அருமையான வாசிப்பனுபவம் : ´ஆறாவடு´

நேற்று வாசித்து முடித்த அருமையானதொரு புத்தகம் இது. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம் பெயர் தமிழரான சயந்தன் எழுதி இருக்கிறார்.

நீர்க்கொழும்பில் இருந்து இத்தாலி நாட்டிற்குப் படகுப் பயணம் மேற்கொள்ளும் ஒரு போராளியின் முந்நிகழ்வு (பிளாஷ் பேக்) நினைவாக கதை விரிகிறது. அவர் இயக்கத்தில் சேர்வது ஒரு சுவாரசியமான கதை. தான் வாங்கிய சோலாபுரி செருப்பை ஒருவன் திருடிவிடுகிறான். அவன் இலங்கையில் மையமிட்டுள்ள இந்திய ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவன். அவனுடன் ஏற்பட்ட தகராறு இவரை பெரும் சோதனைக்கு ஆளாக்கிவிடுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அவரை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற உந்துகிறது. மேம்போக்காகப் பார்த்தால் ஒரு செருப்புக்கான சண்டை காரணம் போலத் தோன்றும், ஆனால் நாம் எதிர்பாராத சில சிறிய நிகழ்வுகள் கூட நம் வாழ்கைப் பாதையின் போக்கை மாற்றிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகப் பட்டது.

இந்திய அமைதிப் படைகளின் அட்டூழியம் குறித்து அரசியல் மேடைகளில் கேட்டிருக்கிறேன், புலம் பெயர் தமிழ் நண்பர்களிடம் அவர்களது அனுபவங்கள் வாயிலாக சில விடையங்களை அறிந்து கொண்டிருக்கிறேன், சில புத்தகங்களில் தரவுகளாக வாசித்திருக்கிறேன். ஆனால் இப்புத்தகத்தில் வரும் நிகழ்வுகளை உள்வாங்கி கற்பனைகளில் காட்சிப் படுத்திப் பார்க்கும் பொழுது, அட்டூழியம் என்கிற சொல்லாடலின் மெய்யாழம் புரிந்தது.

தொடர் சம்பவங்களின் வரலாற்றுத் தரவுகளை வாசித்துத் தெரிந்து கொள்வது என்பது வேறு.அது வெறும் தகவல்தான். ஆனால் அன்றாட வாழ்வில் ஏற்படும் சம்பவங்களின் ஆழமான விவரணை உணர்வுகளை உலுக்கிச் செல்லும் வல்லமை உடையது. கல்லூரி பயிலும் வரை போர் என்றால், சின்ன வயதில் டிடி தொலைகாட்சியில் பார்த்த மகாபாரதக் காட்சி கண்முன் விரியும். இல்லையேல் பீரங்கிகள், துப்பாகிகள் இருமருங்கிலும் முழங்கும் காட்சிகள் தெரியும். ஆனால் போர் மூலமாக சாதாரண மக்களின் சமூக வாழ்வு எவ்வாறு பாதிக்கப் படும் என்பதை சிண்ட்லர் லிஸ்ட், பியானிஸ்ட் போன்ற படங்களைப் பார்த்த பொழுதுதான் முதன் முதலாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பாய்ந்து வரும் குண்டுகள் கூட ஒரு நொடியில் உயிரை மாய்த்து விடும். ஆனால் போர் நடக்கும்பொழுதும், போர் முடிந்த பிறகும் அதனால் பாதிப்புக்குள்ளான சமூகம் தான் உண்மையான தாக்கத்தை உள்வாங்கி அதிக காலம் அல்லல்படுவது.

பள்ளியில் வரலாற்றுப் புத்தகத்தில் உலகப் போர் குறித்து பாடம் பாடமாகப் படித்த பொழுது ஏற்படாத , புரிந்துகொள்ள இயலாத உணர்வுகளை இப்படங்கள் பார்த்த பொழுது உணர்ந்துகொள்ள முடிந்தது. அதைப் போலத்தான் இந்தப் புத்தகத்தில் போர், இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு முதலியன மூலம் சாதாரண மக்களின் சமூகப் பொதுவாழ்வு எவ்வாறு பாதிக்கப் பட்டிருந்தது என்பதை கூர்ந்து கவனித்து உணர முடிந்தது.

இதில் எனக்கு வியப்பளிக்கிற விடையம் என்னவென்றால், இவ்வளவு சீரியசான கவலையான சம்பவங்களை விவரிக்கும் பொழுதும் ஆங்காங்கே நகைச்சுவை இழையோடுவது. ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் நகைச்சுவை உணர்வு குறைவு என்கிற எனது நம்பிக்கையை புரட்டிப் போட்டுவிட்டது. ஆங்கிலத்தில் நான் மிகவும் ரசித்து, நேசித்து, பூஜித்துப் போற்றி மகிழ்ந்த எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல். அவரது நகைச்சுவை சாயல் இதில் தென்பட்டது வியப்பளித்தது.

தியாகம், காதல், தயக்கம், வீரம், அரசியல் நிகழ்வுகள் என அனைத்து அம்சங்களையும் கதை தொட்டுச் செல்கிறது. புலிகள் பாசறையில் பயிற்சிக்குச் செல்கிற கதை நாயகனுக்கு அரசியல் என்பதன் விளக்கம் ´´ யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் ´´எனப் பயிற்றுவிக்கப் படுகிறது. யுத்தத்தைக் காட்டிலும் அரசியல் எவ்வளவு கடினமானது என்பதை சமாதானக் காலத்தில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்களில் உள்ள மிகுந்த கட்டுப்பாடுகள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்ட காரணத்தால், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் புலி வீரனின் புலம்பலில் வெளிப்படுவதைக் காண முடிகிறது.

புலிகள் இயக்கத்தின் கடுமையான தண்டனை வழங்கும் முறை, விசாரணை முறையும் ஆங்காங்கே விவரிக்கப் பட்டுள்ளன. புலம்பெயர் சமூகத்தில் வாழ்கிறவன் என்கிற முறையில், பலதரப் பட்ட மக்களைச் சந்திக்கின்ற, நட்பு பாராட்டுகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் புலி எதிர்பாளர்களும் அடக்கம். அரசியல் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அனைவரும் நல்ல மனிதர்கள்தான். நமது நம்பிக்கைக்கு ஒவ்வாத கருத்து உடையவரை காரணமின்றி எதிரியாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை அகற்றிவிட்டால், ஒற்றுமைக் குறைவினால் பாழ்பட்டுப் போன இனம் தமிழினம் என்கிற நிலை மாறிவிடும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

எதிரணியைச் சார்ந்த நண்பர் ஒருவர் அவரது பழைய அனுபவத்தை விளக்கினார். அவர் வேறொரு இயக்கத்தின் பெரிய மாகான தளபதியாக இருந்தவராம். சகோதரச் சண்டை உச்சத்தில் இருந்தபொழுது, புலிகள் இயக்கம் அவருக்கு தண்டனை அறிவித்து தேடிக் கொண்டிருந்ததாம். விஷயமறிந்த அவர் தப்பித்து வந்த கதையை நகைச்சுவை ததும்ப விவரிப்பார். தென்னை மரத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு தூங்கும் கலையை கற்றுக் கொண்டாராம். ஒரு வார காலம் இப்படியே தென்னை மரத்தில் தொங்கி, தூங்கி தப்பித்து வந்த கதையை சொன்னார். அந்தக் கதையை இப்புத்தகத்தில் வரும் சில சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் திகில் கலந்த நகைச்சுவை ஏற்பட்டது.

இந்தக் கதையின் ஊடாக புலிகள் மீதான சிற்சில விமர்சனங்களை மிகவும் மென்மையாக, தண்மையாக, பட்டும் படாமல் கதையின் போக்கில் வைத்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட, அகதிகளாக தப்பித்துச் செல்பவர்கள் மேற்கொள்ளும் கடல் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர முடிந்தது. ஏஜென்ட்களிடம் பணம் கட்டி, படகில் ஏறும் வரை பெரும்பாடுதான். ஏறிய பிறகு பயணத்தின் இறுதி வரை தாக்குப் பிடிப்பதென்பது அதைவிட பெரும் சவால். கடல் சீற்றம், நோய், கடல் கொள்ளையர்கள், உணவுப் பற்றாக்குறை என பல சவால்களைக் கடந்துதான் அவர்களால் வேறொரு இடத்திற்கு செல்ல முடிகிறது. இலங்கையில் இருந்து கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி என நெடுந்தூரம் பயணம் செய்த சில செய்திகளை ஊடங்களில் பார்த்துவிட்டு எளிதில் அடுத்த பாட்டு நிகழ்ச்சிக்கு கடந்து சென்றிருப்போம். ஆனால் அங்கே சொல்லனா அல்லல் பட்டுக் கொண்டிருப்பது நம் சக தமிழன் என்கிற குற்ற உணர்ச்சி பெரும்பாலான நமக்கு ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. எனது நண்பர் ஒருவர் அவரது அனுபவத்தைச் சொன்னார், 100 பேர் பயணப்பட்டால், இறுதியில் 50 தேறுவார்கள் என்றார்.

எனது மாமனார் பகிர்ந்துகொண்ட அவரது அனுபவங்களும் நினைவிற்கு வந்தது. மகிழ்சிகரமாக வாழ்ந்துகொண்டிருந்த அவரது வாழ்வை போர் எப்படி புரட்டிப் போட்டது என்பதை பருந்துப் பார்வையில் விவரித்தார். ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்க இயலாது என்கிற நிலை. பதுங்கு குழிகளை வெட்டி வைத்துக் கொண்டு, பிள்ளைகளை பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அச்சச்சூழல். ஒரு சந்தர்பத்தில், குடும்பத்தினரை பதுங்கு குழிகளில் இறக்கிவிட்டு, இவர் இறங்குவதற்குள், எங்கோ தூரத்தில் இருந்து பறந்து வந்த செல் கணை இவரை நோக்கி வர, நல்ல வேளையாக கொல்லைப்புறத்தில் இருந்த பனைமரம் ஒன்று அதனைத் தடுத்து விட்டதாம். இப்படி ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனையோ சம்பவங்கள்.

ஒருவழியாக உயிர்பிழைத்தால் போதும் என்கிற முடிவிற்கு வந்து, படகில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது எனது துணைவியார் கைக்குழந்தையாக இருந்துள்ளார். அவரது மூத்த சகோதரர் 3 வயது பாலகன். படகில் ஏறும் அடிபிடியில் மகனைக் காணவில்லை. பிறகு இவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் குதித்து மூழ்கித் தேடி இருக்கிறார். சில நிமிடங்கள் கழித்து மகன் கையில் அகப்பட்டுள்ளார். ஒருவழியாக அனைவரும் உயிர் பிழைத்து விட்டனர். இப்படியாக ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கு ஒவ்வொரு கதை நிச்சயம் இருக்கும்.

ஆனால் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப் படும் படகுப் பயணத்தில் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை. புத்தகத்தில் உள்ள சிறு குறையாக நான் கருதுவது, மிகுந்த சுவாரசியத்துடன் சென்றுகொண்டிருந்த கதைக்களம், இறுதி அத்தியாயங்களில் சற்று தொய்வு பெற்றிருந்ததைப் போன்றதொரு உணர்வு. மற்றபடி நல்ல புத்தகம்.

புத்தக ஆசிரியர் சுவிஸ் சயந்தன் பேஸ்புக்கில் உள்ளாரா தெரியவில்லை. யாரேனும் அவரது தொடர்பில் இருந்தால், எனது இந்த பதிவை அவருடன் பகிரவும். மேலும் பல நல்ல படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்.

By

Read More

நஞ்சுண்ட காடு

ஈழப்போரிலக்கியத்தில்  புலிப்போராளிகளின் படைப்புக்கள்

ஈழப்போரிலக்கியங்களை ஈழத்தின் சகல இயக்கங்கள் சார்ந்தும், மூன்று பெரும்பாகத்தினுள் குறிப்பிடமுடியும்.

1. போராளிகள் , களமாடும் சமகாலத்திலேயே எழுதிய படைப்புக்கள்

2. போராட்டத்தின் நேரடிப்பங்காளர்களாக அல்லாத அதனுடைய ஆதரவாளர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள்.

3. போராட்ட அமைப்புக்களிலிருந்து விலகிய பின்னர் அதிருப்தியடைந்த அல்லது அதிருப்தியடைந்த பின்னர் விலகியவர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள்,

இங்கே, நஞ்சுண்டகாடு நாவலுக்கு நெருக்கமான பரப்பாக, களத்திலாடும் போதே போராளிகளால் எழுதப்பட்ட நாவல்களை மேலும் குறுக்கி புலிப்போராளிகளால் எழுதப்பட்ட ஒருசில நாவல்கள் பற்றிய குறிப்புக்களோடு நஞ்சுண்டகாடு நாவலுக்குள் நுழைகின்றேன்.

புலிகள் இயக்கப்போராளிகளால் சிறுகதைகள், கவிதைகள் பலநூற்றுக்கணக்கில் எழுதப்பட்டிருந்தபோதும், நாவல்கள் சொற்ப அளவிலேயே எழுதப்பட்டுள்ளன. அவற்றை எழுதுவதற்கான, நேரமும் பொழுதும் யுத்தத்தையே தம்முடைய பிரதான இலக்காகக் கொண்டவர்களுக்கு வாய்த்திருக்காது என்பதையும் இங்கே மனம்கொள்ள வேண்டும். அவ்வாறாக எழுதப்பட்ட சில நாவல்கள்..

1. பாலகணேசன் எழுதிய விடியலுக்கு முந்தைய மரணங்கள், 1986 இல் இது புலிகளால் வெளியிடப்பட்டது, ஈழத்தின் முதலாவது யுத்த நாவலும் கூட. கொக்கிளாய் ராணுவ முகாமினைத் தாக்கியழித்த நடவடிக்கையினை இலக்கிய அழகியலோடு இந்நாவல் பதிவுசெய்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

2. மலரவனின் போருலா, 1993ல் வெளியிடப்பட்டது. இதுவும் மாங்குள ராணுவமுகாம் தகர்ப்பையும் அதில் பங்குபற்றிய போராளிகளின் அனுபவங்களையும் மனவிசாரணைகளையும் பதிவு செய்த ஒரு படைப்பு.

3. போராளியாகவிருந்த தமிழ்க்கவி எழுதிய இருள் இனி விலகும் 2004இல் வெளியானது. யாழ்ப்பாணம் இலங்கைப் படையினரால் கைப்பற்றபட்ட பின்னர் அங்கு அனுப்பப்படுகின்ற பிஸ்ரல் குழு என்று அறியப்படுகின்ற பெண் போராளிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அவர்கள் யாழ்ப்பாணத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சிப்பாய்களை நேராகச் சந்திக்கும் தருணங்கள், சண்டைகள், அடைந்த சாவுகளென அந்தக் குரூப் மறுபடியும் வன்னிக்க மீள்வதுவரை இது பதிவு செய்துள்ளது.

4. இதைவிட மருத்துவப்போராளியாகவிருந்த தூயவன் 3 நாவல்களை எழுதியுள்ளதாக அறியமுடிகிற போதும், வேறு தகவல்களைப் பெறமுடியவில்லை.

5. இறுதியாக நஞ்சுண்டகாடு, இந்நாவல் வெளியாகின்ற இக்காலத்தில் இதனுடைய ஆசிரியர் ஒரு போராளியாக இல்லாதபோதும், எழுதப்பட்ட 2004 காலத்தில் ஒரு செயற்படுபோராளியாகவிருந்தார்.

 

உண்மைகளும் அனுபவங்களும் பிரச்சாரங்களும்

இங்கேயொரு கேள்வி எழுகிறது. போராட்டத்தை நடத்துகின்ற, அதனுடைய வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட ஓா அமைப்பிலிருந்து பிரச்சாரமில்லாத ஒரு படைப்புச் சாத்தியமா என்பதுதான் அது. உண்மைக்குச் சாட்சியாகவிருப்பதே இலக்கியமென்றால், யுத்தகளத்தில் உண்மை எந்தளவிற்கு அனுமதிக்கப்படும்.? அல்லது இன்னொருவிதத்தில், ஒரு பிரச்சாரமென்பது பொய்யையும் கொண்டிருக்குமென்று கருதினால், அப்படிப் பொய்யைக் கொண்டிருக்காத, அதே நேரத்தில், சில உண்மைகளையும் கொண்டிராத பிரதிகளையும் பிரச்சாரமென்று கருதவேண்டுமா என்பதெல்லாம் கேள்விகள்..இந்தப்பின்னணியிலேதான், மேற்சொன்ன நாவல்களையும் நஞ்சுண்ட காட்டையும் பார்க்க வேண்டும்.

முதலாவதாகக்குறிப்பிட்ட விடியலுக்கு முந்தைய மரணங்கள் நாவலை நான் படித்ததில்லை, ஆனால் அதுபற்றி காலம் இறுதி இதழில் மு.புஸ்பராஜன் இவ்வாறு குறிப்பிடுகிறார். – இயக்கத்தின் வெளியீடு என்பதில் பிரச்சாரம் வெறுப்பூட்டும் அளவிற்குத் தலைதுாக்கியிருக்கும் என்ற கற்பிதத்தை இக்குறுநாவல் மிறீயிருக்கிறது என்கிறார் அவர்.

என்னுடைய வாசிப்பில் நஞ்சுண்டகாடும் அவ்வாறானதுதான். இன்னமும் சொன்னால், இந்த நாவல், தாம் சார்ந்த போராட்டத்திற்கு ஒரு நியாயமுண்டு, தம்முடைய நிலைப்பாட்டிற்கு ஒரு நியாயமுண்டு என்பதைக் கூட நேரடியாகச் சொல்ல முயலவில்லை. ஆகக்குறைந்தது ஒரு மென்தீவிரத்தோடு கூடத் தொடவில்லை. மாறாக நாவலின் மாந்தர்களிடையே ஊடுபாவியிருக்கின்ற மன உணர்வுகளிடையேயும், போராட்ட வாழ்வுச் சித்தரிப்பின் பின்னாலும், தமிழர்களுடைய அரசியல் நியாயப்பாடு மௌனமாகப் பயணிக்கின்றது என்பதைத் தேர்ந்த வாசகனால் கண்டுகொள்ள முடியும்.

குறிப்பாக தமிழக நண்பர்களுக்கு நான் ஒன்று சொல்வதுண்டு.

ஏதேனும் ஒரு தருணத்தில் புலிகள் இயக்கம் தொடர்பாக அவர்கள் கற்பனை செய்கின்றபோது, அதன் தலைவர் பிரபாகரனைத்தான் முதலில் கருதிக்கொள்கிறார்கள். ஆதரவளிப்பதாக இருந்தாலும் சரி, எதிர்ப்பதாகவிருந்தாலும் சரி தலைமை மீதான மதிப்பீடுகளின் வழியாகத்தான் புலிகள் இயக்கத்திற்குள் இறங்குகிறார்கள். ஆனால் தொன்னூறுகளின் தொடக்கத்தில் நினைவுதெரியத் தொடங்கிய என்னுடைய தலைமுறைக்காரர்களுக்கு அப்படியல்ல.. ஒன்றாகப் படித்தவர்கள், விளையாடியவர்கள், நீச்சலடித்தவர்கள், வகுப்பறைகளில் அழி றப்பருக்காகச் சண்டைபிடித்தவர்கள், இவ்வாறான மிகச் சாதாரண மனிதர்களுக்கு ஊடாகத்தான் புலிகள் இயக்கம் அறிமுகமானது. அதாவது கீழிலிருந்து மேலாக..

முதலில் குறிப்பட்டவர்களைப் பொறுத்தவரை தலைமை மீதான பிம்பம் உடைகிற தருணமொன்று ஏற்படுகின்ற அதே கணத்திலேயே புலிகள் மீதான பிம்பமும் உடைந்துவிடும். எங்களுக்கு அப்படியல்ல.. இந்தச் சாதாரண மனிதர்களுடைய நினைவுகளும், அவர்கள் இல்லையென்ற நிதர்சனமும், அதுவேற்படுத்துகின்ற குற்ற உணர்ச்சியும், சட்டென்று வெட்டமுடியாத ஒரு ஒட்டுறவாக அந்த இயக்கம் சார்ந்து நீண்டு கொண்டேயிருக்கும்.

நான் குறிப்பிட்ட சாதாரண மனிதர்களின் கதைதான் நஞ்சுண்டகாடு.

இந்நாவலில், விசித்திரன், சுகுமார்,கோபி, வேதநாயகம், நாகேந்திரன் முதலான மனிதர்கள், மிகச்சாதாரண குடும்பங்களிலிருந்து இணைந்தவர்கள் ஒரு பயிற்சி முகாமில் ஒன்றாகிறார்கள். அவர்கள் எவ்விடத்திலும்கூட தாங்கள் இணைந்துகொண்டதற்குத் தத்துவார்த்தமானதும் புரட்சிகரமானதுமான காரணங்களைச் சொல்லவில்லை.

காதலிலும் தோற்று வெளிநாடு செல்லவும் இயலாமல் போதைக்கு அடிமையான இந்நாவலின் பாத்திரமொன்று “ என்ர கெட்ட பழக்கங்களை விட எனக்கு விருப்பம் இருந்தாலும் விட ஏலாமல் தவிச்சன். இயக்கத்துக்குப் போனா அதுகளை எப்படியும் விட்டிடுவன். என்னில் எனக்கிருக்கிற வெறுப்பாவது இல்லாமல் போகும். வெளிக்கிட்டு வந்திட்டன்.” என்று சொல்கிறான்.
இன்னுமொருவன், எல்லா வீரமரண ‘உடல்களும்’யும் கோப்பாயில் அடக்கம் செய்ய எங்கட ரோட்டாலதான் போகுது. பெடிபொட்டையள், கிழவிகூட கொண்டுபோய்ப் பூப்போடுகிறார்கள். ஒரு நாளைக்கு அஞ்சுதடவையும் போகும். ஒவ்வொருக்காலும் நானும் பூக்கொண்டுபோய் போட்டுட்டுவந்து சாப்பிடச் சொல்லுறியே? அப்படிச் சாப்பிடேலாமல் தான் வந்தனான்” என்கின்றான்.

பல்கலைக்கழகத்திலிருந்து போனவனுடைய காரணம் வேறு. “கஷ்டப்பட்டுப் படிச்சன். எஞ்சினியரிங்க் கிடைக்கல. physical சயன்ஸ்தான் கிடைச்சுது. ரெண்டாம் வருசத்தோட கம்பசில படிச்சு வாழ்க்கையில் புதுசா ஒண்டும் பண்ணேலாதெண்டு தெரிஞ்சிட்டுது. அதைவிட இயக்கம் இன்ரலீயண்டாயும் மதிநுட்பமாயும் அக்ரிவாயும் செயல்முனைப்பாயும் இருக்கிறதாப் பட்டிது. இதுதான் சரியான இடமெண்டு வெளிக்கிட்டு வந்திட்டன்”
இந்த நாவலில் கதைசொல்லி விவரிக்கின்ற சுகுமார் என்ற பாத்திரம், மிகுந்த சிந்தனைத் தெளிவு மிக்கது. வறுமையான குடும்பத்திலிருந்து பாசமான அக்காவையும், முகிழ்த்த சிறு காதலையும் துறந்து அவன் இயக்கத்தில் இணைந்து கொள்கின்றான்.

kaviazhagan-wrapper1அவனுடைய உரையாடல்கள், மனித மனங்களையும், வறுமையையும், ஏழை பணக்காரனென்ற வர்க்க வேறுபாடுகளையும், குடும்ப உறவுகளையும் விசாரணை செய்கின்றன. உதாரணமாக, வேதக்குடும்பத்தில பிறந்தா வேதச் சமயம், சைவக்குடும்பத்தில பிறந்தா சைவச் சமயம், எண்டமாதிரி கஸ்ரப்பட்டவன் குடும்பத்தில பிறந்தா கஸ்ரப்பட்டவன்தானே.. என்பதுவும், சிவனும், தேவியும் உலகத்தைச் சுத்தி வந்தாத்தான் மாம்பழமெண்டு சொன்னவை, அவையளுக்குத் தெரியும் ஒருத்தராலயும் சுத்தேலாதெண்டு, பின்னை தாங்கள் தின்னத்தானே அப்படிச் சொன்னவை, என்பதுவும், மனிதன் ஒரு மதிப்புத்தின்னி, அவன் உருவாக்கிய கடவுள்கதைகளும் அப்படித்தானிருக்கும் என்று சொல்லுவதும், சொந்தபந்தமெல்லாம் வாழ்க்கையில் ஒரு போலி, ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான போலி என்பதுவுமான கூர்மையான உரையாடல்களை அவன் நிகழ்த்துகிறான்.

இவ்வாறு மனித விசித்திரங்கள் ஒன்றிணைந்து போராளிகளாக மாறும் காலகட்டத்தில் ஏற்படுகின்ற உளச்சிக்கல்களை வெளிச்சொல்வது நாவலின் இன்னொரு பரிணாமம்..

அவர்கள் தமக்குள் மோதுப்படுகிறார்கள், பொறுப்பாளரிடம் காட்டிக்கொடுக்கிறார்கள், காட்டிக்கொடுத்தவனையும் காட்டிக்கொடுக்கிறார்கள். (இப்படிக்காட்டிக்கொடுக்கிற சந்தர்ப்ப உரையாடல்கள் எனக்குச் சுவாரஷியமாயிருந்தன. இவர் மாஸ்ரர்… அங்க மாஸ்ரர்…ஓம் மாஸ்ரர்..செய்தவர் மாஸ்ரர் ..” என்றோ அல்லது “ஓமண்ணை..அவரண்ணை..அதுவண்ணை..அப்பவும் சொன்னான் அண்ணை” இந்த உரையாடல்கள் எனக்க ஓம் ரீச்சர், இவர் ரிச்சர், என்றமாதிரித் தோன்றுகிறது) பட்டப்பெயர்கள் சூட்டுகிறார்கள், ஒருவரையொருவர் ஒதுக்கி வைக்கிறார்கள், பிறகு ஒன்றாகச் சேர்கிறார்கள், வருத்தக்காரனில் பரிவு கொள்கிறார்கள், அவனைத் தூக்கிக்கொண்டு கழிவறைக்குச் செல்கிறார்கள்.. இவற்றைப் படிக்கின்றபோது ஓர் இராணுவ இயக்கமென்ற தரிசனம் மனதில் தோன்றவில்லை. மாறாக நெருக்கமான நண்பர் குழாமொன்றினையொத்த உணர்வு ஏற்படுகிறது. அதிலொரு உண்மையும் இருக்கிறது.

 

போராளியாக்குகின்ற நடைமுறை விவரிப்புக்கள்

உடலை வருத்துகின்ற பயிற்சியும், பயிற்சியிலிருந்து தப்புவதற்காக பொய்யாக மயங்கும் போராளிக்கு முதுகில் விளாசும் பொறுப்பாளரும், பயிற்சிக்குக் கள்ளமொளிக்க, நல்லெண்ணையைக் குடித்து வயிற்றாலடிக்கச் செய்வதும், புண்ணில் புழுப்பிடித்து மணப்பதுவும், காய்ச்சலடிப்பதுவும், கால்வீங்குவதும், துப்பாக்கிக்குரிய மரியாதையை கொட்டான் என்ற பொல்லுக்கு வழங்குவதும், தவறும்பட்சத்தில் தண்டனை பெறுவதும், நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் பொறுப்பாளர்களின் அதிகாரம் பற்றிப்பேசவேண்டும். நாவல் வாசிப்பில், பொறுப்பாளர்கள் தங்களுடைய அதிகாரங்களை மிகக் கடுமையாகப் பிரயோகிப்பதான, தோற்றப்பாடு இயல்பாக ஏற்படுகிறது. எனக்கு நம் சமூகத்தின், இயல்பான ஆசிரியர் மாணவர் உறவும், அதிலிருக்கின்ற வன்முறைப் பிரயோகங்களும், அதிகாரமுமே நினைவுக்கு வருகின்றன. இது இந்தச் சமூகத்திலிருந்து எழுந்த இயக்கமென்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்.
இதில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.

குறிப்பாக இங்கேதான் போராளிகளுக்கும் மேல்மட்டத்தினருக்கும் அதிகாரங்கள் உருவாகின்றன என்று முகப்புத்தகத்தில் யமுனா குறிப்பிட்டதாக நினைவு. இதனைத் தனிப்பரப்பாகவும் உரையாடலாம். ஆனால் தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைக்காத போராளியைத் திட்டும்போது அந்த அதிகாரத்திலிருக்கிற கரிசனையையும் எவ்வாறு புரிந்துகொள்வதென்பதுவும் ஒரு கேள்வியல்லவா..
இவ்வாறு போர்ப்பயிற்சியின் கடினமும், அந்த வலியும் விரிவாகப் பதிவு செய்யப்படுகின்ற பின்னணியில்தான் இந்த நாவல் வெளியாவது இரண்டுமுறை புலிகளால் நிறுத்திவைக்கப்பட்ட செய்தியையும் நாம் பார்க்க வேண்டும்.

புலிப்போராளியால் எழுதப்பட்டு, க.வே பாலகுமாரனால் முன்னுரை வழங்கப்பட்டு, அச்சுக்குத் தயாரான நேரத்தில், 2 தடவைகள் தடையுத்தரவுகள் கிடைத்ததாக நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது. போராட்ட வாழ்வென்பது எவ்வளவு வலி மிகுந்தது என்பதையும், பயிற்சியின் கடினத்தையும் இந்நாவல் விரிவாகப் பதிவுசெய்வதானது ஆட்சேர்ப்பைப் பாதிக்கக்கூடுமென்று கருதியிருக்கலாம்.

இன்றைக்கு ஈழப் போரைக் குறித்த இலக்கியங்கள், பெரும்பாலும், ஈழப்போர் பயணித்த பாதை பற்றியும், அதனுடைய தடம்புரள்வையும், விமர்சனத்தோடும், சிலநேரங்களில் வன்மமும் வெறுப்பும் நொதிக்க நொதிக்கவும், வெளியாகிக்கொண்டிருக்கற இக்காலச் சூழலில் அந்தப்போராட்டத்தின் பங்காளர்களாகிய சாதாரண மனிதர்களின் கதையை, தூயதும், கொச்சைப்படுத்தமுடியாததுமான தியாகத்தை, அவர்களுடைய பேரன்பையும் மானுடத்தையும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுடைய ஆன்மாவை, இந்நாவல் ரத்தமும் சதையுமாக முன்வைக்கிறது.

எல்லோர் முதுகிலும் விழுந்த ஈழயுத்தம் என்ற பிரம்படியை, வாய்ப்புக்களாக மாற்றும் தந்திரமும், விச்சுழித்தனமும் இல்லாத இந்த உண்மை மனிதர்களின் கதையைப் படித்து முடிகின்ற போது, குற்ற உணர்ச்சி நம்மைக் கவ்விக்கொள்கிறது.

(லண்டனில் 30 ஓகஸ்ற் 2014 நடந்த அரசியல் நாவல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)

By

Read More

ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்

தமிழ்கவி அம்மாவிற்கு இப்பொழுது வயது 64. அவர் எனது சிறுவயதுகளில் புலிகளின் குரல் வானொலியூடாக குரல்வழியில் அறிமுகமாயிருந்தார். வானொலி நாடகங்களில் வட்டாரப்பேச்சு வழக்கில், ‘அப்பிடியாமோ’ ‘மெய்யாமோ’ என்ற அவரது வார்த்தைகள் நினைவில் நிற்கின்றன. நாட்டார் பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் செய்திருந்தார். தமிழ்கவி அம்மாவை இதுவரை நான் நேரிற் சந்தித்துப் பேசியதில்லை. ஒருமுறை நேரிற் கண்டிருக்கிறேன். 2005இல் கிளிநொச்சி திருநகரில் அமைந்திருந் த.தே.தொ அலுவலகத்திற்கு நானும் சோமிதரனும் ஒருதடவை போயிருந்தோம். தவபாலன், கருணாகரன் ஆகியோரோடுதான் உரையாடல். அப்பொழுது வீதி வாயிலில் மடித்த இரட்டைப்பின்னலோடும், புலிச் சீருடையோடும் மோட்டர்சைக்கிளிலிருந்து (MD 90?) இறங்கி வந்தார் தமிழ்கவி. அங்குநின்ற ஒன்றிரண்டு பெண்போராளிகளை “என்னடி பிள்ளைகள்..” என்று விளித்துச் சிரித்தபடி வந்ததாக நினைவு. (அப்பெண்போராளிகளில் இசைப்பிரியாவும் ஒருவராயிருந்தார் என்பது துயர நினைவு)

புலம்பெயர்ந்த பிறகு, தொலைக்காட்சிகளிலும் தமிழ்கவி அம்மாவைக் கண்டேன். அம்பலம் என்றொரு நிகழ்ச்சி செய்தார். வேலிக்கதியாலில் குழை பறித்துக்கொண்டோ, அல்லது கோடாரியால் விறகு கொத்திக்கொண்டோ.. “பின்ன உவன் மகிந்தவுக்கு உது தெரியாதாமோ” எனத்தொடங்குகிறமாதியான நாட்டு நடப்பு உரையாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அதன்பிறகு 2009 மார்ச்சில், இறுதிக்காலத்தில் யுத்தகளத்திலிருந்து வெளியான காணொளி ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.

0 0 0

ஊழிக்காலம் நாவலை நான் படித்து முடித்தபோது, மிகச்சரியாகச் சொன்னால், ஓரிடத்தில் தரித்து நிற்கமுடியாமல், உயிர்ப் பயத்தோடு ஓடி அலைந்த ஒருவன் கடைசியாக சகல நம்பிக்கைகளையும் தின்னக்கொடுத்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்ற மாதிரயான மனநிலையில் ஒரு மரநிழலில் குந்தியிருந்த்தைப்போல உணர்ந்தேன். அத்தனை அலைக்கழிவு நாவலில்..

ஊழிக்காலம் 2008இற்கும் 2009இற்கும் இடையிலான குறுகிய காலமொன்றில் நடந்த நீண்டபயணத்தின் கதை. அறுபது வயதில் உள்ள ஒரு தாய்/பேத்தியார் தனது பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும், தெருவில் பொங்கி வழிந்து துரத்திய தீக்குழம்பின் முன்னால், அத் தீ நாக்குகளில் அகப்பட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்போடு ஓடுகிற கதை. அப்படி ஓடுகிறவர், ஈழப்போரில் தன்னையும் ஒருவிதத்தில் இணைத்துக்கொண்டிருந்தார் என்பது மேலுமொரு அழுத்தமான பின்னணியாயிருந்த்து. நாவல் முழுவதிலும், பார்வதி என்ற மூதாட்டிக்குள் இருக்கின்ற ஒரு தாயின் மனதும், ஒரு போராளியின் மனதும், முரண்பட்டும், உடன்பட்டும் சமயங்களில் முரண்டுபிடித்தும் செல்கின்றன. வெகு நிச்சயமாக இது தமிழ்கவி அம்மாவின் கதை என்பதை படிக்கிற எவராலும் புரிந்துகொள்ள முடியும். அவரது முதல் நாவலான வானம் வெளிச்சிடும் எப்படியோ அப்படியே…

0 0 0

2009 இறுதி யுத்தநாட்கள் பற்றி அழுத்தமான கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன. என்ன நடந்தது என்பதைச் சம்பவங்களாகப்பதிந்த கதைகளைத் தாண்டி அக்காலம் முழுதிலுமான மக்களுடைய உணர்வுகள், மனப் பிறழ்வுகள், சிறுவர் குழந்தைகளது வாழ்வு, சாவு நிச்சயமென்றான பிறகும் அதுவரைக்கு வாழவேண்டிய நிர்ப்பந்தம், பசி எனப் பலவற்றை அவை பேசின. யோ.கர்ணனின் அரிசி – என்ற சிறுகதை அந்த நிர்ப்பந்தத்தினையும் அத்துயரை அனுமதிக்கும் மனதையும் அழுத்தமாகப்பதிவு செய்த ஒரு கதை.

ஊழிக்காலம் நாவல் அப்படியான உணர்வுகளுக்கூடாகவே பயணிக்கிறது. மரணத்தை மிகச்சாதாரணமாக எதிர்கொள்ளப்பழகிய மனங்களை அது சொல்கிறது.

“இரணைப்பாலையால வெளிக்கிட்டாச்சா?” என்றாள் ராணி.

“ம்.. பிள்ளையள் சாமான்கள் எல்லாம் கொணந்திட்டம், நான் இப்ப கடைசியாக் கிடந்ததுகள கொண்டுபோறன்.”

“அங்கால நீங்க இருந்த பக்கம் ஷெல் வருகுதே..”

“பின்ன.. எங்கட பங்கருக்குள்ள ஒரு பிள்ளைக்கு பீஸ் அடிச்சிட்டுதெல்லே..”

“பிறகு..”

“பிறகென்ன.. அது செத்திட்டுது.”

“ஆரும் காயமே..”

“பங்கர் பிறத்தியில விழுந்தது. இந்தப் பிள்ளை தற்செயலா எட்டிப் பாத்திட்டுது. கழுத்தைச் சீவிக்கொண்டு போட்டுது. நீங்க அக்காவையளக் கண்டனீங்களா..?”

0 0 0

மரண வெளியின் நடுவில் நின்றுகொண்டும், தன் சாதி மதிப்பினைப் பேணுகின்ற, அதனை விட்டுக்கொடாத, ஆதிக்க மனங்கள் நாவலில் பல் இளிக்கின்றன.

“அம்மம்மா…! தண்ணிக்கு போகினமாம் வாறீங்களா எண்டு கேக்கினம்” அபிராமி சத்தமிட்டாள்.

“எங்க?”

“அங்க புதுக் குடியிருப்பு ரோட்டில, செந்தூரன் சிலையடிக்குக் கிட்ட குழாய்க் கிணறு இருக்காம்.”

வளவில் கிணறு ஒன்றும் இருந்தது. கட்டாத கிணறு. குளிக்க மட்டும் பாவிக்கலாம். அயலில் உள்ள வீடுகளில் கட்டுக் கிணறுகள் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றின் வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. பார்வதிக்குக் காரணம் புரிந்திருந்தது. “சாதி என்னவாக இருக்குமோ எண்டதுதான்..” என நினைத்துக்கொண்டாள்.

“கட்டையில போகும்போதும் திருந்த வாய்ப்பில்லை”

வாளியை எடுத்துக் கொண்டு அந்தச் சிறுவர்களுடன் பார்வதியும் புறப்பட்டாள். பின்னே வந்த சிறுவனொருவன் எதிரேயிருந்த வளவைக் காட்டினான். “அங்க நல்ல தண்ணி இருக்கு அள்ள விடமாட்டினம்” என்றான்.

0 0 0

சாவினை எதிர்கொண்டிருந்த காலத்திலும் கூட பதவியின் அதிகாரச் சுகத்தோடு மனிதர்களை எதிர்கொண்ட அலுவலர்களை இனங்காட்டுகிறது.

இருபது முப்பதுபேர் சாமான்களை வாங்கிச் சென்றிருப்பார்கள். பார்வதியின் முறை இன்னமும் வரவில்லை. பெயர் கூப்பிடுமட்டும் சற்றுத் தள்யிருந்தாள். “படீர் படீர்” என்று எறிகணைகள் விழத்தொடங்கின. கண்ணுக்கெட்டிய தூரத்தில் கரும்புகை மேலெழுந்தது.

நிவாரணத்திற்காக காத்திருந்த பெண்கள் “ஐயோ பிள்ளையள் தனிய” என்றவாறே புகை வந்த திசை நோக்கியோடினார்கள். பார்வதி அமைதியாயிருந்தாள். நிவாரணம் வாங்காமல் போறதில்லை.

கொஞ்ச நேரத்தில் மூன்று பேர் செத்திட்டினம். ஆறேழு பேர் காயமாம் என்ற செய்தி வந்தது. பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ராமச்சந்திரன்! ராமச்சந்திரன்.. ஆரப்பா ராமச்சந்திரன்” மனேச்சர் சத்தமிட்டான். ஆளில்லை. அந்த மட்டையை ஓரமாக வைத்துவிட்டு அடுத்த மட்டையை எடுத்தான். “செல்வராசா! செல்வராசா! மட்டைய வச்சிட்டு வாய் பாக்கிறாங்கள் போல, செல்வராசா, ச்சிக்.. நாயளோட கத்திறதில தொண்டைத்தண்ணி வத்திப் போகுது. அங்கால போடு மற்றாள் வா..” மானேச்சர் கொதிதண்ணிர் குடித்தவன் போல சீறினான். “சாமான் எடுத்தாச்செல்லே. ஏன் இதில நிக்கிறாய்..”

“ஐயா எனக்கு ரெண்டு காட்டையா, பிள்ளையின்ரயும் கிடக்கு”

“பிள்ளைய வரச் சொல்லு போ..”

“ஐயா.. அவள் கால் ஏலாத பிள்ளை. இஞ்ச ஆக்களுக்கும் தெரியும், சொல்லுங்கவனப்பா” என்று அந்தத் தந்தை அருகிலுள்ளவர்களை சாட்சிக்கு அழைத்தான். “ஓமோம் அந்தப் பிள்ளை நடக்க மாட்டுது..” என்றனர்.

“பெரிய கரைச்சலப்பா உங்களோட மற்றவைய மனிசராக மதிக்கிறியளில்ல..”

பார்வதியின் முறை வந்தது. தன் சிட்டையை வாங்கிக் கொண்டு நகர, செல்வராசா, ராமச்சந்திரன் அட்டைகளுக்குரிய பெண்கள் வந்து சேர்ந்திருந்தார்கள்.

“உங்கள கூப்பிட்டவர். நீங்க முன்னுக்குப் போங்க” என்று பார்வதி அவர்களை மனேச்சரிடம் அனுப்பினாள்.

“கூப்பிடேக்க எங்க போனனீங்கள்?”

“ஷெல்லடிச்சது பிள்ளையள் தனிய.. பாக்க..” அவர்களில் ஒருத்தி வார்த்தையை முடிக்குமுன் மனேச்சர் கத்தினான்.

“அப்ப போய் செல்லைப்பாத்திட்டு ஆறுதலா வாங்க..”

“பிள்ளையள் தனிய ஐயா”

“இஞ்ச.. ஒண்டில் பிள்ளையளப் பார்.. இல்லாட்டி இதைப் பார். எங்கள என்ன விசர் எண்டே நினைச்சியள்…” இப்படிப் பேசினானேயொழிய அவர்களுடைய நிவாரணக் காட்டை அவன் எடுக்கவேயில்லை.

0 0 0

இரத்தச் சேற்றில் காதல்களும் மலர்ந்தன. உடல்களும் இயல்பான பசியாறப் பிரயத்தனப்பட்டன.

ஒரு நூறு மீற்றர் நடந்திருப்பாள். தெருவில் சனங்கள் இலையான்கள் போல மொய்த்திருந்தனர். திடீரென்று எறிகணையொன்று கூவி இரைந்து அருகிலெங்கோ வீழ்ந்து வெடித்தது. சத்தம் கடலலைபோல இரைந்தது. ‘குத்துற சத்தமும் கேக்காதாம், வெடிக்கிற சத்தமும் கேக்காதாம்’ எனப் புறுபுறுத்தவாறே தெருவோரத்தில் வெட்டியிருந்த ஒரு அகழியுள் குதித்தாள்.

அகழிக்கு முன்னால் ஒரு மினி பஸ் நின்றது. அதற்குள் ஒரு குடும்பம் வசிக்கின்றது போலும். பொருட்கள் தெரிந்தன. ஒரு இளம்பெண் அவளுக்கு பதினேழு பதினெட்டு வயதிருக்கும். பஸ் வாசலில் உட்கார்ந்து கிடங்கினுள் குதிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்புறமாக ஒரு ஆணின் கை அவள் தோளைத் தொட்டு உள்ளே இழுத்தது. அவள் சிணுங்கினாள். அடுத்த எறிகணை அவர்களைக் கடந்தது.

“செல் வருது..” என்று அவள் சிணுங்கினாள். “இஞ்ச வராது.. நீ வா…” மறுபடியும் அவளை உள்ளே இழுத்தான் அவன். அவளது உடலில் கைகளால் அளையத்தொடங்கினான்.

மரணத்தின் வாசலில் மாலை மாற்றத் துடிக்கும் அந்த ஜோடியைப் பார்வதி வியப்போடு பார்த்தாள். அவளுக்கும் சிரிப்பு வந்தது. “இண்டைக்கோ, நாளைக்கோ ஆர் கண்டது. வாழ்ந்தனுபவிக்கட்டும்” என்று நினைத்துக் கொண்டாள்.

0 0 0

ukalaஇறுதி யுத்தகாலத்தில், புலிகளால் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அத்துமீறல்களை இந்நாவலில் மிக நுணுக்கமாக இந்நாவலில் விபரித்திருப்பதானது தமிழ்கவி மீதும், இந்நாவல் மீதும் பலமான தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடும். நாவலின் போக்கில் குறுக்கிடுகின்ற சம்பவங்களாக அவை குறிப்பிடப்படுகின்றன. “வன்னியில் இவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை” என்று இப்பொழுதும் நம்புகின்ற பலரைக் கொதிப்படையச் செய்யும் சம்பவங்களை நாவலாசிரியர் துயரம் ஒழுகும் எழுத்துக்களினால், விபரித்திருக்கிறார். நாவலின் பிரதான பாத்திரமான பார்வதி (இனி வானம் வெளிச்சிடும் நாவலின் பிரதான பாத்திரமும் பார்வதிதான்) சந்திக்கின்ற மனிதர்கள், போராளிகள், என்போருடனான உரையாடல்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பாலகுமாரனுடனான உரையாடல் ஒன்று இப்படிச் செல்கிறது.

ஆளுயரத்துக்கு ஆழமான, ஒரு ஆள் நீட்டி நிமிர்ந்து படுக்கக் கூடிய திறந்த பதுங்குகுழி. அதனுள் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார் பாலகுமாரன். எதிரில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. பார்வதிக்கு முன்பே வேறு யாரோ அவரை சந்தித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

பார்வதி “வணக்கம்” என்றவாறே படிகளில் இறங்கினாள்.

“ஓ.. வணக்கம், வாங்கோ, இருங்க..” காயமடைந்த இடது கையை மடக்கித் தொங்கவிட்டிருந்தார்.

“இப்ப..எப்படியிருக்குது கை…” என்றாள் பார்வதி.

“பரவாயில்லை. நேற்றே என்னை இவ கொண்டு வந்து தங்கட சொந்தக்கார வீடொண்டில் விட்டிருந்தா..

“இஞ்ச..?”

“இல்ல நான் மருத்துவமனையில தான் நிண்டனான்.. நேற்று முன் நாள் இரவு தான் வெளியால வந்தனான்..”

“பிறகு.. நேர இஞ்ச வந்திட்டியள்?….”

“இல்ல… அதான் சொன்னனே இரணைப்பாலைக்க ஒரு வீட்டில் விட்டவா..ச்ச..” என்றவர் கவலையுடன் முகத்தைச் சுழித்தார். அவரே பேசட்டும் என பார்வதி மௌனமாகவிருந்தாள்.

“காது குடுத்துக் கேக்கேலாது எனக்கு. முகங்குடுக்கேலாத கதையள், நாயள் பேயள், எண்டு.. ம்..விடுங்க. அதுகள இப்பயேன்? வேதனையளச் சுமக்கத் தயாரா இருக்கவேணும்” அமைதியானார்.

“வெண்டிருந்தால் இந்தக் கதை வராது” பார்வதி ஏதோ பேசவேண்டும் என்பதற்காகத்தான் பேசினாள்.

“வெற்றி எண்டது எது? அது சண்டையில எடுக்கிறதில்ல. யுத்தத்தில வெற்றி தோல்வி சகசம். ஆனால் மக்களை வென்றிருக்க வேணும். அதைச் செய்யாமல் விட்டிட்டாங்கள்.”

“மெய்தான் இப்ப என்ன நடக்குதெண்டே தெரியேல்ல.”

“இதில்ல, இன்னுமிருக்கு. கண்டாலும் கதைக்க மனமில்லாம . முகத்தத் திருப்பிக் கொண்டு போவாங்கள். ஒரு சொப்பிங் பாக்கோட ஓட வேண்டிவரும். ஆர் எவரெண்டில்ல, எல்லாரும் சமம் எண்டுவரும், அதிகாரம் போட்டி எல்லாம் அழியும். வல்லமை பேசினவை வாயடங்கிப் போவினம். மக்களக் காப்பாற்ற எடுத்த ஆயுதத்தை மக்களுக்கு எதிராகத் திருப்புவாங்கள். நண்பர்களக்கூட பாக்க மனமில்லாமப் போகும். கண்டாலும் தெரியாத மாதிரி போகிற நாள் வரும். உது நடக்கும்” நிறுத்தி நிறுத்தி மெதுவாகப் பேசினார்.

0 0 0

புலிகளது அத்துமீறல்களைப் பதிவு செய்கிற அதேநேரம், இச்சம்பவங்களால் இயக்கத்தின் ஆன்மா காயமுறுகிறது என நாவல் பரிதவிப்பதையும் வாசகனால் புரிந்துகொள்ள முடியும். புலிகள் அமைப்பிலிருந்த தன்னுடைய 2 மகன்களில் ஒருவனை துணுக்காயிலும் இன்னொருவனை ஆனையிறவிலும் இழந்த தமிழ்கவிக்கு, அதுமட்டுமன்றி ஒரு போராளியாகவே வாழ்ந்த தமிழ்கவிக்கு இயல்பாகவே எழக்கூடிய மேற்சொன்ன பரிதவிப்பு நாவல் முழுவதிலும் ஊடு பாவியிருக்கிறது. இதெல்லாம் ஆரைக்கேட்டு நடக்குது என்று கோபமாக, விரக்தியாக பல்வேறு பாத்திரங்கள் நாவலில் பேசிக்கொள்கின்றன. ஒரு கட்டத்தில் நம்மையும் கேட்க வைக்கின்றன.

0 0 0

நாவலில் பிரதான பாத்திரங்கள் தவிர்த்து மற்றயவர்கள் வந்த வேகத்தில் நகர்ந்து மறைகிறார்கள். கதை நிகழும் சூழலும் பிரதேசமும் ரயிலின் ஜன்னலோரத்தில் மறைந்து நகர்வதைப்போல மறைந்துகொள்கின்றன. புதிய களமொன்றிற்குள் புகும் வாசகன் அச்சூழலையும் மாந்தர்களையும் நின்று கிரகித்துக்கொள்வதற்குள், கிரகித்து உள்வாங்குவதற்குள் நிலங்கள் இழக்கப்பட்டு புதிய நிலங்களுக்குள் புகவேண்டியிருக்கிறது. மாந்தர்கள் சிலர் செத்துப்போக பலர் காணாமற்போய்விடுகிறார்கள். அவர்களில் பலர் நாவலில் மீள வரவே இல்லை. அவர்களது பின்னணித்தகவல்கள் பலமாக கட்டப்படவில்லை என்பது ஒரு பலவீனமாக கருதப்படுகிற நேரத்தில், மறுவளமாக இத்தகைய பண்புகள் வாசகனையும் ஓர் இடம்பெயர்ந்து ஓடுகிறவனாக உணரச் செய்துவிடுகின்றன.

0 0 0

தமயந்தி சிவசுந்தரலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்ட தமிழ்கவி 1949இல் வவுனியாவில் பிறந்தவர். ஈழ விடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த பெண் எழுத்தாளர். போராளிகளாலும், மக்களாலும் மம்மீ, என்றும் அன்ரீ என்றும் அன்பாக அழைக்கப்படும் தமிழ்கவி புலிகள் அமைப்பில் இணைந்து, ஈழப்போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய். இவரது முதலாவது நாவல் இனி வானம் வெளிச்சிடும் 2002 இல் ஈழத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

-கனடா உரையாடல் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகள் –

By

Read More

ஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி

மனிதன் விலங்குதான். தீ மூட்டியதிலிருந்து, சிந்தித்துச் சிந்தித்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக எண்ணி எண்ணித் துணிந்து, இணையத்தால் உலகளந்த பின்னும் அவன் விலங்குதான். அவனுக் கான வசதிகள் மேம்பட்டன, அவ்வளவுதான். அறிவு என்பதோ, பருப்பொருட்களைப் பகுத்து அறிந்து, ஆக்கிப் பயன் கொண்டது மட்டும்தான். அவன் தன்னை அறிவதில்லை. தற்காத்து, தற்பேணி, தற்காமுற்று தான் தனது என அலைக்கழிகிறான். அவன்தான் குடும்பம், குழு, கூட்டம், சாதி, இனம், அரசு, நாடு என்று அலை விரியும் வட்டங்களில் கூடிக் களித்தும் முரண்பட்டும் போரிட்டும் அழிகிறான்; தொடர்கிறான். எங்கும் வனநீதி ஒன்றுதான். அவன் வளர்த்த மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆன்மிகம், ஞானம் எதுவும் குருதி கொட்டும்போது துணை நிற்பதில்லை. ஆள்கிற நீதிநெறிகளும், நிலைபெற்ற விழுமியங்களும், மானுடப் பேரறமும் அவனைக் காப்பதில்லை. வாழ நேர்கிற நிலப் பரப்பின், கற்பிதங் களின் சூழ்நிலைக் கைதி அவன். அவனே தெளிந்து தேர்ந்தாலும், பாதை அடைபடும் வேலிகளால். முரண் பகை வன்மம் வெறி போர் அழிவு. பின்னும் பேரியற்கை தன்போக்கில் இயல்கிறது. மனிதன் சிறுத்துப் போகிறான் மற்றொரு விலங்காக.

oozhi_copyமனிதகுலம் பேரளவில் மாண்டது இயற்கைப் பேரிடர்களால் அல்ல; போர்களால் தான். பெரும் புயலில் சிக்கிச் சிதைவுறும் பயிர்களாய்ப் பொதுமக்கள். காப்பாற்றுமாறு கெஞ்சிக் கதறி முறையிட்ட அவர்களது கடவுளே கைவிடும் கணத்தில் அவர்களுக்கு முன், போருக்கான காரணிகள் எதுவாயினும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. போரில் அடிபட்டு மரணிக்கும் குழந்தையை மடியில் கிடத்திக் கதறும் அன்னைக்கு லட்சியம், புரட்சி, விடுதலை என்ற வெற்றுச்சொற்கள் எதுவும் காதில் ஏறாது. அந்தத் தாய்களால் ஆனதுதான் சமூகம். அவள் ஆற்றாது அழுத கண்ணீர் அரசியல் பிழைத்தார்க்குக் கூற்றாகுமா?

மஞ்சூரியாவில் ஜப்பான் நிகழ்த்திய கொடுமைகளுக்குத் தண்டனை விதித்த வெள்ளைக்கார நீதிதேவன், தான் அணுகுண்டு வீசியதை மறந்து போவான். மஞ்சூரிய ஹான்கள் அதே கொடுமையைத் திபெத்தியர்களுக்கு இழைப்பார்கள். ஐரோப்பிய ‘அறிவாளிக் குழு’க்களின் திபெத்திற்கான விடுதலை முழக்கம், அரசியல் திசைமாறி வீசும்போது, அக்காற்றில் கரைந்து காணாமல் போகும். ஜப்பானியர் ஆக்கிரமித்து லட்சக்கணக்கில் கொன்று குவித்தால், சீனர்கள் தங்களுக்குள்ளே கோடிக்கணக்கில் களை யெடுப்பார்கள். அதற்கும் தத்துவப் பெயர் – ‘கலாச்சாரப் புரட்சி’. புரட்சிப் பயிரின் அறுவடை முடிந்தபின்னர்தான் களை எடுத்த கணக்கு வழக்கையே உலகம் அறியும்.

பயன் கருதி மனிதன் வகுத்ததுதான் பயிர், களை என்ற பாகுபாடு. வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
அறிக! பூமிக்குக் களை என்று எதுவும் இல்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தியானித்த ஞான மரபு, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக ஆற்றுப்படுத்திய பண்பாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கருதிய இனம் ஈராயிரம் ஆண்டுகளாக என்னவாயிற்று? நிலத்தையும் பொழுதை யும் வாழ்க்கையையும் இணைத்தே இலக்கணம் வகுத்த ஒரே இனம், உலகக் கவிதைகளில் உன்னதத்தை எட்டிய ஒரே மொழி காலம் எனும் பெருவெள்ளத்தில் என்னவாயிற்று? அகமுரண் > மோதல்கள். புறப்பகை > போர்கள். அரசு > யுத்தங்கள். பேரரசு > பெருமதங்கள். பக்தி > மயக்குறு மாக்கள். மாற்றார் வல்லமை > வேற்றின ஆதிக்கம். அடிமை வாழ்வு > ஏக இந்தியா. சக்கரவர்த்தி வம்சம் > குறுநில மன்னர்கள். கொள்ளைக் கூட்டம் > ஓட்டுக்குக் கையூட்டு.
எஞ்சியது எவையெவை?

தாய்ச்சமூக விழுமியங்களும் வளமார்ந்த மொழியும்.

இன்று? அறிந்த தமிழர் வரலாற்றில் இத்தகைய இனப் பேரழிவு எப்போதும் நிகழ்ந்ததில்லை. இலங்கையில் இனத்தின், மதத்தின், மொழியின் பேரால் தொன்றுதொட்டுத் தொடரும் பகைமையால் உருவான போரில் தமிழர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
சிறுபான்மைத் தேசிய இனத்தின் வாழ்வுரிமைக் கோரிக்கை கள் பல்லாண்டுகளாக அறவழியில் தொடர்ந்தன. பேரின ஆட்சி யாளர்களின் அடக்குமுறையால் அவை மறுக்கப்பட்ட பின்னர்தான் ஆயுதப் புரட்சி எழுந்தது. தனி நாட்டுக்கான வேட்கையும். ஒரு நாட்டின் அரசு புரட்சியாளர்களை அடக்க முயலும் சாக்கில் தன்னாட்டு மக்களையே திட்டமிட்டுக் கொன்று குவிக்கையில், புரட்சி எழுந்ததற்கான நியாயத்தை – ஈழத்தை – மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாக ஆயிற்று.

தமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின?

முப்பதாண்டுகளாகக் களத்தில் உறுதியாகத் தாக்குப்பிடித்து நின்றதே வெற்றிதான். இறுதிக்கணம்வரை நெஞ்சுரத்தோடு போராடி வீழ்ந்ததும் ஒரு இதிகாசம்தான். வாழ்க்கையும் வரலாறும் எந்தப் புள்ளியிலும் முடிவதில்லை; அது தொடர்கதைதான்.

ஆயினும், சில அடிப்படைக் கேள்விகள் எஞ்சுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் போரைத் தேர்ந்த புரட்சியாளர்கள் முன்னுணர்ந்தே தம் முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், முதியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது ஏன்?

அந்த மரண ஓலம் உலகின் காதுகளுக்கு எட்டியும் அது கண்டுகொள்ளவில்லை; கண்ணை மூடிக்கொண்டது. இந்தியத் தமிழர்களுக்கு அதன் பேரவலம் உறைக்கவில்லை. தன்னலம் அன்றி வேறு எதையும் கருதாத அரசியல்வாதிகளை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்கள் அவர்கள்; வேறு வழியும் அறியாதவர்கள்.

இந்தப் பேரழிவைத் தடுக்க முடியாததன் அடிப்படைக் காரணம் – தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி இயங்கும் அறிவுத்தளம் இத்தகைய சிக்கலான, பிரம்மாண்டமான பிரச்சினையிலிருந்து தற்காக்கும் திறன் உள்ளதல்ல. என்றுமே தமிழ் ஊடகங்கள் கழிவுநீர்த் தடத்தில் செல்பவை. அதன் வணிகநோக்கி லான கேளிக்கைகளையும் கல்விக்கூடத்தின் மனப்பாடப் பகுதியை யும் தவிர சராசரித் தமிழன் வேறு எதையும் அறிய வாய்ப்பில்லை. அவனுக்குரிய செய்தி, ஈடுபாடு, கனவு, இலக்கு, விவாதம், வெறி எல்லாம் மூன்றாம்தர சினிமாவோடுதான். அவனது படிப்பு ‘எழுத்து’ அறிந்ததுதான்; அதுவும் வேலைவாய்ப்புக்கானது மட்டும். ‘கல்வி’க்கான வாய்ப்பே இச்சூழலில் வழங்கப்படாதபோது, தமிழ் சினிமாவைத்தான் கசடோடு கற்றான். அரசியலும் ஊடகங்களும் அதை மட்டுமே கற்பித்தன. பக்தி மார்க்கத்தைவிடவும் சினிமா மயக்கம் கடும் வீரியம் மிக்கது. கற்பனையில் அல்ல, கண்ணனும் ராதையும் கண்முன்னே திரையில் ஆடிப்பாடுகின்றனர். அவனிடம் ஓட்டு வாங்கி அவனை ஆளவும் செய்கின்றனர். பாவம் அவன், தன்னைச் சுற்றியே என்ன நடக்கிறது என்று அறியாதவன். ஈழத்தில் என்ன பிரச்சினை என்று உண்மையிலேயே அவனுக்கு எதுவும் தெரியாது. தமிழ்ச் செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் யாருக்கும் தெரியாதுதான்.

இங்குதான் அடிப்படைச் சிக்கல் வெளித் தெரிகிறது. உலகத்திற்கு, தமிழக மக்களுக்கு தங்கள் போராட்டத்தை, அதன் தேவையை, கோரும் உரிமைகளை, நியாயத்தை உணர்த்தவேண்டிய ஈழ விடுதலை இயக்கங்கள், அறிவாளிகள் அதற்காக எதுவுமே செய்யவில்லை. இயலவில்லை. இன்றுவரை ஈழக் கோரிக்கை, போராட்டம் பற்றித் தெளிவாக விளக்கும் ஒரு நூல்கூட அவர் களால் வெளியிடப்படவில்லை. ‘பங்காளியப் பக்கத்து வீட்டுக் காரன் அடிக்கிறான்’ என்ற உணர்வு மட்டத்தில்தான் ஈழப் பிரச்சினை தமிழகத்தில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இந்திய கம்யூனிச இயக்கங்கள் ‘இந்திய சமூகத்தை வரை யறுத்துப் புரிந்துகொள்ள முயலும்’ முன்னர் வரலாறு கடந்து போய்விட்டது மாதிரிதான் இதுவும்.

வெள்ளத்தனைய மலர்நீட்டம்.

இதுவும் கடந்து போகும். எதுவும். எனினும், அடிபட்ட, அவலமுற்ற, அழிக்கப்பட்ட நினைவும் உணர்வும் மரத்துப் போகுமோ, மங்கிப்போகுமோ?

பிள்ளையைப் புதைத்த இடுகாட்டில், கண்ணீர் உலராமல் நிற்பவர் ஈழத்தவர், திரும்பிச் செல்ல ஒரு வீடு இல்லை; வீடு திரும்ப மனம் இல்லாமல் தொலைந்துபோனவர் புலம்பெயர்ந்தோர்; யாரோ ஒட்டிய அஞ்சலி சுவரொட்டியைப் பார்த்துவிட்டு சினிமாவிற்குச் செல்பவர் தமிழ்நாட்டார்.

தன் பட்டறிவில் இருந்து பாடம் கற்காத எந்த மனிதனும், எந்த சமூகமும் முன்னகர்வதில்லை.

கொடும் போர்க்குற்றங்களுக்கான மெய்யான நேரடிச் சாட்சி இந்தப் படைப்பு. இனவெறியின் ஊழிக்கூத்து. இறுதி முற்றுகைக் கால களப்பலி நாட்களின் பேரவலச் சித்தரிப்பு. துன்பக் காட்டாற்று வெள்ளத்தின் சுழலில் இழுபட்ட தவிப்பு. எல்லாம் முடிந்தபின், சாம்பல் படுகை மீதிருந்து, 60 வயதைக் கடந்த ஒரு அம்மம்மாவின் உறைபனியான நெஞ்சில் கசியும் துன்ப நினைவுகள். ‘வாழ்ந்து’ பெற்ற அனுபவங்களின், பதைபதைக்கும் அன்றாடப் பதிவுகளின், நம்பிக்கையின் கடைசி மூச்சுத் தருணங்களின் பிணவாடை.

சாம்பலைத் தின்னமுடியுமா நெருப்பால்?

கொலைக்களத்தில் இருந்து தப்பி ஓடும் பெரும் பதற்றச் சூழலில், இந்த அம்மம்மா தனது தளர்ந்த வயதையும் பொருட் படுத்தாது, பேரக்குழந்தைகளின் உயிர்காக்கும் முனைப்பில் கொள்ளும் பிரயாசையும், மனத்தவிப்பும், ஆன்மாவின் கொதிப்பும் அசாத்தியமானவை. பொதுவாகவே, பெண்கள் இல்லத்தை நெஞ்சில் சுமந்து திரிபவர்கள். இங்கோ நிலமற்ற இல்லம். கூடு சிதைந்த கோலம். குஞ்சுகளுக்கு இரை தேடித் தேடி ஊட்ட ஒண்ணாப் பரிதவிப்பு. தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓரிடத்தில் நிற்கவியலாத அபாய ஓட்டம்.

தகிக்கும் பாலை மீது கால்மாற்றிக் கால்மாற்றி உறவுகளைச் சுமந்து அலைந்த வயோதிகப் பாதங்கள்…. உலகின் அதிநவீன ஆயுதங்களின் பங்கை விட, எட்டுத்திக்கும் துரோகத்தின் பங்கு, இந்த உயிர்வதைப் பேரழிவில் கூடுதலான அடியோட்டம். துன்மார்க்க நுண்தந்திர உணர்வுகளை சாவின் விளிம்பில்கூட கைவிடாத மனித அகம். ஆயினும், இறுதிக் கையறு நிலையிலும் கருணை கொண்ட சில மனிதர்கள் இனியும் வாழ்க்கைக்கான அர்த்தத்தைச் சுட்டிச் செல்கின்றனர். ஆயுதம் எதுவும் அகத்தாலும் செப்பனிடப்பட்டதாக இருத்தல் வேண்டும். உறுதியும் ஒழுங்கும் கொண்ட தலைமையும் இறுதி நாட்களில் தனது கடைமடை இயக்கக் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது இயல்புதான். ஆயினும் அது வரலாற்றுத் துயரமாயிற்று.
புதினம் என்று வகைப்பட்டாலும், இது ஒரு வாக்குமூலம் தான். எரித்த தீயைக் காட்டும் சாம்பல் இது; பிரிந்த உயிர் சிந்திய உறைந்த ரத்தம் இது; கதறியழுத கண்ணீரின் தடம் இது.

கருணை காக்குமோ உலகை இனியேனும்! வரலாறு வல்லமையின் பக்கம் சாய்ந்தாலும், மனித குலம் காலங்காலமாக வளர்த்துப் பேணிவரும் விழுமியங்கள் அறத்தைச் சார்ந்தே இயங்கியாக வேண்டும். நம்பிக்கைதான் பற்றுக்கோடு. நன்னம்பிக்கை.
– நா.விஸ்வநாதன்
ஆசிரியர், தமிழினி

By

Read More

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்

ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக அகதித்தஞ்ச விசாரணையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர்  சோபாவில் புதைந்திருந்து விரல்களால் முன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தார். இளைஞனின் ரீ சேர்ட்டில் புலியொன்று பாய்ந்தபடியிருந்தது. தொப்பியிலும் அதே புலி. கழுத்தினில் சுற்றப்பட்டு மார்பினில் தொங்கிய மிதமான குளிரைத்தாங்கும் சிவத்த கம்பளிச் சால்வையின் இரு முடிவிடங்களிலும் இரண்டு புலிகள் பாய்ந்தன. கன்னங்களில் மெல்லிய கறுத்தக்கோடாக தாடியை இழுத்திருந்தவனும், தாடையில் குஞ்சுத்தாடியை விட்டிருந்தவனும், சொக்கிலேட்டுக்கும் குங்குமக்கலருக்கும் இடைப்பட்ட வண்ணத்தில் நெற்றியில் புரண்ட தலைமுடியை நிறம் மாற்றியிருந்தவனுமாகிய அவ் இளைஞனை குமாரசூரியன் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமா எனப் பிரயத்தனப்பட்டார். மேலும் இரண்டொரு தடவைகள் நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்.
சுமார் பதின்மூன்று, பதின்நான்கு வருடகால அகதித் தஞ்ச மொழிபெயர்ப்பு அனுபவத்தில் நுாற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் இளம்பெண்களையும் கடந்தவர், தனியே இந்த இளைஞனை மட்டும் நினைவு வைத்திருக்க நியாயப்பாடு எதுவும் இல்லைத்தான். இருந்தாலும் இவனுக்கான மொழிபெயர்ப்பாளராக தானேயிருந்து அவனிடம் விஷேட கதைகள் ஏதேனுமிருந்திருப்பின் அவனை அடையாளம் காண்பதொன்றும் சிரமமான காரியமில்லையென்று குமாரசூரியர் நினைத்தார்.

அப்படி நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய பல கதைகள் குமாரசூரியரின் தொண்டைத்தண்ணீரை வற்றவைத்து அடுத்த வார்த்தை பேசவிடாமல் தடுத்திருக்கின்றன. நெஞ்சடைத்துப் போகும். ஜெர்மன் மொழியில் வார்த்தைகளைக் கோர்க்கமுடியாமல் திகைத்தவர் போல உட்கார்ந்திருப்பார். திருகோணமலையில் ஐந்து பாடசாலை மாணவர்களை இராணுவம் சுட்டதில் செத்தவனின் தம்பியின் விசாரணைக்கு குமாரசூரியர் போயிருந்தார். அவனுக்கு பதினெட்டு வயதுகளே இருந்தது. அண்ணனை விட இரண்டு வயதுகள் இளையவனாயிருந்தான். அவன் ஒரு புகைப்பட அல்பத்தினையும் சில பத்திரிகைகளையும் கொண்டு வந்திருந்தான். அல்பத்தில் ஒன்றாய் சைக்கிளில் உட்கார்ந்தபடி, தோளினை அணைத்தபடி, தலைக்குப் பின்னால் கொம்பு முளைத்தது போல விரல்களைக் காட்டியபடி என அண்ணனோடு சேர்ந்து எடுத்த படங்கள் இருந்தன.  பத்திரிகையின் முன்பக்கத்தில் செய்தியோடு அண்ணனும் இன்னும் நான்கு மாணவர்களும் செத்துக் கிடந்த படம் வண்ணத்தில் இருந்தது. அண்ணனின் நெற்றியில் திருநீற்றுக் கீறும் சந்தனப் பொட்டும் அழியாதிருந்தன. விழிகள் திறந்திருந்தன. அவற்றில் மரணபயம் உறைந்திருந்ததாய் குமாரசூரியருக்குத் தோன்றியபோது நெஞ்சடைப்பதாய் உணர்ந்தார். மனதிற்குள் “யேசுவே” என்று உச்சரித்தார்.

அவன் பத்திரிகையையும் அல்பத்தினையும் விசாரணையாளனிடம் கொடுத்தபோது கண்கள் நீரைக் கசியத்தொடங்கின. துடிக்கும் உதடுகளைக் கடித்து அழுகையை அடக்கப் படாதபாடு பட்டான். முடியவில்லைப் போலிருந்தது. தலையை முழுவதுமாகத் தாழ்த்திக் கொண்டான்.  விசாரணையாளன் பத்திரிகையின் படத்தையும் அல்பத்தின் படங்களையும் பார்த்தபடியிருந்தான். “ஏன் அண்ணாவைச் சுட்டார்கள். அவர் இயக்கத்திலேதாவது இருந்தாரா” என்று கேட்டான். குமாரசூரியன் “தம்பி” என்றார். அவன் நிமிர்ந்தானில்லை. “தம்பி உம்மடை அண்ணை இயக்கத்தில இருந்தவரோ..”

அவனில் அழுகை வெடித்திருந்தது. உடல் குலுங்கி அழத்தொடங்கினான். அப்பொழுதும் அழுகையை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டுமென அவன் பிரயத்தனப்படுவது தெரிந்தது. மொழிபெயர்ப்பை தட்டச்சு செய்கிற பெண்ணும் கதிரையைத் திருப்பி அவனைப் பார்த்தபடியிருந்தாள். கரித்தாஸ் நிறுவனம் அனுப்பி வைத்திருந்த பெண்ணுக்கு பத்தொன்பது இருபது வயதுகளே இருக்கும். அவளும் குறிப்பெடுப்பதை நிறுத்திவிட்டு மௌனமாயிருந்தாள். கீச்சிட்ட ஒலியையொத்த அவனது அழுகையைத் தவிர்த்து அந்த அறையில் நிசப்தம் நிரவியிருந்தது. விசாரணையாளன் ஒன்றிரண்டு தடவைகள் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். பெரும்பாலும் விசாரணையை அவன் இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்கக் கூடுமென குமாரசூரியர் எதிர்பார்த்தார். அப்பொழுது அழுகையை நிறுத்தியவன் நிமிர்ந்து கண்ணீரை புறங்கையால் அழுத்தித் துடைத்தான்.  “சொறி..”

“அண்ணன், பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார். அவர் இயக்கங்களில் தொடர்பு பட்டிருக்கவில்லை. அப்பொழுது அச்சமான சூழலும் நிலவியிருக்கவில்லை. போர்நிறுத்தம் அமுலில் இருந்தது. அண்ணனும் அவனது நண்பர்கள் ஆறுபேரும்  கடற்கரை சென்று திரும்பியிருந்தார்கள். எந்தப் பதற்றமும் நகரில் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னேரப் பொழுது இருக்கும். அவனின் கைத்தொலைபேசியில் இருந்து  வீட்டிற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அவன் அப்பாவிடம் பேசினான். அவனது குரல் அச்சமுற்றிருந்தது. இராணுவம் தங்களை கடற்கரை வீதியில் தடுத்து வைத்திருப்பதாகவும், நிறைய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னான். அப்பா அவனை பதட்டப்படவேண்டாம். அடையாள அட்டையில் மாணவன் என்று உள்ளது. அதனை அவர்களிடம் காட்டு என்றார். அண்ணன் அவசர அவசரமாக நான் பின்னர் கதைக்கிறேன் என்று தொடர்பை துண்டித்துக் கொண்டான். அப்பா அவனைப் பார்த்துவரப் புறப்பட்டார். அவர் புறப்பட்ட சற்றைக்கெல்லாம் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின. நிலம் அதிரும் தனித்தனி வெடிகள். நான் எதையெல்லாமோ யோசிக்கத்தொடங்கினேன். அம்மா பதட்டமுற்றிருந்தார். நான் அண்ணனுக்கு தொலைபேசியில் அழைப்பெடுக்க முயற்சித்தேன். அழைப்பு போய்க்கொண்டிருந்தது. பதில் இல்லை.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அப்பாவின் செய்தி வந்து அம்மாவைச் சைக்கிளில் ஏற்றி ஓடி அடைந்தபோது அண்ணன் செத்துப் போயிருந்தான். அவனோடு இன்னும் நான்குபேர் இரத்தம் வழிய மணலுக்குள் புரண்டு கிடந்தார்கள். நெஞ்சையும் வயிற்றையும் தோள்மூட்டையும் துப்பாக்கி ரவைகள் சல்லடையாக்கியிருந்தன. அண்ணா தொலைபேசியை பற்றியபடியிருந்தான். அதில் இரண்டு இலக்கங்களின் தவறவிடப்பட்ட அழைப்புக்கள் நிறைய இருந்தன. ஒன்று எங்களது வீட்டு இலக்கம். மற்றையது அவனோடு படித்தவளது இலக்கம். எனக்கு அவளைத் தெரிந்திருந்தது.
அண்ணாவின் செத்த வீட்டிற்கு அவள் வந்தே தீருவேன் என புரண்டழுது பிடிவாதம் பிடித்தபோது அவளது அம்மா வந்து அப்பாவோடு பேசினார். அப்பா அவரைத்தனியாக அழைத்துச் சென்று “இன்னமும் காலமும் வாழ்வும் இருக்கிற பிள்ளை அவள். அவளை அழைத்து வந்து ஊர் கண்ணுக்குக் காட்ட வேண்டாம்.” என்றார்.  பின்னாட்களில் அவளைக் காண்கிற போதெல்லாம் அம்மா பெரும் குரலெடுத்து அழுது தீர்த்தார்.

செத்தவீடு முடிந்த இரண்டொரு நாளில் மிரட்டல்கள் வரத்தொடங்கின. அண்ணாவின் மரணம் பற்றி யாருக்கும் முறையிடக்கூடாதென்றும் வெளிநாட்டு அமைப்புக்களிற்கு தெரியப்படுத்தக் கூடாதென்றும் தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. கூடவே இன்னொரு மகனையும் இழக்க விருப்பமா என்ற கேள்விகள்.  கொதித்துக் கொண்டிருந்த அப்பா அடங்கிப்போனார். நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாகிப் போனோம்.

வழக்குகளில் எனக்கு நம்பிக்கையிருக்கவில்லை. எந்த வழக்கின் முடிவும் அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத்தரப்போவதில்லை. எந்த வழக்கின் முடிவும் எனது அண்ணனை மீளத்தரவும் போவதில்லை. என்ன கேட்டீர்கள், அண்ணனை ஏன் சுட்டார்கள் என்றா..? ஏன் சுட்டார்கள் என்று எங்களுக்கு இதுவரை புரியவேயில்லை.  அண்ணனும் அறிந்திருக்க மாட்டான். சுட்டவர்களிடம் கூட காரணமேதுமிருந்திருக்காது அவன் ஒரு தமிழன் என்பதைத் தவிர.. ”

இறுதிச் சொற்களை மொழிபெயர்த்தபோது குமாரசூரியர் தழுதழுத்தபடியிருந்தார். அவனது வார்த்தைகளில் உண்மை இழைந்து கிடந்ததாக பரிபூரணமாக நம்பினார். விசாரணையாளன் எப்பொழுதும் போல விறைத்த தலையனாக முகத்தை வைத்துக்கொண்டிந்தாலும் தட்டச்சுகிற வெள்ளைப் பெண்ணின் முகத்தில் துயரம் படிந்திருந்தது. கரித்தாஸ் பெண் கண்களை அடிக்கடி துடைத்துக்கொண்டிருந்தாள்.

இப்படி மற்றுமொரு அகதித்தஞ்ச விசாரணையையும் குமாரசூரியரால் மறக்க முடியாதிருந்தது. அந்த விசாரணை ஒரு கொலைவழக்கு விசாரணையாகாமல் அவர் தடுத்திருந்தார். அவனுக்கு முப்பது முப்பத்தொரு வயதிருக்கலாம். விசாரணை முழுவதும் ஒருவித மன அழுத்தத்தோடு இருந்தான். நிறையக்கேள்விகளுக்கு எரிச்சலோடும் எடுத்தெறிந்தும்  பதில் சொன்னான். அவற்றை மிகப்பணிவான பதில்களாக குமாரசூரியர் மொழிபெயர்த்தார். மூன்று மணிநேரமாக அவனது கேள்விகளும் பதில்களும் குறுக்கு விசாரணைகளுமாகப் போய்க்கொண்டிருந்தது. அவன் சொன்னான். “கல்யாணம் கட்டின கொஞ்ச நாட்களிலேயே தேடத் தொடங்கி விட்டார்கள். ஓட வேண்டியதாய்ப் போனது. ஊரில் மனைவி இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறா. மூன்று மாதம்.. அவவுக்கு பக்கத்தில் இருக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. குழந்தை பிறக்கும் போது முகம் பார்க்கவும் கொடுத்து வைக்கவில்லை. நினைக்கும் போது அந்தரமாயும் விரக்தியாயும் இருக்கிறது.”

விசாரணையாளன் நிமிர்ந்து கண்ணாடிக்கு கீழாகப் பார்த்தான். அவன் அடுத்ததாகக் கேட்ட கேள்வியில் குமாரசூரியரே திக்குமுக்காடிப் போனார். தமிழில் வார்த்தைகளை கோர்த்தபோது மூளை விறைத்தது. க்ளாசிலிருந்த தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“நல்லது, உம்மடை மனைவி ஊரில மூன்றுமாதக் கர்ப்பம் என்று சொல்லுறீர். ஆனால் இவர் என்ன கேட்கிறார் என்றால், நீர் ஊரைவிட்டுவந்தும் மூன்று மாதங்கள் ஆகிறது என கோரிக்கையில் உள்ளது. அதனால நீர் எப்படி அது உம்மடை பிள்ளைதான் என்று உறுதியாச் சொல்லுவீர்..? அது இன்னொராளின்ரை …” குமாரசூரியர் வார்த்தைகளை முடிக்கவில்லை.

அவன் மேசையில் இரண்டு கைகளாலும் சடார் என்று அடித்து எழுந்தான். கதிரையைத் தலைக்குமேலே ஓங்கி வித்தியாசமான குரல் எழுப்பிக் கத்தினான். தனது தலையே சிதறப்போகிறது என கைகளால் தலையைப் பொத்திய குமாரசூரியர் “லுார்த்ஸ் மாதாவே, காப்பாற்றும்” என்று கத்தினார். தட்டச்சு செய்தவள் எழுந்து ஓடி சுவரோடு ஒடுங்கி நின்றாள். அவன் ஓங்கிய கதிரையோடு விசாரணை அதிகாரியை நோக்கி இரண்டு எட்டு வைக்கவும்தான் சுதாகரித்த குமாரசூரியர் சட்டென்று எழுந்து அவனைப் பின்புறத்தால் கட்டிக்கொண்டார். அவன் திமிறினான். “என்னை விர்றா, இந்த நாயை இண்டைக்கு கொல்லாமல் விடமாட்டன்..”

“தம்பி, சொன்னாக் கேளும், பிறகு எல்லாம் பிழைச்சுப் போயிடும், உடனடியா கதிரையைக் போட்டுட்டு என்ன ஏதென்று தெரியாமல் கீழை விழும்.. மிச்சத்தை நான் பாக்கிறன்..”

அவன் என்ன நினைத்தானோ கதிரையை ஓரமாக எறிந்துவிட்டு நின்ற இடத்தில் கீழே விழுந்து கால்களிரண்டையும் நீட்டி விரித்து மேலே பார்த்து விசும்பி அழத்தொடங்கினான்.

குமாரசூரியர் விசாரணையாளனைச் சமாதானப்படுத்தினார். அவனது முகம் இறுகியிருந்தது. சற்றுப் பயந்தது போலவும் தோன்றிற்று. “மன்னிக்க வேண்டும். எங்களது கலாச்சாரத்தில் ஒருவனைக் கோபப்படுத்தவும், கேவலப்படுத்தவுமே இப்படியான கேள்விகளைக் கேட்பதுண்டு. அவை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியாக் கேள்விகள்  ” விசாரணையாளன் தோள்களைக் குலுக்கி “ஊப்ஸ்” என்றான். விசாரணை மற்றுமொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ma3குமாரசூரியர் ஒரு வழக்கறிஞர் அல்ல. வழக்கு எழுதுபவரும் அல்ல. இன்றைய நாளில் ஒரு வழக்கு எழுதுவதற்கு ஐநுாறிலிருந்து ஆயிரம் பிராங்குகள் வரை வாங்குகிறார்கள். இலங்கைப் பிரச்சனையின் தேதி வாரியான முக்கிய சம்பவங்களின் புறப்பின்னணியில் புதிய கதை மாந்தராக தஞ்சக் கோரிக்கையாளரை உள் நுழைத்து புனையும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்தால் போதும். வழக்கு எழுதியே பிழைத்துக் கொள்ளலாம். குமாரசூரியர் அந்த ஆற்றல் அற்றவர். அவர் வெறும் மொழிபெயர்ப்பாளர். அவரால் வழக்கு விசாரணையைத் தலைகீழாக மாற்றிவிடமுடியாது. ஆயினும் விசாரணைக்கு வருபவர்கள், கெஞ்சும் குரல்களால் “ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். எப்பிடியாவது கார்ட் கிடைக்க ஏதாவது செய்யுங்கோ” என்பார்கள்.

அவராலும் செய்ய முடிந்த ஒன்றிரண்டு காரியங்கள் இருக்கத்தான் செய்தன. விசுவநாதனின் முகம் குமாரசூரியரின் நினைவில் நிற்கிறது. அவனது இரண்டு விசாரணைகளுக்கும் அவரே மொழிபெயர்ப்பாளராயிருந்தார். அதுவொரு தெய்வச் செயல் என்றே கருதினார். அவனது முதலாவது விசாரணை வெறும் அரைமணி நேரத்தில் நடந்தது. குறுக்கு விசாரணைக் கேள்விகள் எதுவும் இருக்கவில்லை. வெறுமனே அவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். இரண்டாவது விசாரணை ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நடந்தது. விசுவநாதன் சற்றே உடல்பருத்திருந்தான். முன்னரைப்போல கன்னத்தசைகள் உப்பியிருக்கவில்லை. ஆனாலும் குமாரசூரியர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். “ஒன்றரை வருடங்களாக முடிவேதும் சொல்லாமல் இழுத்தடிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்த நேரம், கனடாவிற்குப் போயிருக்கலாம்” என்று சலித்துக் கொண்டான். அன்றைய விசாரணை ஐந்து மணிநேரத்திற்கு நீடித்தது. விசுவநாதன் கூறிக்கொண்டிருந்தான். “என்னை சிங்கள இராணுவத்தினர் கட்டியிழுத்து ட்ரக்குகளில் ஏற்றினர்..” என்றபோது அவன் இடைமறிக்கப்பட்டான்.

“உங்களை அவர்கள் எதனால் கட்டியிருந்தனர்..”

விசுவநாதன் போகிற போக்கில் “கயிற்றால்” என்றுவிட்டு மேலும் சொன்னபடியிருந்தான். குமாரசூரியருக்கு சட்டென்று பொறி தட்டியது போலயிருந்தது. அவர் தனது நினைவு இடுக்குகளில் அவனது முதல் விசாரணை நாளைத் தேடினார். தனது ஞாபகத்தை ஒருமுறை நிச்சயப்படுத்திக்கொண்டார். இரும்புச் சங்கிலியால் கட்டி இழுத்தார்கள் என குமாரசூரியர் மொழிபெயர்த்தார். சென்றதடவை விசுவநாதன் அப்படியே சொல்லியிருந்தான் என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

கயிறும் சங்கிலியுமாகக் குழப்பினால் என்ன நடக்கும் என்று குமாரசூரியருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. வழக்கு நிராகரிக்கப்பட்ட கத்தையான தாள்களில் ஏதேனும் ஒன்றில், இரண்டு விசாரணைகளிலும் மாறுபாடான தகவல்களைத் தந்துள்ள காரணத்தினால் வழக்கில் உண்மைத்தன்மை இல்லாமற் போகிறது என்றும் இன்னோரன்ன காரணங்களினால் தஞ்சக் கோரிக்கையை ஏற்க முடியாதுள்ளது. நபர் முப்பது நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் எழுதப்பட்ட கடிதமொன்று விசுவநாதனுக்கு அனுப்பப்பட்டிருக்கும். வழக்கின் முடிவில் அவனுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஒரு காரணம் குறைந்திருக்கும் என்பது குமாரசூரியருக்குத் தெரிந்திருந்தது.

இப்போதெல்லாம் வழக்கு விசாரணைகளில் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தைகளிலும் நிராகரிப்பிற்கான காரணங்களைத் தேடுகிறார்கள். சிறிய தகவல் பிழைகளும் நிராகரிப்பில் கொண்டு வந்து நிறுத்தின. குமாரசூரியர் தன்னால் முடிந்ததைச் செய்தார். கேள்விகளை தமிழ்ப்படுத்தும்போது சொற்களோடு சொற்களாக “முகத்தைச் சரியான கவலையா வைச்சிரும்” என்றோ “நாட்டுக்கு அனுப்பினால் கட்டாயம் என்னைக் கொலை செய்வாங்கள் என்று அடிச்சுச் சொல்லும்” என்றோ அவரால் சொல்லமுடிந்தது. அவருக்குத் தெரியும். இவையெல்லாம் ஒரு மொழிபெயர்ப்பாளன் செய்யக்கூடாதவை. ஆயினும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் குமாரசூரியரும் அகதித்தஞ்சம் கேட்டே இங்கே வந்திருந்தார். ஆதலால் அப்படி வருபவாகள் மீது இப்போதும் இரக்கமாயிருந்தார்.

அப்போதெல்லாம் இன்றைய விசாரணைகளைப்போல நீண்ட கேள்விளும் நிறையப்பதில்களும் ஏகப்பட்ட காரணங்களும் தேவைப்பட்டிருக்கவில்லை. குமாரசூரியரிடம் இருந்தது ஒரேயொரு காரணம்தான். அல்பிரட் துரையப்பாவைத் துளைத்த குண்டு, பாய்ந்து வந்த கோணத்தை வைத்துப் பார்க்கும் போது அது சற்றுக் கட்டையான மனிதனால் சுடப்பட்ட குண்டென்றும் அது காரணமாய் ஊரில் உள்ள கட்டையான மனிதர்களைப் பிடித்துச் சென்று வெட்டிக் கொல்கிறார்கள் என்றும் தானுமொரு கட்டையன் என்பதால் தன்னையும் கொல்வது நிச்சயம் என்று குமாரசூரியர் சொன்னார்.  விசாரணை அதிகாரியும் ஒரு கட்டையனாக இருந்ததாலேயோ என்னவோ அவரது வழக்கு வெற்றியடைந்தது. அந்த வருடம் எண்பது கட்டையர்களுக்கு விசாக் கொடுத்தார்கள்.

0 0 0

“பெயர் சொல்லுங்க”

“பிரதீபன்”

“வேறு பெயர்கள் உண்டா?”

பிரதீபன் சற்றுக் குழம்பினான். கண்கள் அகல விரிந்து முழிப்பது போலிருந்தது. பள்ளிக்காலத்தில் அவனுக்கு முழியன் என்றொரு பட்டப்பெயர் இருந்தது. அதனைச் சொல்லலாமா என யோசித்தான். “அதாவது ஏதேனும் இயக்கங்களிலோ அமைப்புக்களிலோ வேறு பெயர்களில் இயங்கியிருந்தால் அவற்றைச் சொல்லவும்” என்றார். பிரதீபன் இல்லையென்று தலையைப் பலமாக அசைத்து மறுதலித்தான்.

“வாயால் சொன்னால்தான் அதுவொரு ஆவணமாகும்.”

“இல்லை. வீட்டில் தீபன் என்று கூப்பிடுவார்கள், அதை விட வேறு பெயர் ஒன்றும் இல்லை.”

“சுவிற்சர்லாந்தில் வந்து இறங்கிய இடம்..”

“சூரிச் தொடரூந்து நிலையம்”

“பயண வழி”

“இலங்கையிலிருந்து துபாய் அங்கிருந்து ஆபிரிக்காவில் பெயர்தெரியா நாடொன்று, அங்கிருந்து இத்தாலி பின்னர் தொடரூந்தில் சூரிச்”

“யார் அழைத்து வந்தார்கள்”

“யாரும் அழைத்து வரவில்லை. இத்தாலியின் மிலானோ நகரில் தொடரூந்தில் ஏற்றி விட்டார்கள். வந்து இறங்கினேன்..”

“யார்..”

“தெரியவில்லை.

“பயணம் முழுமைக்கும் எவ்வளவு காலம் செலவாயிற்று”

“ஆபிரிக்காவில் மொத்தம் ஒன்றரை வருடங்களும் இத்தாலியில் இரண்டு நாட்களும்”

“பாஸ்போட் எங்கே”

“பாஸ்போட் என்னிடமில்லை.. அதனை அவர்கள் வாங்கிவிட்டார்கள்.”

“வேறும் ஏதாவது நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியுள்ளீரா, அது நிராகரிக்கப்பட்டுள்ளதா”

“வேறெந்த நாட்டிலும் அகதித் தஞ்சம் கோரியிருக்கவில்லை. ஆதலால் நிராகரிக்கவும் இல்லை”

நிமிர்ந்து உட்கார்ந்த விசாரணை அதிகாரி பிரதீபனை கண்ணும் கண்ணுமாகப் பார்த்தான். பிரதீபன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். அவை கணத்திற்கொருமுறை உலர்வது போலயிருந்தது. முகத்தைத் தாழ்த்திக் கொண்டான்.

“சிறிலங்காவில் பொதுவாக என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியுமாதலால் நீங்கள் உங்களுக்கு அங்கே உயிர்வாழ முடியாத அளவிற்கு என்ன நடந்ததென்பதை மட்டும் சொல்லுங்கள்” என்ற முன்னறிவிப்போது விசாரணையாளன் ஆரம்பித்தான். “நீங்கள் இங்கே அகதித்தஞ்சம் கோருவதற்கான காரணங்கள் என்ன..?”

தஞ்சம் கோருவதற்கான காரணம் ஒன்று

பிரதீபன் ஆகிய நான் யாழ்ப்பாணத்தில் படித்தேன். உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு பல்கலைக்கழகம் நுழைவதற்கு முடிவுகள் போதாது இருந்தபோது இரண்டாவது முறையாகப் பரீட்சைக்குத் தோற்றலாம் என்றிருந்தேன். அப்பொழுது இலங்கையில் சமாதானப்பேச்சுக்கள் ஆரம்பித்தன. அதன்படி புலிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்து அலுவலகங்களை அமைத்தார்கள். புலிகளும் இராணுவமும் வீதிகளில் கைகுலுக்கிப் பேசியதை நான் கண்டேன். அவ்வாறான படங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகின. அதனால் அச்சமற்று நாமும் புலிகளோடு கைகுலுக்கிப் பேசினோம். எனது ஊரின் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒரு விடியற்காலை பிரபாகரனின் ஆளுயரக் கட்அவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவத்தினர் சிரித்தபடி பார்த்து நின்றனர்.

புலிகள் தம்முடைய பிரதேசங்களில் நிர்வாகம் மற்றும் வங்கிப் பணிகளுக்கு ஆட்களை வேலைக்குக் கேட்டிருந்தார்கள். வன்னியில் இறுதிநேரம் நடந்த சண்டைகளால் அங்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் குறைவாக இருந்தார்கள். பலர் படிப்பினை இடைநிறுத்தி புலிகளில் இணைந்திருந்தார்கள். ஆயினும் நிர்வாக வேலைகளுக்கு படித்த ஆட்களே தேவைப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தார்கள். நான் அவர்களிடத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.

கிளிநொச்சியில் தமிழீழ வைப்பகத்தில் எனக்கு கணக்காளர் வேலை கிடைத்தது. வாரத்திற்கு ஒருதடவையோ, இரண்டு தடவையோ யாழ்ப்பாணம் போனேன். மற்றைய நோட்களில் கிளிநொச்சியிலேயே தங்கியிருந்தேன். முகமாலை சோதனைச்சாவடி இராணுவத்திற்கு நான் கிளிநொச்சியில் புலிகளது வங்கியில் வேலை செய்வது தெரிந்திருந்தது.

இப்படியிருந்தபோது திடீரென்று புலிகள் தங்களது அலுவலகங்களைப் பூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போனார்கள். சமாதானம் குழம்பப்போகிறது கதை உலாவியது. அதற்குப் பிறகும் நான் சற்றுக்காலம் கிளிநொச்சியில் வேலை செய்தேன். இரண்டாயிரத்து ஐந்தாம் வருடம் டிசம்பரில், நான் வேலையை விட்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். இரண்டாயிரத்து ஆறு ஒக்டோபரில் இராணுவத்தினர் வீட்டில் வைத்து என்னைக் கைது செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஒபரேஷன் போல அதனைச் செய்து முடித்தனர். அதிகாலையில் கிணற்றடியில் பதுங்கியிருந்தவர்கள் நான் ரொய்லெட்டிற்கு தண்ணீர் எடுக்க வரும்போது பாய்ந்து அமுக்கினர். அப்பொழுது எனது முதுகில் துப்பாக்கியின் பின்புறத்தால் குத்தினார்கள்.

புலிகளோடு தொடர்பு வைத்திருந்தேன், புலிகளுக்காக வேலை செய்தேன், புலிகளது பணத்தை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்தேன் இவற்றோடு ஊரில் பிரபாகரனுக்கு கட் அவுட் வைத்தேன் என்றெல்லாம் சொல்லி ஒரு வாரகாலமாக என்னை அவர்கள் சித்திரவதை செய்தார்கள். சித்திரவதையின் போது “சமாதான காலத்தில் எங்களது கைகள் கட்டப்பட்டிருந்தன. ஆயினும் கண்கள் திறந்தே இருந்தன” என்று இராணுவ வீரன் ஒருவன் சொன்னான். அவர்கள் பேசியதிலிருந்து என்னைக் கொல்வதற்கு அவர்கள் திட்டமிடுவதை உணர்ந்து கொண்டேன். இதற்கிடையில் கொழும்பில் இருக்கின்ற மாமா பெருந்தொகைப்பணத்தை இராணுவத்திற்கு கொடுத்து என்னை விடுவித்தார். பணத்தை வாங்கிக்கொண்டு என்னை விடுதலை செய்ததனால் கைதை உறுதிசெய்யும் ஆவணங்களை என்னால் பெறமுடியவில்லை.

தஞ்சம் கோருவதற்கான காரணம் இரண்டு

யாழ்ப்பாணத்தில் உயிராபத்து நிறைந்திருந்தது. நான் கொழும்பிற்குப் புறப்பட்டேன். கொழும்பில் எனது மேற்படிப்பைத் தொடர்வதும் நோக்கமாயிருந்தது. ஒருநாள் ரியுசனுக்கான வழியில் ஒரு பின்னேரப்பொழுதில் வெள்ளவத்தை நெல்சல் ஒழுங்கையில் வைத்து என்னை வாகனமொன்றிற்குள் தள்ளித் திணித்து ஏற்றினார்கள். நான் திமிறியபோது என் பிடரியில் கனமான இரும்புக் கம்பியினால் தாக்கினார்கள். அவர்கள் தம்மை ஈபிடிபி என்று அறிமுகப்படுத்தினார்கள்.

கிளிநொச்சியில் வேலை பார்த்தது, பின்னர் இராணுவம் கைது செய்தது என சகல செய்திகளையும் அறிந்திருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோதே கன்னத்தில் அடித்தார்கள். அவர்களுக்கு அதுவொரு விளையாட்டுப் போலிருந்தது. சிரித்துச் சிரித்து அடித்தார்கள். அப்படி அடிக்கிற போது அவர்களில் ஒருவன் கேட்டான். “நீ ஆமிக்கு மட்டும்தான் காசு குடுப்பியா, எங்களுக்குத் தரமாட்டியோ”
அவன் கேட்ட தொகை இராணுவத்தினருக்கு எனது மாமா அளித்த அதே தொகையாயிருந்தது. உங்களுக்கு புரியும். இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் திட்டமிட்டு இதனைச் செய்தனர். இம்முறையும் மாமாவே பணம் கொடுத்தார். வெளிநாட்டிலிருந்த ஒன்றிரண்டு சொந்தக்காரர்களும் உதவியிருந்தனர்.

பன்னிரெண்டாவது நாள் அவர்களே என்னை வீதியில் விடுவித்து திரும்பிப்பாராமால் நடக்கச் சொன்னார்கள். அப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டதை என்னால் தெளிவாக கேட்க முடிந்தது. ஒருவன் சொன்னான். “இவனொரு பொன் முட்டை இடுகிற வாத்து. வாத்தை உடனேயே அறுத்துவிடக் கூடாது” அப்பொழுது அருகிருந்தவன் பெருங்குரலில் சிரித்தான். அறுக்கிறது என அவர்கள் பேசிக்கொண்டது கொலை செய்வதையே. உங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்துக் கதை தெரியாது போனால் அதனையும் நானே சொல்கின்றேன். ஒரு ஊரில் ஒரு குடியானவனிடம் ஒர பொன்முட்டையிடும் வாத்து இருந்தது. ………………………………..

தஞ்சம் கோருவதற்கான காரணம் மூன்று

யாழ்ப்பாணம், கொழும்பு என கொலை என்னைத் துரத்தியபடியிருந்தது. முழு இலங்கையும் என்னை அச்சறுத்தியது. இலங்கைக்கு வெளியே ஓடித்தப்பினால் அன்றி வேறு வழியில்லை என்றானபோது மாமா அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். அதுவரையான நாட்களுக்கு என்னைப் பதுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இராணுவம், கொழும்பில் ஈபிடிபி, மட்டக்களப்பில் கருணா குழு, மலையகத்தில் “வசதிக்குறைவு” என்ற காரணங்களால், வவுனியாவில் ஒளிந்து கொண்டேன். அங்கேயும் புளொட் பிரச்சனை இருந்ததுதான். இருந்தும் வேறு வழியில்லை. மாமா ஏற்பாடுகளைக் கவனிக்கும் வரை வவுனியாவில் தங்கியிருந்தேன். வீட்டைவிட்டு வெளியே இறங்கியதில்லை. வீட்டின் சுவர்களுக்குள் முடங்கியிருந்தேன். அவஸ்தையான வாழ்க்கை அது. இரண்டு மாதங்களைக் கடத்தினேன். பாஸ்போட் எடுப்பதற்காக மாமா உடனடியாக கொழும்பு வரச்சொன்ன அடுத்தநாள் கூமாங்குளம் என்ற கிராமத்து தெருவொன்றில் வைத்து, ஒரு ஓட்டோவில் என்னைத் தள்ளியடைந்து மோசமான ஆயுதங்களால் தாக்கினார்கள். பொல்லுகள், இரும்புக் குழாய்கள், நீண்ட கத்திகளை அவர்கள் வைத்திருந்தார்கள். முகங்களை கறுப்புத்துணியால் மறைத்து மூடிக் கட்டியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் என்னோடு மட்டுமல்ல தமக்குள்ளும் பேசியிருக்கவில்லை. அவர்கள் புளொட்டாக இருக்கலாம், இராணுவ உளவுப்பிரிவினராக இருக்கலாம் ஆயினும் தாம் யாரென்றோ எதற்காக அடித்தார்கள் என்றோ எனக்கு இறுதிவரை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் கொலை வெறியொடு இருந்தார்கள் என்பதை நிச்சயமாகச் சொல்லமுடியும். நான் மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். கடவுள் கிருபையில் தெருவில் ஆட்கள் நடமாட்டம் திடீரென அதிகரித்தபோது அவர்கள் என்னை விட்டு ஓடினார்கள். நான் காப்பாற்றப்பட்டேன்.

நான் உணர்கிறேன். இலங்கையில் தொடர்ந்தும் வாழ்ந்தால் நிச்சயமாகக் கொல்லப்படுவேன் என்பதை இப்பொழுது நீங்களும் உணர்வீர்கள். அவர்கள் என்னைக் குறிவைத்து கொலை செய்ய அலைகிறார்கள். எனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்புவீர்களாக இருந்தால் இலங்கைக்குள் நுழைகிற வழியில் நான் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவேன். உயிர்வாழும் உரிமையை ஏற்பதும் மனிதாபிமானம் மிக்கதுமான இந்நாடு எனது உயிரைக் காத்துக் கொள்ள தஞ்சத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

0    0    0

இருபது தாள்களில் பிரதீபனின் வழக்கு ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்தது. “வேறு ஏதாவது சொல்ல இருக்கிறதா” என்றான் விசாரணையாளன். பிரதீபன் இல்லை எனத் தலையாட்டிவிட்டு “இல்லை” என்றும் சொன்னான். அதிகாரி கத்தைத் தாள்களை மேசையில் தட்டி ஒன்றாக்கினான்.

“ஆகவே, உமக்கு, இலங்கையில் ஆயுததாரிகளான இராணுவம், ஈபிடிபி, கருணாகுழு, புளொட் அல்லது புலனாய்வுப் படை என்றறிய முடியாத ஒரு குழு போன்றவற்றால் உயிராபத்து உள்ளது என்கிறீர். உமது வாக்குமூலத்தின் அடிப்படையில் புலிகளால் உமக்கு உயிராபத்து ஏதுமில்லை. நல்லது. இப்பொழுது இந்த தாள்கள் ஒவ்வொன்றிலும் கையெழுத்திட வேண்டும்” என நீட்டினான்.

பிரதீபன் நாக்கைக் கடித்தான். “ஸ்ஸ்” என்றொரு சத்தமிட்டு இரண்டு கைகளாலும் தலையைப்பிடித்துக்கொண்டான். எதையோ நினைவு படுத்திக் கொள்பவனைப்போல கண்களை உருட்டினான்.  “எனக்கு இப்ப எல்லாம் நினைவுக்கு வருகுது. வவுனியால என்னை ஓட்டோவில கடத்திக்கொண்டுபோய் அடிச்சதெண்டு சொன்னன்தானே.. அது ஆரெண்டு விளங்கிட்டுது. அது புலிகள் தான். இதையும் என்ரை கேசில சேர்க்கவேணும். சேர்க்கலாமோ ” என்று கெஞ்சுவது போலக் கேட்டான். அதிகாரி நெற்றியைச் சுருக்கினான். “எப்பிடித் தெரியும்” என்றான்.

“ஓம்.. எனக்கு அடி மயக்கத்தில சரியா ஆட்களைத் தெரியேல்லை. இருந்தாலும் அவங்கள் சுத்தவர நிண்டு அடிச்சுக் கொண்டிருக்கேக்கை அவங்களில ஒருவருக்கு வோக்கியில மெசேச் வந்தது. அவர் நல்ல தமிழில கதைச்சவர். உங்களுக்குத் தெரியும்தானே. நல்ல தமிழிலதான் புலிகள் கதைக்கிறவை. அதுமட்டுமில்லாமல் கதைச்சு முடிய “ஓவர் ஓவர்.. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொல்லிட்டுத்தான் நிப்பாட்டினவர். இது எனக்கு தெளிவாகக் கேட்டது. நான் நிச்சயமாகச் சொல்லுவேன். அவர்கள் புலிகள்தான். ”

பிரதீபன் கடைசியாகச் சொன்னதனைத்தையும் குமாரசூரியர் ஜெர்மனில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

0 0 0

டிவியில் அந்த இளைஞன் இன்னும் இன்னும் உச்சமான ஸ்தாயியில் கத்தினான். “ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ்” ஒவ்வொருமுறையும் குதிக்கால்களை உயர்த்தி உயர்த்தி அவன் கத்தினான். கமெரா அவனை நிறையத் தரம் முகத்தை மட்டும் காட்சிப்படுத்தியது. அவன் குறையாத வேகத்தோடிருந்தான்.
ஆனால் எத்தனை முயன்றும், குமாரசூரியரால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னரே சொன்னதுபோல வழமையான கதைகளையும் கதை மாந்தர்களையும் அவரால் நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை.

-கனடா காலம் இதழிலும் பெயரற்றது தொகுப்பிலும் வெளியானது –

By

Read More

× Close