தீபன் சிவபாலன்

01
இலக்கியம் குறித்த நினைவு எழும்போதெல்லாம் குலசேகர ஆழ்வார் பக்தி இலக்கியப் பாடல் ஒன்றும் சேர்ந்தே நினைவுக்கு வரும் – வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் என்கிற வரிகள் அது.  கடந்தகாலத்தின் கொடு நினைவுகளும் நிகழ்காலத்தின் மீது படருகின்ற அன்றாடம் குறித்த அச்சங்களும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மைகளும் நம்மை ஒரு வாள்  கொண்டறுக்க இலக்கியத்தின் நிழல் மீது சிறிதளவேனும் மாறாத காதல் கொண்டு இங்கே கூடியிருக்கின்ற நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிறு மாலை வணக்கங்கள்!தமிழினி வெளிடாக வந்திருக்கின்ற சயந்தனின் ஆதிரை நாவல் குறித்து எனது தரப்பு விமர்சனத்தை இந்த நிகழ்வில்  முன்வைக்க நண்பர் முரளி என்னைக் கேட்டிருந்தார் – கேட்டபோதும் திரும்ப உறுதிப்படுத்திய போதும் கட்டுரையை  கேட்பவர்கள் பின்தொடர வசதியாக ஓரளவுக்கு மெதுவாக வாசிக்க சொல்லிக் கேட்டிருந்தார். – என்பதையும் ஒரு வாக்குமூலமாக முன்வைத்து செல்லலாம் என்று நினைக்கிறேன்.உண்மையில் ஆதிரை மீதான எனது விமர்சனத்தை இரண்டு ஆரம்ப மேற்கோள் புள்ளிகளில் இருந்து தொடங்க விரும்புகிறேன் ஒன்று; நாவல் எழுதி அல்லது நாவலாசிரியர் குறித்து ஓரான் பாமுக்கின் மேற்கோள், மற்றது விமர்சகர்  குறித்து தமிழ்நாட்டு விமர்சகர் வேதசகாயகுமார் ஒரு முன்னுரையில் குறிப்பிட்டது.

ஓரான் பாமுக் சொன்னார்; // நாவலாசிரியனுடையது ஒரு குமாஸ்தா பணியைப் போன்றது என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறேன். நாவலாசிரியன் ஓர் எறும்பைப்போல நெடுந்தூரத்தை அவனது பொறுமையால் மெதுவாகக் கடக்கிறான். ஒரு நாவலாசிரியனின் அருளிப்பாட்டினாலும் கற்பனாவாதப் பார்வையிலும் நம்மைக் கவர்வதில்லை.அவன் பொறுமையினால்தான். //

வேதசகாயகுமார் சொல்கிறார். // “விமரிசகன் பேராசை கொண்டவன். இலக்கியப் பரப்பில் எப்போதாவது நிகழும் பெருநாவல் மட்டுமே அவனுடைய எதிர்பார்ப்பு. அதுமட்டுமே மரபை முன்னெடுத்துச்செல்லும் தகுதிபெற்றது. இதனாலேயே பெருநாவலை நிகழ்த்திய, அல்லது நிகழ்த்தக்கூடும் என்ற நம்பிக்கையைத்தரும் படைப்பாளிகள் மீது புகழ்மொழிகளைச் சொரிய விமரிசகன் என்றுமே தயங்குவது இல்லை. ஆனால் பெரும்பான்மையான தமிழ்ப்படைப்பாளிகள் இந்த நம்பிக்கையை அளிப்பது இல்லை. தங்கள் படைப்புலகச் சாதனையின் வெளிவட்டத்தை இவர்கள் முதல் படைப்பிலேயே வரையக்கூடும். பிறகு அதை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம். அல்லது சிறு சிறு வட்டங்கள் வரைந்து தங்கள் இருப்பை படைப்புலகுக்கு உணர்த்தும் யத்தனங்கள். இதன் மீது எரிச்சல் கொள்ளும் விமரிசகன் இவர்களால் எதிரியாக இனம்காணப்படுகிறான்”.//

இந்த இரண்டு தரப்பு கருத்தும்  ஓரளவுக்கு எனக்கு இணக்கமாக இருப்பதால் இங்கு முன்வைக்க விரும்பினேன். இன்றைக்கு இருக்க கூடிய பொதுமைப்படுத்தப்பட்ட – வணிக மயப்படுத்தப்பட்ட – தன்முனைப்பு மற்றும் சமூகமயப்பட்ட சூழலில் நேர்மையான இலக்கியமும் கடினமானது; நியாயமான விமர்சனமும் சிக்கலானது. இரண்டும் ஒன்றை ஒன்று கற்பிதம் செய்து கொண்டு சொரிந்து கொள்ளும் அல்லது வியாக்கியானம் செய்து கொண்டு பிராண்டிக் கொள்ளும். கருத்துகளின் – அபிப்பிராயங்களின் – உரையாடல்களின் – விமரிசனத்தின் சமூகரீதியான வணிகரீதியான அரசியல் ரீதியான தார்ப்பரியம் அத்தனை சுலபமாக படைப்பாளியை படைப்பின் பின் இறக்க அனுமதிக்காது. அது படைப்பாளியையும் அவர் சார்ந்த வெளியீட்டுப் பரப்பையும் மீண்டும் மீண்டும் பேசவே தூண்டும். ஒரு ஆரோக்கியமான வெளியில் இந்த விவாதங்களும் உரையாடல்களும் தரப்புருவாக்கம் மற்றும் கருத்துருவாக்க அடிப்படையில் முக்கியமானவை என்றே நான் கருதுகிறேன்.  அந்த ஆரோக்கியமான வெளி குறித்த புரிதலுடனே எனது கருத்துகளை முன்வைக்கிறேன்.

02
ஒரு படைப்பின் மையம் அல்லது சாராம்சம் என்பது அதன் வாசகருக்கு அப்படைப்பு ஏற்படுத்தித் தரும் ஒரு சிற்றிழை தான், சிறு பொறிதான் – அந்த சிறுபொறியின் வழியேதான் அந்தப் படைப்பு அதன் வாசகரை கவர்கிறது. அந்த சிற்றிழை வழியே தொடர்ந்து செல்லும் வாசகனோ வாசகியோ அந்தப் படைப்பின் அகலை வந்தடைகிறார்கள். அந்த பொறியின் மற்றும் அகலின் சிரஞ்சீவித்தனமே அந்தப் படைப்பை கால ஓட்டத்தில் ஒரு பேரிலக்கியமாக அறிவிக்கும்.

உண்மையில் சொன்னால் ஒரு படைப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பொறியை உண்டுபண்ணுகின்ற சாத்தியமே அந்தப் படைப்பின் நுணுக்கமான வெற்றி என்று நினைக்கிறேன் அதுதான் அந்தப் படைப்பின் மீதான வாசிப்பின் பன்முகத்தன்மை எடுத்துச் செல்லும்.  உதாரணமாக யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள் படைப்பு இங்கே வெளியிடப்பட்ட போது அது குறித்து பேசிய ஒருவர் சொன்னார் – இந்தப் படைப்பு தனக்குள் ஏற்படுத்திய பொறி என்பது கொலம்பஸ் ஒரு பிழையான வரைபடத்தை வைத்துக் கொண்டு சரியான இடைத்தை அடைந்தார்; ஆனால்  பிரபாகரன் ஒரு சரியான வரைபடத்தை வைத்துக் கொண்டு பிழையான இடத்தை அடைந்தார் என்பதை என்றார். அது ஒரு அரசியல் சார்ந்த பொறி .பிறிதொரு நாளில் நான் அந்தப் புத்தகத்தை வாசித்தபோது அது எனக்குள் வேறு ஒரு மானுடம் சார்ந்த தெறிப்பை சொன்னது; அதாவது களம் பிழைத்து காலம் பிழைத்து ஆட்டம் பிழைத்த கையறு நிலையில் ஒரு முன்னாள் போராளி சரணடைய போகின்ற போது தடுக்கின்ற இன்னொரு இயலாத போராளி தன்னை கொன்று விட்டு போகக் கேட்டதை – மானுடக் கருணை தாண்டிய அந்த மன்றாட்டம் தான் அவனை அதன் பின் எப்போதும் எங்கேயும் வரைபடங்கள் இன்றி வெளியேறுகின்ற வாய்ப்புகள் கிடைத்தும் வெளியேறாமல் தடுக்கின்றது என்பதை சொன்னது.

ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு விதமான வாசிப்பின் சாத்தியம் என்பது இதுதான் என்று நினைக்கிறேன்.

ஒரு கலைப்படைப்பு  அனுபவங்கள் சார்ந்தே ஒரு அனுபவத்தை ஏற்படுத்தும் – ஒத்த அனுபவங்கள் மீது பரிவுறும் – வேறுபாடான அனுபவங்களை நோக்கி தொடர்ச்சியான பகிர்வை உரையாடலை தேடலை முன்வைக்கும் – அந்த அகல் காலவெளியில் வெவ்வேறு அனுபவங்கள் தேடி மானுடப் பரப்பெங்கும் இன மொழி பால் பேதங்கடந்து இடையறாது தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் பயணிக்கும். ஒரு கடலும் கிழவனையும் போல ஒரு மோக முள்ளை  போல இன்னும் எத்தனையோ பல்லாயிரம் படைப்புகளில்… இந்த இடத்தில் உங்களுக்கு பரிச்சியமான பிடித்தமான எதனையும் இட்டு நிரப்பலாம் என்றே நினைக்கின்றேன்

ஒரு பேரிலக்கியத்தின் தொடர்ச்சியான உருவாக்கம் என்பது இவ்வாறுதான் நிகழ்கிறதே அன்றி அதன் அட்டையில் உங்களுக்கு உடன்பாடாகவோ முரண்பாடாகவோ  எழுதப்படும் வெற்று எழுத்துக்களைக் கொண்டல்ல என்பதையும் இங்கே ஆரம்பத்திலேயே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு கிளாசிக் என்று சொல்லப்படுகின்ற நாவலை அதன் ஆரம்பநிலை வாசகனாக என்னை முன்வைத்து தொடங்குகின்ற சிக்கலையும் கவனப்படுத்தவே விரும்புகிறேன்.
03.
ஆதிரை சயந்தனின் ஆறாவடுவை தொடர்ந்த  இரண்டாவது நாவல் பிரதி – ஆறாவடு அளம்பில் கடலில் காலை இழந்து இத்தாலிப் பயணத்தில் உயிரை இழக்கின்ற அமுதனின்  fiber glass செயற்கைக்கால், எரித்திரிய கிழவன் இத்ரிஸ்க்கு சற்று ஏறக்குறைய பொருந்துவதில் முடிகிறது.

உலகம் முழுவதும் எப்படி பேரினவாதத்தின் பெரும் ஒடுக்குமுறையின் அது கையில் எடுக்கின்ற ஆயுதங்களின் முகங்கள் ஒரேமாதிரியானவையோ அதே போல அதற்க்கு எதிர் நிலையில் புரட்சியில்  எதிர்ப்பில் தவறில்  தோல்வியில் கைவிடப்படுகின்ற உதிரிகளின் இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலமும் சற்றேறக் குறைய ஒரேமாதிரியானதுதான் என்பதை இரண்டு அரசியல் ரீதியான அமைதிக்காலத்தின் சம்பவத் தொடர்ச்சியாகவே பெரிதும்  சொன்ன நாவல் ஆறாவடு.

அதன் பின்புலத் தொடர்ச்சியாகவே என்னால் ஆதிரையையும் நோக்க முடிகிறது.  பெரும் உழைப்புடனும் – நிலம் சார்ந்த, மனிதர்கள் சார்ந்த, சம்பவங்கள் சார்ந்த விஸ்தீர்ணத்துடனும் முன்வைக்கப்படுகின்ற பெரு நாவல் ஆதிரை. முன்னரே குறிப்பிட்டதை போலவே பல்வேறான வாசிப்புச் சாத்தியங்களின் இழைகளை பொறிகளை உள்ளடக்குகின்ற பிரதி. ஓரளவுக்கு இங்கே இருப்பவர்கள் ஆதிரையை வாசித்து இருப்பதனால் அதன் அரசியல் – அழகியல் – பிரதி மனிதர்கள் சார்ந்து உங்கள் அனுபவங்களோடு என்னைப் பின்தொடர்வீர்கள் என்றே நம்புகிறேன்.

இந்த நாவலின் ஆரம்பமும் முடிவும் – காலங்கள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு – பிரதியின் ஒழுங்கை குலைப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. 05/ june 1991 இல் நிகழ்கின்ற சிங்கமலை லட்சுமணனின் அந்த தடுப்புக் காவல் கதையின் தொடர்ச்சி அதற்கு பின்பு 1977 இல் ஆரம்பிக்கின்ற பிரதிக்குள் எங்கும் சொல்லப்படவே இல்லை அது போல 31/12/2008 இல் நிகழ்கின்ற ஆதிரையின் காவல் பணியினதும் வீரச்சாவினதும் முன்கதையும் 2013 இல் முடிகின்ற கதைக்குள் எங்கும் சொல்லப்படவும் இல்லை. உண்மையில் இவ்வாறாக இந்தப் பிரதியின் ஒழுங்கை குலைக்கின்ற அமைப்பை ஒரு பொறிமுறையாகவும் உத்தியாகவுமே நான் கருதுகிறேன். இது இந்த பிரதியின் வாசகருக்கு அதன் ஆரம்பத்தில் ஒரு சம்பவம் சார்ந்த எதிர்பார்ப்பையும் ஈர்ப்பையும் உண்டுபண்ணி அதன் வழியே நாவலின் அடுத்த தளத்துக்கு வாசகரை தொடர்ச்சியாக அழைத்துச் செல்கிறது. அதுபோலவே எல்லாம் முடிந்த பின்னும் – சொல்லப்படுகின்ற ஒழுங்கு குலைந்த காலத்தின் முடிவுக்கதை மீண்டும் அதன் வாசகரை கடந்த காலத்துக்குள் உள்ளிழுத்து  அந்தப் பிரதி குறித்து சிந்திக்க வைக்கிறது. இந்த இரண்டு அத்தியாயங்களும் மிகத் தெளிவாக விடுதலைப் போரை , தியாகத்தை அர்ப்பணிப்பை – அதைக் காவிச் செல்கின்ற ஆண்  பெண் உடல்கள் அடையும் வலியை நோவை சித்திரவதையை  பேசுகின்ற கோணத்தில் இந்த பிரதியின் அரசியலையும் பிரதியாளரின் நிலைப்பாட்டையும்  தெளிவாக பேசிவிடுகிறது.

ஆனால் இந்த ஒழுங்கு குலைந்த இரண்டு கதைகளினதும்  பாத்திரங்களின் மொழி ஒரே மாதிரியானதல்ல. பின்னர் எங்கும் குறிப்பிடப்படப்படாத அளவில் சிங்கமலை லட்சுமணன் முதல் அத்தியாயத்தில் கதை சொல்லியின் தன்மை விகுதியில் நான் ஆகிறான் – முடிவில் ஆதிரை எல்லோரையும் போலவே படர்க்கை விகுதியோடு ஆதிரையாகவே மடிகிறாள். என் போன்ற வாசகன்/விமர்சகன் ஒரு கட்டத்துக்குள் வரச் சிரமப்படுகின்ற இடம் இது என்று நினைக்கிறேன்.

04
ஒரு நாவலின் பெரும் பலமே அந்த நாவல் கட்டப்படுகின்ற நிலம்தான் – அதுதான் அந்த நாவலின் மொழியை, திணை சார் அழகியலை, கதை மாந்தர் தன்மையை  கலாச்சார பண்பாட்டு அம்சங்களை என்று முழுமைக்கும் அந்த நிலத்தின் தொடர்ச்சியே அந்த நாவலில் ஊடுருவிப் படர்ந்திருக்கும் – எப்படி ஒரு வேம்பலையின் துயரை கைவிடப்படுதலின் பேரலைவை நெடுங்குருதி பேசியதோ – எப்படி ஒரு  தாதனூரின் மதுரையின் காவல் முறையை அதன் பண்பாட்டு எச்சங்களின் மீதான காலனித்துவக் களவை வசீகரம் சொட்ட காவல்கோட்டம் பேசியதோ அப்படியே தனிக்கல்லடி, எட்டேக்கர் மேட்டுக்காணி என்று வன்னி நிலத்தில் பரவுகிறது ஆதிரை.

சொந்த நிலமிழந்து காலத்துக்கு காலம் அந்த நிலத்தை வந்தடைகின்ற மனிதர்களின் எதிர்காலக் கனவுகளும் பிரயாசைகளும் வாழ்வு குறித்த முனைப்புகளும் எத்தனங்களுமே நாவலின் பெரும்பாலான அத்தியாயங்களில் எழுதிச் செல்லப்பட்டிருக்கிறது. ஒரு காடு சார் வாழ்வு முறையின் நேசங்களும் பிடிமானங்களும் நம்பிக்கைகளும் அதனை நேசிக்கின்ற மனிதர்களின் எளிமையும் அழகியலுயும் சேர நாவல் முழுவதும் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறது.

நம் ஒவ்வொருவருக்கும் இந்த நாவல் அதன் அழகியல் தளத்தில் வெவ்வேறான அனுபவங்களை கொடுத்திருக்கலாம். நேரத்தின் தேவை கருதி குறிப்பிட்ட சில பகுதிகளையே  முன்வைக்க விரும்புகிறேன். – ஏறத்தாள மூன்று தலைமுறை தாண்டி நீள்கின்ற கதையில் மூன்று பேரின் மூன்று விதமான  உறவு குறித்து பேசப்படுகிறது.  மலரக்காவினது அறியாப்பருவத்து அப்பாவித்தனமான ஏமாற்றுப்படுகின்ற கதை – ராணியினது கணவன் இறந்த பின்னரான உறவின் கதை – இவற்றை கண்டும் கேட்டும் வளர்கிற நாமகளின் சாரகனோடான காதல் கதை.

உண்மையில் நான் ஏன் இது குறித்து பேச விரும்புகிறேன் என்றால். மனித  உணர்வுகளின் ஆதாரமான அடிப்படியான காதல் உணர்வு எல்லாத் தலைமுறைக்குள்ளும் புறவயமான எல்லாச் சிக்கல்களையும் தாண்டி ஒரு காட்டுப் பூவைப் போல தன்பாட்டில் பூத்துக் கிடக்கிறது என்பதைச் சொல்லத் தான்.

ஒரு இடத்தில காதல் வசப்படுகின்ற ராணி சின்னராசுவை காணப் போகின்ற போது முற்றத்தில் விழுகின்ற தன் நிழலுருவம் குறித்து திருப்தி கொண்டவளாக செல்கிறாள். இது ஒரு கவிதைத் தருணத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்தது.

இந்த இடத்தில் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகளை குறிப்பிட  விரும்புகிறேன்  ஒன்று: நா.சபசேன்  05-01-1983 இல் எழுதிய காதல் என்ற கவிதை;

ஈச்சையும் பன்னையும் மண்டிக் கிடக்கும்
சுடலையின் பின்புறம்  எதிர்பாராமல் சந்தித்தோம்.
என்னைக் கண்டதும் கண்கள் விரிந்தது;
மெதுவாக  சைக்கிளை நிறுத்தினாய்.
மழைகள் முடிந்து படர்ந்து கிடக்கும்  பச்சைப் பின்னணியில்
நல்லதொரு கவிதையை படிப்பது போல் சிவந்து நிற்கிறாய்!
மற்றது தீபச்செல்வன் 2000 களின் மத்தியில் எழுதிய நீ பேசாது போன பின்னேரம் என்கிற கவிதை
//என்னதான் பேசுவாய்
நான்தான்
என்ன கேட்கப்போகிறேன்?//ஒரு நாள் பின்னேரம்
உனது வீட்டில்  நாம் அருந்திய  தேனீர்க் கோப்பைகளினுள்
இணைந்து கிடந்தன  நமது இருதயங்கள்//இந்த இரண்டு கவிதைகளிற்குமான கால இடைவெளியை யுத்தமும் யுத்தம் சார் எத்தனங்களுமே நிறைத்திருந்தன இருந்த போதிலும் காதல் மனித உணர்வுகளில் வரைகின்ற சித்திரம் எல்லாக் காலங்களிலும் எல்லாத் தலைமுறையிலும் எல்லாக் கொடுமைகளுக்குள்ளும் சிக்கல்களுக்குள்ளும் அழகியல் பூர்வமானது என்பதை சொல்லவே இதனைக் குறிப்பிடுகிறேன். இவ்வாறான கவிதைத் தருணங்களை உள்ளடக்குகின்ற/ உருவாக்குகின்ற பிரதி அதன் வாசகருக்கு அழகியல் தளத்தில் பரவசமளிப்பதில் வியப்பேதுமில்லை.

இருந்த போதும் நாமகள் சாரகன் உறவின் கதை அதன் பருவ கால வசீகரத்தை தாண்டி தீவிரமாக பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது. பெரும் அவலங்களையும் உயிரிழப்புகளையும் கடந்து சொந்தச் சகோதரனுக்குகூட சொல்லாமல் இரவில் படகேறிப் போகிறவளின் கதையை – அதன் பின்பு சாரகனோடு சேர முடியாமல் திரும்புகின்ற நிலையை  ஒரு மூன்றாம் தரப்பாக ஓடிக் கடக்காமல், அதன் சாத்திய அசாத்தியங்களை நின்று நிதானமாக பேசியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதுவும் பிரதிக்கான சமூக அரசியலின் கடமை என்றே நினைக்கிறேன்.

05
இந்தப் பிரதியின் அரசியல் குறித்து பேசிவிட நிறைய திறப்புகளும் சாத்தியங்களும் இருக்கின்றன. ஓரளவுக்கு சுருக்கமாக முன்வைக்க விரும்புகிறேன். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற – நாம் ஒவ்வொருவரும் இருக்க விரும்புகின்ற காலத்தையே அதன் சம்பவங்களையே – நம் கதைகளாக முன் வைக்க விரும்புவோம் இல்லையா அந்த வகையில் தொடர்ச்சியான சம்பவங்களினூடாகவும் காலங்களின்  ஊடாகவுமே ஆதிரை  பயணிக்கிறது.

பல இடங்களில் இந்தக் கதை தான் இருக்க விரும்புகின்ற காலத்தை – அந்தக் காலம் பிழைக்கின்ற போது – கதை சொல்லி பேச விரும்புகின்ற அரசியலை வெளிப்படுத்துகின்றது. ஒரு படைப்பு  அதன் கலைவடிவத்தில் நேர்த்தியாக – யாருக்கும் உடன்பாடான முரண்பாடான அரசியலை பேசுவதில் எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை.

ஒரு தோற்றுப்போன யுத்தத்தின் – அதன்  கையறுகாலத்தின் – எதிலிச் சூழலின் உதிரிப் பிரதிநிகளை பேசுகின்ற பிரதியில் அதன் சமூக இன யதார்த்தங்களை பிரதிபலிக்க – நேரிடையான பாத்திர சம்பாசணையையே இந்தப் பிரதி கையில் எடுத்திருப்பது கொஞ்சம் நெருடலான ஏமாற்றத்தையே எனக்கு அளித்தது.

ஆனால் அதையும் தாண்டி சில நுட்பமான நுணுக்கமான அரசியலையும் நாவல் முன்வைக்கிறது. ஓரளவுக்கு புலிகள் நிலைகொண்டிருந்த காலத்தில் பெரிதும் பயணிக்கிற நாவலில் – சாதி சார்ந்த அடக்குமுறை குறித்தும் – நவீன தீண்டாமையின் மூலகங்கள் குறித்தும் உரையாடல்களாகவும் விவாதங்களாகவும் பெரிதும் அதன் பாத்திரங்களின் ஊடாக முன்வைக்கப்படுகையில் எந்தச் சூழலிலும் பாத்திரங்களின் சாதி புலிகளின் பிரதிக் காலத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் புலிகளின் வீழ்ச்சி சற்றேறக்குறைய நிச்சியமாகி விட்ட – இறுதிக் காலத்தில் – முள்ளி வாய்க்காலில் சந்திராவோடு செத்துப்போன அத்தார் – அடையாளம் காணப்படுகின்ற இடம் பின்வருமாறு அமைகிறது .

// உடல் சிதைந்து வலது கண் மட்டும் திறந்திருந்த ஒரு தலையை நீண்ட நேரமாக யாராலும் அடையாளம் காண முடிய வில்லை புதைப்பதற்கு சற்று முன்பாகவே ஒரு நடுத்தர வயதுக்காரன் அடையாளம் காட்டினான்.

“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும் அத்தார் எண்டு கூப்பிடுகிறவை. ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர். இவருக்கு பிள்ளைகள் இல்லை..” //

உண்மையில் இவ்வாறான நுட்பமாக அரசியலை பேசுகின்ற இடங்களே  வாசகருக்கான  சிந்தனை தருணங்களையும் பிரதிக்குள் பங்கெடுக்கின்ற வெளியையும் உருவாக்கித் தரும் என்பது எனது கருத்து.  மேலும் இந்த வாசிப்பை இனியும் நீடிக்காமல் இத்துடன் முடிக்காலாம் என்றே நினைக்கிறேன்.  உங்களின் நேரத்துக்கும் பொறுமைக்கும் நன்றி வணக்கம்.

Facebook இலிருந்து