மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன்

அறிமுகம்

சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.

முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக கேள்வியுற்றதன் பின்னர் நான் அந்த நூலினை வாசிப்புக்காக தேட முற்பட்டதன் காரணம் “ஆதிரை” என்ற பெயர் என்னுள் ஏற்படுத்தியிருந்த மயக்கமே. இதை பிரமிள் அவர்களின் மொழிதலில் குறிப்பிடுவதானால் “இடையறாத உன்பெயர் நிலவிலிருந்திறங்கி என்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு.” எனலாம். ஆனாலும் ஆதிரைக்கான எனது காத்திருப்பின் நாட்கள் சுமார் ஐந்து வருடங்கள். ஆனால் அஷேராவுக்கான எனது தேடல் அந்த பிரதி வெளியிடப்பட்டு முப்பது நாட்களை கூட தாண்டியிராமலேயே கையில் கிட்டிற்று. நன்றி சயந்தன் அவர்கட்கு.

உண்மையை கூறுவதாயின் ஆதிரை மீதான “பெயர் மயக்கங்கள்” இந்த நாவலின் மீது எனக்கிருக்கவில்லை. எனினும் ஆதிரையின் தொடர்ச்சியாகவே இந்த பிரதி மீதான வாசிப்பு செயன்முறையினை நான் நிகழ்த்தியிருந்தேன். ஏனெனில் ஆதிரை நாவலின் முடிவு என்னை “யுத்த சூன்ய பிரதேசம்” ஒன்றுள் தள்ளியிருந்தது அல்லது நான் புத்தனாகியிருந்தேன்.

போரும் பிரதிகளும்.

இலங்கையின் தமிழ் எழுத்தாளர்கள் அல்லது புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், போரினை தவிர வேறு எதனையும் எழுத வக்கணையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டினை தமிழகத்தின் சில தரப்புக்களிடமிருந்தும்; ஏன் “ஈழத்தின் மாற்றுக்கருத்தியல்” தரபுக்களிடமிருந்தும் நாம் கேட்கக்கூடியதாக இருக்கிறது. என்னப்பொறுத்தவரை “இதுவோர் காலத்தின் கொடுப்பினை” என்றே கூறுவேன். பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும். போர்க்காலமும் அதனை பின்தொடர்ந்து வருகின்ற பின்போர்க்கலமும் ஈழத்து எழுத்தாளர்களிடம் தந்திருப்பது “அமுதசுரபி” போன்ற அள்ள அள்ள வற்றாத “கற்பனை” வார்ப்பன்று. மாறாக ஈழத்து பேனாக்களிடம் இருப்பது யதார்த்தப் பானைகளே. வரலாற்றின் துயரமென்பது யாதெனில் பாலஸ்தீன கவிதைகளையே இன்று வரைக்கும் ஆகச்சிறந்த போரியல் இலக்கியமாக கொண்டாடும் இதயங்கள் ஈழத்து போரியல் படைப்புக்களை எள்ளுவதும் அவற்றினை புறக்கணித்து விடுவதுமாகும்.

ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் போருக்கான அடிப்படை காரணிகள் இன்றும் அதே நிலையிலேயே இருக்கின்றன. மேலும் பின் போரியல் கால விளைவுகளிலிருந்து இன்னமும் விடுபட முடியாத ஒரு சமூகமாகவே ஈழத்து தமிழ் சமூகம் இன்றும் வாழ்கிறது. எனவே போரினையொட்டியும் அல்லது அதனை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை பேசுபொருளாக கட்டியம் கூறியபடியும் இன்னும் நூறு அல்லது ஆயிரம் பிரதிகள் ஈழத்திலிருந்து எழும்.

உலக வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த நிகழ்வுகளின் வரலாற்று சுருக்கங்களாய் தூபிகளும் நினைவுச்சின்னங்களும் எம்முன்னே எழுந்து நிற்கின்றன. அவற்றுக்கு இருக்கும் “சனநாயக வெளிப்படுத்தல்கள்” ஈழத்தின் படைப்புக்களுக்கு இல்லையா என்ற கேள்வியுடன் இந்த படைப்பின் மீதான எனது வாசகர் குறிப்பினை எழுதத்தொடங்குகிறேன். அதற்கு முன்னம் ஒரு கொசுறு செய்தி இன்றும் கூட “ஹாலிவுட்டில்” இரண்டாம் உலகப்போர் அல்லது அதற்கு முந்தைய போர்கள் குறித்து நிறைய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றுக்கான விமர்சனங்கள் கூட எழுதப்படுகின்றன.

இருட்டும் காமமும்

சங்ககாலத்தில் இருந்தே ஏன் அதற்கு முன்பிருந்தே இன்னும் சிறப்பாக கூறப்போனால் இருளும் காமமும் ஒன்றையொன்று சார்ந்து வாழும் பிறவிகளாய் இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கின்றன. காமம் அல்லது பாலியல் சார் வினைகள் ஒளித்து பேண வேண்டிய ஒன்றாகவே கற்பிதம் செய்யப்பட்டு வருவதை நாம் காணலாம். அதனாலேயே இருளை அதன் குறியீடாக ஆக்கி கொண்டனர் போலும்.

இந்த பிரதியிலும் காமமும் இருட்டும் படிமங்களாகி பிரதி முழுவதும் விரவிக்கிடப்பதனை நாம் காணலாம். இதனை இன்னொரு விதமாக கூறினால் பகலின் வெளிச்சத்தில் குருடர்களை போல வரும் பாத்திரங்களின் நிஜமுகம் இருட்டில் தெளிவாக தெரிகின்றது. ஒவ்வொரு பாத்திரத்தினதும் உளவெம்மைகளை தணிக்கும் மருந்தாக இருள் இருக்கின்றது.

அருள்குமரனை பொறுத்தவரை அம்மாவின் ‘மறைகாமமும்’ அமலி அக்கா மீதான “இருட்தேடல்களும்” அவனின் மனச்சிதைவிற்கு மூல காரணங்களாகின்றன. ஆனாலும் அவனின் இந்த “முறைசாரா” அனுபவங்களே முதலும் இறுதியுமாய் அவன் அனுபவித்த ஆரதனாவுடனான காமத்தை “ஓசோவின் காமமாக்கியது”

“மனம் அலைவற்றிய ஒரு கடலாயிருந்தது. அசைவற்ற நிசப்தம். அன்றைக்கு ஆராதனா பரிசளித்த காமம், கோவிலின் நிவேதனம்போல் இருந்ததென்று அருள்குமரன் குறிப்பிடுகிறான்”(பக்-31)

எனினும் இந்த குற்றவுணர்வு மீதான தொடர்ச்சியான அருட்டல்களே அவனின் வாழ்வினை திசை மாற்றியதுடன் அவனை “மகத்தான காரியங்கள் ” செய்யும் ஒருவனாகவும் மாற்றி விடுகிறது.

தாயகக்கனவினை சுமந்த அற்புதம் போன்ற இளையோரின் பயணங்கள் இருளிலேயே தொடங்கி இருளிலேயே முடிந்து போயின. இது காலத்தின் மீதான எமது வன்மம் நீடித்து நிலைப்பதற்க்கான ஏதுவாகின்றது.

“அற்புதம் இரவை சந்தேகத்தோடு பார்த்தான். அதற்கு ஆட்களை காணாமல்போகச் செய்யும் வல்லமையிருந்தது’.(பக்-92)

தொடர்ந்த இரவுகளில் தன்னை தொலைத்த ஒருவனின் வாழ்வு, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வரும் விளம்பரப்பெண்களின் உடல்களை இரசிப்பதனூடே காமத்துக்கு வடிகால் தேடும் ஒன்றாக நீள்கிறது.

போரியல் நிலத்துக்கு அப்பாற்பட்டதான அபர்ணாவின் அன்றாடங்களின் இரவின் மீது வீழ்கிறது ‘அரங்கன்’ எனும் கல். அந்த கல் வீச்சு தன்மீது ஏற்படுத்திய காயங்களுக்கு களிம்பாக நரகமாய் தோன்றும் இரவுகளில் தன்னையே பலியாக்குகிறாள் அவள். இது பெண்ணுடல் மீது பாரம்பரியமாக ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சான்றாகும்.

“அவருடைய அருவருப்பான கதையை அப்பொழுதே நிறுத்துவதற்கு எனக்கு ஒரேயொரு வழிதான் தெரிந்திருந்தது. பிறகு அதுவொரு நரக இரவு”(பக்-149)

இரவும் பாலியலும் இந்த மூன்று பாத்திரங்களை அலைக்கழித்து வாழ்வின் அந்தம் வரைக்கும் துரத்தி விடுவதாகவே கதையின் மையநீரோட்டம் இருக்கிறது. ஆனால் இரவின் எதிர்வினைக்கான மூலவினைகள் பகலிலேயே நிகழ்கின்றன.

அருள்குமரனின் வாழ்வில் அச்சத்தையும் ஆற்றாமையினையும் தொடராக நீட்டி செல்லும் குண்டுவெடிப்பு நிகழ்வதும் ஒரு பகலிலேதான்; அற்புதம் தனது பெயரினை இன்னொரு பெண்ணுடன் இணைத்து காண்பதும் ஒரு பகலில்தான். இதனை விட அபர்ணாவும் பகலில் தன்மீது எய்யப்படும் அம்புகளுக்காய் இரவில் தன்னையே இரையாக தருகின்றாள்.

இவ்வாறாக பகலும் இரவும் வெறுமனே பொழுதுகளாய் இருக்க காமமே மூலவிசையாகி இந்த மூன்று பாத்திரங்களினதும் காலத்தின் தேரினை ஓட்டிசெல்கிறது.

அஷேராவும் ஏகெரி ஏரியும்

பொதுவாக நாடற்ற மக்களின் கதைகளில் காணக்கூடிய பொதுவான அமைப்பென்பது தொன்மங்கள் குறித்த கதையாடல்களாகும். இங்கே ‘அஷேரா’ என்பதும் ஏதேன் மக்களின் வழிபாட்டுக்குரிய ஒரு பெண்தெய்வமாகும். அது பார்வைக்கு பயங்கரமாக இருந்த போதிலும் கூட குழந்தைகளுக்கு பாலூட்டுவதாய் காட்டப்படுவதனூடே பெண்களின் கருணையும் இரக்கமும் மீண்டும் மீயுணர்வுகளாய் நிறுவப்படுகின்றது. கதையின் இறுதிப்பகுதியில் அருள்குமரனின் தற்கொலைக்கு பின்னர் அவனின் வாக்குமூலமாக அஷேரா குறித்த குறிப்பினை ஆசிரியர் கையாள்வது ஒரு உத்தியேதான்.

அருள்குமரனின் தாயினது அனுபவங்கள் மற்றும் அமலி அக்காவினது அத்துமீறல்கள் மூலமாக பெண்கள் குறித்த மரபுரீதியான விம்பங்கள் உடைக்கப்படுகின்றன. அவனின் வாழ்வில் ஆராதனா ஒரு வித்தியாசமான பிரதிமையாக இருந்தபோதிலும் பெண்கள் குறித்த அவனது எண்ணங்கள் “ஒரு விதமாகவே” இருக்கின்றன. இதனை நாம் அபர்ணாவுடனான உரையாடல்களிலும் உணரக்கூடியதாய் உள்ளது.

அப்பால் அற்புதத்தின் வாழ்வில் குறுக்கிடும் முகம் தெரியாத “கனிட்டா” மற்றும் முகம் தெரிந்த “அமந்தா” போன்றோரும்; மறுபுறத்தே தமிழ் மரபுக்கு மாற்றாக ஒரே நேரத்தில் இருவரை நேசிக்கும் அபர்ணா போன்றோர் இந்த கதையில் நாம் தரிசிக்கும் ‘சர்ச்சைக்குரிய’ பெண்கள். இவ்வாறு பெண்கள் குறித்த எதிர்விம்பங்களை ‘அஷேரா’ என்ற தொன்ம வார்ப்பினூடே துடைத்தெறிகிறார் ஆசிரியர்.

கதையில் நாம் “அஷேரா”வினை தரிசிக்கும் இன்னொரு இடம், சிங்கப்பூரிலிருந்து சுவிசிற்கு அபர்ணா வருகையில் அவளின் பெயர் “அஷேரா”வாக இருக்கின்றது. இங்கே கதையில் வரும் பாத்திரங்கள் யாருமே தாங்கள் சுயமாக தங்களின் இயல்பில் இல்லை. இதற்கான வலுவான காரணம் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களே. அந்தவகையில் முகமற்ற மனிதர்களாய் வாழ்வோருக்கான குறியீடாக “அஷேரா” உள்ளமை சிறந்த தேர்வே.

ஏகெரி என்பது இன்னொரு தொன்ம குறியீடாகும். அது எப்போதும் ஒரு துன்பியலை சுமந்து நிற்கிறது. விடுதலை வீரர்கள் தங்கள் உயிரினை மாய்க்கும் ஓரிடமாக அது உள்ளது. அந்தக்கால ஆஸ்திரிய வீரர்கள் தொடங்கி நஜிபுல்லா மற்றும் அருள்குமரனும் கூட இந்த ஏரியிலேயே தங்களை மாய்த்துக்கொள்வது தொடர்கின்ற ஒரு முடிவற்ற கதையாகும்.

நாவலின் அரசியல்

நாவல் கூறும் அரசியல் என்பது பிரதானமாக, போர் எவ்வாறு தனிமனிதர்களின் சுதந்திர வாழ்வினை முடமாக்கியது என்பதுவும் மற்றும் அவர்களின் தற்கால நடைப்பிணமான வாழ்வினையும் கூறிச்சென்று நிறுவுகின்றது. இதனை நாம் அற்புதம் என்ற பாத்திரத்தின் வார்ப்பின் மூலமாக அறிந்து கொள்கிறோம். ஒரு இலட்சியத்தினை தன்னுள் வரித்து பின்னர் அது கானல் நீர் என்று அறிந்த பின்பும் கூட அதனுள்ளிருந்து வெளியேற முடியாது தவிக்கும் ஒரு மனிதனாக அற்புதம் இருக்கிறான். நேரடி களத்தில் அவன் நின்ற காலங்கள் குறைவேயாயினும் கூட அவனைச்சுற்றி பின்னப்பட்ட விஷவலையில் இருந்து வெளியேற முடியாது; இறுதியாக அந்த விஷவலைக்கே தன்னை இரையாக கொடுத்த ஒரு மனிதனாக அவன் இருக்கிறான்.

அருள்குமரனை பொறுத்தவரையில் அவனது பிறழ்வான காம நடத்தை மற்றும் அதனால் அவன் உணரும் குற்றவுணர்வு என்பனவற்றிலிருந்தான மீட்சியாக அவன் “போருள்ளிருத்தலை” தேர்வு செய்கிறான். எனினும் அவனின் “நடவடிக்கை” ஒன்றில் அவன் கண்ட காட்சியொன்று அவனை மீளமுடியாத உளச்சிக்கல் ஒன்றுள் தள்ளி இறுதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கே தள்ளி விடுகிறது. அருள்குமரனின் பாத்திரம் யதார்த்தப்புனைவு என்றே கொள்ள முடியும். ஏனெனில் தாயகவிடுதலை என்ற இலட்சியத்தினை வரித்து கொள்ளும் யாவரும் அந்த உணர்வினால் உந்தப்பட்டு வந்தோரல்ல. இவ்வாறான அற்ப காரணங்களினால் அமைப்புக்களில் இணைந்து “அற்புதங்கள்” செய்தோர் பலரை வரலாறு தன்னகத்தே கொண்டுள்ளது.

‘அபர்ணா’ பாத்திரம் பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறையினை பேசுகின்ற ஓர் வார்ப்பாகும். ஆனால் அந்த பாத்திரம் கூட வழமைக்கு மாறான ஒன்றே. வழமையாக பிரதிகளில் வருவது போன்று தீவிர பெண்ணியத்தினை ‘அபர்ணா’ உரைத்தாலும் கூட , அவளும் கூட ஒரு மனப்பிறழ்வான நடத்தை கொண்டவளாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஏனெனில் கணவனின் வக்கிரத்தினை தீர்க்க தன்னையே தருவது மற்றும் கொடுமைக்கார கணவன் என்றறிந்தும் அவனிடமிருந்து முழுதாக விலக விரும்பாமை என்பன அவளின் உளச்சிக்கலுக்கான சான்றுகளாகும்.

ஆதிரை நாவலினை தேசிய விடுதலை போராட்டத்தின் பின்னணியிலும் அந்த காலத்தில் காணப்பட்ட சாதிய முரண்கள் குறித்தும் நகர்த்திய கதாசிரியர், இந்த பிரதியினை அமைப்புக்கள் மத்தியில் காணப்பட்ட பிளவுகளை முன்னிறுத்தி அதனை விமர்சனங்களுக்குள்ளாக்குகிறார். இதில் பாராட்டப்பட வேண்டிய அமிசம் என்பது இதனை அவர் ஒரு குறிபிட்ட அமைப்புக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை என்பதாகும். உண்மையில் இந்த நாவலில் வரும் பாத்திரங்களின் மனபிறழ்வுகளின் மூலகாரணி அடக்குமுறை அரச இயந்திரமன்றி, மக்களுள்ளிருந்து மக்களுக்காய் தோன்றிய அமைப்புக்களே என்பதனை அறிகையில் ஈழப்போர் குறித்து இன்னும் அதிகமதிகமாய் பேச வேண்டிய பக்கங்கள் அதிகமுண்டு என்பதை அறிகிறோம்.

இந்த நாவலிலே வருகின்ற இன்னொரு துனைப்பாத்திரமாகிய நஜிபுல்லா என்பது ஆழமாக உற்று நோக்கவேண்டிய இன்னொரு பாத்திரமாகும். நஜிபுல்லாவின் கதை மற்றும் பின்னணி என்பன ஈழத்தையும் ஆப்கானிஸ்தானையும் பொதுமைப்படுத்தலுக்குள் கொண்டு வருவதுடன் “எல்லா பாதையும் ரோமுக்கே” என்பதையும் நிறுவுகின்றது. விடுதலை போராட்டங்களில் ஈடுபட்ட முன்னாள் போராளிகளின் சமகால சிக்கல்களை அருள்குமரன் மற்றும் அற்புதத்துடன் இணைந்து நஜிபுல்லாவும் பகிர்ந்து கொள்கிறான். ஈழத்து புஸ்பகலாதேவியின் முடிவும் ஆப்கானிஸ்தானின் ஷ்ர்மினாவினதும் முடிவுகள் ஒன்றாயிருப்பது விடுதலை போராட்டங்களின் ஒத்த நிறத்தினை அதாவது அது உரித்த மாமிசத்தின் நிறத்திலிருப்பதை புட்டுக்காட்டுகிறது.

ஈழப்போரின் பின்னணியிலான அழுக்கு அரசியலை இயக்கங்கட்கு இடையிலான முரண்பாடுகளை விமர்சன நோக்கிலே பிரதி கூறி சென்றாலும் உண்மையான போராளிகளை அது கேலிச்சித்திரமாக்கி விடவில்லை. அவ்வாறான சில பாத்திர வார்ப்புகளே ரொக்கெட், மோகன்லால் மற்றும் அண்ணாச்சி என்பனவாகும். இந்த பாத்திர வார்ப்புக்களை கூட ஆசிரியர் அமைப்புக்கள் கடந்து கட்டமைத்திருப்பது போராட்டம் மீதான அவரின் யதார்த்த நோக்காகும்.

நாவலின் அமைப்பு

மூன்று தனி நபர்களின் “போருள்ளிருத்தல்” மற்றும் போருக்கு பிந்தைய அனுபவங்களினை இந்த பிரதி ஒரே சீராய் கதை கூறாது சிதைந்த வடிவங்களினூடே பிரதி நகர்கிறது. இந்த சிதைந்த வடிவங்களினூடே கதை கூறலே பாத்திரங்களின் கனதியினை வாசகர் மனதில் பதிய வைக்கும் ஒரு உத்தியாக கூறலாம். உண்மையில் அருள்குமரனின் கதையினை அகர வரிசையில் கூற முற்பட்டிருப்பின் அதை அருள்குமரனின் மீதான அனுதாப பார்வையினை வீசுவதனூடே வாசகன்  இலகுவாக கடந்து சென்றிருக்க இயலும். ஆனால் அவ்வாறில்லாமல் பிரதியினை நகர்த்தும் உத்தியானது வாசகனை கதை முடிந்தபின்பும் பிரதியுடன் கட்டி வைத்திருக்கும் உத்தியாகவே நாம் கருதலாம்.

ஆதிரை பிரதியானது ஒரு கட்டிறுக்கமான அமைப்புடன் எழுதப்பட்ட ஒன்றாக இருக்க, இந்த பிரதியானது ஒரு எள்ளல் நோக்கிலே கதையினை நகர்த்தி செல்கிறது. இந்த கதையில் வருகின்ற நகைச்சுவைகள் கூட “வடிவேல்”தனமாகவன்றி “சந்திரபாபு” பாணியில் இருப்பது ”சோகச்சுவை”. கிட்டத்தட்ட ஷோபாசக்தியின் பாணியிலமைந்த எழுத்து நடையில் இந்த நாவல் நகர்வது ஆதிரையினையும் அஷேராவினையும் பிரிக்கும் ஒரு கோடாக உள்ளது.

தெறிப்புக்கள்

‘இந்த பன்னிரெண்டு பேரில் யாரெல்லாம் புலிகளுடைய உளவாளிகள்’ என்றவாறாக சப்பறம் விசாரணையை தொடங்கினான். (பக்-62)

“என்னுடைய ………….. புணர்வதட்கென்றே உங்களுடைய ஊத்தை நாடுகளிலிருந்து இங்கு வந்து தொலைக்கிறீர்கள்'(பக்-67)

“நல்லதாகிவிட்டது. கருணாவுடைய ஊர் என்றால் நாங்கள் நம்பி ஒரு வேலையை செய்ய முடியாது”(பக்-79)

“யாரோ சோஷலிச தமிழீழத்தில் சீதனம் கொடுக்க தேவையில்லை என்று சொல்லவும் அதை நம்பி படகேறிவிட்டான்”(பக்-98)

“இந்த சண்டையில் தமிழ்ப் பெடியங்களுடைய உயிரிழப்பை பன்னிரெண்டுக்கு மேற்படாமல் பார்த்துகொள்வதுதான் என்னால் செய்ய முடிந்த ஒரேயொரு காரியம்”(பக்-125)

“எனக்கு பிள்ளைகள் இருந்திருந்தால் உம்மட வயதுகளில்தான் இருந்திருப்பார்கள். பிறகு அண்ணனும் தம்பியும் சுடுபட்டே செத்திருப்பார்கள்.நல்லவேளையாக அப்படியொரு துயரம் நடக்கவில்லை”(பக்-130)

முடிவுரை

போருக்கு பின்னரான தனிமனிதர்களின் மனபிறழ்வுகளை முன்னிறுத்துவதன் மூலம் ஈழப்போரின் பேசப்படவேண்டிய பக்கமொன்றை சயந்தன் அவர்கள் இந்த பிரதியினூடே திறந்து விட்டுள்ளார். மற்றுமோர் நித்திரையற்ற இரவினை எனக்களித்தவாறு அஷேரா முற்றிற்று.