ரஜினியைப் புறக்கணியுங்கள் – சில கேள்விகள்

வசந்தன் பின்னூட்டமொன்றில் சொன்னது போலவே, தமிழ் வலைப்பதிவுலகம் சிவாஜி நோயால் பாதிக்கப் பட்டுத் தான் இருக்கிறது. சிவாஜி என்ற சொல் அற்ற தமிழ்மண முகப்புப் படத்தை படம் பிடித்து தருபவருக்கு பரிசு அறிவிக்கலாம் என்ற அளவிற்கு இருக்கிறது நிலைமை. புத்தக மீமி, திரைப்பட மீமீ போன்ற சங்கிலித் தொடர் பதிவுகள் போல, அடுத்து நான் சிவாஜி பற்றி எழுத அழைக்கும் ஐந்து நபர்கள் இவர்கள் என்பது போன்ற தோற்றத்தில் சுற்று நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

சிவாஜி திரைப்படம் குறித்து விமர்சனங்கள், பார்வைகள் என்ற பதிவுகளினூடே சிவாஜி திரைப்படத்தினை புறக்கணிப்பதற்கான அழைப்புக்களும் பதிவுகளாக வந்து கொண்டிருந்தன. இவ்வாறான ஒரு புறக்கணிப்பிற்கான அழைப்புக்களிற் சில, வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை நோக்கியும் எழுப்பப் பட்டிருந்தன.

சகல புறக்கணிப்புக் கோருகைகளிலும் ரஜினியின் முன்னாள் தமிழர் விரோதப் போக்கு, அவர் தமிழகத்தில் உழைத்து கர்நாடகத்தில் முதலிடல் போன்ற, சகல தமிழருக்கும் பொதுவான விடயங்களைத் தாண்டி முழுமையாக ஈழத்தமிழர்களை நோக்கியதான சில காரணங்கள் மேலதிகமாகச் சொல்லப் பட்டிருந்தன. அவற்றில் ஒரு சில மீதான எனது கேள்விகளை சொல்வதற்கு முன்னர் அவை யாவையென பார்க்கலாம்.

1. ரஜினி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லையென்பதாலும் அவர் ஈழத் தமிழருக்கு உதவிகள் செய்வதில்லையென்பதாலும் சிவாஜி புறக்கணிக்கப் பட வேண்டியது.

2. ரஜினியின் சிவாஜி திரைப்படத்திற்கு கொடுக்கும் பணத்தினை ஈழ விடுதலைப் போருக்கு அளித்தால் அது இன்னும் பல புதிய உள்நுழைவுகளை களத்திற்கு கொண்டு வரும்.

முதலில் ரஜினி எமக்கு உதவவில்லையென்பதை ஒரு தெளிவான பார்வையாக என்னால் நோக்க முடியவில்லை. ரஜினி ஏன் எமக்கு உதவ வேண்டும்? ரஜினி போலவே இன்னும் நிறைய தொழிலதிபர்கள் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஒருவர் நிறைய பணம் சம்பாதித்தாரெனின் அவரிடம் இருந்து எமக்கும் தாவென எதிர்பார்ப்பது எந்த வகையான மனநிலையென எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் ரசிகர்களான எங்களிமிருந்து தான் பணம் பெறுகிறார் எங்களில்த் தான் தங்கியுள்ளார் என்பது மறு வளத்துப் பதிலானால் நடிப்பு என்பது ஒரு தொழிலெனக் கருதுவதனூடாக எமது பணத்திற்கான தனது தொழிலை அவர் செய்கிறார் என்று தானே அர்த்தம்.

எவராவது ஒருவர் எமக்கு ஆதரவாகப் பேசுவாரா என ஏங்கி எதிர்பார்க்குமளவிற்கும் யாராவது ஒருவர் எமக்கு உதவி செய்வாரா என இரந்து கெஞ்சும் நிலைக்கும் ஈழத் தமிழர்கள் போய்விட்டார்களா என்ன..?

இரண்டாவது காரணம் அர்த்தம் பொதிந்தது தான். தற்போதைய நெருக்கடிச் சூழ் நிலையில் இவ்வாறு வெளிச் செல்லும் பணம் ஒன்றிணைக்கப் பட்டால் அது ஈழத்தில் வாழும் மக்கள் சார்ந்த தேவைகளுக்கும், அல்லது போராட்டத் தேவைகளுக்கும் குறிப்பிடத் தக்கவொரு பெறுமதியாகவே இருக்கும்.

ஆனால் இந்த நோக்கத்திற்காக அமைந்த கோரிக்கையெனில் அது ஒட்டு மொத்த தமிழக சினிமாவையும் புறக்கணிக்கச் சொல்லுவதாகவே அமைந்திருக்க வேண்டும். விஜய் படங்களுக்கும், சீமான் படங்களுக்கும், திரிசா படங்களுக்கும் சனம் அள்ளிக் கொடுத்த போது எங்கள் பணம் வெளிச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டிய இத்தகைய கோரிக்கைகள், இப்போது ரஜினிக்கு மட்டும் வெளிவருவதன் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவேளை விஜய் நம்ம ஊரு மருமகன் என்பதனாலும், சீமான் நமக்கு ஆதரவானவர் என்பதாலும் அவற்றைப் புறக்கணியாது பார்ப்பதற்கான நியாயப் பாடுகள் இருக்கக் கூடும் :)) சீமானின் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படம், தம்பி பிரபாகரனின் வாழ்க்கைத் திரைப்படம் என்ற மாயை ஒன்று தோற்றுவிக்கப் பட்டு பரவலாக வெளிநாடுகளில் ஓடியது என்பது இதன் காரணமாயும் இருக்கலாம். (நமக்கு ஆதரவானவர்களின் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று யாராவது சொல்லும் போது எனக்கு மடித்துக் கட்டிய வேட்டியுடன் வீராசாமி தான் வந்து பயமுறுத்துகிறார். என்ன கொடுமை சாமி இது.. )

இவையெல்லாம் தவிர தமிழகத் திரைப் படங்கள் ஈழத் தமிழர்களினால்த்தான் இலாபம் சம்பாதிக்கின்றது என்ற பெரும் பனிக் கட்டியொன்றையும் நம்மில் சிலர் சுமக்கின்றார்கள். இது குறித்தும் நான் மேற்சொன்ன எனது கேள்விகள் தொடர்பாகவும் பதிவர் ரவிசங்கருடனான உரையாடல் ஒன்றை இங்கே கேளுங்கள்.

இவையெல்லாவற்றையும் விட நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கலாம். ஆனால் என்ன.. சகல படங்களுமே புறக்கணிக்கப் பட்டுப் போகும். 🙁



25 Comments

  1. //இவையெல்லாவற்றையும் விட நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கலாம். ஆனால் என்ன.. சகல படங்களுமே புறக்கணிக்கப் பட்டுப் போகும். 🙁
    //

    🙂
    உண்மையோ உண்மை!

  2. //இவையெல்லாவற்றையும் விட நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கலாம். ஆனால் என்ன.. சகல படங்களுமே புறக்கணிக்கப் பட்டுப் போகும். 🙁
    //

    🙂
    உண்மையோ உண்மை!

  3. ரஜினி ஈழத்தைப் பற்றி பேசவேண்டிய அவசியம் இப்போது அவருக்கு இல்லை. விஜயகாந்த் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசுகிறார் என்பதற்காக அவருடைய படத்தை பார்க்கப்போகிறார்களா? ரஜினியும், விஜயகாந்தும் கடைந்தெடுத்த அரசியல்வாதிகளாகி பலநாட்களாகிறது. இவர்கள் ஆதரவு ஈழத்திற்கு தேவையற்ற ஒன்று. சொல்லப்போனால் தமிழகத்தின் ஆதரவே தேவையில்லை தான். ஈழமக்களின் பலகீனத்தை பயன்படுத்தும் போக்கில் தான் சீமானும் படம் எடுக்கிறாரே ஒழிய, அவர் ஒரு இரண்டாம் தர சினிமாக்காரர்தான் என்பதற்கு அவர் படமே சான்று.(ஓவர் டோஸ் தம்பி படத்தை பார்த்த கொடுமையை என்னவென்று சொல்லுவது)

  4. ரஜினி ஈழத்தைப் பற்றி பேசவேண்டிய அவசியம் இப்போது அவருக்கு இல்லை. விஜயகாந்த் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசுகிறார் என்பதற்காக அவருடைய படத்தை பார்க்கப்போகிறார்களா? ரஜினியும், விஜயகாந்தும் கடைந்தெடுத்த அரசியல்வாதிகளாகி பலநாட்களாகிறது. இவர்கள் ஆதரவு ஈழத்திற்கு தேவையற்ற ஒன்று. சொல்லப்போனால் தமிழகத்தின் ஆதரவே தேவையில்லை தான். ஈழமக்களின் பலகீனத்தை பயன்படுத்தும் போக்கில் தான் சீமானும் படம் எடுக்கிறாரே ஒழிய, அவர் ஒரு இரண்டாம் தர சினிமாக்காரர்தான் என்பதற்கு அவர் படமே சான்று.(ஓவர் டோஸ் தம்பி படத்தை பார்த்த கொடுமையை என்னவென்று சொல்லுவது)

  5. வணக்கம்,
    உங்களுடை கருத்து தவறானது என்பது எனது தாழ்மையான எண்ணம், ரஜினியை புறக்கணியுங்கள் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல என்பதையும் அதை கருத்தியல் நிலையில் ஆழமாக சிந்திக்க வேண்டுமாய் கேட்டு விளக்கமான பின்னூட்டத்தை நாளை தருகிறேன்.

    பாரி.அரசு
    பட்டுக்கோட்டை

  6. கன்னட வெறியன் இரசினியை புறக்கணிக்க வேண்டும் என்று எத்தனை முறை சொன்னாலும் தமிழ் எறுமை தோலின் மீது அது ஏறுவதே இலலை என்பது மிகவும் வருத்தமான செய்தி.

  7. //இவையெல்லாவற்றையும் விட நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கலாம். ஆனால் என்ன.. சகல படங்களுமே புறக்கணிக்கப் பட்டுப் போகும். :(//

    உங்கள் பதிவில் அவ்வளவாக உடன்பாடு இல்லையென்றாலும் இந்த வரிகளை நிரம்பவும் ரசித்தேன்.

    ரஜினி பாட்டுக்கு ஒரு நடிகனாக நடித்து விட்டுப் போனால் பிரச்சினை இல்லை. சமூக அக்கறை கொண்டவர் போல வேடம் தரித்து சமூகப் பிரச்சினைகளை கேணைத்தனமாக மேடைகளிலோ அல்லது அறிக்கைகளிலோ பேசுவதால் தான் அவரிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

  8. இந்த பட்டியலில் ரஜினி மட்டுமல்ல.. நீண்ட வரிசை உண்டு!

  9. //விஜயகாந்த் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசுகிறார் என்பதற்காக அவருடைய படத்தை பார்க்கப்போகிறார்களா? //

    விஜயகாந்த் ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஆதரவான காட்சிகளை வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டே அவரது பாடாவதியான சபரி படத்தை திரையரங்கில் பார்த்தேன்.

  10. பாரி அரசு / இந்த எதிர்ப்பானது பொருளியல் எதிர்ப்பல்ல கருத்தியல் எதிர்ப்பானது என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். தவிர இது பொருளியல் எதிர்ப்பாவதற்கான வாய்ப்பில்லையென்பதுடன் அவ்வாறிருப்பினும் ரஜினிக்கு எந்த வித பொருள் இழப்பும் (சங்கருக்கோ ஏவி எம்முக்கோ) ஏற்படப் போவதுமில்லை. ஆகவே இது ஒரு செய்தியைச் சொல்லும் எதிர்ப்புத் தான்.

    இங்கே இந்த எதிர்ப்புக்காக ஈழத்தமிழர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட காரணங்கள் சில மீதான கேள்விகளையே எழுப்பியிருக்கிறேன். அதாவது ஈழத்தமிழர்களின் பணம் வெளிச் செல்லுகிறதெனில் அது ஏன் ரஜினி படத்திற்கு மட்டும் வெளிச் செல்கிறது எனச் சொல்ல வேண்டும். மற்றைய திரைப்படங்கள் மீதான பார்வை என்ன..? அத் திரைப்படங்களூடாக பணம் வெளிச் செல்வது குறித்த கருத்து என்ன..?

    ஏலவே சொன்னது போல ரஜினியின் தமிழ் / தமிழர் விரோதப் போக்குப் போன்றவற்றிற்கான தமிழர் தரப்பு எதிர்ப்புக்கள் காட்டப்பட வேண்டியவையே..

    லக்கிலுக்… வீராசாமி பார்த்து விட்டீர்களா.. ?

  11. தமிழ்பொண்ணுங்களுக்காக கோயில் கோயிலாக அலையும் போது விவேக் ஒரு இடத்தில் சொல்கிறார்.. இங்கே இப்போ தமிழ் பொண்ணுங்க எல்லாம் கெடயாது.. இன்னும் இரண்டு கோயில் பார்ப்போம். கிடைக்கலைன்னா நேரா யாழ்ப்பாணம் போயிட வேண்டியது தான். :((

  12. /சமூக அக்கறை கொண்டவர் போல வேடம் தரித்து சமூகப் பிரச்சினைகளை கேணைத்தனமாக மேடைகளிலோ அல்லது அறிக்கைகளிலோ பேசுவதால் தான் அவரிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

    /இந்த பட்டியலில் ரஜினி மட்டுமல்ல.. நீண்ட வரிசை உண்டு

    Sorry.. no connection between these two comments!

  13. எம்மூவி ச்சூஸ்தார்க்கும் தெளிவுண்டாம் தெளிவில்லை சிவ்வாஜ்ஜி பார்த்த மகர்க்கு.

    அடக்கம் அண்டிராயரை காக்கும் ஆடம்பரம்
    அருணா சவத்தையே கவுக்கும்.

    தொட்டணைத் தூறும் மணற்கேணி ராவ்காருக்கு

    திட்டணைத் தூறும் வசூல்

  14. சினிமா என்பது ஒரு அற்புத சாதனம் அதை நாம் புறக்கனித்து விடமுடியாது, ஆனால் நல்ல சினிமாவை ஆதரித்து கெட்ட சினிமாவை புறக்கனிக்க ஒரு கருத்தியல் மாற்றத்தை உருவாக்க முடியும், அதர்க்கு முதல் அதற்க்கான மாற்றுதிட்டத்தை முன் வைக்க வேண்டும்.அதற்க்கான மாற்று வரும்வரை மாற்றம் வரும் என்று எதிர்பார்க முடியாது.

  15. ரஜனி நல்ல நடிகன்.என்பதை ஆறிலிருந்து அறுபது வரை முள்ளும் மலரும் மற்றும் சில படங்களை பார்த்தவர்கள் நிச்சயம் மறுக்கமாட்டார்கள். தமிழ் நாட்டு அரசியல் சினிமா என்ற சாதனத்துடன் பின்னி பிணைந்திருக்கிறது.. திமுகவும் எம்ஜிஆரும் கூட சினிமா சாதனத்துடன் சமாந்திரமாக வளர்ந்தவர்கள் தான் . இந்த தமிழ் சினிமா சிவாஜி எம்ஜிஆரை வெளியேற்றத்தின் பின் நல்ல படத்தை கொடுத்திருக்கிறது. இந்த மாற்றத்தை விரும்பாத அதிகார வர்க்க நிறுவனமயப்பட்ட பணக்கார பார்ப்பானிய பின்புலம் தாங்களே அப்படி போலி படங்கள் எடுத்து அந்த நீரோட்டத்தில் கலப்பது மாதிரி கலந்து அந்த திசை போக்கை கச்சிதமாக அழித்து விட்டார்கள். உதாராணமாக சொல்லப்போனால் ஏழாவது மனிதனின் வெற்றியை சகிக்காத
    ஏவிஎம் போன்ற நிறுவனங்கள் சிவப்புமல்லி போன்ற படங்கள் எடுத்ததை கூறலாம். ரஜனி தனிபர் வளருவதன் மூலம் வளர்ப்பதன் மூலம் இந்த குருட்டு சிந்தனையை வளர்ப்பதன் மூலம் தங்கள் இருப்பை காப்பற்றி கொள்ள கூடியதாய் இருக்கிறது. ரஜனி என்ற நபர் தமிழ் நாட்டு மக்களின் சிந்தனை போக்கில் பெரும் வகிக்கிறார். இந்த ரஜனி இவர் சார்ந்த பின்புல நிறுவனங்கள் நிச்சயம் சராசரி தமிழர் சார்ந்த நலனங்களுக்கு எதிராகவே இருக்கும். வெளிநாட்டில் திரைபடம் மற்றய நடிகர்களை விட கமல் ரஜனி படங்கள் அதிக விற்பனை இடைவெளி இருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் அமெரிக்கா தவிர்த்து போட்டு பார்த்தால் தமிழ் நாட்டு தமிழர்கள் சிறுபான்மையினரே. மலேசியா சிங்கப்பூர் இலங்கை தென்னாடெங்கும் என்று கூவித்த தமிழ் சினிமா உலகநாடுகள் கூவி புதிய எதிர்பாராத இலாபம் கண்டு ஹிந்தி படங்கள் மாதிரி துணிச்சலாக பெரிய பட பட்ஜட்க்கள் எடுக்க துணிய வைத்து விட்டன. இந்த இதர இலாபத்தின் முக்கியத்துவத்தை டைரக்டர் ரவிக்குமார்,சரண்,தொழிலதிபர் பொள்ளாச்சி மாகலிங்கம் போன்றோரை ஒத்து கொண்டுள்ளனர். மற்ற எல்லா திரை படங்களை விட ரஜனியின் வியாபர படங்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும் என்ற கோசம் நியாயமானது. ஆனால் அது வெற்றியளிக்காது. தமிழ்நாட்டில் புறக்கணிப்பு செய்யாமால் புலத்தில் தனித்து இந்த புறக்கணிப்பு பிரசாரம் வெற்றியடையாது.

  16. பிரமாதமாக இருந்தது சயந்தன். சமூகப்பிரச்சனைகளுக்கு நடிகனிடம் தீர்வு எதிர்பார்ப்பது எந்தவகையிலும் நியாயம் இல்லாத செயல். பெரும்பாலான ரஜினி எதிர்ப்பில் ஒரு ஆண்டி பேம்’ புகழ் நோக்கம் இருப்பதாகத்தான் படுகிறது.

  17. யாரோ ஒருவர் சிவாஜி படத்திற்கான தரவிறக்கும் லிங் அனுப்பியிருந்தார். முதலாவது சிடியை தரவிறக்கி பார்த்தேன்.. தியேட்டரில் இருந்து கமெராவினால் சுட்டது என்றாலும் ஸ்கீரீனை நோக்கி கமெராவை வைத்திருக்கக் கூடாதா.. தியேட்டரின் கூரை தான் தெரிகிறது. சத்தம் மட்டும் தெளிவாக வருகிறது.
    நல்ல லிங் இருந்தா தாங்கப்பா..

  18. // தமிழ் எறுமை தோலின் மீது அது ஏறுவதே இலலை என்பது மிகவும் வருத்தமான செய்தி.//
    இந்த கேப்ல நீங்க கேம் ஆடிட்டிங்க சுகுமாரன் ஆமாம் இது தமிழ்நாட்டுக்கு மட்டும்தானே? பாண்டிக்கும் உண்டா?
    போனபோது அதே தமிழனுக்கு மன்னிக்கும் சுபாவமும்நெறைய உண்டு

  19. At 3:32 AM, சயந்தன்

    யாரோ ஒருவர் சிவாஜி படத்திற்கான தரவிறக்கும் லிங் அனுப்பியிருந்தார். முதலாவது சிடியை தரவிறக்கி பார்த்தேன்.. தியேட்டரில் இருந்து கமெராவினால் சுட்டது என்றாலும் ஸ்கீரீனை நோக்கி கமெராவை வைத்திருக்கக் கூடாதா.. தியேட்டரின் கூரை தான் தெரிகிறது. சத்தம் மட்டும் தெளிவாக வருகிறது.
    நல்ல லிங் இருந்தா தாங்கப்பா..

    உங்கள் தேவை எமது வேலை

    Anonymous said…
    சிவாஜி படத்துக்கான இணைப்பு
    CD1
    http://download.yousendit.com/855EB33608FA68B9
    CD2
    http://download.yousendit.com/B5AB057C0098EE71
    3:25 AM

  20. வணக்கம்,

    ரஜினி ஒரு நடிகர் என்ற நிலையில் இருந்தவரை எந்தவொரு பிரச்சினையும் நமக்கு இருக்கவில்லை. எப்பொழுது ரஜினியின் கருத்து (தமிழ் இனத்திற்க்கு எதிரானதாக) சமூகத்தை பாதிக்கிறதோ அப்பொழுது தான் நாம் எதிர்ப்பு காட்ட வேண்டி வருகிறது. (ரஜினி அரசியல்,சமூக கருத்துகளை அவ்வப்பொழுது தெரிவிக்கிறார்).

    சினிமா மற்றும் ஊடகங்களால் சமூகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ரஜினி இருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஜினியின் கருத்துகள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்திற்க்கு எதிரானதாக இருக்கிறது என்கிற பொழுது ரஜினியை புறக்கணிப்பது என்பது தமிழ் தேசிய இன போராட்டத்தின் ஓர் அங்கமாகவே நாம் பார்க்க கடமை பட்டு இருக்கிறோம்.

    ரஜினி என்கிறபொழுது தமிழ் இனத்தின் எதிரியாக நாம் அடையாளம் காணும்பொழுது… உங்களுடைய “நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள்….” என்கிற வாதம் முற்றிலும் முரண்…. இக்கருத்தை மற்ற நடிகர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்…

    மிக முக்கியமான நிகழ்வே ஓரு இனம் கருத்தியலில் சிதைந்து போதலே…

    இலங்கையில் மிக ஆரம்பத்தில் இது தான் நடந்து முதலில் தமிழ் கருத்தியல் சிதைக்கப்பட்டது… அப்புறம் தான் அதிகார அமைப்பு சிதைக்கப்பட்டது.. சிங்கள அதிகார அமைப்பு உருவானது….அதுவே வளர்ந்து தமிழ் இன அழிப்பாக உருவெடுத்தது…
    (இன்று பலபேருக்கு இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை மிக கடுமையான விவாதம் மற்றும் வரலாற்று சான்றுடன் நிறுவ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்… இன்Úம் தமிழ்நாட்டில் 80% தமிழர்கள் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்கள் காலத்தில் பிழைக்க சென்றவர்கள் என்கிற எண்ணத்திலேயே இருக்கிறார்கள்…)

    ரஜினி மற்றும் ரஜினியை வைத்து பின் இருந்து இயங்குபவர்களின் நோக்கம் தெள்ள தெளிவானது… அது தமிழ் இன கருத்தியலை சிதைப்பது அதன் மூலம் தமிழன் தலையை தடவி தங்களை தக்க வைத்துக் கொள்வது…

    மிக முக்கியமான உதாரணம்…
    சிங்கையில் ஓர் நூற்றாண்டு காலம் தமிழர்கள் உழைப்பாளிகளாக போராடி பெற்ற நிலையை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள்.. அது அவர்களுக்கு மிக மெல்லவே புரிகிறது… சிங்கையில் தமிழர்கள் தங்களை தமிழர் என்ற அடையாள படுத்திக்கொள்ளாமல் இந்தியர்கள் என்ற அடையாளத்தில் இயங்கியதால்… கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியர்கள் என்கிற போர்வையில் தமிழர்களின் தலை மீது அமர்ந்து வட இந்தியர்கள் ஆட்சி அதிகாரத்தில் மிகப் பெரும்பான்மையாக அமர்ந்து விட்டார்கள்… கடந்து தேர்தலின் போதுதான் மெல்ல மெல்ல சிங்கை தமிழர்களிடம் அது பிரதிபலித்தது… “எதிரொலி” என்கிற தொலைகாட்சி நிகழ்ச்சியில் அது கேள்வியாக எழுப்பப்பட்டது… இனி என்ன செய்வது “தும்பை விட்டு வாலை பிடித்து பயன் என்ன…”

    ஆக எப்பொழுதெல்லாம் தமிழ் இன மற்றும் தமிழ் மொழி கருத்தியல் வழியாக தாக்கபடுகிறதோ அப்பொழுதே நாம் விழிக்காவிட்டால் வரலாற்றில் நாம் போராடிக்கொண்டே தான் இருக்க வேண்டி இருக்கும்…

    தமிழ் தேசிய விடுதலை… தமிழ் மொழி மற்றும் இன விடுதலையை முன்னிறுத்தி செல்கிறது…

    அப்படியாயின் தமிழ் இன மற்றும் மொழி எதிரியான ரஜினியை புறக்கணியுங்கள்… புறக்கணியுங்கள்… புறக்கணியுங்கள்…

  21. சயந்தன்!
    புலம்பெயர்ந்த எங்கள் மக்களைப் பொறுத்தமட்டில்; பெரும்பான்மையினர்- நடிகர்கள் நம்மை ஆதரிக்கிறார்களா? இல்லையா? எனக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
    பலருக்கு சாப்பாட்டுக்குமேல் ஏதாவது தமிழ்ப்படம் பார்த்தாத்தான் நித்திரை வரும். சோபாவில் இருந்து தூங்கி வழியும் போதும் தொலைக்காட்சித்திரையில் ஏதாவது தமிழ் உருவங்கள் ஜிகினா உடையில் தெரிய வேண்டிமென எதிர்பார்க்கிறார்கள். அவ்வளவே!!
    அதை வருசம் பூராகவும்…ரஜனி செய்தாலும் ஒன்றுதான் வடிவேலு செய்தாலும் ஒன்றுதான்…
    இந்தப் புறக்கணிப்பு நடக்கும் கருமமல்ல!! இது போதைக்கு அடிமையாகியவன் நிலை…விட்டாலும் கைநடுங்கும்…போட்டாலும் கைநடுங்கும்.

  22. //இது போதைக்கு அடிமையாகியவன் நிலை…விட்டாலும் கைநடுங்கும்…போட்டாலும் கைநடுங்கும்.//

    சூப்பர் பஞ்ச் டயலாக்.. நன்றிங்க யோகன் சார்

  23. //பலருக்கு சாப்பாட்டுக்குமேல் ஏதாவது தமிழ்ப்படம் பார்த்தாத்தான் நித்திரை வரும். சோபாவில் இருந்து தூங்கி வழியும் போதும் தொலைக்காட்சித்திரையில் ஏதாவது தமிழ் உருவங்கள் ஜிகினா உடையில் தெரிய வேண்டிமென எதிர்பார்க்கிறார்கள். அவ்வளவே!!///
    I am also suffering of this disease.. Is there any cure??

  24. Hello Hello….Its a movie. you shouldn’t think anything away from a movie. There are many actors that they cannot even run their own family. But they are really good on making or acting in movies. Rajini is a real entertainer and thats it. You shouldn’t go beyond it.

    Forget about the Sivaji story and etc…but think this is a tamil movie just big enough to competite on expense and maybe profit with any other indian movies every made.

    I wonder you all hate rajini or tamil movies or the tech used behind it? Always remember its just a movie with an exeptional publicity stun added.

  25. இங்கே உங்களின் கருத்தை நினைத்து சிரிப்பதா அல்லது உங்களின் அறியாமையை நினைத்து வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

    ரஜனி எங்களிற்கு ஈழத்தமிழர்க்கு உதவ வேண்டும் என்று யாரும் அழவேண்டாம். அது முட்டாள் தனம் என்றே நான் கூறுவேன். அப்படி இருக்கும் போழுது ரஜனியின் திரைப்படங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இதற்கு பல காரணங்களை முன்வைக்கலாம்.

    தமிழினத்திற்கு ஒரு கேடுதல் ஏற்படும் போது நான் ஒரு தனிமனிதனாக அதற்கு எதிர்ப்புத்தெரிவித்தால் அது எடுபடுவது கடினம். அதையே நான் ஒரு (ரஜனி போல்) பெரிய நிலையில் இருந்து செய்தேன் என்றால் அதற்கு 1000மடங்கு அதிகமான பலன் கிடைக்கும். இதை தான் சில ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். தனிப்பட்டமுறையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கூறியது போல் ரஜனி ஈழத்தமிழர்களிற்கு பணம் கொடுக்கவேண்டும் என்பது முட்டாள்தனம். அதை எந்த ஈழத்தமிழனும் முன்வைக்கவில்லை. அது வெறுமனே உங்கள் கருத்து.
    பின்னர் எதற்காக இந்த ரஜனி எதிர்ப்பு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சில காரணங்களை நான் உங்களிற்கு அறியத்தருகின்றேன்.

    1. ரஜனி எமக்காக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. எதற்காக எமது விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக கருத்து கூறவேண்டும். ஜெயலலிதாவின் ஒரு கூட்டத்தில் பேசுகையில் ரஜனி கூறுகிறார் „அம்மா உங்களிற்கு விடுதலைப்புலிகளால் மட்டும் ஆபத்தில்லை இங்கும் (தமிழகத்திலும்) சிலரால் ஆபத்து உள்ளது“ இது அவருக்கு தேவையா? கருத்து சுதந்திரம் என்று வராதீர்கள்! கருத்து சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தனது கருத்தை மற்றவர்களிற்கு பாதிக்காத வகையில் வெளியிடுவதே கருத்து சுதந்திரம்!

    2. தற்பொழுது மலேசியாவில் தமிழர்களின் பிரச்சனை கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு ஒரு கலைநிகழ்ச்சியில் ரஜனி கூறுகிறார் „எனக்கு தமிழகத்தமிழர், மலேசியத்தமிழர்கள் அனைவரும் ஒன்று தான் என்று. இதை கேட்டால் சிரிப்பாக இல்லையா? மலேசியாவில் தமிழர்களின் பிரச்சனையில் இவர் என்ன செய்தார்? ஒரு வார்த்தையும் செலவு செய்யாமல் இருந்த இவர் இப்படி சொல்வது சரியா? அப்படி என்றால் நாளை தமிழ்நாட்டுத்தமிழர்களிற்கும் இப்படி ஒரு நிலை வரும் போது இவர் இப்படி தான் மௌனம் சாதிப்பாரா??

    3. „என் உடல் பொருள், ஆவியை தமிழுக்கு தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா“!! இது அவரின் படத்தில் வந்த பாடல் வசனம். பல மேடைகளில் என் உயிரினும் மேலான தமிழ் ரசிகர்களே என்று முழக்கமிட்டிருக்கிறார். ஆனால் தமிழர்களின் உயிரான தமிழ் மொழியை காப்பதற்கு இவர் தனது படத்திற்கு தமிழில் பெயர் வைக்க மறுத்தது ஏன்? சிவாஜி தமிழ் பெயரா இல்லையா என்பதை நான் சொல்ல வில்லை. அது என்ன தே போஸ்? இது தான் இவரை வளர்த்த தமிழ்நாட்டிற்கும் அதன் அரசாங்கத்திற்கும் இவர் செய்யும் நன்றிக்கடனா?

    4. „அப்போ நான் பச்சைத்தமிழன்;, இப்போ நான் வெள்ளைத்தமிழன்“ இந்த பாடல் வரிகளை ஏன் இவர்கள் கன்னாடகத்தில் திரையிடப்படும்போது எடுத்துவிட்டார்கள்??

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!!!

    இது பற்றி என்னுடன் விவாதிக்க விரும்புபவர்கள் என்னுடன் தமிழில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Comments are closed.