முதன்மை

சமகால இலக்கியக் குறிப்புகள்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்ற ஜெயமோகனது கூற்று எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. ஒருவேளை, அவர் அது இனப்படுகொலையே என்றிருப்பாரானால் மாத்திரமே, “இல்லையே.. இவர் இதைச் சொல்வது தப்பாச்சே.. ஏதேனும் hidden agenda இருக்குமோ ” என்று யோசித்திருப்பேன். மற்றும்படி இலங்கையில் இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று கோத்தபாய ராஜபக்ச சொன்னபோது எப்படிக் கடந்துபோனேனோ அப்படித்தான் கடந்துபோனேன். தவிரவும், ஈழத்தமிழர்களுக்கான ஒரு தீர்வு தமிழகத்தில் இருந்து ஒரு போதும் வராது என்று தீர்க்கமாக நம்புகிறவனாகவும் நானிருப்பதால், ஜெயமோகனது இக்கூற்றுக்கு ஐந்து சதப் பெறுமதியைக் கூட அளிக்க முடியவில்லை. நாளைக்கே இதைச் சீமான் சொன்னாலும் இதே நிலையிலேயே தொடர்வேன். ஏனெனில் இதுவும் அதுவும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் பயணத்தில் ஒரு சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்தப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். நிற்க,

ஜெயமோகனது இந்த இனப்படுகொலை தொடர்பான கூற்று, மற்றும் இந்திய இராணுவத்தினர் ஈழத்தில் மனிதாபிமானத்தோடுதான் நடந்துகொண்டார்கள், மற்றதெல்லாம் புலிகளின் பிரச்சார நுட்பம் என ஒரு ஜெனரல் சொன்னார் என்ற முன்னைய கருத்து, ஆயுத விடுதலைப் போருக்கு எதிரான அவரது கருத்து நிலை என அனைத்துமே மையம் கொண்ட மனநிலையானது ஓர் இந்தியப் பெரும் தேசிய மனநிலையாகும். இந்தியா என்கின்ற ஒற்றை அரசின் (state) ஒருமைப்பாட்டையும், உறுதித்தன்மையையும் கட்டுக்குலையாமல் பேணுவதற்கு, இந்திய ஒருமைப்பாட்டை நேசிக்கும் மனங்களைத் தொடர்ந்தும் அதே மாயையில் வைத்திருப்பதற்கு, ஈழம் பற்றி, காஷ்மீர் பற்றியெல்லாம் இப்படியான கருத்துக்களை உருவாக்குவதும், பரப்புவதும் அவர்களுக்கு நிபந்தனையாகிறது. அதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்து வருகிறார்கள். அது ஜெயமோகன் மட்டுமல்ல, இலக்கியம், எழுத்தென்ற இந்தப் பரப்பிலேயே வேறும் பலரும் இருக்கிறார்கள் என்பது எந்தளவிற்கு உண்மையோ, அவர்களோடு நம்மிற் பலர் வலு கூலாகக் குலாவுகிறார்கள் என்பதும் உண்மை.

0 0 0

தீபன் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ஒரு கேள்விக்கு, இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என ஷோபா சக்தி அளித்த பதில், சுவிற்சர்லாந்துப் பத்திரிகையொன்றில் கவனப்படுத்தப்பட்டு வெளியாகியிருந்தது. அதைப்பற்றி அக்காலத்தில் இளவேனிலோடு உரையாடியிருக்கிறேன். ஒரு சர்வதேச மேடையை அழுத்தமான ஒரு பதிலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நான் சொன்னபோது இதெல்லாம் நம்மூருக்குத் தெரிய வராதா என்று அவர் கேட்டிருந்தார். நான் சிரித்துக்கொண்டே, உங்களூர் பத்திரிகையாளர்களுக்கு அவரிடம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைத் தவிர கேட்பதற்கு வேறு எதுவும் தெரியாதே… என்று சொல்லியிருந்தேன்.

இனப்படுகொலையைப் பற்றிய ஐநா வரையறைகள், சர்வதேச சட்டங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், படுகொலையைச் சந்தித்த அந்த இனத்தின் குரலே முதன்மையானதும் முழுமையானதும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஈழத் தமிழர்கள் பட்ட வாதையின் குரல்தான் இனப்படுகொலைக்கான உச்ச ஆதாரம். மற்றெவரைப் பற்றியும் நானெதற்கு அலட்டிக்கொள்ள வேண்டும்…?

0 0 0

ஜெயமோகன் ஆதிரையைச் சிலாகிப்பதால் எனக்கும் அவருக்குமிடையில் ஓர் உறவு உள்ளோடிக்கொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள் போலுள்ளது. அது அவர்களுடைய தவறுமல்ல, தமிழ் இலக்கியச் சூழல் பெருமளவுக்கு இவ்வாறு “உள்ளாலதான்” ஓடுகிறது.

ஆயினும் அவர்கள் நினைப்பதைப்போல நமக்கிடையில் அப்படியெதுவும் இல்லை. நான் இதுவரையில் அவருடைய 3 நாவல்களை மட்டுமே படித்திருக்கிறேன். (ஏழாம் உலகம் – மிகப் பிடித்த நாவல், உலோகம் – குப்பை, வெள்ளையானை – எனது சிற்றறிவுக்கு மொக்கை) ..

ஜெயமோகன் மட்டுமல்ல, இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு இலக்கிய பீடம், ஜாம்பவான், ஆசான், குரு, ஆதர்சம்.. இப்படியெவரோடும் எனக்கு ஒட்டுமில்லை. உறவுமில்லை. உட்பெட்டிச் செய்தியில்லை. தொலைபேசி உரையாடலில்லை. நேரிற் சந்திப்பும் இல்லை. இதிலொரு திமிரோடுகிறது என நினைத்தாலும் பரவாயில்லை, எனக்கொரு முன்னுரை, பின்னுரை, அணிந்துரை என்ற பெயரில் உங்களது அங்கீகாரத்தையும் வழங்குங்கள் என நான் யாரிடத்திலும் இதுவரை கை நீட்டியதில்லை.

ஓர் ஈழத்து எழுத்தாளளிள் ஆகக்கூடிய இலக்கு தமிழகத்தின் அங்கீகாரம்தானா என்ற கேள்வி சில காலமாகவே என்னைத் தொடர்கிறது. ஈழத்திலிருந்து கிடைக்கும் பாராட்டைவிட, தமிழகத்திலிருந்து கிடைத்தால் ஏன் வானுக்கும் பூமிக்கும் இடையில் துள்ளிக் குதிக்கின்றோம்.. எந்தப் புள்ளியில் அது உயர்ந்து நிற்கிறது.. அதில் செல்வாக்குச் செலுத்துவது நமக்குள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையா…
இன்னொரு வகையில் ஈழப் படைப்புக்களுக்கான தமிழக அங்கீகாரம் பற்றி எனக்கு ஒரு சந்தேகமிருக்கிறது. ஈழத்தமிழர்கள் ஓர் அடிபட்ட இனம், பாவப்பட்ட இனம், தோல்வியுற்ற இனம் என்ற பரிதாபத்தை அவர்களின் படைப்புக்களில் ஓர் ஆறுதலாகத் தடவி “பாவப்பட்டதுகள், சந்தோசப்படட்டும்” எனத் தரப்படுகின்ற ஓர் இலக்கியச் சலுகையா அது.. எனின் அவ்வாறான ஒரு சலுகையை ஆதிரை தவிர்த்துக்கொள்ளவே விரும்புகிறது..

0 0 0
எழுத்து எனக்குத் தவமல்ல. எழுத்து எனக்கு வாழ்வுமல்ல. அதற்கும் வெளியே வாழ்வு காதலும் களிப்புமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வேண்டுமானால் எழுத்தை எனக்குத் தவிப்பு என்று சொல்லலாம். அது என் தனிப்பட்ட தவிப்புத்தான். தொண்டைக்குள் முட்போல சிக்கிக்கொண்டிருக்கிற தவிப்பு. ஒவ்வொரு முறையும் அடங்கிய பிறகு நான் விரைவில் மீண்டுவிடுவேன். மற்றும்படி என் எழுத்தால், இனத்திற்கு விடுதலை வாங்கித் தருவேன் என எனக்குச் சீன் போடத்தெரியாமலிருக்கிறது. சமூகம் பெரிய மனது பண்ணி அதை மன்னிக்க வேண்டும். நான் ஓர் இலக்கியச் செயற்பாட்டாளனும் அல்ல. ஒருவேளை எதிர்காலத்தில் செயற்படுவேனாயின் ஈழம்தான் எனது செயற்படுகளமாயிருக்கும்.

0 0 0
கடைசியாக
எனக்கு ஒரு விடயம் புரியாமலிருக்கிறது. ஜெயமோகன் இனப்படுகொலை இல்லையென்கிறார். ஆம் அது உள்நோக்கம் கொண்ட கருத்துத்தான். ஆனால் அதே இனப்படுகொலையின் பங்காளியெனப்படுகின்ற திமுகவின் பிரச்சார பீரங்கியாயிருந்த மனுஸ்யபுத்திரனின் முன்னும் பின்னும் நம் ஓரிரு ஈழப் பிள்ளைகள் குலாவித் திரிகிறார்களே இது எங்ஙனம் சாத்தியம்.. ? என்ன சமன்பாடு..

By

Read More

நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

amruthaஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில் கட்டமைந்திருக்கும் ஆதிரை எழுப்புகின்ற கேள்விகள் பல கோணங்களில் ஆயிரமாயிரம்.

“யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன்“ என்று கூறும் சயந்தன் யாழ்ப்பாணம், சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்து போர்க்கால வாழ்வின் வழியே இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர். பின்னர், வன்னியிலிருந்து மீண்டு புலம்பெயர்ந்தவர்.

சயந்தனுடனான இந்த நேர்காணல் இணைய உரையாடலின் வழியாக நிகழ்த்தப்பட்டது.

– கருணாகரன்

ஆறாவடுவுக்குப் பிறகு ஆதிரை. எப்படி உணர்கிறீர்கள்?

ஆறாவடு எழுதிமுடித்தபோதிருந்த நிறைவு இப்போது ஆதிரையிலும் இருக்கிறது. ஆனால் ஆறாவடு மீது இப்போது நிறைவில்லை. இதுவே ஆதிரைக்கும் நிகழக்கூடும்.

ஆதிரை கொண்டிருக்கும் கலையும் அரசியலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? மனதில் உருவாகிய வெளிப்பாடா?

2009இல் யுத்தம் முடிந்து 4 வருடங்களிற்குப் பின்னர் வன்னியில் என்னோடு கூடப்படித்த ஒருவனைச் சந்திக்கச் சென்றேன். படிக்கின்ற காலத்தில் அவனுடைய அம்மா அப்பம், போண்டா, சூசியம் முதலான உணவுப் பண்டகளைத் தயாரித்து பள்ளிக்குட வாசலில் வைத்து விற்பதற்காக எடுத்துவருவார். பாட இடைவேளைகளின் போது அம்மாவிற்கு உதவியாக அவன் நிற்பான். போர் அந்த நண்பனுடைய ஒரு காலைக் கவ்விக் கொண்டுபோயிருந்தது. இப்பொழுது அவன் ஒரு பலசரக்குக் கடை வைத்திருந்தான். வெறுமையாகக் கழிந்த நமக்கிடையிலான உரையாடலின் ஏதோ ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் எப்படி வதிவிட உரிமைகளைப் பெறமுடியும் என்பதைப் போன்ற அவனுடைய இயல்பான ஒரு கேள்விக்கு யுத்தத்தைக் காரணம்காட்டித்தான் என்று சட்டென்று சொல்லிவிட்ட அடுத்த நொடியிலேயே அவனுடைய கண்களை எதிர்கொள்ளும் தைரியத்தை நான் இழந்துவிட்டிருந்தேன். ஆதிரைக்கான முதற்புள்ளி அப்பொழுதே உருவாகியிருக்க வேண்டும்.

 

அப்படியென்றால் உள்ளுணர்வில் எழுந்த கேள்விகளின் அலைக்கழிப்பிலிருந்து ஆதிரை உருக்கொண்டுள்ளது எனலாம்?

ஓம். அதிலிருந்து தொடங்கி பின்னர் நேரிற் கண்ட மனிதர்களும், காதில் விழுந்த செய்திகளும் உருவாக்கிய கொதிநிலையின் அலைகழிப்புத்தான் ஆதிரை.

தேவகாந்தன், ஷோபாசக்தி, விமல் குழந்தைவேல் எனப் புலம்பெயர்ந்திருக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் தாய்நிலத்தின் அரசியலையே – வாழ்க்கையையே எழுதுகிறார்கள். நீங்களும் அப்படித்தான். இது ஏன்?

எனது புலம்பெயர் வாழ்வு ஒப்பீட்டளவில் குறுகலானது. எப்படியென்றால் 2006 இல் புலிகள் மாவிலாறு அணையைப் பூட்டியபோது நான் இலங்கையிற்தான் இருந்தேன். ஆக இன்னமும் நிலத்தின் கதைகளே மூளைக்குள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற நாட்டுடனான சமூக இணைவு இன்னமும் எனக்குச் சாத்தியமாகவில்லை. இந்த ஜென்மத்தில் அப்படியொரு அதிசயம் நடக்குமென்றும் தோன்றவில்லை. எனக்கு மட்டுமென்றல்ல. நம்மிற் பலரும் மனதால் ஈழத்திற்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியானால் ஈழத்திற்கு வரலாமே என்ற உங்களுடைய ‘மைன்ட் வொய்ஸ்’ இங்கேவரையும் கேட்கிறது. நீங்கள் அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..

ஆதிரை புனைவு நாவலாகக் கட்டமைக்கப்பட்டதா? வரலாற்று  நிகழ்ச்சிகளின் பதிவாக உருவாக்கப்பட்டதா? 

சில உண்மை நிகழ்வுகளைப் பின்னிறக்கி முன்னால், முழுக்கப் புனைவால் வரைந்த சித்திரம் ஆதிரை. புனைவினைத் தேர்வு செய்யும் அரசியலில் நேர்மையாயிருந்தேன். அதற்குப் பொறுப்புக் கூறுபவனாயும் இருக்கின்றேன்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்லது ஈழப்போராட்டத்தின் போர் ஓய்ந்த பிறகு வந்த பெரும்பாலான நாவல்கள் வன்னிக்களத்தையும் அந்த நிகழ்ச்சிகளையும் பின்புலமாகக் கொண்டிருக்கின்றன. அல்லது நீங்கள் சொல்வதைப்போல சில உண்மைச் சம்பவங்களை பின்னணியில் கொண்டிருக்கின்றன. இது புலிகளைப் பேசுவதன் மூலமாக அல்லது அந்த இறுதி யுத்தத்தைப் பேசுவதன் மூலமாக வாசகக் கவனத்தை ஈர்க்கலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடா? அல்லது துயரிலுறைந்த சனங்களைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவா? உதாரணம், தமிழ்க்கவியின் ஊழிக்காலம், ஷோபாசக்தியின் Box, குணா கவியழகனின் விடமேறிய கனவு… 

குழந்தைப் போராளிகள் புத்தகத்தை எழுதிய சைனா கிறைற்சி, அவருடைய டொக்டரின் ஆலோசனையின் பேரில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக எழுதிய பதிவுகளே அந்தப் புத்தகம் என்கிறார். இந்த யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன். மற்றும்படி பெருமளவான வாசகர் பாராட்டைப் பெறுவதே நோக்கமாயிருந்திருக்குமெனில் ஆதிரை ஒரு “போர்ப் பரணி”யாகவல்லவா இருந்திருக்க வேண்டும்.

இருந்தாலும் இதே காலத்தில் வெளியான ஏனைய லெனின் சின்னத்தம்பி, அனந்தியின் டயறி, அசோகனின் வைத்தியசாலை, கசகறணம், அத்தாங்கு போன்ற நாவல்களுக்குக் கிடைத்த வரவேற்பையும் கவனத்தையும் விட இந்த மாதிரி சமகால அரசியலைப் பேசும் Box, நஞ்சுண்டகாடு, ஆயுத எழுத்து, ஊழிக்காலம், , விடமேறிய கனவு, ஆதிரை போன்ற  நவல்களுக்குக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் கவனமும் அப்படித்தானே உணரவைக்கின்றன? இது ஒருவகையான உளவியல் ஈடுபாடு எனலாமா?

பிரதிகளில் தங்களைக் காண விரும்புகிற, அவற்றோடு தாம் வாழ்ந்த காலத்தை நனவிடை தோய முற்படுகின்ற அதில் சுகித்திருக்கின்ற வாசக மனதின் உளவியலா என்று யோசிக்கின்றேன். அப்படியானால் தமிழ்நாட்டில் உருவாகும் வரவேற்பினை எவ்வாறு இந்த உளவியலில் பொருத்திப் பார்ப்பது என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை என் நண்பர் ஒருவர் கேட்டதுபோல தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுடைய யுத்தகால எழுத்துக்கள் த்ரில்லான, திகிலான ஒருவகைச் சாகச எழுத்துக்களாகக் கருதி விரும்பிப் படிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.. இவை பற்றி மேலும் உரையாடவேண்டும்.

நீங்கள் எப்படி எழுதத் தொடங்கினீர்கள்? ஆரம்பத்தில் யாரைப் பிடிக்கும்? இப்பொழுது தமிழில் யார் உங்களுடைய ஆதர்சம்?

இது சற்று ஆச்சரியம்தான். வீட்டில் பெரியளவிலான வாசிப்பாளர்கள் இல்லை. நான் எழுதியிருந்த புத்தகங்களைக் கூட வீட்டில் யாரும் படித்ததில்லை. அவை புத்தகமாகின்றபோது இவன் ஏதோ எழுதியிருக்கிறான் என்று நினைத்துக்கொள்வார்கள் போல.  பெரியப்பாவிற்கு சற்று வாசிப்பிருந்தது. என்னுடைய அப்பாவின் அக்கா என் சிறுபராயக் காலத்தில் உள்ளூர் நுாலகத்தில் ஒரு நுாலகராகப் பணியாற்றினார். பெரும்பாலும் எனது மாலை நேரங்கள் அங்குதான் கழிந்தன. புத்தகங்கள் மீதான நெருக்கம் அப்படித்தான் உருவாகியிருக்க வேண்டும். ஏனென்று தெரியவில்லை இயல்பிலேயே இலங்கை எழுத்தாளர்களுடைய எழுத்து மீது பெரிய ஈடுபாடிருந்தது. அந்த நுாலகத்தில் யாரும் சீண்டாதிருந்த இறாக்கையிலிருந்த இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை  எடுத்துச் சென்று வாசிக்கத் தொடங்கினேன். வீரகேசரிப் பிரசுரம், மீரா பிரசுரம், தமிழ்த்தாய் வெளியீடு, கமலம் பதிப்பகம் என்று பதினான்கு வயதிற்குள்ளாகவே பலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர சரித்திரைப் புனைவுகளிலும் ஆர்வம் இருந்தது. குறிப்பாக சாண்டில்யனின் புத்தகங்கள் பலவற்றையும் அக்காலத்தில் படித்து முடித்திருக்கிறேன். யவன ராணி என்ற மூன்றோ நான்கு தொகுதிகள் அடங்கிய புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் ஊடாக வன்னியில் தேவிபுரத்தில் சென்று முடித்த நினைவிருக்கிறது.

அக்காலத்தையை என் ஆதர்சமென்றால் செங்கை ஆழியானைத்தான் சொல்ல முடியும். அவரைப்போல எழுதவேண்டுமென்றெல்லாம் நினைத்திருக்கிறேன். இப்போது ஆதர்சமென்று சொல்வதற்கு யாருமில்லையென்றாலும் காத்திருந்து படிக்கின்ற எழுத்தாளர் என ஷோபா சக்தியைச் சொல்லலாம்.

எழுத்து ஒரு தொழில்நுட்பத்தின் பாற்பட்டதா? இலக்கியச் செயல் என்று அதைச் சொல்லலாமா?

எழுத்திற்கு உத்திநுட்பமேயிருக்கும். தொழில்நுட்பம் இருக்காது. அது தொழில்நுட்பமெனில் அதில் அகவயமான கரிசனைகள் இருக்காத வெறும் இயந்திரத்தனமானதாயிருக்கும். அதுபோலத்தான், இலக்கியம் ஒரு செயல் அல்ல. அது ஆக்கம். செயல் என்ற சொல்லாட்சி ‘போலச் செய்தல்’ என்பதை அர்த்தப்படுத்தி அதற்குப் போலித்தனத்தை வழங்கிவிடுகிறது. எனக்குத் தெரிந்தவகையில் எழுத்தென்பது சொற்களுக்கு அனுபவத்தைக் கொடுத்து சொற்களின் அழகியலைக் கட்டுவது. இது இந்தப் பதிலை எழுதிக்கொண்டிருக்கிற தருணத்தில் என் நிலைப்பாடாகவிருக்கிறது.

பெரும்பாலானவர்களி்ன் எழுத்துகள் அவர்களுடைய இளமைக்காலத்தின் பிரதிமைகளாகவே வெவ்வேறு விதங்களி்ல தொடர்ந்திருக்கும். முதல்கால் வாழ்க்கையின் ஆதிக்கத்தையே பலரு்ம திரும்பத்திரும்ப எழுதுகிறார்கள் என்று கானாவைச் சேர்ந்த மொகமட் நஸீகு அலி (Mohammed Naseehu  Ali)) சொல்கிறார். உங்களுடைய அனுபவம் எப்படி?

ஆறாவடுவும் சரி, ஆதிரையும் சரி அக்கதைகளின் பிரதான இழைகளின் கதைகளை  நான் ஒருபோதும் அனுவித்திருக்கவில்லை. ஆக, அவற்றில் முழுமையாக என்னைக் கொண்டுபோய் இருத்தவும் முடிவதில்லை. இருப்பினும் குணாம்சங்களாக, சிறு சம்பவங்களாக, ஓர்  உதிரியாக ஆங்காங்கே நான் வந்துபோவதைத் தவிர்க்கவும் இயலவில்லை.

மலையக மக்களின் துயரம் தொடக்கம் அடிநிலை மக்களின் பிரச்சினைகளையும் வாழ்வையு்ம் ஆதிரை பேசுகிறது. மறுவளத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தின் மீது விமர்சனத்தை வைக்கிறது. இது ஒருவகையான சமனிலைக்குலைவை  உண்டாக்கும் என்றும் அரசியல் சாய்வைக் கொண்டிருக்கிறது எனவும் படுகிறது என்ற அபிப்பிராயங்கள் வாசக மட்டத்தில் காணப்படுகிறது. உங்களுடைய கரிசனையின் மையம் எதனால் உண்டானது?

இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் உள்ள  ஒரு நண்பர், ஈழத்தமிழர்கள்,  மலையகத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கிறீர்களே.. மலையகத் தமிழர்கள் எங்களுடைய விடுதலைப் போருக்கு ஏதேனும் செய்தார்களா என்று ஒரு கேள்வியை முகநுாலில் துாக்கிப்போட எனக்குத் துாக்கிவாரிப்போட்டுவிட்டது. ஈழத் தமிழர்களுடைய ஆயுதப்போராட்டத்தில் மலையக மக்களின் பங்கு பற்றி விரிவாகப் பேசினால், அவர்களும் வன்னிக்குவந்து நீண்டகாலமாக இருந்தவர்கள்தானே எனச் சொல்கிறார்கள். ஆனால் அப்படிமட்டுமல்ல அம்பாறையின் ஓர் எல்லையாகவிருந்த பதுளைப் பக்கங்களிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு பல இளையவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வீழ்ந்திருக்கிறார்கள். அதேவேளை யாழ்ப்பாணம் என்ற பிரதேசத்திலிருந்து போராளிகள் எவரும் உருவாகவில்லை என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கக் குடும்பங்களும் பல பிள்ளைகளைப் போராட்டத்தில் இழந்தேயிருக்கின்றன.

நான் சமநிலை குலைந்த இடமாகப் பார்ப்பது, இந்த யுத்தத்தை தம்முடைய வாழ்வுக்கான ஒரு வாய்ப்பாக மடை மாற்றிப் பயன்படுத்தியவர்கள் ஒரு குறித்த ஒரு பிரதேசத்தைச் சார்ந்தவர்களாயே இருந்தார்கள் என்பதைத்தான். அந்த விச்சுழித்தனம் அவர்களுக்கு அதிகமாக வாய்த்தது எப்படி..? அத் தந்திரத்தின் மூலம் என்ன.. ? அந்த விவேகம் எந்தச் சமூகப் பின்னணியில் உருவாகிறது.. ? இம்மாதிரியான தீராக் கேள்விகள் ஆதிரை முழுவதும் உள்ளூரப் பரவியிருக்கிறது..

மலையக மக்களுக்கு இடமளித்திருப்பதைப்போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய இடத்தை – அவர்கள் மீதான கரிசனையை ஆதிரையில் உணர முடிகிறது. இந்த நாவல் ஒரு பரந்த தளத்தைக் கொண்டிருக்க வேண்டும்  என்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? அல்லது இயல்பான ஓட்டத்தில் இத்தகைய ஒரு பரப்பு விரிந்ததா?

தொடக்கம், முடிவு என்ற புள்ளிகள் மனதில் இருந்தன. ஒரு பொதுவான பரப்பாக போர் நிலத்தில் ஏழ்மையும் அதன் இயல்பும் பற்றியே பேச விளைந்தேன். நாவல் நீள நீள அது இயல்பாகவே நீங்கள் குறிப்பட்டதுபோல ஒடுக்கப்பட்டவர்கள் மீதான கரிசனையைத் தனக்குள் எடுத்துக்கொண்டுவிட்டது என எண்ணுகிறேன்.

இனம் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தன்னை முன்னிறுத்தியிருக்கும் ‘தமிழ்த்தேசியம்’ என்ற கருத்தியல் தன்னுடைய சொந்தப் பரப்பிற்குள் நிகழும், பால், சமூகம், வர்க்கம் சார்ந்த ஒடுக்குமுறைகளின்போது அவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றே செயற்படவேண்டும் என்று நான் அக்கறைப்படுகிறேன். தமிழ்த்தேசியத்தின் கட்டமைவு உண்மையில் அவ்வாறே இருந்திருக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் ஈழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி, தனக்குள் நிகழும் ஒடுக்குமுறைகளின் போது அது கள்ள மௌனம் சாதிக்கின்றது. முடிந்தவரை அதை ஒளித்துவைக்க முற்படுகிறது. இது மிகவும் கசப்பானது. அதன்மீது நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியது.

இன்னொரு புறத்தில், – தமிழகத்தில் எப்படியென்று தெரியவில்லை – ஆனால் ஈழத்தில் சமூக, பால், வர்க்க ரீதிகளாக ஒடுக்கப்பட்டவர்களுடைய வியர்வையும் அவர்களுடைய இரத்தமும் தமிழ்த்தேசியத்தில் நிறையவே இறைக்கப்பட்டிருக்கிறது. என்றேனும் தமிழ்த்தேசியம் சுகிக்கவிருக்கிற உரிமைகளில் அவர்களும் உரித்துடையவர்கள். நேரடியான உரிமையுடையவர்கள். இந்நிலையில் அவர்களைத் தமிழ்த்தேசியத்திலிருந்து வெளியேற்றுவது, தமிழ்த்தேசியத்திலிருக்கிற ஆதிக்கத்தரப்பினருக்கு உவப்பானதாயே அமைந்துமுடிந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

ஆறாவடுவிலும் ஆதிரையிலும் மனிதத் துயரமே மையம். துயரத்தை அனுபவிக்கும் சமூகத்துக்கு மீண்டும் துயரத்தைப் பரிசளிப்பதா? அல்லது அதனைக் கொண்டாட்டமான நிலைக்குக் கொண்டு செல்வதா நல்லது?

ஈழத் தமிழர்களுடைய போராட்டத்தின் துயர முடிவின் காரணமாக அவர்களுடைய வாழ்வில் இனி உய்வு ஏதுமில்லை என ஆதிரை நிறுவ முற்படவில்லை.  போராட்டம் அழிந்துவிட்டது. ஆகையால் இனி உங்கள் எல்லோருக்கும் சவக்குழிதான் மிச்சம் என்ற இருண்மையை அவர்களுக்கு வழங்க நான் முற்படவில்லை. மனித வாழ்வு எந்தப் பாதாளத்திலிருந்தும் மேலெழும் வேட்கையை பிறப்பிலிருந்தே கொண்டிருக்கிறது என்பதை நம்புபவன் நான். ஆதிரையின் மாந்தர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைகளைச் சேகரித்துக் கொண்டே வருகிறார்கள். அவை அழிய அழிய சற்றும் மனம் தளராது மீளக் கட்டுகிறார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னரும் கூட, முகத்தில் அறையும் காலத்தின் யதார்த்தத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் தம் வாழ்வை நகர்த்தவே முற்படுகிறார்கள். அவர்கள் தமக்கான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். அவர்கள் தம் குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டுவார்கள், கிலுகிலுப்பைகளை வாங்கிக்கொடுப்பார்கள். ஆம், அவர்கள் வாழ்வார்கள்.

கடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் ஆதாரமாகக் கொண்டு எழுதும்போது ஏற்படுகின்ற வாசக அதிர்ச்சி அண்மைய ஈழம் சார்ந்த படைப்புகளில் முதன்மையடைந்திருக்கிறது. இந்த மாதிரியான வாசகக்கவர்ச்சி என்பது ஒரு காலகட்டத்துடன் திசைமாறிச் செல்லும் அபாயத்தையும் தணிந்து விடும் நிலையையும் கொண்டது. பத்திரிகை வாசிப்பதைப்போல, சமகால நிலைமைகள் மாறிச் செல்ல இந்த வாசக நிலையும் மாறிவிடும் அபாயம் உள்ளது. இதைக்கடந்து நிலைப்படக்கூடிய படைப்புத்தளத்தை நிர்மாணிப்பதைப்பற்றி ஏன் பலரும் சிந்திப்பதாகவில்லை?- 

ஆறாவடு பத்திரிகைச் செய்திகளின் தொகுப்பாயிருந்ததென்று ஒரு விமர்சனம் இருந்தது. ஆதிரையைப் பொறுத்தவரை இவ் வரலாற்றுச் சம்பவங்களுக்குப் புறம்பாக அதிலொரு வாழ்வை நான் கட்டியமைக்க முயன்றிருக்கிறேன். மனித வாழ்வின் உறவுகள், உறவுகளின் சிக்கல்கள், மனதின் அலைச்சல்கள், அந்த மனத்தின் முன்னுக்குப் பின்னான முரண்கள், தாய்மையின் விழுமியங்கள் இவ்வாறாக.. முட்டி மோதுகின்ற மாந்தர்களை உருவாக்கி அதுநீளத்திற்கும் அலையவிட்டேன். ஆதிரை என்ற இந்த நாவலிலிருந்து யுத்தத்தையும் அது ஏற்படுத்திய அழிவையும் நீக்கிவிட்டாலும் கூட ஒரு வாழ்வுச் சுழி அதற்குள் எஞ்சியிருக்க வேண்டுமென்று முயற்சித்திருக்கிறேன். இனி நீங்களே சொல்லவேண்டும்.

ஆதிரையின் பாத்திரங்கள் தொடர்பாக.. உங்களுக்கு மிக ஈர்ப்பான  – நெருக்கமான பாத்திரம்?

நாமகள் !

இந்த நாமகள் நிஜயத்திலும் புனைவிலும் கலந்திருப்பதாகக் கொள்ளமுடியும் என்று படுகிறது. பெயர் மாறிய நிஜம் என்கிறார் ஒரு வாசகர்?

அந்த வாசகர் சந்தேகத்தின் பலனை அனுபவிக்கட்டும். சில நேரங்களில் நாம் முழுக்கப் புனைந்த பாத்திரங்கள் நிஜத்தில் உருவாகி வந்துவிடுகிற அதிசயங்களும் நடந்துவிடுகின்றன. ஆறாவடுவில் நேரு அய்யா என்றொரு வயதான பாத்திரத்தை புனைவாக உருவாக்கியிருந்தேன். அவர் ஒரு மொழி பெயர்ப்பாளர். அப்பாத்திரம் புலிகள் மீது தொடர்ச்சியாகச் சில விமர்சனங்களை வைத்துக்கொண்டிருக்கும். இது பற்றிப் பேசிய ஒரு வாசகர், நேரு அய்யாவைப் பற்றியும் அவர் புலிகளை விமர்சிப்பது பற்றியும் எழுதிய நீங்கள் அவருடைய இரண்டு பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருந்ததை இருட்டடிப்புச் செய்து விட்டீர்களே என்று விசனப்பட்டிருந்தார்.

முழுமையான வாழ்கள அனுபவங்கள் இல்லாதபோதும் வரலாற்று நிகழ்ச்சிகளும் களச்சூழலும் மெய்யென நிகழும் வகையில் ஆதிரை படைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியாகியிருக்கும் ஷோபாசக்தியின் Box இலும் இந்தத் தன்மை உண்டு.. தகவல் மூலங்களைப் படைப்பாக்கும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அவை எப்படியிருந்தன? இந்தத் தகவல் மூலங்களை எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? 

தகவல்களை எப்படிப் பெற்றேனென்று ஆதிரையிலேயே சொல்லிவிட்டிருந்தேன். அப்படிக்குறிப்பிட்டதுபோல மனிதர்களைச் சந்தித்த போதெல்லாம் பெருமளவுக்கு முதியவர்களைத்தான் சந்தித்தேன். குறிப்பான கேள்விகள் என்று இல்லாமல் இயல்பான ஓர் உரையாடலைத் தொடங்கி, ஒரு கட்டத்தில் மடை திறந்த வெள்ளம்போல அவர்கள் பேசிக்கொண்டேயிருந்ததை ஒலிப்பதிவுகள் செய்திருந்தேன். பின்னர் நாவல் அவ் ஒலித்துண்டுகளிலிருந்து தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டது. நேரடி அனுபவும் இன்றி, மேற்சொன்ன தகவல் மூலங்களுமின்றிய இடங்களைப் புனைவாலேயே கடந்தேன். அவ்வாறு தொன்னுாறுக்கு முன்பான காலத்தைப் படைப்பாக்கும் போது சவாலாகவிருந்தது. தமிழ்க்கவி அம்மா, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைப்புசந்தி திலகர், மறைந்த தமிழினி அக்கா முதலானோர் தகவல் மூலங்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள்.

தொடக்கத்தில் சிறுகதைகளை எழுதிய நீங்கள் வந்தடைந்திருக்கிற வடிவம் நாவல். உங்களுடைய அடையாளமும் நாவல் எழுத்தாளர் என்றே ஆகியுள்ளது. அடுத்த நாவல் என்ன? புலம்பெயர் வாழ்க்கையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லையா?

நான் குறைவாகவே எழுதுகிறேன். இன்று எப்படியாவது ஒரு கதை எழுதிவிடவேண்டுமென்று நான் உட்காருவதில்லை. ஏதாவது செய்தியில் அல்லது யோசனையில் அதுவொரு புள்ளியாகத் தோன்றுகிறது. தோன்றினால் எழுதமுடிகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறை பற்றி, இரட்டைக் கலாச்சார சுழலுக்குள் அங்கும் இங்குமாகத் தம்மைப் பொருத்தி உழலும் அவர்களுடைய வாழ்வுபற்றி ஒரு நாவல் எழுதவேண்டுமென்று ஆசையிருக்கிறது. சில காலங்களுக்கு முன்னர் இங்கு பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் இளைஞன் தன்னுடைய அம்மாவும் அப்பாவும் ஒருபோதும் தன்னோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவதில்லை என்பது தனக்கு மன அழுத்தத்தைத் தருவதாகச் சொன்னபோது அவர்களுடைய மனதின் இன்னொரு பரிமாணத்தை என்னால் உணரக்கூடியதாகவிருந்தது. இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு ஒரு பெறுமதி இருக்குமென்று நாம் யோசித்திருக்கவே இல்லையல்லவா..?

ஒரு எழுத்தாளர் சொந்த அனுபவங்களை எழுதும்போதும் அனுபவங்களுக்கு அப்பால் உள்ளதை எழுதும்போதும் கிடைக்கின்ற வசதிகள், சிரமங்கள் என்ன? 

அனுபவங்களுக்கு அப்பால் எழுதுவதில் உள்ள சிரமமென்பது தகவல்கள்தான். மற்றும்படி அனுபவமல்லாதவற்றை எழுதுவதே மிகச் சிறப்பாக உருவாகும் என்பது எனது கணிப்பு. எனது அனுபவத்தையோ எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு நபரையோ எழுத்தில் முன் வைக்கும்போது அங்கே ஒருவித அலட்சியம் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அனுபவத்தில் இல்லாத ஒன்றை எழுதும்போது அதை முதலில் எனக்கு நானே காட்சியாகக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. அப்பொழுது நுணுக்கமான பதிவுகளை அது கொண்டிருக்கும். முழுமையான ஒரு சித்திரத்தை உள்ளடக்கியிருக்கும். என்னுடைய கிராமத்தைவிட நான் வாழ்ந்தேயிருக்காத தனிக்கல்லடி என்ற கிராமத்தைச் செதுக்கியது எனக்கு இலகுவாயிருந்தது. இவ்வேளையில் அனுபவங்களை எழுதுவதே அறம் என்றொரு பேச்சும் ஓடித்திரிவதை நினைவூட்டுகிறேன்.

தகவல்களைச் சேகரிக்கும்போதும் கதை உருக்கொள்ளும்போதும் குறித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏதாவது உண்டா? அல்லது கதையின் போக்கிலேயே எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு போவீர்களா?

ஆறாவடு தொடக்கத்தை மட்டும் முடிவு செய்துகொண்டு எழுதத்தொடங்கிய நாவல். ஆதிரை பெரிய பரப்பென்பதால் அது நிகழும் நிலங்களையும் காலங்களையும் முன்னரே வகைப்படுத்திவிட்டுத் தொடங்கியிருந்தேன். பல கதைப்போக்குகள் தமக்கான முடிவை நோக்கித் தம்பாட்டிலேயே சென்றன. ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால் சாரகனுக்கும், நாமகளுக்கும் ஒரு கல்யாணத்தைக் கட்டிப் பார்க்கவேண்டுமென்று ஆரம்பத்தில் ஆசையிருந்தது. ஆனால் நாவலில் அது வேறு திசையில் சென்று முடிந்துவிட்டது.

ஆறாவடு தந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்? சரியான – முறையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக உணர்கிறீர்களா?

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையின் நேரடி அர்த்தத்தின் அடிப்படையே குழப்பமானது. அப்படி விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் “அதுவும் சரி.. இதுவும் சரி” என்று ஆமாம் சாமிதான் போடவேண்டியிருக்கும். ஒரு விமர்சனம் என்பது அதைச் செய்கிற ஒரு தனி நபரின் அழகியல் தொடர்பான பார்வை, இலக்கிய ரசனை, அரசியல் சார்பு என்பவற்றின் அளவுகோல்களில் அவர் தனக்குள் நிகழ்த்துவது. அந்த அளவுகோல்களின்படி நான் கருதியதற்கு முற்றிலும் மாற்றான இன்னொரு பார்வையை அவரால் முன்வைக்க முடியும் என்பதையும் அதற்கான உரிமையை அவர் கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் நான் ஏற்றுக்கொள்வதோடு விமர்சனத்திற்கும் எனக்குமான உறவு முடிந்துவிடுகிறது. அதற்குமப்பால் எனது கருத்தமைவிற்கு மாற்றான கூறுகளைக் கொண்ட சில விமர்சனங்கள் புதிய ஜன்னல்களைத் திறந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. அந்த ஜன்னல்களினால் விழுந்த ஒளியை ஆதிரை ஏந்திக்கொண்டது.

நீங்கள் புலிகளின் ஆதரவாளரா? எதிராளியா? இந்தக் கேள்வி எதற்காக எழுகிறது என்றால் உங்களுடைய எழுத்துகளில் இரண்டும் கலநத நிலை உண்டு. ஆதரவு எதிர் என்பதற்கு அப்பால் இன்னொரு நியாயப் புள்ளியில் நிற்கிறீர்களா?

நான் புலிகள் மீது சாய்வும் சார்புமுள்ள ஓர் உயிரியே. ஆதிரையில் மீனாட்சி என்ற தாய்க்கும் அவருடைய மகனான வெள்ளையன் என்ற புலி உறுப்பினருக்கும் இடையிலான உறவு எத்தகையதோ, அதே மாதிரியான நெருக்கமும் உறவும்தான் ஈழத்தில் தொண்ணூறுகளில் நினைவு தெரியத் தொடங்கிய தலைமுறைக்கும் புலிகளுக்குமிருக்கிறது. இதனை மூளையைக் கழட்டி வைத்துவிட்டு இதயத்தால் சிந்திக்கிற நடைமுறையென்றும் நீங்கள் பரிகாசம் செய்யலாம்.

இதேவேளை புலிகள் சரிகளை மட்டுமே செய்தார்கள், அவர்களுடைய தவறுகளுக்கும் ஒரு வரலாற்றுச் சரி இருக்கிறது என வாதிடுகிற ‘ஜனவசியப்பட்ட’ குரலும் என்னிடம் இல்லை.

புலிகள் என்ற இயக்கத்தை அதன் தலைமைக்கு ஊடாக அணுகுகிற ஒரு பார்வை நிலத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கும் (தமிழ்நாட்டுக்காரர்கள் உட்பட) அல்லது நீண்டகாலத்தின் முன் நிலத்தை விலகிச் சென்றவர்களுக்கும் இருக்கிறது. அதாவது மேலிருந்து கீழாக அணுகுதல். என்றேனும் ஒருநாள் அவர்களுக்குத் தலைமை மீதான பிம்பம் அழியுமாயின் புலிகள் மீதான பிம்பமும் நொருங்கிச் சரிந்துவிடும்.

ஆனால் நாம், கீழிருந்து மேலாக அந்த இயக்கத்தைப் பார்த்து வளர்ந்தவர்கள். ஊரின் தெருக்களில் நம் கண்முன்னால் திரிந்தவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர்கள், வகுப்பறைகளில் அழி இறப்பருக்காக அடிபட்டவர்கள்… இவர்கள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவர்களுக்கு ஊடாகவே இயக்கமும் நம் எண்ணங்களில் உள் நுழைகிறது. அதாவது கீழிருந்து மேலாக. உண்மையில் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாமலிருப்பது இந்த மனிதர்களைத்தான். (இந்த நிலைப்பாட்டை 80களில் வெளியேறி ஐரோப்பாவிற்கு வந்த ஒருவரிடம் சொன்னேன். அவர் சொன்னார்.. இப்படி கண்முன்னால் திரிந்தவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர்கள், வகுப்பறைகளில் அழிறப்பருக்காக அடிபட்ட நண்பர்களின் ஊடாகவே தாங்களும் புலிகள் இயக்கத்தைப் பார்ப்பதாக.. அப்படி அவர் குறிப்பிட்ட அவருடைய நண்பர்கள் சென்று சேர்ந்த இடம் புலிகள் அல்லாத வேறு இயக்கங்களாயிருந்தன)

ஆதிரைக்கு வருவோம். அது எனது அரசியல் நிலைப்பாட்டைப் பிரச்சாரப்படுத்தும், ஒரு நோட்டீஸ் அல்ல. புனைவுக்கூடாக எனது அரசியல் நிலைப்பாட்டிற்கு ‘ஆட்பிடிக்க’ என்னால் ஒருபோதும் இயலாது. நான் வாசகர்களுக்கு வழங்க முற்படுவது ஓர் அனுபவமே. எனக்கு ஒவ்வாத கருத்தென்றாலும், ஒரு பொதுத்தளத்தில் அது நிலவுகிறதெனில், அது பிரதிக்குள் நுழையும்போது நான் இடையில் நின்று கத்தரிப்பதில்லை. ஒரு மூன்றாம் மனிதனாக மௌனமாக ஒதுங்கி நிற்கிறேன். அல்ல, நிற்கப் பழகுகிறேன் என்பதே சரி.

இலங்கை இனப்பிரச்சினையைப் பற்றி, தமிழகத்தின் புரிதல் எப்படி உள்ளது? தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழஆதரவு எந்த அளவுக்கு நன்மைகளைத் தந்துள்ளது? இந்த ஆதரவினால் எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிட்டுமா? ஏனென்றால், சென்னை கொடுக்கின்ற அழுத்தத்தினால் டில்லியின் கதவுகள் திறக்கப்படும் என்ற வகையில் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்குச் சாத்தியமானது? 

தமிழகத்தை நம்பியிருந்த ஒரு காலம் உண்டு. முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் அந்த நம்பிக்கையிருந்தது. ஆனால் காலம் வெகு சீக்கிரத்திலேயே உண்மையை முகத்தில் அறைந்துவிட்டது. ஈழத்தை விடுங்கள், இன்று தமிழகத்திற்கான ஒரு ஜன்னலைக்கூட டெல்லியில் அழுத்தம் கொடுத்து திறக்க முடியாத யதார்த்தத்தை நாம் அறிவோம். அதனால் எனக்கு எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் இல்லை.

ஈழத்தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமென்பதனாலேயோ என்னவோ, அவர்களில் பலர் தாம் பிரமிப்பாக நோக்குகிற வெள்ளைக்காரர்களோ அல்லது இந்தியர்களோ தமக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றால் புளகாங்கிதமடைகிறார்கள். (நம் இலக்கியவாதிகளுக்குக் கூட தம்மை யாரேனும் ஒரு தமிழக எழுத்தாளர் பாராட்டினால் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்ற ஒரு பழக்கமிருக்கிறது. “நான் என்னைச் சொன்னேன்’ என்பதை வடிவேலுவைப்போல படிக்கவும்) தம்மை அனாதைகளாக யாருமற்றவர்களாக உணர்கிற ஒருவித மனநிலையின் வெளிப்பாடு இது. இன்னொரு புறத்தில் தமிழக ஓட்டுக் கட்சிகளைப் புறம்தள்ளிவிட்டு மாணவர்கள், இயக்கங்கள் தனி நபர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். ஒரு மானுடத் துயரம் தமக்கருகில் நடந்துமுடிந்தபோது தம்மால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியை நான் உள்வாங்கிக்கொள்கிறேன். சமயங்களில் அந்தக் குற்ற உணர்ச்சியே இலக்கில்லாமல் வெடித்து வடிகாலைத் தேடிக்கொள்கிறது.

அன்றைய நாட்களில் ஒரு வளரிளம்பருவ இளைஞனாக இருந்த நீங்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்திலும் புலிகள் அமைப்பிலும் இணைந்து செயற்பட வேண்டும் என எண்ணவில்லையா? 

என்னுடைய மூன்றாவது வயதிலேயே புலிகளுடைய ஜனநாயக விரோத செயற்பாடுகளையும், பாசிச நடவடிக்கைகளையும், வலதுசாரி அரசியலையும் நான் புரிந்து கொண்டதனால்… என்றெழுதிப்போக எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. படிப்பவர்கள் சிரிப்பார்கள் என்பதனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்.

புலிகளுடைய நிழல் அரசின் கீழ், இயக்கப்பாடல்களை முணுமுணுத்துகொண்டும், புலிகள் வெல்லவேண்டும் என விரும்பிக்கொண்டும், அதேவேளை அதற்கு என்னை ஒப்புக்கொடுப்பதைப்பற்றிய எண்ணம், சிந்தனை எதுவுமில்லாமலும் அப்பா வெளிநாட்டில் இருக்கும், மத்தியதரவர்க்க குடும்பப் பிள்ளைகளின் பிரதிநிதியாக ஒரு லௌவீக வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருந்தேன் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எதுவித ’கூச்ச நாச்சமும் இல்லை.

By

Read More

பெயரற்றது – சிறுகதை

இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. மூன்று நாட்களாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமென்றில்லை. ஒழுங்கான சாப்பாடு, குளிப்பு முழுக்கு, கக்கூசு என ஒன்றுமில்லை. ரவியண்ணனின் வீட்டின் முன் விறாந்தையில் பனங்கிழங்குகளை அடுக்கியமாதிரி படுத்திருந்த இருபது பேர்களில் கடந்த இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவனைக் கண்ணயரவே விடுவதில்லை என்று முடிவு பண்ணியிருக்கவேண்டும். “க்ர்.. புர்..” என்ற அவர்களின் குறட்டை ஒலிக்கு கவிழ்ந்து படுப்பதும், காதுகளைப்பொத்தியபடி படுப்பதுமென என்று இவனும் எல்லாத் தந்திரங்களையும் பாவித்துப்பார்த்தான். ம்கூம். நித்திரை வரவேயில்லை. போதாதற்கு தீபன் அவ்வப்போது தன் வலது காலைத்தூக்கி இவனின் தொடைக்கு மேலே போட்டு “அவ்..உவ்..” என்று புரியாத மொழியில் புசத்தியபடியிருந்தான். அப்படி அவன் காலைத் துாக்கிப் போடுகிற ஒவ்வொரு தடவையும் இவனுக்கு இடுப்பில் கிடக்கிற சாரம் கழன்று போய்விடுமோ என்று சீவன் போனது. “பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குச் சீவன் போகிறது” என இதைத்தான் சொன்னார்களோ என்று நினைத்துக் கொண்டான். அடிக்கொரு தடவை இடுப்போடு சேர்த்து சாரத்தை இறுக்கி விட்டுக்கொண்டாலும், அது இளகியபடியிருப்பதாகவே உணர்விருந்தது.

விறாந்தையோடு இணைந்து இரண்டு அறைகள் இருந்தன. உள்ளே பெண்களுக்கு ரவியண்ணன் இடமொதுக்கிக் கொடுத்திருந்தார். அவர்களில் கிருஷாந்தியையும் தமிழினியையும் இவனுக்கு ஏலவே தெரிந்திருந்தது. சரியான பயந்தாங்கொள்ளிகள். நேற்றும் பார்த்தான். இரவில் பாத்ரூம் போகும்போது துணைக்கு ஐந்தாறு பேரை அழைத்துச் சென்றார்கள். அத்தனை பேரும் ஒவ்வொருவரின் கையையும் பற்றிப் பிடித்தபடி விறாந்தையில் படுத்திருந்தோரின் கால்களுக்கிடையில் மெதுவாக நடந்து சென்றார்கள். அதனாலேயே ஒருபோதும் துாங்கக் கூடாதென்று இவன் நினைத்தான். சற்றே கண்ணயர்ந்தாலும், தீபனின் கால்பட்டு சாரம் இடுப்பினின்றும் நழுவி விட்டால் என்னாகும் என்ற நினைப்பு உதறலை உண்டுபண்ணியது. “பிறகு பப்ளிக் ஷோ தான். நாசமாப்போன நிலவு வேற, நேரே எறிக்குது.. நல்ல லைற்றிங்”

இவனுக்கு சாரம் கட்டிப் பழக்கமிருக்கவில்லை. அதற்கெல்லாம் பதினெட்டு வயதாக வேண்டும் யாரும் சொல்லாமலேயே ஏனோ தனக்குள் தீர்மானித்திருந்தான். அரைக்காற்சட்டைதான் போடுவான். அல்லது ரன்னிங் ஷோர்ட்ஸ். தர்க்கத்தின்படி பார்த்தால் இவன் ரன்னிங் ஷோர்ட்ஸ்ஸோடுதான் கொடிகாமத்திற்கு ஓடி வந்திருக்க வேண்டும். சுழிபுரத்தில் எங்கேயோ ஒரு பள்ளிக்கூடத்தில் ஒன்னியமார்க்ஸ் கெட் ரெடி என்பதற்குப் பதிலாக “கொப்பர் கொதியில வாறார்.. ஓடு” என்றுதான் சொல்கிறார்கள் என்று ஆனந்தன் அண்ணன் சொல்லியிருந்தார். புளுகாகவும் இருக்கக் கூடும். பொய்யை உண்மையைப்போலவே சொல்ல அவருக்குத் தெரிந்திருந்தது. கந்தக மணம் நிறைந்திருந்த நவாலி தேவாலயத்து வீதியில் இன்னமும் அடங்காதிருந்த புழுதியில் இரத்தமும், தனித்த தலைகளும், பிளந்திருந்த வயிறுகளின் வெளியே குவிந்திருந்த குடலும், அங்குமிங்குமாகப் பிய்ந்திருந்த சதைத் துண்டங்களும் கால்களில் மிதிபட்டபடியிருக்க, ஒற்றைச் சுவரொன்றின் அருகில் கடைசியாக அவரைக் கண்டான். கைகளை இரண்டையும் தலைக்குமேலே விரித்தபடி மேலே வெறித்தபடியிருந்தது அவரது உடல். சேர்ட் பொக்கற்றுக்கு சற்று மேலே துணி கிழிந்திருந்தது. இரத்தம் பீறிடவில்லை. இலேசாகக் கசிந்து சேர்ட்டில் பரவியிருந்தது. ஒருகணம் ஆனந்தன் அண்ணன் நடிக்கிறாரோ என்று தோன்றிய நினைப்பை அழித்துக் கொண்டான். கண்கள் மேலே சொருகி உடல் பஞ்சானதைப் போலிருந்தது. சூழ்ந்த அவலக்குரலை மூளை கிரகித்துக் கொள்ளவில்லை. அரைமணி நேரத்தின் முன்னர் வெள்ளைப் பற்கள் தெரிய பெருத்த உதடுகளுக்கூடாக சிரித்த ஆனந்தன் அண்ணன் செத்துக்கிடந்தார். அடுத்த இரண்டு மணிநேரத்தில் கோம்பயன் மயானத்தில் நெருப்பு அவரைத் தின்று தீர்த்தது. ஆயிற்று மூன்று மாதங்கள்.

ஆனந்தன் அண்ணன் நம்பும்படி சொன்னார். “நீ நம்பாட்டிப் போ, ஆனால் அப்படித்தான் சொல்லுவாங்கள். பெடியங்கள் வரிசையா நிக்க, கொப்பர் கொதியில வாறார் ஓடு.. என்ற உடனை ஓடத்தொடங்குவாங்கள்.”

அன்றைக்கு அப்படித்தான் சொன்னார்கள். “ஆமிக்காரன் கொதியில வாறான். ஓடு..” அப்பொழுது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தான். போட்டிருந்த காற்சட்டையையும் சேட்டையும் ஒரு சைக்கிளையும் தவிர்த்து ஏதுமிருக்கவில்லை. காற்சட்டை அரியாலைக்குள் அதிகாலை மழையில் நனைந்தது. நாவற்குழிப் பாலத்தில் ஏறப் பயந்து ஏரிக்குள் இறங்கியதில், உப்பு நீரிலும் நனைந்தது. அப்போது அடக்க முடியாத அவசரத்தில், இன்னொரு உவர்நீரில் மேலும் நனைந்தது. நனைந்து நனைந்து சாவகச்சேரி வெயிலில் காய்ந்துபோயிருந்தது காற்சட்டை. அன்றைக்கு இரவு, பூச்சி மருந்து மணக்கிற மடித்த சாரமொன்றினைத் தந்த ரவியண்ணன், “இப்ப படுங்கோ, மிச்சத்தை காலமை கதைக்கலாம்” என்றார்.

000
காரைநகரிலிருந்து சனங்கள் பொன்னாலைப் பாலத்திலும் பாலத்தின் கீழே தொடையளவு தண்ணீரிலும் ஓடிவந்துகொண்டிருந்த போது அதுநாள் வரை வெறுமனே பற்றை படர்ந்துபோய்க்கிடந்த தனது வளவுக்குள் அவசரஅவசரமாக ஆட்களைப் பிடித்து பத்மாக்கா மிளகாய்த்தோட்டம் செய்து கொண்டிருந்தார். நிலம் கொத்திய ராசுவன் “அம்மா, இந்த நிலம் மிளகாய்க் கண்டுக்குச் சரிவராது” என்றபோது பத்மாக்க இடுப்பில் கைகளை ஊன்றியபடி அவனை முறைத்தார். “நான் சொன்னதை மட்டும் நீ செய்” என்றார்.

பொன்னாலைக்கும் காரைநகருக்குமிடையிலிருந்த கடல் ஆழம் குறைந்திருந்தது. அமைதிக்கடல். கடலுக்குள் நீண்டிருந்த வீதியில் ஒன்பது பாலங்கள் இருந்தன. காரைநகருக்குள் கடற்படையும் இராணுவமும் காலையில் இறங்கியதிலிருந்து சண்டை நடந்துகொண்டிருந்தது. சனங்கள் கையில் கிடைத்தவற்றுடன் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். பாலங்களை பெடியங்கள் எந்த வேளையிலும் குண்டுவைத்துத் தகர்க்கலாம் என்ற கதை பரவியிருந்ததால் நிறையப்பேர் வீதிக்கு அருகாக கடலுக்குள் இறங்கியிருந்தனர்.

இடம்பெயர்ந்து வந்த சனங்கள் வாசிகசாலைகளிலும் கோயில்களிலும் அவசரத்திற்குத் தங்கியிருந்தார்கள். பூதராசி கோயிலின் கூரைத் தீராந்திகளில் ஏணைகள் குழந்தைகளைச் சுமந்து தொங்கின. வெளியே மூன்று கற்களை வைத்து சுள்ளித்தடிகளையும் பனம்பாளைகளையும் நெருப்புமூட்டி கஞ்சி காய்ச்சினார்கள். முதியவர்கள் பசிக் களையில் கோயில் துாண்களில் முதுகு சாய்த்திருந்தனர். அவர்களின் கண்கள் எங்கோ வெறித்திருந்தன. காரைநகரை பெடியங்கள் கைவிட்டு வந்தார்களாம் என்ற செய்தியை சுரத்தில்லாமல் இளைஞன் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த போது கோயிலின் பரிபாலனசபைக்காரர் மோட்டர் சைக்கிளில் அங்கு வந்திருந்தார். அவர் யாரையும் ஏதும் கேட்டாரில்லை. “அகதிச்சாதியள், இந்தப் பக்கமும் வரக்கூடாது.” என்பதே அவரது முதற்சொற்களாயிருந்தன.

“தம்பி, இந்த ஒரு பொழுதுக்கு மட்டும் தங்கிப்போட்டு போறம். பெண் பிரசுகள் களைச்சுப் போட்டுதுகள்”

“அந்த இந்தக் கதையில்லை, பின்னேரப் பூசைக்கு கோயில் கிளீனா இருக்க வேணும். சாப்பிட்ட கையோடை வெளிக்கிடுறியள். சரியோ..” என்றவர் உள்ளே கர்ப்பக்கிரகத்திற்கு அருகாக நின்ற சிறுவன் ஒருவனை “டேய், நாயே இங்காலை வா மூதேவி” என்று திட்டினார். அவன் பதுங்கிப் பதுங்கி வெளியேறினான். பின்னர் அவர் அகதி நாய்கள் என்ற படி மோட்டர்சைக்கிளில் புறப்பட்டார்.

“அகதிச்சாதியெண்டொன்று இருக்கோ” என்று இவனைக் கேட்டான் அவன். பக்கத்து வாசிகசாலையிலிருந்து புளிச்சல் விளையாட வந்திருந்தான். இவனது வயதுகளில் ஒன்றிரண்டு கூடிக்குறைந்திருக்கலாம். அவனும் மற்றவர்களும் அன்றைக்கே கோயிலிலிருந்து வெளியேறி வாசிகசாலையில் புகுந்து கொண்டார்கள் என்றான். இவனது வீட்டிலும் அப்பம்மா வீட்டிலும் அவர்களைப் போல நிறையப் பேர் தங்கியிருந்தார்கள்.

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பேணிகளின் மீது பந்தை கோபத்தோடு வீச்சுடன் எறிந்த போது மீண்டும் ஒருதடவை “அகதிச்சாதியள்” என்று அவன் சொல்லிக்கொண்டான். அந்த வார்த்தை அவனைக் காயப்படுத்தியிருந்தது. இவனுக்குத் தெரிய அப்படியொரு சாதி இருந்திருக்கவில்லை. ஆனாலும் நாய்ச்சாதியென்ற ஒன்றை பத்மாக்காவும் மில்கார பாலுவும் அடிக்கடி சொல்ல இவன் கேட்டிருந்தான்.

சும்மா கிடக்கிற வளவுகளில் இடம்பெயர்ந்த சனங்களை இயக்கம் குடியமர்த்துகிறதாம் என்ற கதை பரவியபோது பத்மாக்காவின் மிளகாய்க் கண்டுகள் காய்ந்து வாடிக் கருகிப்போயிருந்தன. இம்முறை வேறொரு ஐடியாவினை அவர் பாவித்தார். வளவு முழுவதும் பனங்கிழங்குப் பாத்திகளை அவர் போட்டார். பிரேதங்களைப் புதைத்த மண் கும்பிகளைப்போல பனங்கிழங்குப் பாத்திகள் வேலிக்குள்ளால் பார்த்தபோது தெரிந்தன. “பனங்கொட்டைகள் எப்பொழுது கிழங்குகளாக மாறும்” என்று இவன் அப்பம்மாவிடம் கேட்ட அடுத்தநாள் பத்மாக்கா வேலியருக்கில் சன்னதம் கொண்டு ஆடினார்.

“எளிய அகதி நாய்கள், வேலியைப் பிடுங்கிக்கொண்டு போயிருக்குதுகள். கள்ளச்சாதியள் அடுப்பெரிக்கிறதுக்கு என்ரை வேலியின்ரை கருக்கு மட்டைதான் கிடைச்சதோ.. பூதராசி அம்மாளே உந்தக் கேடு கெட்டதுகள் புழுத்துச் சாகோணும்..” என்று மண்ணை இரண்டு கைகளாலும் வாரி அள்ளி காற்றில் வீசியெறிந்து கத்தினார். அவரது குரல் எட்டு வீட்டுக்குக் கேட்கத்தக்கதாய் இருந்தது. தெருவுக்கு இறங்கினால் வீணாண பிரச்சனைகள் வருமென்று அப்பம்மா படலையை மூடிவிட்டு வந்தார். அவர் பத்மாக்கவோடு கதைப்பேச்சை நிறுத்தி நீண்ட நாட்களாயிருந்தது.

“ஆரோ, ஏலாக்கொடுவினையில ரண்டு கருக்கு மட்டையை எடுத்துக்கொண்டு போனதுக்கு இவள் பத்மா ஆடுற ஆட்டத்தைப்பார்”

tamiltigersஇப்பொழுது பத்மாக்காவின் குரல் படலையடியில் கேட்டது. “இஞ்சையும் கொஞ்சப்பேர், காசைக் கண்ட உடனை தலைகால் தெரியாமல் ஆடுதுகள். இதுகள் அதுகளுக்கு அண்ட இடம் கொடுக்கிறதாலைதான் அதுகள் தலைக்கு மேலை ஏறி ஆடுதுகள். இனி ஆரும் வேலியில கை வைக்கட்டும். அடிச்சு முறிப்பன்.”
அன்று இரவு இவனின் சித்தப்பா விறுவிறென்று பத்மாக்கா வீட்டுப்படலையருகில் சென்று“பத்மாக்கா, வெளியில வாங்கோ.. கொஞ்சம் கதைக்கோணும்” என்றார். பத்மாக்கா வரவில்லை. உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது யன்னல்களுக்கால் தெரிந்தது. சித்தப்பா படலையில் கைவைத்துத் தட்டினார். “பத்மாக்கா வெளிய வரப்போறியளோ இல்லையோ..” இதற்கிடையில் ஓடிப்போய் அப்பம்மா சித்தப்பாவின் கைகளைப்பற்றி இழுத்து வீட்டுக்கு கூட்டிவந்தார். இம்முறையும் பத்மாக்கா சித்தப்பாவிடம் முறையாக வாங்கிக் கட்டினார் என்ற செய்திக்காக காத்திருந்த இவனுக்கு ஏமாற்றமாயிருந்தது. சித்தப்பா காலையிலேயே புறப்பட்டுப்போனார். சற்றுநேரத்தில் இரண்டு இயக்கப்பெடியங்கள் சைக்கிளில் வந்து பத்மாக்காவை விசாரித்தார்கள்.

“என்ன அக்கா, சாதிப்பேருகளைச் சொல்லித் திட்டிறியளாம்”

“ச்சீச்சீ, கள்ளர் கூடிப்போச்சு தம்பியவை, நான் சும்மா பொதுவாத்தான் சொன்னனான். வேலியைப் பிய்ச்சுக் கொண்டு போட்டுதுகள். ஆருக்கும் கோபம் வரத்தானே செய்யும்”

“சரியக்கா, இனிமேல் முறைப்பாடுகள் கிடைக்காதமாதிரி நடந்துகொள்ளப்பாருங்கோ..” என்று புறப்பட்டவர்களை பத்மாக்கா தடுத்து நிறுத்தினார். “தம்பியவை, பனங்கிழங்கு போட்டிருக்கிறன். என்ரை வளவுக் கிழங்கு, நல்ல ருசியாயிருக்கும். கிழங்கு புடுங்கேக்கை மறக்காமல் வாங்கோ, உங்களுக்குத்தான்” என்றார்.

பத்மாக்கா பனங்கிழங்குகளைப் பிடுங்கிக் கொஞ்சக்காலம் வளவு சும்மா கிடந்தது. திடீரென்று ஒருநாள் ஆட்கள் கூடி மூன்றடிக்கு ஒன்றென வாழைக்கன்றுகளை அங்கு நட்டுக் கொண்டிருந்தபோது மாதகலில் இருந்து சனங்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.

0 0 0

கொடிகாமத்தில், ரவியண்ணையின் வீட்டுக் கேற்றடியில் நின்றபோது உள்ளே வாழைத்தோட்டங்களோ பனங்கிழங்குப் பாத்திகளோ இருக்கலாமென இவனுக்கு ஏனோ தோன்றியது. சைக்கிளை உருட்டியபடி நுழைந்தான். அப்படியேதும் இருக்கவில்லை. மூன்று அறைகளுடன் கூடிய சிறிய வீடு அது. குசினி தனியே இருந்தது. ஏற்கனவே சனங்கள் நிறைந்திருந்தார்கள். தயங்கி நின்று திரும்பிப்பார்த்தான். இவனுக்குப்பின்னால் அம்மா, அப்பம்மா, அத்தை, ஐயாத்துரை மாஸ்டர், அவரது மனைவி, மேனகா, சீனியாச்சி, தீபன், கமலாக்கா எல்லோரும் நின்றிருந்தனர். ரவியண்ணையை யாரென்று தெரிந்திருக்கவில்லை. எட்வேர்ட் அங்கிள்தான் கைதடிப்பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வைத்து “கொடிகாமத்தில எனக்குத் தெரிஞ்ச இடம் ஒன்றிருக்கு, நீங்கள் முதலில அங்கை போங்கோ. ரண்டொரு நாளில நான் எழுதுமட்டுவாளில இடம் ஒழுங்குபடுத்துறன்.” என்று இடம் சொல்லிவிட்டார். கொடிகாமம் சந்திக்கு சற்றுத்தள்ளிப் பிரிகிற ஒழுங்கையில் அவரது லொறி நிற்கிறது. அதற்கடுத்த வீடு.

எட்வேட் அங்கிளை எதேச்சையாகத்தான் சந்தித்தார்கள். கைதடிக்கு வரும்வரையிலும் எங்குபோவதென்ற யோசனையிருக்கவில்லை. எப்படியாவது வெளியேறிவிடவேண்டுமென்ற ஒன்றைத்தவிர. பிறகு எங்கு போவதென்று தெரிந்திருக்கவில்லை. பொழுது பட்டிருந்தது. இரவை எங்காவது சமாளித்துவிட வேண்டும். விடிந்ததும் ஏதாவது கோயிலையோ வாசிக சாலையையோ தேடிக்கொள்ளலாம்.

அம்மாதான் எட்வேட் அங்கிளைக் கண்டாள். வேலியொன்றின் ஓரமாக ஒரு பனங்குற்றியில் அமர்ந்திருந்தார். “எட்வேட் அண்ணன்.” என்று கத்தினாள். அவர் கண்டுகொண்டார். எழுந்து கைகளை விசுக்கியவாறு நடந்து வந்தார். அவருக்குச் சொந்தமான தென்னந்தோட்டமொன்று எழுதுமட்டுவாளில் இருந்தது. அதில் ஓரிடம் கேட்கலாம் என்று அம்மா நினைத்திருந்தாள்.

“வந்திட்டீங்களே, நான் என்ரை குடும்பத்தைப்பாத்துக் கொண்டு நிக்கிறன். நானிங்கை அலுவலா தோட்டத்தில நிண்டனான். அப்பதான் அறிவிச்சிருக்கிறாங்கள். இதாலதானே வரவேணும். அதுதான் நிக்கிறன். நீங்கள் எங்க தங்கப் போறியள்..” என்று கேட்டபோது அம்மா வெறுமையாக அவரைப்பார்த்தபடி மௌனமாக நின்றாள். இவன் தலையைக் குனிந்து கொண்டான். அழுகை வரும்போலிருந்தது. எட்வேட் அங்கிள் சட்டென்று சுதாகரித்துக் கொண்டார்.

“ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். ஆளையாள் மாறுப்படாமல் கொடிகாமம் சந்திக்குப் போய் நில்லுங்கோ, நான் எங்கடையாட்களையும் கூட்டிக்கொண்டு வாறன். எல்லாம் சமாளிக்கலாம்.”

“அண்ணன், எங்களோடை வேறையும் ரண்டு குடும்பம் நிக்குது” என்றாள் அம்மா. அவர் சொல்லப்போகிற பதிலுக்காக ஐயாத்துரை மாஸ்டர் ஏக்கத்தோடு நிற்பதாக இவனுக்குத் தோன்றி அது கஸ்ரமாயிருந்தது.

By

Read More

சுதர்சினி (சிறுகதை) – தமிழினி

-மறைந்த தமிழினி அவர்கள்  2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை)
மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம்

விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ளே ஒருவரோடொருவர் முகத்தை முட்டிக்கொண்டு புளுங்கி அவியும் நெருக்கத்தில், அழுக்கு மனித மூச்சுக்களை மாறி மாறி சுவாசிப்பதைவிட இது எவ்வளவோ மேல்.

சிறைச் சாலையின் வெளிப்புறம் தார் ஊற்றப்பட்ட சிறிய உள்வீதி. சிறிய மலர்ச் செடிகள், கொடிகள், அவற்றை சுற்றி அழகுக்காக அடுக்கப்பட்ட கற்கள். மிகப்பழமையான பெரிய கட்டடங்களைக் கொண்ட இந்த சிறைச்சாலையின் அமுக்கமான சூழ்நிலையில், திரும்பும் திசைகளிலெல்லாம் ஏதேதோ இரகசியங்களும் புதிர்களும் நிறைந்திருப்பதுபோலவும், ஒரு பயங்கர சூனியக்காரியின் வெறி கொண்ட கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இனம் புரியாத கலக்கம் எப்பொழுதும் எனக்குள் படர்ந்து உறைந்திருந்தது. ஒருவிதமான பொறாமையோடும் குரூரத்தோடும் பசியோடும் ஒரு நிழலுருவம் போல அது அலைந்துகொண்டே திரிவது போன்ற பிரமை சதா என்னைப் பின்தொடர்ந்து வதைத்துக் கொண்டிருந்தது.

எனக்கு ஆறுதல் தரும் தனிமையைக்கூட அதிக நேரம் அனுபவிக்க முடியாதபடி மனித முகங்களை மட்டுமல்ல வெறுமையைக்கூட விழி நிமிர்த்தி பார்க்க முடியாத இருண்மைக்குள் என் காலங்களை சிறை விழுங்கிக் கொண்டிருந்தது. அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண் டும் நின்றுகொண்டும், கைதிகளில் சிலர் ஏதாவது பேசிக்கொண்டும்  சிரித்துக்கொண்டும் யோசித்து அழுதுகொண்டும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் இரவுச்சோறு கொடுக்கும் வரிசை முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளே அடைக்கப்படுவதற்கான அழைப்பு இனி எக்கணத்திலும் வரலாம். அதை நினைத்தாலே மூச்சு இறுகுவது போல இருக்கிறது. கடவுளே இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட மாட்டார்களா என்ற வேண்டுதலோடு, முரண்டு பிடிக்கும் வண்டிக் குதிரை மாதிரி மனசு திமிறித் துடிக்கிறது, தலையை தொங்கப் போட்டபடி செம்மறியாட்டுத் தோரணையில் வரிசைக்கு போயே ஆகவேண்டும். ஒவ்வொருவரையும் தோளிலே தட்டித் தட்டி எண்ணி கவனமாக கணக்கு வைத்துக்கொள்ளுவார்கள். காலம்கூட மனுஷ ஆயுளை இப்படித்தான் கெட்டியாக கணக்கு பண்ணிக் கொள்கிறது போல. என் இதயத்தில் மெலிதாக வெடித்துக்கிளம்பிய விரக்திப் புன்னகை அலட்சியமாக இதழ்களில் நெளிந்தது. இந்த சிறைச்சாலைக்குள் இப்படியே இன்னும் கொஞ்ச காலம் அடைபட்டுக்கிடந்தால், பெரிய கேடியாகவோ மகாஞானியாகவோ மாறிவிடலாம் என எண்ணிக்கொண்டேன். எந்தப் பாவனைகளும் இல்லாமல்,மனித உணர்வுகளை அப்படியே துகிலுரித்து காட்டும் இடமாகவே சிறைச்சாலை அமைந்திருந்தது. பெருமூச்சை வெளியேற்றிக்கொண்டே கண்களை அலைய விடுகிறேன். இரவுக்காவல் தலைமை அதிகாரி, திறப்புக் கோர்வைகள் சப்தமெழ பிரதான வாசலருகில் இருக்கும் அலுவலகத்தின் சாய்வான பகுதியை கடந்து இறங்குகிறாளா என என்னைப் போலவே பலரும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அவள் வரும்போதே, ஏய். ஏய். ஒக்கமலா போலிமட்ட யன்ட (எல்லாரும் வரிசைக்கு போங்க) என உரத்துக் கத்திக்கொண்டேதான் வருவாள். குறித்த நேரத்தில் வரிசைக்கு வராமல் தாமதமாக எவராவது வந்துவிட்டால், தனது காக்கி சீருடை கவுணின் இடுப்பு பெல்டை சரக்கென உருவி அடித்து விளாசத் தொடங்கிவிடுவாள். அவள் வருவதற்கு முன்பதாகவே வரிசைக்கு போய்விட வேண்டுமென்ற தவிப்பு எல்லோரைப் போலவே எனக்கும் இருக்கிறது.

அன்றும் வழக்கம்போலவே நாளாந்தம் வழக்குகளுக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டவர்கள் திருப்பிக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பதிவு செய்து பரிசோதனை செய்து உள்ளே அனுப்ப இன்னும் ஒரு மணி நேரமேனுமாகலாம். நீதிமன்றத்திற்கு போனவர்களில் எவராவது விடுதலையாகி சென்றுவிட்டார்களா, புதிதாக எவராவது சிறைக்கு வந்திருக்கிறார்களா என ஆராய்வது அங்கு கைதிகளாக இருப்பவர்களின் ஆர்வமான பொழுதுபோக்குகளில் ஒன்று. தமது கவலைகளை ஒத்திவைத்து விட்டு, அடுத்தவரின் வம்பு தும்புகளை தேடி விசாரிப்பதில் கிடைக்கும் தற்காலிக திருப்திக்காக அலையும் மனது.

திடீரென நாலைந்து பெண்கள் சேர்ந்து நின்றுகொண்டு வாசலைப் பார்க்கிறார்கள். அங்கே “வரேங்பாங். வரேங். வரேங்” (வாடி. வா. வா.) என்ற அட்டகாசமான வரவேற்பு அளிக்கப்படும் சத்தம் பலமாகக் கேட்கிறது. “ம். இங்கிருந்து விடுதலையாகிப் போன ஒண்டு திரும்பவும் வருகுது போல, இங்க சில பேருக்கு போறதும் வாறதும்தானே வேலை..  வெறுப்புடன் அலுத்துக் கொண்டாள். என்னருகில் உட்கார்ந்திருந்த வசந்தி, என்னைப்போலவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வருடக்கணக்காக விசாரனைக் கைதியாக இருப்பவள். எனக்கென்னவோ எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. அந்தளவுக்கு சிறை வாழ்வு அலுத்து, வெறுத்துப் போயிருந்தது. சும்மாவா இரண்டு வருடம் முடிந்து மூன்றாவது வருடத்தின் முக்கால் பங்கும் முடித்துவிட்டதே. “அன்ன சுதர்சினி எவில்லா (அதோ சுதர்சினி வந்திட்டாள்..) அனைவருக்கும் ஒரு சுவாரசியமான தகவலாக அது பரவியது. தமது உரையாடல்களிலும் யோசனைகளிலும் மூழ்கியிருந்தவர்கள் ஒருதடவை திடீரென திரும்பிப் பார்த்தார்கள். நான்கு அடிக்கு மேற்படாத உயரம், கறுத்து மெலிந்த தேகம். போதை தேடி உடல் நடுங்கும் பதைபதைப்பான தருணங்களில் கையில் அகப்படும் ஏதாவது கூர் ஆயுதத்தால் தனக்குத்தானே கீறிக் கொண்டதால் ஏற்பட்ட காயங்கள். கைகளிலும் கன்னங்களிலும் தளும்புகளாக பட்டையெழும்பிக் கிடக்கும். எண்ணெய், தண்ணிர் கண்டிராத கழுத்துவரைக்குமான செம்பட்டை கூந்தல், வெற்றிலை குதப்பிக் குதப்பி அவிந்து போன உதடுகள். முன்னிரண்டு மேற்பற்களும் உடைந்துபோன இடைவெளி எப்போதும் முகத்தை மூடிப்படர்ந்து கிடக்கும் சிடுசிடுப்பு, மூச்சுப் பொருக்க உரத்த குரலில் கத்திப்பேசும் இயல்பு. ப்ரா அணியத் தேவையில்லாத தட்டையான உடல்வாகு. எப்போதும் அலைந்து கொண்டேயிருக்கும் பார்வையும் அரக்கப்பரக்கப் பாயும் நடையும்தான் சுதர்சினி.

காலையிலிருந்து மாலைவரை சிறைச்சாலைக்குள் ஒடிக்கொண்டே இருக்கும் அவளுக்கு எப்போதும் செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டேயிருக்கும். கைதிகள் குளிக்குமிடத்தில் சிறிய பிளாஸ்ரிக் குடுவையில் தண்ணிர் பிடிப்பதற்கே உயிர் போய் வரும். இழுபறிகள், ஏச்சுப்பேச்சுக்கள் எல்லாவற்றையும் அடக்கி அங்கே ஒலிக்கும் சுதர்சினியின் குரல். “ஏய். அங்வென்ன அங்வென்ன. அங். அங்.” (ஏய். விலகு. விலகு.) ஒரேயொரு குழாயிலிருந்து மட்டுமே தண்ணிர் வடிந்து கொண்டிருக்கும் பெரிய தொட்டியின், உயரமான விளிம்புக் கட்டின் மீது ஒரே தாவிலில் ஏறி நிற்பாள். அதுவரையில் நெருக்குவாரப்பட்டு இரைந்து கொண்டிருந்த கூட்டத்தினர். மூச்சுவிடுவதற்கே பயந்து பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்களின் பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு, தான் கொண்டு வந்த பெரிய வாளியை வைத்து தண்ணிர் பிடிக்கத் தொடங்கி விடுவாள். எல்லாருடைய கோபங்களும் புறுபுறுப்புகளும் வெளியே வர முடியாமல் ஆற்றாமையோடு தொண்டைக்குள்ளே சிக்கி பொங்கிப் பொருமி, நெஞ்சு வெடிக்க விலகி நிற்பார்கள். முதலில் வைத்த ஒரு பெரிய வாளி நிறைந்ததும் அடுத்த பெரிய வாளியை தூக்கி வைப்பாள்.தன்னைச்சுற்றி ஒரு கூட்டம் நிற்பது பற்றியே கவலைப்படாமல், அலட்சியத்துடன் சாவகாசமாக வெற்றிலையை மென்று புளிச்சென துப்பிக்கொண்டு தனது காரியத்தில் கண்ணாயிருப்பாள். இந்த வேலையை விரைவாக முடித்து விட்டு அவள் அடுத்த வேலைக்கு ஒட வேண்டும்.

உடல் பெருத்த தளுக்குமொளுக்கு முதலாளி அக்கா குளிப்புக்கு ஆயத்தமாக வருவாள். சுதர்சினி நிறைத்து வைத்த பெரிய வாளிகளில், தன் வீட்டு குளியலறையில் குளிப்பது போல மிடுக்காக, நீராடத் தொடங்கிவிடுவாள். அவளுக்கு கை கால் முதுகு என சாவாங்கமும் சுதர்சினி தேய்த்துவிட, தண்ணிர் நிறுத்தப்படும் நேரம் வரை அவளின் குளிப்பு முடியாது. காத்து நிற்கும் மற்றவர்களுக்கு உடம்பில் தேய்த்துக் கொண்ட சோப்பு துரை காய்ந்து பொருக்கு வெடிக்கத் தொடங்கிவிடும். சுதர்சினி மனம் வைத்து அரைக் கோப்பை ஒரு கோப்பை தண்ணிர் எடுக்க விட்டால் ஏதோ கொஞ்சம் கழுவித் துடைத்துக்கொண்டு வரலாம். இல்லாவிட்டால் சுடலைப் பொடி பூசியோன் கோலத்தில் திரும்ப வேண்டியதுதான். அவர்களை எதிர்த்து எதுவுமே முடியாது, அதிகாரிகளிடம் புகார் செய்யவும் முடியாது.

உணர்ச்சி வசப்பட்டு யாராவது ஒருவர் இம்மாதிரியான அத்துமீறல்களை தட்டிக்கேட்க முற்பட்டால் அல்லது சிறை காவலர்களிடம் புகார் செய்ய முற்பட்டால், பாதிக்கப்பட்ட ஒருவர்கூட சேர்ந்து வர மாட்டார்கள். அப்படிச் செய்வதன் பிரதிபலனாக ஏற்படக்கூடிய விளைவுகளின் பயங்கரத்தை எண்ணி மெளனமாக வாயை மூடிக்கொண்டு ஒதுங்கிப் போய் விடவே விரும்புவார்கள். சுதர்சினியின் இந்த குளிப்பாட்டும் வேலைக்கு கூலியாக ஒன்றிரண்டு சோப்புகட்டிகள் அவளுக்கு கிடைக்கும். தமது நாளாந்த சம்பாத்தியத்திற்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்வதில் அவளும் அவளது கூட்டாளிகளும் மிக அவதானமாக செயற்படுவார்கள்.

பெற்றா என்பது ஒரு தாதா பெண்ணின் பெயர். நடுத்தர வயதைத் தாண்டிய, உயர்ந்த கறுத்த இறுகிய தேகம், புன்னகையின் சுவடறியாத முகம், வாய் நிறைய வெற்றிலைக் குதப்பல், கண்களில் இடையறாத போதை மயக்கம், அணிவகுப்பில் செல்லும் இராணுவம் போன்ற வேகநடை. போகிற வழியில் நிறைந்த வயிற்றுடன் கர்ப்பிணிப் பெண் நின்றாலும் தள்ளி விழுத்திக்கொண்டுதான் போவாள். இவளுக்கு சிறைக்காவலர்களே பயப்படுவார்கள். அதிகம் வாய் திறக்காத பெற்றா “ஏய்” என ஒரு குரல் எழுப்பினாள் என்றால் சிறைச்சாலையில் ஊசலாடும் காற்றுக்கூட அசைவதை நிறுத்திவிடும்.

எதனையுமே கணக்கெடுக்காத தோரணையில் எப்பவுமே போதை மயக்கத்திலிருக்கும் பெற்றாவின் உத்தரவுக்காக ஒரு அடியாள் பட்டாளமே கைகட்டி காத்திருக்கும். எங்கேயோ விடுமுறைக்கு போய் வருவது மாதிரி வெளியில் போவதும் போன வேகத்தில் வருவதுமாக இவளின் ஆயுள்காலம் சிறையிலேயே கழிந்து கொண்டிருந்தது.

ஒருநாள் மாலை சிறைக்கதவுகள் மூடப்பட்டு சற்று நேரத்தில், கோழியை அமுக்குவது போல ஒரு பெண்ணை சுவரோடு அமுக்கிவைத்துக் கொண்டு, அடிக்கத் தொடங்கினார்கள் பெற்றாவின் அடியாட்கள். அடிவாங்கும் பெண் உரத்த குரலில் கதறினாள். மற்றவர்கள் தமது கண்விழி பிதுங்கப் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே பரபரப்பு சத்தம், இரைச்சல். பெற்றா அந்த மண்டபத்தின் நடுவில் கால்களை பரப்பி நின்றபடி, தனது இடுப்பிலிருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள், வலதுகை கட்டைவிரலையும் ஆட்காட்டிவிரலையும் சேர்த்து மூக்குத்தூளை ஒரு கிள்ளு கிள்ளி எடுத்து நிதானமாக மூக்குக்குள் அடைந்து முகத்தை அப்புறம் இப்புறம் என சுழித்து, கண்களை மூடி அதன் காரத்தை ரசித்து உள்ளெடுத்தவாறு தலையை சரித்து அடிவாங்கிக் கொண்டிருக்கும் பெண்னை பார்த்து மோசமான வார்த்தைகளால் திட்டினாள்.

சத்தங்கள் வெளியேயும் கேட்டிருக்க வேண்டும். இரவுக்காவல் அதிகாரி வெளியிலிருந்தபடியே, “ஏய். அத்துல மொகதே சத்தே” (ஏய். உள்ளுக்கு என்ன சத்தம்) எனக் கேட்டார். உடனடியாக அடி நிறுத்தப்பட்டது. அடிவாங்கிய பெண்ணின் மெலிதான விசும்பலைத்தவிர அனைவரும் நிசப்தமானார்கள். பெற்றா வாசலருகே போய் இதமான குரலில் பணிவான தோரணையுடன் அதிகாரியிடம் பேசினாள்.

“ஒன்றுமில்லை நோனா புதுசா வந்த பைத்தியம் ஒண்னு சத்தம் போடுது.”

“அப்பிடியா கொஞ்சம் பாத்துக் கொள்ளு பெற்றா”

“ஆமாம் நான் பாத்துக் கொள்ளுறேன் நோனா நீங்க கவலைப்படாமல் போங்க” அதிகாரி பொறுப்பை பெற்றாவிடம் கொடுத்துவிட்டு அலுப்புடன் நகர்ந்து செல்லத் தொடங்கினார். பெற்றாவின் குரல் அதிகாரமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

“ஏய் உங்கட உங்கட வழக்குகளுக்கு வந்தமா போனமா என்றிருக்க வேணும் தேவையில்லாம சிறைச் சாலையை திருத்துற வேலைக்கு வெளிக்கிட வேணாம். இங்க வாலாட்டினா இதுமாதிரிதான் நடக்கும். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றா எனக்கு சொல்லுங்க, அங்க இங்க சொல்லி பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கவேணாம். உங்களுக்கு சிறை புதுசா இருக்கலாம். நான் இங்க பழம் திண்டு கொட்டையும் போட்டுட்டன். புதுசா வாற ஆக்களுக்கு இங்க எப்பிடி நடந்துகொள்ள வேணுமென்னு பழைய ஆக்கள் சொல்லி வையுங்க” என தொடர்ந்த அவளின் கெட்ட வார்த்தைகள், எல்லோரையும் அச்சத்தில் உறையச் செய்தது.

அடிவாங்கிய பெண் புதிதாகவந்தவள்,பெற்றாவின் ஆக்களுடன் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு எதிர்த்து பேசியது மட்டுமல்லாமல், அலுவலகத்திலும் போய் முறையீடு செய்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். இப்படியான தாதா பெண்களுக்கு பணிவுள்ள ஒரு அடியாளாக ஒடியோடி வேலை செய்யும் சுதர்சினி ஒரு சிறிய முடிச்சு தூளுக்காக உயிரையே கொடுக்கக்கூடியவள். எனது அவதானிப்பில் இவள் மற்றவர்களைவிட அதிகம் ஆபத்தில்லாதவள். கொஞ்சமென்றாலும் இதயத்தில் ஈரமுள்ளவள். சிறைச்சாலையில் தூள் குடிப்பவர்கள் எல்லாரும் ஒரு கூட்டமாகவே சேர்ந்திருந்து கொள்ளுவார்கள். அது மழை ஒழுக்கும், மல சல கூடத்தின் அழுக்குத் தண்ணிரும் தெறிக்கும் ஒதுக்குப்புறமான பகுதி. அங்கேதான் மனநிலை சரியில்லாத பெண்களையும்கூட ஒதுக்கிவிடுவார்கள். எவருமே கண் கொண்டு பார்க்கக்கூட விருப்பப்படாத அந்த சீவன்களுக்கு, சுதர்சினி உணவு கொடுத்துக் கொண்டிருப்பதையும், உருட்டி மிரட்டி குளிக்க வைப்பதையும் கண்டிருக்கிறேன். உரத்த குரலில் கத்தி ஏசிக் கொண்டேதான் இவைகளை செய்வாள். எப்போதாவது ஒரு குணம் வரும் தருணத்தில் தனது மனத்திருப்திக்காக இப்படி ஏதாவது நல்ல காரியங்களில் ஈடுபடுவாள். மற்றபடி அவள் தனது நாளாந்த சம்பாத்தியத்திலேயே குறியாயிருப்பாள்.

முதலாளி அக்காமாருக்கு உடுப்புகள் தோய்த்துக் கொடுப்பாள். அவர்களுக்கு தினசரி வீட்டு வேலைக்காரர்கள் கொண்டுவரும் பொருட்களை, உணவுகளை வாசலிலிருந்து காவிச் சென்று கொடுப்பாள். அவர்கள் பாவிப்பதற்கு முன்பாக மலசல கூடத்தை கழுவி சுத்தம் பண்ணி அவர்கள் வெளியில் வரும் வரை வாசலில் காவலிருப்பாள். அக்காமாருக்கு கைகால் அமுக்கி, தலைக்கு எண்ணெய் மசாஜ் பண்ணி விடுவாள். சோறு எடுக்கும் வரிசைக்கு போக வெட்கப்படும் மரியாதைக்குரிய அக்காமாருக்கு அடிபட்டு, நெரிபட்டு சாப்பாடு எடுத்துக் கொடுப்பாள். எல்லா வேலைகளுக்கும் ஒன்றோ இரண்டோ சோப்புக் கட்டிகள்தான் அவள் எதிர்பார்க்கும் கூலி. சில பேர் தாங்கள் உண்டு மிச்சமான வீட்டு உணவுகளையும் கொடுப்பார்கள்.

சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான தூள், கைத்தொலைபேசி, அதன் உதிரிப்பாகங்கள் எல்லாமே வெளியிலிருந்து உயர்ந்த மதிலுக்கும் மேலாக வீசப்பட்டு உள்ளுக்கு வந்து விழும். இது ஒரு இராணுவ நடவடிக்கை போல தூள் முதலாளி அக்காமாரின் ஒழுங்கு படுத்தலில் மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் பெற்றாவின் ஆட்கள்தான் வந்துவிழும் பொதிகளை அதிகாரிகளின் கண்களில் பட்டுவிடாமல் குருவிபோல கொத்திக்கொண்டு ஓடிவந்து விடுவார்கள். இப்படியான தருணங்களில் கடமையில் இருக்கும் காவலாளி அதிகாரிகளின் கவனத்தை திருப்புவதில் சுதர்சினி திறமைசாலி. கதிரையில் சோர்வோடு நீண்ட நேரமாக அமர்ந்து கொண்டிருக்கும் அவர்களை அணுகி நைசாக கதை கொடுத்து, கைகால் அமுக்கி தலையில் பேன் பார்த்து, சிரிக்க சிரிக்க ஏதாவது கதை சொல்லி, ஒருமாதிரி தமது வேலை முடியும் வரை அந்த அதிகாரியின் கவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுவாள்.

பெற்றாவுக்கு விசுவாசமான அடியாளாக சுதர்சினியும் இப்படியான வேலைகளில் ஒடித் திரிவாள். அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொண்டால் அடி உதை, இருட்டு தனியறைக்குள் அடைப்பு. இதுபோன்ற தண்டனைகள் எல்லாம் அவளுக்கு பழகிப்போன விடயங்கள்.

மழைக் காலங்களில் சிறைச்சாலையின் மலக்குழிகள் நிரம்பி மலஅழுக்கு கழிவுவாய்க்கால்களில் சிதறிக் காணப்படும். அப்படியான நாட்களில் என்னைப் போன்ற பலர் வாயையும் மூக்கையும் மூடி கைக்குட்டையால் கட்டிக்கொண்டு சாப்பாடு தண்ணி இல்லாமல் கிடப்போம். சுவாசிக்கக்கூட முடியாமல் தலையிடியுடன் படும்பாடு வாழ்க்கையே வெறுக்கச்செய்யும்.

அந்த மலக் குழியை சுத்தப்படுத்தும் வேலைக்கு கைதிகளைத்தான் கூப்பிடுவார்கள். போக விரும்பாதவர்கள் தமது பங்களிப்பாக ஒரு சோப்பு கொடுக்க வேண்டும். இந்த வேலைக்கு முதல் ஆளாக போய் நிற்பாள் சுதர்சினி. எந்த அருவருப்பும் இல்லாமல் ஏதோ மண் கிணறு இறைப்பது போல வேலைசெய்து முடிப்பாள். இதனால் அதிகமான சோப்புக் கட்டிகளை அவளால் சம்பாதித்துக் கொள்ளமுடியம். இதற்காக இவளைப் போன்றவர்களே கற்களை போட்டு மலக்கூடக்குழிகளை அடைக்கச்செய்வதும் உண்டு என பலர் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன்.

போதையில் கண் செருகிக் கிடக்கும் சுகத்தைவிட வெறெந்த சுரனையும் இல்லாத சுதர்சினியின் வாழ்க்கையில் எந்த அழகையும் நான் காணவில்லை. ஆனால், பசுமையற்றுப் போயிருந்த அவளின் விழிகளில் ஒரு ஆத்மாவின் ஏக்கமும் விசும்பலும் தேங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது.

கண் விழித்த நேரத்திலிருந்து மாலையாகும் வரை ஒட்டமும் நடையுமாக திரிந்து சம்பாதிக்கும் சுதர்சினி, கதவு மூடப்பட்டதும் சோப்புக்கட்டிகள் ஐந்தை அடுக்கிக் கொண்டு, சபாங் சியாய் சபாங் சியாய் (சவர்க்காரம் நூறு ரூபா) என கூவிக்கூவி காசாக்கி விட முயற்சிப்பாள்.

ஒரு நூறு ரூபா தாள் அவளது கைகளுக்கு வந்ததும் கண்களில் தென்படும் மலர்ச்சி, பரபரப்பு, துள்ளல் நடை, அப்பப்பா அதற்குப்பிறகு சுதர்சினியை எவரும் எந்த உயிர்போகிற வேலைக்கும் கூப்பிட முடியாது. இனி அவளுக்கான நேரம். தூள் விற்கும் பெண்ணிடம் கைப் பொத்தலாக காசைக்கொடுத்துவிட்டு, தனக்கான தூள் முடிச்சு கிடைக்கும் வரை வாசற்படியில் நாக்குத் தொங்க நிற்கும் நாய்போல காத்துக் கிடப்பாள். பொலித்தினில் முடியப்பட்ட ஒரு சிட்டிகை அல்லது அதற்கும் குறைவான தூள் பொட்டலம் அவள் கைக்கு வந்ததும் தனது இடத்திற்கு பாய்ந்தோடுவாள்.

அங்கே அவளின் கூட்டாளிகள் ஏற்கனவே ஒரு சுட்டி விளக்கை கொழுத்தி மறைத்து வைத்துக்கொண்டு, அதனைச் சுற்றி ஏதோ பிரார்த்தனையில் கூடியிருப்பவர்களைப் போல குத்தங்காலிட்டுக் குந்திக் கொண்டிருப்பார்கள். சுற்றுக் காவல் அதிகாரிகளின் கண்களுக்கு மாட்டுப்படாமல் தூளடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பகல் முழுவதும் அட்டகாசமெழுப்பிக்கொண்டு திரியும் இவர்கள் இப்போது சாந்த பதுமைகளாக தமது முறைவரும்வரை துள் சரைகளை கைகளுக்குள் பொத்திக் கொண்டு பதவிசாக காத்திருப்பார்கள்.

ஒரு வெள்ளிப் பேப்பரில் தங்கத்தை விட கவனமாக துளை கொட்டி, எரிந்து கொண்டிருக்கும் சுட்டி நெருப்புக்கு மேலே பிடித்து, ஒரு குழல் மூலமாக அதன் புகையை இழுத்து விழுங்குவார்கள்.

விடிய விடிய நோய் பிடித்த கோழிமாதிரி கழுத்து மடிந்த நிலையில் கடைவாய் வழிய அலங்கோலமாக மயக்கிக் கிடப்பார்கள். இப்படி மயங்கிக் கிடக்கும் தாயொருத்தியின் முலையை அவளது குழந்தை பசியுடன் சப்பிக் கொண்டிருக்கும் காட்சியை முதன் முதலாக கண்ட மாத்திரத்தில், குருடாய்ப் போகாதிருந்த என் கண்களை நானே சபித்துக்கொண்டேன்.

“இப்படி பாலூட்டுவது குழந்தைக்கு கூடாது.” போதை தெளிந்திருந்த ஒருநேரத்தில் அந்த தாய்க்கு புத்தி சொல்ல முயற்சித்தேன்.

“நான் தூள் குடிக்காட்டில் இவன் என்னில பாலே குடிக்கமாட்டான்.”

ஒரு வார்த்தை விளக்கத்தில் என்னை வீழ்த்திவிட்டு, இடுப்பில் இடுக்கிய குழந்தையுடன் அவள் விசுக் விசுக் என நடந்து போய்விட்டாள். எனது இதயத்திற்கான இரத்த ஒட்டம் நின்று போனது போல ஒரு விறைப்பு உடலெங்கும் பரவிச்சென்றது.

கண்ணுக்கு முன்னால் சாவு தினந்தோறும் சப்பித் தின்னும் இந்த மனிதர்களின் வாழ்வை எண்ணியெண்ணி எத்தனையோ இரவுகள் எனது நித்திரை பொய்த்துப்போனது. அவர்கள் அழுதார்கள், சிரித்தார்கள், கிடைப்பதை உண்டார்கள், பெண்களோடு பெண்களே உடற் பசியுமாறினார்கள். தமக்குள்ளே ஒரு உலகத்தை ஸ்தாபித்துக் கொண்டு தூள் குடிப்பதற்காகவே உயிர் வாழ்ந்தார்கள்.

சுதர்சினியின் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த தூள் வழக்குக்காக நீதிமன்றத்தில் மூவாயிரம் ருபா தண்டப்பணம் செலுத்தவேண்டுமென தீர்ப்பாகியிருந்தது. அவளுக்காக எவரும் அப்படியொரு தொகையை செலுத்துவது நடவாத காரியம் என்பது அவளுக்கும் தெரியும். அதைப்பற்றி அவளுக்கும் கவலை இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவள் கவலைப்பட்டு அலட்டிக்கொண்டதாக நான் அறியவில்லை. அவளிடம் எடுபிடி வேலைவாங்கிய பல முதலாளி அக்காமார், “நான் போனதும் உன்னை வெளியில எடுக்கிறன்” என நம்பிக்கை ஊட்டி செமத்தியாக அவளை தம் வேலைகளுக்கு பயன்படுத்திவிட்டு வெளியில் போனதும் அவளை மறந்தே போயிருந்தார்கள். எப்போதாவது, “இப்படியான கதைகள் உண்மையா சுதர்சினி” என எவராவது கேட்டால், “மனுசர் என்றால் அப்பிடித்தானே” என அலட்சியமாக தலையாட்டி விட்டு போய்விடுவாள்.

திடீரென ஒருநாள் சுதர்சினி அழகாக தலைவாரி, நேர்த்தியான வெள்ளை பாவாடை சட்டை உடுத்து, சிரித்த முகமாக எல்லாரிடத்தலும் விடைபெற்றுக் கொண்டு திரிவதை கண்டேன். ஒரு ஏஜன்சி வழக்கில் இருந்த வயதான அம்மாவுக்கு கொஞ்ச நாளாகவே ஒடியோடி வேலை செய்துகொண்டு திரிந்தாள். அவர்தான் இவளின் தண்டப்பணத்தை செலுத்தி வெளியில் போக உதவிசெய்ததாக கதைத்துக் கொண்டார்கள்.

எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இந்த உலகத்தில் இன்னும் சில மனிதர்களின் இதயங்களிலும் ஈரம் இருக்கிறதே என எண்ணிக்கொண்டேன். அன்று மிகவும் அழகாக இருந்தாள் சுதர்சினி. என்னையும் தேடி வந்து இதமான குரலில், நான் போகிறேன் அக்கா” என்று கூறிச் சென்றாள்.

இப்படி தினசரி யாராவது கூறிச் செல்லுவது வழக்கம்தான். இருந்தாலும் நான் சிறைக்கு வந்த நாளிலிருந்து தினசரி பார்த்துக்கொண்ட முகமாயிருந்தபடியால் மனதுக்கு கொஞ்சம் நெருக்கமாக மாறியிருந்தாள். இதன்பின் சில நாட்களில் நானும் அவளை மறந்தே போனேன்.

இன்றைக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டாள். முன்னர் இருந்ததைவிட கறுத்து மெலிந்து, புதிதாக கிழித்துக்கொண்ட காயங்களுடன் பார்க்கவே ஒரு மாதிரி பயங்கர தோற்றமாயிருந்தாள். யாருமே இப்படியானவர்களை பெரிதாக கணக்கெடுப்பதில்லை. ஏதோ ஐந்துக்களை கண்ட மாதிரி விலகிச் செல்லுவார்கள். ஏன் நானும்கூட அப்படித்தான்.

மாலை கணகெடுப்பு முடிந்து கைதிகளை உள்ளே அடைத்து கதவு மூடப்பட்டாயிற்று. தூள் குடிக்கும் பகுதியில் சுட்டி விளக்கு மினுங்கத் தொடங்கியது. வழக்கம் போல எல்லோரும் சுற்றிவர குந்திக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் வந்த முதல் நாளாகையால் அவளின் கூட்டாளிகள் இலவசமாக அவளுக்கும் தூளை பகிர்ந்துகொள்வார்கள் போல, சுதர்சினியும் அந்த வட்டத்தில் குந்திக் கொண்டிருக்கிறாள். பசி கிடந்தவன் சோற்றைப் பார்ப்பது போல அவளது முகத்தில் அப்படியொரு ஆவல். காய்ந்த உதடுகளை நாக்கினால் தடவிக்கொண்டு தனது முறைக்காக காத்திருக்கிறாள்.

நான் எனது இடத்தில் படுத்துக்கிடந்தபடி வாசிப்பதற்கு கையிலெடுத்த புத்தகத்தை வெறுமனே புரட்டிக்கொண்டு தூரத்தில் குவிந்திருந்த அவர்களின் மீதே நோட்டமாயிந்தேன். ஏனோ மனது சுதர்சினியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அன்று அவள் விடைபெற்றுச் சென்ற சிரித்த கோலம் மனதை அலைக்கழித்தது.

சற்று முன் மாலை வரிசையில் நின்றபோது, தனக்குத் தெரிந்த பழைய முகங்களை தேடிக்கொண்டே வந்தவள் என்னருகில் வந்து நின்றாள்.

“ஐயோ அக்கா நீ இன்னும் போகவில்லையா?”

இரக்கப் பார்வையுடன் கேட்டாள். அவள் திரும்பி வந்ததில் எனக்கு உள்ளுக்கு கோபமிருந்தாலும் காட்டிக்கொள்ளாம்ல், “சரி நான் போவது இருக்கட்டும் நீ ஏன் திருப்பி வந்தாய்?” என இயல்பாகவே கேட்டேன். உடனே கண்களை உருட்டி அக்கம் பார்த்தவள் என்னருகே தலையை சாய்த்து மெல்லிய குரலில் குசுகுசுத்தாள்.

“வெளியால வாழுறது சரியான கஸ்டம் அக்கா, சாப்பாடு இல்லை, குடியிருக்க இடமில்லை. தூளும் குடிக்க முடியாது. எனக்கு வெளியால இருக்கிறதவிட உள்ளுக்கு இருக்கிறதுதானக்கா நல்லது.”

எனது பதிலுக்கு காத்திருக்காமல் தனது கூட்டாளிகளை நோக்கி சென்று விட்டாள். அவள் சொல்லிச்சென்ற வார்த்தைகளின் உண்மை கூர்மையான கத்தியைப்போல என் இதயத்தை ஊடுருவிக் கிழித்தது. இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் இந்த சிறைச்சாலையின் இரும்புக் கதவுகளுக்குப்பின்னே, சாவின் மயக்கத்தில் வாழ்வைச் சுகிக்கும் எத்தனை சுதர்சினிகளின் வாழ்க்கை மீதான நம்பிக்கையின் கதவுகளும்மூடப்பட்டுக் கிடக்கிறது.

என்னைத் தொடரும் பயங்கர சூனியக்காரியின் முகம் இப்போது மிகவும் அருவருக்கத்தக்கதாக ஏளனமான சிரிப்புடன் என்னையே உறுத்துப் பார்ப்பது போல இருக்கிறது. கண்களை இறுக்கி முடிக் கொள்கிறேன். ச்சீ. இப்போதும் அந்த முகம் என் கண்களுக்கு நேராகவே வருகிறது. சட்டென எழும்பிக் குந்திக்கொள்கிறேன். தலையை அசைத்து நினைவுகளை உதற முனைகிறேன்.

“என்னக்கா நாளைக்கு உங்கட வழக்கெல்லே, அதைப்பற்றி யோசிக்கிறிங்கள் போல” என்கிறாள் வசந்தி, பக்கத்திலிருப்பவள் என்னை அவதானித்துக் கொண்டேயிருந்திருக்கிறாள்.

“ம்..ம்ம்” என்று அவசரமாக தலையசைத்து இயல்புக்கு வர முயற்சிக்கிறேன்.

தூள் குடிக்கும் இடத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடைவாய் வழிய சுதர்சினி மயக்கத்தில் சிரிக்கிறாள். அச்சிரிப்பு ஒலியினூடே கதறியழும் அவளின் ஆத்மாவின் ஒலம் ஒரு பிரளயம் போல எழுகிறது.

By

Read More

ஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி

மனிதன் விலங்குதான். தீ மூட்டியதிலிருந்து, சிந்தித்துச் சிந்தித்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக எண்ணி எண்ணித் துணிந்து, இணையத்தால் உலகளந்த பின்னும் அவன் விலங்குதான். அவனுக் கான வசதிகள் மேம்பட்டன, அவ்வளவுதான். அறிவு என்பதோ, பருப்பொருட்களைப் பகுத்து அறிந்து, ஆக்கிப் பயன் கொண்டது மட்டும்தான். அவன் தன்னை அறிவதில்லை. தற்காத்து, தற்பேணி, தற்காமுற்று தான் தனது என அலைக்கழிகிறான். அவன்தான் குடும்பம், குழு, கூட்டம், சாதி, இனம், அரசு, நாடு என்று அலை விரியும் வட்டங்களில் கூடிக் களித்தும் முரண்பட்டும் போரிட்டும் அழிகிறான்; தொடர்கிறான். எங்கும் வனநீதி ஒன்றுதான். அவன் வளர்த்த மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆன்மிகம், ஞானம் எதுவும் குருதி கொட்டும்போது துணை நிற்பதில்லை. ஆள்கிற நீதிநெறிகளும், நிலைபெற்ற விழுமியங்களும், மானுடப் பேரறமும் அவனைக் காப்பதில்லை. வாழ நேர்கிற நிலப் பரப்பின், கற்பிதங் களின் சூழ்நிலைக் கைதி அவன். அவனே தெளிந்து தேர்ந்தாலும், பாதை அடைபடும் வேலிகளால். முரண் பகை வன்மம் வெறி போர் அழிவு. பின்னும் பேரியற்கை தன்போக்கில் இயல்கிறது. மனிதன் சிறுத்துப் போகிறான் மற்றொரு விலங்காக.

oozhi_copyமனிதகுலம் பேரளவில் மாண்டது இயற்கைப் பேரிடர்களால் அல்ல; போர்களால் தான். பெரும் புயலில் சிக்கிச் சிதைவுறும் பயிர்களாய்ப் பொதுமக்கள். காப்பாற்றுமாறு கெஞ்சிக் கதறி முறையிட்ட அவர்களது கடவுளே கைவிடும் கணத்தில் அவர்களுக்கு முன், போருக்கான காரணிகள் எதுவாயினும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. போரில் அடிபட்டு மரணிக்கும் குழந்தையை மடியில் கிடத்திக் கதறும் அன்னைக்கு லட்சியம், புரட்சி, விடுதலை என்ற வெற்றுச்சொற்கள் எதுவும் காதில் ஏறாது. அந்தத் தாய்களால் ஆனதுதான் சமூகம். அவள் ஆற்றாது அழுத கண்ணீர் அரசியல் பிழைத்தார்க்குக் கூற்றாகுமா?

மஞ்சூரியாவில் ஜப்பான் நிகழ்த்திய கொடுமைகளுக்குத் தண்டனை விதித்த வெள்ளைக்கார நீதிதேவன், தான் அணுகுண்டு வீசியதை மறந்து போவான். மஞ்சூரிய ஹான்கள் அதே கொடுமையைத் திபெத்தியர்களுக்கு இழைப்பார்கள். ஐரோப்பிய ‘அறிவாளிக் குழு’க்களின் திபெத்திற்கான விடுதலை முழக்கம், அரசியல் திசைமாறி வீசும்போது, அக்காற்றில் கரைந்து காணாமல் போகும். ஜப்பானியர் ஆக்கிரமித்து லட்சக்கணக்கில் கொன்று குவித்தால், சீனர்கள் தங்களுக்குள்ளே கோடிக்கணக்கில் களை யெடுப்பார்கள். அதற்கும் தத்துவப் பெயர் – ‘கலாச்சாரப் புரட்சி’. புரட்சிப் பயிரின் அறுவடை முடிந்தபின்னர்தான் களை எடுத்த கணக்கு வழக்கையே உலகம் அறியும்.

பயன் கருதி மனிதன் வகுத்ததுதான் பயிர், களை என்ற பாகுபாடு. வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
அறிக! பூமிக்குக் களை என்று எதுவும் இல்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தியானித்த ஞான மரபு, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக ஆற்றுப்படுத்திய பண்பாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கருதிய இனம் ஈராயிரம் ஆண்டுகளாக என்னவாயிற்று? நிலத்தையும் பொழுதை யும் வாழ்க்கையையும் இணைத்தே இலக்கணம் வகுத்த ஒரே இனம், உலகக் கவிதைகளில் உன்னதத்தை எட்டிய ஒரே மொழி காலம் எனும் பெருவெள்ளத்தில் என்னவாயிற்று? அகமுரண் > மோதல்கள். புறப்பகை > போர்கள். அரசு > யுத்தங்கள். பேரரசு > பெருமதங்கள். பக்தி > மயக்குறு மாக்கள். மாற்றார் வல்லமை > வேற்றின ஆதிக்கம். அடிமை வாழ்வு > ஏக இந்தியா. சக்கரவர்த்தி வம்சம் > குறுநில மன்னர்கள். கொள்ளைக் கூட்டம் > ஓட்டுக்குக் கையூட்டு.
எஞ்சியது எவையெவை?

தாய்ச்சமூக விழுமியங்களும் வளமார்ந்த மொழியும்.

இன்று? அறிந்த தமிழர் வரலாற்றில் இத்தகைய இனப் பேரழிவு எப்போதும் நிகழ்ந்ததில்லை. இலங்கையில் இனத்தின், மதத்தின், மொழியின் பேரால் தொன்றுதொட்டுத் தொடரும் பகைமையால் உருவான போரில் தமிழர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
சிறுபான்மைத் தேசிய இனத்தின் வாழ்வுரிமைக் கோரிக்கை கள் பல்லாண்டுகளாக அறவழியில் தொடர்ந்தன. பேரின ஆட்சி யாளர்களின் அடக்குமுறையால் அவை மறுக்கப்பட்ட பின்னர்தான் ஆயுதப் புரட்சி எழுந்தது. தனி நாட்டுக்கான வேட்கையும். ஒரு நாட்டின் அரசு புரட்சியாளர்களை அடக்க முயலும் சாக்கில் தன்னாட்டு மக்களையே திட்டமிட்டுக் கொன்று குவிக்கையில், புரட்சி எழுந்ததற்கான நியாயத்தை – ஈழத்தை – மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாக ஆயிற்று.

தமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின?

முப்பதாண்டுகளாகக் களத்தில் உறுதியாகத் தாக்குப்பிடித்து நின்றதே வெற்றிதான். இறுதிக்கணம்வரை நெஞ்சுரத்தோடு போராடி வீழ்ந்ததும் ஒரு இதிகாசம்தான். வாழ்க்கையும் வரலாறும் எந்தப் புள்ளியிலும் முடிவதில்லை; அது தொடர்கதைதான்.

ஆயினும், சில அடிப்படைக் கேள்விகள் எஞ்சுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் போரைத் தேர்ந்த புரட்சியாளர்கள் முன்னுணர்ந்தே தம் முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், முதியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது ஏன்?

அந்த மரண ஓலம் உலகின் காதுகளுக்கு எட்டியும் அது கண்டுகொள்ளவில்லை; கண்ணை மூடிக்கொண்டது. இந்தியத் தமிழர்களுக்கு அதன் பேரவலம் உறைக்கவில்லை. தன்னலம் அன்றி வேறு எதையும் கருதாத அரசியல்வாதிகளை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்கள் அவர்கள்; வேறு வழியும் அறியாதவர்கள்.

இந்தப் பேரழிவைத் தடுக்க முடியாததன் அடிப்படைக் காரணம் – தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி இயங்கும் அறிவுத்தளம் இத்தகைய சிக்கலான, பிரம்மாண்டமான பிரச்சினையிலிருந்து தற்காக்கும் திறன் உள்ளதல்ல. என்றுமே தமிழ் ஊடகங்கள் கழிவுநீர்த் தடத்தில் செல்பவை. அதன் வணிகநோக்கி லான கேளிக்கைகளையும் கல்விக்கூடத்தின் மனப்பாடப் பகுதியை யும் தவிர சராசரித் தமிழன் வேறு எதையும் அறிய வாய்ப்பில்லை. அவனுக்குரிய செய்தி, ஈடுபாடு, கனவு, இலக்கு, விவாதம், வெறி எல்லாம் மூன்றாம்தர சினிமாவோடுதான். அவனது படிப்பு ‘எழுத்து’ அறிந்ததுதான்; அதுவும் வேலைவாய்ப்புக்கானது மட்டும். ‘கல்வி’க்கான வாய்ப்பே இச்சூழலில் வழங்கப்படாதபோது, தமிழ் சினிமாவைத்தான் கசடோடு கற்றான். அரசியலும் ஊடகங்களும் அதை மட்டுமே கற்பித்தன. பக்தி மார்க்கத்தைவிடவும் சினிமா மயக்கம் கடும் வீரியம் மிக்கது. கற்பனையில் அல்ல, கண்ணனும் ராதையும் கண்முன்னே திரையில் ஆடிப்பாடுகின்றனர். அவனிடம் ஓட்டு வாங்கி அவனை ஆளவும் செய்கின்றனர். பாவம் அவன், தன்னைச் சுற்றியே என்ன நடக்கிறது என்று அறியாதவன். ஈழத்தில் என்ன பிரச்சினை என்று உண்மையிலேயே அவனுக்கு எதுவும் தெரியாது. தமிழ்ச் செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் யாருக்கும் தெரியாதுதான்.

இங்குதான் அடிப்படைச் சிக்கல் வெளித் தெரிகிறது. உலகத்திற்கு, தமிழக மக்களுக்கு தங்கள் போராட்டத்தை, அதன் தேவையை, கோரும் உரிமைகளை, நியாயத்தை உணர்த்தவேண்டிய ஈழ விடுதலை இயக்கங்கள், அறிவாளிகள் அதற்காக எதுவுமே செய்யவில்லை. இயலவில்லை. இன்றுவரை ஈழக் கோரிக்கை, போராட்டம் பற்றித் தெளிவாக விளக்கும் ஒரு நூல்கூட அவர் களால் வெளியிடப்படவில்லை. ‘பங்காளியப் பக்கத்து வீட்டுக் காரன் அடிக்கிறான்’ என்ற உணர்வு மட்டத்தில்தான் ஈழப் பிரச்சினை தமிழகத்தில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இந்திய கம்யூனிச இயக்கங்கள் ‘இந்திய சமூகத்தை வரை யறுத்துப் புரிந்துகொள்ள முயலும்’ முன்னர் வரலாறு கடந்து போய்விட்டது மாதிரிதான் இதுவும்.

வெள்ளத்தனைய மலர்நீட்டம்.

இதுவும் கடந்து போகும். எதுவும். எனினும், அடிபட்ட, அவலமுற்ற, அழிக்கப்பட்ட நினைவும் உணர்வும் மரத்துப் போகுமோ, மங்கிப்போகுமோ?

பிள்ளையைப் புதைத்த இடுகாட்டில், கண்ணீர் உலராமல் நிற்பவர் ஈழத்தவர், திரும்பிச் செல்ல ஒரு வீடு இல்லை; வீடு திரும்ப மனம் இல்லாமல் தொலைந்துபோனவர் புலம்பெயர்ந்தோர்; யாரோ ஒட்டிய அஞ்சலி சுவரொட்டியைப் பார்த்துவிட்டு சினிமாவிற்குச் செல்பவர் தமிழ்நாட்டார்.

தன் பட்டறிவில் இருந்து பாடம் கற்காத எந்த மனிதனும், எந்த சமூகமும் முன்னகர்வதில்லை.

கொடும் போர்க்குற்றங்களுக்கான மெய்யான நேரடிச் சாட்சி இந்தப் படைப்பு. இனவெறியின் ஊழிக்கூத்து. இறுதி முற்றுகைக் கால களப்பலி நாட்களின் பேரவலச் சித்தரிப்பு. துன்பக் காட்டாற்று வெள்ளத்தின் சுழலில் இழுபட்ட தவிப்பு. எல்லாம் முடிந்தபின், சாம்பல் படுகை மீதிருந்து, 60 வயதைக் கடந்த ஒரு அம்மம்மாவின் உறைபனியான நெஞ்சில் கசியும் துன்ப நினைவுகள். ‘வாழ்ந்து’ பெற்ற அனுபவங்களின், பதைபதைக்கும் அன்றாடப் பதிவுகளின், நம்பிக்கையின் கடைசி மூச்சுத் தருணங்களின் பிணவாடை.

சாம்பலைத் தின்னமுடியுமா நெருப்பால்?

கொலைக்களத்தில் இருந்து தப்பி ஓடும் பெரும் பதற்றச் சூழலில், இந்த அம்மம்மா தனது தளர்ந்த வயதையும் பொருட் படுத்தாது, பேரக்குழந்தைகளின் உயிர்காக்கும் முனைப்பில் கொள்ளும் பிரயாசையும், மனத்தவிப்பும், ஆன்மாவின் கொதிப்பும் அசாத்தியமானவை. பொதுவாகவே, பெண்கள் இல்லத்தை நெஞ்சில் சுமந்து திரிபவர்கள். இங்கோ நிலமற்ற இல்லம். கூடு சிதைந்த கோலம். குஞ்சுகளுக்கு இரை தேடித் தேடி ஊட்ட ஒண்ணாப் பரிதவிப்பு. தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓரிடத்தில் நிற்கவியலாத அபாய ஓட்டம்.

தகிக்கும் பாலை மீது கால்மாற்றிக் கால்மாற்றி உறவுகளைச் சுமந்து அலைந்த வயோதிகப் பாதங்கள்…. உலகின் அதிநவீன ஆயுதங்களின் பங்கை விட, எட்டுத்திக்கும் துரோகத்தின் பங்கு, இந்த உயிர்வதைப் பேரழிவில் கூடுதலான அடியோட்டம். துன்மார்க்க நுண்தந்திர உணர்வுகளை சாவின் விளிம்பில்கூட கைவிடாத மனித அகம். ஆயினும், இறுதிக் கையறு நிலையிலும் கருணை கொண்ட சில மனிதர்கள் இனியும் வாழ்க்கைக்கான அர்த்தத்தைச் சுட்டிச் செல்கின்றனர். ஆயுதம் எதுவும் அகத்தாலும் செப்பனிடப்பட்டதாக இருத்தல் வேண்டும். உறுதியும் ஒழுங்கும் கொண்ட தலைமையும் இறுதி நாட்களில் தனது கடைமடை இயக்கக் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது இயல்புதான். ஆயினும் அது வரலாற்றுத் துயரமாயிற்று.
புதினம் என்று வகைப்பட்டாலும், இது ஒரு வாக்குமூலம் தான். எரித்த தீயைக் காட்டும் சாம்பல் இது; பிரிந்த உயிர் சிந்திய உறைந்த ரத்தம் இது; கதறியழுத கண்ணீரின் தடம் இது.

கருணை காக்குமோ உலகை இனியேனும்! வரலாறு வல்லமையின் பக்கம் சாய்ந்தாலும், மனித குலம் காலங்காலமாக வளர்த்துப் பேணிவரும் விழுமியங்கள் அறத்தைச் சார்ந்தே இயங்கியாக வேண்டும். நம்பிக்கைதான் பற்றுக்கோடு. நன்னம்பிக்கை.
– நா.விஸ்வநாதன்
ஆசிரியர், தமிழினி

By

Read More

× Close