சுரேகா பரம்

“பல காலத்தைச் சேர்ந்த பலவிதமான நீரோட்டங்களில் சங்கமமான வாழ்க்கைக்கடல்”
ஆம் அப்படித்தான் சயந்தன் அண்ணாவின் ஆதிரையும்.

எம் கண்ணீர்த்தேசத்தின் கண்ணாடி இது.

போராட்டக்களப்பாத்திரச்சித்திரிப்புக்களின் வாயிலாக அதன் அதிர்வுகளும், முனகல்களும் ,சிதைவுகளும், சித்ரவதைகளும் , பேரவலங்களும்
ஐதார்த்தம் பிசகாமல் விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் பணிந்து போகாமல் இயல்பான மென்னுணர்வுகளுடன் இரத்தமும் சதையுமாகப் பேசப்பட்டுள்ளது.

நாவல் ஒன்றின் நகர்விற்குப் பங்கம் விளைவிக்காமல் பயணிக்கச்செய்த ஆசிரியரின் மொழி விளையாட்டு வியக்காமல் இருக்கத்தக்கதல்ல. …

மொழியின் வீச்சு வாசகர்களை நாவலுக்குள் மட்டும் விழுத்திவிடாமல் ஈழத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் ஊடுருவி அலைந்துலையச் செய்யும் வல்லமையுடன் தீட்டப்பட்டுள்ளது.

நாவலில் வரும் மாந்தர்களின் ஏக்கங்கள் தவிப்புக்கள்,ஆற்றாமைகள் ,நிராசைகள், இழப்புக்கள் , தத்தளிப்புக்கள் என்பன எம்மைக்கடந்த கால வாழ்க்கைக்குள் இலகுவாக நுழைத்துச்செல்லும் பெருவெளிகள் என்றே நான் கருதுகிறேன்.

ஏனென்றால் ஆதிரை என்ற பாத்திரம் வரவேணுமே எங்கே? எங்கே? என்று மனம் அவாவும் ஓர் வெறியுடன் நாவலை வாசித்துக்கொண்டு சென்ற போதும்
பல இடங்களில் என்னால் நாவலை நகர்த்திச் செல்லமுடியாமல் ஏதேதோ இனம்புரியாத உணர்வுகள்,சொந்த வாழ்க்கை தந்த கடந்த கால அனுபவங்கள் எனக்குள்……………………………

அது தான் இந்த நாவலின் தனித்துவமே….

நாவலில் வரும் “சொந்த அண்ணனையே நம்ப முடியாமல் ஆக்கிப் போட்டு இந்த நாசமாப் போன சண்டை ”
என்பது போன்ற பல சிணுங்கல்களுடனும், கொதிப்புக்களுடனும், இனமத வேறுபாடு இன்றிய மனித உடல்களின் சிதறல்களுடனும், வலிமை மிகு சாம்ராஜ்யங்களின் சிதைவுகளுடனும் , ஆசைக் கனவுகளின் கலைவுகளுடனும் மலர்ந்திருக்கும் இன்றைய தேசத்தில் இது போன்ற படைப்புகள் வரவேற்புக்குரியனவே…

எம் எதிர்கால சந்ததியினர் நாம் கடந்திருக்கும் கரடுமுரடான பாதையை ஒரு கணமேனும் சிந்திக்க ஆதிரை சிறந்த வரலாற்று ஆவணமாக அமையும் என நம்புகிறேன். …..

அனைத்துத் தமிழ் பேசும் மக்களினதும் ஒட்டு மொத்த வாழ்க்கைச்சித்திரம்.