கறிக் கடை – குறும்படம்

ஒஸ்ரேலிய – மெல்போண் – monash பல்கலைக்கழக மாணவர்கள் கறிக்கடை என்னும் குறும்படத்தை தயாரித்திருக்கிறார்கள். 9 நிமிடங்கள் வரை நீள்கின்ற இப்படத்தினை உங்கள் பார்வைக்கு இங்கே இடுகின்றேன்.

வலைப்பதிவில் பல குறும்பட ஜாம்பவான்களும் ஜாம்பவிகளும் இருக்கிறார்கள். அவர்கள் இப்படத்தினை பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் உங்கள் கருத்தில் மேலும் பல புதிய குறும்படங்களை தயாரிக்க இருப்பதாகவும் படத்தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும் ஏதாவது குறும்பட போட்டிக்கு தகுதியானதா எனவும் சொல்லவும்.
இப்போ படத்தை பார்ப்பதோடு.. நீங்கள் அறிந்த யாராவது நடிக்கிறார்களா எனவும் பாருங்கள்..

இங்கே அழுத்தி தரவிறக்க.. (14 MB)

By

Read More

நரகாசுரனுக்கு வீரவணக்கங்கள்!


Image hosted by Photobucket.com

5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராக வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாகப் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிட தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாகவும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடவாய்ப்பல் பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத உருவங்கள் ஆக்கினர். தம் அடி வருடிய திராவிடரை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப் படுத்திய ஆரியர், பிராமண குலத்தவரால் இக் கதைகள் எல்லா மொழிகளிலும் உலவ விடடனர். நம் இன மறவர்களையே நமக்கு எதிரிகளாக்கினர்.

எம் நலனுக்காக போரிட்டு மடிந்த திராவிட அரசன் நரகாசுரனுக்கு எமது வீரவணக்கங்கள்..

எண்டு ஒரு பேப்பரில இருந்தது. படமும் அதில தான் கிடந்திச்சு. எனக்கு உந்த தீபாவளி வருசம் எல்லாம் ஏன் வந்தது எதுக்கு வந்தது எண்டதில ஆர்வம் எதுவுமில்லை.

மக்களின் மகிழ்ச்சிக்காக ஒரு நாள் இப்பிடி கொண்டாடுப்படுகுது எண்டால் நான் ஒவ்வொரு நாளையும் தீபாவளியாக்க try பண்ணிக்கொண்டு இருக்கிறதாலை இப்பிடித்தனித்தனி நாட்களில ஆர்வம் இல்லை.

ஆனால்.. ஆராவது சொந்தக்காரர் கூப்பிட்டு பலகாரம், முறுக்கு பொங்கல் இப்பிடி ஏதாவது தந்தால் கண்டிப்பாக போய்ச் சாப்பிடுவன். சொன்னாப் போலை நாளைக்கு மெல்பேணில பொது விடுமுறை.. தீபாவளிக்காக இல்லை. ஏதோ Melbourne cup எண்டு சொல்லுகினம். அதெதுக்கு எனக்கு.. லீவுதானே முக்கியம்..

By

Read More

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995

1995 , ஒக்ரோபர்,30

மிகச்சரியாக இன்றைக்கு பத்து வருடங்களின் முன்..

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.


Image hosted by Photobucket.com

இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.


Image hosted by Photobucket.com

இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அன்று புரிந்தது.

குறிப்பு: முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று 15 ஆண்டுகளும் முஸ்லீம்கள் அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி இன்று 10 ஆண்டுகளும் நிறைகின்றன. முஸ்லீம்கள் வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்.

By

Read More

தமிழில கதைக்கிறது எப்பிடி

கொழும்பில தனியார் வானொலிகள் வந்த போது அவையெல்லாம் எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய கனவாக இருந்தது. எனக்கு தெரிஞ்ச என்ரை நண்பர் ஒருவர் றேடியோவில சேருவதற்காக மட்டக்களப்பில இருந்து கொழும்பு வந்து தங்கியிருந்ததாக நான் நக்கல் அடிப்பன். நல்ல வேளை அவருக்கு அது கை கூடாத படியால் இன்று பல துறைகளில் பிரகாசிக்கின்றார்.

நான் கூட கொழும்பில் ஏதாவது வானொலிகளுக்கு ஒருநாளாவது போய் என்ரை குரலை காட்ட முடியுமா என்று யோசித்திருக்கிறேன். இப்படியெல்லாம் நான் நினைச்சதுக்கு அறிவிப்பாளர்களை எங்காவது கண்டால் ஓடிவந்து ஓட்டோகிராப் வாங்கும் பெண்களும் நிகழ்ச்சிகளில் ஆண் அறிவிப்பாளர்களோடு வழிந்து வழிந்து தொலைபேசியூடாக பேசும் பெண்களும் காரணமாயிருக்கலாம்.

ஆனால் இப்ப, வலு இலகுவாக வானொலிகளுக்குள் நுழைய முடிகிறது.

‘மச்சான்.. இண்டைக்கு சமையல் குறிப்பு சொல்லுறவள் வரமாட்டாள் எண்டு sms பண்ணியிருக்கிறாள் இண்டைக்கு சமையல் குறிப்பு இல்லை’ என்றால், ‘கட்டாயம் பொம்பிளை தான் சமையல் குறிப்பு சொல்ல வேணுமோ.. இஞ்சை விடு நான் செய்யிறன்’ என்று கத்தரிக்காய் பச்சடி செய்வது எப்படி என செய்ய முடிகிறது. யாரையோ மனதில் வைத்து எப்போதோ எழுதிய கவிதை என அழைக்கப்படுகின்றவற்றை..’ ஒரு மூண்டு நிமிசம் தாங்கடாப்பா.. இதை வாசிச்சுப் போட்டு விடுறன்’ என சொல்லி அதை காற்றலைகளில் பரவ வட முடிகிறது.

‘டேய் எல்லாம் முடிஞ்சுது. ஆனால் ரைம் இருக்குது.. என்ன செய்யலாம்’ எண்டு கேட்டால்.. ‘ஒரு பாட்டைப் போடு மச்சான்.. மிச்சத்துக்கு ஏதாவது கதைப்பம்’ எண்டு முடிவெடுத்து ‘என்ன கதைக்கலாம்’ எண்டால் ‘அதுதான்ரா.. கை வசம் நிறைய இருக்கே.. புலத்தில் தமிழ், புலத்தில் கலாசாரம் இப்பிடி ஏதாவதை கதைப்பம்’ என அலட்சியமாய்ச் சொல்ல முடிகிறது.

ஆனால்.. யாரும் வந்து ஓட்டோகிராப் கேட்பதில்லை.. ஆகக் குறைந்தது.. Is that you? என்கிறார்கள்.. போனால் போகிறதென.. It was gud என்கிறார்கள்.. அவ்வளவும் தான்..

இத்தகைய ஒரு பின்புலத்தில தான்!

மெல்பேணில அவரை என்ரை நெருங்கிய நண்பர் எண்டு சொல்லலாம். என்னை விட கொஞ்சம் (கொஞ்சம் தான்) வயசு குறைஞ்சவர் எண்டாலும் ரண்டு பேருக்கும் நல்லா இணங்கிப்போகும். இதுக்குப் பிறகும் அவரை வடிவா அறிமுகம் செய்யிறதெண்டால் நிறைய உண்மைகளை போட்டு உடைக்க வேண்டியிருக்கும் எண்டாலும் என்ரை வயிறை அடிக்கடி புகைய வைக்கிறதில அவருக்கு நிறைய பங்குண்டு.

அவர் இஞ்சை சில தமிழ்ப் போட்டிகள் நாடகங்கள் எண்டு அடுத்தடுத்து பின்னித்தள்ள மெல்பேணில உள்ள ஒரு தமிழ் வானொலி அவரை பேட்டி காண கூப்பிட்டது. இங்கை இருக்கிற தமிழ் பெடி பெட்டயளுக்கு தமிழின்ர அருமை பெருமைகளை சொல்லுறதுக்காக அவரைக் கூப்பிட்டிருந்தவையாம். (அப்பிடியொரு றேடியோ இருக்கிறதெண்டதே அவை target பண்ணுற பெடி பெட்டயளுக்கு தெரியுமோ எண்டுறது எனக்குச் சந்தேகம்)

றேடியோவில பேட்டி தொடங்கி போய்க்கொண்டிருந்தது. அங்கை கேக்கிற கேள்வியளுக்கு ஆள் வடிவா நிதானமாத்தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர். சும்மா றேடியோவில மைக் கிடைச்சதெண்டுறதுக்காக கத்தரிக்காய் கறி எப்பிடி வைக்கிறது எப்பிடியெண்டு நான் புறோக்கிறாம் செய்தது போலில்லாமல் ஆள் ஏதோ பிரியோசனமா கதைச்சுக்கொண்டிருந்தவர்.

அப்ப அவரை ஒரு கேள்வி கேட்டினம்.. நீர் எப்பிடி இப்பிடி அழகா தமிழ் கதைக்கிறீர் எண்டு.. எனக்கு அந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே.. சும்மா சுரீர் எண்டது. அதுக்கு அவர் என்ன பதில் சொல்லுறார் எண்டு கவனமா கேட்டுக்கொண்டிருந்தன். அவர் சொல்லுறார்.. ‘ நான் வீட்டில பெற்றாரோடு தமிழில தான் கதைக்கிறனான்.. அதனாலை என்னாலை வடிவா தமிழில கதைக்க முடியுது..’

எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்லை.. சிரிச்சு சிரிச்சு களைச்சுப்போயிட்டன்.. ஏனெண்டு கேக்கிறியளோ..?

பின்னையென்ன.. இலங்கையில இருந்து ஒஸ்ரேலியா வந்து ஒரு வருடம் கூட ஆகாத ஒரு பதினெட்டு தாண்டிய தமிழ்ப் பெடியனிட்டை நீர் எப்பிடி உப்பிடி வடிவா தமிழில கதைக்கிறீர் எண்டு கேக்கிறதும் அதுக்கு அவர்.. நான் வீட்டில தமிழில தான் கதைக்கிறனான் எண்டும் பதில் சொன்னால் எனக்கு எப்பிடியிருக்கும்..

ஆளுக்கு ஒரு போனைப் போட்டன். ‘ ஏதோ இலங்கை முழுவதும் வெள்ளைக்காரர் இருக்கிற மாதிரியும் நீர் அவைக்கு மத்தியில வீட்டில தமிழில கதைக்கிற மாதிரியும் சொல்லுறீர் ‘ எண்டு சொல்ல ‘சரி சரி கண்டுகொள்ளாதைங்க..’ எண்டு சமாளிச்சார்.

இன்னொரு விசயமும் சொல்ல வேணும்.. இங்கை இருக்கிற பெரும்பாலான தமிழ் இளம் பெடியள் போல் அல்லாமல் அவர் என்னோடு தமிழில் தான் கதைக்கிறவர். எப்பவாவது ஆங்கிலத்தில வெளிக்கிட்டார் எண்டால்.. நான் விளங்கிக் கொள்ளுவன்..

‘அம்மானைச் சுத்தி கவனத்துக்குரிய ஆக்கள் நிக்கினம்’

By

Read More

காதலைப் பற்றிக் கதைக்கப் போறன்

அதென்ன திடீரென்று காதலைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டு யாரும் கேட்கக்கூடாது. என்ரை பழைய பதிவொண்டில எங்கேயோ ஒரு தடவை காதலுக்கான உடனடிக்காரணங்களில அழகும் ஒண்டு எண்டு சொன்னதுக்காக அப்ப கொழும்பிலயும் இப்ப சிங்கப்பூரிலும் இருக்கின்ற கீது காரசாரமா ஒரு பதில் எழுதியிருந்தவ. (அதில என்னை யோசிக்க வைச்ச ஒரு விசயம் என்னெண்டால் அவவின்ரை பதிவில இருந்த சயந்தன் உம்மட்டை இருந்து இதை நான் எதிர்பாக்க வில்லை எண்டது தான். ) அவவின்ரை பதிவுக்கு என்ரை பதிலை ஒரு பதிவாப் போடலாம் எண்டு தான் இருந்தன். பிறகு மறந்திட்டன்.

ஆனாலும் இப்பவும் காதலுக்கு அழகும் ஒரு உடனடிக்காரணம் எண்டதில நான் உறுதியாத்தான் இருக்கிறன். வலு சிம்பிளா என்னாலை விளக்க முடியும். யார் யார் எண்டே தெரியாத இருவர் ஒருவரை ஒருவர் நெருங்க வேண்டும் எண்ட ஆசையையும் எதிர்பார்ப்பையும் உடனடியாத் தாறதில அழகுக்கு ஒரு முக்கிய இடமிருக்கு!

இங்கை அழகெண்டதை எப்பிடி வரையறை செய்யலாம் எண்டும் ஒருவருக்கு அழகாத்தெரியறது இன்னொருவருக்கு அழகில்லாமல் தெரியும் எண்ட கேட்டலுத்துப்போன கருத்தக்கு ஒரு பதில் சொல்லுறன். அதாவது ஒருவருக்கு அழகாத்தெரியுதே.. அந்த அழகை பற்றித்தான் நான் கதைக்கிறன்.

வேணுமெண்டால் இப்பிடிச்சொல்லலாம். காதலுக்கு முந்திய ஒரு ஈர்ப்பு இருக்குது தானே.. அதுக்கெண்டாலும் இந்த அழகுதான் காரணமாயிருக்கு. அதே நேரம் இப்பிடி எந்த அழகு தொடர்பான ஈர்ப்பு எதுவுமில்லாமல் படிக்குமிடங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ ஒன்றாக இணைந்து இருக்க சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கும் நாட்செல்ல செல்ல இயல்பாக காதல் அரும்பக் கூடும். சிலர் இதைத்தான் உண்மையான காதல் எண்டுகினம்.

அதைவிடுவம். இங்கை ஒஸ்ரேலியாவில காதல் , கல்யாணம் பற்றி ரண்டு தமிழ்ப் பெண்களோடு கதைக்கும் சந்தர்ப்பம் போன முறை சிட்னி போயிருந்த சமயம் கிடைச்சது. அதில ஒருத்தியை கடந்த வருடமே எனக்கு அறிமுகம். கடந்த வருசம் சிட்னியில நடந்த ஒரு நிகழ்வில அவவும் அவவின்ர boyfriend ம் மும்மரமா நிகழ்வு வேலைகளை செய்து கொண்டிருக்க சந்தோசமாய் இருந்தது.

மற்றவவை இந்த முறை தான் தெரியும்.

ஒரு நாள் ரெயினுக்குள்ளை வரும் போது அவையோடு கதைச்சுக் கொண்டு வந்தன். முதலாமவர் தன்னுடைய காதல் உடைந்து விட்டதாக ஒரு கட்டத்தில சொன்னா. அது இங்கெல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் அது பற்றி எந்த அதிர்ச்சியையும் முகத்தில் காட்ட இல்லை நான். அல்லது காட்டுவது போல நடிக்கவும் இல்லை.

‘அவன் எப்ப பாத்தாலும் நீ அதைச் செய்யாதை இதைச் செய்யாதை எண்டு சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அது பிடிக்கவில்லை.. ‘ என்றாள் அவள். எனக்கதில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லாத படியாலை எதுவும் சொல்லேல்லை எண்டாலும் பெண்களுக்கு குறிப்பாக காதலிகளுக்கு மன்னிக்கவும் காதலிக்கு பிடிக்காத விடங்களாக அவற்றை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தன் மனசுக்குள்ளை.

அவ பொதுவா தன்னோடை பல்கலைக்கழக மட்ட அதுவும் தமிழ்ப்பெடியள் பற்றித்தான் கதைச்சா. இவங்கள் எல்லாரும் தங்களாலை எந்தப் பெண்ணையும் காதலிக்க வைக்க முடியும் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறாங்கள் எண்டா.

அப்பிடியில்லை எந்தப்பெண்ணையும் என்னாலை காதலிக்க வைக்க முடியாது.. சிலரை மட்டும் தான் என்னாலை முடியும் எண்டு நான் பகிடிக்கு சொன்னன்.

இதுக்கிடையில பக்கத்தில இருந்தவ அம்மா அப்பா எங்களுக்கு ஒரு நாளும் கெட்டது செய்ய மாட்டினம். அவையள் தெரிவு செய்தால் அது சரியாத்தான் இருக்கும். எண்டு சொன்னா.

தனக்கு ஒரு பெடியனைப் பிடிச்சிருந்தால் தான் நேரடியா போய் அப்பாட்டை சொல்லுவாவாம். இதுவரை ஒருத்தரையும் பிடிக்கேல்லையாம்.

பதினெட்டு வயசாகுது.. இன்னும் ஒருத்தன் மேலை கூட மனசுக்குள்ளை ஒரு இது வரேல்லையா எண்டு கேட்டதுக்கு.. அப்பிடி ஒரு இது வாறதுக்கெல்லாம் அப்பாட்டை போய் சொல்ல வேணும் எண்டால் நான் ஒவ்வொரு நாளும் எல்லோ அப்பாட்டை போய் சொல்லிக்கொண்டிருக்க வேணும் எண்டு சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்ல.. எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்..

இதுக்கிடையில நல்ல பெடியளை எப்பிடிக் கண்டு பிடிக்கிறது எண்டு முதலாமவ கேட்டா.. பேசாமல் என்னை மாதிரி இருப்பாங்கள் எண்டு சொல்லியிருக்கலாம் தான். ஆனா ஒரு அண்ணனா.. ?? என்னை மதிச்சு கேட்டவைக்கு ஒரு தரமான பதிலைச் சொல்ல வேணும் எண்டதுக்காக ஒன்று சொன்னன்.

உன்னை ஒருத்தன் பிடிச்சிருக்கெண்டு சொன்னால் வந்து அப்பாட்டை சொல்லு என்று சொல்லு.. துணிந்து வந்து கதைத்தானென்றால் கொஞ்சம் நல்ல பெடியன். ஆனா இதெல்லாத்துக்கும் முதல் உனக்கும் அவனை பிடிச்சிருக்க வேணும்.

( அண்மைக்காலமா நான் காதல் பற்றி எழுதுற பதிவெல்லாத்தையும் நானே தூக்க வேண்டியிருக்கிறது. இதுவாவது இருக்குமென்று நம்புவோம்)

By

Read More

× Close