அகதிகளின் எல்லை வலி
போருக்கு பின்னான ஈழ படைப்புகளில், யுத்தத்தின் தாக்கத்தையும் அது கொடுத்த வலிகளையும் பார்த்திருக்கிறோம். அ.முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலைப் போல இன்னும் சில, போலி கடவு சீட்டு மூலம் புலம்பெயர் தமிழர்கள், நாடுகளின் எல்லைகளில் எதிர்கொள்ளும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையும் அலைகழிப்புகளையும் சிக்கல்களையும் பேசியிருக்கின்றன. அந்த வகையில் சயந்தனின் ‘திசை ஒன்பது’ நாவலும் அது போன்றதொரு பிரச்சினையைப் பேசுகிறது.

‘ஐரோப்பிய எல்லையில் எட்டுத் திசைகளும் அடைக்கப்பட்ட பிறகு ஒன்பதாவது திசைக்காகக் காத்திருக்கும் ஓர் அகதியின் கதை இது’ என்று சயந்தன் இந்நாவலை வரையறுத்தாலும் அது பல்வேறு நாட்டு எல்லைகளில், வேலி தாண்ட துடிக்கிற, அம்முயற்சியில் தோல்வியுற்று மனதுக்குள் தவிக்கிற, வேறொரு நாட்டில் அமைதியான வாழ்க்கைக்காக ஏங்கி புழுங்குகிற ஏராளமானோரின் கதை.
சுவிஸ் நாட்டுக்குத் தஞ்சம் தேடிச் செல்கிற இளங்கோவை மையமாகக் கொண்டு, தன் வரலாற்று பாணியில் செல்கிறது இந் நாவல். நான் லீனியர் முறையில் சொல்லப் பட்டிருக்கும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிற இக்கற்பனைக் கதை, முதல் பக்கத்தில் இருந்தே எளிதாக உள்ளிழுத்துக் கொள்வதற்கு சயந்தனின் எள்ளலுடன் கூடிய அழகான மொழிநடையும் காரணம்.
சுவிஸில் இருக்கும் சித்திரச்செல்வன் தனது காதலி இமையாவைத் திருமணம் செய்துகொள்வதற்காக அவரை, அங்கு அழைக்கிறார். போலி கடவுச் சீட்டின் வழி, ஏஜென்ட் தேவாரம் அவரை சுவிஸுக்கு அனுப்புவதற்கான வேலைகளைச் செய்கிறார். இதே தேவாரமே 15 ஆண்டுகளுக்கு முன் இளங்கோவையும் அழைத்தவர். இளங்கோ, ஹங்கேரி எல்லையில் கைதாகி உக்ரைனில் சிறைப்பட்டு அங்கேயே வாழ நேர்ந்தவர். அவருடைய காதலி அமுதி இலங்கையில் இருக்கிறார். இளங்கோவுக்கு ஹன்னா என்ற யூதப் பெண் உக்ரைனில் அறிமுகமாகிறாள். இக்காதல்களும் கனவுகளும் உறைபனிக் குளிரில் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
இளங்கோவும் இமையாவும் உக்ரைனின் கீவ் நகரில் சந்திக்கிறார்கள். ஒரு போரிலிருந்து தப்பி இன்னொரு போரின் குண்டு வீச்சுக்குள் மாட்டிக்கொண்டு, பிற நாடுகளின் எல்லைகளில் அவர்கள் படும் பாடும் அவர்கள் சந்திக்கும் கலாச்சார அதிர்ச்சிகளும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்தான் நாவல்.
இக்கதைக்குள் ஈழம் மட்டுமல்ல; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், சிரியா என வெவ்வேறு நாடுகளில் இருந்து புலம் பெயர் நினைப்பவர்களும் புழங்குகிறார்கள்.
துப்பாக்கி மற்றும் வெடிச் சத்தங்களை விட்டுவிட்டு எங்கோ தூர தேசத்திலாவது ஊரின் நினைவுகளைச் சுமந்து கொண்டு வாழ நினைக்கிற அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் அதிர்ச்சி தருகின்றன. இதை கடந்துதான் ஏராளமான ஈழ தமிழர்கள் -அது புனைவென்றாலும்- வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்பது இன்னும் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. சீரியஸ் கதைதான். அதை சுவாரஸ்யமான கதைச் சொல்லலின் வழி அழகாகக் கொண்டு செல்கிறார் சயந்தன்.
“ஆக்கிரமிக்கப்பட்ட எல்லா நிலங்களுக்கும் ஒரே மொழி தானே”, “ஒரு கட்டத்தில் சித்தாந்தங்களே அதிகாரமாகும் போது..?” என்ற கேள்விகளும் “உயிருக்குப் பயந்தோடுவதற்கான சனங்களின் உரிமையும் மரியாதைக்குரியது” என்ற மாதிரியான பிரகடனங்கள் உட்பட இந் நாவலில் வருகிற வரிகளும், இந்நாவல் பேசுகிற அரசியலும் யோசிக்க வைக்கின்றன. போர் குறித்த கேள்விகளை எழுப்புகிற நாவல்களின் வரிசையில் புதிய அனுபவத்தைத் தருகிற ‘திசை ஒன்பது’க்கும் முக்கிய இடம் உண்டு.
நூல் விவரங்கள்: நூல்: திசை ஒன்பது ஆசிரியர்: சயந்தன் வெளியீடு: தமிழினி விலை: ரூ.280 தொடர்புக்கு: 98842 25551
