எழுதாமல் விட்டு மூண்டுமாசம் ஆகவில்லைத்தான் எண்டாலும், மெல்பேணில இருந்து வசந்தன் ‘எழுதும், எழுதும் இல்லாட்டி தூக்கிப் போடுவாங்கள்’ எண்டு பயப்பிடுத்திக் கொண்டிருந்தார். சரி.. நானும் தான் எழுதி நாளாச்சு எண்டதாலை இந்தப் பதிவு! எழுதிக் கொண்டு போகேக்கையே விளங்கிட்டுது. உது பெரிசா நீளும் எண்டு. அதுதான் தொடராக்கிப் போட்டன். ஏற்கனவே பல தொடர்கள் தொடங்கி இடையில நிப்பாட்டியிருந்தாலும் விக்கிரமாதித்தன் மாதிரி திரும்பவும் தொடங்கியிருக்கிறன். பாப்பம் எதுவரைக்கும் போகுது எண்டு!
முக்கிய குறிப்பு:- இக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் எல்லாம் கற்பனையே!!! ஹி ஹி ஹி
‘டேய்.. உந்த எழுத்துக்களுக்குப் பின்னாலை ஏதாவது வாள், கேடயம் எண்டு ஏதாவதைப் போட்டால் இன்னும் நல்லாயிருக்குமடா..’ எண்டு பக்கத்தில இருந்த மதன் சொன்னான். நாளைக்கே அந்த டிசைனை ஆரும் நல்லாயிருக்கு எண்டு சொல்லேக்கை தன்ரை பேரும் அதில இருக்க வேணும் எண்ட விருப்பம் அவனுக்கு.
‘ச்சீ.. வாளை விட துவக்குப் படம் போட்டால் இன்னும் நல்லாயிருக்கும்’ எண்டவன்ரை பேர் சரியாத் தெரியேல்லை. ஆனா அதைப்பற்றி ஒருத்தரும் கணக்கெடுக்காததை வைச்சுப்பாத்தால் ஒருத்தருக்கும் பிரச்சனைக்குள்ளை மாட்டுப்பட விருப்பம் இல்லையெண்டு விளங்கிச்சுது.
‘உஷ்.. பிள்ளையள்.. இப்ப ட்ராமா பற்றிக் கதைப்பம்’ எண்டு வாணி இடையில புகுந்தாள்.