ரேவதி யோகலிங்கம்

By ஆதிரை

நம்மவர்களின் படைப்புகளில் பிழியப் பிழிய வலியும் வேதனையும் மட்டுமே வெளிப்படுகிறதென்றும் இலக்கிய நளினம் இருப்பதில்லை என்றும் விமர்சிப்பவர்கள் உண்டு.தாயகத்தில் நிகழ்ந்த போர்கள்,இடப்பெயர்வுகளை மையப்படுத்தி ஏராளமான படைப்புகள் வெளிவந்துவிட்டன.

சிறையின் மூத்திர நெடியையும் சித்திரவதையின் உச்சத்தில் எதிராளியின் முகத்தில் வழியும் வலியை காமத்தில் உச்சத்தைத் தொட்டது போல் அனுபவிக்கும் விசாரணையாளனின் கொடூரத்தையும் விட வலிக்கிறது “திருப்பியெல்லாம் அடிக்க மாட்டாயா புலியே…” எனும் வார்த்தை. வலிமையற்றதிடம் காட்டவென்று எல்லா உயிரினத்திடமும் கொஞ்சம் வன்முறை இருக்கத் தான் செய்கிறது.

ஆதிரை நாவல் 1977 ல் மலையகத்தில் நிகழ்ந்த இனக்கலவரம் அதன் பின் தனிக்கல்லடி அங்கிருந்து பேச்சி தோட்டம் அடுத்து முள்ளிவாய்க்கால் என மூன்று பயணங்களையும் அதற்குள் நிகழ்ந்த மூன்று காதல்களையும் யுத்தத்தின் பின் மீண்டெழ எத்தனிப்பதையும் உயிர்ப்புடன் தாய்மை வழியாக வெளிப்படுத்தி இருக்கிறது.
போராட்டத்தையும் அரசியலையும் பின்னிறுத்தி இழப்புகளுக்குள்ளும் வாழும் ஆசையைப் பற்றிக் கொண்டு வாழ்க்கையைச் செலுத்தும் சமூகத்தை விபரிக்கும் ஒரு காவியம் ஆதிரை.

நாவலில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் நம்மோடு (வன்னியிலிருப்பவர்கள்) தொடர்புபட்டவையாதலால் மறுபடியும் வாழ்ந்து பார்த்த அனுபவம் வாசிக்கும் போது கிடைக்கிறது. மூளையைத் தவிர்த்து விட்டு இதயத்திலிருந்து வெளிப்பட்டிருக்கிறது ஆதிரை.

“முகத்த போகஸ் பண்ணி அப்பிடியே கண்ணீரோட ரெண்டு கண்ணயும் ஜும் பண்ணு” காணமல் போன தன் மகளைத் தேடும் தாயின் கண்ணீரை குதூகலத்துடன் காட்டும் அயல் நாட்டு தொலைக்காட்சி.
ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் ஆதிரை.

ஆசிரியருக்கு நன்றிகள்.

“கிட்ட வரட்டும் திட்டமிருக்கு” என அத்தார் எங்கேயாவது சொல்லுவார் என எதிர் பார்த்தேன். அந்தக் காலத்தில் அதுவொரு பிரபலமான வார்த்தையாக எல்லோராலும் பேசப்பட்டது,

 

Last modified: January 13, 2016

Comments are closed.

No comments yet.

× Close