மலைநாடான்

அதிகாலை 3.45.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டெழுந்து, சாளரத்தின் திரை விலக்கிப் பார்க்கின்றேன். காணவில்லை…

கதவு திறந்து பலகணிக்கு வந்தேன். உனது நிலமல்ல… குளிர் முகத்திலறைந்து சொன்னது. இருக்கலாம், ஆனால் ஆகாயம்.. ? அந்தப் பொதுமைப் பரப்பில் தேடினேன். பிரகாச நட்சத்திரங்கள் இருபதில், பத்தாவது இடம் ஆதிரைக்கு. காணவில்லை…அல்லது கண்டுகொள்ளத் தெரியவில்லை. நீலத்தின் நிர்மலத்தில் கரைந்து போனோளோ..? கலந்து போனாளோ..?

தவிப்போடு திரும்பினேன்.

” மன்னிச்சுக்கொள்ளு ஆத்தை..” சிவராசன் குளறியது என்னுள்ளும் எதிரொலிப்பதாக உணர்வு. ஆற்றாமையை அழுது தீர்க்கவேண்டுமான உணர்வு.

சற்றுமுன்னதாக சயந்தனின் ஆதிரையை வாசித்து முடித்தேன். ” ஆறாவடு ” வினால் ஏற்பட்ட சினம் நீங்கியிருந்தது.

” அர்த்தம் ” சிறுகதைத் தொகுப்பினை வாசித்தபோது அறியமுடிந்த சயந்தனின் ஆற்றல் “ஆறாவடு” வும், அது கொடுத்த அறிமுகமும், திசை திரும்பிவிடக்கூடுமென எண்ணியதுண்டு. ஆனால் அவ்வெண்ணத்தை மாற்றியிருக்கிறாள் ஆதிரை.

600 பக்கங்கள் தாண்டி, வன்னி நில மாந்தர்களோடு வாழ்ந்து பயணிக்க, ஈற்றில் ஆதிரை.. நாவலின் முன்னெங்கும் காணாத ஆதிரை எவ்வாறு நாயகியானாள்? , சிவராசனின் கதறியதுபோல் ” காவல் தெய்வம்” என்றதனாலா..? .

அதிகம் பேசாதவர்களின், பேசப்படாதவர்களின், அடையாளம் ஆதிரை. தொலைந்து போனவர்களின் தொலைக்கப்படக் கூடாத அடையாளமாக என்னுள் ஆதிரை.

“நிலக்கிளி” யிலும், “குமாரபுர(ம்)” த்திலும், வன்னிப் பெருநிலப்பரப்பில் அலைந்து திரிந்த அனுபவத்தை, தந்து மகிழ்வித்த அ.பாலமனோகரனது எழுத்துக்களின் நினைவோடே ஆதிரையை வாசிக்கத் தொடங்கினேன். ஒருவகையில் அது தவறாயினும், வன்னி நிலம் சார்ந்த வாசிப்பனுவத்தை பாலமனோகரனைத் தாண்டி எவரது எழுத்துக்களும் எனக்குத் தந்திருக்கவில்லை.

முதல் 250 பக்கங்களிலும் வன்னி நிலம் வருகிறது, அங்கு வாழும் மாந்தர்கள் வருகிறார்கள், தனியன் யானையும், இத்திமரத்தாளும், கூடவே வந்த போதும், ஒன்றிக்க முடியதவாறே கடந்து சென்றேன். கதையாடல் சரியாயினும், சொல்லாடலில் அந்நியமானது போலும். ஆனால் அதற்குப் பின் வந்த 400 பக்கங்களையும் ஒரே அமர்வில் நின்று நிதானித்து வாசிக்க வைத்த கதையோட்டமும், அதை இடர்ப்பாடு செய்யாத மொழிநடையும், பாலமனோகரனை மெல்ல மறக்கச் செய்தது.

நின்று நினைக்க, நினைந்துருகிக் கலங்க, மகிழ்வுகளில் மனம் திளைக்கவென ஒன்றன்பின் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்து வரும் காட்சிகள்.கேள்விகள், பதில்கள், பதிலற்ற கேள்விகள் எனத் தொடரும் உரையாடல்கள். சாதிபார்த்தவன், சமராடியவன், விட்டோடியவன், வேடிக்கை பார்த்தவன், என எல்லோரையும் இழுத்து வைத்துக் கதைநகர்கிறது. எல்லோரும் இருக்கிறார்கள்…

இல்லாது போனவர்களின் கதை , இருப்பவர்களின் கதையுமெனச் சொன்னதும், சொல்லாததும் நிறையவே உண்டு. ஆனாலும், போராட்டத்தின் இறுதிக் கணங்களில், குழந்தையின் கன்னம் தொட்டு மன்னிப்புக் கோரும் போராளியும், ஆதிரையிடம் மன்னிப்புக் கோரும் சிவராசனும், போராட்டத்தில் தவறுகளுன்டு, ஆனால் போராட்டம் தவறல்ல என்பதையும் நிறுவத் தவறவில்லை. துயர் கடந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் ஆதிரையைக் காணமுடியும்.

ஆதிரையைக் கொண்டாடலாம்.

நன்றி – 4தமிழ்மீடியா