எஸ்.வாசன்

By ஆதிரை

“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும் அவையனைத்துமே வாழ்வின் மோசமான உண்மைகளைக் கற்று தருபனவாக இல்லாதிருந்த போதிலும் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் சில வேளைகளில் அமைந்ததுண்டு. அவற்றில் அண்மையில் வெளிவந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ எனும் மகா நாவலைக்குறிப்பிடலாம். அது கடந்த பல தசாப்த காலமாக நீடித்த ஈழப்போரின் பின்னணியில் மறைந்திருந்த பல மோசமான உண்மைகளையும் வரலாற்றையும் விபரித்துக் கூறிச்சென்றது. இப்போது சயந்தனின் ‘ஆதிரை’ எனும் 664 பக்ககங்கள் அடங்கிய கனமான தடித்த நாவலொன்று எமது பார்வைக்கு கிட்டியுள்ளது. இது வாழ்வு குறித்தும் வரலாறு குறித்தும் எத்தகைய உண்மைகளை வெளிக்கொணரப் போகின்றது என்ற ஆவலுடனேயே இந்நூலினில் நாம் உள் நுழைகிறோம்.

இன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. அர்த்தம் சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ஆறாவடு நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது. இப்போது இவரது இரண்டாவது நாவலாக ‘ஆதிரை’ வெளிவந்துள்ளது. தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நாவல் முன்னுரை, முகவுரை, மதிப்புரை, அணிந்துரை என மரபு சார்ந்த மதிப்பீடுகள் எதுவுமின்றி வெறும் மொட்டையாக வெளிவந்திருப்பது விசனத்தை ஏற்படுத்துகின்றது. பல வருடங்களுக்கு முன்பு காலம் இலக்கிய சஞ்சிகையில் சயந்தனின் ‘புத்தா ’ என்ற சிறுகதையொன்று வெளிவந்தது. தலைநகரில் கைது செய்யப்பட்டு சிங்கள பொலிசாரினால் சித்திரவதை செய்யப்படும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினை சேர்ந்த ஒருவனின் கதையாக விரிவடையும் இச்சிறுகதையானது அவனிற்கு அடைக்கலம் கொடுத்த ஒரு சிங்களத்தாயின் கைதுடனும் அலறலுடனும் முடிவடைகின்றது. இச்சிறுகதையினை ஆரம்ப அத்தியாயமாகக் கொண்டு இக்கதையின் நாயகனையே பிரதான பாத்திரமாகக் கொண்டு சயந்தன் தனது கதையை விரிவாக்கம் செய்கிறார். அதுவே எமக்கு ‘ஆதிரை’ ஆகக் கிடைகின்றது.தலைநகர் கொழும்பில் ஆரம்பித்த இக்கதையானது காலத்தின் பின் நகர்வுடனே மலையகம் நோக்கி நகர்ந்து மலையகத்திலிருந்து இனக் கலவரம் காரணமாக வன்னி நோக்கி இடம்பெயரும் ஒரு குடும்பத்தின் கதையாக வளர்கின்றது. வன்னியை வந்தடையும் அக்குடும்பமும் வன்னி நிலப்பரப்பில் தொடரும் அவர்களது வாழ்வும் அவர்களோடு இணைந்த வன்னி மக்களின் வாழ்வாகவுமே இந்நாவல் விரிவடைகின்றது. ஆனால் இங்கு பிரதான மையப் பொருளாக பல தசாப்த காலமாக நீடித்த ஈழவிடுதலைப் போர் கதையை நகர்த்தி செல்கின்றது.

இது ஒரு வரலாற்றுப் புனைவு. ஈழப்போரில் இடப்பெற்ற படுகொலைகளினதும் கொடுந்துயரங்களினதும் வரலாற்றை சாமான்ய மக்களின் சாட்சியங்களாக இக்கதை குறுக்குவிசாரணை செய்கின்றது. வீர, தீர செயல்களுக்கும் மயிர்க்கூச்செரியும் தாக்குதல்களுக்கும் குறைவில்லாத இவ்வீர வரலாறானது ஒரு இனப்படுகொலையுடன் முடிவடைந்த பின்னர் இது எஞ்சி நிற்கும் அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகின்றது. போரை நடித்தியவர்களை மட்டுமன்றி, போரிற்கு ஆதரவு நல்கியோர், எதிர்ப்புத் தெரிவித்தோர், நடுநிலை வகித்தோர், போரை விட்டு இடை நடுவில் தப்பியோடியோர், என அனைத்து தரப்பினரையும் இது கேள்விக்குள்ளாக்குகின்றது. மௌனமாக இருந்தோரையும் கூட இது விட்டு வைக்கவில்லை.
தியாகங்களுடனும் இழப்புக்களுடனும் அர்ப்பணிப்புகளுடனும் வீரமரணங்களுடனும் பயணித்த ஈழவிடுதலைப்போராட்டமானது பல்வேறு காலகட்டப்பகுதியில் உட்கட்சிப் படுகொலை, சகோதர இயக்க படுகொலை, கட்டாய ஆட்கடத்தல் என்ற இன்னுமொரு தவறான படிக்கட்டிலும் பயணித்தது. இவ்விரு வேறு திசைகளில் பயணித்த இப்போராட்டத்தின் இடைநடுவில் சிக்கிக்கொண்ட மக்கள் கேட்ட நூறாயிரம் கேள்விகளுக்கான விடைகளாக இந்நாவல் விரிவடைகின்றது.

மேலும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை வர்க்க முரண்பாடுகளை இது சாடுகின்றது. எல்லாவற்றிட்கும் மேலாக இது ஆடம்பரமானதும் சுயநலமிக்கதுமான யாழ்ப்பாணக் கலாச்சாரத்தினை எள்ளி நகையாடுகின்றது. அதன் சாதீய சிந்தனைகளை தப்பியோடும் சுயநலப் போக்கினை கேள்விக்குள்ளாக்கின்றது.

நாமகள், ராணி, மலர், வினோதினி, சந்திரா, வல்லியாள் என மிக அதிகமான பிரதான பாத்திரங்களாக பெண்களைக் கொண்ட இந்நாவலில் பெண்களின் குரல்கள் மிக அதிகமாக ஓங்கி ஒலிக்கின்றன. இவைகளில் சில அழகுரல்கள் ஆகவும் சில போர்ப்பரணிகளாகவும் விளங்குகின்றன. மீண்டும் மீண்டும் விளிம்பு நிலை மக்களே போராட்டித்தில் ஈடுபடுகிறார்கள் என்பதும் அவர்களே இப்போரினால் அதிகம் பதிக்கப்படுகிறார்கள் என்பதும் போரினை ஆரம்பித்த மேட்டுக்குடி மக்கள் இடைநடுவில் சாதுரியமாக தப்பிவிட்டார்கள் என்பதும் இந்நாவல் அதிகமாக தெரிவிக்கும் செய்தி. இவர்கள் உரையாடல்களிலும் உணர்வுகளிலும் தெறிக்கும் உண்மைகளும் கோபாவேசங்களும் அனைவரையும் கேள்விக்குள்ளாகின்றது.

“தம்பிக்கு என்னை விடவும் மூண்டு நாலு வயசு கூடத்தான்.—-தன்னை நம்பி வந்து செத்துப்போன பிள்ளையளின்ரை கனவைப் பற்றி யோசிச்சுக் கொண்டிருந்தவர்,, தன்னை நம்பி உயிரோடை இருந்த சனங்களுக்காகவும் யோசிச்சிருக்கலாம்.” – இது பிரபாகரன் மீது சிவராசன் வைக்கும் விமர்சனம்.

“போராட்டத்தை தொடங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடாத கொஞ்சப்பேரில் நானும் ஒருவன். போராட்டத்தை தொடர்ந்து நடத்திட்டு கடைசியில் செத்துப் போகாத கொஞ்சப் பேரிலயும் நான் ஒருவன்.”- இது சிவராசன் தன் மீது தானே வைக்கும் விமர்சனம்.

“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும். அத்தார் எண்டு கூப்பிடுவினம். ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர்.” – கொத்துக் கொத்தாய்க் கொலைகள் நடைபெறும் போர்க்களத்தில் இருந்து அத்தாரின் சிதைந்த உடலைப் பார்த்து ஒரு நடுத்தர வயதுக்காரர். யாழ்ப்பாணத்து சாதியத்தின் வலிமையை இதைவிட தெளிவாக யாரும் விபரித்து விட முடியாது.

“சனங்கள் இனிப் போறதுக்கு வழியில்லை. கடைசிவரையும் நிண்டு சாவம் எண்டுறதை நீங்கள் வீரமா நினைக்கலாம். அதுக்காக.. வாழ ஆசைப்படுகிற சனங்களையும் உங்களோடை உடன்கட்டை ஏறச்சொல்லி வற்புறுத்தேலாது.” – இது இதற்கு மேலும் ஓட முடியாது என்கிற போது சந்திரா இயக்கம் மேலே வைக்கும் விமர்சனம்.

“நாங்கள் இப்படி பம்பலா இருக்கிறதை பார்த்தா வெளிநாட்டிலை இருக்கிறவை எங்களைத் துரோகியாத்தான் பாப்பினம்.” – தடுப்பு முகாமில் இருந்து ஒரு போராளி.

இவை யாவும் இந்நாவலின் கதை மாந்தர்கள் தமது உரையாடல்கள் வாயிலாக வெளிப்படுத்திய விமர்சனங்கள். மேலும் இது ‘அவர்கள் வேறு கண்ணீரைத் தேடித் போனார்கள்.’ என்ற வரிகள் மூலம் மக்களின் கண்ணீரை காசாக்கும் ஊடகங்களை ஏளனம் செய்கின்றது. அத்துடன் ஒரு இளம் பெண்ணின் படிப்பு செலவுக்கு லண்டனிலிருந்து மாசம் ஆயிரம் ரூபாவை அனுப்பிவிட்டு தினமும் தொலைபேசியில் தொந்தரவு செய்யும் லண்டன்காரரை பரிகசிக்கின்றது. கோழி வளர்ப்பதற்கு நிதி உதவி செய்துவிட்டு கோழி வளர்ப்பு சரியில்லை என்று திட்டிவிட்டு போன அவுஸ்திரேலியா குடும்பத்தை நையாண்டி செய்கின்றது.

“போன கிழமை சந்திரா ரீச்சரிட்டை படிச்சதெண்டு சுவிசிலிருந்து சயந்தன் எண்டு ஒருத்தன் வந்தவன். கதை எழுதுறவனாம். ரீச்சர் எப்படி செத்தவ —எண்டெல்லாம் கேட்டு தண்ர டெலிபோனில ரெக்கோட் செய்தவன்”

“ஏனாம்?”

“தெரியேல்லை. சனம் உத்தரிச்சு அலைஞ்ச நேரம் கள்ளத்தோனியிலை வெளிநாட்டுக்கு போனவை இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு ஒவ்வொருத்தனா வந்து விடுப்புக் கேக்கிறாங்கள்”- இது சயந்தன் தன் மீது தானே குற்றவுணர்ச்சியுடன் வைக்கும் விமர்சனம்.

ஒரு படைப்பையும் படைப்பாளியையும் அணுகும் போது அறம், அழகியல், கோட்பாடு என்ற கருதுகோள்களை அளவீடாக கொள்வது உலக நியதி. இந்நாவலில் அழகியலை நாம் நோக்கும்போது சயந்தன் தனது தனித்துவமான அற்புதமான படைப்புமொழியுடன் கூடிய ஒரு உன்னத தளத்தில் உலவுவதை அவதானிக்க முடிகின்றது. ஆரம்ப அத்தியாயங்களில் வன்னி நிலப்பரப்பின் இயற்கை அழகினையும் தான் அறிந்த அனைத்து வாழ்வு முறைகளையும் வாசகர்களிடம் முற்று முழுதாக கையளிக்க எண்ணி மிக அதிகளவு வர்ணனைகளை திகட்டுமளவிற்கு அள்ளித்தெளிக்கிறார். அதன் பின் அவர் ஒரு இயல்பான ஒரு தனித்துவமான நடையில் பயணம் செய்கிறார். ஒரு புதிய படைப்பு மொழி மூலம் தன் நாவலை நகர்த்தும் இவர் தனது முந்தைய படைப்புக்களைத் தோற்கடித்து ஒரு முன்னேறிப் பாய்ச்சல் ஒன்றினை மேற்கொள்கிறார். இவர் தனது கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை வரித்துக் கொள்கிறார். இதுவும் இங்கு தெளிவாகத் தெரிகின்றது. இது இவரது தெரிவு. இதனையும் நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அறம் என்று வரும்போது இவர் தனது எழுத்தில் சற்றே வழுவி நிற்பது புரிகின்றது. சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத்தாலும் பாதிக்கப்படும் இவரது கதை மாந்தர்கள் ஒரு போதும், இவர் விடுதலைப் புலிகளின் பல அராஜக நடிவடிக்கைகளை குறிப்பிட்டிருந்த போதும் அந்நடவடிக்கைகளால் பாதிப்படைவதில்லை. முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், டெலோ இயக்க அழிப்பு, கட்டாய ஆட்சேர்ப்பு என்பவையெல்லாம் இவரது கதை மாந்தர்கள் யாரையும் பாதியாமல் ஒரு புள்ளியாகக் கடந்து போகின்றன. இது உண்மையில் தான் கடைப்பிடிக்கும் கோட்பாட்டை காப்பற்ற சற்றே ஒதுங்கி நிற்கும் தந்திரம்.

இறுதியாக ‘ஆதிரை’ காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட நாவல் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. நடந்து முடிந்தது ஒரு கொடுந்துயரம். இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். அதற்கான தார்மீகப் பொறுப்பை நாம் அனைவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இந்த குற்றவுணர்வு அனைவரிடமும் எழுதல் வேண்டும். இக்குற்றவுனர்ச்சியை ஒவ்வொருவரிடமும் விதைப்பதில் சயந்தன் வெற்றி பெறுகிறார்.
http://www.geotamil.com

Last modified: February 15, 2016

Comments are closed.

No comments yet.

× Close