Uncategorized
October 31, 2026 · ◷ 2 நிமிட வாசிப்பு

தலித்தியம் வெளியிலிருந்து வந்த ஒன்றா?

அம்பேத்கரியம் தமிழகத்தில் அருண்பிரகாஷ் கட்டுரை

https://www.southboundreview.com/

திரு ஜெமோ,

தலித் எழுத்துகளை அப்படி அடையாளப்படுத்துவது பற்றிய உங்களுடைய கட்டுரையைப் பார்த்தேன்.தலித் எழுத்து- எதிர்ப்பும் விலக்கமும்

எழுத்தாளர்களில் ஒரு சாரார் தங்களைத் தலித் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளவும், தாங்கள் எழுதுவது தலித் எழுத்து என்று அடையாளப்படுத்திக்கொள்ளவும் தொடங்கியது எண்பதுகளுக்குப் பிறகுதான். எழுபதுகளில் கர்நாடகத்திலும், அதற்குச் சற்று முன்பு மகாராஷ்டிரத்திலும் அவர்கள் அவ்வாறு சொல்லிக்கொள்ளத் தொடங்கினார்கள். அதைப் பார்த்து, தமிழ்நாட்டிலும் தலித் எழுத்து உருவாக வேண்டும் என்று எண்பதுகளில் இங்கு சில எழுத்தாளர்கள் சொல்ல, அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் அந்த அடையாளத்தை எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். அப்படிச் சொன்னவர்கள் அ.மார்க்ஸ், தமிழவன் போன்ற தலித் அல்லாத எழுத்தாளர்கள்.

இவ்வாறு தலித் என அடையாளப்படுத்திக்கொள்வது தங்களுடைய எழுத்துக்கு ஒரு தனித்தன்மையை அளிக்கிறது என்று சில எழுத்தாளர்கள் நினைத்தார்கள். அது உண்மைதான் என்பது நிறுவப்பட்டிருக்கிறது. ஏனென்றால், எவ்வளவோ முக்கியமான எழுத்தாளர்கள் இருக்க தங்களைத் தலித் எழுத்தாளர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர்கள்தான் இந்திய அளவில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியுலகைச் சென்றடைந்தார்கள். சிலர் தங்களைப் பொய்யாகவே தலித் எழுத்தாளர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டதும் உண்டு. தாங்கள் உணர்வால் தலித்துகள் என்று சிலர் சொல்லி, அந்த அடையாளத்தைத் தேடிக்கொள்ள முயன்றதும் உண்டு.

இவ்வாறு ஒரு அடையாளம் அவர்களுக்கு ஒரு சிறப்பையும் புகழையும் அளிக்கிறது என்பதற்காகத்தான் அதை எடுத்துக்கொண்டார்கள். மிகக் கடுமையான ஒடுக்குமுறை இருந்த காலகட்டத்தில்கூட இங்கு அவர்கள் தங்கள் தனி அடையாளத்தை முன்வைத்துத் தலித் அரசியல் பேசியதில்லை. மாறாக, காங்கிரஸின் ஒரு பகுதியாகவோ அல்லது திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாகவோ, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு பகுதியாகவோதான் செயல்பட்டார்கள். அந்தப் போராட்டங்கள் வழியாகவே அவர்கள் தங்களுக்குரிய உரிமைகளையும் அடைந்தார்கள்.

தாங்கள் தனித்தவர்கள், தங்களுக்குத் தனி அடையாளம் வேண்டும் என்று அப்போது அவர்கள் கோரியதுண்டா? இல்லை. ஏனென்றால் அப்போது போராட்டம் இருந்தது. அதற்கு அனைவரும் உதவ வேண்டியிருந்தது. இப்போது அந்த போராட்டத்தின் அடுத்தகட்டம். தனிப்பட்ட லாபங்கள் தேவையாகிறது. தலித் என்பது வெளியிலிருந்து வந்த கருத்துதான். அந்த வெளியிலிருந்து வந்த கருத்து எப்படி வந்தது, ஏன் வந்தது என்பதை ஆராயாமல், அவர்கள் தங்களுக்கு ஒரு அடையாளத்தை வைத்திருக்கிறார்கள் என்பதனாலேயே அதை உடனடியாக ஏற்றுக்கொள்வதுதான் முற்போக்கு என்று கருதுவது சரியா? இல்லையென்றால், நம்மை பிற்போக்குவாதி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று எண்ணுவதுதான் இன்றுள்ள மரபாக இருக்கிறது. உங்களைப்போன்றவர்கள்கூட அப்படிப்பட்ட வழக்கங்களை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் கேட்க விரும்புகிறேன்.

எம்.கே.ஆர்.ராமரத்னம்

அன்புள்ள ராமரத்னம்,

உங்கள் மனப்பதிவுகள் இவையெல்லாம். வரலாற்று உண்மை அல்ல. தமிழகத்தில் தலித் இயக்கம் திராவிட இயக்கம் உருவாவதற்கு முன்னரே இருந்துள்ளது. அம்பேத்கரின் செல்வாக்கு தமிழக அரசியல் வரலாற்றில் நூறாண்டு வரலாறு கொண்டது. அதற்காகவே ஒரு கட்டுரையைச் சுட்டிகொடுத்துள்ளேன்.

ஜெ

கருத்துகள்

உங்கள் கருத்தை எழுதுங்கள்