அஷேரா! காலங்கடந்தும் வாழவல்ல ஒரு படைப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் சயந்தனின்  ஐந்தாவது நூலும்  மூன்றாவது நாவலுமாகிய அஷேராவை வாசித்துமுடித்த சூட்டோடு இந்தக் குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தது ஒருவகையில் தற்செயலானதே. அவரது  சிறுகதைத் தொகுப்பான அர்த்தம்,  நாவல்களான ஆறாவடு, ஆதிரை  ஆகிய நூல்களை  நான் ஏற்கனவே வாசித்திருந்த போதும், ஆறாவடு  நாவலைத் தவிர, மற்றைய நூல்கள் பற்றி ஏதாவது குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. இப்போது,  இந்த நூல் பற்றி. மீண்டும் கலைமுகத்தின்  இதே பத்தியில் எழுதும் சந்தர்ப்பம் வந்தபோது முன்பு எழுதியது ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நூலை வாசித்தபோது, அது என்னுள் ஏற்படுத்திய அதிர்வும், அதன் கதை சொல்லும் அழகும், அவரை ஒரு நல்ல கதை சொல்லியாக அடையாளம் காட்டின. அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒவ்வொன்றும்  தனித்தனியே நல்ல சிறுகதைகளாக அமைந்திருப்பதாகவும்,  அதேவேளை ஒரு நாவலுக்கேற்ற வகையில் வகையில் சீராக ஒழுங்கமைக்கப்படவில்லை என்றும் எழுதியிருந்தேன். அவருடைய நூலையும், யோ.கர்ணனினது நூலையும் அடிப்படையாக வைத்து எழுதிய அந்தக் குறிப்பில், அவர்கள் இருவரது அனுபவமும் ,அறிவுடன் இணைய,  தேடலும் விரிவடையும் என்றும் அப்போது அந்த விரிவு இரண்டு அற்புதமான படைப்பாளிகளை நமக்கு  உருவாக்கித் தரும் என்றும் எழுதினேன். எனது அந்த நம்பிக்கை, நான் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே சிறப்பாக நிறைவேறியிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக  அமைந்திருக்கிறது சயந்தனின் இந்த நாவல் ஆஷேரா.

சயந்தனின் கதை சொல்லும் முறையும், கதை சொல்லும் மொழியும்  அவரது தனித்துவமான முத்திரைகள். அவரது கதா மாந்தர்களை வைத்து அவர் கதை சொல்லவில்லை. அந்தக் கதா மாந்தர்கள் இரத்தமும் சதையுமான தமது சுயத்துடன் எங்கள் முன் நடமாடுகிறார்கள். வாழ்வின் நியாயங்கள், அவை பற்றி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள், அவற்றைப் பேணுதலும் மீறுதலும் பற்றிய நியாயங்கள், ஆசாபாசங்கள் என்று அவர்கள் எதையும் எங்கள் முன் ஒளித்துவைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் மிக எளிமையும், நட்புணர்வும், கோபமும், இயல்பான நகைச்சுவையும் கொண்ட சாதாரண மனிதர்கள். பெரிதும் உணர்வுகளால் வழிநடத்தப்படுபவர்கள். கழிவிரக்கத்தில் தவிப்பவர்கள். யுத்தம் ஏற்படுத்திய, இயல்பான அமைதி அறுந்துபோன வாழ்வியல் நெருக்கடியின் சுமையை தம் மனதின் அடியாளத்தில் சுமந்தபடி பெரும் அலைக்கழிவுடன் நடமாடுகிறவர்கள். இந்த நாவல் ஒரு  பெருங்கதையல்ல; ஒரு குடும்பத்தின் அல்லது குழுமத்தின் வரலாறு அல்ல; அல்லது சில இலட்சிய கதைமாந்தர்கள் பற்றிய புனைவும் அல்ல. இது ஒரு தேசத்தின் பெரும் யுத்த காலகட்டத்தில் வாழ்ந்து சிதறுண்ட, தம்முள் ஏதோ ஒருவகையில் தொடர்புள்ள, ஒரு சில மாந்தர்களை, அவர்களின் அவலங்களை, அலைக்கழிவுகளைப் பேசுகின்ற ஒரு சமூகத்தின் கதை. அந்தவகையில் அது யுத்த பூமியிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் சுவிஸ் நாடு வரையான பல விதமான ஒன்றுடனொன்று மாறுபட்ட சூழ்நிலைகளில் அந்த மாந்தர்கள் வாழ்வதற்காக நடாத்தும்- தாம்  விரும்பாமலே பெரும் மலையாக அவர்கள் முதுகில் அழுத்திக் கொண்டிருக்கும் கடந்தகால துயரச் சுமைகள் ஏற்படுத்தும்  மன அழுத்தங்களுடன்  நடாத்தும்-  போராட்டங்களுடனான வாழ்வு பற்றிய சித்திரம் இது.

யுத்தத்தின் பின்னான  காலத்தில் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் படைப்பாளிகளால் எழுதப்பட்ட நாவல்களின்  இரண்டாம் கட்ட நாவலாக இதைக் கூறலாம். புலம்பெயர்ந்து வந்தபோதும், அவர்களால் இன்னமும் புலம்பெயர்ந்த நாடுகளுக்குரிய மனிதர்களாக வாழ முடியாமல், அதற்காகத் தம்மைத் தகவமைக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்காக, தம்மைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் புலத்து நினைவுகளுடன் போராடுகின்ற, அடுத்தகட்ட வாழ்வின் ஆரம்பக் கால கட்டத்தையும் அதன் சவால்களையும் பேசுகின்றது இந்த நாவல்.

சயந்தனது மொழி மிகவும் இயல்பானது, காட்சிகளால் கதையை நகர்த்துவது. கதை நடக்கும் ஒவ்வொரு புள்ளியும் மிகத்துல்லியமான  காட்சியாக விரியும் சிறப்பான காட்சிப்படுத்துதலைக் கொண்டது. பாத்திரங்களின் உருவங்கள், குணாதிசயங்கள், அவர்களது நடத்தைகள் அவர்களது நினைவோட்டங்கள் போன்ற அனைத்தையும்  காட்சிகளாகவே விரித்துக் காட்டுகின்ற மொழி.

இந்த நாவல் குறிப்பாக எந்தக் கதையையும் சொல்லவில்லை, எந்த வரலாற்றையும் கூறவில்லை, எந்த கதைசொல்லல் உத்திகளிலோ அல்லது திருப்பங்களிலோ அது தங்கியிருக்கவில்லை. அது நம்முன் யுத்த கால சூழலில் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டு அதிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு அலைந்த மனிதர்கள் சிலரின் வாழ்க்கையை மையாமாகக் கொண்டு  ஒரு இரண்டு தசாப்தகாலத்திய அவர்களது  வாழ்க்கையை எம்முன் திறந்து காட்டியிருக்கிறது. அருள்குமரன்,அற்புதம், அபர்ணா, அவந்தி, ( சயந்தனுக்கு இந்த அ’ வரிசையில் என்ன ஒரு விருப்போ புரியவில்லை)  என்று நீளும் பாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்கள், அவர்கள் இயங்கிய பிரதேசங்கள், குறிப்பான வாழ்விடங்கள் என்று எல்லாம் இந்த வரலாற்றை விரித்துக்காட்டும் வெவ்வேறு அடையாளப் புள்ளிகள்.

இந்த நாவல் பற்றி இதுவரை பல வாசிப்பனுபவக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.  பல்வேறு கோணங்களிலும் ஒரு பரவலான விரிவான உரையாடலுக்கு உரிய ஒரு நாவல் இது என்ற முறையில் இன்னும் பலவும் எழுதப்படக் கூடும். எழுதப்பட வேண்டும். காலம் கடந்து வாழும் ஒரு நாவலுக்கான அனைத்துச் சிறப்புகளையும் கொண்ட ஒரு நாவல் இது.

இது ஒரு அறிமுகக் குறிப்பு என்ற விதத்தில் இப்போதைக்கு இவ்வளவு போதும். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நாவல். வாழ்த்துக்கள் சயந்தனுக்கு!