
வணக்கம்,
உங்கள் தளத்தில் நீங்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்களான ஸ்டாலின் ராஜாங்கம், இமையம், ராஜ கௌதமன், பேராசிரியர் தருமராஜ் போன்றவர்களைத் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். இவர்களைத் தலித்திய அறிவுஜீவிகளாக நீங்கள் முன்வைக்கிறீர்கள். ஆனால், அவர்களை அறிவுஜீவிகள் / அறிவியக்கச் செயல்பாட்டாளர்கள் என எந்த முன்னொட்டும் இல்லாமல், அவர்கள் கூறும் தர்க்கங்களை முன்வைக்க முடியாதா?
தலித்திய அறிவியக்கம் குறித்த சில வினாக்களை, நான் தெளிவடையும் பொருட்டு உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கிறேன். எப்போதும் உங்கள் பதில் எனக்கு ஒரு புதிய வாசலைத் திறந்தளிப்பதால் மட்டுமே இந்தக் கேள்விகள். எனது புரிதலில் பிழையிருப்பின் பொறுத்தருள்க.
சாகித்ய விருது பெற்ற இமையம் அவர்களுக்கான உண்டாட்டு நிகழ்வின்போது, இமையம் அவர்களின் உரையை ரசித்தேன். எழுத்தாளர்களுக்கான தன்னுணர்வினை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தினார். தன்னை ஒருபோதும் தலித் எழுத்தாளன் என அழைக்கலாகாது என்றார். அறச்சீற்றம் அது. அவரின் உணர்வு நியாயமாகவே இருந்தது. தலித் அல்லாத மற்றொரு எழுத்தாளரை நாம் எந்த முன்னொட்டோடும் அழைப்பதில்லை.
ஆனால், “தலித் எழுத்தாளர்” என்று அழைக்காமல் அவரை வேறு எப்படி அழைப்பது, மக்களின் முன் வைப்பது? வேறு வழியின்றி, பலமும் கவனமும் பெற முனையும் ஒருவர் தன்னை “தலித்” என்று கூறிக்கொள்வதன் மூலம் அடையும் சிறு வலிமையைத் தகர்ப்பதாகாதா? ஒருவர் தன்னைத்தானே “தலித்” என்பதற்கும், மற்றொருவர் அவரை “தலித்” என்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்றாலும், இதனைக் கடப்பது எப்படி? தன்னைத் தலித் என்று அறிவித்துக்கொள்ளாமல் அவர்கள் முன் செல்ல வேண்டாமா? அதுதானே சிறந்த வெற்றியாக இருக்க முடியும்? அவ்வாறு வெற்றி அடைந்தவர்களை உதாரணமாகக் கொள்ளலாமே! இது ஒரு நடைமுறைச் சிக்கல் இல்லையா?
சமீபத்திய சுவாமி சகஜானந்தர் பற்றிய உரையின்போது ஸ்டாலின் ராஜாங்கம், முன்னோர்களின் அறிவியக்கத்தினை இரு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். ஒன்று, ஏற்கெனவே சமூகத்தில் பெருமதிப்பிலிருக்கும் விழுமியங்களை எதிர்ப்பது. மற்றொன்று, தங்களுக்கான பக்கவாட்டு வரலாற்றை (Parallel History) தாங்களே முன்வைப்பது அல்லது எழுத முனைவது. இந்த வழியை நான் முற்றிலும் அங்கீகரிக்கிறேன்.
ஒரு விழுமியத்தை எதிர்ப்பதன் மூலம், அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், “நாங்கள் வேறு” என்று உரக்கச் சொல்வதைத் தவிர அவர்கள் அடைவது என்ன? இந்த முறையை முன்வைப்பதன் மூலம் அவர்கள் கவனம் பெறலாம். ஆனால், அடுத்த கட்டம் என்ன? இதன் மூலம் வெறும் எதிர்ப்பை மட்டும் முன்வைக்கும் மொண்ணைகள் போராட்டத்தின் நோக்கத்தைச் சிதைத்துவிட மாட்டார்களா?
எடுத்துக்காட்டாக, தன்னைத் தலித் அறிவுஜீவியாகக் காட்டிக்கொள்ள விரும்பும் இளம் ராப் இசைப் பாடகர் / பாடலாசிரியர் மேடையில், பறையையும் மிருதங்கத்தையும் ஒப்பீடு செய்து மிகக் காட்டமாகப் பேசுகிறார். இது உளவியல் சிக்கல் அன்றி வேறென்ன? தன் துறையைச் சேர்ந்த சக கலைஞனின் வாத்தியத்தைப் பழிப்பதன் மூலம் அவர் அடைவது என்ன? மற்றொரு அர்ப்பணிப்புமிக்க மிருதங்கக் கலைஞர் இவரை எப்படி இயல்பாக அணுகுவார்? அப்படி இந்த மிருதங்கக் கலைஞர் அணுகாவிட்டால், அவர் மீது ஒரு சாயம் வலிந்து பூசப்படும் அல்லவா?
ஆனால், அதே பறைக்கு அவர் தன்னை ஒப்புக்கொடுத்தாரேயானால், அந்த இசைக்கருவியை மிருதங்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது போல இவராலும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும். இசைத்துறையில் மகான்களாகப் போற்றப்படுவோர், தங்கள் கலைமீது கொண்ட அர்ப்பணிப்பினால் அன்றி வேறு எவற்றாலும் பொதுச் சமூகத்தால் நினைவுகொள்ளப்படப் போவதில்லை. இதுவே மற்ற துறைகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். பிறப்பினால் ஒருவர் வாய்ப்பை வேண்டுமானால் அடையலாம். ஆனால், நீடிக்க அர்ப்பணிப்பு தேவை இல்லையா? வெற்று எதிர்ப்புகள் காலப்போக்கில் அடித்துச் செல்லப்படும். ஆனால், அவை நிகழும் சமகாலத்தில் பெரும் வெறுப்புகளைச் சம்பாதிக்கும்.
மிக முக்கியமான மற்றொரு குணாதிசயம் பணிவு. பல எல்லைகளைக் கடந்த இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதனை நினைக்கும்பொழுது நெக்குருகுகிறார். “எனது இசை யாவும் எனக்கு இடப்பட்டதே” என்கிறார். சமகாலத்தில் மாபெரும் சாதனைகளைச் செய்த நீங்கள், இளையராஜாவிடம் நெக்குருகுகிறீர்கள். இது இயல்பாக நிகழ்கிறது. எதிர்ப்புணர்வு மண்டிய உள்ளத்தில் வேறெதுவும் எழ முடியுமா? இயல்பாக நிகழுமா? இதே இடத்தில் நான் அந்த வளரும் ராப் இசைப் பாடகரை நினைத்துக் கவலையுறுகிறேன்.
அதுபோல, நான் முரண்படும் மற்றொரு இடம், அர்ப்பணிப்புடன் கூடிய அரசியலற்ற செயல்பாடு. இதற்கு முன் நிலைபெற்றுள்ள, பொதுச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களும் கலைச்செயல்பாடுகளும் எந்த எதிர்ப்பின் மூலம் தங்களை நிலைநிறுத்திக்கொண்டன? அர்ப்பணிப்பால் அன்றி வேறெதுவும் இல்லையே. கலையோ சமூகச் செயல்பாடோ எதுவாக இருந்தாலும், அதில் தன்னை ஒப்புக்கொடுத்தவரையே பொதுச் சமூகம் போற்றும் அல்லவா? இதற்குப் பல உதாரணங்கள் உங்கள் தளத்தில் விரவிக்கிடக்கின்றன.
ஒரு தலித் அல்லாதவரின் பார்வையை நான் முன்வைப்பதாக இருக்கலாம். ஆனால், தலித்துகள் எந்தத் தனித்த, தனிமைப்படுத்தும் அடையாளமும் இன்றி பொதுநீரோட்டத்திலேயே இருக்கவும், அவர்களின் கண்கொண்டு வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கவும் எப்போதும் விழைவுடன் இருக்கிறேன்.
லெஷ்மிநாராயணன்
கீழ நத்தம், திருநெல்வேலி
அன்புள்ள நண்பருக்கு,
ஒரு அறிஞர் அல்லது எழுத்தாளர் தன்னை எவ்வாறு முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறாரோ, அவ்வாறே அவரை எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது. அல்லது, நாம் அவரை வேறு ஒரு கோணத்தில் பார்க்க விரும்பினால், அதற்கான காரணங்களை முன்வைத்து அவரை அந்தக் கோணத்தில் அணுகலாம். அதற்கான சுதந்திரம் அவருக்குண்டு.
ஓர் அறிஞர் தன்னைத் தலித்தியம் சார்ந்த ஆய்வாளராக முன்வைக்கலாம். ஓர் எழுத்தாளர் தலித்திய அறவியலையும், பண்பாட்டையும் முன்னிறுத்துபவராகவும் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பலாம். அந்த அடையாளம் அவருடைய அணுகுமுறையை, அவருடைய கலையை அடிக்கோடிடுகிறது. அது அவரை அணுகியறிய வழியமைக்கிறது. ஆகவே அவ்வாறே அவரை எடுத்துக்கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை.
அதேசமயம், ஒரு தலித்திய ஆய்வாளரையோ எழுத்தாளரையோ அவர் அவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும்கூட அந்த அடையாளத்திலிருந்து விடுவித்து, புதியதொரு கோணத்தில் நாம் மதிப்பிட விரும்பினால், அவரது படைப்புகளை அணுகுவதன் வழியாக அவ்வாறு செய்யலாம். ஆனால், அதற்கான நமது காரணங்களை நாம் முன்வைக்க வேண்டும்.
ஸ்டாலின் ராஜாங்கம் தன்னை தலித்திய ஆய்வாளராக முன்வைப்பவர். ராஜ் கௌதமன் தலித்திய ஆய்வாளராகவும், விரிந்த அளவில் மார்க்ஸிய பண்பாட்டாய்வுமுறையை தமிழிலக்கியத்தில் கையாண்ட செவ்வியல் ஆய்வாளராகவும் தன்னை முன்வைத்தார். அவருடைய அயோத்திதாசர் ஆய்வு போன்றவற்றை தலித் ஆய்வாளராக அவரை எடுத்துக்கொண்டு நாம் அணுகலாம். ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் போன்ற நூல்களை மார்க்ஸிய பண்பாட்டாய்வாளராக அவரை கருத்தில்கொண்டு அணுகலாம்..
டி. தருமராஜை நான் எப்போதுமே ஒரு பின்நவீனத்துவ, பின் அமைப்பியல்வாதச் சிந்தனையாளராக மட்டுமே வரையறுத்திருக்கிறேன். அதுவே அவரைப்புரிந்துகொள்ள சிறந்த வழி என்பது என் எண்ணம். இன்னொரு அணுகுமுறை இன்னொருவருக்கு இருக்கலாம். அவரை அயோத்திதாசரியம், பார்ப்பனர் -பறையர் போன்ற நூல்களை ஒட்டி தலித்திய ஆய்வாளராக காண்பவர்கள் உண்டு.
லா.ச.ரா அல்லது தி.ஜானகிராமன் போன்றவர்களை பிராமண எழுத்தாளர்கள் என பொதுவாக எவரும் அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு அடையாளப்படுத்தி அந்தக்கோணத்தில் அணுகவில்லை என்றால் அவர்கள் படைப்பிலுள்ள சக்தி வழிபாடு போன்ற சிலவற்றின் செல்வாக்குகளை வகுக்கமுடியாது என நான் எண்ணினேன். என் விமர்சனக்கட்டுரைகளில் அந்த அணுகுமுறையை கையாண்டேன். ஆனால் அறுதியாக அவர்களை பிராமண எழுத்தாளர் என வகுக்கவில்லை. அதேபோல எவரையும் அறுதியாக தலித் எழுத்தாளர் என வகுக்கவும் மாட்டேன்.
இந்த அடையாளங்கள் எதுவும் ஓர் எழுத்தாளர், சிந்தனையாளரை அறுதியாக வரையறை செய்துவிடாது என்பதில் நமக்கு உறுதி தேவை. இந்த அடையாளங்களுக்குள் மட்டும் எவரையும் நிறுத்திவிடவும் கூடாது. இந்த அடையாளப்படுத்தல்கள் விவாதங்களின் பொருட்டு அறிஞர்களாலும் வாசகர்களாலும் செய்யப்படுபவை. ஆனால் பெயர்களை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் கூட்டம் அந்த அடையாளங்களே அவர்கள் என குறுக்கும்போது அந்த எழுத்தாளர்கள் சீற்றம் அடைகிறார்கள்.
தலித் அடையாளம் பற்றி நீங்கள் கொள்ளும் ஒவ்வாமை எங்கிருந்து வருகிறது? ஒன்று அதை எதிர்ப்பு மட்டுமே என புரிந்துகொள்கிறீர்கள். இரண்டு, அது விலகிச்செல்லுதல் என வகுக்கிறீர்கள். இரண்டுமே உங்கள் பதற்றம் சார்ந்தவை அல்லவா? எதிர்ப்பு தலித் மக்களிடம் மட்டும் அல்ல, இலக்கியத்தின் எந்தப்பிரிவிலும் அந்த எதிர்ப்பு உண்டு. திராவிட, மார்க்ஸிய எழுத்துக்களில் எதிர்ப்பு இல்லையா? உண்மையில் அந்த அரசியல் தரப்புகளைவிட தீவிரமான எதிர்ப்பு நிலை நவீனத்துவ எழுத்தில் உண்டு. புதுமைப்பித்தன் முதல் அத்தனை நவீன எழுத்திலும் அந்த எதிர்ப்பு உண்டு. நவீன சிந்தனை, நவீன இலக்கியம் இரண்டுமே எதிர்ப்பை அடிப்படையான உணர்வுநிலையாகக் கொண்டவை. இலக்கியத்தின் இயல்பு அது. புதுமைப்பித்தன் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு, மிகக்கடுமையாக எதிர்த்த மரபுகள் பல உண்டு.
இலக்கியம் தனக்கென ஒரு பண்பாட்டுவெளியை வகுத்துக்கொண்டு அதை நோக்கி குவிவதே வழக்கம். அது கரிசல் இலக்கியம் போல நிலம் சார்ந்ததாக இருக்கலாம். சாதி சார்ந்ததாகவும் இருக்கலாம். அதற்கு பேச ஒரு பண்பாடு உள்ளது, அதை அது முன்னிறுத்துகிறது. அது ‘மக்களிடமிருந்து’ விலகிச்செல்வது அல்ல. விலக்கப்பட்ட மக்களை முன்வைப்பதுதான். மக்கள் விரும்பும்படி, மக்களோடு மக்களாக எழுதவேண்டியவர்கள் வணிக எழுத்தாளர்கள்தான். உங்களுக்கு தெரியாது, அறுபது எழுபதுகளில் இங்கே முற்போக்கு இலக்கியம் எழுதப்பட்டபோது அதற்கு எதிராக, “எல்லா கதையிலும் வண்டிக்காரன், கூலிக்காரன்னே எழுதுறானுக. இலைபோட்டு சாப்பிடுறவன் இவனுக்கெல்லாம் எதிரி. மக்களை பிளவு படுத்துறானுங்க” என்று பேசியவர்கள் உண்டு.
ஒருவர் எந்த அடையாளத்தை மேற்கொள்ள வேண்டும், எவ்வாறு தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாம் அவர்களிடம் வற்புறுத்துவது ஒருவகை அத்துமீறல். நம் முன்முடிவுகளை அவர்கள்மேல் போடுவது அது.
அன்புடன்,
ஜெயமோகன்
Re-reading Modern Tamil history through Ambedkarite Journals

கருத்துகள்