நிறைவான வாசிப்பு – சரவணன் மாணிக்கவாசகம்

அஷேரா நாவலை ஒரே கதையாகப் படிக்கலாம், இல்லை கதைகளின் தொகுப்பாகவும் படிக்கலாம். அருள்குமரன் காமத்தை எதிர்கொள்ள முடியாது, தற்கொலை செய்வதற்குப் பதிலாக இயக்கத்தில் சேர்கிறான்.

அவனது அம்மாவின் கதை ஒரு தனிக்கதை. ஒருவகையில் அருள்குமரனின் நிலைமைக்கு அவளே காரணம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஜிபுல்லாவின் கதை. பயந்து நடுங்கும் அற்புதத்தின் கதை. கனவுக்குமிழி உடைந்து குடும்பவன்முறையை சகித்துக் கொள்ளும் அபர்ணாவின் கதை. அனாதையாய் பல இன்னல்கள் அனுபவித்து பின் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அவந்தியின் கதை. சின்னக் கதைகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இத்துடன் தமிழீழம் கண்டிப்பாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் இருந்த பேரழிவுக்கு முந்திய ஈழத்தின் கதையும்.

போரில் நடக்கும் வன்முறையும், அழிவுகளும் கதை முழுதும் வருவது போல் காமமும் கதை முழுதும் வருகிறது. அருள்குமரன் அம்மாவின் குற்றஉணர்வு கூடிய காமம், அருள்குமரனின் கயிறறுபட்ட காளையெனத் துள்ளிக்குதிக்கும் காமம், அபர்ணாவின் விட்டுவிலக முடியாத காமம், நஜிபுல்லாவின் வன்முறைக்காமம், அவந்தியின் கண்ணாமூச்சிகாமம் என்று இத்தனை இருந்தாலும் உங்களைக் கவரப்போவது அற்புதத்தின் கானல்நீர் காமம் தான்.

புனிதம் என்ற வார்த்தையில் ஆசியர்களுக்கு மரியாதை அதிகம். ஒருவரின் புனிதம் அடுத்தவருக்கு சாதாரணம் என்பதை நாம் கவனத்தில் கொள்வதில்லை. சயந்தனின் இந்த நாவலில் புனிதவிக்கிரங்கள் எதுவும் இல்லை. அஷேராவே ஆண்தெய்வத்தால் நீ தெய்வமில்லை என்று சொல்லப்பட்டு புனிதத்தை இழந்தவள் தான்.

அருள்குமரனே பிரதான கதைசொல்லி. வலி மிகுந்த பால்யம். “அப்பன் வெளிய போய் கொஞ்சநேரம் நில்லுங்கள்” என்ற குரல் அவனது மூச்சு நிற்கும் வரை கேட்கப்போகிறது. அதனுடன் சேர்ந்து ஓலமிடும் பலகுரல்கள். அருள்குமரன் ஆராதனாவிடம் கிடைத்ததை அபர்ணாவிடம் தேடுகிறான். அவன் யாரென்பது தெரிந்தால் அவனுக்கும் அற்புதத்துக்குமான உறவு ஒரு கவிதையாய் விரிவது தெரியும்.

கதாபாத்திரங்கள் ஆளுக்கொரு கதை சொன்னாலும் நாவல் கட்டமைப்பு குலையாது இருக்கிறது. சின்ன வாக்கியங்கள் பெரியஅர்த்தங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கின்றன. கதாபாத்திரங்களின் குரல்களுக்கு நடுவே ஆசிரியத்தலையீடு எதுவுமே இல்லை. ஒருவர் தமிழீழத்திற்காக உயிர் கொடுப்பேன் என்றால் இன்னொருவர் மயிர் தமிழீழம் என்கிறார். எண்ணிக்கையில் அதிகமான இயக்கங்கள் தன்இனத்திற்குள்ளேயே வெட்டிசாயாமல் பொது எதிரியை மட்டும் கணக்கில் வைத்துக் காரியத்தில் இறங்கியிருந்தால்… சயந்தனின் செறிவான மொழிநடை, பலமடிப்புகள் கொண்ட கதையை எளிதாகச் சொல்லும் யுத்தி, உணர்வுகளின் அலைகள் கரையைத் தட்டித்தட்டி சோர்ந்து மீள்வது போல் காமம், பாலைவனத்தில் சுனையாய் கண்ணுக்குத் தெரிந்து கைக்கப்படாமல் போவது என்று பலஅம்சங்களினால் நாவலைவிட்டு வெளியே வரவிரும்பாது அதற்குள்ளேயே கிடக்கும் மனம். நிறைவான வாசிப்பைத் தரும் நாவல்.