யாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்

இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்க
ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்து நிறுத்தியதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அன்றைய யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நூலகம் திறக்கப்படவிருந்தது. செல்லன் கந்தையன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாங்கள் யாழ் நூலகத் திறப்பு விழா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு புலிகளுக்கு செல்லன் கந்தையன் அவர்களின் சாதி ஒரு காரணம் இல்லையென்றும் அன்றைக்கு அவர்களோடு முரண்படத்தொடங்கியிருந்த ஆனந்தசங்கரிதான் பிரதான காரணம் என்றும் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கிறோம். ஏனெனில் திறப்பு விழா செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நடைபெற இருந்தாலும் நூலகத்தை ஆனந்தசங்கரியே திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தார்.

புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையில் தோன்றிய முறுகல் ஒரு தனியான அரசியல் விவாதம். அவர் புலிகளை மிகத் தீவிரமாகச் சீண்டினார். எரிச்சல் படுத்தினார். அவர்களுடைய கட்டளைகளுக்கு வெளியில் துணிச்சலாக வந்துநின்றார். புலிகள் இயக்கத்தை விமர்சித்து அதன் தலைவர் பிரபாகரனுக்கு மாதமொருமுறை கடிதம் எழுதினார். புலிகள் அவருடைய கேள்விகள், குற்றச்சாட்டுகள் எதற்கும் பதிலோ மறுப்போ சொன்னதில்லை. அது புலிகளுடைய உளவியல். ஆயினும் ஆனந்தசங்கரியின் ஒரு சாதனையைப்போல நிகழ இருந்த நூலகத்திறப்பை அவர்கள் தடுத்து நிறுத்துவதென்று தீர்மானித்தார்கள்.மறுபுறத்தில் எரிக்கப்பட்ட நூலகத்தை திறப்பு விழா செய்வதன் மூலம் வேறு அரசியலை செய்ய முனைந்த ஜானாதிபதி சந்திரிக்காவின் அரசியலையும் புலிகள் விரும்பவில்லை.

இந்த நடவடிக்கையில் அவர்கள் ஒரு அதிகாரபூர்வ குரலை வழங்க நினைக்கவில்லை. இதற்கு முன்னரும் பின்னரும் அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு 2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அதிகாரபூர்வ அறிவிப்பு புலிகளிடமிருந்து வெளியானதில்லை. மாறாக அதை சமூகத்தின் பல்வேறு அமைப்புக்களுக்கு ஊடாகவே நிகழ்த்திக் காட்டினார்கள். ஒரு அமைப்பின் நடவடிக்கையாக இல்லாமல் மக்கள் போராட்டமாக மற்றுவது புலிகள் மட்டுமல்ல உலகின் பல போராட்ட அமைப்புகளும் கைக்கொள்ளும் வழிமுறைதான்.

நூலக விவகாரத்திலும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கங்கள், மற்றும் ஒன்றியங்கள் முதலான மக்கள் அமைப்புகளுக்கு ஊடாகவே தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினார்கள். வர்த்தக சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஏற்பாடு செய்தன. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ இருந்தன. திறப்பு விழா ரத்துச் செய்யப்பட்டது. விழா விளம்பரங்கள் ஆர்ப்பாட்ட அரசியல் எதுவும் இன்றி இரண்டொரு வாரங்களில் நூலகம் இயங்கத்தொடங்கியது.

இந்த இடத்தில் புலி விரோத அரசியலின் ‘ஓட்டுமாட்டு’ ஆரம்பிக்கிறது. மக்களுடைய பக்கத்தில் நின்று புலிகளை விமர்சிப்பதற்கான சில நூறு காரணங்களை புலிகளே உருவாக்கி அளித்துள்ளார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆயினும் இப் புலி விரோத அரசியல்காரர்கள் வேறொரு வகைத் தினுசானவர்கள். அவர்களுடைய புலி விரோத நிலைப்பாடு பெருமளவுக்கு மக்கள் நலன் சார்ந்தது அல்ல. அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான பழைய பிணக்குச் சார்ந்தது. பழி தீர்த்தல் வகையானது. பாதிக்கப்பட்டவர் பழி தீர்க்க முடியாதா என்றால் நிச்சயமாகத் தீர்க்கலாம். ஆனால் அதற்கு மக்கள் நலன் என்று பள பளக்க மினுக்கக் கூடாது. 2009இற்கு முன்னர் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலி விரோத அரசியல் பழி தீர்க்கும் அரசியல்தான்.

அவர்கள் யாழ் நூலகத் திறப்புத் தடுக்கப்பட்டதை தலித் அரசியலாக்கினார்கள். அதைத் தங்களுடைய புலி விரோத அரசியலுக்கு “பாவிக்கத்தொடங்கினார்கள்” மேயர் செல்லன் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரது தலைமையில் நடக்கவிருந்த நிகழ்வை புலிகள் தடுத்தார்கள் என்றும், அவருடைய பெயர் கல்வெட்டில் வந்துவிடக் கூடாதென்று பதறிய யாழ்ப்பாணத்தார் (அவர்கள் பதறக்கூடியவர்கள்தான்) புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து – புலிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து நூலகத் திறப்பினைத் தடுத்துவிட்டார்கள் என்றும் உண்மைக்கு மாறாக அவர்கள் நிறுவ ஆரம்பித்தார்கள். தங்களுடைய புலி விரோத அரசியலுக்கு முட்டுக்கொடுப்பதற்காக தலித் அரசியலை “பாவிக்கத்தொடங்கினார்கள்” தலித் அரசியல் இன்னொருவரால் தன்னுடைய தேவைக்குப் “பாவிக்கின்ற” அரசியல் இல்லை.
இந்த விவகாரத்தை முன்வைத்து புலிகளை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விரோதிகளாக முன்வைத்தவர்களில் ஈழச் சூழலில் ஷோபாசக்தி முதன்மையானவர். 2007இல் அவர் எழுதிய வசந்தத்தின் இடிமுழக்கம் தொகுப்பில் நூலகத் தடுப்புப் பற்றி அவர் “கேள்விப்பட்ட” பல்வேறு தகவல்களை நிரப்பி நிரப்பி அதைப் படிப்பவர்களுக்கு “தலித் விரோதப் புலிகள்” என்ற சித்திரத்தை “வலு கிளியராக” ஏற்படுத்துகிறார்.
ஈழப்போர் பின்னணியில் ஒரு திடுக்கிடும் த்ரில்லரைத்தொடங்குவதைப்போல – வன்னியிலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமனும், இன்னொரு விடுதலைப்புலி உறுப்பினரான சிறிலும் – கஜேந்திரனும் அலுவலகத்தில் நுழைந்து செல்லன் கந்தையனை மிரட்டுகிறார்கள் என்று காட்சியை விபரிக்கிறார். இங்கே , அதுநாள் வரை யாழ்ப்பாணத்தில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவராயிருந்த சொலமன் சிறில் என்ற ஒருவரை – ஷோபா சொலமன் என்றும் சிறில் என்றும் இரண்டு பேராக்கி அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று புலிகள் இயக்கத்தில் இணைத்தும் விடுகிறார். அப்பொழுதுதான் புலிகள் தலித் விரோதிகளாயிருந்தார்கள் என்ற சித்திரம் உருவாகும்.

தொடர்ந்தும் புலிகள் செல்லையனை மிரட்டினார்கள், இரத்தக்களறி ஏற்படும் என்று வெருட்டினார்கள், இதற்கு முன்னரே புலிகளால் மாமனிதராகப் போற்றப்பட்ட ரவிராஜ் செல்லன் கந்தையனை பூட்டிய அறைக்குள் வைத்து சாதி ரீதியாக அடித்தார்.. என்று ஷோபா எழுதுகிறார். கவனியுங்கள். செல்லன் கந்தையனைச் சாதி சொல்லி அடித்த ரவிராஜ்ஜை புலிகள் மாமனிதர் ஆக்கினார்கள் என்பதற்கு ஊடாக புலிகளைப்பற்றி உருவாக்க விரும்புகிற சித்திரத்தை நன்றாகக் கவனியுங்கள். ரவிராஜ், செல்லனை சாதியால் திட்டி அடித்தாரா?. சற்றுப் பொறுங்கள்.

நாங்கள் தொடர்ச்சியாக நூலகத் திறப்பு விழா தடுக்கப்பட்டதற்குரிய பிரதான காரணம் ஆனந்தசங்கரிதான் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டே வருகிறோம். அதாவது ஆனந்தசங்கரிக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு என்று சொல்கிறோம். ஆனந்த சங்கரி திறக்கவிருந்த நிகழ்வினை அன்றைக்கு செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த ஓர் ஏலியனே தலைமை தாங்க இருந்தால்கூட புலிகள் அதை நிறுத்துவதற்கான சூழலே அங்கு நிலவியது. இதை அண்மையில் குறிப்பிட்டபோது “ஊகங்களின் அடிப்படையில் பேசாதீர்கள், இவ்வாறு செல்லன் எங்காவது சொல்லியிருக்கிறாரா” என்று ஷோபா சக்தி கேட்டார். ஆம். செல்லன்தான் சொன்னார்.

இன்னோரு இடத்தில் ஒருவேளை செல்லன் கந்தையாவிற்குப் பதிலாக இன்னொரு வெள்ளாள மேயர் இருந்திருந்தால் ஆனந்தசங்கரி நூல் நிலையத்தைத் திறக்க புலிகள் அனுமதித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்று ஷோபாவிடம் கேட்டபோது அவர் “நிச்சயமாக, ஜோராக திறப்பு விழா நடந்திருக்கும்” என்றார். அதாவது புலிகளுக்கு ஆனந்தசங்கரி பொருட்டில்லை. ஒரு வெள்ளாளர் தலைமை தாங்கினால் போதும் என்கிறார். அது அப்படியல்ல ஷோபா. உங்களை விடவும் செல்லன் கந்தையாவிற்கு ‘க்ரவுன்ட் சிற்றுவேசன்’ நன்றாகப் புரிந்திருந்தது. அவர் சொல்வதைக் கேளுங்கள்.

இறுதியாக,எரிக்கப்பட்ட நூலகம் ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளைப் புறம் தள்ளி, சந்திரிகாவின் ஒரு சாதனையாகப் போற்றப்பட்டு ஆனந்தசங்கரியால் கோலாகலமாகத் திறக்கப்பட இருந்த திறப்பு விழாவை புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையிலிருந்த ‘பிக்கல் பிடுங்கல்களினால்’ புலிகள் தடுத்து நிறுத்தியபோது – அதற்குத் தலைமை தாங்கவிருந்த செல்லன் கந்தையனின் பெயர் கல்வெட்டில் வரவில்லை என்பதனால் “அப்பாடி” என்று ஆறுதல்பட்டிருக்கக் கூடிய ஓர் உயர் சைவ வெள்ளாளக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்குமென்பதை நாம் அறிவோம். அவர்களைக் கருத்தியல் ரீதியாக மனமாற்றமடையச் செய்யும் தீவிரமான அறிவுச் செயற்பாடுகளை புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது முன்னெடுக்கவில்லை என்பதை நாமும் ஒரு கருத்தாகப் பதிவு செய்கிறோம்.

இதன் அர்த்தம் புலிகள் அவர்களுக்கு ஆதரவான ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள் என்பது அல்ல. அவர்கள் சட்டங்கள் மூலம் சாதிய அடக்குமுறையை ஒடுக்க முனைந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து அச் சமூக அமைப்பிற்கிடையில் போராடி அரசியலில் தன்னை இணைத்து சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒதுக்கல்களை எதிர்கொண்டு யாழ் மேயராகி சாதிய சனாதன சமூகத்தில் நிலைத்து நின்ற செல்லன் கந்தையனை புலிவிரோத அரசியலுக்கு பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுவதே எமது நோக்கம். புலிவிரோத அரசியலுக்கு தலித் அரசியலை பயன்படுத்துவதற்க்காக புனைவுகளை உருவாக்குவதை மட்டுமே நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
செல்லன் கந்தையன் குறித்த முழுமையான ஆவணப்படம் ஒன்று வெளிவருகிற போது யாழ்ப்பாணத்தில் ஒரு தலித்(பஞ்சமர்,அடக்கப்பட்டவர் ) மாநகரத்தின் தந்தையாக வந்த கதை முழுமையாகத் தெரிய வரும். யாழ் நூலகத் திறப்பு குறித்து அவரின் கருத்தும் கூட்டமைப்பு-புலிகள்- ஆனந்தசங்கரி என்ற மூன்று அரசியலும் கிழே உள்ள காணொலியில்

-சயந்தன் – சோமிதரன்
11.06.2020