ஆறா வடு – ரமேஸ் ஸ்டீபன்

சயந்தனின் “ஆறாவடு” நாவல் விமர்சனக் கூட்டம் இன்று நடைபெற்றது. முரளியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்திருந்தார்கள். (மண்டபம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மண்டபம் இல்லை.) என்.மகாலிங்கம் தலமைதாங்கி இருந்தார். மயூ மனோ, ராபேஃல் மற்றும் இப் புத்தகம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலாந்தனின் கட்டுரையை முரளி வாசித்திருந்தார்.

87இல் தொடங்கி 2003 வரையான காலப் பகுதிகளுக்கிடையே இந்நாவலின் கதை நகர்ந்து செல்லிறது. விமர்சனம் செய்தவர்களும், பின்னர் கருத்துகள் வழங்கியவர்களும் இந்நாவல் தொடர்பாக தமது பல்வேறு பட்ட அபிப்பிராங்களை வழங்கியிருந்தார்கள். இந்நிகழ்விற்கு வந்தவர்களில் கணிசமானவர்கள் இந்நாவலை ஏற்கனவே வாசித்திருந்தது இந்நிகழ்விற்கு இன்னும் வசதியாக இருந்தது.

இலங்கையில் இந்திய இராணுவத்தின் வருகையும், அவர்களுக்கும் புலிகளுக்குமிடையிலான சண்டை, இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய தமிழ் குழுக்கள், அவர்களுக்கிடையில் அகப்பட்டிருக்கும் தமிழ் மக்கள், அவர்களின் வாழ்வு, துயர், இடப்பெயர்வு, புலிகளின் இராணுவ, அரசியல் நகர்வுகள், காதல், வெளிநாட்டுப் பயணம் என்று நகர்ந்து செல்லும் நாவல், அண்மையில் வெளிவந்திருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு.

இக்கூட்டத்தில் விமர்சனம் செய்த ராபேஃல்லின், இந்நாவல் குறித்த கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன். நான் நாவல்களை அதிகம் வாசித்து சிலாகிப்பவன் அல்ல. ஆனால் இந்நாவல் நான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்வங்களையும், இச்சம்பவங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் என்னையும், என்போன்றவர்களையும் பாதித்திருந்ததனால் இந்நாவலை வாசிக்கத் துாண்டியது. அந்த வகையில் அக்காலப் பகுதியில் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற பல சம்பவங்களை ஒரு திரட்டாக தந்திருக்கும் ஆசிரியரின் ஆளுமையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரம் இந்நாவலில் வரும் சம்பவங்கள் என்னை மிக ஆழமான உணர்விற்கு இட்டுச்செல்ல வில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலங்களில் எனது கிராமத்தில் இருந்த போது மாலை ஆறு மணி இருட்டிக் கொண்டு வரும்போது ஒரு விதமாக நெஞ்சு பட படக்கத் தொடங்கி விடும். எதிர்பாரா நேரமெல்லாம் பெருமூ்ச்சு தன்பாட்டில் வந்துபோகும். நாய்களின் ஓலம் வயிற்றைக் குமையும். இப்படியே இந்த உணர்வு அதிகரித்துச் செல்லும். நடுச்சாமத்தில், சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியில் போகப் பயம்.  இந்திய சிப்பாய்களும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் குழுக்களும் வேலி ஓரத்தில் படுத்திருப்பது போன்று தோன்றும், இதனால் யன்னல் வழியாக சிறு நீர் கழிக்க வேண்டி வரும். அந்த நேரம் பூவரசம் சருகுகளின் மேல் சிறுநீர் விழவும் அது எழுப்பும் சத்தத்தினால் சடுதியாக சிறுநீரை நிறுத்தும் போது ஏற்படும் வலி சொல்லி மாளாது.

இதே போன்று இந்திய இராணுவம் தங்கி இருந்த கட்டிடம் அவர்கள் அவ் இடத்தை விட்டுச் சென்று ஆறு மாதங்கள் ஆகியும் அவர்களோடு இருந்த ஒருவித எண்ணை மணம் அந்த இடத்தை விட்டு அகலாமல் இருப்பதும், அந்த மணத்தை சுவாசிக்கும் போதெல்லாம் அவர்கள் பற்றிய எண்ண ஓட்டங்களும் ஒருவித அச்ச உணர்வும் ஏற்படுவதை இந்நாவல் மூலமாக இதுபோன்ற சம்பவங்களை வாசிக்கும் போது ஏற்படவில்லை என்பதே எனது கருத்து. இப்படி இருக்க வேண்டுமா? அல்லது இருக்கக் கூடாதா என்ற வாதங்களுக்கு அப்பால் எனது உணர்வினையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அதே போல் இந்நாவலில் வரும் குண்டு பாப்பா சம்பவமும் அதீத கற்பனையாகவே எனக்குப் படுகிறது. இந்திய இராணுவத்தின் கொடுமை தாங்க முடியாதவை, ஆனால் சாதாரண பின்னணி கொண்ட பெண் அந்தச் சூழலில் வீர வசனம் பேசி குண்டை வெடிக்க வைப்பது யதார்த்தம் அற்றதாகவே என்னால் பார்க்க முடிகிறது. இப்படி இந்நாவல் பற்றி பல விடையங்களை பேசிக்கொண்டே போகலாம். எது எவ்வாறாகிலும் இந்நாவலின் முக்கியத்துவம் தவிர்க் முடியாதவையே

Last modified: March 15, 2012

Comments are closed.

No comments yet.

× Close