வசந்தன் பின்னூட்டமொன்றில் சொன்னது போலவே, தமிழ் வலைப்பதிவுலகம் சிவாஜி நோயால் பாதிக்கப் பட்டுத் தான் இருக்கிறது. சிவாஜி என்ற சொல் அற்ற தமிழ்மண முகப்புப் படத்தை படம் பிடித்து தருபவருக்கு பரிசு அறிவிக்கலாம் என்ற அளவிற்கு இருக்கிறது நிலைமை. புத்தக மீமி, திரைப்பட மீமீ போன்ற சங்கிலித் தொடர் பதிவுகள் போல, அடுத்து நான் சிவாஜி பற்றி எழுத அழைக்கும் ஐந்து நபர்கள் இவர்கள் என்பது போன்ற தோற்றத்தில் சுற்று நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
சிவாஜி திரைப்படம் குறித்து விமர்சனங்கள், பார்வைகள் என்ற பதிவுகளினூடே சிவாஜி திரைப்படத்தினை புறக்கணிப்பதற்கான அழைப்புக்களும் பதிவுகளாக வந்து கொண்டிருந்தன. இவ்வாறான ஒரு புறக்கணிப்பிற்கான அழைப்புக்களிற் சில, வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை நோக்கியும் எழுப்பப் பட்டிருந்தன.
சகல புறக்கணிப்புக் கோருகைகளிலும் ரஜினியின் முன்னாள் தமிழர் விரோதப் போக்கு, அவர் தமிழகத்தில் உழைத்து கர்நாடகத்தில் முதலிடல் போன்ற, சகல தமிழருக்கும் பொதுவான விடயங்களைத் தாண்டி முழுமையாக ஈழத்தமிழர்களை நோக்கியதான சில காரணங்கள் மேலதிகமாகச் சொல்லப் பட்டிருந்தன. அவற்றில் ஒரு சில மீதான எனது கேள்விகளை சொல்வதற்கு முன்னர் அவை யாவையென பார்க்கலாம்.
1. ரஜினி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லையென்பதாலும் அவர் ஈழத் தமிழருக்கு உதவிகள் செய்வதில்லையென்பதாலும் சிவாஜி புறக்கணிக்கப் பட வேண்டியது.
2. ரஜினியின் சிவாஜி திரைப்படத்திற்கு கொடுக்கும் பணத்தினை ஈழ விடுதலைப் போருக்கு அளித்தால் அது இன்னும் பல புதிய உள்நுழைவுகளை களத்திற்கு கொண்டு வரும்.
முதலில் ரஜினி எமக்கு உதவவில்லையென்பதை ஒரு தெளிவான பார்வையாக என்னால் நோக்க முடியவில்லை. ரஜினி ஏன் எமக்கு உதவ வேண்டும்? ரஜினி போலவே இன்னும் நிறைய தொழிலதிபர்கள் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஒருவர் நிறைய பணம் சம்பாதித்தாரெனின் அவரிடம் இருந்து எமக்கும் தாவென எதிர்பார்ப்பது எந்த வகையான மனநிலையென எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் ரசிகர்களான எங்களிமிருந்து தான் பணம் பெறுகிறார் எங்களில்த் தான் தங்கியுள்ளார் என்பது மறு வளத்துப் பதிலானால் நடிப்பு என்பது ஒரு தொழிலெனக் கருதுவதனூடாக எமது பணத்திற்கான தனது தொழிலை அவர் செய்கிறார் என்று தானே அர்த்தம்.
எவராவது ஒருவர் எமக்கு ஆதரவாகப் பேசுவாரா என ஏங்கி எதிர்பார்க்குமளவிற்கும் யாராவது ஒருவர் எமக்கு உதவி செய்வாரா என இரந்து கெஞ்சும் நிலைக்கும் ஈழத் தமிழர்கள் போய்விட்டார்களா என்ன..?
இரண்டாவது காரணம் அர்த்தம் பொதிந்தது தான். தற்போதைய நெருக்கடிச் சூழ் நிலையில் இவ்வாறு வெளிச் செல்லும் பணம் ஒன்றிணைக்கப் பட்டால் அது ஈழத்தில் வாழும் மக்கள் சார்ந்த தேவைகளுக்கும், அல்லது போராட்டத் தேவைகளுக்கும் குறிப்பிடத் தக்கவொரு பெறுமதியாகவே இருக்கும்.
ஆனால் இந்த நோக்கத்திற்காக அமைந்த கோரிக்கையெனில் அது ஒட்டு மொத்த தமிழக சினிமாவையும் புறக்கணிக்கச் சொல்லுவதாகவே அமைந்திருக்க வேண்டும். விஜய் படங்களுக்கும், சீமான் படங்களுக்கும், திரிசா படங்களுக்கும் சனம் அள்ளிக் கொடுத்த போது எங்கள் பணம் வெளிச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டிய இத்தகைய கோரிக்கைகள், இப்போது ரஜினிக்கு மட்டும் வெளிவருவதன் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒருவேளை விஜய் நம்ம ஊரு மருமகன் என்பதனாலும், சீமான் நமக்கு ஆதரவானவர் என்பதாலும் அவற்றைப் புறக்கணியாது பார்ப்பதற்கான நியாயப் பாடுகள் இருக்கக் கூடும் :)) சீமானின் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படம், தம்பி பிரபாகரனின் வாழ்க்கைத் திரைப்படம் என்ற மாயை ஒன்று தோற்றுவிக்கப் பட்டு பரவலாக வெளிநாடுகளில் ஓடியது என்பது இதன் காரணமாயும் இருக்கலாம். (நமக்கு ஆதரவானவர்களின் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று யாராவது சொல்லும் போது எனக்கு மடித்துக் கட்டிய வேட்டியுடன் வீராசாமி தான் வந்து பயமுறுத்துகிறார். என்ன கொடுமை சாமி இது.. )
இவையெல்லாம் தவிர தமிழகத் திரைப் படங்கள் ஈழத் தமிழர்களினால்த்தான் இலாபம் சம்பாதிக்கின்றது என்ற பெரும் பனிக் கட்டியொன்றையும் நம்மில் சிலர் சுமக்கின்றார்கள். இது குறித்தும் நான் மேற்சொன்ன எனது கேள்விகள் தொடர்பாகவும் பதிவர் ரவிசங்கருடனான உரையாடல் ஒன்றை இங்கே கேளுங்கள்.
இவையெல்லாவற்றையும் விட நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கலாம். ஆனால் என்ன.. சகல படங்களுமே புறக்கணிக்கப் பட்டுப் போகும். 🙁