1978-ஆம் ஆண்டு. அப்போதுதான் நான் பதினொன்றாம் வகுப்பு அரையாண்டு முடித்து விடுமுறையில் இருந்தேன். சினிமா பார்ப்பதற்கான அனுமதி கிடைத்திருந்தது. நானும் என் நண்பன் ராதாகிருஷ்ணனும், என் அண்ணனும், நண்பன் கோபாலகிருஷ்ணனும் ஆளுக்கு ஐம்பது பைசா தேற்றிக்கொண்டு சினிமா பார்க்கக் கிளம்பினோம். திருவரம்பில் இருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து குலசேகரம் செல்லவேண்டும்.
செல்லும் வழியில், மேட்னி ஷோ பார்த்துவிட்டு எதிரே வந்த விஸ்வநாதனைச் சந்தித்தோம். விஸ்வநாதனின் மகன் ஜெயராம் இப்போது விஷ்ணுபுரம் நண்பர்கள் வட்டத்தில் இருக்கிறார். என் கையைப் பிடித்துக்கொண்ட விஸ்வநாதன், ஆவேசமாக, “ டேய், நீ சென்ட்ரல் தியேட்டருக்குப் போ. அங்கே சூப்பரான படம் ஓடுது” என்று சொன்னான். அவன் சொன்ன படம் நெஞ்சம் மறப்பதில்லை. “டேய், அதிலே நம்பியாரு வாறாரு பாரு…அய்யோ!”
நாங்கள் வழக்கமாக தமிழ்ப்படம் போடும் சென்ட்ரல் தியேட்டருக்குச் செல்ல வலப்பக்கமும், மலையாளப்படம் போடும் பத்மநாபா தியேட்டருக்குச் செல்ல இடப்பக்கமும் திரும்ப வேண்டிய சந்தில் வந்து நின்றோம். எந்தப் பக்கம் செல்வது என்று ஆளுக்காள் விவாதித்தோம். நானும் என் அண்ணனும் நெஞ்சம் மறப்பதில்லை பார்க்கலாம் என்று நினைத்தோம். கோபாலகிருஷ்ணனும் ராதாகிருஷ்ணனும் மலையாளப் படம் பார்க்க விரும்பினார்கள். விவாதத்தின் முடிவில் அண்ணன் அந்தப் பக்கம் சாயவே, நாங்கள் பத்மநாபா திரையரங்குக்குச் சென்றோம்.
குளத்தின் கரையில் அமைந்திருந்த பத்மநாபா தியேட்டருக்குள் நுழைந்து பெஞ்சில் அமர்ந்தோம். முப்பது பைசா டிக்கெட். பத்து பைசா பொரிகடலை. பத்து பைசாவுக்கு இடைவேளையிலும் பொரிகடலை சாப்பிடுவோம். அப்போது சிறுசிறு வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்துகொண்டிருந்த சோமன் கதாநாயகனாக நடித்த படம் அது. கே. ஜி. ராஜசேகரன் இயக்கிய வெல்லுவிளி.
கருப்பு வெள்ளைப் படம். ஒரு சிறிய மலைக்கிராமத்திற்குப் பழியுணர்ச்சியுடன் வரும் கதாநாயகன், அங்கே காதல் கொள்வதும், வில்லன்களால் எதிர்கொள்ளப்படுவதும்தான் கதை. ஆனால், பரபரப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தது.
மலையாள நடிகர்களில் பெரும்பாலானவர்களைப்போல சோமன் நடனமாடவில்லை. சண்டைக்காட்சிகளும் ஓரளவுக்கு நம்பும்படியாக இருந்தன. அதற்குக் காரணம், சோமன் தன் சீற்றத்தை உள்ளடக்கி, கண்களில் வேகம் நிறைத்து, மிகையற்ற நடிப்பை வெளிப்படுத்திய பாணிதான்.
சோமன் மலையாளத்தில் எழுபதுகளின் இறுதி முதல் தொண்ணூறுகளின் தொடக்கம் வரை முக்கியமான நடிகர். ஆனால், அது எப்படி நிகழ்ந்தது என்பது ஆச்சரியமான விஷயம். ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றம் அவருக்கு இல்லை. உடல்வாகும் இல்லை. குரல் கம்மலானது. இழுத்து இழுத்துப் பேசும் தன்மையும் உண்டு. ஆனாலும், மலையாளத்தின் ஆண்மைமிக்க நடிகர்களில் ஒருவராக அவர் விளங்கினார்.நிறைய எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தே கதாநாயகனாக மாறினார்.
அதற்குக் காரணம், அவரது நடிப்பில் வெளிப்பட்ட மிடுக்கு. நடிக்காமலேயே நடிப்பதுபோலப் படம் முழுக்கத் தோன்றுவார். முக்கியமான தருணங்களில் ஆக்ரோஷமாகச் சீறி வெளிப்படுவார். இன்றும் அவர் எப்படி அந்த நிமிர்வை, திமிரை, தோரணையை நடிப்பில் கொண்டுவருகிறார் என்பதை நான் கவனித்து வியப்பதுண்டு.
வெல்லுவிளி படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உற்சாகத்துக்காக இரவில் பார்த்தேன். நினைவுகளில் மூழ்கினேன். அப்படத்தின் இன்றும் நீடிக்கும் இனிமை என்பது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள்தான்.பிச்சு திருமலா எழுதியவை.
ஆற்றுநீரின் மெல்லிய அலைப்படலத்தின் மேல் மணல் வாரி வீசிப் புல்லரிக்கச் செய்த அந்த வசந்தகாலத்தைச் சேர்ந்தவை இந்தப்பாடல்கள்.



கருத்துகள்