
கல்லூரிகளில் என் வகுப்புகள்.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தளத்தில் இன்று தங்களது கல்லூரிகளில் என் வகுப்புகள் பதிவைப் பார்த்தேன். நான் ஒரு வருடத்திற்கு முன்னரே , நீங்கள் கல்லூரியில் வகுப்புகள் எடுக்கவேண்டும் என்ற என் நிலைப்பாட்டைச் சொல்லியிருந்தேன் என்பதை அன்புடன் கூறிக்கொள்கிறேன்.
நாம் ஜார்ஜ் மேஷன் வகுப்பு முடிந்து நாம் திரும்பி விடுதிக்கு வரும்பொழுது, ஒரு மாணவனின் சிந்தனையைத் தூண்டினாலும், அந்த வகுப்பு வெற்றியே என்று சொன்னபொழுது, சைதன்யா, ஏன் அதை ஒரு மாணவிக்கு என்று சொல்லக்கூடாது என்று சொன்னாரல்லவா. ஒரு மாணவரையேனும் ஊக்குவித்ததாக இருக்கட்டும் என்று தமிழில் இருபாலரையும் குறிப்பிட ஒரு வார்த்தை உண்டு என்று சொல்லிச் சிரித்தோமல்லவா?
அந்த ஒரு மாணவருக்காகவேனும் நீங்கள் கல்லூரிகளில் வகுப்புகள் எடுக்கவேண்டும் என்பதே எனது தரப்பு வாதமாக சென்ற கடிதத்தில் வைத்துள்ளேன்.
ஆஸ்டின் சௌந்தர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தங்களின் வாசகனாக இந்த விஷயத்தில் எனக்கு மாற்றுச்சிந்தனை உண்டு. நாஞ்சில் நாடனின் கட்டுரை ஒன்றில் சிற்பி அவர்கள் பணிபுரிந்த கல்லூரியில், நாவல் சம்பந்தமாக பாடங்கள் நடத்தியுள்ளதாக எழுதியுள்ளார். ஆனால் அவர் சென்று நடத்திய காலத்துக்கும் இன்றைய சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் அனுபவத்தில் கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றுவது வீண் என்று முடிவு எடுத்திருப்பீர்கள் என்ற புரிதலும் எனக்கு உண்டு. ஆனால், எனக்குள் ஓரமாக உங்களை கல்லூரிகளில் சென்று பேசவைக்கவேண்டும் என்ற ஆசை உண்டு. உங்களிடம் அழுத்திச் சொல்லமுடியாத பட்சத்தில் எனது உறவினர் பெண்ணை (ராதாவின் அக்காள் மகள்) , மகள் எனும் உரிமையுடன் ஒரு கல்லூரிக்குப் போய் பேசு என்று அவரை வற்புறுத்தி போக வைத்தேன். சுபாங்கி அறம் நூலை வாசித்துவிட்டு தங்களுக்குக் கடிதம் கூட எழுதியுள்ளார். நன்றாக வாசிப்பார், விவாதிப்பார். MBA முடித்து வேலை பார்த்துக்கொண்டுள்ளார். அவர் BBA படித்த கல்லூரியிலிருந்து (கோவையில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பெண்கள் கல்லூரிதான்), அவரை முன்னால் மாணவி வெற்றி பெற்ற மாணவராக பேச அழைத்திருந்தார்கள். எனது வாராந்திர விசாரிப்பின்பொழுது எனக்கு அதை தெரிவித்துவிட்டுப் போகப்போவதில்லை என்றார். நன்றாக பேசும் நீயே , போகவில்லையென்றால், யார் போவது என்று கேட்டதற்கு, கிட்டத்தட்ட நீங்கள் இந்தப் பதிவில் உள்ள பதிலையே சொன்னார்.” நான் மாணவியாக அமர்ந்திருக்கிறேன். விருந்தினர் பேசும்பொழுது என்னவெல்லாம் கிண்டல் செய்வார்கள், கவனமில்லாமல் இருப்பார்கள் என்பதை பார்த்திருக்கிறேன். எனக்கும் அந்த வரவேற்புதான் கிடைக்கும்” என்று சொன்னார். “கவனிக்கும் ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்காக அவர் சென்று உரையாற்றவேண்டும்.” என்றேன். அதுவும் அவருக்கு கொடுத்திருந்த தலைப்பு AI சம்பந்தமானது. ஏற்கனவே AI வந்தால் அவர்களுக்கு வேண்டியதை சமைத்து எடுத்து வந்து மேசையில் பரிமாறும் அளவிற்கு அதீதமான புரிதலுடன் பேசுகிறார்கள். இவர் சென்று பேசினால், AI-ந் சாத்தியங்கள் மற்றும் இயலாமைகள் பற்றி கொஞ்சம் தெளிவுடன் புகட்டமுடியும் , சில மாணவர்களேனும் பயன்பெறுவர் என்று போராடி அவரை செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.
அவர் ஒரு வாரமாக தன்னை தயார் செய்து கொண்டு முக்கால் மணி நேரம் உரையாற்றுமளவுக்கு விபரங்களுடன் சென்றார். அவர் எடுத்துக்கொண்ட பேசுபொருள் தாண்டி, இந்த வேலைக்கு எப்படி போனீங்க, நேர்முகத்தில் என்ன கேள்விகள் கேட்டார்கள், எப்படித் தயாரித்துக்கொண்டீர்கள் என்பன போன்ற லௌகீக கேள்விகளைக் கேட்டு இரண்டு மணி நேரம் வாட்டி வதக்கியுள்ளார்கள். AI பற்றி ஒருவர் கூடவா கேள்வி கேட்கவில்லை என்று ஆதங்கமாக கேட்டேன். இரு மாணவர்கள் நல்ல கேள்விகள் கேட்டார்கள் என்றார். உன்னை அழைத்துப் பேசவைத்த விரிவுரையாளர் அல்லது துறைத் தலைவர் இடையில் புகுந்து மட்டுறுத்தவில்லையா என்று கேட்டேன். “அவர் , உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா ?’ என்று கேட்காமல் இருந்ததே போதும் என சிரித்தார். அவர் மட்டுறுத்தவில்லை என்று சொன்னார். பொதுவாக கட்டுப்பாடு எங்கு கற்பிக்கப்படவேண்டுமோ அங்கேயே இல்லை.
எனது சோதனை முயற்சி தோல்வியடைந்தாலும், இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்லியே விடுகிறேன். Texas மாநிலத்தில், எனக்குத் தெரிந்த எழுத்தாளர் Britta Jensen இருக்கிறார். அவர் தனது தளத்தில் , ஒரு பள்ளியில் பேசுவதற்கு அழைப்பதாக இருந்தால், மணிக்கு இவ்வளவு, அரை நாள், முழு நாள் என தனக்கான கட்டணத்தை தனது தளத்தில் அறிவித்துள்ளார். தங்களை அழைப்பவர்களுக்கும், தான் கலந்துகொண்டால் மாணவர்கள் எப்படி கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும், மணிக்கு இவ்வளவு கட்டணம் என்று வரையறைகள் செய்துகொள்ளலாம். வேண்டுமெனில் உங்களுடன் ஒருங்கமைப்பாளரும் உடன் வருவார் என்று ஒரு நிபந்தனையையும் சேர்த்துக்கொள்ளலாம். ஜாஜா, சுசித்ரா போன்றவர்களை அவர்கள் மேல் உள்ள மதிப்பின் பேரில் நானே பரிந்துரை செய்கிறேன். நான் இவ்வளவும் ஏன் சொல்கிறேன். கவனிக்கும் அந்த ஒன்று இரண்டு மாணவர்களுக்கு தங்களின் ஞானம் சென்று சேரவேண்டும். Unified Wisdom இருக்கிறது. கற்றுக்கொள்ள எண்ணமுள்ளவர்கள் அங்கு வரலாம் என்பதை அறிந்துதான் சொல்கிறேன். ஏனெனில் இந்த கல்லூரிகளில் எங்கோ ஒரு இளைஞர், பரிதாபமாக திக்குத் தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பார். அவரை உங்கள் பேச்சு தட்டியெழுப்பும். கல்லூரி விழாக்களில் பேசுவதை சொல்லவில்லை. தனிப்பட்ட உரைகள் நிகழ்த்த ஒத்துக்கொள்ளலாம். ஒரு கல்லூரியிலாவது விஷப்பரிச்சை செய்து பார்த்தாக வேண்டும்.
அங்கு நடைமுறை தெரியாது. ஆனால், இங்கு இந்தமுறை அமெரிக்கப் பயணத்திலும் ஒரு கல்லூரியில் பேசவேண்டியது இருக்கலாம் என்று ஒரு கொடி காட்டிவிடுகிறேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்

கருத்துகள்