அனோஜன் பாலகிருஷ்ணன்

ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரஞ்சை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும்மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க கதை சொல்லலாக சொல்வதிலே அதிகமான தரப்பினரிடம் கொண்டு சென்று வாசிப்பவர்களின் வீச்சை அதிகரிக்க முடியும். இதனால் என்னவோ அதிகமான புனைவெழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்து உருவாகின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் எழுதுவது சாட்சி இலக்கிய வகைக்குள் (Testimony literature) அடங்கக்கூடியது. தங்களிடம் இருக்கும் கதைகளையும் வலிகளையும் எழுதிக்கடந்துவிட, அல்லது புனிதப்படுத்திவிட இடைவிடாது முயல்கிறார்கள்.

இவ்வாறு கதைகளின் ஊடாகப் பதித்த வலிகளையும் இழப்புக்களையும் எழுதுபவர் எழுதிவிட்டாலும் படிப்பவர்கள் அனைவரும் அதனை பிரதியில் கண்டடைகின்றார்களா என்றால் பெரும்பாலும் இல்லையென்றே அமைந்து விடுகின்றது. ss (1)அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், அந்த வலிகளை நேரில் அறிந்தவர்கள், அனுபவித்தவர்கள் பிரதியில் தங்களைப் பொருத்தி எழுத்தில் சொல்லப்பட்ட வலிகளை வாசிக்கும்போது கண்டடைந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அவ்வாறன உணர்வுகள் பெரும்பாலும் கிடைப்பது இல்லை. தரவுகளும் இறப்புக்களும் அவர்களிடம் சாதரணமாக எஞ்சுகின்றது. எழுத்தில் உள்ள நிஜமான சுமைகளுடன் கூடிய வலியும் வாழ்கையும் கிடைத்திருக்காது. காரணம் வலிகளைச் சொல்லும் எழுத்துக்களில் போதிய புனைவு நுட்பம் இல்லாமல் இருப்பது. புனைவு மொழிக்கும் கட்டுரை மொழிக்கும் இடையிலான வித்தியாசம் போதாமல் இருந்துவிடுவதுபோன்ற குறைபாடுகள். இவ்வாறான அழகியல் குறைபாடுகள்கொண்ட புனைவுகள் தரவுகளைமட்டும் சொல்லிவிட்டு ஆழமான அகம்சார்ந்த உணர்வுகளை கிளறிவிடாது கடந்து செல்கின்றன. இவ்வாறான புனைவுத்தரம் தாழ்ந்த பிரதிகள் உருப்பெற்றுக்கொண்டிருந்தாலும் மிகச்சிறந்த அழகியலுடன் சிறந்த புனைவுகளும் ஈழத்தில் வந்திருக்கின்றன, வந்துகொண்டிருக்கின்றனதான்.

தமிழர்களின் வாழ்வில் நிகழ்ந்த அனைத்து கண்ணீர் துளிகளையும் தொகுக்கும் தொகுப்பாக ஆதிரை நாவல் இருக்கின்றது. துரத்தப்பட்ட ஓர் இனத்தின் கதையினை ஆதிரை நாவல் சொல்லிக்கொண்டு செல்கின்றது. மலையகத் தமிழர்கள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு துரத்தப்படும் காலத்தின் தொடக்கத்தில் இருந்து முள்ளிவாய்காலினைத் தாண்டி புனர்வாழ்வு முடிந்து வெளியேறும் காலம்வரை மூன்று தலைமுறையின் அனைத்துக் கதையையும் பெண்களின் பார்வையில் சொல்ல விளைகின்றது. திடீர் திடீர் என்று பிள்ளைகள் போராட இயக்கத்துக்கு கிளம்புகிறார்கள். அவர்கள் ஏன் சென்றார்கள் எதனால் சென்றார்கள் என்று போராடச்சென்ற பிள்ளைகளின் பார்வையில் கதைப்பிரதி சொல்லவில்லை. ஆனால் செல்கிறார்கள். பிரதியில் நிகழும் சமகாலச் சம்பவங்களும் ஊகங்களும் அதனை தீராத வலிகளுடன் இட்டு நிரப்புகின்றது. இயக்கத்துச் சென்ற பிள்ளைகளின் தாய்மாரின் பார்வையில் அவர்களின் ஏக்கங்கள் வலிகள் நிராசைகளின் தொகுப்பை ஆதிரை கதைப்பிரதி நீட்சியாகப் பேசிக்கொண்டு செல்கின்றது.

எளிமையான வாழ்க்கை மெல்லமெல்ல சிதைந்துகொண்டுவருகின்றது. ஏன் சிதைகின்றது எங்கே ஆரம்பமாகிறது என்பதினை அவை தத்துவவிசாரணை செய்யவில்லை. விளிம்புநிலை மக்களின் உணவு,உடை,உறையுளில் எப்படி பங்கம் விளைவிக்கின்றது என்பதை சொல்வதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக எழும் எழுச்சியையும் அதற்கு எதிராக எழும் போராட்டத்தின் அவலங்களை மெல்லமெல்ல சொல்லத்தொடங்குகின்றது. தாய்மார்கள்,பிள்ளைகளின் அகம் சார்ந்த மாறுதல்கள் நுண்மையாக மாறுகின்றன. இராணுவங்கள் படுகொலைகள் நிகழ்த்துகின்றன. இராணுவத்தின் சித்தரிப்புகள் இயதிரத்தனமாக குழுநிலையாக கதைப்பிரதியில் சித்தரிக்கப்படுகின்றது. ஒட்டு மொத்த தமிழ் தாய்மார்களின் பார்வையில் அவை தொகுக்கப்படுகின்றன. இராணுவத்தின்மேல் எழும் கோபங்கள் இறுதியில் புலிகளின்மேல் தாய்மார்களுக்கு எழும் கோபங்கள் சாபங்கள் அனைத்தும் வீரிட்டுக்கொண்டு வருகின்றது. போராட்டம் ஆரம்பித்த காலமும் சரி, புலிகள் ஆயுதபலத்தில் எழுச்சி பெற்றகாலமும் சரி, புலிகளின் இறுதி வீழ்ச்சிக் காலமும் சரி போராட்டங்களுக்கு பிள்ளைகளை எந்தத்தாய்மார்களும் விரும்பி அனுப்பவில்லை. தாய்மார்களின் ஒரே சிந்தனை தங்களது பிள்ளைகளை ஆயுதப்போராட்டத்தில் பறிகொடுத்துவிடாமல் கலங்கம் இல்லாமல் வாழ அனுப்பிவிட முயல்கிறார்கள் என்பதை கதைபிரதி தாய்மார்களின் பார்வையில் சொல்கின்றது.

பிரச்சாரங்களுக்காக பள்ளிக்கூடங்களுக்கு வரும் புலிகளும் அவர்களின் பிரச்சாரம் முடிய போராட கிளம்பிச்செல்லும் பிள்ளைகளும், கிளம்பிப்போன பிள்ளைகளின் பெற்றோர்களின் பாடசாலையில் நுழைந்து ஆசிரியர்களைப்பார்த்து உங்களை நம்பி படிக்க அனுப்பிய எங்கள் பிள்ளைகள் எங்கே என்று கதறுவதும் நிகழந்துகொண்டிருக்கின்றது.தொண்ணூற்றியைந்தாம் இடம்பெயரவில் யாழ்.மக்கள் வன்னி நிலப்பரப்பை நோக்கிவர வன்னிமக்கள் மனதில் மெல்லிய குதூகலம் பிறக்கின்றது. கல்வீட்டில் வாழ்ந்தவர்கள் மண்வீட்டில் வாழ்ந்துபார்க்கட்டும் என்ற மெலிதான அசை அசூசையோடு ஆழ்மனத்தில் கதைபிரதியில் உள்ள மாந்தர்களுக்கு எட்டிப்பார்கின்றது. சமாதானக் காலத்தில் எனி சண்டைவந்தால் கொழும்பில்தான் அடிவிழும் என்று யாரோ கிளப்பிவிட வடக்குமக்கள் மெலிதாகக் அவையளும் வேண்டிப்பார்க்கட்டும் எண்டு குதூகலப்பட்டதை பிரதிக்குவெளியே இருந்து ஆதரை கதைப்பிரதியோடு ஒப்பிட்டுப்பார்க்க முடிகின்றது.

ஆறாவடுவில் இருந்து மாறுபட்ட அடர்த்தியான மொழியில் ஆதிரை நாவல் எழுதப்பட்டுள்ளது. சம்பவத்தை கண்ணுக்குக் காட்டி நுண்மையான உணர்வுகளுடன் சித்தரித்து தன்னை நகரத்துகின்றது. ஒவ்வொரு வரிகளாக வாசிக்கும்போது கற்பனை அகத்தில் விரிகின்றது. ஒவ்வொரு சம்பவங்களையும் மனதில் காட்சியாக நகர்த்தி கொண்டு வாசிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதால் கடக்கும் பந்திகளை செமிக்கவிட்டே பக்கங்களை கடக்கவேண்டியுள்ளது. கதைப்பிரதிக்குள் நுழைய ஆரம்பத்தில் தடங்கல் வந்துகொண்டிருக்கும். சொல்லாமல் சொல்லும் உணர்வுகளின் சிதறல்கள் எழுத்தின் கனதியை பரந்து விரிந்து இன்னும் இன்னும் ஆழமாக வாசிப்பு இன்பத்தினை விரிக்கின்றது. வெள்ளையக்கா மீது லெட்சமனுக்கு ஏற்படும் அடையாளம் தெரியாத காம உணர்வுகள், கணவனை தொலைத்த ராணிக்கு மணிவண்ணன் மீது ஏற்படும் தடுமாற்றம் நிறைந்த காம உணர்வுகள் என்று காமம் சார்ந்த உடலின் இச்சைகள் இயல்பாக ஊடுருவிப் பயணிக்கின்றன. இறுதிச்சண்டையில் மணிவண்ணன் இறந்துகிடக்கும் உடலைப்பார்த்தபின் ராணிக்கு அழுகை சொரிந்துகொண்டுவரும். அந்த தருணத்தில் ராணிக்கு மணிவண்ணன்மேல் உள்ள நெகிழ்ச்சியான அகம்சார்ந்த ஆழ்மனது உறவைத் தெளிவாகக் கண்டடைய முடியும். மணிவண்ணனின் காலடியில் உருண்டு புரண்டு பெருங்குரலெடுத்து அழுவாள். அவளின் அழுகை ஒலித்துக்கொண்டே பிரதியில் இருக்கும்.

மூன்று காதல்கள், போர்களின் வடுக்கள், குமியும் இறந்த உடல்கள் என்று நகரும் பகுதிகளில் தரவுகள் மட்டும் எஞ்சவில்லை அதன் வாழ்க்கையும், அனுபவும் கண்ணீரும் கிடைக்கின்றது. காடும் காடுசார் அனுபவங்களையும் அதில் வாழும் மக்களுமே கதைப் பிரதியில் மையப்படுத்தப்பட்டுள்ளது. உயிர்ப்புள்ள காட்டுக்குள் நுழைந்து வெளியேற முடியாத சிக்கித்தவிக்கும் தடுமாற்றங்கள் பிரதியில் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது.சில கதை மாந்தர்கள் நிஜமான மனிதர்களையும் நியாபகமூட்டுகின்றது. பிரச்சாரத்துக்கு பள்ளிக்கு வரும் நரைத்த தலைமுடியை கொண்ட வயது முதிர்ந்த பிரச்சார பெண்புலி உறுப்பினரின் குணாதிசயங்களும் பாத்திரச்சித்தரிப்பும் உங்களுக்கு ஒருவரை நினைவுபடுத்தலாம். இயக்கத்துக்கு ஆள்சேர்த வயது முதிர்ந்த இயக்க அன்டி ஒருவர் “எனக்கு இந்தப் போராட்டம் தோற்றுவிடும் என்று இருபது வருடங்களுக்கு முதலே தெரியும்” என்று சொல்கிறார். கதைமாந்தரான மலருக்கு அடக்கமுடியாத கோவம் ஏற்படும், “தோற்கப்போகும் போராட்டத்துக்கா இவ்வளவு நாளும் ஆள்சேத்தீங்க” என்று கேட்டக்தோன்றும். ஆசிரியர் யாரை சித்தரிக்கின்றார் என்பது தெளிவாகவே தெரியும் ஓம் தமிழ்கவியைத்தான்.

ssss

ஆதிரை தமிழ் தாய்மார்களின், பெண்களின் பார்வையில் ஒரு இனத்தின் அவலங்களை பிரதியில் பேசமுயன்றாலும் இன்னும் ஒருபக்கம் சொல்லப்படாத சிங்களத் தாய்மார்களின் பக்கம் இருகின்றது. இராணுவம் என்ற கட்டமைப்பு குழுநிலையாக காட்படுகின்றது அவர்களின் வாழ்வும் மன என்ன ஓட்டங்களும் புனைவுப் பிரதியில் வெற்றிடமாகவே இருகின்றது.

செவ்வியல் என்பதே மானுட மனத்தின், வரலாற்றின் இருண்மையையும், கசப்பையும் அதிகமாகச் சொல்லக்கூடிய ஒன்றாகவே இருக்கும். அது ஒரு பண்பாட்டின் ஒரு கட்டத்தில் நிகழ்கிறது. ஆதிரை அதன் அனைத்து இயல்பையும் செறிவாகக் கொண்டிருக்கின்றது. இது எமது இனத்தின் இருண்மையின் வலிகளின் தொகுப்பு.

ஆதிரை கதைப்பிரதியில் உன்னதமாக்கல்(Sublimation) இருக்கிறன. ஆசிரியனின் குரலினை பிரதியில் கண்டுகொள்ள முடிகின்றது. மொழியையும் தருணத்து உணர்ச்சிகளையும் வெளியே இருந்து நேரடியாக வந்து சயந்தன் வெளிப்படுத்துவதினை உணரமுடிகின்றது. கதைமாந்தரை மேலதிகமாகப் பேசச்செய்து சிந்திக்கச்செய்து சயந்தன் அந்த உன்னதமாக்கலை நிகழ்த்துகின்றார். அந்தக்கதாபாத்திரம் அப்படியெல்லாம் சிந்திக்குமா, அது ஆசிரியன் குரல் அல்லவா என்ற வினாவுக்கு செவ்வியல் படைப்பில் இடமில்லைத்தான். உன்னதமாக்கல் மூலம் பிரதி அடையும் முழுமை என்பது வரையறைக்குள் மறுக்கப்படாத முதன்மை கொண்டது. அது தன்னை நிரூபிக்க எதையும் செய்வதில்லை. அப்படைப்பின் படைப்பியல்புதான் அதை நிரூபிக்கிறது. ஆதிரையின் படைப்பாக்கம் அதனைச் செவ்வனே செய்கின்றது.

இறுதிச் சண்டையில் எளிமையாக மனிதர்கள் கொத்துக்கொத்தாக செத்துவிழுகின்றார்கள். செத்துவிழும் மாந்தர்களின் மிகப்பெரிய வாழ்க்கை பிரதியில் ஏற்கனவே சொல்லப்பட்டவொன்று. அவர்களது வாழ்வு ஒரு குறுகிய நிலப்பரப்பில் செல்வீச்சில் துளைத்துச்சாவதில் முடிகின்றது. வீழ்ந்து சிதைவுற்று இருக்கும் உடல்களை பார்க்கும்போது பிரதியில் சொல்லப்பட்ட அவர்களது முன்னைய வாழ்வும் அவர்களது இறப்பும் விசித்திரமான உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்து அகத்தை உக்கிரமாக பிசையவைகின்றது.

மனிதன் சாதாரணமாகக் கடந்து செல்லும் அகம் சார்ந்த உணர்வுகளின் தருணங்கள் மிகச்சிலவாக இருக்கும். இலக்கியம் அதன் வீச்சை இன்னும் அதிகரித்து அகத்தை கொந்தளிக்கவைக்கும். அதன் மூலம் கண்டடையும் வலிகள் அளிக்கும் அனுபவங்கள் எம்மை மீண்டும் புதிதாக வேறோர் கோணத்தில் கண்டடைய வைக்கும். ஆதிரை அதில் வென்ற ஒன்று.

ஆதிரை கண்டடைய வைக்கும் அனுபவங்கள் ஒரு வாழ்க்கையின் உயிர்ப்புள்ள தொகுப்பு. க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் உருவாக்கிய வலுவான இலக்கிய மதிப்பீட்டிலும் வெற்றிபெறும் பிரதிதான். ஆனால் உட்பிரதியில் உள்ள விடுபடல்கள் ஒரு நல்ல நாவலாகக் சொல்ல வைக்கும் மகத்துவமான நாவல் என்று சொல்லவைக்காது. வாசித்து முடிக்கும்போது தீராத மனவழுத்தத்தை வாசிப்பவருக்கு தந்துவிட்டுப்போகும், ஆனால் ஒரு வெறுமை இருக்கும் அவை சிங்களத் தாய்மார்களின் கண்ணீரை நினைவூட்டும். ஆதிரையில் சொல்லாமல் விட்ட பக்கம் அது.ஆதிரை ஒரு தமிழ் தரப்பு பெண்களின் வாழ்க்கையின் அவலங்களை அவர்கள் பார்வையில் முன்வைக்கும் கட்டற்ற கண்ணீர்.

http://eathuvarai.net/?p=5239

By

Read More

சுதாகர் சாய்

ஆதிரை, சயந்தனின் இரண்டாவது நாவல். சிங்கமலை லெட்சுமணனின் நினைவுகளாக விரியும் ஆதிரை, ஈழத்தின் முப்பது ஆண்டுகால யுத்தப் பின்னணியியில் நிகழும் பெரும் கதை. தூக்கத்திலும் துயரத்தை இதயத்தில் சுமத்து செல்லும் மனிதர்களை குறித்த களப் பதிவு. ஆதிரை வலியின் உச்சம்.

மனிதர்கள்,மரங்கள்,பறைவைகள்,விலங்குகள், விவசாயம், தெய்வங்கள், வழிபாடு,வேட்டை முறைகள், உணவு வகைகள், வாகனங்கள், யுத்தகருவிகள்,போர்முறைகள்,பதுங்கு குழிகள்,பாட சாலைகள் என அனைத்தையும் துல்லியமாக பதிவாக்கியிருப்பது நாவலின் சிறப்பு.

தனிக்கல்லடி,ஓதியமலை, காட்டுப்புலவு,மணலாறு, மந்துக்காடு,கட்டையடி,மல்லிகாபுரம், பிரமந்தனாறு,வாகையடி,வீரசோலை,ஏறாவூர், அன்புவழிபுரம் என ஈழத்தின் குக்கிராமங்களில் நிகழ்ந்த யுத்தத்தில்,கொலையுண்ட, புதையுண்ட,அடித்து விரட்டப்பட்டு அலைக்களிக்கப்பட்ட மனிதர்களின் அறியப்படாத வரலாற்றை விளக்கும் புதினம்.

0 0 0

ஒரு மல்லிகைப்பூக் கூடை நம்மை கடந்து செல்லும் போதோ அல்லது நாம் ஒரு பன்னீர் பூ மரத்தை கடக்கும் பொழுதோ அவற்றின் மணம் இயல்பாக நம்மை கிளர்ச்சியுர செய்வது போன்றது ஆதிரையில் சயந்தனின் மொழி அழகு.

சயந்தன் பயன்படுத்தும் உவமைகள் வெகு இயல்பானவை. வலிந்து கொண்டு எழுதப்பட்டவை அல்ல. கதையின் போக்கை தாண்டி துருத்திக்கொண்டு இருப்பவையும் அல்ல. எளிமையும் அதே நேரத்தில் வளமையும் மிக்க மொழி அவருடையது. போகிற போக்கில் அவர் அற்புதமான உவமைகளை தூவிவிட்டு செல்கிறார்.

.”மழைத்துளி வடியா சிறு காட்டுப் பூவைப்போல தன் கைகளில் புரளும் குழந்தையை ஆசையோடும்,ஏக்கத்தோடும் அவள் பார்த்தாள்.”

“ஒரு கொடிய மிருகத்தின் நகம் போல குளிர் அவர்களைத் தீண்டியது.”

.”வறுமை வேலியின் ஓரங்களை செல்லரித்துக்கொண்டு உள் நுழைந்திருந்தது.”

By

Read More

கோகுல் பிரசாத்

A depressing book about three generations living amidst bomb shells. The writing was crisp, vivid and chilling. The mental ravages of ‘insanity killing’ echoes throughout the book. Female protagonists’ characterisation was unique and complete. ‘Aachimuthu’ will remind us Ma Joad from the famous Grapes of wrath. The human spirit’s basic survival desire under duress and what depravity and horrific events can do to the human mental functions under extreme conditions are portrayed with more scholarly skills than any other in this kinda genre.

From the beginning, Sayanthan creates an atmosphere of foreboding, of impending horror that will haunt the reader for ages. The mature content could have slipped through the auteur’s fingers easily and become a pitiful melodrama. Though everything happens as expected, there are disturbing, heartfelt moments with melancholic shades. The language is simple yet poetic at times.

Rich in detail and wildly hopeful. The book doesn’t take a stand on either Side. Each perspective is taken into account and the conflict between them is portrayed with care and consciousness. The victims of the war dream, the only thing they could do. But whenever they dream, it is full of failures and tragedy. The reality comes through with full force and takes a rough ride. These dream sequences were quite boring at the latter part of the novel.

Aathirai is strong and poignant about the things we do to ourselves for the sake of ideals,love,whatever. The writer’s human insight got sluggish at places when there are lots to describe the ambience/outside world. This insight would have been valuable as I was reading. The jeopardy overtook them.

This book deserves to be read. It has easily surpassed every other recent works on Eelam and perhaps war-refugee genre. The sheer determination and courage bring ‘them’ back alive. The little hope and happiness wavering throughout the novel makes us feel guilty and unbearable. This is one that will sell for itself. An another masterpiece to be proud of Tamil literature

Tamizhini Publications 2015

வரலாற்றின் ஓலம்

டிம் ஓ ப்ரயனின் நாவல்கள் வியட்நாம் போரை மையமாகக் கொண்டவை. போரின் இருதரப்பும் பேசப்படும். அமெரிக்க வீரர்களின் பார்வையில் மட்டுமே அமைந்த படைப்புகளும் உண்டு. அவை பெரும்பாலும் போர்ச்சூழலில் அந்நிலத்து மனிதர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் பேரிடர்களை சொல்லி, அரசியல் சரிநிலைகளில் கால் நனைத்து தீர்க்கமான முடிவுகளை அல்லது முன்முடிவுகளை நோக்கி நகர்பவை. வாட் இஸ் த வாட் போன்ற ஆப்பிரிக்க அகதி நாவல்களும் இவ்வரையரைகளுக்கு உட்பட்டவையே. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில், இருவேறு தரப்புகளின் மோதலால் ஏற்படும் முரண்களும் விளைவுகளும் பிரதானமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. சில படைப்புகள் இவ்வாறான சராசரி நிலைகளை கடந்து, முக்கியக் கதாபாத்திரங்களின் அகப்போராட்டங்களையும் உள எதிர்வினைகளையும் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் கையடக்க நாவலாசிரியர்களே மானுட இயக்கத்தின் பேராற்றலின் துளியை ருசித்தவர்கள். எத்தகைய கீழ்மைகளை கடந்து சரிந்த போதும் வாழ்வின் வேர் அவர்தம் படைப்புகளில் துளிர்த்துக் கொண்டே இருக்கிறது.

அதிகார வல்லமை கொண்ட கைகளுக்கு கொல்வதென்பது இரண்டாம் கட்டம்தான். நிலம் கையகப்படுத்துதலே தலையாய நோக்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து துரத்தப்படும் மனிதன், அதன்பின் எந்நாளும் நிலமற்றவனே. கையூன்றி எழுந்து நிற்க அவன் முற்படும் போதெல்லாம் சதிகாரர்களின் குரூரக் கைகளால் நிலக்கம்பளம் உருவப்பட்டுக் கொண்டே இருக்கும். வீடற்று போவதே பலவீனங்களின் உச்சம். அவன் எதிர்கொள்ளப் போகும் தொடர் துயரங்களின் முதற்கண்ணி. உயிராற்றலின் பெரும்பகுதி ஒரு காணி நிலத்திற்காக ஏங்கிக் கொண்டே இருந்தால் எங்ஙனம் வாழ்வது? ஜான் ஸ்டைன்பெக்கின் ‘த கிரேப்ஸ் ஆப் ராத்’ முதல் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ வரை பெருஞ்சுமைகளுடன் கூட்டங்கூட்டமாக நிலம் தேடி மக்கள் அலையும் சித்திரம், இலக்கியத்தின் கொடுங்கனவுகள்.

தனது முந்தைய படைப்பின் சாதனைகளையும் குறைபாடுகளையும் தாண்டிச் செல்வதே ஓர் எழுத்தாளன் முன் நிற்கும் சவால். ஓர் ஈழப்படைப்பில் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்? பதுங்குக் குழிகள், கண்ணீர், சித்ரவதை, ஓயாத அவலம், குண்டுவீச்சு,….. இன்னும்,இன்னும்… இவை அனைத்தும் உண்டு. அவ்வாறெனில் தமிழ் இலக்கியத்தில் இந்நாவலின் இடம் என்ன? இவ்வகைமையில் ஏற்கனவே வெளியாகியிருக்கும் படைப்புகளை விட இந்நாவல் எங்ஙனம் சிறந்தது? சயந்தனின் இரண்டாவது நாவலான ‘ஆதிரை’, சிங்கள வதை முகாமில் அடைபட்டுக் கிடக்கும் லெட்சுமணனில் தொடங்கி அவனது குலக்கதையாக விரிகிறது.

நாவலாசிரியனின் மனப்பக்குவமே இக்கதையை வழிநடத்திச் செல்கிறது. இந்நாவல் சரி தவறுகளுக்குள் நின்று தராசை தூக்கிப் பிடிப்பதில்லை. அதே சமயம், அவரவர்க்கு அவரவர் நியாயம் என்பதாக கூர் மழுங்கி தேங்கி விடவுமில்லை. துயர்மிகு உச்சகட்ட கணங்களிலும் பேணப்படும் சமநிலை வாசகனை திடுக்கிடச் செய்கிறது. அந்நிலத்து மக்கள் எத்தகைய கையறு நிலையிலும் பற்றிக் கொள்ளத் துடிக்கும் நூலிழை நம்பிக்கை நம்மை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

சிங்கள இராணுவத்தால் நள்ளிரவில் அழைத்துச் செல்லப்படும் நடராசன், ‘தான் சாவதற்கு முன் எல்லா சாவையும் கண்கொண்டு பாத்துடணும்’ என நினைக்கிறார். முதல் முறை மரணத்தை ஒரு விளையாட்டாக எதிர்நோக்கத் துணியும் ‘காட்டின்ற மகன்’ மயில்குஞ்சன், தனது அந்திமக் காலத்தில் ‘இந்தப் பயலுகளோட காலத்த ஒரு தடவ கண்குளிர பாத்துடணும்’ என்கிற தனது விருப்பம் நிறைவேறாமலேயே சாக அஞ்சுகிறார். ‘அய்யா நானும் இந்தியாவுல இருந்து வந்தவன் தான்’ என தன்னை துன்புறுத்தும் இந்திய இராணுவத்திடம் தனது கடைசி சொற்களை உதிர்க்கும் சிங்கமலை, லெட்சுமணனில் ஆறாத வடுவாகிறார். இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக பள்ளிக்கூடங்களில் பெண் புலிகள் பிரச்சாரம் செய்கையில், பிள்ளைகள் எந்தச் சலனமுமின்றி இணைந்து கொள்கிறார்கள். ஓரிரு வரிகளில் கடந்து போகும் கதாபாத்திரங்கள் கூட அழுத்தமாக வேரூன்றி நிற்கிறார்கள். அவற்றின் சரடுகளை இணைத்து வளர்த்தெடுக்க வேண்டியது வாசகனின் பொறுப்பு.

மரணத்தை எதிர்கொள்ளும் கணமே மனித மனம் அதன் முழு உத்வேகத்துடன் இயங்கும் தருணமாக இருக்க முடியும். அம்மரணத்தை சாகசமாக பழக்கிக் கொள்ளும் போராளிகள், ‘பாத்து பத்திரமா போங்க’ என்றதற்கு வெடித்துச் சிரிக்கிறார்கள். ‘உலக வரலாற்றுல இவ்வளவு கட்டுக்கோப்பா ஒரு இயக்கம் இருந்ததில்ல’ என்பதை எழுதிய அதே கைகள் தான், சிவராசன் வழியாக ‘போராட்டத்த தொடங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடாத போராளிகள்ல நானும் ஒருத்தன்’ என கத்தியை சொருகுகிறது. கடைசிச் சண்டையும் முடிந்த பின் மக்களுக்கு ‘உதவ’ வரும் புலம் பெயர் தமிழர் ஒருவர் ‘புலிகள் இருந்திருந்தா இந்த மாதிரி உதவியெல்லாம் உங்களுக்கு கிடைச்சிருக்குமா?’ என நக்கலாக கேட்கிறார். பத்து கோழிகளுக்காக வாயை அடக்கிக் கொண்டு இருக்கும் ஜெயந்தியால் ‘அவங்க இருந்தப்ப எங்கள பிச்சை எடுக்க விடல’ என நினைக்க மட்டுந்தான் முடிகிறது. ‘சனங்க செத்துட்டு இருந்தப்ப கள்ளத்தோணி ஏறிப் போனவன்லாம் இப்ப வந்து கேள்வி கேக்கறான்’ என்று ஆசிரியரே பகடிக்குள்ளாகிறார்.

முப்பது வருட வரலாற்றின் அத்தனை தரப்புகளும் இத்தனை கவனத்துடனும் துல்லியத்துடனும் பதிவு செய்யப்பட்ட ஈழப்படைப்பு பிறிதில்லை. புறச்சூழலை சித்தரித்து அதற்கான எதிர்வினையாக மக்கள் திரள் செயலாற்றும் விதங்களில் மட்டுமே அதீத கவனம் குவிக்கும் படைப்புகளுக்கு மத்தியில், கதாபத்திரங்களின் உளவியலை இப்படைப்பு நுண்மையாக அணுகுகிறது. எத்தகைய கீழ்மைகளும் மனிதனின் இயல்பாகக் கருதப்படுகிறது. ‘மனுசப்பய இப்படித்தான்’ என்பதை வரலாற்றில் பொருத்திப் பார்க்கிறது. அகத்தின் விசை இழுத்துச் செல்லும் திசையெங்கும் கட்டுப்பாடின்றி பயணிக்கும் மேதைமையே ‘ஆதிரை’யை மற்ற நாவல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முதன்மை அம்சம்.

ட்ரக்கில் இருந்து இறங்கி நாமகள் வீட்டுக்குச் செல்வதை ஏக்கத்தோடு பார்க்கும் பெண் போராளிகளின் துயரம், நிச்சயமாகிவிட்ட தோல்வியினால் மட்டும் ஏற்பட்டதா என்ன? மரணத்தின் அத்தனை கோர முகங்களையும் கண்டுவிட்டு வீடு திரும்பிய நாமகளிடம், அவளது தாயின் மரணம் குறித்து தெரிவிக்கப்படுகையில், அச்செய்தி அவளிடம் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. ‘கஞ்சி இருக்கா?’ எனக் கேட்பதன் வழியாக அக்கணத்தை கடந்து செல்லத் தூண்டுவது, ஷெல்லடிகளின் ஊடாகவும் வாழ்ந்துவிடத் துடிக்கும் மனதின் அடிப்படை விழைவு அன்றி வேறென்ன? வாழ்வதையும் துன்புறுவதையும் வேறு வேறாக பிரித்தறியும் மாய வித்தையை போர் நிகழ்த்திக் காட்டுகிறது. விமான குண்டுவீச்சுகளுக்கிடையே ஜோடி ஒன்று பதுங்குக்குழியினுள் பிரக்ஞையின்றி முயங்கிக் கிடந்து காமத்தின்பாற் இளைப்பாறும் காட்சி, மானுட இச்சைகளின் பேராற்றலை சட்டென்று உணர்த்திவிட்டுக் கடக்கிறது. (இதே போன்றதொரு காட்சி மற்றொரு ஈழப்படைப்பான தமிழ்க்கவியின் ‘ஊழிக்கால’த்திலும் உண்டு)

அகத்திலிருந்து கிளைக்கும் உண்மை முகங்களை நெருக்கமாக உணரச் செய்த ஈழப்புதினம் இதுவே. மேன்மைகளும் கசப்புகளும் கீழ்மைகளும் தொட்டு வெட்டி உறவாடி களைத்து விழுகின்றன. மனம் புரண்டு அழுது ஓய்ந்து பின்னர் உள்ளுணர்வின் நம்பவே முடியாத தடத்தில் பாய்ச்சலை நிகழ்த்தி, நாம் நமது மனது குறித்து அதுவரை கொண்டிருந்த பிம்பங்களை எல்லாம் பழித்துக்காட்டுகிறது.

தமிழீழ சமூகத்தின் வேரடிச் சிக்கல்கள் தீவிரமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை வலிந்து திணிக்கப்பட்டதாக அல்லாமல், கதாபாத்திரங்களின் இயல்புடன் பிரதிபலிக்கின்றன. செத்த பிறகும் ‘வெள்ளாளப் பெட்டை’ சந்திராவை மணம் முடித்தவராகவே அடையாளம் காட்டப்படும் அத்தார், எப்போதும் புலிகளின் தவறுகளையே பூதாகரமாக்கும் (அவை உண்மையாக இருப்பினும்) சந்திரா என ஏராளமான உதாரணங்கள் இப்பிரதியில் உண்டு.

பிரேத துண்டங்கள் சிதறி விழும் ஒவ்வொரு முறையும் தப்பித்தலுக்கான வேட்கை மட்டும் குறைவதேயில்லை. அழுகையும் ஓலமுமாக கடக்கும் பக்கங்கள் அநேகம் இருப்பினும், விருப்பங்களின் பேயாட்டம் தசையை உந்தித் தள்ளுகிறது. மெலோட்ராமாவாகி விடக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இப்படைப்பில் உண்டு. ஆனால், கூரானதும் எளிமையானதுமான கதை கூறல் மொழி இதனை ஒரு செவ்வியல் ஆக்கமாக மாற்றுகிறது.

மனதின் மகத்தான பக்கங்களையும் அதன் மறுபாதியான சரிவுகளையும் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளனை போல, சயந்தன் பதிவு செய்தபடியே நகர்கிறார். தனது ரகசிய காதலனான மணிகண்டன் இறந்து கிடப்பதை கண்டு திகைத்து நிற்கும் ராணியிடம் அவளது மகள் ‘அழுது தீர்த்துடுமா’ என முதுகை வருடிக்கொடுக்கும் இடம் ஓர் உதாரணம். மலருக்கும் ராணிக்கும் இடையேயான நட்பும் உறவும் அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. இறுதி யுத்தத்தின் போது உண்டாகும் பிறழ்வுகளும் அகதி முகாம்களில் வாழ நேரிடும் அவலமும் மனிதம் மீது கட்டியெழுப்பப்பட்ட நம்முடைய நம்பிக்கைகளை கருணையுன்றி சிதைக்கின்றன.

இந்நாவலின் பலவீனங்கள் என்ன?

ஓயாத சண்டைகளுக்கிடையே வாழ நேரிடும் சாமான்யர்களின் வாழ்க்கையை அவர்தம் எண்ணவோட்டங்களை துல்லியமாக பின்தொடர முடிந்த ஆசிரியரால், போராளிகளுக்கிடையேயான அதிகார மட்டங்களையும் உறவுச்சூழலையும் அதே நேர்த்தியுடன் கட்டமைக்க முடியவில்லை. கனவுக்காட்சிகளுடன் தொடங்கும் பிற்பகுதி அத்தியாயங்கள் சலிப்படையச் செய்கின்றன. புலிகளுக்காக ஒரு முஸ்லிம் குடும்பத்திடம் உணவுப் டொட்டலங்கள் வாங்கிக் கொண்டு வருகையில், எதிர்ப்பட்ட ஆமிக்கும் வழி சொல்லிவிட்டு தப்பிக்கும் மயில்குஞ்சனில் வெளிப்படும் சுவாரஸ்யமும் பன்முக ஆளுமையும் ஏனைய ஆண் கதாபாத்திரங்களில் இல்லை. அவர்களின் பாத்திர அமைப்பு பெரும்பாலும் தட்டையாக அமைந்திருக்கிறது.

ஆதிரை நம்மால் கைவிடப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி. அவளது தியாகமும் மேன்மையும் உயிர்பெற்று தழைத்தோங்கட்டும். எத்தனை முறைகள் வீழ்ந்தாலும் மனித குலம் மீண்டெழும். ஏனெனில் இவர்கள் மக்கள் எனும் நம்பிக்கையை அத்தனை அவலங்களை கண்ட பிறகும் அழுத்தமாக விதைக்கும் இச்செவ்வியல் ஆக்கம், இருண்மையிடையே ஒளியை பாய்ச்சுகிறது. தமிழ் இலக்கியம் குறித்து பெருமிதம் கொள்ள மற்றுமொரு தருணம்.

வெளியீடு : தமிழினி பதிப்பகம்

By

Read More

பெயரற்றது – சிறுகதை

“ஓ.. பிரச்சனைதான். ஆர் என்னாக்கள் எண்டு ஒண்டும் தெரியாத கண்ட கண்ட நாயெல்லாம் வந்து கோயில் கிணத்தில குளிச்சிட முடியுமோ.. எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு. இது சாமிக்கு அபிசேகத் தண்ணியெடுக்கிற கிணறு.” என்ற கோயிற்காரர் “கொண்டா இங்கை” என்று வாளியை இவனிடமிருந்து பறித்து கயிற்றைக் கப்பியிலிருந்து கழற்றிய நேரம் இவனுக்குக் கோபம் கிளம்பியது.

சோப்புப் போட்டவரைப்பார்த்து குரலை உயர்த்தி “அண்ணை வாங்கோ, எனக்கு இயக்கக்காரரைத் தெரியும். போய்ச் சொல்லுவம். வெளிக்கிடுங்கோ” என்றான். இப்போது கோயிற்காரர் வாளியைக் கீழே பொத்தென்று வைத்துவிட்டு இவனை முறைத்துப் பார்த்தார்.

“அண்ணை நீங்கள் உங்கடை சித்தப்பாட்டைச் சொல்லுங்கோ. அவர் இயக்கத்தில பெரிய ஆளெல்லே..” என்று தீபன் சொன்னபோது அவர் கழற்றிய கயிறையும் வாளிக்குள் செருகி வைத்தார். “கலிகாலமாப் போச்சு. எல்லா ஆச்சாரமும் போச்சு.. ஆரார் எங்கையெண்டு ஒரு முறையில்லாமல் போச்சு” என்று புறுபுறுத்தவாறே கோயிற்காரர் பின்வாங்கினார். இவர்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் கோபமாக திட்டியபடி போவது தெரிந்தது.

இவன் கயிற்றைக் கப்பியில் கொழுவி வாளியை கிணற்றினுள் விட்டான். சோப்புப்போட்டவர் காய்ந்து போயிருந்தார். “தம்பி கொஞ்சத் தண்ணி ஊத்தடா” என்றார்.

“என்ன ஆளண்ணை நீங்கள், நாங்கள் சின்னப்பெடியளே துணிஞ்சு கதைக்கிறம். நீங்களும் சேர்ந்து ஒரு வெருட்டு வெருட்டியிருக்கலாமெல்லே.. அதை விட்டுட்டு பாத்துக்கொண்டு நிக்கிறியள்” என்றான் இவன். இயக்கத்திடம் கட்டாயமாக முறையிட்டிருக்க வேண்டுமென்றான் தீபன். அவர் உடலோடு காய்ந்து போன சோப்பு நுரையை தண்ணீரால் கழுவிக்கொண்டே சொன்னார்.

“விடுங்கோடா விடுங்கோடா.. அவருக்கு நானொரு வெள்ளாளன் என்று தெரியாது போலயிருக்கு.”

குளித்துமுடித்து வரும்போது முகாமில் போராளிகள் கையசைத்தார்கள். இவனது கைகள் தன்னியல்பாக அசைந்தன. அவர்கள் புன்னகைத்தார்கள். அப்பொழுது இவனது உதடுகள் “பாவங்கள்” என்றொரு வார்த்தையை தன்னியல்பாக உச்சரித்தன.

By

Read More

குற்ற உணர்வின் பிரேத பரிசோதனை: யதார்த்தன்

நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும் போர்கள் மாற்றியமைத்தன . ஈழம் அதற்கு விதி விலக்கல்ல.

மக்கள் தோற்ற தரப்பிற்கும் வென்ற தரப்புக்கும் இடையே முப்பது வருடங்களாக மாற்றப்படாத அதே முகங்களுடன் இன்னும் பொலிவிழந்து கிடக்கின்றார்கள். கொள்ளைகள் கற்பிதங்கள் எல்லாம் மேற்புல் மேயும் நம்பிக்கையீனம் கொண்ட மிருகங்களாகவே நிற்கின்றன. போராடியவர்களில் ஒரு தரப்பு உடல் உளம் இரண்டும் விதம் விதமாய் சிதைக்கப்பட்டு போர் மிருகத்தின் பல்லிடுக்குகளில் இருந்து நழுவி வீழ்ந்து கிடக்கின்றார்கள். யாரும் கடந்த காலத்தை ஞாபப்படுத்த தயாராக இல்லை , மறக்கவும் தான்.

தோற்று போனவர்களின் பிணங்களை வாசனை திரவியமிட்டு அரசியல் நடக்கின்றது . பிணங்களின் உள்ளே தேசத்தின் குற்றங்களும் காழ்புகளும் , தர்மமும் , அதர்மமும் , அறமும் , கொண்டாட்டமும் சீழ் பூசிக்கிடக்கின்றன. விட்ட பிழைகளையும் தீர்வுகளையும் உயிருள்ள வெற்று மூளைகளுள் தேடுகின்றது மனிதம் . இன்னும் அவை கடந்த காலத்தின் இடைவெளியில் நசுங்கி கிடப்பதை ஒரு சிலரே உணர்கின்றனர்.

போருக்கு பிந்திய இலக்கியங்கள் இன்று மெல்ல மெல்ல நம் பிணங்களை பிரேத பரிசோதனை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆறிப்போன வடுக்களுக்கு பின்னால் இன்னும் கட்டிபோய் கிடக்கும் சீழ்குப்பிகளை மெல்லம்மெல்ல உடைத்து பேனாக்கள் எழுத தொடங்குகின்றன. இவ்விடத்தில் தான் சயந்தனின் ஆறாவடுவும் நிற்கின்றது.

விடுதலை போராட்டத்தின் நேரடி சாட்சிகளில் பலதும் ஊமையாகி விட்டன. ஏனையவை தமக்கென தரப்புகளை தெரிவுசெய்து கொண்டிருக்கின்றன. போர்கால மற்றும் போருக்கு பிந்திய இலக்கியங்களில் பெரும்பாலானவை தரப்புகளை உன்னதமாக்கும் நுண்ணரசியலையே பேசுகின்றன, தனிமனித அறவுணர்வும் நேர்மையும் சோரம் போன இலக்கியங்களை சகட்டு மேனிக்கு கொண்டாடி தள்ளுகின்றது நம் சமூகம். ஆனால் அடிப்படை மனிதத்துவம் வாய்க்கப்பட்ட படைப்பாளிகள் மேற் சொன்ன மாசுக்களை நீக்கி விட்டு மேலெழுகின்றனர். சயந்தனை நான் இவ்வகையாறாக்குள் நிறுத்துகின்றேன்

ஆறாவடு பற்றி கதைக்க முதல் அண்மையில் வாசித்த இரண்டு போருக்கு பின்னரான இலக்கியங்களை நான் இங்கு குறிப்பிட வேண்டும் ஒன்று தமிழ்கவி யின் “ஊழிக்காலம் ” இன்னொன்று சாத்திரியின் ஆயுத எழுத்து . என்னை பொறுத்த வரை அடிப்படை மனித அறம் , நல்ல இலக்கிய பரிச்சயமற்ற மோசமான நபர்களால் எழுதப்பட்டவை இவை இரண்டும் . இரண்டும் செய்வது மேலே சொன்ன பிண அரசியலை தான். தமிழ்கவியின் குழப்பம் மிக்க தரப்பு தொடர்பான நிலையும் , சாத்திரியின் வீரசாகச மனநிலையும் மட்டும் எஞ்சும் மோசமான படைப்புக்கள் இவ்விரண்டும் .

இதை நான் இங்கே சுட்டிகாட்ட காரணம் ஊழிக்காலமும் , ஆயுத எழுத்தும் சயந்தனின் ஆறாவடுவிற்கு பிற்பட்டவை. அண்மையில் சயந்தனை சந்தித்த போது “நாவல் எழுதி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது அதன் கருத்தியல் சார் நிலைப்பாடுகளில் நான் இன்னும் மாற்றமடைந்து விட்டேன் ” என்றார். நாவலை வாசித்து முடித்ததும் எனக்கும் அவர் சொன்னது சரி என்றே பட்டது.

நான் ஆறாவடு நாவலை இரண்டு நிலைப்பாடுகளில் வைத்து பார்க்க முற்படுகின்றேன்.

நாவலின் எடுத்துரைப்பு முறை
நாவலின் நுண்ணரசியல்

01 நாவலின் எடுத்துரைப்பு முறை சமீபத்திய ஈழத்து நாவல் வளர்ச்சியில் முன் நிற்கின்றது என்று சொல்லலாம் .ஆனால் கதை சொல்லியின் அமைப்பு சார் நிலைபாட்டில் இன்னு நுணுக்கம் தேவைப்படுகின்றது. பெயர்கள் மூலம் முடிச்சுக்களை அவிழ்த்து செல்ல முற்படுகின்றார் சயந்தன் , ஷோபாசக்தியின் கதை சொல்லும் பாணியை இடைக்கிட தொட முற்படுகின்றார். லீனியர் வகை எழுத்திற்கும் நொன் லீனியர் வகை எழுத்திற்கும் இடையில் நகர்கின்றது நாவல் . யாழ்ப்பாண மக்களின் பிரத்தியே காலப்பின்னணியில் அமைந்த மொழிநடையை சயந்தன் நன்கு உள்வாங்குகின்றார். போராளிகளுக்கும் –மக்களுக்கும்-காலத்துக்கும் இடைவெளி கொடுக்கும் இடங்களில் சயந்தனின் சொல்லாட்சிகள் நின்று வேலைசெய்கின்றன. நான் படித்த அளவில் ஷோபாவிற்கு பிறகு சயந்தனிற்கு யாழ்பாண மொழி இயல்பாய் வருகின்றது.

கதை சொல்லும் போது இடையறும் இடங்களில் அங்காங்கே சில இடங்களில் நொன்லீனியர் தன்மை குழப்பங்களை ஏற்படுத்து கின்றது ,சாதாரண வாசகன் அவ்விடங்களில் புத்தகத்தை பிறகு படிக்கலாம் என்று மூடிவைத்து விட்டு போகக்கூடும்.

02 அடுத்து நாவலின் பேசு பொருளில் நுண்ணரசியலை அவதானிக்க வேண்டும் தமிழ்கவியின் சந்தர்ப்பவாத புலி எதிர்ப்பு குழப்பமோ , சாத்திரியின் பழைய புலி சாகசமோ இங்கே பேசப்படாதது இந்நாவல் எனக்கு தந்த மிகப்பெரும் மனத்திருப்தி.

சயந்தன் தரப்பொன்றில் நிற்பதை விரும்பவில்லை கடந்த காலத்தை மனிதத்துவத்தின் மீது நின்று பார்கின்றார் . தவறுதலாக குற்றம் செய்து விட்ட ஒரு குழந்தையின் வீறுடுகை நாவலெங்கும் இடைக்கிட எழுகின்றது . சம்பவங்களை சொல்லி முடிக்கும் போதெல்லாம் சொல்லிய சம்பவங்களில் மேலெழும் அதர்மங்களுக்கும் , குற்றங்களுக்கும் மேலே தன் குற்ற உணர்வை ஊற்றி அவற்றை மூடிவிடப்பார்க்கிறார்.சயந்தனின் கதாநாயகன் மீது காலம் திணித்ததையும் சரி அவனே எடுத்து கொண்டவையையும் சரி ஒரே தளத்தில் நிறுத்துவது நெருடுகின்றது.

முன்னுரையில் “பதுங்கு குழியற்றவாழ்வினை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர் பார்த்திருந்தார்கள் முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன , சனங்களின் முகங்களில் போர் அமிலமாய் தெறித்தது” ஆனால் இங்கே மக்களின் கருத்து நிலை குழப்பமான ஒன்றாகவே நிலைகின்றது. தலைமைகளும் காலமும் சிதைத்த போராளி ஒருவன் ஆற்றாமையின் முடிவில் குற்ற உணர்வின் மூலமாக ஞானமடைய துடிக்கிறான். அவனுடைய முடிவே அவனுடைய ஞானம் என்கின்றார் ஆசிரியர்.

கடைசி அத்தியாயம் அமைப்பு ரீதில் நன்றாக இருந்தது. அதேபோல் காலபெருவெளியில் கரைந்து போகும் ஒட்டுமொத்தத்தின் வடிவமாய் அதனை செய்திருக்கிறார் சயந்தன் . போர்காலம் பற்ரி எழுதப்படும் அத்தனை நாவலுக்கும் அந்த அத்தியாயத்தின் கருத்து நிலையை பொருத்தி விடலாம் .
சயந்தனின் ஆறாவடு என்பது புறக்காயம் மட்டும் ஆறிய அடிக்கடி தோண்டி தோண்டி குருதி யும் ஒழுகும் மனித குற்ற உணர்வினதும் தீர்வற்ற முடிவிலியாகிவிட்ட வாழ்வினதும் அடையாளமாகும்.
-யதார்த்தன் –
தினக்குரல் 23.08.2015

By

Read More

× Close