இது எவருடைய தவறாய் இருக்கலாம் ?

விமர்சனங்கள் எந்த அடிப்படையில் உருவாகின்றன என்பதற்கு பொருத்தமான இரண்டு வழிகளைச் சொல்ல முடியும். அவை நேரடி அனுபவத்தின் ஊடான தர்க்க ரீதியான சிந்தனையின் அடிப்படையில் உருவாகின்றனவாகவும், இன்னொரு வழியில் நேரடியான அனுபவமோ தொடர்போ அற்ற நிலையில் அது குறித்து அறியப்படும் செய்திகளினூடு உருவாக்கிக் கொள்ளும் கருத்துருக்களாகவும் அமைகின்றன. இவற்றோடு தனி விருப்பங்களும் இணைவதுண்டு.

இன்னொரு வழியில் ஏற்கனவே எடுத்து விட்ட முடிவின் அடிப்படையில் விமர்சனங்களை உருவாக்கிக் கொள்வோரும் உண்டு. அவர்கள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் தமக்கிருக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

ஆயினும் மேற்சொன்ன இருவழிகளில் ஒன்றான செய்திகளின் அடிப்படையில் தமக்கான கருத்துருவாக்கங்களை உருவாக்கிக் கொள்ளுதல் என்பது, அவர்கள் அறிந்து கொள்ளும் செய்திகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டு மேலே செல்லலாம்.

பொதுவாக ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழில் சொல்லப்படும், எழுதப்படும், அளவுகளில் வேற்று மொழிகளில் சொல்லப்படுவதில்லை என்ற ஆதங்கத்தினை நான் பலரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நான் உட்பட பலரும் அவற்றிற்கான முழு முயற்சிகளில் இது வரை இயங்கியதாக இல்லை. அதிலும் குறிப்பாக, அறிந்த பிற மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்தது என்ற நிலை மாறி குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில், இன்று பல நாடுகளில் வாழும் இளைஞர்களுக்கு பிற மொழிகள் தெரிந்திருக்கும் நிலையில் அதற்கான முன் முயல்வுகள் என்பது அசாதாரண வேகம் எனச் சொல்லக் கூடிய அளவிற்கு இல்லை.

உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் தமிழர் அல்லாதவருக்கு, ஊடகங்கள் சென்றடையும் ஒருவருக்கு, அரச இயந்திரமொன்றில் சம்பந்தமற்ற ஒருவருக்கு இலங்கை தமிழர்கள், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள், அதற்கான முடிவுகள் குறித்து பரந்த அளவில் தெரியாத நிலையில் நமது போராட்டம் உலக மயமாகி விட்டது எனச் சொல்லி விட முடியுமா..? என்ற கேள்விகள் என்னிடம் உண்டு.

இவை, தமிழர்களுக்கு போதுமான அளவு சொல்லியாகி விட்டது என்ற எண்ணத்திலும், தொடர்ந்தும் நமக்குள்ளேயே சொல்வதும், எழுதுவதும் ஒரு வித ஒப்பாரி நிலையைத் தோற்றுவிக்கிறது என்ற நிலைப்பாட்டிலும் எனக்குள் ஏற்பட்ட கருத்துக்களாயினும், அவற்றை மீள்பரிசீலனை செய்ய வேண்டியேற்பட்ட அனுபவம் ஒன்றைக் குறித்துச் சொல்ல வேண்டும்.

அண்மையில் ஒரு தமிழ் களத்தில் தமிழக நண்பர் ஒருவர் கேட்டிருந்த சில கேள்விகள், ஈழத் தமிழரின் நியாயங்கள் மட்டுமல்ல.. ஈழத் தமிழர் குறித்த பொதுவான செய்திகளே இன்னும் தமிழர்களிடத்தில் சென்று சேரவில்லையென்ற சோர்வு நிலையை எனக்குள் தோற்றுவித்தது. அயலிலே வெறும் முப்பது கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருந்து கொண்டு மொழியால், பண்பாட்டுத் தொடர்புகளால் ஒத்திசைவு உள்ள ஒரு இனத்திடம் கூட நம்மைப் பற்றிய செய்திகள் சென்று சேரவில்லையே.. இந்த லட்சணத்தில் உலகின் பார்வைக்கு நம்மைப் பற்றிக் கொண்டு செல்வதா என்ற ஏமாற்ற உணர்வினை நான் அனுபவித்தேன்.

இணையத்தில் இப்போதும் பார்வைக்கிருக்கும் அக் கேள்விகளை இங்கே மீளப் பதிப்பிப்பதென்பது யாரையும் புண்படுத்தவோ, குத்திக்காட்டவோ இல்லையென்பதை அனைவரும் புரிவீர்கள் என நம்புகிறேன். அந்த நண்பரின் கேள்விகளில் விவரிக்க முடியாத அதிர்ச்சியையும் ஒருவித அயர்ச்சியையும் ஒருங்கே தந்த கேள்விகள் இவைதான்.

1. வாழச் சென்ற நாம் தனி இடம், அரசாங்கம் கேட்பது நியாயமா?

2. 50 வருடங்களுக்கு முன் நாம் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறி, இன்று கலிபோர்னியா மாகாணம் மட்டும் நமக்கு தனியாக கொடுத்து, சுய ஆட்சி தரவேண்டும் என்று சொன்னால் அமெரிக்கா ஒப்புக் கொள்ளுமா. நீங்கள் அமெரிக்கராக இருந்தால் உங்கள் நாட்டிற்கு வந்தவர்களுக்காக ஒரு பகுதியை வெட்டி தானம் செய்வீர்களா?

3. குடியேற சென்ற தமிழர்கள் இலங்கை முழுவதும் பரவி, அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்திருந்தால் இந்த பிரச்சனை நேர்ந்திருக்குமா. தமக்கென்று தனியே ஒரு இடத்தை அமைத்து அதில் வாழ முற்பட்டதாலேயே இந்த தனியிட கோரிக்கைகளும், தமிழர் இருக்கும் இடம் பார்த்து அவர்கள் தாக்க முடிவதும்

4. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக் செல்பவர்கள் தொழிலுக்காக சென்ற அந்த நாட்டிலிருந்தே ஒரு பகுதியை கேட்பது நியாயமா?

ஈழத்திலே 50 வருட கால இனமுரணும், இருபத்தைந்து வருட கால ஆயுதப்போரும் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அவர்களின் இருப்பு என்ன எனவும், அவர்களது பூர்வீகம் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பும், வெறும் ஐம்பது வருட வரலாற்றினையே அவர்களுக்கு கொடுக்கும் இக் கேள்விகள் குறித்து என்ன உணர்கிறீர்கள்.

ஆரம்பம் தொட்டே ஈழத்தில் தமிழ் பூர்வீகக் குடிகள் இருந்தனவென்பதும், சிங்கள மேலாதிக்க வரலாற்று அல்லது புராண நூலான மகாவம்சம் கூட சிங்களவர்கள் இலங்கை நாட்டிற்கு ( இந்தியாவிலிருந்து) வந்த போது அங்கு ஆதிக் குடியினம் ஒன்று இருந்ததாகச் சொல்லும் செய்திகளும் எப்படிக் கடலைக் கடக்காமல் போயின?

தமிழகத்தில் இருந்து அவ்வப்போது நடத்தப்பட்ட படையெடுப்புக்களினால் ஏற்கனவே அங்கிருந்த மக்கட் கூட்டத்தினோடு சில திருமண உறவுத் தொடர்புகள், பண்பாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டனவே தவிர படையெடுப்புக்களினூடு மக்கள் சென்று குடியேற்றப் பட்டார்கள் என்ற செய்திகளை நான் அறிந்திருக்க வில்லை. தவிரவும் ஈழத்தில் நடந்த பல தொல்லியல் ஆய்வுகளும் தமிழர் பகுதிகளில் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்திருக்கின்றன.

உண்மையில் இக் கேள்விகளை ஏதோ திட்டமிட்ட விசமத்தனமான கேள்விகள் என நான் கருதவில்லை. ஒருவர் தான் அறிந்து கொண்ட செய்திகளின் அடிப்படையில் தனக்கான ஒரு கருதுகோளை எடுத்ததன் வடிவமே இது. அதாவது தமிழர் போராட்டம் நியாயமானதா அற்றதா என்பதற்கு அவர் அறிந்து கொண்ட செய்திகளினூடு முடிவினை எடுத்துக் கொள்கிறார். இங்கேதான் உண்மையானதும் சரியானதுமான செய்திகளின் தேவை முதன்மை பெறுகிறது.

ஆரம்பத்தில், ஒரு சிலரிடம் மட்டுமே இவ்வாறான நிலைப்பாடுகள் இருக்கலாம் என்றிருந்த எனக்கு, அண்மையில் ரவிசங்கர் ஒரு ஒலிப்பதிவிலும், பாரி அரசு ஒரு பின்னூட்டத்தில் மிகப்பரந்து பட்ட அளவில் இந்த எண்ணம் தமிழகத்தில் உள்ளதாகச் சொன்னார்கள்.

ஓர் அறியும் ஆர்வத்திற்காக இந்தக் கேள்வி. தமிழகத்தின் தமிழர்களின் அதே வரலாற்றுக் காலம் தொடக்கம் ஈழத்திலும் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை ஏற்கனவே நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா.. ? இல்லையெனில் ஐம்பது வருடங்களிற்கு முன்னர் சென்றவர்கள் போன்ற செய்திகளை எப்படி அறிந்து கொண்டீர்கள்..?

(இங்கே ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களிற்கு வேலைக்காக கூட்டிச் செல்லப்பட்ட தமிழர்கள் குறித்த குழப்பங்களும் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் ஈழத்தில் தமிழரின் பாரம்பரிய நிலங்களான வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து நேரடி நிலத் தொடர்பற்ற மத்திய பகுதிகளில் தமக்கென தனியான அரசியல் தலைமைகளுடன் செயற்படுகிறார்கள். நடந்து முடிந்த சில பல கலவரங்கள் காரணமாக அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று இன்று தமிழர் போராட்டத்தின் பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் ஆகி விட்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் நேரடிப் பங்களிப்பவராகவும் உள்ளார்கள்.)

இந்த மாதிரியான தவறான முடிவுகளுக்கான தவறான செய்திகளுக்கு என்ன காரணம்..?
சரியான செய்திகளை கொண்டு வராதவர்களின் தவறா?
சரியான செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வமற்றவர்களின் தவறா..?

அல்லது இவ்வாறான செய்திகளை வேண்டுமென்றே திட்டமிட்டுப் பரப்பும் சில அதிகாரங்களா..?

23 Comments

  1. இந்தக்கேள்விகள் எனக்கும் இருந்தன.கிட்டத்தட்ட இந்த 50 வருடக்கதையை என்னிடமும் ஒருவர் அளந்துவிட்டார். வேற்றினத்தவர்களுக்குக்கூட இலங்கை பற்றியும் அங்கு வாழும் மக்கள் பற்றியும் போர் பற்றியும் தெரிந்திருக்கிறது ஆனால் இப்பிடி இடையில் குழம்பிக்கிடப்பவர்களுக்குத்தாள் தெளிவாகச் சொல்லவேண்டும்.

  2. //ஈழத்திலே 50 வருட கால இனமுரணும், இருபத்தைந்து வருட கால ஆயுதப்போரும் நடந்து கொண்டிருக்கிறது.//

    எங்களுக்குள்ளயே சரியான தெளிவைக் கொண்டுவர வேண்டிக் கிடக்கேக்க மற்றவன்ர கோடிக்கை ஏன் போவான்? அதென்ன ஐம்பதுவருடகால இனமுரண்?

    அப்ப மகாவம்சம் எழுதப்பட்டதன் பின்னணியில் எந்த இனமுரணுமே இல்லையோ?
    “வடக்கே தமிழர், தெற்கே கடல், எப்படி நீட்டி நிமிர்ந்து உறங்குவேன்?” என்று துட்டகைமுனு கேள்வி கேட்டதாகச் சொல்லப்பட்ட கதையெல்லாம் இனமுரணன்றி வெறும் அம்புலிமாமாக் கதைகளோ?
    விட்டால், முன்பு முஸ்லீம்களும் தமிழர்களும் எப்படி இனிமையாக வாழ்ந்தார்கள் என்பதற்கு சிலரால் விடப்படும் வண்டில் மாதிரி ‘சிங்களவர்களும் தமிழர்களும் புட்டும் தேங்காயப்பூவுமாக வாழ்ந்தார்கள், இடியப்பமும் சொதியுமாக வாழ்ந்தார்கள்’ என்றெல்லாம் கதை எழுத வெளிக்கிட்டுவிடுவீர்கள் போலுள்ளதே?

    இலங்கை இனப்பிரச்சினை ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. மிக வெளிப்படையான சான்று மகாவம்சம். மகாவம்சம் எழுதப்பட்டதற்கும் இலங்கை இனச்சிக்கலுக்கும் தொடர்பில்லையென்று சொல்லுங்கள்; பிறகு வேறுமாதிரிக் கதைக்கலாம்.

  3. இலங்கையில் 50 வருடகால இனமுரண் இருக்கிறது என்பதற்கும், இலங்கையில் போராடும் தமிழினம் 50 வருடங்களுக்கு முன்புதான் இலங்கைக்கு வந்து குடியேறினார்கள் என்பதற்கும் வித்தியாசமேதுமில்லை. அவர்கள் வந்தபோதுதான் இனமுரண் வந்தது, ஆகவே இனமுரணுக்கு 50 வயசுதான் ஆயுசு எண்டு நிறுவலாம்.

    *** “50 வருடகால இனமுரண் இருக்கிறது என்றுதான் சொன்னோம்; 50 வருடகாலம் “தான்” என்று சொல்லவில்லை; அதன்கருத்து, அது 50ஐவிட எவ்வளவு வேண்டுமானாலும் அதிகமாக இருக்கலாம் என்பதுதான்” என்ற விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
    உப்பிடியான பதில் வருமென்பது தெரிந்து முதலே மறுத்தாச்சு.

  4. 2000 வருட கால இனமுரண் என்பது சரியானது தான்.
    //சிங்கள மேலாதிக்க வரலாற்று அல்லது புராண நூலான மகாவம்சம் கூட//

  5. இதற்கு காரணம் அறியாமை அல்ல….. தனிமனிதர்களின் சுயனலம் மற்றும் அரசியல் லாப கணக்கு தான்…. இதை எப்படி மாற்றுவது.. புரியவில்லை… உண்மை அறிந்தோறும் உறக்கம் கொள்வதும்..உறங்குவது போல் நடிப்பதும்… தான் தமிழகத்தின் தலை விதி… முதலில் தமிழன் தன்னை தமிழனாக அறிய வேண்டும்.. மற்றவை தானே நடக்கும்… தமிழா தமிழா தமிழால் இணை …தமிழன் என்பது தலை சிறந்த இனம்.. தன் மானம் உள்ள இனம்.. அதனால்.. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா……

  6. இப்படியான கேல்விகள் எழுவதர்க்கு காரணம் அவர்களது அறியாமையே, பிழையான தகவல்கள் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, அல்லது தரியான தகவலை ஆறிய அவர்களிடம் போதிய ஆர்வமின்மையே காரணம். சிறு ஒரு தொகையினரே இது பற்றிய சரியான புரிதலில் இருக்கிறார்கள். மற்றப்படி தமிழர்கள் என்பதாலேயே மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள். ஈழம் பற்றிய செய்திகள் அங்கே பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இனையத்தொடர்பு உடையவர்கள் மட்டுமே அனைத்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

  7. இது அவர்கள் ஆர்வமின்மை, அத்துடன் அவர்களுக்குப் இதனால் பாதிப்பில்லை…என்பதனால் ஏற்பட்ட அறியாமை.
    அத்துடன் இந்தியாவிலும் இன்னும் இந்திராகாந்தி ,காந்தியின் மகள் என நினைப்பவர்கள் உண்டாமே!!!

  8. வணக்கம் நன்பர்களே,
    ஈழத்தமிழர்கள் குறித்து போரரட்டம் குறித்து இன்னும் நமக்கே சரியாகத் தெரியவில்லை என்கிற கொண்டோடியின் கருத்தில் உண்மை உள்ளது.

    நமது அரசியல் முதிர்ச்சியின்மைகளும் எங்களிப் போன்ற அடுத்த தலமுறையினர்க்கு வெறும் உணர்வூட்டல் மட்டுமே வழங்கப்பட்ட அவலமும் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

    உதாரணமாக தமிழ்மணத்தில் எழுதுகிற பலரிலும் இதைப் பார்க்க முடியும்.

    இப்போது எமக்கு தெரிந்ததும் நாங்கள் பேசுவதும் வெறும் ஆயுதப் போராட்ட வரலாறு மட்டுமே.புலத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல களத்தில் இருபவர்கலுக்கு சிங்களவன் கொலைகாரன் எனபதும் பூநகரிச் சண்டை எப்ப நடந்தது என்பதும்தான் அதிகம் தெரியும்.
    தமிழ்தேசியம் ,சுயநிர்ணயம்,தாயகம் என்பதன்கான விளக்கம் தெரியாமல் கடுரை வரைகிறவர்களும் வாசிகிறவர்களும் முதலில் தெளிவு பட வேண்டும் சமகாலத்தில் தெளிவான எங்கள் அரசியலும் வரலாறும் எமக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
    இன்னும் வியப்பென்னவெனில் ஒரு முதுபெரும் ஊடவியலாளர் ஒருவர் என்னுடன் பேசினார் அப்போது யாழ் நூலகம் பற்றி நான் சொன்னேன்.அது எப்ப எரிக்கப் பட்டது? என்கிற அவரின் கேள்வியை உங்களுக்கு சமர்ப்பணம் செய்து இத்துடன் முடிகிறேன்.இது குறித்து விரிவான பதிலொன்றை விரைவில் எழுதுகிறேன்

  9. ஊடகம் யார் கையிலை இருந்தது இந்த பார்ப்பானிய எண்ண போக்கில் தானே இருந்தது. சிறிது காலம் முன்பு வரை தமிழக வெகுஜன சஞ்சிகைகளில் அக்கிரகாரத்தை மையபடுத்தியே எல்லாம் இருந்தது. சோ என்ற நாதாரி ஒரு படி மேலை போய் கேரளத்தில் இருக்கும் ஈழவர் என்ற இனமும் ஈழத்தவரும் ஒண்டு என கக்கிய விச வரலாறு உண்டு

  10. ஈழப்பிரச்சினையைப்பற்றி ஒரு ஈழத்தமிழனுக்கு விளங்கப்படுத்தவேண்டும் என்னும், செயலைப்போண்ற கேடுகெட்ட விடயம் உலகத்தில் எதுவும் இருக்கமுடியாது என்பது எனது கருத்து, ஒருவன் அதைபற்றி பேசுகிறான் என்றால் குறைந்தது அவனுக்கு இருபது வயது இருக்கவேண்டும். இருபது வருடத்தில் தான் வாழ்ந்த நாட்டின் அரசியலை அறியாத ஒருவன் ஒருகாலமும் அறிந்து கொள்ளப்போவதில்லை. அதைவிட ஒரு இந்திய தமிழருக்கு விளங்கப்படுத்தமுடியும்.
    ஆர்வம் இருந்தால் இணையத்தில் இல்லாத தகவல்களா?

  11. வணக்கம் சயந்தன்,
    //1. வாழச் சென்ற நாம் தனி இடம், அரசாங்கம் கேட்பது நியாயமா?

    2. 50 வருடங்களுக்கு முன் நாம் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறி, இன்று கலிபோர்னியா மாகாணம் மட்டும் நமக்கு தனியாக கொடுத்து, சுய ஆட்சி தரவேண்டும் என்று சொன்னால் அமெரிக்கா ஒப்புக் கொள்ளுமா. நீங்கள் அமெரிக்கராக இருந்தால் உங்கள் நாட்டிற்கு வந்தவர்களுக்காக ஒரு பகுதியை வெட்டி தானம் செய்வீர்களா?

    3. குடியேற சென்ற தமிழர்கள் இலங்கை முழுவதும் பரவி, அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்திருந்தால் இந்த பிரச்சனை நேர்ந்திருக்குமா. தமக்கென்று தனியே ஒரு இடத்தை அமைத்து அதில் வாழ முற்பட்டதாலேயே இந்த தனியிட கோரிக்கைகளும், தமிழர் இருக்கும் இடம் பார்த்து அவர்கள் தாக்க முடிவதும்

    4. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக் செல்பவர்கள் தொழிலுக்காக சென்ற அந்த நாட்டிலிருந்தே ஒரு பகுதியை கேட்பது நியாயமா? //

    ஈழத் தமிழர்கள் தமிழகத்திலிருந்து பிழைக்க சென்றவர்கள் என்கிற எண்ணம் பெரும்பான்மை தமிழக தமிழர்களிடம் இருக்கிறது… அதுவே இம்மாதிரியான கேள்விகள் மிக அதிகமாக வலைபதிவுகளில் பதிவு செய்வதற்க்கு காரணமாகிறது…

    இந்த யாழ்ப்பாண தமிழர்கள் மற்றும் மலையகத்தமிழர்கள் வேற்றுமையை நீங்கள் யாருக்காவது விளங்க வைத்துவிட்டால்… மிகப்பெரிய விருதே உங்களுக்கு கொடுக்கலாம்…

    முதலில் நான் சில கேள்விகளை வைக்கிறேன்….

    தமிழ் மொழி மற்றும் இனம் பற்றிய வரலாற்றை எத்தனை ஈழத்தமிழர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்?
    தமிழக மற்றும் இலங்கையின் வரலாற்றுத் தொடர்புகள் தமிழ் சமுதாயத்திடம் சென்றடைய ஈழத்தமிழர்களின் பங்களிப்பு என்ன?
    இன்னும் கேள்விகள் விரியும்… ஆனால் அதற்கு முன் தமிழகத்தின் சூழ்நிலையை விளக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது…

    தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இன வரலாற்றுக்கு முக்கியத்துவம் கிடையாது… ஓட்டு மொத்த இந்திய வரலாற்றையும் படித்து முடிக்கும் ஓவ்வொருவரும் கடைசியில் “அசோகர் மரம் நட்டார்… கஜினி முகமது 17முறை படையெடுத்தார்” என்கிற வரியை தவிர மற்றவற்றை தேர்வுக்காக மனப்பாடம் செய்து வாந்தி எடுத்துவிட்டு அதோடு மறந்து போகிறார்கள்…

    மிகச்சிலரே தமிழ் இயக்கங்களில் பங்கு கொள்வதால்… தொடர் ஆர்வத்தால் நூல்களை தேடி வாங்கி படிக்கிறார்கள்….
    (ஈழத்தின் வரலாற்றை படிக்க என்ன நூல் கிடைக்கிறது என்பது பெரும் கதை…)

    1989க்கு பிறகு ஈழ பத்திரிக்கைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை… அதற்கு மாற்றாக இதுவரை நாம் தமிழகத்தில் எதுவும் செய்யவும் இல்லை….

    ஊடகங்களை பொருத்தவரை (‘தினமலர்’, ‘இந்து’,’ஆனந்த விகடன்’,’துக்ளக்’, ‘ஜெயா டிவி’ ஆகியவை ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலையை கடைப்பிடிக்கின்றன.) (‘குமுதம்’ சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடுகிறது) (‘சன் குழுமம்’ துரோகத்தை தவிர வேறு எதையும் செய்வதில்லை…)

    இந்திய அரசியல் சக்திகள் எக்காரணம் கொண்டும் தமிழ் இன விழிப்புணர்வு வரக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறார்கள்.

    பின்னூட்டமிட்டுருந்த சிலர் தமிழகத்து தமிழர்களுக்கு ஆர்வம் இல்லை அதனால் தெரிந்துக் கொள்ளவில்லை என்கிற நிலையை சொல்லி இருக்கிறார்கள்…

    அவர்களுக்காக சொல்கிறேன்… புலவர் காசி ஆனந்தனின் “விலையாம் தமிழ் சாதையாம்… என்ன வேதனை விளையாட்டு…” என்கிற பாடல் எழுதப்பட்ட காலக்கட்டத்திலிருந்து… குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை போன்றவர்கள் தியாகத்தில் வியந்து….. மேஜர் அப்துல்லாவின் தலைமையில் 9 போராளிகளின் வீர மரணம் உள்ளடங்கி ஏரளாமான கடந்த கால நிகழ் கால நிகழ்வுகள் என்னை போன்ற ஏராளமான தமிழ் இளைஞர்களுக்கு தமிழகத்தில் தெரியும்…
    இந்த உணர்வுகளை ஒருங்கிணைக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்கிற கேள்வியை கேளுங்கள்….

    விவாதத்திற்க்கும், விதாண்டாவாதத்திற்க்கும் அப்பாற்பட்டு தமிழ் இன மற்றும் மொழி வரலாற்றை எப்படி நடுநிலையோடு பதிவு செய்வது என்பதை சிந்திப்போம்… வரலாற்றை உணர்ந்தால் மட்டுமே… வரலாறு படைக்க இயலும்…

    ஓர் சிறிய உதாரணம்…
    மிகப்பெரிய எகிப்திய இன்த்திடம் அடிமை பட்ட இனமாக வாழ்ந்த யூதர்கள் தான் இன்றைய உலகின் பல நிகழ்வுகளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள்..
    ஆளுமை செலுத்திய எகிப்தியர்களோ… என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை….

    நன்றி

  12. //1. வாழச் சென்ற நாம் தனி இடம், அரசாங்கம் கேட்பது நியாயமா?//

    நியாயமில்லை. இன்று ஈழம் மலர்ந்தால் நாளை தமிழ்நாட்டை துண்டாடிவிட பகுத்தறிவு மஞ்சதுண்டு கூட்டம் ரெடியாக இருக்கும். வட தமிழகம் இளையமகனுக்கும், தென் தமிழகம் மூத்தமகனுக்கும் கொடுத்து புருஷோத்தம நாடகம் நடத்த கருணாநிதி தயாராக இருப்பார். ஈழத்தை ஆதரிப்பதில் கூட லாபம் பார்க்கும் சொக்கதங்கம் கருணாநிதி

    //2. 50 வருடங்களுக்கு முன் நாம் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறி, இன்று கலிபோர்னியா மாகாணம் மட்டும் நமக்கு தனியாக கொடுத்து, சுய ஆட்சி தரவேண்டும் என்று சொன்னால் அமெரிக்கா ஒப்புக் கொள்ளுமா. நீங்கள் அமெரிக்கராக இருந்தால் உங்கள் நாட்டிற்கு வந்தவர்களுக்காக ஒரு பகுதியை வெட்டி தானம் செய்வீர்களா?//

    அதுபோலவே தமிழ்நாட்டில் சென்னைவாசிகள் மட்டும் தனிநாடு கேட்டால் தமிழக அரசு ஒப்புகொள்ளுமா. அதைபோலதான் இதுவும்.

    //3. குடியேற சென்ற தமிழர்கள் இலங்கை முழுவதும் பரவி, அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்திருந்தால் இந்த பிரச்சனை நேர்ந்திருக்குமா. தமக்கென்று தனியே ஒரு இடத்தை அமைத்து அதில் வாழ முற்பட்டதாலேயே இந்த தனியிட கோரிக்கைகளும், தமிழர் இருக்கும் இடம் பார்த்து அவர்கள் தாக்க முடிவதும்//

    நாங்களெல்லாம் தமிழ்நாடு வந்து தமிழனாக மாறிவிடவில்லையா? அதுபோல இலங்கையில் இருக்கும் தமிழர்கள் சிங்களமொழி கற்று சிங்களவராகி இருக்கவேண்டும்.

    //4. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக் செல்பவர்கள் தொழிலுக்காக சென்ற அந்த நாட்டிலிருந்தே ஒரு பகுதியை கேட்பது நியாயமா? //

    நியாயமில்லை. ஆரியர்கள் என்று சொல்வார்கள். உயர்குடியினரான அவர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்து இந்தியாவை ஆன்மீகத்திலும், அறிவாலும் ஆண்டவர்கள். அவர்களுக்கென்று தனிநாடா கேட்டார்கள். இல்லையேல் இன்னேரம் இந்தியாவாக இது இருந்திருக்காது. ஆரியநாடாக இருந்து இருந்திருக்கும்.

  13. //தமிழ்நாட்டு பேராசிரியர் ஒருவர் தன்னுடைய ஒரே மகனை ஈழ விடுதலை இயக்கத்துக்கு அர்பணித்து விட்டு அவரும் ‘பொடா’வில் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்… அவர் யார் என்றாவது… ஈழத்தமிழர்களில் எத்தனை பேருக்கு தெரியும்??? இது யாரையும் குற்றம் சொல்ல பதிவு செய்யவில்லை… தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ் உணர்வால் தியாகம் செய்கின்றனர்… அதை கொச்சை படுத்தும்போது எழுகிற கோபம்…

    உணர்வுகளை ஒருங்கிணைக்க கற்றுக்கொள்ளுங்கள்… விமர்சனம் என்கிற போர்வையில் கொச்சைபடுத்தாதீர்கள்…. //

    பாரி.அரசு!

    உங்கள் ஆதங்கம் நியாயமானதே. உணர்வுகள் மதிக்கப்படாவிட்டாலும் பறவாயில்லை, அவை கொச்சைப்படுத்தப்படும் போதுதான் மிகவும் வேதனையாகவுள்ளது.

    நீங்கள் சொல்லியுள்ள தகவல் போன்ற சிலபல விடயங்களை, அவசியம் கருதி வெளியிடப்படுவதில்லை. அதனால் பலரும் அறிந்து கொள்ள முடிவதில்லை. மற்றும்படி, ஆத்மார்த்தமான தமிழக அர்ப்பணிப்புக்களுக்கு தமிழீழம் என்றும் சிரந்தாழ்த்தியே வந்திருக்கிறது.

    மற்றும்படி நீங்கள் குறிப்பிடுவது போன்று, தமிழீழ மக்கள் குறித்த புரிதல்கள் தமிழகத்தில் குறைவாகவே உள்ளன. அதற்கான மாற்று, அவசியத் தேவையாக உள்ளது.

  14. சயந்தன்,

    மேலே உள்ள உண்மைத் தமிழனின் மறுமொழி போலி என்று நினைக்கிறேன். வேண்டுமென்றே குழப்பமேற்படுத்த வந்த பின்னூட்டம். அதை அனுமதித்திருக்கத் தேவை இல்லை.

    ஜெர்மனியில் தமிழாலயத்தில் தமிழ்ப் பாடம் எடுக்கப் போய் தான் ஈழத் தமிழர்களின் வரலாறு, தொன்மை குறித்த விழிப்புணர்வு எனக்கு வந்தது (பண்டார வன்னியன் !!)

    எது எதற்கோ கூட்டுப் பதிவு போடுகிறோம்..ஈழத்தில் தமிழரின் வரலாறு, இலங்கை இனைப்பிரச்சினை வரலாறு ஆகியவைக் குறித்து அறிவூப்பூர்வமாக ஆதாரங்களுடன் உணர்ச்சி வசப்படாமல் விளக்கம் தர ஒரு பதிவு போடலாம். இணையத்தில் இத்தகவல்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தாலும் ஒரு இடத்தில் தொகுப்பது நல்லது. கேட்டுத் தெளிய உதவும் வலைப்பதிவுகள் அதற்கு நல்ல ஒரு வாய்ப்பு. இணையத்தில் கிடக்கும் இந்தத் தகவல்களை வேறு ஊடகங்களுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற அணுகுமுறையை ஈழத்தவர் தான் யோசிக்க வேண்டும்.

    இலங்கையில் இருந்து சில மைல் தூரத்தில் இருக்கும் தமிழருக்கே ஈழப் பிரச்சினையின் உண்மை நிலை தெரியவில்லை என்றால் பிற இடங்களைக் குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற சயந்தனின் வருத்தம் நியாயமானது. நெதர்லாந்துக்கு வந்த புதிதில் நான் தமிழ்நாட்டுத் தமிழன் என்று அறிந்த உடன் பணியாற்றுபவர் ஒருவர், “oh, u r good tamil?” என்றார். அப்ப ஈழத் தமிழர் கெட்டவர் என்ற எண்ணம் அவருக்கு வந்தது ஏன்? இந்த எண்ணத்தைப் பரப்பியது மேலை நாட்டு ஊடகங்களா? இல்லை, புலம்பெயர் தமிழர்களிடம் அவருக்கு நேரடியாக ஏற்பட்ட கசப்புணர்வா? ஈழத்தில் ஆயுதமேந்திய போராட்டக் களங்களுக்கு இணையாக இந்த international awareness, image building பணியையும் கருதி முனைப்பு காட்ட வேண்டியது அவசியம்.

  15. நன்றி மலைநாடான்,

    புரிதலுடன் பரந்த மனநிலையில் தமிழ் இன மற்றும் மொழி பற்றிய எண்ணங்கள் உருவாக்கபட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்…
    எதிர்ப்புகள், துரோகங்களை எதிர்த்து போராட வேண்டிய ஆற்றலை… விமர்சனம், விவாதம் என்று வீணடிக்க வேண்டுமா!

  16. ரவிசங்கர் சொன்னது போல் ஈழத்தின் வரலாற்றை நடுநிலைமையோடு தொகுக்க முயற்சி மேற்க்கொள்ள வேண்டியது அவசியம். 2003 ல் ஒரு இலண்டனில் வசிக்கும் ஈழ நண்பருடன் சேர்ந்து ஈழத்தின் வரலாற்றை ‘வெப் டிவி” என்கிற வடிவமைப்பில் கொண்டு வர முயற்சித்தேன்.. அப்போது என்னுடைய சூழ்நிலை மற்றும் அவரது குடும்ப எதிர்ப்புகளால் அது தோல்வியில் முடிந்தது… இன்று ஈழத்தமிழர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு செயல் ஈழத்தின் வரலாற்றை ஆவணப்படுத்துதல் மற்றும் உலகளாவிய அளவில் அதை கொண்டு செல்லுதல்… முன்னெடுத்து செல்லுங்கள் …

  17. ரவிசங்கர் எது போலி எது உண்மை அதில் போலி என்ன எழுதுவார் உண்மை எப்படி எழுதுவார் என எனக்கெதுவும் தெரியாது. பின்னூட்டத்தில் வஞ்சப் புகழ்ச்சி இடக்கரடக்கல் போல ஏதோ தெரிகிறது. எதுவோ யாரோ ஒருவருடைய கருத்து அது.

  18. //சோ என்ற நாதாரி ஒரு படி மேலை போய் கேரளத்தில் இருக்கும் ஈழவர் என்ற இனமும் ஈழத்தவரும் ஒண்டு என கக்கிய விச வரலாறு உண்டு//

    சின்னக்குட்டியர் இது சோ மட்டுமில்லை
    ஈழ ஆதரவாளராக தூக்கி கொண்டாடப்படும் சுவீடன் பேராசிரியர் பீட்டர் சால்க் கூட இதை வலியுறுத்தி கட்டுரை ஒன்று எழுதியள்ளார்.

  19. சரியான பதிவு. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளில் ஒன்று அல்லது பழிவாங்குதல் எனலாம். அவர்களை இலங்கையில் எதிர்த்தது தமிழ் மக்களே. அந்த ஒரு காரணத்துக்காக தமிழனை ஒரு பெரும்பான்மை பேரினவாதத்திடம் ஒப்படைத்தான். அதற்கு முன்னர் அங்கு தமிழ் மன்னர்களே வட, கிழக்கை ஆட்சி செய்து வந்தனர்.

  20. //சின்னக்குட்டியர் இது சோ மட்டுமில்லை
    ஈழ ஆதரவாளராக தூக்கி கொண்டாடப்படும் சுவீடன் பேராசிரியர் பீட்டர் சால்க் கூட இதை வலியுறுத்தி கட்டுரை ஒன்று எழுதியள்ளார்//

    இந்த பேராசிரியர் எப்படி கருத்து கூறினாரென்று தெரியாமால் கருத்து கூற விரும்பவில்லை சில வேளை சேர நாட்டோடு இணைத்து கூறியிருக்கலாம் ஆனால் கேரளத்தில் இருக்கும் ஈழவர் எனற தொழில் முறை பிரிப்பில் இருக்கும் இனத்துடன் இணைத்து கேலி செய்வதே சோவின் முக்கிய நோக்கம்

  21. அமெரிக்கா என்பதே அந்நியனின் தேசத்தை அடித்துப் பிடித்த நாடு தானே?

    பால பழங்குடிமக்களை கொன்றும் அடிமையாக்கியிம் தானே பிரித்தானிய போர்வீரர்கள் அமெரிக்காவை ஆண்டார்கள். அமெரிக்கர்கள் பூர்வீகக் குடியினர் இல்லையே. இதே தான், கனடா, ஆஸ்திரேலியா, நியூ சிலாந்த் போன்றவை. வரலாறு தெரியாமல் சிலர் புத்திஜீவிகள் போல் கேள்வி கேட்க வந்துவிடுவார்கள்.

    வெள்ளையனை நாங்கள் திரத்தியதால் இந்தியா, இலங்கை என்று எம் மொழி பேசி சண்டைபிடிக்கிறோம். திரத்த முடியாமல் தோற்றுப்போன பிரதேசங்கள் தான் மேற்குறிப்பிடப்பட்ட தேசங்கள். பழங்குடி மக்கள் இன்னும் இந் நாடுகளில் ஏதோ மூன்றாம் பிரஜைகள் போல் தான் பாவிக்கப்படுகிறார்கள்.

    _______
    CAPitalZ
    ஒரு பார்வை

  22. தமிழர் வரலாறு தொகுப்பு ஏதாச்சும் குழுப்பதிவா ஆரம்பிச்சாச்சா..? இல்லையா..?

Comments are closed.