அஷேரா! மனதின் தீராத இருட் கயத்தில் முட்டி பய முறுத்தும் சாவின் தொடுதல் – கோணங்கி

திராட்க்ஷை ஜாரில் 243-ஆம்பக்கத்தில் தோன்றும் கிழவன்தான் இந்த அஷேரா நாவலின் தீர்க்கதரிசியாக வந்து மறைகிறான். இந்த ஈழ மண்ணின் குருதியுடன் பிசைந்து வடித்த இந்த பழஞ்ஜாடிக்குள் அஷேராவின் கதா உருக்களெல்லாம் ஜாடியின் சுவர் வழியே கசிந்து வந்து திரும்பவும் உள்ளே மறைந்து விடுகிறார்கள்.

எல்லாக் கொடுமைகளையும் தாங்கி உடைபடாத ஈழ ஜாடியை அருள்குமரன் நீல நிறக் குறிப்புகளால் இருட்டிலும் பின்னிரவுகளிலும் தாள்களில் யாருக்கும்தெரியாமல் எழுதியெழுதிப் பலியான ஈழ விக்ரகங்களுடன் மறைத்துவைத்திருக்கிறான். தேனில் ஊறிய பூச்சிகளின் தித்திக்காத மரணம் தன் சாவின் சுவைதான்மறைந்த காலங்களின் ஓடிய ஜனங்களின் பாதைகளில் காத்திருந்தன.

அத்தனை போராளிகளும் சாவின் சுவையை ஏற்கனவே அவர்கள் உணர்ந்து விட்டிருந்தார்கள். தகன பலியையும் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் படையலிட்டார்கள். ஓர்அநீதிக்குச் சாட்சியாய் இருக்க நேரிட்டதாக மன்னிப்புக் கோரினார்கள். வன ராக்கினியான மாதாவே இக்குழந்தைகளுக்கு உன் உதிரத்தை காணிக்கையாய் அருளும் என்றார்கள். குழந்தைகளை அஷேராவின் மடிக் குருதிக்குள் கிடத்தினார்கள். சர்ப்பங்கள் கேஸத்தின் நின்று இறங்கிச் சென்றன. குருதி பாலாயிற்று. அஷேரா முப்பத்தியெட்டுக் குழந்தைகளையும் தன் முலை முகங்கள் திறந்த பால்ப் பாதையில் மறைந்தும் மறையாத விண்மீனின் பாதையில் கூட்டிச் செல்கிறாள்.

முப்பத்திரெண்டு பிஞ்சுக் கைகளால் அத்தனை முலை முகம் நெருடா மழலைகளின் மென்னகையுடன் கீறிக் கொண்டிருக்கிறார்கள். அவளது கை வரைக்கும் தன்யங்கள் ஒளிர்கின்றன. அஷேரா நாவலை ஈழத் தாய்களின் பால் பாதையில் ஒன்றையொன்று கோடு போட்டு விண்மீன்கள் நீந்தி வருகின்றன. எழுதும் விரல்களோடு இங்கு இல்லாமல் போனவர்களின் விரல்களே வந்து எழுதி மறைகின்றன. அந்த ஊர்களில் சிதறிக்கிடக்கும் வீடுகளில் இருந்தவர்கள் பலரும் நடந்து கொண்டிருக்கிறார். அவர்களின்றி ஒருபோதும் எழுத முடியாது.

இந்த நாவலின் அமானுஷ்யங்களையும் இறந்தவர்களின் கையெழுத்து இரகசியங்களையும் இரவிரவாய் சுடப்பட்டவர் குருதி மைதொட்டுத் தோன்றும் காகிதங்கள் சோளகக் காற்றின் ரத்த வாடை வீசும் இந்த நாவலின் கச்சாங்காற்றின் நிழல்களாய்ப் புரண்டு கொண்டு இருக்கிறது.

அழித்து அழித்து எழுதும் எழுதியவுடன் மறைந்துவிடும் அத்தியாயங்கள். அருள்குமரன் கண்காணிப்பில் இருந்து தப்பிய சில காகிதங்கள் அஷேரா நாவலாகியுள்ளன. பல அத்தியாயங்களைக் காணவில்லை. சில அத்தியாயங்கள் அழிந்துள்ளன. மறையாத பல துண்டுக் காகிதங்கள்.

வடதுருவத்தில் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட அருள் குமரனுடைய பலியான கதாபாத்திரங்களின் சருக்கக் குறிப்பு வரைபடங்கள் ஒட்டிய அட்டவணையிடப்பட்ட திரட்டுப்படுத்தப்படாத அங்காதி பாதங்கள் துண்டிக்கப்பட்ட பின் அவை தானே எழுதியவையும் என்ன வேண்டுமெ ன்று கேட்க ஆளற்றுப் போனவர்களின் குறிப்புகளில் இவர்கள் தனியே எழுதிவைத்தவையும் எங்கே மறைந்துள்ளன.

பெண்களின் எழுதாமைப் புத்தகங்களும் மையிட்டு எழுதியவைகளும் காணாமல் போய்விட்டன. எழுதப்பட்டுள்ள துண்டுக் காகிதங்களின் ஈழநாட்டின் மரித்தோர் சந்தில்தான் நாவலாசிரியர்களும் அடைக்கலமாகி உள்ளனர். அந்த மரித்தோர் டைரிகளும் கிடைக்கவில்லை. பனிமலையில் இருந்து பாபிரஸ் துண்டுகளாய் உயர்ந்த சாவு நடுங்கும் சிகரத்தில் படிந்த கால அமைதியில் அங்கே மறைந்த மிகப்பலரும் மௌனமுற்றிருக்கின்றனர்.

அழிந்த மண் விரல்களால் மீண்டு வந்து எழுதிக் கொண்டிருக்கின்றன.. பூமத்திய ரேகையில் யுகங்களுக்கிடையே குருதியின் மொழியைச் சுவரியபடி தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கைத் தீவத்திற்கும் மேற்கு தேசத்துக்கு யுத்தத்தில் அவலங்களோடு வெளியேறியவர்களும் அவர்களோடு ஊர்ந்து வரும் குருதியின் உரையாடல் முனகலாய்ப் பின்னணியில் மங்களாக் கரைந்து சாவின் குளிர் ஒலியிடுகிறது.

மோகார்த்தென் எல்லையில் ஏகெரி என்ற இந்த ஏரிக்கரை ஓரத்தில் அணிவகுத்து நின்ற நள்ளிரவில் கண்ணாடித் தகடு போல உறையக் காத்திருக்கும் ஏரி கடும் குளிரில் விறைத்துக் கொண்டு கிடக்கிறது. கரையோரச் சதுப்பு ஓநாயின் ஓடும் கால் புதர்களை மோப்பமிட்டு எழுதப்பட்டுள்ள நாவலாக நிலத்தில் இருந்து செங்குத்தாக மேலே ஏறி மலையுச்சியிலிருந்து மஞ்சள் ஓநாய்களின் ஊளை இறந்த வீர்களின் ஆவிகளையும் பனிப்புயலையும் எழுப்புவதைக் கண்டேன் என் வாசிப்பின் சதுப்பு நரியின் ஓட்டத்தில். உப்புக் கால்களால் ஓடும் நரிகளின் வாசிப்பு விசித்திரமானது. சதுப்பு ஓநாயின் கால் தடங்களைத் தொட்டு நகரும் சில பக்கங்களில் துருவநிலத் தோற்றங்களும் யாழ்ப்பாணச் சுண்ணாம்பு வளமும் வன்னி நிலத் தோற்றங்களில் கசியும் செம்மண் வளமும் மூன்றும் ஒன்று கடந்துவிடும் மாயத்தை அடைவதற்கு மூன்றும் இடைவெளி காண்கிற விபத்திலிருந்து சற்றே தப்பினாலும் அஷேரா நாவலில் மூன்று நிலவெளிகளும் மாயமும் யதார்த்தமும் தனித்தனியே இருந்தும் மரணத்தில் கலந்தும் இருள்வீசும் அதற்குரிய ஆழத்தைப் பெற்றுள்ளன என்பதில் சந்தேகமில்லை.

வெப்ப மண்டலத்தில் இருந்து போன ஒரு படைப்பாளி செயந்தன் ஒரு செம்மறி ஆட்டைத் தோளில் சுமந்தபடி தன் குற்ற மகஜரோடு தண்டனைக்குக் காத்திருந்த துயரப்பனி வீசிய நடுக்கத்துடன் “அற்புதம்” குற்றத்தை ஒப்புக் கொள்வதாகச் சொன்னான். “நீங்கள் வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா” என்று திருமதி கஸ்பார் கேட்ட போதும் அடுத்து நிற்கும் இவரையும் “அது உங்களுடைய விலங்குப் பண்ணை என்ற ரீதியில் நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா” என்று திருமதி கஸ்பார் கேட்டார். தீர்ப்பை வழங்கும் முன்னர் ஏதாவது சொல்வதற்கு இருந்தால் அதனை இந்த நீதிமன்றம் கரிசனையோடு கேட்க விரும்புகிறது என்றார். இது என்ன புது பழக்கம் என்னுடைய வாழ்க்கையில் எல்லாத் தீர்ப்புகளும் என்னிடம் கேட்காமல் தான் வழங்கப்பட்டன இதுவரையும்.. அப்படியே செய்யச் சொல்லுங்கள்” என்று சொன்னான். ஆனாலும் அந்த தூந்திரப் பனிக் கிழவனின் மலைகளின் ஆன்மா மிக உயரமானது. இது நாவலில் சொல்ல படாமலேயே அந்தக் கிழவனின் மௌனத்தில் இருந்தே பனி உருகும் ஆன்மாவை நாம் பெற முடிகிறது. புஷ்க்கினது பெஸராப்பியா மேய்ச்சல் நில ஆவியானது காமத்தின் பனி வெருகின் சப்தமற்ற காலடிகளைத் தெளிவற்ற இருட்டில் மௌனமாகக் கேட்டிருந்த கிழவன் நாவலில் ஓரிரு பக்கங்களில் மட்டுமே தான் வருகிறான். ஆனால்அவன் இந்த நாவலில் கோட்டுருவமாகத் தான் வந்தடைகிறான் ஆட்டுப் பண்ணையில் இருந்து நீதிமன்ற வாசல் வரை மட்டுமே . எனவே தெளிவாகவும் நிதானமாகவும் பின்வருமாறு சொன்னான் பனிக்கிழவன் “அவன் குற்றவாளி என்று சொல்ல நான் விரும்பவில்லை. அவனை விடுதலை செய்து விடுங்கள்”

இந்தக் காட்சிகளோடு அருள்குமரன் பத்திரிகைகளையும் “அற்புதம்” பாத்திரத்தின் குற்றம் பூசிய மனுவையும் தாள் விவரங்களையும் அவற்றைக் கைகள் கொண்டு கச்சாவாகத்தானே அத்யயிக்கும். மனித மனதின் தீராத இருட் கயத்தில் முட்டி பய முறுத்தும் சாவின் தொடுதலை வாசிப்பில் உணர்ந்தேன். அருள்குமரன் கை மூலம் சயந்தன் தீட்டிய பனி இரவில் சித்திரங்களோடு காத்திருக்கும் குற்றவாளிக் கைகளில் பூட்டிய துருப்பிடித்த விலங்குகளுடன் அவர்களை நெருங்கித் தொட்டுப் பார்த்தேன். யாரும் பார்க்காத நீர் ஓவியங்களை ஸ்பரிசித்தேன். கண்களில் கசியும் உப்புடன்.

“அற்புதம்” கதாபாத்திரத்தின் விரல்களுக்கிடையில் நழுவும் கசக்கி எறிந்த காகிதங்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் அசைவுகளையும் வாசித்தேன். ஆரம்பப்பீடிகை குதிரைகளின் குளம்படிகளையும் அவதானித்துக் கொண்டிருந்த சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சியின் அப்போதைய தளபதி வேர்னர் ஸ்ராபாஹர் உதடுகளின் முணுமுணுப்பையும் யுத்தம் வீழ்த்திய பனியுருகும் மலைகளின் சாக்காட்டில் இருந்து எழுதப்பட்டுள்ளதாக நாவல் உத்தியைக் கோடிட்டுத்து வங்குகிறது அஷேரா.