அசைலம் அடிக்கேல்லையோ?

அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.”

பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு.

“வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?” நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். “எப்பிடி இருக்கிறியள்” எண்டு கேட்டன்.

“முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. ஏதோ இருக்கிறன். கடவுள் எப்ப என்னை எடுக்கப்போறாரோ தெரியேல்லை.” எண்டு அவ சொன்னா.

எனக்கெண்டால் இப்ப கடவுள் எடுக்க மாட்டார் எண்டு தான் தோன்றிச்சு.

மனிசி நிறைய கதைச்சது. கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தது. இருந்தாப்போல கேட்டுது.

“அப்ப உனக்கு அங்கை காட் கிடைச்சிட்டுதோ?”

யாழ்ப்பாணத்தில இப்ப வெளிநாடு சம்பந்தப்பட்ட பொதுவான பேசுபொருள் இது தான் என்றாலும் செத்தாலும் செத்துப்போடும் போய்ப்பாத்து விட்டு வா எண்டு அம்மா அனுப்ப, போய்ப்பார்த்த ஒரு ஜீவனிடமிருந்து இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

மனுசி என்ன கேட்குது என்று எனக்கு விளங்கிட்டுது. இண்டைக்கு காட் கிடைக்கிறது எண்டது யாழ்ப்பாணத்து சமூகத்தின் உச்ச பட்ச எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போல எனக்குப் பட்டது.

இன்னொரு பக்கத்தாலை மனுசி ஆருக்கும் என்னை கலியாணம் பேசப்போதோ என்று கூட ஒரு வெட்கம் கலந்த யோசினை எனக்கு வந்து போனது.

மகளுக்கு வெளிநாடுகளில ஆரும் காட் கிடைச்ச பெடியனா பாக்க முடியுமோ? சாதியைப் பற்றி பிரச்சனையில்லை. ஆனா காட் கிடைச்சிருக்க வேணும் எண்ட மாதிரியான கதையள் அங்கை வலு பிரபலம்.

எனக்கென்னவோ சாதி முறையெல்லாம் ஒழிஞ்சு புதுசா காட் கிடைச்ச சாதி, காட் கிடைக்காத சாதி என்று வந்தாலும் வந்திடும் போல கிடக்கு.

“என்ன காட் ஆச்சி” எண்டு நான் அவவை கேட்டன்.

“அதுதானப்பு! அங்கை இருக்கிற காட். அது கிடைச்சால்த்தானம் ஆரையேனும் கூப்பிடலாம். என்ரை மூத்த ரண்டுக்கும் கிடைச்சிட்டுது. கடைசிதான் பாவம். இன்னும் கிடைக்காமல் கஸ்ரப்படுறான்.”

மனுசி உண்மையிலேயே கவலைப்பட்டுது.

“ஓமணை. இப்ப கொஞ்சம் கஸ்ரம் தான்.” எண்டு சொல்லி நான் அவவை ஆறுதல்ப்படுத்த முயற்சித்தன்.

எனக்கும் ஆறுதலாயிருந்தது. ஏனென்றால் எல்லாம் உந்த சமாதானத்தாலை தான் எண்டு மனுசி சொல்லவில்லை.

ஆனா எனக்கு இன்னொருவர் அப்பிடிச்சொன்னார். அவரும் வெளிநாடு தான். ஐரோப்பா நாடுகளில இப்ப கோடைகாலம் எண்ட படியாலை நிறையப் பேர் விடுமுறையில தமிழீழத்துக்கு வந்திருக்கினம். விடுமுறை முடிய தங்கடை இடங்களுக்கு போறதுக்கு முதல் தங்கடை பிள்ளையளுக்கு தமிழீழத்தின் அருமை பெருமைகளை அவை சொல்லிக்கொண்டிருக்கினம்.

அதுகள் தங்களுக்குள்ளை டொச்சிலையும் பிரெஞ்சிலையும் இங்கிலிசிலையும் கதைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஒரு மல்ரி கல்ச்சர் சிற்றியாக்கி, மாட்டு வண்டிலயும், ஆட்டுக்குட்டியையும் விநோதமாக பார்த்துக் கொண்டிருக்குதுகள். ஒரு காலத்திலை நான் ரெயினைப் பார்த்த மாதிரி.

இதுக்குள்ளை இங்கிலிஷ் கதைக்கிற ஒரு பிள்ளையின்ரை அம்மா சொன்னா. இப்ப டொச்சிலையோ பிரெஞ்சிலையொ படிச்சால் பிற்காலத்தில எங்கடை நாடுகளில வந்து வேலை எடுக்க முடியாதென!. இப்ப இவன் இங்கிலிசில படிக்கிற படியாலை ஒரு காலத்தில எங்கடை நாட்டில வந்து வேலை செய்யலாம் என்ன? நல்ல வேளை நாங்கள் நேரத்தோடை லண்டன் போனது.

நான் அந்த பிற்காலத்தில எங்கட நாட்டுக்கு வந்து வேலை செய்யப்போற பெடியை பார்த்தன். கொசுக்கடியில முகம் எல்லாம் வீங்கி, தடிமனாலை குரல் எல்லாம் அடைச்சு, பெடியை பாக்கவே பாவமா இருந்தது. அவனுக்கு வெயில் ஒத்துக்கொள்ள வில்லையாம் எண்டு அவன்ரை அம்மா சொன்னா.

தனக்கு தமிழீழம் எண்டொரு நாடு சிறீலங்காவில இருக்கு எண்டு அறிவூட்டப்படுகிற ஒரு குழந்தையின் அப்பா தான் அந்த கேள்வியை என்னை கேட்டார்.

“ஏன்.. அசைலம் அடிக்கேல்லையோ.. ஒஸ்ரேலியாவில கஸ்ரமோ?”

தெரியாதெண்டு சொன்னன்.

“விசாரிச்சு பாக்கவில்லையோ?” எண்டு கேட்டார்.

“எனக்கு இப்ப என்ன அவசரம்? வேலை செய்யிறன். படிக்கிறன். அசைலம் பற்றி யோசிக்கவில்லை.” என்று சொன்னன்.

“ஓ.. முந்தி சண்டை நடக்கும் போதாவது அசைலம் அடிக்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லலாம். இப்ப ஒண்டும் இல்லைத்தானே…” எண்டு அவர் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு பத்திக்கொண்டு வந்திச்சு. என்ன செய்ய வயசுக்கு மூத்த ஆக்களை எடுத்தெறிந்து பேசி எனக்கு பழக்கம் இல்லையெண்ட படியாலை பேசாமல் இருந்தன்.

யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டாயிற்று. பஸ்ஸில் தான் வந்தேன். பயணங்களின் போது அது விமானப்பயணமாயினும் எதுவாயினும் எனக்கருகிலிருப்பவர் யாராயிருக்கும் என எதிர்பார்ப்பதும் பின்னர் ஏமாந்து போவதும் தான் எனக்கு அமைந்த வாழ்க்கை. ஆனால் அன்று வழமை மாறியிருந்திச்சு.

அவளுக்கு என்னை விட வயசு குறைவு. லண்டனில் படித்துக்கொண்டிருக்கிற அவளும் விடுமுறையில் வந்து திரும்பினாள். எனக்கு பக்கத்த சீற். தனியத் தான் வந்தாள். லண்டனில் ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் படிக்கிறாளாம். நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம்.

லண்டன் பற்றி நிறைய சொன்னாள். லண்டனில் தமிழ் இளைஞர்கள் படும் கஷ்டங்கள் பற்றி சொன்னாள். அகதி அந்தஷ்த்துக்கள் ஏற்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் வேதனைக்குள்ளும் ஆகிறார்கள் என்றாள். ஒரு அறையை சில நேரங்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றாள். சரியான அனுமதியில்லாததால் அடிமாட்டு விலைச் சம்பளத்தில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றாள். மணித்தியாலத்துக்கு மூன்று அல்லது நான்கு பவுண்ஸ் தான் சில சமயங்களில் கொடுக்கிறார்களாம். எவ்வளவு தான் கஷ்ரப்பட்டாலும் வீட்டிலிருந்து பெற்றோர் கதைக்கும் போது அதையெல்லாம் மறைத்து சந்தோசமாக பேசிச் சிரித்து மகிழ்விக்கிறார்கள் என்றாள்.

லண்டனிலிருந்து வருகின்ற ஒரு பேப்பரில் அண்மையில் றெபேக்கா என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றி அவளிடம் விசாரித்தேன். I would never marry a tamil man என றெபேக்கா எழுதிய காரணங்கள் சரியானவை தானா என கேட்டேன்.

நாங்கள் பேசிச் சிரித்து வருவதை எமக்கு அருகிலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் பார்த்துக் கொண்டே வந்தார். முறிகண்டி தாண்டியதும் தான் கேட்டார்.

“வீட்டை வந்து போறியள் போல” அவளைப்பார்த்து தான் கேட்டா.

“ஓம். லீவில வந்து போறன்.”

“எந்த நாடு?”

“லண்டனுங்கோ..”

அவ தன்ரை மகள் ஜேர்மனியில எண்டா. மகள் இப்ப புருசனோடையும் பிள்ளையளோடையும் கொழும்பில வந்து நிக்கிறதாகவும் தமிழ்ச்செல்வன் ரண்டு கிழமை காலக்கெடு விதிச்சிருக்கிற படியாலை என்னவும் நடக்கலாம் எண்டு கொழும்பில நிக்கிறதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில நுவெரெலியா கண்டிப்பக்கம் போகலாம் எண்டு தன்னையும் கூப்பிட்டவையாம். ரண்டு கிழமை முடிய யாழ்ப்பாணம் வாறதைப்பற்றி யோசிப்பம் எண்டவையாம்.

“தம்பி அப்ப நீர் லண்டனுக்கு போய் எவ்வளவு காலம்” எண்டு அவ என்னைப்பார்த்து கேக்க எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிட்டுது.

“இல்லைங்கோ.. நான் லண்டனில்லை. நான் கொழும்பு” எண்டன்.

மனுசி கொஞ்சம் குழம்பிப் போன மாதிரி இருந்திச்சு. மனுசி எங்களை என்னெண்டு நினைச்சுப் பார்த்திருக்கும் எண்டதை நான் நினைச்சுப் பார்த்தன். கொஞ்சம் சங்கடமாவும் கொஞ்சம் வெக்கமாகவும் இருந்திச்சு.

நான் மனிசியைப் பாத்தன். அவ இப்ப கொஞ்சம் தெளிவா இருந்த மாதிரி இருந்திச்சு.

ஓ.. அப்ப இனி இவ உம்மை கூப்பிட வேணுமென்ன? மனுசி திடீரென்று கேட்டுது.

எனக்கு இதுக்கும் மேலையும் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்திச்சு. வலு விபரமா அவவுக்கு நான் எடுத்துச் சொன்னன்.

ரண்டு பேரும் சின்னப்பிள்ளையளா இருக்கேக்கையே நினைச்சன். எண்டாலும் இப்ப உப்பிடி நடக்குது தானே.. எண்டு மனுசி சமாதானம் சொன்னா

பிறகு மனுசி லண்டன் நிலவரங்கள் பற்றி அறியத்தொடங்கினா.

கனநேரத்துக்கு பிறகு நான் எதிர்பார்த்த அந்த கேள்வியை அவ கேட்டா.

“அப்ப உமக்கு லண்டனில காட் கிடைச்சிட்டுதோ?”

பிற்குறிப்பு: ஓமந்தை சோதனை சாவடியில் இறங்கி ஏறிய போது அவ லண்டன் பெண்ணைப் பார்த்து கேட்டாவாம். உமக்கு அந்த பெடியனுக்கு பக்கத்தில இருக்கிறதுக்கு ஒரு மாதிரி இருந்தா சொல்லும். சீற்றை மாத்துவம்.

By

Read More

ஆம்பிளைப் பாஞ்சாலியும் ஹெலியும்

ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் நிப்பாட்டி விட்டு ஊர் இருண்டு போய்விடும். சிலர் வீடுகளுக்கும் போயிடுவினம். உப்பிடித்தான் ஒரு சிவராத்திரிக்கு நான் பொம்பிளை வேசம் போட்டு நாடகம் நடிச்சுக் கொண்டிருந்தன். பாஞ்சாலி சபதம் நாடகம். நான் தான் பாஞ்சாலி.

திடீரென்று ஹெலிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது. பலாலியிலிருந்து காரைநகருக்கு போற ஹெலி எங்கடை ஊர் தாண்டித்தான் போறது. உடனை இங்கை லைற் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லைற்றைக் கண்டால் கட்டாயம் சுடுவான். அதனாலை போன பிறகு நிகழ்ச்சியை தொடரலாம் எண்டு இருந்தம்.

எங்கடை கஸ்ர காலம் ஹெலி என்ன அசுமாத்தம் கண்டிச்சோ.. சுடத் தொடங்கிட்டான். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சுடவில்லை. அவன் வேறு எங்கோ சுட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த இடத்தில இருந்து பாக்க நல்ல கிளியரா தெரியுது சுடுறது. அதுவும் இருட்டில சுடுறதை பாக்க வடிவா இருக்கும்.

நாடகம் பாக்க வந்த சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடத் தொடங்கிட்டுதுகள். நான் பாஞ்சாலிக்காக நீலக்கலர் சீலையும் கட்டி நல்லா மேக்கப் எல்லாம் போட்டிருந்தன். எங்கடை அம்மம்மா என்னை ஒரு கையில இழுத்துக்கொண்டு வீட்டை ஓடத்தொடங்கினா.

‘கட்டின சீலையோடை ஓடுறது’ எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன். சீலையோடு ஓட கஸ்ரமாகவும் கிடந்தது. மடிச்சுக் கட்டிப்போட்டு ஒரே ஓட்டம்.

ஹெலி சுட்டுட்டு போயிட்டுது. நான் வீட்டை இருக்கிறன். ஓடி வரும்போது தலைமுடி எங்கேயோ றோட்டிலை விழுந்திட்டுது. எனக்கு கவலையாயிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசம் பழகினது. உண்மையா எனக்கு பொம்பிளை வேசம் போட்டு நடிக்க விருப்பம் இல்லை. என்ன செய்யிறது. நாடகம் பழக்கிறவர் வீட்டுக்கு தெரிஞ்ச ஆள். அவர் கேட்டா வீட்டில ஓம் எண்டு விடுவினம். நானும் வேண்டா வெறுப்பாப்பாத்தான் பழகிறனான். எண்டாலும் பழகின பிறகு நடிக்க முடியெல்லை எண்ட நினைக்க கவலையாயிருந்தது.

திரும்ப நிகழ்ச்சி தொடங்கிற சத்தம் கேட்குது. வீட்டில இருக்க எனக்கு கேட்குது. பாஞ்சாலி சபதம் மீண்டும் தொடரும் எண்டுகினம். எப்பிடித் தொடரும். பாஞ்சாலி வீட்டிலயெல்லோ இருக்கிறாள்.

காரைநகருக்கு போன ஹெலி திரும்பவும் பலாலிக்கு போகும் எண்ட படியாலை வீட்டில ஒருத்தரும் விரும்பவில்லை திரும்பி நாடகத்துக்கு போறதை.

அப்ப எனக்கு நாடகம் பழக்கினவர் வீட்டை சைக்கிளில் ஓடிவாறார்.

அங்கை நாடகம் தொடங்கிட்டுது. நீ இங்கை இருக்கிறாய். கெதியிலை வந்து சைக்கிளிலை ஏறு. எண்டார்.

என்ரை சீலை எல்லாம் குலைஞ்சு போய் கிடந்தது. ஏதோ அப்பிடியும் இப்பிடியும் செய்து சரியாக்கி விட்டார்.

‘சேர் என்ரை தலைமுடி எங்கேயோ விழுந்திட்டுது’ எண்டு சொன்னன். பரவாயில்லை ஏறு எண்டு என்னைக் கொண்டு போனார். ஒரு வேளை ‘நவீன பாஞ்சாலி’ எண்டு பேரை மாத்தப் போறாரோ எண்டு நினைச்சுக் கொண்டு போனன்.

பிறகென்ன நீளக் கூந்தல் எதுவும் இல்லாமல் ஒட்ட வெட்டின என்ரை தலையோடை நான் பாஞ்சாலியாக நடிச்சன். அதுக்கு பிறகு என்னை எல்லாரும் ஆம்பிளை பாஞ்சாலி எண்டு தான் கூப்பிடத் தொடங்கிட்டாங்கள்.

பாஞ்சாலிப் படம் இப்ப கைவசம் இல்லையெண்ட படியாலை இன்னொரு பொம்பிளை வேசம் போட்ட நாடகத்தில இருந்து எடுக்கப்பட்ட படமொண்டை போடுறன். பாருங்கோ


Image hosted by Photobucket.com

By

Read More

தமிழீழம்-தமிழகம்-இயக்குனர் சீமான்

அண்மையில் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இயக்குனர்களான சீமான், தங்கர் பச்சான், சேரன் ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் இயக்குனர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் இவை. தமிழக அரச இயந்திரத்தின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாடுகளை சாடும் இவர் அண்மையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாகவும் தன் எண்ணத்தை பதிந்திருக்கின்றார்.


நன்றி TTN, வன்னியன்

By

Read More

என்ன செய்ய போகிறது இந்தியா?

குமுதம் றிப்போட்டரில் சோலை என்பவர் எழுதியிருந்த அந்த முதல் கட்டுரையை வாசித்த போது அட என்ற உணர்ச்சியெழுந்தது. நக்கீரன், நெற்றிக்கண், ராணி இவ்வாறான பத்திரிகைகளில் அக் கட்டுரை வந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆயினும் இதுவரை குமுதத்தில் கண்டறியாத விடயம் அது!

மகிந்த அரசினை மிக கண்டித்தும், நையாண்டி செய்தும், விடுதலைப் புலிகளை உச்சத்தில் வைத்தும் எழுதப்பட்டிருந்தது அக்கட்டுரை. அதனை எழுதியவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசகராக பணியாற்றியவர் என யாரோ சொன்னார்கள். அக் கட்டுரையின் ஒரு இடத்தில் புலிகளின் மீதான இராணுவ தளபதியின் எச்சரிக்கையை ‘சூரியனைப் பார்த்து பனித்துளிகள் எச்சரிக்கின்றன என்கிறார் கட்டுரையாளர்.

அக்கட்டுரையின் கருத்துக்கள் குமுதத்தின் கருத்துக்கள் இல்லைத்தான் என்றாலும் அது குமுதத்தினால் கேட்டு வாங்கி பிரசுரிக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதுகிறேன். ஏனெனில் இரண்டாவது முறையாகவும் குமுதம் றிப்போட்டரில் அதே கட்டுரையாசிரியர் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. மகிந்தாவின் இந்திய விஜயம், அதன் தோல்வி குறித்து அலசுகிறது அக் கட்டுரை.

அண்மையில் சு.ப.வீயின் செவ்வியொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘உங்களை எதிர்த்து எழுதியவர்கள் எல்லாம் இப்போது உங்கள் உண்மையான போராட்டத்தினை உணரத் தொடங்கி விட்டார்கள் என அவர் சொல்கிறார்.

அடுத்தடுத்ததாக சில ஈழ ஆதரவு மாநாடுகள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. வை.கோ உள்ளிட்ட தலைவர்கள் கொஞ்சம் மிகைபடக் கருத்துக்கள் தெரிவித்தாலும் ஈழ ஆதரவு அலையொன்று அங்கு மெதுவாக உருவாகியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. பெரிதாக பொங்கிப் பிரவாகிக்கும் அளவுக்கு ஈழத் தமிழர் ஆதரவு உருவாகவில்லையென்தே உண்மையாயினும் மக்களின் கருத்துலகில் மகிந்தா அரசுக்கு எதிரான சிந்தனைகள் நிறைந்திருக்கின்றன என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

அந்தச் சிந்தனைகளே முதல்வர் ஜெயலலிதாவின் மகிந்தவுடனான சந்திப்பினை ரத்துச் செய்திருக்கின்றன நம்பப்படுகிறது. என்னதான் வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் நெருங்குகின்ற சமயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துச் செயற்படுவதை ஜெயலலிதா விரும்பாததன் வெளிப்பாடாகவே சந்திப்பு ரத்தாயிருக்கிறது.

ஒருவேளை தனக்குப் பாதகமில்லாத ஒரு சூழ்நிலையில் ஜெயலலிதா மகிந்தாவை சந்திக்கக் கூடும். ஆயினும் அவர் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதே இங்கே நோக்கத்தக்கது.

தலிரவும் மகிந்தாவின் இந்திய விஜயம் பாரியளவு வெற்றியைத்தரவில்லை என்றே கூறப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்ட இராணுவ ஒப்பந்தம் நிறைவேற்றப் படவில்லை. புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கும் படி ஆலோசனையே கூறப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் இந்தியாவையும் உள்ளிழுக்கும் மகிந்தாவின் நோக்கம் நிறைவேறவில்லை.

குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு விடயம் என்ன என்றால், அரைகுறை அதிகாரங்களுடன் திணிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திலேயே சமஷ்டி ஆட்சி முறை குறித்து சொல்லப்பட்டிருக்க மகிந்தாவோ ஒற்றையாட்சி முறை மூலம் மட்டுமே தீர்வு எனச் சொல்லுகையில் இந்தியாவின் ஆசி அவருக்கு கிடைக்குமா என்பதே.

இதற்கிடையில் இலங்கையில் உத்தியோகப் பற்றற்ற யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரே இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கின்றதா என கேள்வியெழுப்பும் நிலைவரை வந்தாகி விட்டது.

இராணுவத்தினரின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் அதற்கான பதிலடிகளும் அங்கே தினமும் நடைபெறுகின்றன. இராணுவத்தால் கொல்லப்படும் அப்பாவி மக்களின் ஒரு உயிருக்கு 10 இராணுவத்தினரின் உயிரினைப் பறிப்போம் என புலிகள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் மீண்டும் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை செல்ல இருக்கிறார். அங்கு அவர் மகிந்தாவையும் புலிகளின் தலைவரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அன்ரன் பாலசிங்கம் அவர்களும் வன்னி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சுக்களை நோர்வேயில் நடாத்த அரசு சம்மதிப்பின் சமாதானம் அடுத்த படிக்கு ஏறி பின்னர் இழுபடும். இல்லையெனின் இப்பொழுதே முறியும்.

பேச்சுக்கள் இவ்வாறு இழுபடுவதை புலிகள் விரும்பவில்லை. பல விட்டுக் கொடுப்புக்களை செய்தும் உலக நாடெதுவும் சமாதானத்தின் உண்மையான எதிரி யாரென்பதை புரிந்து கொள்ளவில்லையாதலால் இனியும் நற்பெயரை எதிர்பார்த்து நிற்பதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள் போல தெரிகிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகள் மீது தடை விதிக்க ஆயத்தமாக இருக்கின்ற இச் சூழலிலும் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் தமது இலக்கிற்கான நேரடிச் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதானது, எவர் தடை செய்தாலும் எமக்கென்ன? எங்கள் பாதையில் செல்வோம் என்னும் நிலையில் அவர்கள் நிற்பதனை உணர்த்துகிறது.

புலிகள் மீண்டும் யுத்தத்தினை ஆரம்பித்தால் அவர்கள் பலம் பொருந்திய இராணுவம் ஒன்றினை எதிர் கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இது அமெரிக்கா இலங்கை இராணுவத்திற்கு இராணுவ உதவிகள் வழங்க தயாராயுள்ளது என்பதனை உணர்த்துகிறது. வழங்கட்டும்! என்னுடைய கேள்வியெல்லாம் அமெரிக்கா ஆயுதம் வழங்கி தமிழனை அழிக்க நினைக்கிறது. அதெப்படி முடியும்? நான் ஒருவன் இங்கு ‘பெரியண்ணன்’ இருக்கின்றேன். விட்டுவிடுவேனா? நான் தான் ஆயுதம் வழங்கி தமிழரை அழிப்பேன் என இந்தியா சிந்திக்குமா என்பதே!

By

Read More

போய் வருகின்றேன், நன்றி!

என் இனிய மெல்போண் நகரிலிருந்து விடை பெற்று சிட்னி நகர் குடி புகுகின்றேன். அதற்கென்ன ஒஸ்ரேலியாவில் இருக்கும் இரண்டு நகர்கள்தானே என இலகுவாக சொல்ல முடியாத படி, 1000 கிலோ மீற்றர்கள் இடைவெளியில் இருக்கின்றன இந்த இரண்டு நகரங்களும். காலநிலை மற்றும் சூழலியல் இவற்றிலும் இரண்டுக்கும் வேறு பாடுகள் இருக்கின்றன.

மெல்போணில் ஐரோப்பிய கலாசார தாக்கமும் சிட்னியில் அமெரிக்க கலாசார தாக்கமும் இருப்பதாக சொல்கின்றார்கள். காலநிலையில் மெல்போணின் குளிர் இந்த வருடம் Snow கொட்டுகின்ற அளவிற்கு அதிகமானது. சிட்னியில் சீதோஷ்ண நிலை சில சமயம் இலங்கையின் காலநிலையை நினைவு படுத்தும்.

சிட்னியில் சென்று தங்கியிருந்த காலங்களில் எல்லாம் நான் ஊரில் இருப்பது போன்ற ஒரு உணர்வினை பெற்றிருக்கின்றேன். ஒரு வேளை நான் அங்கு தங்கியிருந்த வீட்டுச் சூழல் அதற்கு காரணமாயிருக்கலாம்.

மெல்போணில் வந்து இறங்கிய போது, இருந்த தனிமைப் பயம் சிட்னி சென்று இறங்கும் போது இருக்கப் போவதில்லை என்னும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.

மெல்போணில் இருந்த வரைக்கும், சுவாரசியமான நிறைய நினைவுகள் இருக்கின்றன. வலைப்பதிவு பற்றி யோசித்தால் நானும் வசந்தனும் ஏற்படுத்திய குழப்பங்கள் தான் நினைவில் வருகின்றன. என்ன காரணத்தினாலேயோ நானும் அவரும் ஒருவரே என்ற கருத்து உலவியதும் அதை நாம் ஏற்பது போலவும் ஏற்காதது போலவும் பல இடங்களில் விளையாடியமையை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

வசந்தன்! தென்துருவ வலைப்பதிவர் சங்க தலைமையை, நான் கண்ணாக கட்டி வளர்த்த அவ் வமைப்பை, என் கண்ணையே உமது கையில் தந்துவிட்டு செல்கிறேன். நீங்கள் தான் இனி எல்லாம்! உமது நடவடிக்கைகள் சிட்னியில் இன்னொரு தலைமையை தொடங்க வழி வகுக்கக் கூடாது.

தனித்தியங்கும் ஆற்றல் தந்த மெல்போணுக்கு நன்றி,

கலகலப்பான நண்பர்களாக இருந்த வசந்தன், அருணன் முதலானோர்க்கு நன்றி,

எனது கல்வியை சிட்னிக்கு மாற்ற அனுமதி தந்த பள்ளிக்கூடத்துக்கு நன்றி,

நான் ஒழுங்கா வேலை செய்வதில்லை என கூறிக் கூறியே.. கடைசிவரை என்னை வேலை செய்ய அனுமதித்த, Petrol Station முதலாளிக்கு நன்றி.

நன்றி நண்பர்களே, சிட்னியில் இருந்து சந்திப்பேன். தாமதமாய் என்றாலும்…

By

Read More

× Close