தமிழீழத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். எமது மக்களின் வாழ்விடங்கள் நகரம், கிராமம், குறிச்சி என வகைப்படுத்தப்படுகிறது. இவைகள் ஒன்றுக்கொன்று சமனான வளர்ச்சி அடைந்தவையும் அல்ல. சமுதாயத்தில் சமனாகக் கணிக்கப்படுபவையும் அல்ல. தமிழ் சமுதாயத்தின் சமூக வடிவம் பல முரண்பாடுகளைக் கொண்டது. சமூக வர்க்க வேறுபாடுகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய முரண்பாடுகளையும் கொண்டதாய் அமையப்பெற்றது. அப்படிப்பட்டதோர் நிலையிலேயே இன்றைய சமூக வாழ்வு இருக்கிறது.
தமிழீழத்தின் வளங்கள் பொதுவாக ஒன்றுதான். மனிதர்களும் ஒரே இனத்தோர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சமூக ஒடுக்குமுறை – பொருளாதார ஒடுக்குமுறை காரணமாக ஒரு பகுதி மக்கள் முன்னேற முடியாதபடி – தஙகள் வாழ்வு நிலைகளை உறுதிப்படுத்த முடியாமல் ஒதுக்கப்பட்டார்கள்.
இத்தகையை மக்கள் கல்வி வாய்ப்பை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்கி சமூகத்தின் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.
இப்படியாக ஒடுக்கப்பட்ட சமூக அந்தஸ்த்து குறைந்த மக்கள் வெளிப்படையாக சீரற்ற குடிசைகளையும், குடிநீர் போக்குவரத்து வசதியற்ற வாழ்விடத்தையும் கொண்டிருந்தனர். கந்தல் உடையுடனும் பரட்டைத் தலையுடனும் கல்வியறிவற்று இந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இன்று தமிழீழத்தின் ஒரு பகுதி மக்கள் இவ்வாறாக அல்லது இதில் சிறுது வித்தியாசத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் இந்த மக்கள்தான் இந்த மண்ணின் ஆணிவேராகப் பாய்ந்து நிற்கிறார்கள். இந்த மண்ணுடன் பிரிக்க முடியாமல் பிணைந்து நிற்கிறார்கள். எத்தகைய சூழலிலும் தங்கள் மண்ணை விட்டு ஓடாமல் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இந்த மண்ணின் பசளையாகவே இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.
இந்த மக்களின் பலத்தை, பலவீனத்தை, இவர்களின் நிலையை எமது இயக்கம் நீண்ட அரசியல் சமூக பொருளாதார ஆய்வுகளுக்கு ஊடாகவும் அனுபவங்களுக்கு ஊடாகவும் உணர்ந்துள்ளது.
இந்த மக்களின் அரசியல் சமூக பொருளாதார விடுதலை என்பதே எமது தேசத்தின் முழுமையான விடுதலை என்பதை ஏற்றுக்கொண்டு எமது இயக்கம் இதற்கான அரசியல் செயற்திட்டங்களை முன் வைக்கிறது. இப்படிப்பட்ட பல செயற்பாடுகளை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம். முதலாவதாக யாழ் நகரத்தை அண்டியுள்ள அரியாலைப் பகுதியில் இருக்கின்ற பூம்புகார் கிராமத்தில் எமது அரசியற் செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.
பூம்புகார் கிராமம் ஒரு புதைமணல் வீதியில் ஆரம்பித்து அவ்வீதியின் முடிவுடன் முடிகிறது. ஒரு புறத்தே கடலை எல்லையாகக் கொண்டு நிற்கும் அந்தக் கிராமத்தின் வளமாக கடலும், தென்னைகளும், பனைகளும் இருக்கின்றன. மற்றும்படி மணல் நிறைந்த பூமி. பெருமளவிலான மூலதனமற்ற கூலித் தொழிலாளர்களையும் சிறியளவிலான கடல்தொழிலாளர்களையும் கொண்டு அக்கிராமம் இருக்கின்றது.
பூம்புகார் கிராமத்தில் உள்ள பிள்ளைகளில் பலர் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. பாடசாலைக்குச் செல்பவர்களிலும் பெரும்பாலானவர்கள் பள்ளிப்படிப்பை இடைநடுவில் விட்டுவிடுவார்கள். இதற்குக் காரணம் – பாடசாலை, கிராமத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்தது. போக்குவரத்து வசதி இவர்களுக்கு முற்றாக இருக்கவில்லை. வைத்தியசாலை 8 மைல் தொலைவில் இருந்தது. இதற்கெல்லாம் மேலாக கிராமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையுள்ள 1 கி மீற்றர் நீளமான வீதி புதைமணலாக இருந்தது. இந்தப் புதை மணல் வீதியில் நடப்பதற்கு இந்தக் கிராமத்தவர்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.
மருத்துவ வசதிக்காக ஒரு முதலுதவிச் சிகிச்சை நிலையத்தையும் மேலதிக விலை கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும், மக்கள் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு மக்கள் கடையையும் எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். அவர்களின் பிரதான வேலைத்திட்டமாக வருங்கால சந்ததியின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பள்ளிக்கூடம் அமைப்பதையும் அங்கு வாழும் மக்களின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதையுமே வகுத்திருந்தனர்.
பூம்புகார் கிராமத்தவர்கள் பொதுவாக வறுமையில் வாடினார்கள். கடல் அருகில் இருந்தது. ஆனால் தொழில் செய்யக்கூடிய உபகரண வசதிகள் அவர்களிடம் இல்லை. அவற்றைப் பெறுவதற்குரிய பணவசதியும் இல்லை. வலை இன்றி மீன்பிடிக்க முடியாது. அதே மாதிரித்தான் மற்றத் தொழிலாளர்களும் நிரந்தரமற்ற கூலி வேலையையே செய்து வந்தனர்.
வேலையற்ற நாட்களெல்லாம் இவர்கள் எல்லோருமே பட்டினியால் வாழவேண்டி இருந்தது.
இந்தக் கிராமத்தைப் பார்த்ததுமே, இங்கு வாழும் அறியாமை இருளை நீக்க வேண்டும் என்றும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் எமது இயக்கம் முடிவெடுத்தது. இதற்காக செல்வி. மிதுலாவின் தலைமையில் விடுதலைப்புலிகள் மகளிர் அணியினரின் ஒரு குழு அங்கு முகாமிட்டது.
எமது மகளிர் அணியினர் அந்தக் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை கவனித்து நிவர்த்தி செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் உடனடியாக கிராமத்தின் மணல் வீதியை செப்பனிடத் தொடங்கினார்கள். பெருமளவு அந்தக் கிராமத்தவரின் பங்களிப்போடு அந்த வீதி மிக விரைவாக செப்பனிடப்பட்டது. இன்று சகல வாகனங்களும் வந்துசெல்லக்கூடிய வீதி ஒன்று அந்தக் கிராமத்தவர்களுக்கு உண்டு. அதே நேரம் மருத்துவ வசதிக்காக ஒரு முதலுதவிச் சிகிச்சை நிலையத்தையும் மேலதிக விலை கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும், மக்கள் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு மக்கள் கடையையும் எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். அவர்களின் பிரதான வேலைத்திட்டமாக வருங்கால சந்ததியின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பள்ளிக்கூடம் அமைப்பதையும் அங்கு வாழும் மக்களின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதையுமே வகுத்திருந்தனர்.
அந்த வகையில் இன்று 5ம் ஆண்டுவரையானதொரு பள்ளிக்கூடம் சிறந்த கட்டிட வசதிகளுடன் இங்கு எழுந்துள்ளது. இதனால் இக்கிராமத்து மாணவர்கள் தங்கள் கிராமத்திலேயே சிரமமின்றித் தொடர்ந்து கல்வியைக் கற்கும் வசதி ஏற்பட்டுள்ளது.
ஒரு கிராமத்தின் வாழ்க்கைத்தரம் உயருவதற்கு தொழில் வாய்ப்பு அவசியமானது. அந்த வகையில் அக்கிராமத்தின் மூல வளங்களை அடையாளங்கண்டு அதற்கேற்ற தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவது அவசியமானது.
பூம்புகார் கிராமத்தைப் பொறுத்தவரை அருகில் கடல் இருக்கிறது. கடல் தொழிலுக்குரிய வசதிகளைச் செய்துகொடுத்தால் இக்கிராமத்தின் ஒரு பகுதியினர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஆகவே இதற்குரிய முன்னேற்பாடுகளை எமது மகளிர் அணியினர் செய்து வருகின்றார்கள். இதே போன்று இங்கு தென்னைகள் நிறைய நிற்கின்றன. எனவே இங்கு ஓர் தும்புத் தொழிற்சாலையை எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். இத் தொழிற்சாலையில் ஆண்களும் பெண்களுமாக ஐம்பது பேர்வரை வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். இவற்றுடன் பெண்களுக்கென முப்பது பேருக்கு பன்ன வேலைப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கிராமத்தில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல கைத்தொழில்களை பயிற்றுவிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் கிராமம் தன் விடிவை நோக்கிய பாதையில் இப்போது நடக்கத்தொடங்கி உள்ளது.
இவ்வேலைத் திட்டத்தை நிர்வகிக்கும் செல்வி மிதுலா குறிப்பிடுகையில் பூம்புகார் கிராமத்தில் நாம் பல வேலைத் திட்டங்களைச் செய்துள்ளோம். ஆனால் இந்த வேலைத் திட்டங்களைச் செய்வதனால் அந்தக் கிராமத்தில் அவல நிலை மாறிவிட்டது என்றில்லை. உண்மையில் சொல்வதானால் இந்தக் கிராமம் முன்னேறுவதற்குரிய வேலைத் திட்டங்களை இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம். எங்கள் இலக்கு இன்னமும் தொலைவில்தான் இருக்கிறது. இனிமேல்தான் இந்தக் கிராம முன்னேற்றத் திட்டம் இடையூறுகளையும் சிரமங்களையும் சந்திக்கவேண்டிவரும். அதற்கு உள்ளாகவும் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இக்கிராம மக்களின் ஆர்வம், கடின உழைப்பு, முன்னேற வேண்டுமென்ற உறுதி அந்த நம்பிக்கையை எங்களுக்குத் தருகிறது என்றார்.