அஷேரா! ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா

‘ஏரி பெரிய இருள்ப் படுக்கையைப் போல விரிந்துகொண்டே போனது…’. மனதின் ஒவ்வொரு இருள் படுக்கையாக உரித்து உரித்து எடுத்து, சில நாட்களுக்கு ஆப்கானின் வரண்ட மலைகளாக நிச்சலனத்துடன் வெறித்து மட்டுமே நிற்க வைத்தது அஷேரா எனும் ஆழமான நாவல்.

காமமும், கோபமும் உயிர்க்குணங்கள். பிரிக்க முடியாதவை. இருள் போர்த்தியவை. காமத்திற்கு இருட்டின் மறைப்பும், கோபத்திற்கு இருண்ட மனம் அல்லது இருண்ட செய்கை மீதான ரௌத்திரமும் தேவைப்படுகிறது. இவை உந்துதலை (Drive) அடிப்படையாகக் கொண்டவை. போர் கூட அவ்வாறே. போர் நிலங்களின் ஒருபக்க அவலம், சிறு வயதுப் பாதிப்பு (Childhood trauma), இவை கொடுத்த அனுபவத் தாக்கங்கள் (Post Traumatic Stress Disorder), இத்துடன் பின்னிய அடிப்படை உணர்வான காமம், அது தோற்றுவிக்கும் அன்புக்கான ஏக்கம், ஆனால் நிறைய முடியாத வலி, இவற்றின் சிக்கல் நிறைந்த கூட்டு உணர்வை வெளிப்படையாகப் பேசுகின்றது இந்த நாவல். பசியைப் போல அடிப்படையான தேவை காமம். இதனை அரங்கேற்றுவதில் உள, உடல், அனுபவ, கிடைக்கும் வசதி, சந்தர்ப்ப சூழ்நிலை, இன்னொரு நபரின் அனுமதி என்கிற எல்லாமே அமைய வேண்டி இருக்கிறது. இந்த உணர்வை ஆபரணங்கள் பூட்டிக் கொஞ்சம் மெத்தனமாகப் பேசுவோர் இடையில், ‘இது இப்படித்தான்’ எனக் கையில் அள்ளி முகத்திற்கு நேரே காட்டுகின்றது அஷேரா.

சில வருடங்களுக்கு முன்னர் ‘இறைவி’ என்கிற திரைப்படம் வெளிவந்தது. பெண் சம்பந்தமான அடிப்படைப் பிரச்சனை, உணர்வின் ஆழத்தை வெளிப்படையாகப் பேசியது. பண்டைய சுமேரிய நாகரீகத்தின் பெண் தெய்வமும், புனிதத்தன்மையற்றவள் என யாஹ்வேயினால் தகர்க்கப்பட்ட சிலையையுடையவளும், ஆனால் கானானியர்களால் தொடர்ந்து தெய்வமாக வழுத்தப்பட்டவளுமாகிய அஷேராவைத் தலைப்பாகக் கொண்டு சயந்தனால் எழுதப்பட்ட நாவல் புனிதம் என்ற போலியைக் களைந்த இயல்பின் உண்மையை அப்பட்டமாக அளிக்கிறது. (இவ்விடத்தில், அபர்ணா வெளிநாடு வருவதற்காக மாற்றியமைக்கப்பட்ட கடவுச்சீட்டில் ‘அஷேரா பற்றிக் போல்’ என்ற பெயர் காணப்பட்டதான குறிப்பையும் குறிப்பிட்டாக வேண்டும்). பெண்ணியம், ஆணாதிக்கம் என்று பிரித்துப் பேசும் வெற்று முழக்கங்களின்றி, மனிதன் என்ற உயிரின் உணர்வுச்சிக்கலை நடுநிலையாக ஆராய்ந்தது இந்த நாவலின் அழகு.

புஸ்பகலா, அற்புதம், அருள்குமரன் அம்மா, அருள்குமரன், சரவணபவன், அமலி, ஆராதனா, அவந்தி, ரொக்கெட், சப்பறம், அபர்ணா, அரங்கன், நஜிபுல்லா, ஷர்மிளா, சர்வம், முல்லர், வீட்டுக்காரக் கிழவன் கிழவி எனும் ஒவ்வொருவருக்குமான கதையும், காரணங்களும் இங்குண்டு. தவிர, இனம், மொழி, இடம், ஏன் காலமும் தாண்டி பாதிப்புகளும் அதன் எதிர்வினைகளும் பொதுவானது. அருள்குமரன் – நஜிபுல்லா இருவருக்குமான பாதிப்பின் ஒற்றுமை, அற்புதத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட அருள்குமரனின் கனிவு என்பன இதனைக் கூறும். கதையின் இந்த உரையாடலும் கூட: ‘ஒரு நாள் அற்புதம் சொன்னார்: “அப்படியொருவர் இந்த உலகத்திலே கிடையாது. மேலே இருக்கிற வீட்டுக்காரக் கிழவனுக்கு எழுபது வயது. அவனிடம் போய்க் கேள். தாயையும் தகப்பனையும் ஹிட்லரின் விச வாயுவுக்குச் சாகக் கொடுத்துவிட்டு வியன்னாவின் தெருக்களில் பசியோடு அலைந்த ஒரு பத்து வயது யூதச் சிறுவனின் கதையைக் கூறுவான்”’. அருள்குமரன் அபர்ணாவிடம் தனக்கும், அற்புதத்திற்குமிடையான உறவை இரண்டு இயக்கப் பெடியளுக்கிடையிலான உறவைப் போல என ஒப்புவிப்பதும் இதனைக் காட்டும்.

குடும்பம், சூழ்நிலைகள் தனிமனித வேறுபாடுகளில் நிர்ணயம் வகிக்கின்றன. ஆராதனா அன்பான பெற்றோருக்கு மகளாகப் பிறந்து இயல்பில் நிதானமும், முதிர்ச்சியும் கொண்டவள். சிறுவயதுக் குழப்பங்களும், அன்பு கிடைக்காத ஏக்கத்தின் பரபரப்பும் இல்லாதவள். அமலி அக்காவிடம் பற்களின் நெருமலுடன் அருள்குமரன் அனுபவித்த காமத்திற்கும், “அன்றைக்கு ஆராதனா பரிசளித்த காமம் கோவிலின் நிவேதனம் போல் இருந்தது” என்று அவனால் குறிப்பிடப்படும் ஆராதனாவுடனான காமத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. முன்னைய காமம் கோபத்திற்கான வடிகால். பின்னையது அன்பின் பகிர்வு. இன்னொன்று காதல் செய்வதில் காணப்படும் வயது, அனுபவ மாற்றங்கள். பதின்ம வயது அருள்குமரன் – ஆராதனாவுக்கிடையிலான குழந்தைத்தனத்தின் குதூகலத்துடன் சேர்ந்த உரையாடலும், பின்னாளில் அருள்குமரன் – அபர்ணாவிற்கிடையிலான முதிர்ந்த வெளிப்படையான உரையாடலும் அழகாகக் காட்டப்பட்ட வேறுபாடுகள்.

நாவல் நெடுகிலும் குற்றம் செய்யாத குற்றவுணர்வு ஒரு குளிரின் சுமை போலப் பயணிக்கிறது. ஒன்று சம்பந்தமேயில்லாது கனிட்டா என்ற பெண்ணுடன் முன்னர் தொடர்புபடுத்தப்பட்டும், பின்னர் செம்மறி ஆட்டுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட அற்புதத்தின் ஆற்றாமை. இன்னொன்று அருள்குமரனுடன் சம்பந்தப்பட்ட ஆனால் அவனால் தவிர்க்கப்படமுடியாத சம்பவங்கள். தன் அம்மாவின் நடத்தையில் கொண்ட உணர்வுச் சிக்கல், அமலி அக்காவுடனான உறவு, கொழும்பு குண்டுவெடிப்பு இவற்றைச் சுமந்து திரியும் மனதின் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட முடியாத அருள்குமரனின் நிலையை இது கொண்டது. “என்னுடைய வாழ்க்கையில் எல்லாத் தீர்ப்புகளும் என்னைக் கேட்காமல்தான் வழங்கப்பட்டன” என்ற அற்புதத்தின் சொல்லாடலின் உண்மை இங்கு எங்கும் பொருந்திப் போகிறது.

தொடர்புகளும், முரண்களும் கசப்பான வரலாற்றையும், சமுதாய இயல்புகளையும் காட்டி நிற்கின்றன.

தமிழீழம் என்ற சொல்லின் கீழ் இவை அடங்கும்:

அற்புதம் “ஒரு காலத்தில் தமிழீழம்தான் எனக்கும் கனவாய் இருந்தது” என்ற போதிலும் ஆகக்குறைந்தது நாற்பது இயக்கங்களுக்காவது தமிழீழம் ஒரு கனவாய் இருந்தது எனும் உண்மை, “நீங்கள் ஆயுதப் பயிற்சியைப் பெற்று திரும்பி வந்து போரைத் தொடங்கிய மூன்றாவது மாதம், நாங்கள் தமிழீழத்தைப் பெறுவோம்” என்ற மொட்டை மாஸ்ரரின் சொற்கள், “நானொரு மனிசப் பிறவியென்ற காரணமே போதுமானது” என்ற புளொட் அமைப்பிலிருந்து வெளியேறிய அற்புதத்தின் கூற்று, தான் எந்த அமைப்பில் இருக்கிறேன் என்று தெரியாமல் உயிர்ப்பயத்தில் ஓடித் திரிந்த அற்புதத்தின் “மசிர் பொறுப்பாளர்கள்” என்ற கோப முணுமுணுப்பு, “எந்தத் தலைமையை?” என்ற சப்பறத்தின் கேள்வி, “எனக்கு எதிரான கத்தி ஒரு வெள்ளைக்காரனால் நீட்டப்பட்டதல்ல, அது என்னுடைய அம்மாவைப்போல் ஒரு தமிழ்ப் பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒருவனாலேயே நீட்டப்பட்டது” என்கிற அற்புதத்தின் கூற்று (ரஜினி திரணகமவின் கூற்றும் இங்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை), “இயக்கத்திற்கென்று ஒரு மானம் மரியாதை இருக்கிறது. அதைக் காற்றில் பறக்கவிட்டு விடாதே…” என்ற ரொக்கெட்டின் நம்பிக்கை, “அற்பமான காரணங்களைச் சொல்லிக்கொண்டு இயக்கத்திற்கு வந்தவர்கள் பிறகு அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்” எனும் இராவணேசனின் விளக்கம், ஒரு முத்திரை அளவிலே ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியிருந்த ரொக்கெட்டின் வீரச்சாவு அறிவித்தல்.

காமம் என்ற சொல் இவற்றைக் கொள்ளும்:

அருள்குமரனின் அம்மா – சரவணபவன், அமலி – அருள்குமரன், அற்புதத்தின் இரவுப் படங்கள், நஜிபுல்லா – வெள்ளைக்காரி என்று நிறைவற்றுத் தகித்த காமம், நஜிபுல்லாவின் கூடலின்போது அவனின் காதலியின் கண்ணீர் தெறித்து விழுந்த காட்சி ஒரு ‘சாவித் துவாரத்தினூடாகத்’ தெரிவதைப் போன்ற கணத்தில் அருள்குமரன் கொண்ட ஆவேசம், ஆராதனா – அருள்குமரன், பின்னர் அருள்குமரன் அபர்ணாவிடம் பொருத்திப் பார்க்க முயற்சித்த அமைதி தரும் காதல், ஷர்மினா – அவளைவிட இரண்டொரு வயது குறைந்த இளைஞனுக்கிடையில் இருந்த நந்தவனத்தில் நிற்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்ததாக அவளால் குறிப்பிடப்பட்ட காதல், காமத்தின் உச்சமும், அண்டத்தை உணரும் உன்மத்தமும் ஒன்றேயான உணர்வைக் காட்டிய படகுப் பயணத்தில் அருள்குமரன் அடைந்த உணர்வு (Ecstasy feeling).  

அழிவு அல்லது சாபக்கேடு என்ற சொற்கள் இவற்றைச் சுட்டுகிறது:

இயக்கக் குழுக்களின் மோதல்களும், கொலைகளும், தண்டனைகளும், தஞ்சம் அளித்தவர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட கொலைகள், ஒரே போலான செஞ்சோலைக் குழந்தைகளின் சாவும் கொழும்பு குண்டு வெடிப்பில் பாடசாலைக் குழந்தைகளின் சாவும்.

வர்ணனைகள் மூலம் பாத்திர அறிமுகங்கள் செய்யாமலும், தனது கருத்தைத் திணிக்காத நேரடித் தகவல்களாகவும் (Subjective) தரப்பட்ட சம்பவக் கோர்வைகள் ஆழமான வாசிப்புப் பாதிப்பை ஏற்படுத்துமாறு எழுதியது எழுத்தாளனின் பெருந் திறன். அருள்குமரனின் ஒரு குறிப்பில் தொடங்கி ‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’ என்ற அவனின் பூடகக் குறிப்பில் முடிப்பதிலும், ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தையும் அதன் தொடர்ச்சியான காலப்பகுதியில் சம்பந்தப்பட்டவர்களின் புலம்பெயர் தேசத்து இன்றைய வாழ்வின் நிலைப்பாட்டையும் ஒரே கதைசொல்லலில் இணைப்பதிலும், ஒரு பாத்திரத்தைப்பற்றிய கதைசொல்லலில் இன்னொரு பாத்திரத்தைச் செருகி வேறொரு கதையை அடுத்துச் சொல்வதிலும், வெவ்வேறாகச் சிதறிக் கிடக்கும் பல மனிதர்களின் அனுபவ உணர்வுகளை ஏதோ ஒரு புள்ளியில் தொடர்புபடுத்தி இணைப்பதிலும், அங்கங்களின் தலைப்புகளிலும், எழுத்தின் ஓட்டத்திலும், மறைமுக எள்ளலிலுமென அஷேராவின் அற்புதம் சொல்லி மாள முடியாதது.

“குளிர்ச் சனியனைத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அது நான்கு மணிக்கெல்லாம் இருட்டு என்ற நாயையும் கூட்டிக்கொண்டு வரும்போதுதான் விசர் பிடிக்கின்றது. இருட்டு ஒரு விசர் நாய்தான்…”. ‘மின்சாரக் குழல் விளக்கிலிருந்து பரவிய வெளிச்சம், அடர் வனத்தின் இருளுக்கு முன்னால் மண்டியிட்டதைப்போல எஞ்சியிருந்தது…’. ‘இடையில் விழிக்கும்போதெல்லாம் இன்னதெனத் தூலமற்றுப் படரும் இந்தத் துக்கத்தை அமலி அக்காவின் உடலை இருளுக்குள் அளையத்தொடங்கிய நாளிலிருந்து அருள்குமரனுக்குத் தெரியும்…’. ‘தன்னுடைய அம்மாவின் இருண்ட முகத்தை நினைவில் கிளர்த்தினான்…’. ‘இருள் இன்னும் ஆறு மணி நேரத்தில் அவனை வெளிச்சத்திடம் காட்டிக் கொடுத்துவிடும்…’. இருட்டு வெளிச்சத்தின் அடியாள்…’. இருட்டு – ஒளிவு!, இருட்டு – துக்கம்!, இருட்டு – மன அழுத்தம்!. ஒவ்வொரு கதை மாந்தரும் காட்சிகளாக மனக்கண்ணில் விரியும் அதே நேரம், ஏகெரி ஏரியின் இருட் படுக்கையும், தூரத்தே குளிருக்குள் மங்கலாகத் துலங்கும் ஆப்கான் மலைகளும், இருண்ட கருங்கற்களாலான பாதையின் முடிவில் மோர்கார்த்தென் குன்றில் தனித்து நிற்கும் நினைவாலமும், குளிரின் விறைப்பும் ஒரு பின்னணி போல விலகாது பயணிக்கின்றன. நிலத்தின் முகத்தையே மாற்றிவிடும் வல்லபம் கொண்டது வெயில், ஆனால் இருள் படிந்த வாழ்க்கை கொண்ட அருள்குமரன், ஒரு வெயில் நாளில்தான் தாக்கப்பட்ட அனுபவத்திற்கு உள்ளானான்.

அபர்ணா என்ற பெண்ணுடன் நான் என்னைப் பொருத்திப் பார்த்த உண்மையை இங்கு மறுக்க முடியாது. அந்த இயல்பின் ஒரு பாதி நானாக இருந்தேன். திருமதி சூமாஹர், விஷ்மர் இவர்களுடனான அனுபவத்தில், “மற்றைய செவிலியர்கள் மரணத்தைக் காலால் தாண்டுவதைப்போல கடக்கிறார்கள். என்னால் அது இயலவில்லை” என்பதில், “அந்த எண்பது வயதுக் கிழவியின் மீது ஒரு புண்ணில் சீழைப்போல எனக்குப் பொறாமை வழிந்தது” என்கிறதில் நான் என்னைக் கண்டேன். இந்தப் பகுதியை வாசித்த போது சிறிது நேரத்திற்குப் புத்தகத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு விறைத்துப்போன மனத்துடன் வெறித்து நோக்கி இருந்தேன் என்பது மெய். அபர்ணா அருள்குமரனைக் காப்பாற்றி இருந்திருக்க வேண்டும் என்ற நினைப்பு கேவலாக உள்ளே எழுந்தது. அற்புதத்தின் கையைத் தன்னுடைய நெற்றியில் ஒற்றிக்கொண்டு, “மன்னித்து விடுங்கள்… மன்னித்து விடுங்கள்…” என்று அரற்றிய அருள்குமரனைப் போல, “அருள்குமரா, என்னை மன்னித்து விடு” என எனக்குள் குமுறினேன். அந்த நேரத்தில் குளிந்த ஒரு கை என் நெற்றியில் படர்ந்து ஆசீர்வதிப்பது போன்ற உணர்வைத் தர வேண்டுமென மனம் ஏங்கிற்று. காலம் ஒரு அம்மா. நல்ல மருந்து. ஆனால் அது எப்போதும் எல்லாருடைய காயத்திற்கும் மருந்தாவதில்லை. மருந்திலிருந்தே சிலவேளைகளில் புதிய காயம் உருவாகி விடுகிறது. அருள்குமரன் போன்றவர்களுக்கு அப்படித்தான் விதித்திருக்கிறது.

அஷேரா – ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிமுகமாக்கிற்று.

அடிப்படை விளக்கங்களின்றி வெற்றுப் பேச்சுக்கு அலைவோரும், அல்லல்பட்டோரின் வலியின் ஆழங்களின் ஆரம்பம் கூட அறியாது வெறும் ஆரவாரங்களுக்காக அவதிப்படுவோருமான எம்மவரின் ‘அரிய வகை உயிரினங்கள்’ அஷேராவை வாசித்த பிறகாவது அறிதல் அடைந்தால் நலம். அற்புதத்தின் வீட்டுக்காரக் கிழவனின் மனநிலை அனைவருக்கும் வேண்டியது.

சயந்தன் என்கிற எழுத்தின் சாதனையாளனே! உன் உணர்வுச் சிந்தனையில் ஊற்றெடுத்து, விரல்களினூடு பெருகிய எழுத்துப் பாலை முட்டப் பருகிய நிறைவிலும், கனதியிலும் தலை வணங்குகிறேன்!