சொன்னதன் பிறகு இவன் என்ன சரியான சூனியமாய் இருப்பான் போல இருக்கெண்டு நினைக்க கூடாது. 97 ம் ஆண்டு வரைக்கும் தமிழ்ச்சினிமாவில புதுசா யாரார் நடிக்கினம் அவையின்ரை பேர் என்ன எண்டு எனக்கு ஒண்டும் வடிவா தெரியாது. நடிகர்கள் எண்டாலும் பரவாயில்லை. ரஜினியையும் விஜயகாந்தையும் புதுசா வந்தவையில பிரசாந்தையும் தெரியும். நடிகைகளைப் பொறுத்த வரை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் நதியாவும் அமலாவும் ராதாவும் தான். குஷ்வுவையும் தெரியும்.
அதுவும் 92 க்கும் 97 க்கும் இடையில ஆரார் புதுசா நடிக்க வந்தவை எண்டது சுத்தமாத் தெரியாது. சொன்னால் நம்ப மாட்டியள். 97 இல வன்னிலை பூவே உனக்காக பாத்த போது தான் உவர் தான் விஜய் எண்டதையும் அவற்றை முகத்தையும் முதலில பாத்தன். அதுவும் அந்தப் படத்தில Don’t miss எண்டொரு பாட்டுக்கு ஆடுறது அரவிந்த சாமி எண்டு சொன்னாங்கள். (அது விஜய் தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்) நான் அதையும் நம்பிக் கொண்டு திரிஞ்சன்
தியேட்டருக்கு போற பழக்கமெல்லாம் 90 ம் ஆண்டே முடிஞ்சு போட்டுது. யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில கடைசியா ராஜா சின்ன ரோஜா எண்ட படம் பாத்த பிறகு நான் 7 வருசமா தியேட்டர்களுக்கு போனதில்லை. (பிறகு 97 இல திருச்சியில சோனா மீனா எண்டொரு தியேட்டருக்கு போய் படம் பாத்து விரதத்தை முடிச்சன்.)
யாழ்ப்பாணத்தில சண்டை தொடங்கின பிறகும் கொஞ்சக் காலம் கரண்ட் இருந்தது. அப்ப நாங்கள் படங்கள் பாக்கிறனாங்கள். பிறகு ஒரேயடியாய் கரண்ட் போச்சுது. அதோடை படம் பாக்கிறதும் குறைஞ்சு போச்சு. எண்டாலும் அப்பப்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்த வீட்டில படங்கள் போடுவம்.
அந்தக் காலத்தில தான் புலியள் தணிக்கை முறையை கொண்டு வந்தினம். படம் தொடங்கும் போது முதலில புலிகளின் தணிக்கைச் சான்றிதழ் வரும். பிறகு தான் இந்திய தணிக்கை சபையின் சான்றிதழ் வரும். பாட்டுக் கட்டங்கள் போகும் போது சில இடங்களில ரோஜா பூ காட்டுப் படும். அந்த இடங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன என்று அர்த்தம்.
அந்த நேரம் சின்னத்தம்பி படம் நல்ல பிரபல்யம். எங்கடை வீட்டிலும் போட வேணும் எண்டு ரண்டு மூண்டு தரம் முயற்சித்தும் கசெற் கிடைக்கேல்லை. கடைசியா ஒரு மாதிரி கசெற் கிடைக்க ஜெனரேற்றர் வாடகைக்கு எடுத்து வந்து படத்தை போட்டால் கொஞ்ச நேரத்தில அது பழுதாப் போட்டுது. எனக்கு அழுகையே வந்திட்டுது. என்ரை அத்தான் எனக்கு நல்ல பேச்சு. ‘சனம் சாகக் கிடக்குது. உனக்கு சின்னத்தம்பி பாக்க முடியேல்லையெண்டு அழுகையோ?’
பிறகு கொஞ்சக் காலத்தில படங்கள் ஒரேயடியாகத் தடை செய்யப்பட்டு விட்டன. யுத்தத்தில சிக்குப்பட்டிருக்கிற மக்களுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகமாக இருக்கிற சினிமாவை தடை செய்தது பற்றி பரவலான விமர்சனங்கள் வந்தன.
இந்த இடத்தில ஒரு கதையை சொல்ல வேணும். படங்கள் தடை செய்யப்பட்டிருந்த 95 ம் ஆண்டில யாழ்ப்பாணம் கோட்டையில் புலிகளின் காப்பரண்களுக்கான பதுங்கி குழிகள் வெட்டுவதற்காக ஒரு குறித்த சுற்று முறையில் எங்கள் ஊரின் சங்கமொன்றினூடாக நாங்கள் அங்கை போயிருந்தம்.
கோட்டைக்குப் பக்கத்திலை முந்தி இருந்த ஒரு தியேட்டரின் முன் சுவர் மட்டும் இருந்தது. மற்றதெல்லாம் உடைஞ்சு போட்டுது. அது றீகல் தியேட்டர். (இதைப் படிக்கிற ஆரும் பழைய ஆக்களுக்கு பழைய ஞாபகங்கள் வருதோ?) அதன் முகப்பில் அங்கு கடைசியாக ஓடிய ஒரு ஆங்கில படத்தின் பெயர் எழுதப் பட்டு வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு கிடந்தது.
அதைப் பாத்து ஒரு பெருமூச்சுத்தான் வந்தது. ம்.. அந்தக் காலம் இந்த மாதிரியான படமெல்லாம் யாழ்ப்பாணத்தில ஓடியிருக்கு. (இது 95 இல் எனது அறிவுக் கெட்டிய நிலையில் எழுந்த எண்ணம்.)
பிறகு கன காலத்துக்கு பிறகு வன்னியிலை இருக்கும் போது திரைப்படங்களுக்கான தடையை புலிகள் நீக்கினார்கள். எண்டாலும் தணிக்கை தொடர்கிறது இப்ப வரைக்கும். கன காலத்தக்கு பிறகு வன்னியிலை காதல் கோட்டை, பூவே உனக்காக மற்றது மாணிக்கம் எண்ட மூண்டு படங்களை ஒரே இரவில பாத்தன்.
இந்தியா போன பிறகு அங்கை இருக்கிற குஞ்சு குருமன் எல்லாம் அஜித் அக்ரிங் சுப்பர் நக்மா டான்ஸ் சுப்பர் எண்டு கதைக்க ஐயோ எனக்கு ஒண்டும் தெரியேல்லையே எண்டு வெக்கமா இருந்தது. பிறகு ஒரு மாதிரி இந்தியாவில சும்மா இருந்த காலத்தில சினிமா ருடே சினிமா எக்ஸ்பிரஸ் அது இது எண்டெல்லாம் வாங்கிப் படிச்சு என்ரை அறிவை வளர்த்துக் கொண்டன்.