ப மக்களைப் பற்றிப் பேசுகிறார். அவர்களது நம்பிக்கைகள் குறித்துப் பேசுகிறார். அவர்களது எதிர்பார்ப்புகள் குறித்து ஏக்கம் கொள்ளச் செய்கிறார். போரினால் சிதைந்த காதலைக் குறித்துக் கவலைப்படுகிறார். தனித்து விடப்பட்ட வலியைப் பதிவு செய்கிறார். சொந்தமாக ஒரு நிலத்தில் நிலைக்க முடியாத உள ஆற்றாமை குறித்து தீர்க்கமாகப் பதிவு செய்கிறார்.

சிங்கள இராணுவத்திற்கு எதிரான புலிகளின் பதிலடிகளைத் தீவிரமாய் ஆதரிப்பவர்களும் உண்டு. அவன் செய்கிறான் என்பதற்காக நாமும் செய்வதா என்று இயக்கத்தில் செயல்பாடுகளைத் தீர்க்கமாக எதிர்ப்பவர்களும் உண்டு. படைப்பாளியின் பக்கச் சார்பின்மையின் காரணமாக இருதரப்புக்கும் இடையில் ஒரு சுதந்திரமான உரையாடலும், காத்திரமான கருத்துப் பரிமாற்றமும் இலக்கிய வடிவத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பல நடைமுறை கேள்விகள் முன்வைக்கப்பட்டு அவை பல்வேறு கோணங்களிலிருந்து அணுகப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வீட்டிற்கு ஒருவர் எனக் கட்டாயமாக இயக்கத்திற்கு ஆள் சேரச் சொல்லும் புலிகளின் விதிமுறை; கிட்டத்தட்ட இருபது லட்சம் மக்களுக்கான போரில் வெறும் மூன்று லட்சம் மக்கள் மட்டும் பங்கேற்று அதன் அநாதர விளைவுகளை அனுபவித்துத் தவிக்கும் போது நடுத்தர மற்றும் பொருளாதார நிறைவிருக்கும் பணமிருப்பவர்கள் அச்சூழலிருந்து தப்பித்து வெளி நாடுகளுக்குச் சென்றது குறித்த உரையாடல்களைச் சொல்லலாம். இந்த எல்லா இடங்களிலும் அவரவர்களின் பார்வையைக் கருத்தை முன்வைக்கிறதே அன்றி படைப்பாளி குறுக்கிட்டு தீர்க்கமான பதிலாக ஒன்றைக் கட்டமைக்க முனையவில்லை.

இத்தகைய கொடூரமான போர்ச் சூழிலும் மக்களின் மனதில் புரையோடிக் கிடக்கும் சாதியப் பாகுபாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டிச் செல்கிறது. அத்தார் என்னும் கம்யூனிஸ்ட் தமது முதலாளியின் மகளான சந்திராவை காதலிக்கிறார். வெள்ளாளர் சாதியைச் சேர்ந்த முதலாளி “அம்பட்டனுக்கு வெள்ளாள பெட்டை கேக்குதோ” என்று மூர்க்கமாக என் மகளையும், உன் குடும்பத்தையும் வெட்டிவிட்டு சிறைக்குப் போவேன் என மிரட்டுகிறார். அதே போலப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் சமயம், இயக்கத்திலிருந்து விலகி வந்திருந்த வெள்ளையனுக்கு முத்துவை சந்திரா பெண் கேட்டுச் செல்லும் போது முத்துவின் அம்மா மீனாட்சி கேட்கிறாள், “அவயள் என்ன ஆக்களெண்டு தெரியுமா..” வெள்ளையன் குடும்பம் மலைநாட்டைச் சேர்ந்தவர்கள். அருந்ததியர், சக்கிலியர் என ஒடுக்கப்பட்ட சமூக மக்களே மலையகத்தில் பெரும்பாலும் இருந்தனர். அதை வைத்து “நாங்கள் நாககன்னி வாக்களிச்ச குலம்” ஏளனமாகக் குத்திப் பேசுகிறாள் மீனாட்சி.

சிங்கள ராணுவம் ஒருபக்கம், மறுபக்கம் புலிகள் இது போதாதென மூன்றாவதாக இந்திய ராணுவம். இந்திய ராணுவம் பொதுமக்கள் மீது கண்டமேனிக்கு நிகழ்த்திய அக்கிரமத்தை வரலாற்றிலிருந்து எப்படி அழித்தொழிக்க முடியும். அது அக்கிரமம் மட்டுமல்ல. மூதாதையர் தேசம் என நம்பிய மக்களுக்கு இழைத்த வரலாற்றுத் துரோகம். மலையகத் தமிழரான சிங்கமலையை “புலிகளுக்கு நீ தான் துப்பு குடுக்கிறாயா” என்று இந்திய ராணுவத்தினர் துன்புறுத்துகிறார்கள். “இல்லவே இல்லை” என எவ்வளவோ கெஞ்சிக் கதறுகிறார் சிங்கமலை. கடைசி இழையின் அறுபடப் போகும் நிலையில் உயிர் உடலோடு ஊசலாடுகிறது. அச்சூழலில் எப்படியாவது உயிரோடு தப்பித்துவிட வேண்டும் என்கிற பயத்தில் சிங்கமலை சொல்கிறார், “அய்யா… நானும் இந்தியால இருந்து வந்தவன்தான்”. அந்த இறுதிச் சொற்களை உதிர்த்த மறுகணமே இந்திய ராணுவம் அவரைக் கொல்கிறது.

அதற்கு முன்பாக, இந்திய அமைதிப்படையினர் வந்துவிட்டார்கள் என்று அறிய நேர்ந்தபோது மூதாதையர் தேசமென்று சிலிர்க்கும் சிங்கமலையிடம் அத்தார், “நீங்கள் இன்னும் இந்தியராத்தான் மனசில நினைக்கிறியளா?” என்று கேட்கிறார். முக்கியமான இடம் இது. அதற்கு சிங்கமலை சொல்கிறார், “ நாடுன்னா என்ன… நான் பொறந்த இடமா… அல்லது என் புள்ளக பொறந்த இடமா… இல்லையே.. நானும் புள்ளகளும் நாளைக்கும் காலேல உசிரோட எழும்புவோம்கிற நம்பிக்கயத் தாற பூமி தானே நாடு.. தனிக்கல்லடியும், காட்டுப்புலவும் தான் என்னோட நாடு….. அப்படிச் சட்டுன்னு சொல்லிட்டாலும் இந்தியான்னா உள்ளுக்க ஒரு நெனைப்பு. எனக்குச் சரியா சொல்லத் தெரியல்ல. நல்லது நடந்துச்சின்னா சந்தோஷம்தான் .”

தீவிரப் புலி ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அத்தாருக்கும், அதற்கு நேரேதிர் மனநிலையைக் கொண்ட அவரது மனைவி சந்திராவிற்கும் இடையே நிகழும் அத்துணை உரையாடல்களும் சுவாரசியமாகவும், உயிர்ப்புடனும் இருக்கின்றன. இருவராலும் கருத்தியல் ரீதியாக ஒன்றிப் போகவே முடியவில்லை. இருப்பினும் கடைசிவரைக்கும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பரஸ்பர அன்பில் எத்தகைய தேங்கலும் ஏற்பட்டிராத வண்ணம் குன்றாத காதலோடு பூரணமான வாழ்க்கை வாழ்ந்து முடிக்கின்றனர். இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் வழியில் ஷெல்லடி பட்டு சந்திரா இறக்கும் போது, “எல்லாவற்றையும் துறந்துவிட்டு என்னை மட்டுமே நம்பி வந்த மனுஷியை என்னால் அப்படியே விட்டுவிட்டு வர முடியாது. அவளை மரியாதையாக வழியனுப்பி வைக்க வேண்டும்” என அதே இடத்தில் ஷெல்லடி பட்டு அத்தாரும் இறக்கிறார். அவ்விடத்தில் மரணத்தை வென்று புன்னகைக்கிறது அவர்களின் காதல். சந்திராவின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளே குமைந்து தடுமாறும் போதும், நந்தன் சேரிடம் புலிகளின் குறைபாடுகளை, அவர்கள் தவறவிட்ட குழப்பங்களைக் குறித்து நேர்மையாகப் பகிரும் போதும் அத்தார் உயர்ந்து நிற்கிறார். அதே வேளையில் புலிகளின் செயல்களினால் சனங்கள் படும் பாடு, அல்லல், துன்பங்களைக் கண்டு இயக்கத்தின் மீது சோர்வுறாமல் விமர்சனம் வைக்கும் சந்திராவின் அணுகுமுறை பிழைவிட்ட தருணங்களைச் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கான காலத்தின் கண்ணாடி பிரதிபலிக்கிறது.

விருப்பப்பட்டும், கட்டாயத்தின் பேரிலும் லெட்சுமணன், வெள்ளையன், பரந்தாமன், புவனா, வினோதினி, மலர் எனப் பலரும் தாயகத்திற்காக இயக்கத்தில் இணைகின்றனர். ஒரு ஷெல்லடியில் காயப்பட்டு நோயுறுகிறான் வெள்ளையன். தொடர்ந்து சண்டை போட முடியாத நிலை. இயக்கத்திலிருந்து விலகி வந்து சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புகிறான். இயக்கத்தில் சண்டையிடும் சமயத்தில் மரணத்தைத் துச்சமாக நினைத்த நெஞ்சம், மனைவி, குழந்தைகள், குடும்பம் என்று ஆன பின்பு மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. அதுவும் தன் கண் முன்னமே குழந்தைகள் இறக்கும் துர்ப்பாக்கியத்தை நினைத்து வெடவெடக்கிறது. நம்பிக்கை இழந்த இடத்தில் வெள்ளையன் சொல்கிறான், “”அய்யா… உங்கடை பிள்ளையளைச் சாகக் காணுற தைரியம் உங்களுக்கு இல்லையெண்டால் அதுக்கு முதலே நீங்கள் சாக வேணுமெண்டு கடவுளிட்டை வேண்டுங்கோ… நான் அதைத்தான் செய்யிறன்”.

போர் முடிவுற்ற போதிலும் இயக்கத்தில் இருந்தவர்களைச் சரணடையச் சொல்கிறது சிங்கள ராணுவம். உயிரோடு இருந்த வெள்ளையன், வினோதினி இருவரும் சரணடைகின்றனர். வினோதினியின் தந்தை கணபதி, மகளை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார். கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளாமல் அனைவரையும் வண்டியில் ஏற்றிச் செல்கிறார்கள். எங்கு அழைத்துச் செல்கிறார்கள்? எப்போது விடுவார்கள்? என்ற அந்த அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை. இரண்டு ஆண்டுகள் தடுப்பிற்குப் பிறகு வெள்ளையன் விடுவிக்கப்படுகிறான். “முன்னாள்’ இயக்கத்தினன் என்பதால் எவரும் வேலைத் தர மறுக்கிறார்கள். கடைசியில் இயக்கத்தினன் என்பது மறைத்து, மிதிவெடி அகற்றும் தொண்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். வெள்ளையனின் மனைவி இந்த வேலை வேண்டாம் என்கிறாள். வெள்ளையன் விரக்தியாகப் புன்னகைத்து, “இந்த வேலையைத்தான் காலம் எனக்காக விட்டு வைச்சிருக்கு போல. ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். புதைக்கத் தெரிஞ்ச எனக்குக் கிளறவும் தெரியும்தானே” என்கிறான். ஆம்… காலம் என்னும் அரக்கன். வினோதினி என்ன ஆனாள் என்று ஒரு தகவலும் இல்லை. அவளுடைய தந்தை கணபதியும், தாய் வல்லியாலும் ஒவ்வொரு தடுப்பாகச் சென்று எப்படியாவது மகளை மீட்டுவிட அலைகிறார்கள். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. காணாமல் போனவர்களைப் பற்றிய விசாரணைச் செய்யும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முறையிடுகிறார்கள். சாட்சியத்தின்போது அதிகாரிகள், வினோதினி ராணுவத்திடம் சரணடையவே இல்லை என கை விரிக்கிறது. அதனிலும் மோசமாக, “மகள் இல்லாத நிலையில் இரண்டு பேருடைய வாழ்க்கை ஜீவனத்தின் சிரமங்களை ஆணைக்குழு புரிந்து கொள்கிறது. நீங்கள் ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை உதவியாகப் பெற விரும்புகிறீர்களா..” என்று கேட்கிறது. மகளைக் கண்டுபிடித்துவிட முடியாத என்கிற நப்பாசையில் எங்கு ஆர்ப்பாட்டம் நடந்தாலும் கணபதியும், வல்லியாலும் போய்விடுகின்றனர். அது போன்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் வினோதினியின் புகைப்படத்தை உயர்த்திப் பிடித்து, “எம் புள்ளய எங்கிட்ட மீட்டுக் கொடுத்திடுங்க…” என்று கதறி அழுகிறாள். அங்கிருக்கும் இரண்டு இந்தியப் பத்திரிகைக்காரர்கள் உடனே காமெராவோடு வல்லியாளிடம் திரும்புகின்றனர். இயக்கத்தில் விரும்பிச் சேந்தாங்களா… அல்லது கட்டாயப்படுத்திப் பிடிச்சுண்டு போனாங்களா? இங்க.. இங்க.. காமெரா பாத்து சொல்லுங்க என திரும்பத் திரும்ப கேட்கின்றனர். ஆனால், “வல்லியாலோ, எப்படியாவது என் மகளை மீட்டுக் கொடுங்க” என்று சொன்னதையே சொல்லி அரற்றுகிறாள். அவர்கள் வேறு கண்ணீரைத் தேடிப் போய்விடுகிறார்கள்..

கருணாநிதி காப்பாற்றுவார் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நம்பியிருந்த மக்களின் கண்ணீரை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் கையாலாகாத ஒரு துயரம் நெஞ்சைப் போட்டு அழுத்துகிறது.

நாவலில் முதல் பகுதியில் விவரிக்கப்படும் லெட்சுமணன் சிங்கமலையின் முடிவில்லாத கதையும், நாவலின் கடைசி பகுதியான ஆதிரையின் முன்பான கதையும் வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இங்கு வாசகன் தனித்து இல்லை. ஏனெனில் இவ்விரண்டு பகுதிகள் மட்டுமே தனித்தனி நாவல்களாக விரிவுக் கொள்ளுமளவுக்கு இந்த இலக்கியப் பிரதியில் படைப்பாற்றல் விரவியிருக்கிறது. வாசகனால் அதன் முடிவுகளைக் கிரகித்துக் கொள்ள முடியும்.

எந்தவொரு தத்துவமும், கோட்பாடும், போராட்ட முறைமைகளும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவையே. பொது சனங்களின் வலியிலிருந்து அந்நியப்பட்டு விலகியோடும் எந்தக் கோட்பாடும், தத்துவமும், போராட்டமும் காலத்தோடு வேரூன்றி நிற்காது.

மக்களின் வலியைப் புறக்கணிக்கும் எவராலும் வரலாற்றின் நன்மதிப்பை ஈட்ட முடியாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *