காணொளி

யாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்

இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்க
ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்து நிறுத்தியதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அன்றைய யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நூலகம் திறக்கப்படவிருந்தது. செல்லன் கந்தையன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாங்கள் யாழ் நூலகத் திறப்பு விழா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு புலிகளுக்கு செல்லன் கந்தையன் அவர்களின் சாதி ஒரு காரணம் இல்லையென்றும் அன்றைக்கு அவர்களோடு முரண்படத்தொடங்கியிருந்த ஆனந்தசங்கரிதான் பிரதான காரணம் என்றும் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கிறோம். ஏனெனில் திறப்பு விழா செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நடைபெற இருந்தாலும் நூலகத்தை ஆனந்தசங்கரியே திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தார்.

புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையில் தோன்றிய முறுகல் ஒரு தனியான அரசியல் விவாதம். அவர் புலிகளை மிகத் தீவிரமாகச் சீண்டினார். எரிச்சல் படுத்தினார். அவர்களுடைய கட்டளைகளுக்கு வெளியில் துணிச்சலாக வந்துநின்றார். புலிகள் இயக்கத்தை விமர்சித்து அதன் தலைவர் பிரபாகரனுக்கு மாதமொருமுறை கடிதம் எழுதினார். புலிகள் அவருடைய கேள்விகள், குற்றச்சாட்டுகள் எதற்கும் பதிலோ மறுப்போ சொன்னதில்லை. அது புலிகளுடைய உளவியல். ஆயினும் ஆனந்தசங்கரியின் ஒரு சாதனையைப்போல நிகழ இருந்த நூலகத்திறப்பை அவர்கள் தடுத்து நிறுத்துவதென்று தீர்மானித்தார்கள்.மறுபுறத்தில் எரிக்கப்பட்ட நூலகத்தை திறப்பு விழா செய்வதன் மூலம் வேறு அரசியலை செய்ய முனைந்த ஜானாதிபதி சந்திரிக்காவின் அரசியலையும் புலிகள் விரும்பவில்லை.

இந்த நடவடிக்கையில் அவர்கள் ஒரு அதிகாரபூர்வ குரலை வழங்க நினைக்கவில்லை. இதற்கு முன்னரும் பின்னரும் அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு 2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அதிகாரபூர்வ அறிவிப்பு புலிகளிடமிருந்து வெளியானதில்லை. மாறாக அதை சமூகத்தின் பல்வேறு அமைப்புக்களுக்கு ஊடாகவே நிகழ்த்திக் காட்டினார்கள். ஒரு அமைப்பின் நடவடிக்கையாக இல்லாமல் மக்கள் போராட்டமாக மற்றுவது புலிகள் மட்டுமல்ல உலகின் பல போராட்ட அமைப்புகளும் கைக்கொள்ளும் வழிமுறைதான்.

நூலக விவகாரத்திலும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கங்கள், மற்றும் ஒன்றியங்கள் முதலான மக்கள் அமைப்புகளுக்கு ஊடாகவே தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினார்கள். வர்த்தக சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஏற்பாடு செய்தன. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ இருந்தன. திறப்பு விழா ரத்துச் செய்யப்பட்டது. விழா விளம்பரங்கள் ஆர்ப்பாட்ட அரசியல் எதுவும் இன்றி இரண்டொரு வாரங்களில் நூலகம் இயங்கத்தொடங்கியது.

இந்த இடத்தில் புலி விரோத அரசியலின் ‘ஓட்டுமாட்டு’ ஆரம்பிக்கிறது. மக்களுடைய பக்கத்தில் நின்று புலிகளை விமர்சிப்பதற்கான சில நூறு காரணங்களை புலிகளே உருவாக்கி அளித்துள்ளார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆயினும் இப் புலி விரோத அரசியல்காரர்கள் வேறொரு வகைத் தினுசானவர்கள். அவர்களுடைய புலி விரோத நிலைப்பாடு பெருமளவுக்கு மக்கள் நலன் சார்ந்தது அல்ல. அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான பழைய பிணக்குச் சார்ந்தது. பழி தீர்த்தல் வகையானது. பாதிக்கப்பட்டவர் பழி தீர்க்க முடியாதா என்றால் நிச்சயமாகத் தீர்க்கலாம். ஆனால் அதற்கு மக்கள் நலன் என்று பள பளக்க மினுக்கக் கூடாது. 2009இற்கு முன்னர் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலி விரோத அரசியல் பழி தீர்க்கும் அரசியல்தான்.

அவர்கள் யாழ் நூலகத் திறப்புத் தடுக்கப்பட்டதை தலித் அரசியலாக்கினார்கள். அதைத் தங்களுடைய புலி விரோத அரசியலுக்கு “பாவிக்கத்தொடங்கினார்கள்” மேயர் செல்லன் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரது தலைமையில் நடக்கவிருந்த நிகழ்வை புலிகள் தடுத்தார்கள் என்றும், அவருடைய பெயர் கல்வெட்டில் வந்துவிடக் கூடாதென்று பதறிய யாழ்ப்பாணத்தார் (அவர்கள் பதறக்கூடியவர்கள்தான்) புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து – புலிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து நூலகத் திறப்பினைத் தடுத்துவிட்டார்கள் என்றும் உண்மைக்கு மாறாக அவர்கள் நிறுவ ஆரம்பித்தார்கள். தங்களுடைய புலி விரோத அரசியலுக்கு முட்டுக்கொடுப்பதற்காக தலித் அரசியலை “பாவிக்கத்தொடங்கினார்கள்” தலித் அரசியல் இன்னொருவரால் தன்னுடைய தேவைக்குப் “பாவிக்கின்ற” அரசியல் இல்லை.
இந்த விவகாரத்தை முன்வைத்து புலிகளை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விரோதிகளாக முன்வைத்தவர்களில் ஈழச் சூழலில் ஷோபாசக்தி முதன்மையானவர். 2007இல் அவர் எழுதிய வசந்தத்தின் இடிமுழக்கம் தொகுப்பில் நூலகத் தடுப்புப் பற்றி அவர் “கேள்விப்பட்ட” பல்வேறு தகவல்களை நிரப்பி நிரப்பி அதைப் படிப்பவர்களுக்கு “தலித் விரோதப் புலிகள்” என்ற சித்திரத்தை “வலு கிளியராக” ஏற்படுத்துகிறார்.
ஈழப்போர் பின்னணியில் ஒரு திடுக்கிடும் த்ரில்லரைத்தொடங்குவதைப்போல – வன்னியிலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமனும், இன்னொரு விடுதலைப்புலி உறுப்பினரான சிறிலும் – கஜேந்திரனும் அலுவலகத்தில் நுழைந்து செல்லன் கந்தையனை மிரட்டுகிறார்கள் என்று காட்சியை விபரிக்கிறார். இங்கே , அதுநாள் வரை யாழ்ப்பாணத்தில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவராயிருந்த சொலமன் சிறில் என்ற ஒருவரை – ஷோபா சொலமன் என்றும் சிறில் என்றும் இரண்டு பேராக்கி அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று புலிகள் இயக்கத்தில் இணைத்தும் விடுகிறார். அப்பொழுதுதான் புலிகள் தலித் விரோதிகளாயிருந்தார்கள் என்ற சித்திரம் உருவாகும்.

தொடர்ந்தும் புலிகள் செல்லையனை மிரட்டினார்கள், இரத்தக்களறி ஏற்படும் என்று வெருட்டினார்கள், இதற்கு முன்னரே புலிகளால் மாமனிதராகப் போற்றப்பட்ட ரவிராஜ் செல்லன் கந்தையனை பூட்டிய அறைக்குள் வைத்து சாதி ரீதியாக அடித்தார்.. என்று ஷோபா எழுதுகிறார். கவனியுங்கள். செல்லன் கந்தையனைச் சாதி சொல்லி அடித்த ரவிராஜ்ஜை புலிகள் மாமனிதர் ஆக்கினார்கள் என்பதற்கு ஊடாக புலிகளைப்பற்றி உருவாக்க விரும்புகிற சித்திரத்தை நன்றாகக் கவனியுங்கள். ரவிராஜ், செல்லனை சாதியால் திட்டி அடித்தாரா?. சற்றுப் பொறுங்கள்.

நாங்கள் தொடர்ச்சியாக நூலகத் திறப்பு விழா தடுக்கப்பட்டதற்குரிய பிரதான காரணம் ஆனந்தசங்கரிதான் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டே வருகிறோம். அதாவது ஆனந்தசங்கரிக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு என்று சொல்கிறோம். ஆனந்த சங்கரி திறக்கவிருந்த நிகழ்வினை அன்றைக்கு செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த ஓர் ஏலியனே தலைமை தாங்க இருந்தால்கூட புலிகள் அதை நிறுத்துவதற்கான சூழலே அங்கு நிலவியது. இதை அண்மையில் குறிப்பிட்டபோது “ஊகங்களின் அடிப்படையில் பேசாதீர்கள், இவ்வாறு செல்லன் எங்காவது சொல்லியிருக்கிறாரா” என்று ஷோபா சக்தி கேட்டார். ஆம். செல்லன்தான் சொன்னார்.

இன்னோரு இடத்தில் ஒருவேளை செல்லன் கந்தையாவிற்குப் பதிலாக இன்னொரு வெள்ளாள மேயர் இருந்திருந்தால் ஆனந்தசங்கரி நூல் நிலையத்தைத் திறக்க புலிகள் அனுமதித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்று ஷோபாவிடம் கேட்டபோது அவர் “நிச்சயமாக, ஜோராக திறப்பு விழா நடந்திருக்கும்” என்றார். அதாவது புலிகளுக்கு ஆனந்தசங்கரி பொருட்டில்லை. ஒரு வெள்ளாளர் தலைமை தாங்கினால் போதும் என்கிறார். அது அப்படியல்ல ஷோபா. உங்களை விடவும் செல்லன் கந்தையாவிற்கு ‘க்ரவுன்ட் சிற்றுவேசன்’ நன்றாகப் புரிந்திருந்தது. அவர் சொல்வதைக் கேளுங்கள்.

இறுதியாக,எரிக்கப்பட்ட நூலகம் ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளைப் புறம் தள்ளி, சந்திரிகாவின் ஒரு சாதனையாகப் போற்றப்பட்டு ஆனந்தசங்கரியால் கோலாகலமாகத் திறக்கப்பட இருந்த திறப்பு விழாவை புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையிலிருந்த ‘பிக்கல் பிடுங்கல்களினால்’ புலிகள் தடுத்து நிறுத்தியபோது – அதற்குத் தலைமை தாங்கவிருந்த செல்லன் கந்தையனின் பெயர் கல்வெட்டில் வரவில்லை என்பதனால் “அப்பாடி” என்று ஆறுதல்பட்டிருக்கக் கூடிய ஓர் உயர் சைவ வெள்ளாளக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்குமென்பதை நாம் அறிவோம். அவர்களைக் கருத்தியல் ரீதியாக மனமாற்றமடையச் செய்யும் தீவிரமான அறிவுச் செயற்பாடுகளை புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது முன்னெடுக்கவில்லை என்பதை நாமும் ஒரு கருத்தாகப் பதிவு செய்கிறோம்.

இதன் அர்த்தம் புலிகள் அவர்களுக்கு ஆதரவான ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள் என்பது அல்ல. அவர்கள் சட்டங்கள் மூலம் சாதிய அடக்குமுறையை ஒடுக்க முனைந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து அச் சமூக அமைப்பிற்கிடையில் போராடி அரசியலில் தன்னை இணைத்து சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒதுக்கல்களை எதிர்கொண்டு யாழ் மேயராகி சாதிய சனாதன சமூகத்தில் நிலைத்து நின்ற செல்லன் கந்தையனை புலிவிரோத அரசியலுக்கு பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுவதே எமது நோக்கம். புலிவிரோத அரசியலுக்கு தலித் அரசியலை பயன்படுத்துவதற்க்காக புனைவுகளை உருவாக்குவதை மட்டுமே நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
செல்லன் கந்தையன் குறித்த முழுமையான ஆவணப்படம் ஒன்று வெளிவருகிற போது யாழ்ப்பாணத்தில் ஒரு தலித்(பஞ்சமர்,அடக்கப்பட்டவர் ) மாநகரத்தின் தந்தையாக வந்த கதை முழுமையாகத் தெரிய வரும். யாழ் நூலகத் திறப்பு குறித்து அவரின் கருத்தும் கூட்டமைப்பு-புலிகள்- ஆனந்தசங்கரி என்ற மூன்று அரசியலும் கிழே உள்ள காணொலியில்

-சயந்தன் – சோமிதரன்
11.06.2020

By

Read More

செங்கடல் படம் பற்றிய உரையாடல்

sengadal124.03.2013 சுவிற்சர்லாந்து சூரிச் நகரில், செங்கடல் படம் திரையிட்டதன் பின்பாக படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலையுடனான கலந்துரையாடலின் காணொளிப்பதிவுகள்.

Youtube

By

Read More

அதிகாரப் பரவலாக்கலும் இலங்கைக்கான பொருத்தப்பாடும்

17 யூன் 2012 சுவிற்சர்லாந்து உரையாடல் அரங்கு நிகழ்வில் சசீவன் ஆற்றிய உரையாடலின் முழுமையான காணொளி. கீழ்வரும் விடயங்கள் குறித்து உரையாடல் அமைக்கப்பட்டிருந்தது.

Power : History and Devolution
அதிகாரத்தின் வரலாறு.

1. குடும்ப அமைப்பு மற்றும் குழுக்களிடையே அதிகாரம்.
2. நிலப்பிரபுத்துவகால அதிகாரம். (மன்னராட்சி மூலமான மத நிறுவனங்களின் அதிகாரம்)
3. அரசு என்ற எண்ணக்கருவும் அதிகாரமும்.
4. தேசிய இனங்களை மையப்படுத்திய அரசும் அதிகாரமும்.
5. பூர்த்தியடையாத தேசிய அபிலாசைகளும் அதிகாரப் பரவலாக்கமும்

அரசுகளை மையப்படுத்திய அதிகாரப் பரவலாக்கல் என்னும் எண்ணக்கரு

1. தேசிய இனங்களை மையப்படுத்திய அதிகாரப் பரவலாக்கல்.
2. பின்காலனித்துவ காலப்பகுதி – அரசு – அதிகாரப் பரவலாக்கல்
3. பிரதேச அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கல்
4. குடியுரிமையும் அதிகாரப் பரவலாக்கமும்
5. அடையாள அரசியலும் அதிகாரப் பரவலாக்கலும்

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல்.

1. இலங்கை அரசியலில் அதிகாரத்தின் வரலாறு.
2. அதிகாரப் பகிர்வுக்கான கதையாடல்கள்
3. அதிகாரத்தைக் கையகப்படுத்தும் நோக்கிலான போராட்டம்
4. திம்பு உடன்படிக்கை, 13 அம் சட்டச் சீர்திருத்தம், சந்திரிக்காவின் தீர்வுப்பொதி, இடைக்கால நிர்வாக சபை மற்றும் சமஸ்டி பற்றிய உரையாடல்கள்
5. இலங்கையின் இன்றைய அதிகார வரைபடம்

எவ்வாறான தீர்வு பொருத்தமாக இருக்க முடியும்/கூடும்

1. நவீன இறைமைக் கோட்பாடும் தீர்வும்
2. தென்னாசியப் பிராந்தியத்தில் காணப்படும் அதிகாரப் பரவலாக்கம்
3. இந்திய மேலாதிக்கமும் 13 ஆம் சட்டக் கோவையும்
4. பின் – அடையாள அரசியல் காலமும் அதிகாரப் பரவலாக்கலும்
5. குடியுரிமை, மனித உரிமைகள், குழு அடையாளம், பால் சார்ந்த அடையாளங்கள் மற்றும் இனத்துவ ரீதியிலான அதிகார வரைபடம்.

மார்க்சிய நோக்கிலான அதிகார வரைபடம், மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் அதிகாரச் சமன்பாடு.

By

Read More

ஆறாவடு, ரஃபேல் உரை – காணொளி

04 மார்ச் 2012 அன்று கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ஆறாவடு”  நாவல் விமர்சன அரங்கில்,  ரஃபேல் ஆற்றிய விமர்சன உரையின் முழுமையான காணொளி வடிவம். நிகழ்விற்கு  எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தலைமையேற்றிருந்தார்.
Audio Quality: Good – Video Quality: Poor

By

Read More

ஓகே, ரெடி.. இப்பொழுது காலில் விழலாம்

பத்து வயதுச் சிறுவனுக்கு குட்டிப் பிரபாகரன் என்று பட்டம் சூட்டியிருக்கிறார்கள். நான் முல்லைத்தீவில் பிறந்தவன், அதனால் தாய் தந்தையர் கால்களைத் தவிர, மற்றவர் (இந்த வார்த்தைக்குப் பதில் ஒவ்வொருவரும் அந்நியர், எதிரிகள் என்ற வார்த்தைகளை தம்பாட்டிற்குச் சேர்த்திருக்கிறார்கள்.) கால்களில் விழமாட்டேன் என சிறுவன் பேட்டியளித்ததாக வேறு சொல்கிறார்கள்.

சிறுவன் கால்களில் விழப் “பஞ்சிப்படும்” வீடியோவை நான் பார்த்தேன். நமது செய்தியாளர்களும் அந்த வீடியோவையே தமது செய்தி மூலங்களாகக் கொண்டிருப்பர் என்றுதான் நினைக்கிறேன். அந்த ஒளிப்பதில், அமைச்சரிடம் “வணங்கி ஆசிபெறும்” படி இருவர் அவனை ஆயத்தப்படுத்துகின்றனர். அவன் நெளிந்து தயங்கி விலகிச் செல்கின்றான். அவ்வளவும்தான். அவன் ஒரு தமிழனாகவும் மேலதிகமாக முல்லைத்தீவில் பிறந்தவனாகவும் மிக முக்கியமாக வணங்க வேண்டிய நபர் சிங்களவராகவும் இருந்துவிட – மேசைச் செய்தியாளர்கள் திரைக்கதை கதை வசனம் என புனைந்து தள்ளி விட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை காலில் விழுந்து வணங்குவது ஒரு பண்பாடாக அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கவில்லை. தாய் தந்தையரைவணங்குவது கூட பரவலாக நம்மிடம் வழக்கத்தில் இல்லை. சிங்கள சமூகத்தில் “நல்லநாள் பெரியநாட்களில்” ஒரு இயல்பு வழமையாக பெரியோர்களின் கால்களில் விழுந்து வணங்கும் முறைமை உள்ளது. குறிப்பாக சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு தொடர்பாக, கல்விப்புத்தகப் பாடங்களில் அவ்வாறு தாய் தந்தையரை விழுந்து வணங்கும் படங்களை சிறுவயதுகளில் நான் பார்த்திருக்கின்றேன். அந்தச் சூழல்கள் என்னோடு ஒட்டாமல் தள்ளியே நின்றன. இன்னும் கோயில்களில் “சுற்றமும் முற்றமும் பார்த்துநிற்க” நெடுஞ்சாண் கிடையாக விழுவதில் சிறு வயதுகளில் வெட்கமாகவும் உணர்ந்திருக்கிறேன்.

அப்படியொரு முற்றிலும் புதிய முறைமையில், நாலுபேர் பார்த்துநிற்க விழுந்து வணங்குகின்ற வெட்கத்தில் சிறுவன் “பம்ம” அவனை வெற்றி வீரனாக பேஸ்புக்கிலும் இணையச் செய்தித்தளங்களிலும், விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர்.

நாங்கள் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்குகின்ற சந்தர்ப்பங்களை யோசித்துப் பார்க்கிறேன். சாமத்திய வீட்டிலும் திருமணச் சடங்கிலும் அப்படியொரு சம்பிரதாயம் இருக்கிறது. அது கூட வீடியோ எடுப்பவர் “ஓகே.. ரெடி .. இப்ப விழுங்கோ” என்ற பிறகுதான்..

0 0 0

இதுவும் காலில் விழுகிற சமாச்சாரம்தான். இங்கேயொரு கோயிலில் நடந்தது. பூசைகள் முடிந்து ஐயர் வீபூதி கொண்டுவருகிற நேரம், அன்றைக்குப் புதிதாகக் கோயிலுக்கு வந்திருந்த வடஇந்தியக் குடும்பமொன்று கணவன், மனைவி, இருபிள்ளைகள் என ஐயரின் காலடியில் “குடும்பத்தோடு விழுந்து கிடந்து” வணங்கினார்கள். ஐயரும் ஒருகணம் அந்தரித்துத்தான் போய்விட்டார். அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு என்ன செய்வது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. குனிந்து தொட்டுத் துாக்குவதா அல்லது தொட்டு ஆசீர்வதிப்பதா அல்லது இவர் “சிவனே” என்று நிற்க அவர்களாக எழும்புவார்களா என ஒரு “மண்ணும்” அவருக்குத் தோன்றவில்லையோ என நான் நினைத்தேன்.

பிறகு அவர்கள் எழுந்து கொஞ்சம் குனிந்து வாய்பொத்தி நிற்க அவர்களது நெற்றியில் ஐயர் விபூதியைப் பூசினார். அப்பொழுது அவர்களைப் பார்க்க ஜெயலலிதாவிற்கு முன்னால் நிற்பவர்களைப் போலிருந்தது.

இதற்கிடையில் அப்பால் நின்ற சில “தமிழ்த்தாய்” மார் ஐயர் வரும்போது விழுந்து வணங்குவதற்காக தமது பிள்ளைகளையும் “ரெடி”ப்படுத்தினார்கள். ஐயர் வந்து நின்றார். இரண்டு சிறுவர்களின் “கழுத்தைப் பிடித்து” ஒரு தாய் தள்ளினார். அவர்கள் திமிறிக்கொண்டு நின்றார்கள். பிறகு பிடியிலிருந்து நழுவி தாய்க்குப் பின்னால் ஒளிந்து கொண்டு நெளிந்தார்கள். அவ்வளவு நேரமும் “அவங்கள் விழுவாங்கள்” என்று மரம்போல் நின்ற ஐயருக்கு “இது வேலைக்காவாது” என்று விளங்கியிருக்க வேண்டும். நகர்ந்து போய்விட்டார்.

அந்தச் சிறுவர்களைச் சந்திக்க வேண்டும். சிலநேரங்களில் அவர்களும் ஏதாவது வீர நிலத்தின் விழுதுகளாக இருக்கலாம். ஒரு பேட்டி எடுக்க வேண்டும்.

By

Read More

× Close