
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
நாவல் கோட்பாடு புத்தகத்தில் வாசிக்க வேண்டிய நாவல்கள் பட்டியலில் நீலகண்ட பறவையைத் தேடி இருப்பதால் அதை வாசித்தேன்.
சோனா பிறப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். கோழியைத் தேடிப்போன ஜோட்டன் மகிழ மரத்தை கண்டுபிடிக்கிறாள். அதை பாத்திமாவிடம் பகிர்ந்து கொள்கிறாள். அவளும் சோனாவும் அந்த மரத்தைத் தேடி காட்டுக்குள் வெகு தூரம் வந்து தொலைந்தும் விடுகிறார்கள். பெரியபாபு அவர்களை பத்திரமாக மீட்கிறார். செல்லும்போது பாத்திமாவுக்கும் சோனாவுக்கும் ‘ரயில் பெரிசா? மோட்டார் பெருசா‘ என்ற வாக்குவாதம் தொடங்குகிறது. பாத்திமா ‘மோட்டார் தான் பெருசு‘ என்று நிறுவி விட்டு ஓடி செல்கிறாள். சோனா இருந்த இடத்தை விட்டு அசையாமல் நிற்கிறார். அவள் கூப்பிட்டும் நகரவே இல்லை. சோனாவை தனியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வராமல், மறுபடியும் அவனிடம் வந்து. ‘சரி மோட்டார் தான் பெருசு‘ என்ற சமாதானத்திற்கு வருகிறாள். அதன் பின், சோனா அவளுடன் சேர்ந்து ஓடுகிறார். குழந்தைகளுக்கிடையே நடக்கும் உரையாடல்கள், கொஞ்சமும் மிகைப்படுத்தப்படாமல் ரசிக்கும்படி உள்ளது. கள்ளமில்லா அவர்கள் உள்ளத்தில், ஆசாரம் என்ற பெயரில் தீண்டாமை வருகிறது. பாத்திமாவின் உடையை தொட்டதற்கு சோனா அடி வாங்குகிறான். இப்போதும் அது தொடர்வது தான் வேதனையாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் ‘அவர்களுக்கு‘ கொடுக்கவென்று எல்லோர் வீட்டிலும் காகித கோப்பை இருக்கிறது.
‘நல்ல கதை என்பது எலியின் உயிர் வாதையையும் பூனையின் பசியையும் ஒரே சமயம் சொல்வது’– என்று நீங்கள் கூறுவதை விளக்கும் காட்சி ஒன்று உள்ளது. ஜாலாலி பசி கொடுமையால் மாலதியின் ஆண் வாத்தை பிடித்து நீருக்குள்ளேயே அதன் கழுத்தை நெரித்து கொன்றுவிடுகிறார். அப்போது அவர் முகம் கொடூரமாக உள்ளது. ஆண் வாத்தை தன் துணையாக நினைத்திருக்கும் மாலதி, அதைக் காணாமல் தவிக்கிறார். அவளின் மனதை புரிந்து கொண்ட சாம், நடந்ததை ஊகித்து ஜாலாலியை திட்டுவதற்காக செல்கிறார். வயிறு நிரம்பியிருப்பதால் அவரின் முகம் தேவதை போல் இருக்கிறது. ஒன்றும் செய்யத் தோன்றாமல் சாம் திரும்பி வந்து விடுகிறார்.
அவள் கொன்ற அந்த ஆண் வார்த்தை போலவே ஜாலாலியும் நீரில் மூழ்கியிறப்பது ஒரு Poetic Justice தருணம். அந்த ஆக்ரோஷமான சிவப்பு கண்களையுடைய காஜர் மீன் பசியின் உருவகமாக தோன்றியது. அவளை அந்த அளவுக்கு உயிரை பணயம் வைக்க தூண்டுவது பசி. அல்லிக் கிழங்குக்காக ஆழமான இடத்திற்கு செல்கிறார். மற்றவர்கள் அங்கு வந்திருக்க மாட்டார்கள் என்பதால் அதிக ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்கிறார். கிழங்கை எடுத்து மேலே வருவது வரை சந்தோஷப்பட்டு, இலையை நீக்கிய பின், அதன் அளவைப் பார்த்தும், ருசியான வெள்ளை வகை அல்ல, கசக்கும் மஞ்சள் வகை என்று அறிந்ததும் ஏமாற்றம் அடைகிறார். அவரின் கூடையில் முத்து சிற்பி ஒன்றும் உள்ளது. எந்த அளவு ஆழத்திற்கு சென்றிருக்கிறார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. மிதக்கும் கூடையை பார்த்து, ஒருவரை ஏரி பலி வாங்கி விட்டது என்று மக்கள் அறிகின்றனர். முழு நிலவு நாளில் நடக்கும் அவளின் இறுதிச் சடங்கிற்கு, ஹாஜி புதுப் புடவை தருகிறார். அவரின் மனைவியர் ஜாலாலியை அலங்கரிக்கின்றனர்.
அவளுடைய உடலுக்கு அத்தர், சந்தனம் பூசி விட்டார்கள். ‘ஜாலாலி கொய்னாப் படகில் வேலை செய்யும் ஒரு சாதாரணப் படகோட்டியின் மனைவி. அவள் தன் வாழ்நாள் பூராவும் சோற்றுக்கு ஏங்கி ஏங்கிக் கழித்தாள்‘ என்று இப்போது யாரால் சொல்ல முடியும்?
நீண்ட நாட்களுக்கு பிறகு, மகேந்திரநாத் பேரன்கள் மூவருடன் வெளியே செல்கிறார். வாசத்தை வைத்தும், தன் நினைவில் இருந்தும் எந்த மரத்தடியில் இருக்கிறோம் என்பதை கூறிக் கொண்டே வருகிறார். குழந்தைகளுக்கு அது ஒரு உற்சாகமான விளையாட்டாக உள்ளது. அவர் சரியாக கூறுவதைக் கண்டு அதிசயித்து, ‘உங்களுக்கு கண் தெரிகிறது. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்‘ என்று கூறுகின்றனர். அவருக்கு மிகவும் பிடித்த மருதமர நிழலில் அமர்ந்து கொள்கிறார். தன் இறுதிச் சடங்கை இதனடியில் நடத்த தன் மகன்களிடம் கூறியுள்ளார். அது எப்படி நடக்கும் என்பதை கற்பனையில் பார்க்கிறார். தன் பிடிவாதத்தால் மகன் மணீந்திரநாத் பைத்தியமாக அலைவதும், மருமகள் அதனால் படும் துயரும், அவருக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சில முஸ்லிம் ஆட்கள் செய்யும் தவறுகளுக்காக, அனைவரும் துன்பம் அனுபவிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சனை பூதாகரமாக உருமாறி திருவிழாவை கலவர பூமியாக மாற்றுகிறது. அந்த பகுதி சோனாவின் கண்ணோட்டத்தில் இருக்கிறது. சற்று நேரத்திற்கு முன் மிகுந்த ஆனந்தத்துடன் இருந்த மக்களுக்கு திடீரேன என்ன ஆயிற்று என்று அவனுக்கு புரியவில்லை. ஈசம் திருவிழா கலவரத்தில் சோனா இறந்து விட்டான் என்று எண்ணி மன உளைச்சலுடன் அலைகிறான். மூன்று நாள் கழித்து அவர்களை பார்த்தபின் அமைதியாகிறான். அதேபோல் மாலதிக்கு தீங்கிழைப்பதும் அவர்களே. அவளை காப்பாற்றி கொண்டு வந்து சேர்ப்பதும் அவர்களே. தன்னைப்போல் கணவனை இழந்தவள் என்ற பரிவு மாலதி மேல் முதலிலிருந்து ஜோட்டனுக்கு இருக்கிறது. பொறுமையுடன் முகம் சுளிக்காமல் அவளுக்கு பணிவிடை செய்து, ஆறுதல் சொல்லி, அவளை அவளின் வீட்டிற்கு கொண்டு வந்து விடுவது வரை பத்திரமாக பார்த்துக் கொள்கிறாள். ஜோட்டனும் நான்காவது கணவரான பக்கிரி சாய்புவும் நல்ல தம்பதியாக உள்ளனர். அவரின் நல்ல உள்ளத்தை அவள் புரிந்து கொள்கிறார். எப்போதும் எல்லோரிடமும் பேசி, அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் ஜோட்டனுக்கு, யாருமே இல்லாத சுடுகாட்டு அருகில் இருக்கும் தனிமையான இடம் முதலில் மிகவும் கஷ்டமாக இருந்தது. துர்கா பூஜைக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மிகவும் திறமையாக மாலதியை காப்பாற்ற பக்கிரி சாயுபு போடும் நாடகத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்.
மாலதி என்ன தவறு செய்தார்? திருமணமான ஒரு வருடத்தில் கலவரத்தில் கணவனை இழக்கிறார். அண்ணன் வீட்டில் வசிக்கிறார். தான் மிகவும் ப்ரியம் வைத்த ஆண் வாத்தை பறிகொடுக்கிறார். மனித மிருகங்களால் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கப்படுகிறார். தற்கொலை செய்ய முயன்றால் அதுவும் கைகூடவில்லை. காப்பாற்றப்பட்டு விடுகிறார். இறுதியாக அவர் ஆசைப்பட்டபடி, ரஞ்சித்துடன் கிளம்புகிறார். அதுவும் முழுவதும் நிறைவேறாமல் மற்றுமொரு பிரச்சனை வருகிறது. மாலதியின் நிலை கண்டு, ‘ஏன் இப்படி? ஏன் இப்படி?’ என்ற கேள்வியுடன் தவித்தேன். சாங்கிய வகுப்பில் ‘ப்ரகிருதிக்கு நோக்கம் இல்லை; அருள் (Grace/Benevolence) இல்லை; நெறி மட்டுமே உண்டு‘ என்று நீங்கள் கூறியது ஞாபகம் வந்தது. இயற்கை அவ்வாறு தான் இருக்கும். நம்மால் புரிந்து கொள்ள முடியாத பெரு நியதி அது.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.

பின்குறிப்பு: கற்பூர வாசனை தெரியாத எதுவோ போல் இருந்து விட்டேன் ஜெ. மொழிபெயர்த்த கிருஷ்ணமூர்த்தி அய்யாவை நான் சந்தித்திருக்கிறேன். அவரின் இலக்கிய பங்களிப்பு பற்றி அப்போது எதுவும் தெரியாது. அவர் மகள் உஷா மாமியின் தாம்பரம் வீட்டு மாடியில் ஒன்றரை ஆண்டுகள் வசித்தேன். வருடம் ஒரு முறை, ஒரு மாதம் மகள் வீட்டில் இருப்பார் அவர். உடல் நலமில்லாமல் அவர் இருந்த போது நலம் விசாரிக்க சென்றேன். ‘நேற்று இந்த உபாதை. இன்று இது. நாளை எதுவோ?’ என்று வேடிக்கையாக பேசினார். தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் அவர் சென்ற இன்ப சுற்றுலா குறித்து என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பர். சிறிதும் புலம்பாமல் குதூகலமான குழந்தை போல பேசிய அவரின் முகம் மனதில் நிற்கிறது.

கருத்துகள்