‘அஷேராவின்’ புனைவுத் தளத்தை விரிவாக்கத் தூண்டும் வாசகப்பணி இது – அசுரா

நாவலின் ஆசிரியரின் குறிப்பு எனும் இறுதிப்பகுதியும், அதுவே இந்தப் புனைவின் ‘ஆசிரியரான’ சயந்தனின் குரலாகவும் கருதி, இப்பிரதியின் பின்னல்களை அவிழ்க்க வேண்டியதான ஒரு வாசிப்பு அனுபவத்தை என்னால் உணரமுடிகிறது. இலக்கியப் படைப்பாளிகளை, தத்துவ சிந்தனையாளர்களை, வரலாற்று ஆய்வாளர்களை ஆசிரியர்கள், ஆசான்கள், எனும் பொருள்பட அழைப்பதன் உட்பொருள் என்ன?

இவர்களும் தமது சுயமான தத்துவ சிந்தனைகளூடாகவும், சுயமான இலக்கியப் புனைவுகளூடாகவும் வெளிப்படுத்தும் சம்பவங்களை வாசகர்கள் புதிதாகத் தேடிக்கண்டடையும்போது, அவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசான்களாகவும் வாசக மனங்களில் உணரப்படுகிறார்கள்.

ஆயினும் நிறுவனக் கல்விப் போதகர்களாகக் கருதப்படும் ஆசிரியர்கள், ஆசான்களுக்குரிய கருத்துப் புரிதலுடன் இலக்கியப் படைப்பாசிரியர்களையும், தத்துவ சிந்தனை ஆசான்களையும் உள்வாங்கமுடியாது. துரதிருஷ்டவசமாக நிறுவனக் கல்வியினூடாகப் பெற்றுக்கொண்ட பொருள்படவே ஆசிரியர், ஆசான்கள் என்பதன் கருத்துப் பொருளை இலக்கிய, தத்துவ சிந்தனையாளர்களுக்கும் பொருத்திப்பார்க்கும் நிலையுள்ளது. கலை-இலக்கிய வாசிப்பின் ரசிகர்களாகவும், தத்துவ சித்தாந்த ஆசான்களின் மீது தமது சுயத்தை இழப்பதன் ஊடாகவும், இவ்வாறான துரதிருஷ்டம் நிகழ்ந்துவிடுகிறது.

கல்வி நிறுவனங்களால் அறிமுகமாகும் ஆசிரியர்கள், ஆசான்கள், படிப்பவர்களுக்கும் வாசகர்களுக்கும் பதிப்பெண்களை வழங்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள். அவரகளிடம் நாம் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் சொல்லித் தருபவைகளை நாம் திரும்ப ஒப்புவிக்க வேண்டியவர்கள். ஆனால் இலக்கிய ஆசிரியர்கள், தத்துவ ஆசான்கள் மூலமாகக் கற்றுக்கொள்வதற்கும், அவ்வாறு கற்றுக்கொண்டதற்கான மதிப்பெண்களை வழங்குபவர்கள் வாசகர்களும், விமர்சகர்களுமே. இலக்கிய ஆசிரியர்களையோ, தத்துவ ஆசான்களையோ மறுத்து கேள்வி கேட்கும் உரிமையும் வாசகர்களுக்கே உள்ளது. அதேநேரம் வாசகர்களின் மதிப்பெண் வழங்கும் முறையானது கல்வி நிறுவனப் போதகர்கள் போன்றதல்ல. வாசகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களைப் புரிந்துகொண்டு வாசகர்களின் விமர்சனங்களிலிருந்து படைப்பாளிகள் (ஆசிரியர்கள், ஆசான்கள்) தமக்கான மதிப்பெண்களை தாமே ‘தரவிறக்கம்’ செய்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் அஷேராவின் ‘ஆசிரியரான’ சயந்தன் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும், அவரை நிற்கவைத்துக் கேள்வி கேட்டு, மதிப்பெண் வழங்கும் வாசகனாகவும் என்னை நான் உணருகின்றேன். எனது இந்தச் சிறிய அறிமுக-விமர்சனத்தை உள்வாங்கி தனக்கான மதிப்பெண்ணை தானே தேர்ந்தெடுக்கும் ‘சுதந்திரத்தையும்’ வழங்குகின்றேன்.

இலக்கியப் புனைவுப் பிரதிக்குள் புதுமை செய்வதாகக் கருதி வாசகனை புலனாய்வுப் பாணியில் அலைய வைத்ததும், அனூடாக கதைகளையும், சொற்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒருங்கிணைக்க வைப்பதிலும் சயந்தன் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியாரக (படைப்பாளியாக) தோன்றுகிறார்!

அருள்குமரனுடைய தடித்த நீல நிறத் தொகுப்பில் கிடைத்த தகவல்களை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்ததான தகவல்.

அவ்வாறு தடித்த நீல நிறத்தொகுப்பில் சொல்லப்பட்ட கதைகள் எதற்கும் தலைப்புகள் எழுதாத அருள்குமரன் ‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’ எனும் பகுதிக்கு மட்டுமே அருள்குமரனால் தலைப்பிடப்பட்டிருக்கிறதென்பதையும் அறிய முடிகிறது.

அவைகளை, ‘முன்னரைப்போல மாற்றங்களையும் இடைச்செருகல்களையும் செய்யாமல் அதை அப்படியே இங்கே இணைத்திருக்கிறேன்’ என்கிறது ‘ஆசிரியர் குறிப்பு’. அதுவே ‘ஏதேன் ராக்கினியின் மறுதிலிப்பு’ எனும் இரண்டுபக்கத் தகவல்களாக ஊகிக்க முடிகிறது. ‘ஏதென் ராக்கினியின் மறுதலிப்பு’ எனும் இறுதிப்பகுதியூடாக வாசகன் இப்பிரதியிலிருந்து வெளியேறும்போது இப்பிரதியில் சிதறிக்கிடக்கும் கதைகளை வாசகனின் கற்பனையூடாகவும் வளர்த்தெடுக்க தூண்டுகிறதா என்பதே இப்புனைவுப் பிரதி மீதான கருசனையாகவும் கருதுகின்றேன்.

மத்தியகிழக்கு பிரதேசத்தின் தொன்மவியல் பண்பாட்டுக் கதைகளில் அஷேரா எனும் பெண்தெய்வக் கதையொன்றிருக்கிறது. அது கிறிஸ்துவுக்கு முன்பான கதையாகவும் பேசப்படுகிறது. வழமையாகவே வாய்மொழியாகத் தோன்றிய கதைகள் பண்பாட்டோடும், தலைமுறைகளோடும் மாற்றத்துக்குள்ளாகி வருவது போன்றே அஷேராவும் மாற்றத்துக்குள்ளாகி அது விவிலியத்தில் ராக்கினி மாதாவாகவும் புனையப்பட்டிருக்கலாம்.

பிரதியில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண் பாத்திரங்களான அம்மா, அமலி, ஆராதனா, அபர்ணா, ஷர்மினா, புஸ்பகலா, சூமாஹர், கனிட்டா, நிலாமதி, அவந்தி போன்ற பெண்களுக்கான சித்தரிப்புக்களோடு, இறுதிப் பகுதியான ஏதேன் ராக்கினி (அஷேரா) எனும் பெண்தெய்வத்தின் தொன்மக்கதையை பொருத்திப் பார்க்க முடிகிறதா? சுவிஸ் நாட்டுத் தொன்ம வரலாறெனும் மோர்கார்த்தென் யுத்த அறிமுகத்தோடு நுழையும் வாசகன் ‘அஷேரா’ எனும் தொன்மத்தின் பின் வாசலால் வெளியேறமுடிகிறதா?

அற்புதம் குறிப்பிடுகிறார், அருள்குமரன் குறிப்பிடுகிறார் எனும் அழுத்தங்களுக்கு அப்பால் கதைசொல்லியின் புனைவுகளும் இணைக்கப்பட்டதாக, பாத்திரங்களின் கதைகள் சொல்லப்படுகிறது.

இப்பிரதிக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்குமான தொன்மப்-புனைவுகளோடு, உள்ளே பேசப்படும் கதைகளும் அகதி விண்ணப்பத்திற்காக எம்மவர்கள் வழங்கும் புனைவுக் கதைகளில் ஒரு பகுதிதான் என வாசகர்களை நினைவூட்டவும் செய்கிறது.

அருள்குமரனின் பால்ய பருவத்து நினைவுகளாக ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கும் அம்மா, அமலிஅக்காவின் பாலியல் நினைவுகள் அருள்குமரனின் மூளையில் முளைக்கும் செதில்களாக வளர்கிறது. அவ்வாறு வளரும் செதில்கள் ஆராதனாவின் நினைவுகளால் உதிரவும் செய்கிறது.

அற்புதம் எனும் பாத்திரத்தின் நினைவுகளும் வளரும் செதில்களான குறியீடாகவே கதை சொல்லப்படுகிறது. அற்புதத்திற்கு தனது கழகத்தை சேர்ந்த கனிட்டா எனும் பெண் உறுப்பினரை கற்பழித்த குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறான தகவல்களோடும், சுவிசில் அமந்தா எனும் பாலியல் தொழிலாளிக்குமான நினைவுகளோடும் அற்புதத்தைக் கலந்து மூடப்பட்டிருக்கிறது தகவல். வாசகர்கள் புலனாய்வுப் பாணியில் துப்புத்துலக்கியே அதற்கான புரிதலை 99ம் பக்கத்திலிருந்து 109வது பக்கம் வரையில் பொருத்திப் பார்த்து ஊகிக்க வேண்டியிருக்கிறது.

இவ்வாறு ‘புலனாய்வுச்’ சிரமங்கள் இருப்பினும், பிரதிக்குள் பேசப்படும் அவந்தி, அபர்ணா எனும் பெண் பாத்திரங்களே தமது அகச் சித்தரிப்பின் தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அருள்குமரனின் அம்மா உட்பட, அதிகமான பெண் பாத்திரங்கள் பிரதான கதாபாத்திரமான அருள்குமரானால் விபரிக்கப்படுகிறது. அருள்குமரனின் பார்வையில் முன்வைக்கப்படும் பெண்களின் பாலியல் விபரமானது ஆண்களுக்குரியது. அருள்குமரன் பெண்களின் காம உணர்வினை கேள்விக்குள்ளாக்கும் தகுதியற்றவர் என்பதை அவர் அபர்ணா எனும் பெண்ணிடம் எதிர்பார்த்த ஆவல் புலப்படுத்துகிறது.

சிங்கள தாய்க்கும், மலையக தகப்பனுக்கும் பிறந்த அவந்தி எனும் பெண்ணை சிங்களப் பெண் எனும் ஒற்றைப் பரிமாணத்தில் சித்தரிக்க முடியாது. ஆயினும் அதுதான் எமது சமூகப்பார்வை என்பதாக நினைவூட்டப்படுகிறது. அவரது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இணைவும் அனுபவமும் பிரதிக்கு வெளியிலும் வாசகர்களின் கற்பனையூடாக மேலும் வளர்த்தெடுக்க முடிந்திருக்கும்!

ஆப்கானிஸ்தான் அகதியாக வரும் நஜிபுல்லாவின் கதை, அற்புதத்தின் தனிக்கதை, அபர்ணாவின், அவந்தியின் சுய கதைகள், அருள்குமரனின் அகதி வாழ்வும், இயக்க வாழ்வும், அவரது ஆழ்மனதில் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கும் நினைவுச் செதில்கள், வயோதிபர் இல்லத்தில் வாழும் முதியவர்களின் மனச் சித்திரங்கள் என அற்புதமான கலவைச் சித்தரிப்பு.

இப்பனைவுப் பிரதியில் நுழையும் வரலாற்று வாசலும், சுவிஸ்நாட்டில் எம்மவர்கள் அகதித் தஞ்சம் கோரும் வாழ்க்கையோடு, பாத்திரங்களும், பிரதேசச் சூழலும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய மொழிச் சிக்கல்களை அவிழ்க்க முடிந்தாலும் பிரதிக்கு வெளியால் வாசகன் விரிந்து பறப்பதற்கு சிரமமாகவே இருக்கிறது. பிரதிக்குள் நுழைந்து பறந்து திரியும் சுதந்திரத்தை வழங்கியபோதும் அவ்வனுபங்களோடு பிரதிக்கு வெளியால் வளர்த்தெடுக்கும் வாசக மனச்சிறகு முளைத்து பறந்து செல்லத் தடையாக இருப்பது ‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’.

வாசகன் பிரதியின் பாத்திரங்களின் அனுபவங்களோடு விரிந்து பறப்பதற்குத் தடையாக ‘இந்த வரலாற்று வாசல்’ மூடப்பட்டிருக்கும் உணர்வைத் தருகிறது.
அஷேரா நாவலுக்கு முன்பாக நான் வாசித்த நாவல் சோ.தர்மனின் ‘பதிமூனாவது மையவாடி’. இந்த நாவல் எனக்கு தந்த அனுபவம் நாவல் எனும் பிரதிக்கு வெளியால் என்னை சிந்திக்கவும் தேடவும், பதிமூனாவது மையவாடியை எனது கற்பனைக்கு, மேலும் வளர்த்தெடுக்கும் ஊக்கத்தையும் வழங்கியது. அப்படியான ஒரு வாய்ப்பை சயந்தனின் ‘ஆதிரையும்’ தனது செவ்வியல் சித்தரிப்புக்களால் வளர்த்தெடுக்கும் தன்மை கொண்டிருந்தது.

சொற்களால் பின்னப்பட்டிருக்கும் அஷேராவை சிரமத்துடன் வாசகனான என்னால் அவிழ்த்து பிரதிக்குள் மகிழ்வாக பறந்து திரிந்தபோதும், பிரதிக்கு வெளியால் பறப்பதற்கான எனது கற்பனைச் சிறகு முளைக்கவில்லை. அல்லது சிறகு முறிக்கப்பட்டிருக்கிறது.