சுதாகர் சாய்

ஆதிரை, சயந்தனின் இரண்டாவது நாவல். சிங்கமலை லெட்சுமணனின் நினைவுகளாக விரியும் ஆதிரை, ஈழத்தின் முப்பது ஆண்டுகால யுத்தப் பின்னணியியில் நிகழும் பெரும் கதை. தூக்கத்திலும் துயரத்தை இதயத்தில் சுமத்து செல்லும் மனிதர்களை குறித்த களப் பதிவு. ஆதிரை வலியின் உச்சம்.

மனிதர்கள்,மரங்கள்,பறைவைகள்,விலங்குகள், விவசாயம், தெய்வங்கள், வழிபாடு,வேட்டை முறைகள், உணவு வகைகள், வாகனங்கள், யுத்தகருவிகள்,போர்முறைகள்,பதுங்கு குழிகள்,பாட சாலைகள் என அனைத்தையும் துல்லியமாக பதிவாக்கியிருப்பது நாவலின் சிறப்பு.

தனிக்கல்லடி,ஓதியமலை, காட்டுப்புலவு,மணலாறு, மந்துக்காடு,கட்டையடி,மல்லிகாபுரம், பிரமந்தனாறு,வாகையடி,வீரசோலை,ஏறாவூர், அன்புவழிபுரம் என ஈழத்தின் குக்கிராமங்களில் நிகழ்ந்த யுத்தத்தில்,கொலையுண்ட, புதையுண்ட,அடித்து விரட்டப்பட்டு அலைக்களிக்கப்பட்ட மனிதர்களின் அறியப்படாத வரலாற்றை விளக்கும் புதினம்.

0 0 0

ஒரு மல்லிகைப்பூக் கூடை நம்மை கடந்து செல்லும் போதோ அல்லது நாம் ஒரு பன்னீர் பூ மரத்தை கடக்கும் பொழுதோ அவற்றின் மணம் இயல்பாக நம்மை கிளர்ச்சியுர செய்வது போன்றது ஆதிரையில் சயந்தனின் மொழி அழகு.

சயந்தன் பயன்படுத்தும் உவமைகள் வெகு இயல்பானவை. வலிந்து கொண்டு எழுதப்பட்டவை அல்ல. கதையின் போக்கை தாண்டி துருத்திக்கொண்டு இருப்பவையும் அல்ல. எளிமையும் அதே நேரத்தில் வளமையும் மிக்க மொழி அவருடையது. போகிற போக்கில் அவர் அற்புதமான உவமைகளை தூவிவிட்டு செல்கிறார்.

.”மழைத்துளி வடியா சிறு காட்டுப் பூவைப்போல தன் கைகளில் புரளும் குழந்தையை ஆசையோடும்,ஏக்கத்தோடும் அவள் பார்த்தாள்.”

“ஒரு கொடிய மிருகத்தின் நகம் போல குளிர் அவர்களைத் தீண்டியது.”

.”வறுமை வேலியின் ஓரங்களை செல்லரித்துக்கொண்டு உள் நுழைந்திருந்தது.”