1990 களில்தான் ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இலங்கை வந்திருந்தபோது முதன் முறையாக புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்த அல்லது பார்த்ததாக நினைவு. அப்போது அவரை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்றுதான் அழைத்தோம். புலம்பெயர்ந்தவர் என்ற சொல்லே அப்போது தெரியாது. அவர் அழகாக இருந்தார். அவர் ஆங்கிலம் பேசும் அழகே தனியாக இருந்தது. அவரது நடை, உடை பாவனை, இலங்கை குறித்த பார்வை ( ஏளனமாக என்றுகூட கொள்ளலாம்) புலம்பெயர்ந்தவர்கள் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள் எனும் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது என்னவோ உண்மைதான்.
2010 க்குப்பிறகு சந்திக்க்கிடைத்த அந்த ‘வெளிநாட்டுக்காரர்களில்’ வேறு விதமானவர்களும் இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்படியானவர்கள் பலரைப் பார்த்து, பழகியபின் 90 களின் பார்வை மாறியதும் உண்மையே.
ஆனால் 2018 ல் சுவிஸ் – பேர்ன் நகரில் சந்திக்கக் கிடைத்த அல்லது பார்க்கக் கிடைத்த புலம் பெயர்ந்த ஒருவரைப் போல அதற்கு முன்னரோ அல்லது பின்னர் இலங்கையிலோ வெளிநாட்டிலோ காணக்கிடைக்கவில்லை. சயந்தனின் ‘அஷேரா’ வில் வரும் அற்புதம் எனக்கு அந்த ‘பேர்ன்’ ஈழத்தமிழர் போலவே தெரிந்தார்.
முதல் தடவையும் மூன்றாவது தடவையும் சுவிஸ் சென்றிருந்த பொழுதுகளில் சுவிஸ் மலைகளைத் தரிசிக்க என்னை அழைத்துப் போயிருந்தார் சயந்தன். அவர்தான் அஷேரா எனும் இந்த நாவலின் ஆசிரியர். அந்த மலைகள் பற்றி அல்லது ஏரிகள் பற்றி எனக்கு விளக்கிச் சொல்வார் சயந்தன். அந்த வரலாறுகள் பெரிதாக புரியாதபோதும் சாராம்சத்தைப் புரிந்து கொள்வேன்.அப்படித்தான் அஷேரா என்ற பாத்திரப் பெயர் பற்றிய புரிதல் எனக்குள் நிகழ்ந்திருக்கிறது எனலாம். ஆனால் அந்த பின்னணியில் தமிழீழ போராட்ட அரசியலை முன்வைத்து முன்னகரும் நாவலின் பிரதான பாத்திரமாக வரும் அருள்குமரன் சயந்தனைப் போல தோற்றம் கொண்ட ஒருவராகவே வாசிப்பின்போது என்னோடு உலாவந்தார்.
இரண்டாவது சுவிஸ்பயணத்தில் அந்த அற்புதம் போன்ற ஈழத்தமிழரைச் சந்தித்த காசு மாற்றும் கடையின, (Exchange ) கவுண்டரில் உட்காரந்திருந்த பெண் பெயர் அபர்ணாவாக இருக்குமோ என எண்ணினேன். நாவலில் வரும் அபர்ணா அப்படித்தான் கொழும்பில் இருந்து புலம்பெயர்ந்த யாழ்ப்பாண பெண். ஈழப்பிரச்சினையை கொழும்பில் இருந்து பத்தரிகையில் பார்த்தே பிரச்சினையாகி சுவிஸ் அகதியாகியிருந்தார். அருள்குமரனும், அபர்ணாவும் நடந்து திரியும் வீதிகள் நானும் சயந்தனும் நடந்து திரிந்த வீதிகளாக அந்நியமின்றி இருந்தன.
‘கந்தன் கருணைப் படுகொலை’ என்றால் என்னவெற தெரிந்தாலும், அது எப்படி நடந்தது என அண்மையில் ஒரு முகநூல் பதிவில் வாசிக்க கிடைத்தது. அந்தப் பதிவு அதில் இருந்து தப்பிய ஒரு தைரியமான ஒருவரால் வழங்கப்பட்ட வாக்குமூலமாக பதிவாகி இருந்தது. அது அற்புதமெனும் எனும் பின்னாளில் தைரியம் குன்றிப்போன ஒருவரின் வாக்குமூலமாக அஷேராவில் பதிவாக்கம்பெறுகிறது. கந்தன் கருணைப் படுகொலைக்கு அகப்பட்டவர்களில் 80 களில் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்விகற்று சித்திபெற்ற மருத்துவ பீடத்துக்கு தெரிவான மலையக இளைஞர்கள் ஓரிருவரும் இருந்தனர் என மிக அண்மையில் உறுதியான தகவல்கள் கிடைத்திருந்தன. புலிகள் அவர்களைக் கொல்லும் காட்சிகள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.
சுவிஸ் ரவி எழுதிய ‘குமிழி’ நாவலில் வரும் ‘புளோட்’ கதைகள் பல அஷேராவிலும் வருகின்றன. அந்த தமிழகப் பண்ணையார் வீட்டுக்குத் தப்பிப்போன நிலையில் வந்த காட்சிகளை குமிழியிலும் வாசித்த போதும் அஷேராவில் பண்ணையாரையும் சுட்டுக் கொன்ற போது, இந்த ஈழப்போர் இந்தியாவில் ராஜீவ் காந்தியை மட்டும் கொல்லவில்லை எனும் எண்ணத்தைத் தந்தது. தனது சொந்தங்களையே உப்புக்கண்டம் போடும் அளவுக்கு கொடூரமான பயிற்சி பாசறைகள் தமிழ் இயக்கங்களில் இருந்தன என்பதை எத்தனை பேர் நம்புவார்கள்.குமிழி, அஷேரா போன்ற நாவல்கள் இதனைப் பதிவு செய்கின்றன.
அஜித் போயகொட வின் ‘நீண்ட காத்திருப்பு’ எனும் நினைவுப் பதிகையை அண்மையில்தான் வாசிக்க கிடைத்தது. இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட இராணுவத்தரப்பின் அட்டூழியங்களையே படிக்கும் தமிழர்தரப்பு வாசிக்க வேண்டிய நூல் அது.அந்த அஜித் எனும் கப்டன் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த சூழலின் ஒரு பாத்திரமாக அஷேராவில் வந்து போகிறார். அந்தச் சூழலில் அவரது சிங்களத்தை தமிழுக்கு மொழிபெயர்க்கும் அவந்தி சிங்களத் தாய்க்கும் மலையகத்தமிழ் தந்தைக்கும் பிறந்தவள். அவள் பின்னாளில் வாழும் ஒருகொடவத்தை சேரி, தக்ஷிலா சுவர்ணமாலி எழுதியுள்ள ‘பொட்டு’ சிறுகதைச் சூழலில் வரும் சேரியை மனதுக்குள் கொண்டு வருகிறது. கொழும்பு 7 குண்டுவெடிப்புகளுக்கு அப்பாவிகளின் சேரிகளை அபகரித்துக் கொண்ட அரசியலை ‘பொட்டு’ போலவே அஷேராவும் பேசுகிறது. அதேபோல மருதானை பொலீஸ் நிலையம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பும், அருகே சென்ற வாகனத்தில் பயணித்த பாலர் பள்ளி சிறுவர்களின் கதறல்களும் அப்போது கொழும்பில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்நியமாகத் தெரியவில்லை.
கொழும்பு நூலக ஆவணவாக்கல் சபை பகுதியில் ஏதோ ஆவணங்களைத் தேடச் சென்ற வேளை வாசிக்க கிடைத்த கட்டுரை, வி.டி.தர்மலிங்கம் எழுதிய ‘மலையகம் எழுகிறது’ எனும் நூலுக்காக இர.சிவலிங்கம் எழுதிய முன்னுரை. வெளிவராத அந்த நூலின் முன்னுரை நூலினை வெளியிடத் தூண்டியது. அந்தப் பணியை சயந்தன் உள்ளிட்ட ‘எழுநா’ நண்பர்கள் சில காலத்தில் செய்து இருந்தார்கள். அதன் பிரதிகளைப் பெற்றுக் கொள்ள தமிழகம் சென்ற போது பதிப்பக பொறுப்பாளர் வேடியப்பன் இதனையும் கொடுக்கச் சொன்னார் கொடுத்த ஒரு பிரதி ‘ஆறாவடு’.
ஆறாவடு சயந்தனின் முதல் நாவல். கொடைக்கானல் தொடங்கி ஊட்டி போகும் பஸ் பயணத்தில் வாசித்து முடித்த அதே வேகத்தில் என்னால் அஷேராவையும் வாசிக்க முடிந்தது. இடையில் வெளியான ‘ஆதிரை’ இந்த வேகத்தில் செல்லவில்லைதான். ஆனாலும் பல விமானப் பயணங்களில் வாசிக்க முடிந்தது. ஆதிரை வன்னி வாழ் மலையகத் தமிழர்களையும் இணைத்த புதினம். அஷேராவிலும்கூட ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்களை’ நினைவுபடுத்திச் செல்கிறார் சயந்தன்; அருள்குமரன் ஊடாக.
ஆறாவடுவின் தொடர்ச்சியாக அஷேராவைப் பார்க்கவும் முடிகிறது. ஈழப்பிரச்சினையோடு
அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் கோரி நிற்கும் ஏனைய நாட்டினரையும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டவரையும் அஷேராவில் வாசிக்க முடிகிறது. ஆறாவடு இத்ரிஸ் கிழவனையும் நினைவுறுத்தியபடி.
நாவல் கூறும் நுட்பத்தில் புதுமை செய்யும் சயந்தனின் அஷேரா, நாடக காடசிகள் போல மாறி மாறி வருகிறது. வாசகன் நிதானித்து காட்சிகளை கட்டமைத்துக் கொள்ளவும் முன்பின் அத்தியாயங்களைத் தொகுத்துக் கொள்ளவும் வேண்டிய தேவை இருக்கிறது.ஆதிரையில் சயந்தனுக்கு வர மறுத்த தூஷண வார்த்தைகளை அஷேராவில் வலுக்கட்டாயமாக இழுத்து வரும் சயந்தனில் (அந்த விடயத்தில்) தடுமாற்றமே தெரிகிறது. ஆனால் காமத்தை பேச முனைவதில் அவருக்கு இருந்த தயக்கத்தை உடைத்துக் கொண்டு வர முயற்சிக்கிறார். இது காலத்தால் வந்த மாற்றம் என்கிறார் சயந்தன்.
ஒவ்வொரு நாவலும் எழுதப்பட்ட கால இடைவெளிகளுக்குள்ளும் இலக்கியம், வாழ்க்கை, அரசியல் பற்றிய புரிதல்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. என்னால் (தன்னால்) உணரக்கூடிய பெரிய மாற்றம் என்பது, ஆதிரை நாவலை எழுதும் போது, இனத்தின் கதையை,சமூகத்தின் கதையை, நியாயத்தைச் சொல்லவேண்டும் என்ற உந்துதல் அதிகம் இருந்தது. இன்று தனிமனிதர்களின் கதையை, நியாயத்தைச் சொல்வதில் கரிசனை’ என்பது சயந்தனின் முன்வைப்ப அல்லது வாக்குமூலம்.
இந்த மாற்றத்துக்கு சயந்தனுக்குள் நடந்திருப்பது வாசிப்பு. அது தனிநபர் உளவியல், சமூவியல், சமூக உளவியல் என பலதரப்பட்ட தாக்கத்தை சயந்தனுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் தனிமனிதக் கரிசனையில் காம உணர்வுகளின் பக்கம் கவனம் அதிகம் போனது அல்லது எல்லா பாத்திரத்திலும் அதனைப் பொருத்திப் பார்க்க முனைவது சில இடங்களில் அபத்தமாகவும் தெரிகிறது.
அற்புதத்தின் உளவியலைச் சொல்வதில் வரும் பரிவு அருள்குமரனில் மாறுபட்டு நிற்கிறது. பெண்களின் பாலியல் சார் உளவியலைச் சொல்லவரும்போதும் ஆண்மனது எட்டிப்பார்க்கிறது.
ஒட்டுமொத்தமாக, ஈழப்போராட்டம் எனப்புறப்பட்டவர்களினதும் அதனால் பாதிக்கப்பட்டவர்களினதும் தனிமனித உளவியல், சமூக உளவியல் தாக்கங்களின் ஊடே ஈழப்போராட்டத்தின் சமூகவியலைப் பதிவு செய்ய முனைகிறது அஷேரா. அருள்குமரன்தான் கதை முழுதும் வந்தாலும் அவருடன் கூடவே வரும் அற்புதம் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.
அந்த அற்புதம் சுவிஸ் – பேர்ன் நகரில் காசு மாற்றும் கடையில் கண்ட ஒருவரின் உருவத்தை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார். அவர் 90 களில் கண்ட வெளிநாட்டுத் தமிழரைப் போல ஆடம்பரமாக இல்லை. ஆங்கிலத்திலும் பேசவில்லை. தமிழில்தான் தானாக பேசிக் கொண்டு திரிந்தார் . ஆடைகளில் ஏதேதோ லேபல்களை ஒட்டியிருந்தார். அதில் ஈழ வரைபடமும் இருந்தது.தாடி வளர்த்து இருந்தார்.கையில் ஒரு கொடியை தோளில் சாய்த்தபடி வைத்து இருந்தார். முதிய தோற்றமும் வேறு. எப்போதோ ஒரு இயக்கத்தில் இருந்திருக்க வேண்டும். சுவிஸ் – பேர்ன் நகரில் இப்படி தலைவிரிகோலமாய் சுயநினைவிழந்து சுற்றித்திரிவதை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது.அவரை நான் பரிதாபமாக பார்ப்பதை நக்கலாகப் பார்த்த அபர்ணா போன்ற தோற்றத்துடன் கவுண்டரில் அமர்ந்திருந்த அந்த இளவயது ஈழ அகதியான சுவிஸ் ஈழப்பெண் அற்புத்த்தையும் கூட அப்படியே பார்த்தாள்.
அஷேரா – ஆறாவடுவின் தொடர்ச்சி என சொல்வது நாவலின் தொடர்ச்சி என்ற பொருளில் மட்டுமல்ல. வாசிக்க வேண்டிய நாவல் அஷேரா. 2021 சனவரியில் ஆதிரை பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘அஷேரா’ இலங்கையில் பரவலாக கிடைக்கிறது.