காட்டின் பச்சை மணத்தில் இருந்து வெடிப்பின் கந்தக மணம் வரை

சுரேஷ் பிரதீப்

பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவதில்லை. கதைகளாக விளையாட்டுகளாக திரைப்படங்களாக போரினை கற்பனித்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். நம் கற்பனை செய்யும் போரில் வெற்றியும் தோல்வியும் இருந்திருக்கும். தொழில்நுட்பங்களும் சாகசங்களும் மரணங்களும் இருந்திருக்கும். ஆனால் அப்போர்  தொடங்கி  முடிவடைந்திருக்கும். போருக்கு முன்பான தயாரிப்புகளையோ போருக்குப் பிந்தைய நிலைகளையோ நாம் கற்பனை செய்திருக்கமாட்டோம். போர் களங்களில் மட்டும் நடப்பதாக எண்ணிக் கொண்டு இருந்திருப்போம்.


போரும் வாழ்வும் நாவலைப் படித்தபோது போர் குறித்த இத்தகைய மனச்சித்திரங்கள் கலையத் தொடங்கின. போர் வேறு வகையானதாக முன் ஊகங்களுக்கு வாய்ப்பற்றதாக தென்படத் தொடங்கியது. ஆனால் அந்த நாவலிலும் களம் என்ற ஒன்று உண்டு. அதில்தான் போர் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கழுகினைப் போல உச்சி மரக்கிளையில் அமர்ந்து கொண்டும் அவ்வப்போது களத்தில் ஊடுருவிப் பறந்தும் அப்போரினை நாம் காண டால்ஸ்டாய் நம்மை அனுமதிக்கிறார். ஆனால் சயந்தனின் ஆதிரை நாவலில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெறுகிறது. ஆனால் சயந்தன் நம்மை எக்களத்துக்கும் கூட்டிச் செல்லவில்லை. பிரம்மாண்டமான படை நகர்வுகளும் வியூக வகுப்புகளும் உணர்ச்சிகரமான உரைகளும் கூர்மையான தத்துவ விவாதங்களும் இந்த நாவலில் இல்லை. ஆனால் ஒரு போரின் நடுவே வாழ நேரும் மனிதர்கள் சந்திக்க நேரும் திகிலையும் வெறுமையையும்  நாவல் கொடுப்பதே இதன் முதன்மையான வெற்றி எனச்சொல்லலாம்.


ஒரு எதார்த்தவாத செவ்வியல் படைப்பு

தமிழில் எழுதப்பட்ட முன்னோடி எதார்த்தவாதப் படைப்புகளின்(ஆழிசூல் உலகு,மணற்கடிகை) அதே வகையான நேரடிக் கதைகூறல் முறையையும் நுணுக்கமான தகவல் விவரணைகளையும் கொண்ட புனைவாக ஆதிரை தன்னை வகுத்துக் கொள்கிறது. நாற்பதாண்டு காலம் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்வினை வலுவாகச் சித்தரித்துச் செல்கிறது. அந்த சித்தரிப்பினூடாக ஒரு பெரும் போரினை சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைத் தொடர்ந்த ஒரு பேரழிவினை ஆதிரை விரித்துக் காட்டியிருப்பதே இதனை முதன்மைப் புனைவாக மாற்றியிருக்கிறது.
ஈழம் குறித்து தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கொந்தளிப்பான சித்திரம் உண்மையில் இலங்கையில் நடந்தவற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு ஆழமான மனத்தடையை என்னில் உருவாக்கி இருந்தது. சமீபத்தில் வாசித்த சில நூல்கள் வழியாகவே இலங்கை குறித்து ஓரளவு அறிய முடிந்தது. அந்த நூல்கள் வரலாற்றுத் தரவுகளை மட்டுமே தரக்கூடியவை. பாடப்புத்தகங்களை வாசிக்கும் மனநிலையுடன் மட்டுமே அணுகப்படக்கூடியவை. ஆனால் ஆதிரை வாசித்து முடித்தபோது ஒன்று தோன்றியது. போர் குறித்து உருவாக்கப்படும் கற்பனைகளை நம்மவர்களை பெரும்பாலும் மிகையுணர்ச்சி கொள்ளச் செய்கிறது. போரினைப் பற்றி பேசுவதும் அதில் ஈடுபடுவதும் அச்சூழலில் வாழ்வதும் முற்றிலும் வேறுவேறான அனுபவங்கள். ஆதிரை போர்ச்சூழலில் வாழ நேர்ந்த போரால் தொடர்ச்சியாக அலைகழிக்கப்பட்ட கொல்லப்பட்ட மனிதர்களின் கதை.


1991-ஆம் ஆண்டு லெட்சுமணண் சிங்கமலை என்ற இயக்கப் போராளி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதுடன் நாவல் தொடங்குகிறது. அங்கிருந்து பின் சென்று அவன் தந்தை சிங்கமலை ஏழு வயதான லெட்சுமணனையும் அவனது அக்கா வல்லியாளையும் கூட்டிக்கொண்டு தனிக்கல்லடிக்கு வருவதாக நாவல் பயணிக்கிறது. தனிக்கல்லடியில் அத்தார் – சந்திரா தம்பதிகளிடம் லெட்சுமணன் பணிக்கு சேர்த்துவிடப்படுகிறான். வல்லியாள் கணபதிக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள். அத்தாரின் நண்பன் சங்கிலியின் குடும்பமும் சித்தரிப்பின் வழி விரிகிறது. இக்குடும்பங்களின் வாழ்வின் தொடர் சித்தரிப்பாக ஆதிரை நாவலை சொல்லிவிட முடியும். எதார்த்தவாதப் படைப்புகளின் பண்புக்கூறாக ஒன்றைச் சுட்ட முடியும். அவை சற்று பெரிய காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. ஆகவே தொடர்ச்சியாக நிறைய மனிதர்களை அறிமுகம் செய்தபடி அவர்கள் வாழ்வில் எழும் முரண்களைச் சொல்லியபடியே முன் செல்கின்றன. எதார்த்தவாதப் படைப்புகளின் தரிசனம் என்பதே சிலந்தவலைப் போல பின்னப்பட்டிருக்கும் இவ்வாழ்வில் வரலாற்றில் தனிமனிதனின் இடம் என்ன அவன் அகத்துக்கான பெறுமானம் என்பதை விசாரிப்பதே. அவ்வகையில் ஆதிரையின் புறச்சட்டகத்தை இவ்வாறு விவரிக்கலாம். முதலில் தனிக்கல்லடி எனும் ஊரின் சித்தரிப்பு. அதைத் தொடர்ந்து அங்கு இலங்கை ராணுவத்தினரின் வருகையாலும் போராலும் சிங்களக் குடியேற்றங்களாலும் மற்றொரு நிலத்தினை நோக்கி நகரும் புலம் பெயர்வு. புது நிலத்தில் வாழ்வு நிலைத்து கிளைவிட்டு வரும்போது இறுதிப்போர் உக்கிரம் கொள்ள அங்கிருந்து மற்றொரு இடப்பெயர்வு. இந்த இறுதிப் பெயர்வு அதீத இழப்புகளை உண்டு பண்ணுகிறது. இந்த இரண்டு இடப்பெயர்வுகளுக்கு இடையிலான வாழ்க்கையே ஆதிரை நாவலாக விரிந்துள்ளது.


நாவலின் கதையை சுருக்கிச் சொல்வது நிச்சயம் இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்த நாவலை எங்கு நின்று அணுகுவது என்ற புரிதலை அளிப்பது மட்டுமே என் நோக்கமாக இருக்கிறது. நவீன நாவல் இன்று அடைந்திருக்கும் சாத்தியங்களை ஆதிரை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கிறது. நவீன இலக்கியம் அறிவுஜீவியின் குரலாக தரப்பாக ஒலிப்பதல்ல. அப்படியொரு பாவனையை அது மேற்கொண்டாலும் இலக்கியத்தின் நோக்கம் அகம் நோக்கியத் தேடலே. படைப்பாளியின் அரசியல் நிலைப்பாடோ கருத்தியல் நிலைப்பாடோ அவரின் படைப்புகளை பாதிக்க வேண்டிய கட்டாயமில்லை. எனினும் போர் குறித்து அதிலும் போர் நிகழும் காலத்தையே பேசுபொருளாக கொண்டெழுதப்படும் படைப்புகளில் கருத்தியலின் சாயலோ சாய்வோ புலப்படுவது தவிர்க்க முடியாதது. அது அதிகமாகுந்தோறும் படைப்பின் கலையமைதி குன்றி படைப்பு மற்றொரு பிரச்சாரத் தட்டியாகிறது. அதேநேரம் சூழலின் மனிதர்களின் வலியை இழப்பை பொருட்படுத்தாமல் படைப்பு தன்னை “அப்பால்” நிறுத்திக் கொள்ளுமென்றால் வெறும் தத்துவ விசாரணையாக சுருங்கிவிடுகிறது. ஆதிரை தன்னை யாரின் குரலாக ஒலிக்கவிட வேண்டும் என்ற தெளிவினைக் கொண்ட நாவல். போரினால் அதிகம் இழக்க நேரும் சாமானியர்களின் குரலாக இந்த நாவல் ஒலிக்கிறது. மண்ணோடும் காட்டோடும் நெருங்கி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வின் சிதைவைச் சுட்டுவதாலேயே இது தலைசிறந்த படைப்பாகிறது.


முன்பே சொன்னது போல எதார்த்தவாதப் படைப்புகள் வாழ்வின் அன்றாடத் தருணங்களையே சித்தரிக்கின்றன. படைப்பாளியின் தனித்தன்மையும் ஆளுமையும் சித்தரிப்பில் வெளிப்பட வேண்டிய ஒரு கட்டாயம் இவ்வகை படைப்புகளுக்கு உண்டு. அவ்வகையில் சயந்தன் கதைக்களமாக எடுத்துக் கொண்ட நிலத்தினை கண்முன் நிறுத்தும் வலிமையான படைப்பு மொழியைக் கொண்டிருக்கிறார். இந்த நாவல் வாசிக்கும் போது நான் அடைந்த திடுக்கிடல்களுக்கு காரணம் இதுவே. தமிழகத்தில் ஏதோவொரு கிராமத்தில் பிறக்க நேர்ந்த யாருக்குமே தனிக்கல்லடி ஒரு அந்நிய கிரமமாகத் தோன்றாது. ஆனால் அங்கு நிகழும் போர்களும் மரணங்களும் நமக்கு அந்நியமானவை. ஏற்றுக் கொள்ள முடியாதவை.


சூழும் போரும் மலரும் வாழ்வும்

சங்கிலி அரசியல் சண்டைகளை காட்டுக்குள் கொண்டு வருவதை விரும்பாத வேட்டைக்காரனாகவும் அத்தார் விடுதலை புலிகளின் ஆதரவாளனாகவும் இருக்கின்றனர். அத்தாரின் மனைவி சந்திரா வெள்ளாளர் சாதிப்பெண். அத்தார் அம்பட்டர் சாதியைச் சேர்ந்தவன். அவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள். குழந்தையற்ற அந்த தம்பதிகளின் மகனாகவே வளர்கிறான் சிங்கமலையின் மகன் லட்சுமணன். சந்திராவுக்கும் லட்சுமணனுக்குமான உறவு இந்த நாவலின் உயிர்ப்பான சித்தரிப்புகளில் ஒன்று. அதுபோல சங்கிலி மீனாட்சி தம்பதிகளின் மகளான ராணியின் தோழியாக வரும் ஜோதிமலரும் ஒரு வீரகதை நாயகி என்றே சொல்லிவிடும் அளவிற்கு தீரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
தனிக்கல்லடியில் இயல்பான போக்கில் நகரும் வாழ்வில்(எளிய பிரியங்கள்,வருத்தங்கள்,பொறாமைகள்) மெல்ல சிங்கள ராணுவமும் விடுதலைப் புலிகளும் ஊடுறுவுகின்றன. புலிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து நியாயப்படுத்துகிறவனாக அத்தாரும் அதற்கு எதிர்நின்று வாதிடுகிறவர்களாக சந்திராவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். சங்கிலியின் அண்ணன் ராணுவ வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார். சங்கிலியின் தாயான ஆச்சிமுத்து கொல்லப்பட்ட மகனின் குடும்பத்தை சந்திக்கச் செல்லும் இடம் நிலக்காட்சி வர்ணனைகளின் மிகக்கூரிய சித்தரிப்பு. நாவல் முழுவதுமே இத்தகைய நீண்ட அதேநேரம் விரைவான சித்தரிப்புகளை அளிப்பதன் வழியாக தொடரும் நிகழ்வுகள் மீது ஒரு வகையான பதற்றத்தை உருவாக்கி விடுகிறார் ஆசிரியர். தனிக்கல்லடியினரின் குல தெய்வமாக விளங்கும் இத்திமரம் புயலில் அழிகிறது. சிங்கள ராணுவம் நிலை கொண்டதால் தனிக்கல்லடியை விட்டு இடம்பெயர்கிறார்கள்.


நாவலில் திருமணங்களும் குழந்தை பிறப்புகளும் வந்தவண்ணமே உள்ளன. பெரும்பாலும் பெண் குழந்தைகள். நாமகள்,முத்து,முத்துவின் மகள்களான ஒளிநிலா,இசைநிலா என ஒவ்வொரு பிறப்பின் போதும் அங்கு வாழ்கிறவர்களின் சூழல் மாறியிருக்கிறது. ஒன்றுமே இல்லாதவர்களாக தனிக்கல்லடியைவிட்டு சங்கிலியின்,சிங்கமலையின், அத்தாரின் குடும்பங்கள் வெளியேறுகின்றன. மீண்டும் ஒரு புதுநிலத்தில் வாழ்வினை அமைத்துக் கொள்கின்றனர். மெல்ல மெல்ல வாழ்க்கை நம்பிக்கை நிறைந்ததாக காதலும் சண்டைகளும் நிறைந்ததாக கனவுகளுக்கு வாய்ப்பளிப்பதாக தன்னை மாற்றிக் கொள்கிறது. மீண்டும் போர் அவர்களை சூழ்ந்து தாக்குகிறது. இம்முறை மேலும் உக்கிரமாக.


வெளியேறிச்செல்லும் இளைஞர்கள்

தகப்பனின் தலையை கண்டறிய முடியாத மகனும், வல்லுறவுக்கு ஆளாகி தாயினை இழந்த மகளும் என இயக்கதினை நோக்கி இளைஞர்கள் சென்றபடியே உள்ளனர். தொடக்கத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும் இயக்கச் செயல்பாடுகள் ஒரு கட்டத்தில் இறுக்கம் கொள்ள கட்டாய ஆள் சேர்ப்புகள் நடக்கின்றன. தோழிகள் இறந்ததால், தனி நாடமையும் என்ற கனவால் வினோதினி, மலர்விழி என பெண்கள் புறப்பட்டுச் சென்ற வண்ணமே உள்ளனர். அறியாச் சிறுமிகளாகத் திரிந்தவர்கள் போராளிகளாகத் திரும்பி வருவதைக் கண்டு உறவினர்கள் அஞ்சுவதும் பதைப்பதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. லெட்சுமணன் வினோதினி என இறுதிவரை மீளாதவர்களையும் நாவல் சித்தரிக்கிறது. லட்சியங்கள் போர் என்று வரும் போது ஒரு புள்ளியில் எளிதாக முனை கொள்கின்றன. அந்த முனைப்பு உந்த சென்றவர்கள் இறுதிப்போரில் படும் துயரும் அலைகழிப்புகளும் மனம் கனக்கச் செய்கிறவை.


போரெனும் தலைகீழாக்கம்

போர்கள் இரண்டு வகையாக நடைபெறுகின்றன எனலாம். உயர்மட்டத்தில் அது நிலம் கைப்பற்றல்களுக்கான கணக்குகளாக உள்ளது. அதிகார பேரங்களும் ஆயுத பேரங்களும் நிகழும் மேசையாக உள்ளது. அடிமட்டத்தில் அது மனிதர்களின் வாழ்வை அலைகழிப்பதாக உள்ளது. சாமனியர்களிடமிருந்து அவர்களின் நிலம் உடைமை என அனைத்தையும் பறித்துக் கொள்வதாக இருக்கிறது. அரசாங்கம் தனது நிலத்தையும் உடைமைகளையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையின்பாற்பட்ட ஒப்பந்தமே சாமானியனை அரசாங்கத்துக்கு அடங்கி நடப்பவனாக விதிகளை மதிப்பவனாக வைத்திருக்கிறது. ஆனால் போரின் போது இரண்டு தரப்புகளில் ஒன்று தங்களை அரசாங்கமாக நிறுவிக் கொள்ள முனைப்பு கொள்கின்றன. அங்கு சாமானியன் தான் இத்தனைநாள் கடைபிடித்த அறங்கள் அனைத்தும் பயனற்றுப் போவதைக் காண்கிறான். ஏதேனும் செய்து உயிர்பிழைத்திருந்தால் மட்டும் போதும் என எண்ணுகிறான். கையூட்டு கொடுத்து தப்பிச் செல்கிறான், காட்டிக் கொடுத்து பிழைக்க முடியுமா எனப் பார்க்கிறான். அருகில் இருப்பவனையே சந்தேகிக்கிறவனாகவும் முழுமையான சுயநலம் மிக்கவனாகவும் மாறிவிடுகிறான்.


அதுவரை நிகழ்ந்த வாழ்வின் பாவனைகளை முற்றாக உதறி உயிரோடு இருந்தாக வேண்டிய ஒரு கட்டாயத்தால் மட்டுமே உந்தப்படும் மனிதர்களால் சமூகம் தலைகீழாகிறது. இந்த தலைகீழாக்கத்தை போரின் உச்சக் கொடுமைகளை மிகச் சரியாக சித்தரிக்கிறது படுகளம் பகுதி. ராணுவம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான கடற்கரை பிரதேசத்தில் நடைபெறும் சில அத்தியாயங்கள் இப்படைப்பை சிறந்த நாவல் என்ற நிலையில் இருந்து உயர்த்தி ஒரு செவ்வியல் படைப்பாக மாற்றிவிடுகிறது. மூன்று தலைமுறைகளாக புலம்பெயர்ந்தபடியே இருக்கும் சாமானியர்களின் துயர் உச்சம் கொள்கிற தருணங்களை கூர்மையுடன் சித்தரிக்கிறது இப்பகுதி. பிள்ளைகளின்றி வாழ்ந்து இறந்து போகும் அத்தார்-சந்திரா தம்பதியினர், இறுதி நேரத்தில் உயிர் பிழைப்பதற்காக “போலி” கல்யாணம் செய்து வைக்கப்படும் நாமகள், கூடாரத்திலேயே புதைக்கப்படும் மீனாட்சி என இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு நிகழ்வும் தீவிரத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இறுதியாக இயக்கத்தில் இருந்து தான் புதைத்த கன்னிவெடிகளை தானே எடுக்க நேரும் வெள்ளையனுடன் நாவல் நிறைவடைகிறது.


செவ்வியல் தன்மை கொண்ட படைப்புகள் வாசித்து முடித்ததும் நமக்குள் நிறைப்பது ஒரு வெறுமையை மட்டுமே. பெரும் திட்டங்கள் செயல்கள் முன் வாழ்வு கொள்ளும் நெருக்கடிகளை மிக நுட்பமாகச் சொல்லும் அதேநேரம் தனிமனித அகம் கொள்ளும் சஞ்சலங்களை நுண்மையாகத் தொட்டெடுக்கும் தன்மையும் கொண்ட படைப்புகளை செவ்வியல் தன்மை கொண்டதாக நான் காண்கிறேன். அதற்கு சிறந்த முன்னுதாரணத்தை போரும் வாழ்வும் அளித்தது. ஸ்லாமென்ஸ்க் மாஸ்கோ பீட்டர்ஸ்பர்க் என பெருநகரச் சித்தரிப்புகள் பெயர்வுகள் என ஒரு பக்கம் நாவல் நகர மறுபக்கம் தனிமனித அகத்தையும் கூர்மையாகச் சொல்லிச் செல்லும் படைப்பது.


அதுபோலவே ஆதிரையிலும் பல முரண்படும் தரப்புகளின் விவாதங்கள் வருகின்றன. இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்குமான உரசல்கள், இயக்கம் ஜாதியிலிருந்து வெளிவர முடியாத அவலம், தமிழ் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமான முரண்பாடுகள், விடுதலைப் புலிகளுக்கும் பிற தமிழீழ இயக்கங்களுக்குமான சச்சரவுகள், ஆயுத வியாபாரம் என பல தளங்களை தொட்டுப் பேசிச்செல்கிறது இப்டடைப்பு. அதேநேரம் போரில் கணவனைத் தொலைத்த ராணியின் மன உணர்வுகள், பிள்ளையற்ற வெறுமையில் திளைக்காமல் நம்பிக்கையுடன் மாணவர்களை தேற்றிக் கொண்டுவரும் சந்திரா,இறுதிவரை மகளைத் தேடி அலையும் கணபதி என தனிமனிதர்களையும் மிக உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது இப்படைப்பு.


சூழல் சித்தரிப்பிலும் உரையாடல்களிலும் சயந்தன் காட்டியிருக்கும் கவனமும் தேர்ச்சியும் ஆச்சரியமளித்தாலும் அது நாவலுக்கு ஒரு மெல்லிய செயற்கைத்தனத்தை அளிக்கிறது. பதற்றமான ஒரு சூழலை சொல்லும் மொழி என்பதால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அதீத கவனம் வாசகனிடமும் அப்பதற்றம் எந்நேரமும் தொற்றி இருக்கும்படி செய்து விடுகிறது. கலையமைதியை குலைப்பதாக இந்த ஒரு அம்சம் மட்டுமே இப்படைப்பில் உள்ளது.
போரிலிருந்து ஒரு சமூகம் துயரையும் வஞ்சங்களையும் தவிர வேறெதையும் பெறுவதேயில்லை என்ற போதும் போரை நோக்கியே வாழ்க்கை உந்தப்படுகிறது. அதற்கு எதிரே நின்று போரின்மையை வலியுறுத்துகிறவைகளாகவே அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியங்கள் உள்ளன. நான் வாசித்த அத்தனை பெரும் படைப்புகளிலும் பேரழிவுச் சித்திரங்கள் இருந்திருப்பதை உணர்கிறேன்(குற்றமும் தண்டனையும் நீங்கலாக). எனினும் வெறும் அழிவுகளை மட்டுமே சித்தரிக்கும் படைப்புகள் பேரிலக்கியங்களாக எழுந்துவிடுவதில்லை. அவை வாழ்வின் மணங்களை கொண்டிருக்க வேண்டும்.ஆதிரை காட்டின் பச்சை மணத்தில் இருந்து துப்பாக்கி வெடிப்பின் கந்தக மணம் வரை தன்னுள் கொண்ட படைப்பு.

By

Read More

ஜிஃப்ரி ஹாஸன்

ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின் போராட்டமும் தமிழர் வாழ்வும் பற்றி பல நாவல்கள் வெளிவந்து விட்டன. ஷோபா சக்தியின் BOX கதைப்புத்தகம், குணா கவியழகனின் விடமேறிய கனவு, சாத்திரியின் ஆயுத எழுத்து, சயந்தனின் ஆதிரை போன்றன இந்தவகையில் குறிப்பிடத்தக்க நாவல்கள். ஆதிரை வடபுல சாமான்ய தமிழ்ச்சனங்களினது வாழ்வு ஈழப்போரால் எப்படிச் சிதைந்தது என்பதை மிக அழுத்தமாக தனிமனிதர்கள், குடும்பங்கள், கிராமங்கள் என ஆழமாக ஊடுறுவி சரளமான புனைவு மொழியில் எடுத்துக் கூறுகிறது.  மலையக மக்களினதும் ஒரு குறிப்பிட்ட காலகட்ட அவலம் சிதைந்த சித்திரமாக நாவலுக்குள் ஊடுறுவிச் செல்கிறது. வடபுல எழுத்தாளர்களின் ஈழப் போராட்ட நாவல்களில் போராட்டத் தீயின் கொடு நாக்கு எப்படி அப்பாவி மலையகச் சனங்களையும் தீண்டியது என்பதை மனச்சாட்சியோடு இந்நாவல்தான் பதிவு செய்கிறது. 1983 இனப்படுகொலையில் மலையகத் தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அது பற்றி முழுமையாகப் பதிவுசெய்யும் ஒரு மலையக நாவலே தெளிவத்தை ஜோசப்பின் நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983.

அதைத் தவிர்த்து இலங்கை இனப் பிரச்சினையின் மலையகப் பரிமாணம் பற்றி பேசும் மலையகத்துக்கு வெளியிலிருந்து வந்த நாவலென்றால் அது ஆதிரைதான். ஈழப் போராட்ட கால வரலாற்று நாவல் என்ற வகையில் சயந்தன் பாதிக்கப்பட்ட எல்லாத் தரப்பாருக்கும் நாவலில் முகமும், குரலும் வழங்கி இருக்கிறார். புலிகளின் போராட்டம் குறித்து சனங்களுக்குள்ளிருந்து எழுந்த மாற்றுக் குரல்களுக்கும் ஒரு இடம் வழங்குகிறார். சந்திரா போன்ற கதாபாத்திரங்கள் இத்தகைய மாற்றுக் கருத்துகளுக்கான குரலை உயர்த்துகின்றனர்.

பாரபட்சமற்றவனாக ஒரு வரலாற்றாசிரியன் இருக்க வேண்டும். வரலாற்றுப் புனைவை எழுதும் ஒரு படைப்பாளியும் பாரபட்சத்திலிருந்து விடுபட்டவனாகவே இருக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல் படை பற்றிய அணுக்கமான வரலாற்றுப் புரிதல் சயந்தனிடம் இல்லாமல் இருப்பதனால் அதை அவர் நாவலில் தவிர்த்திருக்கலாம். ஆயினும் அது ஒரு பெரிய விசயமாக நாவலில் இடம்பெறுவதுமில்லைதான்.

தமிழ் (இந்து) சமூக அமைப்பில் “அனைவரும் சமமே“ என்ற கோட்பாடு இல்லை. சாதிரீதியாக பிளவுண்ட சமூக அமைப்பையே தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது. அது மிகத் தீவிரமானது. சாதியை முன்னிறுத்தி தங்களை மிகத் தீவிரமாக கூறுபடுத்திக்கொண்டது. அது சமூகத்தில் தாழ்ந்த சாதி மட்டத்தில் இருப்பவர்களைத் தீண்டத் தகாதவர்களாக வைத்திருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வடபுலத் தமிழர்கள் மத்தியில் இந்த சாதி உணர்வு மிகவும் கடுமையாகவே ஊறிப் போயிருந்தது. மலையக மக்களையும் சாதி அடுக்கமைவில் மிகவும் தாழ்ந்தவர்களாகவே வடபுல தமிழ்ச் சமூகம் கருதியது. இப்போதும் அதேநிலைப்பாட்டில்தான் இருக்கிறது.

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றிலும் கூட மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமையை இல்லாமல் ஆக்குவதில் வடக்குத் தமிழ் தலைவர்கள் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தார்கள். அந்த வகையில் வடபுலத்தில் மலையக மக்களைப் புறக்கணிப்பதே ஒரு கௌரவமான செயலாகவே பார்க்கப்பட்டது. சாதியத்தை எதிர்த்து எழுதிய கே.டானியல், டொமினிக் ஜீவா போன்ற ஈழத்தின் முதல் தலைமுறை படைப்பாளிகள் கூட மலையக மக்கள் குறித்து போதியளவு கவனமெடுக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இன்று எழுதுகின்ற ஈழத்துப் படைப்பாளிகளில் ஷோபா சக்தி, கோமகன் போன்றவர்களின் சிறுகதைகளில் மலையக கதாபாத்திரங்களை மிகச் சிறு அளவில் காண முடிகிறது. எனினும் இவர்களின் படைப்புகளில் கூட அவர்கள் வேலைக்காரர்களாகவும், குற்றவாளிகளாகவுமே காட்டப்படுகின்றனர். ஷோபாவின் கண்டிவீரன்கதையில் வரும் மையக்கதாபாத்திரமான காந்திராஜன் ஒரு குற்றவாளியாகவே வடக்குக்கு ஒளித்து வந்து சேர்கிறான். அங்கும் பல குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவனாகவே காட்டப்படுகிறான். கோமகனின் அவர்கள் அப்படித்தான் கதையிலும் வடக்கின் இருபாலையிலுள்ள உயர்சாதியான வைத்தியர் வையாபுரியின் வீட்டு வேலைக்காக வேலைக்காரியை நுவரேலியாவிலேயே தேடுகின்றனர். செல்லம்மா எனும் மலையக சிறுமி வேலைக்காரியாகவே இங்கு வந்து சேர்கிறாள். வையாபுரி வைத்தியரின் மகனுடன் தகாத உறவுகொள்பவளாகவும், திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமடைபவளாகவுமே செல்லம்மா சித்தரிக்கப்படுகிறாள். எனினும் அவள் மீது நிகழ்த்தப்படும் சாதியக்கொடுமைகளை கோமகன் நேர்மையாகவே பதிவு செய்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வடபுலப் படைப்பாளிகளின் படைப்புகளில் மலையக கதாபாத்திரங்கள் இதற்கு மேல் எந்த முக்கியத்துவமும் பெறுவதாக நான் நினைக்கவில்லை. அதேநேரம் ஒரு மக்கள்திரளாக மலையக மக்களின் அவலங்கள் மலையகத்துக்கு வெளியே உள்ள படைப்பாளிகளால் கண்டு கொள்ளப்படவுமில்லை.

ஆனால் சயந்தனின் ஆதிரைதான் அந்தப் பணியைச் செய்வதாக நினைக்கிறேன். நாவலின் இரண்டாவது அத்தியாயம் முழுமையாக மலையக வாழ்வை பேசுகிறது. தேயிலைக்கொழுந்து பறிக்கும் பெண்களின் அன்றாடத்துயரை தங்கம்மை மூலம் வெளிப்படுத்துகிறார். தினக்கூலிக்கு கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு மிகப்பெரும் சவாலாக அவர்களை எப்போதும் அச்சுறுத்தக் கூடியது. சரியான மருத்துவ வசதிகளின்மையால் இளவயது மரணங்கள் சம்பவிக்கின்றன. இப்படி ஒரு நாள் தங்கம்மையும் நோயால் இறந்து போகிறாள்.

லெட்சுமணன் குறித்து அவனது தாய் தங்கம்மையின் கனவுகள் லயங்களுடன் சேர்ந்தே எரிந்து போய்விட்டது. சமூகத்தின் மேல்தட்டுக்கு மலையகத்தின் ஒரு தலைமுறை வர வேண்டும் என்ற ஏக்கம் மலையக மக்களின் மனதில் எப்போதும் தேங்கியே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மலையக மக்கள் மலை சுமந்து நின்ற மக்கள் மட்டுமல்ல மலையைச் சுமந்து நின்ற மக்களுங்கூட. ஏனெனில் அவர்களின் துயர வாழ்வு மலையளவு பெரியது.

00000000000000000000

இலங்கையின் இன முரண்பாட்டுப் போர் மற்றுமொரு புதிய அரக்கனாக அவர்களை அழிக்கத் தொடங்குகிறது.  ஆதிரையின் மையக்கதாபாத்திரமான லெட்சுமணன் மலையகத்தைச் சேர்ந்தவன் தான். புலிகள் இயக்கத்தில் அவன் இணைந்து போராடுகிறான். அவனது சகோதரியான மலையகப் பெண்ணான வல்லியாளின் மகள் விநோதினி புலிகள் இயக்கத்தில் இணைந்து ஈழத்துக்காகப் போராடுகிறாள். இப்படி மலையகத் தமிழ் மக்களின் ஈழப்போராட்டத்துக்கான நேரடிப் பங்களிப்பு ஒரு புறமிருக்க அவர்கள் தமிழீழப் போராட்டத்தின் விளைவாக சிங்கள இனவாதிகளால் மலையகத்தில் கொல்லப்பட்டமை, லயங்கள் எரிக்கப்பட்டமை, பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டமை, அகதிகளாக்கப்பட்டமை என அவர்கள் கூட்டாக எதிர்கொள்ள நேரிட்ட இன்னொரு பக்க அவலம் நாவலில் பேசப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் புலிகளால் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்ட போது சிங்கள இனவாதிகள் அப்பாவி மலையகத் தமிழ் மக்களை படுகொலை செய்வது அவர்களின் லயங்களை எரிப்பது, கற்பழிப்பு என ஒடுக்கு முறையை விரிவுபடுத்துகின்றனர். இந்த நிலைமைகளால் மலையகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம்தான் சிங்கமலையினுடையது. தன் பிள்ளைகளான லெட்சுமணனைத் தூக்கிக்கொண்டும், வல்லியாளை அழைத்துக்கொண்டும் சிங்கமலை ஏனைய சனங்களோடு பாதுகாப்புத் தேடி மலைக் காடுகளின் வழியே கனத்த இருளில் அலைந்து திரிகிறான். அவன் அகதியாகி அலைந்து திரியும் போது தன் கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தபடி செல்கிறான். “என் தாத்தனை தோள்ல தூக்கிக்கிட்டு அவரு அப்பா எங்க போறோம்னே தெரியாம நடந்தாரு. இப்பவும் எம் பையன தூக்கிக்கிட்டு எங்க போறேம்னே தெரியாம நான் போறன்…” என சிங்கமலை அங்கலாய்க்கும் போது அந்த மக்களின் கனன்றுழலும் வாழ்வு எப்படி தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது என்பதை வாசகன் உணர்ந்துகொள்கிறான். பொலிஸ் நிலையம் கூட பாதுகாப்பற்றிருப்பதை உணரும் அவன் சிறிது நாட்களின் பின் பிள்ளைகளோடு வடக்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியும் விடுகிறான்.

மலையகத் தமிழர்களைத் தீண்டத் தகாதவர்களாகப் பார்க்கும் யாழ்ப்பாண சாதி மனநிலையும் நாவலுக்குள் நுட்பமாகப் பேசப்படுகிறது. லெட்சுமணன் ஒரு வேலைக்காரனாகவே அத்தார்-சந்திரா குடும்பத்தாரிடம் அவன் தந்தையால் ஒப்படைக்கப்படுகிறான். சந்திராவின் அம்மா அவனை வீட்டுக்குள் எடுப்பதையே தீட்டாக கருதுகிறாள். ஆயினும் அத்தார்-சந்திரா தம்பதிகள் அவனை தன் சொந்தப் பிள்ளையாகவே கருதி வளர்க்கின்றனர். வடபுல படைப்பாளிகளின் வழமையான மனநிலைதான் சயந்தனிடமமும் வெளிப்படுகிறது. ஆயினும் அது நிலையானதாக இல்லாமல் பின்னர் மாறிக்கொண்டு செல்கிறது. நாவலின் சீரான கதையொழுங்கில் அவர்களும்(மலையகத்தாரும்) வடக்கின், ஈழத்தின் குழந்தைகளாக மாறுகின்றனர். அது ஒருவகையில் சயந்தனின் தனிப்பட்ட எதிர்பார்ப்பாக கூட இருக்கலாம்.

சயந்தனின் கதைமொழியில் பிராந்திய மொழித் தொன்மமும், மண்வாசனையும் செழுமையாக இருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழும், மலையகத் தமிழும் என இரண்டு வகையான தமிழ்கள் இந்நாவலில் பேசப்படுகிறது. மலையகத் தமிழ் அதன் முழுமையான இயல்போடு எந்த செயற்கைத் தனமுமற்றிருக்கிறது. அது அந்த மக்களினது வாழ்வின், அவலத்தின் நேர்ப் பிரதிபலிப்பாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையில் ஒட்டி ஊடுறுவியுள்ள அவலத்தை அந்த மொழி வாசகனுக்கு மேலும் நெருக்கமாக்குகிறது. மலையகத் தமிழின் பேச்சோசை எந்தப் பிசகுமின்றி சரளமாக வெளிப்படுகிறது. சயந்தனின் மொழி அந்த நாவலில் வரும் ஒவ்வொரு மனிதனையும் இலகுவில் மறந்துவிட முடியாதபடி வாசகனை நெகிழச் செய்கிறது. அதனால் நாவலில் வரும் ஒவ்வொரு மனிதனையும், அவனது முடிவையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வாசகன் மீண்டும் மீண்டும் பிரதிக்குள் ஊடுறுவுகிறான். அதனை ஒரு புனைவாக அன்றி உண்மைச் சரித்திரமாக ஆழமாக நம்பத் தலைப்படுகிறான். எனினும் நாவல் சில இடங்களில் செயற்கைத் தனமாக விரிந்துகொண்டு செல்வதும் நிகழ்ந்துதான் இருக்கிறது. சில கதாபாத்திரங்கள் நாவலின் கதைக்கு தேவையற்ற விதத்தில் குறுக்கீடு செய்தபடி இருக்கின்றனர். இது நாவலுக்கு ஒரு மேலதிக சுமைதான். ஆனால் கடைசி வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் ஆர்வம் மேலிட வாசகன் அவர்களைப் பின்தொடர்ந்தபடி இருக்கிறான்.

00000000000000000000000

சயந்தனின் ஆதிரையில் மலையக வாழ்வும், அதன் நிலக்காட்சிகளும் ஓரிரு அத்தியாயங்கள் மட்டுமே. ஆனால் முழுமையாக இந்நாவல் ஈழப் போராட்டமும் அப்பாவித் தமிழ்ச் சனங்களையும் பற்றியது. கனன்றுழந்த அவர்களின் வாழ்வு பற்றியது. சுருங்கச் சொல்லப் போனால் சயந்தன் ஆதிரை மூலம் ஆயுத இயக்கங்கள்,அரசாங்கம், சாதி, தேசம் போன்றவற்றின் போலித் தனங்களையும் கற்பிதங்களையும் கிழித்து வீசி மானுடத்தின் அவலத்தை பகிரங்கப்படுத்துகிறார். மிக மிக சுவாரஸ்யமும் விறுவிறுப்புத் தன்மையுடனும் நகரும் கதையும் கதைமொழியும் இந்நாவலுக்குள் உள்ளது. ஈழப் போராட்ட கால மக்களின் வாழ்வைப் பேசும் நாவல்களில் மிக சிறந்த ஒன்றாக எனக்கு இந்நாவலே தோன்றுகிறது. இதன் ஏனைய பரிமாணங்களும் பேசப்பட வேண்டும்.

நன்றி நடு

By

Read More

மருது

எழுத்தாளர் சயந்தன் அவர்களுக்கு,

நான் கடந்த முறை எழுதிய போது அடுத்த முறை தமிழில் எழுதுவதாக சொல்லி இருந்தேன். ஆனால் அதற்குள் இரண்டு வருடம் ஓடி விடும் என்று நினைக்க வில்லை.

சோதி மலர் போல ஒரு பெண்ணை இதுவரை படித்த எந்த புத்தகத்திலும் சந்திக்க வில்லை.

சந்திரா டீச்சரும் தான்.

ஆதிரை 2016 மதுரை புத்தக காட்சியில் தான் வாங்க முடிந்தது.

ஆதிரை வாசிக்க தொடங்கும் முன் ஆறா வடு மீண்டும் ஒரு முறை வாசித்தேன். இரண்டாவது முறை வாசிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் தனியே ஒரு கச்சிதமான சிறுகதை போல இருந்ததாக பட்டது. பகடிகளை அதிகமும் ரசித்தேன்.

பின்னர் தமிழினி அவர்களின் ஒரு கூர்வாளின் நிழலில் வாசித்து ஒரு புத்தக அறிமுகமும் எழுதினேன்.

ஆதிரை வாசித்து கொண்டிருக்கும் போது மாவீரர் தினம் வந்தது. முக நூலில் உங்களுடைய மற்றும் தீபச்செல்வன் அவர்கள் பகிர்ந்த படங்களையும் பார்த்தேன்.

அத்தார் இயக்கம் குறித்து என்ன மாதிரி கருத்து கொண்டிருந்தாரோ அதுவே என்னுடைய கருத்தாக இந்த கணத்தில் இருக்கிறது. தமிழினியின் சுய சரிதை படித்த போது இங்கே அதிமுக கட்சி ‘அம்மா’ கோஷம் போட்டு மற்றவர்கள் ஒரு வேலையும் செய்யாமல் சுத்தி கொண்டிருந்ததை போல இயக்கத்தில் தலைவர் மேல் பாரத்தை போட்டு மற்றவர்கள் ஒதுங்கி கொண்டார்களோ என்று தோன்ற வைத்து விட்டது.

எழுத்தாளர்கள் தாங்கள் எழுத விரும்பிய ஒரு வரியை எழுதவே ஒரு நாவலை எழுதுகின்றனர் என்று யாரோ சொன்னதாக நியாபகம். நீங்கள் ஆதிரையின் கதையை சொல்ல தான் இந்த நாவலை எழுதினீர்களோ என்ற எண்ண வைக்கும் அளவுக்கு ஆதிரை வரும் அந்த சில பக்கங்கள் நினைக்க வைத்து விட்டன. அதன் பின்னர் தான் அட்டை படத்திற்கான அர்த்தம் புரிந்தது.

அன்ரன் பாலசிங்கம், தமிழ் செல்வன், என்று புலிகளின் முக்கிய ஆளுமைகள் பத்தி அத்தார் ஒன்றுமே பேச வில்லையே என்று தோன்றியது. பின்னர் இது இரண்டு தமிழ் குடும்பங்கள் பற்றிய கதையென்றும், கடந்த 40 வருடங்களாக இலங்கையில் தமிழருக்கு நடந்த கொடுமைகளையும் அவர்கள் நம்பிக்கையோடு இருந்த கொஞ்ச காலத்தையுமே ஆதிரை பேசுகிறது என்று புரிந்து கொண்டேன்.

எழுத்தாளர்கள் ஆயிரம் கதா பாத்திரங்களை உருவாக்கி உலவ விட்டாலும் தானும் ஒரு கதா பாத்திரம் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்குமோ?! நீங்கள் நீங்களாகவே சந்திரா டீச்சரை தேடி வருகிறீர்கள். அப்போ சந்திரா டீச்சர் உண்மையென்றால் எல்லாருமே உண்மை தானே?!

ஆறா வடு, பெயரற்றது என்று இரண்டு நூல்களிலும் சாதிய கொடுமைகளை பற்றி எழுதியிருந்தீர்கள். ஆதிரையில் அது மிக வலிமையாக, விரிவாக அத்தார், சந்திராவின் உரையாடல் வழி வெளிப்படுகிறது.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கோ, வேறு நாட்டிற்கோ தப்பி வந்தால் தான் அகதி என்று நினைத்தேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னி நிலத்திற்கு வந்தவர்களை நாவலில் அகதிச் சனம் என்று விளிப்பது கண்டு அதிர்ந்து விட்டேன்.

தேயிலை தோட்டத்தில் இருந்து இரவோடு இரவாக தப்பி வந்து கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ்ந்து, இந்திய ராணுவத்தினர் கையில் அகப்பட்டு இறக்கும் சிங்கமலை, இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படும் நடராசன் என்று இருவரின் மரணமும் ராணுவம் என்பதற்கு தேசம் பொருட்டல்ல அது சீருடை அணிந்த வெறி பிடித்த கூட்டம் என்று எண்ண வைத்து விட்டது.

சங்கிலியண்ணர் வேட்டைக்கு செல்வது அதை லெட்சுமனுக்கு சொல்லி தருவது என்று அந்த பகுதி மிக அருமையாக இருந்தது.

மயில்குஞ்சர் மண்ணின் மைந்தர் இல்லையா!! அந்த பாரம்பரிய அறிவை தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து கொண்டிருக்கிறது.

அத்தனை பெண் கதா பாத்திரங்களும் அம்மா, அக்கா, தங்கை, உடன் படித்த தோழி என்று நன்கு தெரிந்த ஆட்கள் போல இருக்கின்றனர்.

சோதி மலர் தான் நம்பிக்கையின் சின்னம். தற்போது வெளியாகி இருக்கும் Dunkirk பட trailer ல் ‘Hope is a Weapon’ என்று பார்த்த உடன் நான் சோதி மலரை தான் நினைத்துக்கொண்டேன்.

பாம்பு தீண்டி இறந்த பாட்டியின் ஈமச் சடங்கிற்கு சொந்தங்களை அழைத்து வர தனது சொந்த பணத்தை செலவு செய்வது என்று இப்படி மனிதர்கள் இருப்பார்களா என்று யோசிக்க வைத்து பின்னர் சோதி மலர் அப்படித்தான் என்று தோன்ற வைக்கும் ஒரு பெண்.

இயற்கை எனது நண்பன், வரலாறு எனது வழிகாட்டி, வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன் என எங்கோ கேள்வி பட்ட வரிகளில் அத்தியாயங்களில் தலைப்பு இருப்பதை யோசித்தவாறே படித்து கொண்டிருக்கும் போதே அவை யார் பேசியவை எனக் கண்டுகொண்டேன். பின்னர் ஓயாத அலைகள் என்ற இரு வார்த்தைகள் அப்டியே மனதில் உட்கார்ந்து விட்டு எழுந்து போக மாட்டேன் என்று சொல்லி விட்டன.

சாரகன் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் வைகோ, சீமான் போல ஆகியிருப்பார்.

நாமகள், இசை நிலா, ஒளி நிலா போன்ற பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

வெள்ளையனின் அந்த எதற்கும் கலங்காத என்று சொல்வதா இல்லை சமயோசித புத்தி என்று சொல்வதா என்று தெரியவில்லை. தன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பு, நாடு இல்லை என்று ஆன பின் ஒரு வீட்டையாவது கட்ட வேண்டும் என்ற பரிதவிப்பு பின்னர் நண்பனிடம் வெளிநாடு செல்ல என்ன செலவாகும் என்று தொகையை கேட்ட பிறகு எச்சிலை விழுங்கி கொள்வது என்று போர் முடிந்து ஈழத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் பிரதிநிதியாக இருக்கிறார். அவர் உடலில் எஞ்சியிருக்கும் வலி போல ஈழ மக்கள் அனைவர் மனதிலும் உடலிலும் ஒரு வலி இருக்கும் தானே?!

இங்கே எனது மாணவிகள் அ. முத்துலிங்கம் அய்யாவின் கடவுள் தொடங்கிய இடம் மற்றும் பெரும்பாலான சிறுகதைகள், உங்களின் ஆறா வடு, ஷோபா சக்தியின் கொரில்லா, தற்போது ஒரு கூர்வாளின் நிழலில் என்று ஈழ படைப்பாளிகளின் எழுத்தை தொடர்ந்து வாசித்து கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக ஆதிரை வாசிக்க போகிறார்கள். ஓரிரு மாணவர்களும் வாசிக்க தொடங்கியுள்ளார்கள்.

ஆறா வடுவில் கதா நாயகன் சொல்வார், நாட்டுல சுதந்திர போராட்டம் நடக்கிறது என்று தெரியாமல் இதெல்லாம் இப்படி திரியுதுகள் என்று. இங்கே தமிழ் நாட்டில் விஜய், அஜித்திடம் இருந்து காப்பாற்றி ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து வாசிக்க சொல்வதற்குள் மாதங்கள் பல கடந்து விடும்.

நாவலில் காணமல் போன சின்ன ராசு, காணாமல் போகடிக்கப்பட்ட வினோதினி என்று எத்தனை பேரை இந்த போர் தின்று இருக்கிறது. இப்போதும் காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் போராடுவது குறித்து தீபச்செல்வன் முகநூலில் எழுதியவற்றை படித்தேன்.

கிட்ட தட்ட இரண்டு மாதமாக இதை எழுதி கொண்டிருக்கிறேன். இடையில் கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு வேலை மாறி வந்தது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் என்று சொந்த வாழ்க்கையிலும், தமிழகத்திலும் நிறைய நடந்து விட்டது.

நாவலை மீண்டும் ஒரு முறை படிக்கும் முன்னர் உங்களிடம் கேட்க நினைத்த கேள்விகள் பல ஆனால் அவற்றில் இரண்டை மட்டும் இப்போது கேட்கிறேன்.

1. அது ஏன் இயக்கத்தில் இணைந்தவுடன் பெயர்களை மாற்றி வைக்கின்றனர்.

2. அடுத்து என்ன எழுதி கொண்டிருக்கிறீர்கள்?!

தமிழ் நாட்டில் உள்ள எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்து கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுடைய mail id யும் இருக்கிறது, ஆனாலும் பாருங்கள் கடல் கடந்து வாழும் உங்களுக்கு தான் இரண்டாவது முறை கடிதம் எழுதுகிறேன். நீங்கள் முதல் முறை இந்த வாசகனுக்கு பதில் எழுதினீர்களே! அது உங்களை நண்பரை போல நினைக்க வைத்து விட்டது என்று நினைக்கிறேன்.

நன்றி

மிக்க அன்புடன்

மருது…

By

Read More

ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.
நேர்காணல் : கருணாகரன்


1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது?

அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது.
ஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும் பம்பலுமாக எப்பிடிச் சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதனால் அந்த மொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அவுஸ்ரேலியாவின் மெல்பேண் நகரிலிருந்த ஒரு பல்கலைக்கழகம், ஒரு பெற்றோல் ஸ்ரேஷன், ஒரு மக்டோனால்ட்ஸ் உணவகம், ஒரு மாணவர் விடுதி இவற்றைச் சுற்றுகின்ற ஒரு குறுநாவலாக அது உருவாகியிருக்கிறது. கலையாடியை ஆண் மனமும், பெண் உடலும் என்றவாறாகக் குறுக்கிச் சொல்லலாம்.

img_3867

2. இப்படி வெவ்வேறு தளங்களில் புதிய வாழ்க்கையை எழுதுவது அவசியமே. ஆனால், புதிய நாவலில் “ஆண்மனமும் பெண் உடலும் பேசப்படுகின்றன” என்று சொல்கிறீங்கள். இதில் நீங்கள் குறிப்பிடும் பெண் உடல் என்பது தமிழ்ப் பெண்ணை மையப்படுத்துகிறதா? தவிர, பெண்ணுடலை எந்த வகையில் வைத்து நோக்குகிறீங்கள்?

கலையாடியில் ஓர் ஆண்மனம், பெண்ணைப் புரிந்துகொண்டிருக்கிற அரசியல்தான் பேசப்பட்டிருக்கிறது, பெண்ணை வெறும் உடலாக நோக்குவதும், அதனை ஒரு சொத்து என்று கருதி அதில் தனது உரிமையை நிறுவும் அதிகாரமும், பெண்ணின் ஆன்மாவை எதிர்கொள்ளும் துணிச்சலற்று, தோல்வியை மறைக்க அவளின் உடலில் கட்டவிழ்க்கும் வன்முறையும்தான் ஓர் இழை என்றால் அதற்குச் சமாந்தரமாக மறு இழையில் இவற்றையெல்லாம் கேலியாக்கி எள்ளி நகையாடும் பெண் உணர்வும், சமயங்களில் சிலிர்த்துத் திருப்பியடிக்கும் கோபமுமாகப் பிரதி நிறைந்திருக்கிறது. மிகுதியைப் பிறகொருநாளில் பேசுவோம்.

3. “ஆதிரை” பற்றிய உங்களுடைய இன்றைய மனநிலை அல்லது அனுபவம் எப்பிடியிருக்கு?

அதனுடைய அரசியலிலும், இலக்கியத்திலும் சரியையும் நிறைவையும் உணர்கிறேன். என்றாவது ஒருநாள், அதன் இலக்கியத் தரத்தின் பற்றாக்குறையை உணரும் விதத்தில் என்னுடைய சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் ஈழப்போர் தொடர்பான அதன் அரசியல் செய்தியில் நான் என்றைக்கும் மாறுபட்டு நிற்கப்போவதில்லை.

4. அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? எதுவும் மாறுதலுக்குள்ளாகும். மாற்றம் என்பதே அடிப்படையானது என்பதால், ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் தொடர்பான கருத்தியலும் நோக்கும் மாறுபடுவதற்கான, மீள் பார்வைக்குட்படுவதற்கான சூழல் உருவாகும்போது உங்களுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறுதலடையுமல்லவா?

நாவலில் ஒரு சாமானிய மக்களின் பார்வைதான் முதன்மை பெறுகின்றது. வாசகர் அதன் அரசியலை மொழிபெயர்க்கிறார். ஒரு சாமானியனின் வாழ்வும், துயரமும், மகிழ்ச்சியும் அவனுடைய வாழ்வின் அடிப்படையாயிருந்தவை. காலம் மாறுகிறபோது ஆய்வாளர்கள் வேறுவேறு விதமாக மொழிபெயர்க்கலாம். ஆனால் அடிப்படையாயிருந்தவை மாறிவிடப்போவதில்லை. அதனால்த்தான் இலக்கியப் பிரதிகளை காலத்தால் அழியாதவை என்கின்றோம். சரி ஒரு பேச்சுக்கு என்னுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், நாவலில் நான் உருவாக்கிய ஏதோ ஒரு பாத்திரத்தின் அரசியல் மாறிவிடுமா என்ன..? அது நாவலில் செலுத்திய செல்வாக்கு மாறிவிடுமா..?

5. அது (ஆதிரை) வாசக, விமர்சன, இலக்கியப் பரப்பில் உண்டாக்கியிருக்கும் அடையாளம் குறித்த உங்களுடைய புரிதல் அல்லது மதிப்பீடு?

யாரால் எழுதப்பட்டது என்ற ஒரு செய்தியை வைத்தே அது பெருமளவிற்குப் பார்க்கப்பட்டது. அதன்படியே.. புலி ஆதரவு, புலி எதிர்ப்பு.. அல்லது எழுதியவரைப்போலவே குழப்பமானது என்றவாறாக அடையாளப்படுத்தியிருந்தார்கள். ஒரு இலக்கியப் படைப்பை அது வெளியாகிய நாளிலேயே இது புலி ஆதரவு நாவல், எதிர்ப்பு நாவல் என்று வரையறுக்கிற திறனாளர்கள் நம்மிடையில்தான் அதிகமிருக்கிறார்கள் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.

6. ஆனால், புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்பதெல்லாம் அர்த்தமுடையதா? அத்தகைய சொல்லாடல்களும் அடையாளப்படுத்தல்களும் அவசியம்தானா? இத்தகைய அணுகுமுறை எரிச்சடைய வைக்கும் ஒன்றாகவே பலராலும் உணரப்படுகிறது. தவிர, இந்த இரண்டு தரப்பினரும் அடிப்படையில் ஒரு புள்ளியில்தான் நிற்கிறார்களல்லவா?


முதலில் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பான கேள்விகளை எமக்கு நாமே கேட்கும்போது, நீங்கள் சொன்ன தரப்புக்கள், அவற்றின் செயல்முறை பற்றியதான விடயங்களைக் கடந்துவிடுவோம் என்று நினைக்கிறேன். இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் அடக்குமுறையை எதிர்கொள்கிறார்களா..? அவர்கள் இரண்டாம் தரப் பிரசைகளாகக் கருதப்படுகிறார்களா..? சம வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா.. ? இவைதான் பிரச்சினைகளின் அடி நாதம். இவற்றை நோக்கி நம்முடைய உரையாடல் நகர்கின்றதென்றால் ஆதரவு – எதிர்த் தரப்புக்களைப்பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. ஆனால் நாம் ஆதரவு – எதிர்ப்பு, அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோமெனில் எங்களுடைய நேர்மையை நிச்சயமாகச் சந்தேகிக்கத்தான் வேண்டும். மக்களுடைய பிரச்சினை தொடர்பில் எமக்கிருக்கின்ற அக்கறையை கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.

7. இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் “ஆதிரை” அறிமுகமான அளவுக்கு இலங்கையில் அறிமுகம் நிகழவில்லை என எண்ணுகிறேன். இதைப்பற்றிய உங்களுடைய அவதானம் என்ன? இதற்கான காரணம் என்ன?

என்னுடைய முயற்சியில்லை என்பது ஒரு காரணம். பதிப்பாளரும், “நல்ல புத்தகம் அதுவாகப் போகும், நாம் எதற்குத் தனியாக மெனக்கெடவேணும்.. அதனால் வேலையைப் பாருங்க சயந்தன்” என்று வழமைபோல சொல்லிவிடுவார். அவர் சொல்வதுபோலவே நடப்பதால் நானும் தனி முயற்சிகளைச் செய்வதில்லை. இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அறிமுக நிகழ்வுகளையும் புத்தக விநியோகங்களையும் நண்பர்கள் தம் சொந்த முயற்சியில் செய்திருந்தார்கள். அவர்களை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
இலங்கையில் இலக்கிய அமைப்புக்கள், ஒரு பண்பாட்டு நிகழ்வாக பிரதேசங்கள் தோறும், புத்தகச் சந்தைபோன்ற ஏற்பாடுகளை ஓர் இயக்கமாக ஏற்படுத்தினால், பதிப்பகங்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தினால் ஆதிரை மட்டுமல்ல, பல்வேறு புத்தகங்களையும் இலங்கையிற் கொண்டு சேர்க்கலாம். அவ்வாறு ஓர் அதிசயம் நிகழுமெனில் துறைசார்ந்த பதிப்பகங்களும் இலங்கையில் உருவாகும்.

8. நிச்சயமாக. அதற்கான முயற்சிகளை எந்தத் தளத்தில் முன்னெடுக்கலாம்? இதில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு எப்படி அமையக்கூடும்?

முதலாவது சந்தை இல்லை. சந்தை இருந்திருப்பின் இலாப நோக்கம் கருதியாவது அதை யாராவது முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். இப்பொழுது வேறு வழியே இல்லை. வேற்றுமைகளுடன் ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய புள்ளிகளை இனங்கண்டு இலங்கை முழுவதுக்குமான வலைப்பின்னலை உருவாக்குவதுதான் அவசியமானது. தன் முனைப்பு அற்ற நபர்களால் இப்படியொன்றை நிச்சயதாக ஏற்படுத்த முடியும். இன்னொரு விடயம், முற்போக்காச் சிந்திப்பவர்களாலேயே இப்படியான உதாரண அமைப்புக்களைக் கட்டமுடியாதபோது எவ்வாறு வெகுசன அரசியலில் சிறப்பான அமைப்புக்களை உருவாக்க முடியும்.. என்று நம்பிக்கையீனம் எழுகின்றது. நீங்கள் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புப் பற்றியும் ஏதோ கேட்டீர்கள்.. சரி விடுங்கள்.. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்.

9. இலங்கை, இந்தியா, புலம்பெயர் நாடுகள் என்ற மூன்று தளங்களிலும் ஆதிரை எவ்வாறு உணரப்பட்டுள்ளது?

வாசகப் பரப்பில் தமிழ்நாட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் எழுத்துமூல விமர்சனங்கள் நிறைய வந்துள்ளன. எழுத்துப்பரப்பில் இயங்குகிறவர்களில் தமிழ்நாடு, புலம்பெயர்நாடுகளிலிருந்து பலரும் ஆதிரை பற்றிக் கவனப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் அதனுடைய அரசியல் செய்தியை பலரும் மௌனத்தோடு கடந்திருந்தார்கள் என்று உணர்கிறேன். விமர்சனமென்பது அதை நிகழ்த்துபவரின் அரசியல் நிலைப்பாடு, ரசனை மட்டம் போன்றவற்றோடு தொடர்புடைய, அதற்கான முற்றுமுழு உரிமையை அவர் கொண்டிருக்கிற ஒரு வெளிப்பாடு என்ற புரிதலோடு இயங்கினாலும் சில கருத்துக்கள் இதயத்திற்கு நெருக்கமாகிவிடுகின்றன. “காலையில் படிக்கத்தொடங்கினேன், இப்பொழுது நள்ளிரவு ஒரு மணி. முடித்துவிட்டுப் பேசுகிறேன்” என இயக்குனர் ராம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், எழுத்தாளர் இரவி அருணாச்சலம் நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோதே உரையாடியவை அனைத்தும் நான் ரசித்தவை. நாவல் வெளியாகிய ஒரு மாத காலத்தில், நாவல் பயணப்பட்ட நிலங்களுக்குச் சென்று, அவற்றைப் படம்பிடித்து, ஒரு தொகுதிப் படங்களாக ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். அதுவொரு நெகிழ்வான தருணமாயிருந்தது. ஓம்.. ஒரு விருது மாதிரி..

10. தொடர்ச்சியாக யுத்தம் சார்ந்தே அதிகமாக எழுதப்படுகிறது. ஈழத்தமிழர்கள் யுத்தத்தை இனியும் பேச வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? அப்படிப் பேசுவதாக இருந்தால் எந்தப் பகுதிகள் இனிப் பேசப்பட வேணும்?

யுத்தம் எல்லோரையும் பாதித்திருந்தது. எதிர்கொண்டவர்கள், பங்காளிகள் என பாதிக்கப்பட்ட எல்லோரும் அதிலிருந்து வெளியெறுவதற்கான ஆற்றுப்படுத்தல் கிடைக்கும் வரையில் அந்த நினைவுகளால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு சமூகத்தைப் பீடித்திருக்கும் நினைவுகளின் வலிகள் எழுத்தாவதில் ஆச்சரியமெதுவும் இல்லை. ஆகவே இதைத்தான் பேச வேண்டுமென்ற வரையறைகள் தேவையில்லை. ஆயினும் காலப்போக்கில் பின் யுத்தகாலத்தில் ஏற்படுகின்ற சமூக, பொருளாதார அசைவியக்கக் குழப்பங்கள், ஈழத்தில் இனிவரும் எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்துமென்று நினைக்கிறேன்.

நான், மனித அகவுணர்ச்சிகள் பற்றி அவற்றின் உறவுச் சிக்கல்கள், முரண்கள் பற்றியெல்லாம் அதிகம் எழுதப்படவேண்டுமென்று விரும்புகிறேன். ஆதிரையில் யுத்தம் பின் திரையில் நிகழ்ந்துகொண்டிருக்க, அந்தக் கதை மனிதர்களின், அன்பு, குரோதம், விசுவாசம், காழ்ப்பு என அகத்தின் உணர்ச்சிகளை நான் பேசியிருக்கிறேன். ஒருநாள் நாஞ்சில் நாடான் பேசும்போது சொன்னார். ஆதிரையிலிருந்து யுத்தத்தைப் பிரித்தெடுத்துவிட்டாலும், அதற்குள்ளே ஒரு கதையிருக்குமென்று. அதை நானும் ஆமோதிக்கிறேன்.

11. யுத்தம் அரசியலின் விளைபொருள். வாழ்க்கை அதைக் கடந்தது. பெரும்பாலான யுத்தக்கதைகள் அரசியலில் மட்டும் தேங்கியிருப்பதேன்? யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாததன் வெளிப்பாடு இதுவா?

அப்படியில்லை. யுத்தம் எங்களுடைய வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது. எம்முடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் அதனுடன் தொடர்பு பட்டிருந்தன. யுத்தத்திற்கு வெளியே ஒரு வாழ்க்கை இருந்திருப்பின் – நீங்கள் கேட்கிறது நிச்சயமாகச் சாத்தியமாயிருந்திருக்கும். ஆனால் இருக்கவில்லை. இதனை எழுதித்தான் கடக்க முடியும்.

12. ஆதிரையை வாசித்தவர்கள், நாவலில் காண்கிற நிலப்பகுதிக்குச் சென்று அந்தப் பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிலப்பகுதியைச் சார்ந்த நாவல்களுக்கு இப்படி ஏற்படுவதுண்டு. ஜானகிராமனின் நாவல்களைப் படித்து விட்டு கும்பகோணம் தெருக்களில் திரிந்த வாசகர்கள் அதிகம். அதைப்போல, சிங்காரத்தின் நாவல் மதுரைத்தெருக்களில் பலரை நடக்க வைத்தது. மாதவன் கதைகள் கடைத்தெருக்களைப் போய்ப்பார்க்க வைத்தது. ஆதிரை எழுத முன்னும் எழுதிய பிறகும் நீங்கள் அந்த நிலப்பகுதியை எப்படி உணர்ந்தீர்கள்?

ஆதிரையின் பிரதான கதை நிகழும் நிலத்தில், அந்த மனிதர்களோடு நான் தொண்ணூறின் மத்தியில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அந்த மனிதர்களுக்கு முன்னால் ஒரு இருபது வருடத்தையும் பின்னால் ஒரு பத்து வருடத்தையும் புனைவில் சிருஸ்டித்ததுதான் நாவலாகியது. அதற்கு முன்னர் அந்த நிலம் ஒரு நிலமாகவே எனக்குள்ளிருந்தது. பிறகு, இதோ, உங்களோடு உரையாடிக்கொண்டிருப்பதற்கு 3 நாட்களின் முன்னர்தான் சென்று வந்தேன். இப்பொழுது ஒரு முழுமையான சித்திரமாக, ஒரு வாழ்க்கையாக் காட்சிகள் என் கண்முன்னால் விரிந்திருக்கின்றன. புனைவுக் கதாபாத்திரங்கள் கூட, இதோ இந்த இடத்திலேயே அவர்களுடைய கொட்டில் இருந்தது என்று கண்ணில் தோன்றினார்கள். கிட்டத்தட்ட அந்த ஒருநாள் மறுபடியும் நாவலுக்குள் வாழ்ந்ததுபோலிருந்தது.

13. இலக்கிய வாசிப்பும் இலக்கியச் செயற்பாடுகளும் சற்று அதிகரித்துள்ளதாகத் தோன்றுகிறது. எழுதுவோர், வாசிப்போர், வெளியீடுகள், வெளியீட்டகங்கள், உரையாடல்கள், அபிப்பிராய வெளிப்பாடுகள், விவாதங்கள், சந்திப்புகள் எனத் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் உருவாகியுள்ளன. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

அவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் தொகுத்துத்தரும் ஒரே சட்டத்தில் தோன்றும் காட்சியினால்தான் அப்படித் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் வீழ்ச்சியைத்தான் நான் உணர்கிறேன். சிற்றிதழ்களின் எண்ணிக்கை, எழுத்தாளர்களின் எண்ணிக்கை, புத்தகங்களின் எண்ணிக்கை அவற்றையே எமக்கு எடுத்து இயம்புகின்றது. இன்றைக்கு ஈழத்தில் ஒரு இலக்கியப்பிரதியின் ஒரு பதிப்பென்பது 300 பிரதிகள்தான். ஓர் இலக்கிய நிகழ்வுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 20 தான்.

14. ஆனால், இடையிருந்த காலத்தை விட ஒரு தொடர்ச்சியான உரையாடல் நிகழ்கிறதே. இன்றைய வெளிப்பாட்டை அல்லது செயற்பாட்டை வெளிப்படுத்துவதில் சமகால ஊடகம் அல்லது வெளிப்பாட்டுச் சாதனம் சமூக வலைத்தளங்கள்தானே ?

சமூக வலைத்தளங்கள் என்ன செய்தனவென்றால், அது முன்னர் இருந்த தீவிர இலக்கியம் – வெகுஜன இலக்கியம் – இலக்கியத்துடன் ஒரு தொடுசலும் வைத்துக்கொள்ளாத சமூகம் என்ற வேறுபாடுகளை, அல்லது அவற்றுக்கிடையிலிருந்த கோட்டை அழித்துப்போட்டுவிட்டன. அந்தச் சாதகத்தன்மைதான் நீங்கள் சொல்வதைப்போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் கொடுக்கிறது. அதுமட்டுமில்லை. எழுத்தாளர் – வாசகர் என்ற கோட்டைக்கூட இந்த நுட்பம் இல்லாமற் செய்திருக்கிறது. அதாவது இலக்கிய அதிகாரப் பல்லடுக்குத் தன்மையை இல்லாமல் செய்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் நான் முதற் கூறிய பதிலுக்கு வேறு கோணமுண்டு. எத்தனை எழுத்துக்கள் புத்தக வடிவம் பெறுகின்றன.. எத்தனை பேர், உழைப்பைச் செலுத்தி காலத்திற்கும் நின்று பயனளிக்கக்கூடிய எழுத்தை உருவாக்குகிறார்கள். அந்த எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள்.. சமூக வலைத்தளம் அந்தப் பரப்பில் ஒரு துரும்பைத்தன்னும் துாக்கிப்போடவில்லை.

15. புதிய இதழ்கள் எப்படி வரவேணும்? சமூக வலைத்தளங்களும் இணையமும் வாழ்க்கை முறையும் மாறியிருக்கும் சூழலில் சிற்றிதழ்களின் இடம் எப்படி இருக்கப்போகிறது?

சிற்றிதழ்கள் ஒரு சமரசமற்ற நோக்கத்திற்காக, அதை இலக்காகக் கொண்டு தீவிரத்தோடு உருவானவை. அந்த வெளியீட்டாளர்களைக் குட்டிக் குட்டி இயக்கங்களாகத்தான் பார்க்கிறன். மைய நீரோடடத்தில் இல்லாத / விளிம்பு நிலையில் உள்ள / அதிகம் கவனத்தை பெறாத கருத்தியலோ / கோட்பாடோ (அது கலை இலக்கிய கோட்பாடாக இருக்கலாம் அல்லது அரசியல் கருதுகோளாக இருக்கலாம் ) எண்ணிக்கையில் மிகச் சிறிய இலக்கத்தில் உள்ளவர்களால் மிகப்பெரிய உழைப்பை கொடுத்து முன்னெடுக்கப்படுபவை. இன்று நாம் காணும் சகல கருத்தியல்களும் ஏதோவொரு காலத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையுடைய நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டவையே. இது சிற்றிதழ்களின் பொதுவான பண்பு.

ஆனால் இப்போது பத்துப்பேரிடம் படைப்புக்களை வாங்கித் தொகுத்துவெளியிடுகிற மேடைகளாக இதழ்கள் உருமாறிவிட்டன. வெகுசன ரசனையிலிருந்து சற்று உயரத்திலிருக்கிற படைப்புக்களைத் தெரிவதைத் தவிர ஒரு கருத்தியல் சார்ந்த நோக்கு அவைகளுக்கு இல்லை. ஈழத்தில் வெளிவருகிற இதழ்களில், ஞானம், ஜீவநதி, புதியசொல் எல்லாமுமே நாலு கவிதை, ரெண்டு கதை, மூன்று கட்டுரையென்று வாங்கி கவரும் விதத்தில் லே அவுட் செய்து அச்சிட்டுக்கொடுக்கின்ற தொகுப்பு இதழ்களாகத்தான் பார்க்கிறேன்.

ஆனால் என்னைக் கேட்டால் இணையத்தின் வருகைக்குப் பிறகு இப்படித் தொகுப்பு இதழ்களின் தேவை இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்வேன். வெறுமனே அச்சு வடிவத்திற்கு வருவது மாத்திரமே தொகுப்பு இதழ்களின் பாத்திரமாகிவிட்டது. அதுமட்டுமில்லை. அவரவர் இருப்பை பதிவு செய்யும் நோக்கோடு இயங்குவதையும் வருத்தத்தோடு கருதிக்கொள்கிறேன்.

இன்றைக்கும் மைய நிரோட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாத ஏராளமான கருத்தியல்களை முன்னெடுக்க வேண்டியவர்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். நிறைய அசமத்துவ போக்குகள் எங்களைப் பாதிக்கின்றன. இருப்பினும் நாம் நம்புகின்ற அல்லது எமக்குச் சமாந்திரமான கருத்தியல் ஒற்றுமை உள்ளவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற சிற்றிதழ்களின் அல்லது இயக்கங்களின் வெற்றிடம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. வெற்றிடத்தை நிரப்புவது யார்…?

16. மாற்றிதழ்கள் அல்லது மையநீரோட்டம் தவிர்க்க விரும்பும் கருத்தியலுக்கும் அடையாளத்துக்குமுரிய எழுத்துகள், இதழ்கள் இன்று வந்தால், அதன் மீது புறக்கணிப்பிற்கான வசையும் எதிர்ப்புமல்லவா வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக துரோகச் செயலின் வெளிப்பாடு என்ற விதமாக. தமிழகத்தில் சிற்றிதழ்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலைமையும் ஈழத்தில் இன்றுள்ள நிலைமையும் வேறானது. ஆகவே, இதை எப்பிடி எதிர்கொள்வது?

சிற்றிதழ் என்றாலே வசையும் எதிர்ப்பும் கூடப்பிறந்தவைதானே.. அவற்றுக்கு அஞ்சி ‘பங்கருக்குள்’ ஒளிந்துகொள்ளமுடியுமா.. ? ஒரு தெளிந்த நோக்கம் இருந்தால்போதும். சமாந்தரமான கருத்துள்ளவர்களின் பங்களிப்போடு சிற்றிதழ் இயக்கத்தைச் செயற்படுத்தமுடியும். நோக்கம் இல்லையென்றால், அல்லது எதிர்ப்புக்கு அஞ்சினால் சமரசத்திற்குத்தான் உள்ளாக நேரிடும். சமரச இதழ்கள் ஒரு போர்முலாவுக்குள் தம்மைச் சிறைப்படுத்திவிடுவன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், காலச்சுவடு, உயிர்மை எல்லாமுமே ஒரு போர்முலாவிற்குள் இருந்தாலும், அவை தமக்குப் பின்னால் பெரிய பதிப்பகங்களைக் கொண்டியங்குகின்றன. அவர்களுடைய பதிப்பு முயற்சிதான் காலம் தாண்டியும் பேசப்படுமேயொழில இதழ்கள் அல்ல. இது தெரியாமல் ஈழத்து இதழ்களும் அதே போர்முலாவிற்குள் நிற்பது வருத்தம் தருவது.

17. சமூக வலைத்தளங்கள் இலக்கியத்துக்கு எப்படிப் பங்களிக்கின்றன? எவ்வாறான பங்களிப்பை அது செய்ய முடியும்?

இலக்கியம் தொடர்பான உரையாடலை மேலும் விரித்து விரித்துச் செல்ல வைத்ததை சமூக வலைத்தளப் பங்களிப்பின் ஒரு நல்ல விடயமாகப் பார்க்கலாம். ஓர் உரையாடலில் ஆர்வமுள்ள எல்லோரையும் அதில் பங்காளிகளாக்கியது ஒரு குறிப்பிடத்தகுந்த விடயம். அச்சு ஊடகங்களில் அது நடக்கவில்லை. அங்கே ஒரு தணிக்கையிருந்தது. மற்றையது நம்பிக்கையளிக்கக் கூடிய பலர் தம்மைச் சுயாதீனமாக வெளிப்படுத்திக்கொள்கிற வெளியாக அது இருந்தது. அது முக்கியமானது. தவிர இலக்கியச் செயற்பாடுகளை, ஆர்வலர்களை அது ஒருங்கிணைக்கிறது. திரட்டுகிறது. அதேவேளை சமூக வலைத்தளங்களில் ஒரு ‘திணிப்பு’ இருக்கிறது. மேலோட்டமான முன் கற்பிதங்களை இது ஏற்படுத்திவிடுகிறது.

அதனால் சமூக வலைத்தளங்களில் உலாவுகிற போது மூளையை அவதானமாக நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டியுள்ளது.

18. தமிழிலக்கியத்தின் ஆதிக்கம் அல்லது செல்வாக்கு இன்னும் இந்தியாவிடம்தான் உள்ளது என்று இந்திய எழுத்தாளர்கள் நம்பும் நிலை உண்டென்று கூறப்படுவதைப்பற்றி?

நிச்சயமாக, அது தமிழ்நாட்டை மையப்படுத்தியுள்ளதாகத்தான் கருதுகிறேன். புனைவு என்ற தளத்தில், ஈழப்பிரதிகள், தமிழ்நாட்டின் கவனத்தைப் பெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அப்புனைவின் கதைக்களம் மற்றும் அனுபவங்கள், அவர்களுடைய அனுபவப்பரப்பிற்கு அப்பால் நிகழ்வதால், இந்தக் கவனம் நிகழ்கிறது. அல்லது, ‘அடிபட்ட இனம்’ என்ற கழிவிரக்கத்தாலும் கூட இந்தக் கவனம் ஏற்படுகிறது. இவ்வாறான கழிவிரக்கத்தினால் எனது படைப்பொன்று தமிழகத்தில் கவனத்திற்குள்ளாகுமானால் அந்நிலையை நான் வெறுக்கிறேன்.

மேற்சொன்னதைத் தாண்டிய ஒரு கரிசனை, ஈழ இலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு உள்ளதா என்பது கேள்விக்குரியது. ஏனெனில் இன்றைக்கும் ஈழத்தில் ஒன்றிரண்டோ ஐந்து ஆறோ புத்தகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் எதைப்பற்றியாவது தமிழகத்திற்குத் தெரியுமா.. நாங்களாகக் காவிக்கொண்டு போனாலேயன்றி தமிழகம் தானாக அவற்றை அறிந்துகொண்டிருக்கிறதா..

ஆக அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

அதே வேளை, கலை இலக்கியம் சார்ந்த கோட்பாட்டு தளத்தில் ஈழத்தின் பங்களிப்பு எந்தளவு துாரத்திற்குத் தாக்கம் செலுத்துகின்றது என்பதுவும் கேள்விக்குரியதே. புதுப்புதுச் சிந்தனைகள், புதிய கருத்தியல்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்புக்கள் என ஈழத்தில் ஏதாவது நிகழ்கிறதா? முன்பு அவ்வாறான ஒரு சிந்தனைச் செல்நெறி மரபாகவே இருந்திருக்கிறது. இன்று இல்லை. இனிமேலும் அதற்கான நம்பிக்கையேதும் தென்படுகிறதா.. ?

19. முன்பிருந்த சிந்தனைச் செல்நெறி பின்னர் இல்லாமல் போனதேன்? அத்தகையை சிந்தனை எழுச்சி எவ்வாறு சாத்தியமாகும்?

பல்கலைக்கழகத்தின் சீரழிவும் ஒரு காரணமென்று நினைக்கிறேன். முன்பென்றால் அங்கிருந்தவர்கள் அதைச் செய்தார்கள். முக்கியமாக அவர்கள் பல்கலைக் கழகம் அல்லாத சமூகத்துடனும் ஊடாடினார்கள். சிந்தனைகளை வெளியே கடத்தினார்கள். இன்று சமூகத்திற்கும் பல்கலைக் கழகத்திற்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை. அது தனியே வேலைக்கு ஆட்களைத் தயார்செய்துகொண்டிருக்கிறது.

20. உங்களுடைய புதிய நாவல்களின் அரசியல் என்னவாக இருக்கும்? அவற்றின் களம் எது?

நாவல்களில் என்ன அரசியலென்று நான் சொல்லவேண்டுமா? விமர்சகர்கள் தான் அதைக் கட்டுடைத்துக் கூற வேண்டும். ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் புனைவுக்கு ஊடாக அரசியல் இலக்கொன்றை நோக்கி வாசகர்களை அழைத்துச்செல்லும் மேய்ப்பன் அல்ல. புனைவை நான் அவ்வாறே புரிந்தும் வைத்துள்ளேன். எனது நாவல்கள், அதிகாரமற்ற சனத்தின் பார்வையில், அவர்களைச் சூழவுள்ள சமூகத்தையும் அரசியலையும் பார்ப்பதுவே. நாவலோட்டத்தில் எனது சொந்த அரசியலுக்கு குறுக்கீடுகள் வருமானால் அவற்றை நான் தணிக்கை செய்வதில்லை.
ஓம். புனைவில் பாத்திரங்களுக்கு அரசியல் இருக்கும்தான். பாத்திரங்கள் அரசியலைப் பேசும்தான். ஆனால், அவ்வரசியலுக்கு மாற்றான கருத்துக்களை கொண்ட பாத்திரங்களும் இயல்பிலேயே அங்கிருக்கும். அப்பாத்திரம் தனக்கான நியாயத்தைப் பேசுவதற்கான வெளியும் அங்கிருக்கும். அதுதானே அப்பாத்திரத்திற்கு நான் செய்கின்ற நியாயம். ஒன்றுக்கொன்று எதிரான பல்வேறு நிலைப்பாடுகளை பிரதிபலிக்க கூடிய ஒரு கதைக்களனை நான் என்னுடைய படைப்புக்களில் உருவாக்கியுள்ளேன். ஒரு சமூகத்தின் குறுக்குவெட்டு அப்படித்தானேயிருக்கும்..
மற்றும்படி எனக்கு என்னுடைய அரசியலை நிறுவும் ஒரு தேவை இருக்குமானால், நிச்சயமாக நான் அதை ஒரு கட்டுரையூடாகச் சொல்லவே விரும்புவேன். நான் தற்போது இயங்கும் நாவல் வடிவத்தின் ஊடாக, ஒரு பெரும் அனுபவத் தொற்றை வாசகருக்குள் நிகழ்த்துவதே என்னுடைய பணி. ஒருவேளை அந்த அனுபவத்திற்கூடான சிந்தனை அவருக்கு ஒரு அரசியல் தெரிவை ஏற்படுத்தக்கூடும். மக்கள் சார்ந்த அரசியலாக அதுவிருக்கும் என்று நம்புகிறேன்.

21. இலங்கையின் எதிர்கால அரசியல் குறித்த நம்பிக்கைகள்?

நம்பிக்கையளிக்கக் கூடியதாக எதையும் உணரமுடியவில்லை. அதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம், நம்பிக்கையைத் தொலைத்த சமூகமாக இருக்கவேண்டியதுமில்லை.

அரசியற் சிந்தனைகளை முழுநேரமாகச் செயற்படுத்திவரும், ஓர் இளைய தலைமுறையைக்காணுகிறேன். சமூகம் அவர்களைத் தாங்கிக்கொண்டால் மட்டுமே, அவர்களால் தொடர்ந்து இயங்க முடியும். அந்த நிலைமை தோன்றும்போதே அரசியல் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் மாறும். இன்று நம்மிடையில் உள்ள அரசியல் தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அரசியலை பொழுதுபோக்காகச் செய்பவர்கள், தங்களுடைய ஓய்வு காலத்தில் செய்பவர்கள், பகுதி நேரமாகச் செய்பவர்கள், அல்லது தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்பவர்கள். இவர்களுடைய தலைமையில் இயல்பாகவே அரசியலின் தார்மீக அறம் இல்லாமற் போய்விடுகிறது.
எங்களிடையே ஒரு சாமானிய மனிதன், கட்சியொன்றின் கடைசி உறுப்பினராகி, படிப்படியாக மக்களுடைய செல்வாக்கைப் பெற்று, தலைவனாகும் சந்தர்ப்பமேதாவது உள்ளதா.. ? ஏதாவது ஒரு கட்சி பிரதேசவாரியாக தன்னுடைய கட்சிசார் நபர்களைக் காட்சிப்படுத்தியுள்ளதா..? பொதுசனத்தில் ஒருவர் ஒரு கட்சியில் அதன் கொள்கைகளைப் பார்த்து இணைந்து செயற்படுகிற நிலைமை உண்டா..? கட்சிகளின் தலைமைகள் உருவாகுவதில், கட்சியின் கடைசி உறுப்பினர்களின் பங்கு என்ன..? அதிலேதாவது ஜனநாயக வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா..?
இவற்றுக்கெல்லாம் ஆம் என்ற பதில் கிடைக்கும்போதே, கிராமிய மட்டங்களிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாகும் வாய்ப்புத் தோன்றும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசியல் தலைமைகள் உணரத்தொடங்கும். அதுவரை தமிழ் அரசியலின் தலைமைத்துவம் அதன் சரியான அர்த்தத்தில் வெற்றிடமாகவே இருக்கும்.

22. அரசியலினால் பெரும் இழப்புகளையும் வலிகளையும் அனுபவங்களையும் சந்தித்த மக்களின் அரசியல் தலைவிதி இப்படி இன்னும் இருளில் நீள்வதற்கான காரணம் என்ன?

அரசியலினால் பெரும் இழப்புக்களையும் வலிகளையும் சந்தித்தவர்கள் அரசியல் தலைமைக்கு வரும்போது இந்தத் தலைவிதி மாறக்கூடும். அவர்களால்தான் உடனடித் தீர்வுகள் – நீண்டகாலத் தீர்கள் என்ற அடிப்படையை உணர்ந்து செயற்படமுடியும். இன்றைக்கு இருக்கிற அரசியல் தலைவர்களில் எத்தனைபேர், யுத்தத்தை நேரடியாக அனுபவித்தவர்கள்.. அதற்குள்ளே இருந்தவர்கள்..?

23. யுத்தம் முடிந்த பிறகும் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தமிழ்ச்சமூகத்தினர் விருப்பமாக இருப்பதேன்?

பொருளாதாரமும் ஒன்று என்பதை மறைக்கவேண்டியதில்லை. ஆனால் நாட்டுக்குள்ளேயே தன்னிறைவு அளிக்கக்கூடிய இயல்பான பொருளாதார வளர்ச்சி குலைந்துபோனதிற்குப் பின்னால் இனப்பிரச்சினையும் யுத்தமும்தான் இருந்தன என்ற உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். மூளை சார் உழைப்பாளராக வருவதற்கான இயல்பற்ற அதேவேளை ஒரு மனிதப்பிறவியாக மற்றெல்லோரையும் போல வாழ விரும்பும் நியாயத்தைக்கொண்ட ஒருவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்றால் அதற்குரிய தொழில்வாய்ப்புகளும், துறைகளும் பரவலாக உருவாக்கப்படவேண்டும். வாழ்வதற்கு உரியதாக பொருளாதாரச் சூழலை மாற்றவேண்டும். அதை அரசும், அரச அலகுகளும்தான் செய்யவேண்டும். இன்னொரு விடயம், மருத்துவர்களாக, பொறியியலாளர்களாகவும், கல்வியாளர்களாகவும் பலர் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களையும் உங்கள் கேள்விக்குள் உள்ளடக்கியிருக்கிறீர்களா..?

24. தாயகம் திரும்புவதைப்பற்றிய புலம்பெயர்ந்தவர்களுடைய கனவும் நிஜமும் என்ன?

நான் ஒரு புலம்பெயர்ந்தவன் என்றவகையில் ஒருபோதும், தாயகத்து வாழ்வை ஒரு முடிந்தபோன கனவாக நினைத்து அழுதது இல்லை. கனவை நிஜத்தில் தொடரும் சூக்குமம் தெரிந்தவனாக இருக்கின்றேன். அவ்வளவே!

00
நேர்காணல் : கருணாகரன்

By

Read More

கருப்பையா பெருமாள்

கதாசரியர்கள் தங்கள் அனுபவங்களை ஆசைகளை நிராசைகளை வாழ்வனுபவங்களை தனது பாத்திரங்களின் வாயிலாக வாசகனின் வாசகஉலகிற்கு கடத்துவதே முதலான வேலை. அப்படி கடத்தப்படும் விஷயங்கள் வாசகனுக்கு விருப்பமாக இருந்தால் அந்த நாவல் வாசகனை ஈர்த்துவிடும்.சிலநேரம் வாசகனின் வாழ்வனுபவங்களின் சிறு தெரிப்பு படிக்கும் கதை மாந்தரின் அனுபவங்களோடு ஒன்றியிருந்தால் அந்த நாவல் நமது மனதிற்கு நெருக்கமாக மாறிவிடுவதை அவதானிக்கலாம்.
பள்ளி நாட்களில் கற்பனை மனவோட்டத்தால் சாண்டில்யனின் ஜலதீபம் யவனராணி நா.பாவின் மணிபல்லவம் பிடித்தது.கல்லூரி புகுமுக வகுப்பில் ஜெகசிற்பியன் அகிலன் பிடிக்க ஆரம்பித்தது.பட்டவகுப்பில் இந்திய பொதுவுடமை கட்சி உறுப்பினன் ஆனபின்பு மணிக்கொடி கால ஆசிரியர்களும் ஜெயகாந்தனும் நெருக்கமானார்கள். அஞ்சல்துறை பணியில் சேர்ந்தபின் பாலகுமாரன் சிவசங்கரி அனுராதா ரமணன் ஹெப்சிபா ராகிரங்கராசன் சுஜாதா போன்றவர்கள் பிடித்துப்போனார்கள்.
சமீபத்தில் நான் படித்த நாவல் சயந்தன் அவர்களின் ஆதிரை. நாவலாசிரியரின் சில அனுபவங்கள் எனது சொந்த அனுபவங்களின் அடையாளங்களை கொண்டிருப்பதால் எனது மனதிற்கு நெருக்கமாகிவிட்டது.மலையக தமிழர்களின் வாழ்வு துயரங்களையும் சந்தோசங்களையும் சொல்லிச்செல்வதால் எனது சொந்த வாழ்வியல் அனுபவங்களை காண்கிறேன்.

எனது தகப்பனாரும் தனது இளமைக்காலத்தில் தேயிலைத்தோட்ட கூலியாக பீர்மேடு தேவிகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டாராம். சிறிது காலம் சென்ற பின் வால்பாறை பகுதியில் வாட்டர்பால்ஸ் தேயிலைத்தோட்டத்திற்கு பணிக்கு சென்றுள்ளார்.சிங்கமலை போன்றே வாழ்விட மாற்றங்களை எதிர்கொண்டார்.ரொட்டிக்கடை என்ற பகுதியிலிருந்து வாட்டர்பால்ஸ் தோட்டத்திற்கு அப்பாவின் தோள்களில் அமர்ந்து பயணித்ததை சிங்கமலையின் தோட்டம் மாறிய காட்சி ஞாபகப்படுத்துகிறது. வல்லியாளைப்போன்றே எனது தமக்கையும் என்னை அருமையாக கவனித்துக்கொண்டது ஞாபகம்.

நாவலின் செல்வியின் வாயிலாக பலவிஷயங்களை ஆசிரியர்பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது.பாண்டிங் சென்று எதிரியான இலங்கை அரசோடு பேசிய புலிகள் ஏன் சகோதர போராளிகளோடு பேசவில்லை என்பது ஞாயமாக தோன்றுகிறது.1983 கலவரத்திற்குப்பின் உமாமமகேஸ்வரன் பாலகுமாரன் போன்ற எதிர்நிலைப்போராளிகளோடு புலிகள் பேசவே இல்லை எதிராக அவர்களை அழீப்பதில் இன்பம் கண்டதை ஜிரணிக்கமுடியவில்லை.

அத்தார் வாயிலாக ஈழாத்தமிழகத்தில் காணப்பட்ட ஏற்ற தாழ்வுகள் சகமனிதர்களின் உரிமைகளை அநியாயமாக பறிப்பது போன்றவிஷயங்கள் சொல்லாப்படுவது கவனிக்கத்தக்கது.”துவக்கினால் ” தான் ஈழத்தில் சாதீய வேற்றுமை களையப்பட்டதை புரிந்து கொள்ள முடிகிறது.

சுனாமி பேரழிவில் புலிகளின் உதவி விதந்தோதப்பட்டுள்ளது அருமை.

கடைசியாக செல்வி ஆத்தார் இறப்பு நமது கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும்.

நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மனதிற்கு நெருக்காமான நாவலைப்படித்த மகிழ்வு.

By

Read More

× Close