இலங்கையின் இனவாதப் போர்ச் சூழலைத் தன்னுடைய பெரும் நாவலான ‘ஆதிரை’ யில் கட்டமைத்த சயந்தன், ‘ஆறாவடு’, ‘அஷேரா’ என்ற மற்றைய இரண்டு நாவல்கள் வழியாகவும் தன்னுடைய புனைவுப் பரப்பை இலங்கையிலிருந்து வெளியுலகை நோக்கி விரித்திருந்தார். அப்படி விரிக்கும்போது, ‘உள்நாடு மட்டுமல்ல, உலகமே ஒரு அரசியற் சூதாட்டக் களமாகத்தான் இருக்கிறது’ என்பதையும், ‘அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கிறது’ என்பதையும் காண்பித்தார். அந்தத் தொடர்ச்சியில்தான், சயந்தனின் புதிய நாவலான ‘திசை ஒன்பது’, வும் எழுதப்பட்டுள்ளது. ஈழத்தில் மட்டுமன்றி, உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் அரசியல் நெருக்கடிகளினால் வெளியேறிப் புகலிடம் தேடி அலையும் மனிதர்களின் வாழ்க்கை இந்த நாவலில் சாராம்சப்படுத்தப்படுகிறது. அப்படிப் பல்வேறு இன, மத, மொழி, பிராந்திய மனிதர்களைச் சாராம்சப்படுத்தும்போது, அது உலகளாவிய அகதி நிலைமைகளையும் உலகளாவிய அகதி அரசியல் பிரச்சினைகளையும் கவனப்படுத்துவதாகிறது. குறிப்பாக அகதிகளைக் குறித்து, அகதிகளுக்கான அந்தஸ்து, பாதுகாப்பு, உரிமைகள் குறித்தெல்லாம் ஐ.நா உட்பட பல அதிகார அமைப்புகளும் கூறுகின்ற – கொண்டுள்ள அதியுச்ச நிலைப்பாடுகளையும் உண்மைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கி விமர்சிக்கிறது. என்பதால் திசை ஒன்பது உலகளாவிய அகதிகளைக் குறித்துப் பேசும் இலக்கியப் பிரதிகளில் முக்கியமான ஒன்றாகிறது. இந்த வகையான இலக்கியப் பிரதிகளை ஷோபாசக்தி, பொ. கருணாகரமூர்த்தி போன்ற புகலிட எழுத்தாளர்கள் ஏற்கனவே எழுதியிருந்தாலும், சயந்தன் அவர்களிலிருந்து வேறுபட்டு அல்லது விலகி, ஐரோப்பியச் சூழலில் இருந்து உற்பத்தியாகும் அகதிப் பிரச்சினையையும் இங்கே கவனப்படுத்தியிருக்கிறார். என்பதால் திசை ஒன்பதில் ஈழத்தைப்போல உக்ரைனும் ஒரு போர்க்களமாகிறது. அதாவது ஐரோப்பிய மண்டலமும் அகதிகளைப் பெருக்கும் நிலைக்குள்ளாகியுள்ளது என்பதைக் காட்ட விளைகிறார்.
ஈழத்திலிருந்து புறப்பட்டுச் சுவிட்சர்லாந்துந்துக்குச் செல்லும் பயணத்தில் நிகழ்ந்தேறும் விதியொன்றின் சுழிப்பில் உக்ரைனில் தங்கியிருக்க நேர்ந்த (ஏதோ ஒரு உக்ரைன் பிரஜையாகி விட்ட) இளங்கோவும் அவனுடைய உக்ரைனியத் தோழி ஹன்னாவும் கூட உக்ரைனிய யுத்தத்தினால் அகதியாகிறார்கள். அப்படிப் பார்த்தால் நாவலில் வரும் ஒவ்வொரு மனிதர்களுடைய தனி முகங்களையும் அடையாளங்களையும் அழித்து ‘அகதி’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது நாவல். உண்மையும் அதுதான். சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எனப் பல திசைகளிலிருந்தும் தங்கள் சொந்த இருப்பிடத்தை விட்டு வெளியேறும் வரையில்தான் ஒவ்வொருக்கும் முகமும் அடையாளமும் இருந்தது; இருக்கிறது. அதற்குப் பிறகு ‘அகதி’ என்ற ஒற்றைச் சொல்லில் வந்து விடும் புதிய அடையாளத்தில் அலைக்கழிதல், முகமிழத்தல், வாழ்விழத்தல், நம்பிக்கைச் சரிவுகளில் வீழ்தல், ஏமாற்றங்களின் பள்ளங்களில் அமிழ்தல், விதியின் விளையாட்டில் தம்மை இழத்தல் எனப் பலவிதமாக மாறிக் காய்ந்து சருகாகி விடுகின்றனர். என்பதால் ‘அகதி’ என்ற இந்த ஒற்றை அடையாளமும் அது கொண்டிருக்கும் வாழ்க்கையும் ஒரு பெரும் துயரக் கூடாக நம் கண்முன்னே விரிகிறது.
புலம்பெயர்ந்து அகதிகளாகி புகுமிடம் தேடுவதென்பது இந்த உலகத்தில், இந்தக் காலத்தின் கொடுவினையாகும். இன்றைய உலகச் சூழலில் இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்கள், உக்ரைன் போர், பல்வேறு நாடுகளின் பிராந்திய மற்றும் இன மோதல்கள், காலநிலை மாற்ற இடப்பெயர்வுகள் போன்றவை முன்னெப்போதையும் விட அகதிப் பெருக்கத்தை அதிகரித்துள்ளன. இவ்வாறான காரணங்களால் சுமார் 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாக அலைந்து திரிவதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சமகாலப் பேரவலத்தின் பின்னணியில்தான், “திசை ஒன்பது” போன்ற நாவல்கள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தச் சமகாலத்தை இன்றைய நாள் என்று சுருக்கிக் கொள்ளாமல் நாம் முன்பின்னாகவே வாசிக்க வேண்டும். ‘திசை ஒன்பது’ விலும் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த இனவிடுதலைக்கான போர் முடியும் தறுவாயில் வெளியேறிச் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல விளையும் இளங்கோவின் எதிர்பார்ப்பும் பயணமும் திசைமாறி விடுகிறது. அதற்குப் பிறகு வரும் 14 ஆண்டுகள் அவனைப் பலவாக அலைக்களிக்கின்றன.
இளங்கோவின் கனவோடும் அந்தக் கனவுக்கான பயணக் கதையோடும் எதிர்பாராத விதமாகப் பலரும் சம்மந்தப்பட்டுவிடுகிறார்கள். இதுதான் வாழ்க்கையின் உண்மையான நிலை. நாம் எதிர்பார்க்கின்றவைகளை விடவும் எதிர்பாராமைகளோடுதான் அநேகமான தருணங்களில் வாழ்க்கை பயணிக்கிறது. அல்லது பயணிக்க வேண்டியிருக்கிறது. இளங்கோவின் வாழ்க்கைக்கும் அப்படித்தான் விதி நேர்கிறது. இளங்கோவின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அமுதி, இமயா, அருந்தவம், துருபரன், பாகிஸ்தானியன் என எல்லோருக்குமேதான். ஆகவே இளங்கோவுடன் எப்படியெல்லாமோ சம்மந்தப்பட்டுவிடும் ஏனைய மனிதர்களின், ஏனைய இடங்களின், ஏனைய சம்பவங்களின் கதைகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருப்பதே திசை ஒன்பது. இதில் இளங்கோ என்ற யாழ்ப்பாணத்துச் சராசரிக்கும் சற்று அப்பாலான, ஒரு இலக்கிய ஈடுபாடுடைய இளைஞனின் பார்வையும் அனுபவங்களுமே நாவலின் தொனி. வெப்ப வலயத்திலிருந்து பனிபடர் பிரதேசத்திற்குள் நுளைந்த இளங்கோவின் பயணப்பாதையின் விதி, அங்கே உள்ள அகதிகளுக்கான, புதிய குடியேறிகளுக்கான எதார்த்த நிலைமைகளைத் தொட்டுப் பார்க்கிறது. பயணமுகவர்கள், அவர்கள் உருவாக்கியிருக்கும் மாஃபியா உலகம் என பலவற்றையும் அது திறந்து பார்க்கிறது. அப்படிப் பார்க்கும்போது திகிலூட்டும் அனுபவங்களும் மரணக் குழிகளும் தென்படுகின்றன. இது ஒரு பெருந்தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதற்கான புள்ளி விவரங்களும் நாவலிலும் நாவலுக்கு வெளியில் நம்முடைய தலைக்குள்ளும் உண்டு. இந்த உறைபனிப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் இருக்கும் தனிமனித துயரங்களையும், அவர்களின் அலைக்கழிப்புகளையும் சயந்தன் இதில் உயிர்பிளக்கும் சொற்களால் எழுதியளித்திருக்கிறார். அப்படி எழுதியளிக்கும்போது நம்முள்ளே ஏற்கனவே அறிந்தவைகள் கொதித்து மேலெழுகின்றன. ஏனென்றால், இது இலக்கியப் பிரதி. நாவல். ஆகவே அது உணர்வின் இழைகளைச் சுண்டி, உயிர்ப்பித்து, உண்மைகளை நுகர வைக்கிறது. அந்த உண்மைகள் உயிரில் தீயாய்ச் சுடுகின்றன. புனைவுசாரா எழுத்து அளிக்கின்ற விவரங்களுக்கும் புனைவு எழுத்து அளிக்கின்ற விவரங்களுக்கும் இடையிலான வேறுபாடு இது.
அரசியல் தத்துவவியலாளர் ஹன்னா அரெண்ட்டின் (Hannah Arendt) கோட்பாடு சொல்வது போல், ‘அகதிகளின் மிகப்பெரிய சோகம் அவர்களின் உயிர் அல்லது சுதந்திரம் என்பது தனியே ஒரு இழப்பு மட்டுமல்ல; அவர்கள் எந்த ஒரு சமூகத்திலும் சேர்ந்தவர்கள் இல்லை எனும் நிலைதான்.’ இதுதான் பேரவலத்துக்குரியது என்கிறது ‘திசை ஒன்பது’ வும். நாவலில் இலங்கை, உக்ரைன், சிரியா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு பிராந்தியங்களின் மனிதர்கள் இந்த உரிமையற்ற, அநாதரவான நிலையில் ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். இவர்களின் பயணம் என்பது வெறும் புவியியல் ரீதியான இடப்பெயர்வு மட்டுமல்ல. இவர்களின் அடையாளமும், கடந்த காலமும், எதிர்காலமும் சிதைந்து போகும் ஒரு உளவியல் நெருக்கடியின் பயணமாகும். அது எங்கே, எப்படி முடியும் என்று சொல்வதற்கில்லை. புகுமிடத்தில் அது எப்படி இருக்கும் என்பதையும் தீர்மானித்து விட முடியாது. இளங்கோவுக்கு முன்பு புலம்பெயர்ந்த அருந்தவத்தின் கதையும் நிலையும் இதற்குச் சான்று. சிறைகள் பல விதமான உருமாறிக் கொண்டேயிருக்கின்றன.
இதுபோல, உள்நாட்டு நெருக்கடியினால் வெளியேறிப் புகலிடம் தேடிச் செல்லும் அகதிப் பயணத்தின் அலைக்கழிப்புகளைப் பேசும் இன்னொரு முக்கிய ஈழத்து இலக்கியப் பிரதி தாமரைச்செல்வியின் ‘உயிர் வாசம்’ ஆகும். அது இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா நோக்கிச் செல்லும் ஆபத்தான கடற்பயணத்தின் அலைக்கழிப்புகளைச் சாரப்படுத்தியது. ஒருவாறு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கினாலும் சுமைகளும் அலைக்கழிப்புகளும் இறங்கவில்லை. அவை அப்படிச் சுலபமாக நீங்கி விடுவதில்லை. இதுதான் அகதியானோரின் கதி. சயந்தனின் ‘திசை ஒன்பது’ நாவலோ, பனிப்படலத்தின் வழியாகச் செல்லும் நிராதரவான, கொடுமையான நிலப்பரப்புப் பயணங்களைப் பேசுவது. இது இலங்கையிலிருந்து தாய்வான், மாஸ்கோ, உக்ரைன், போலந்து, சுவிட்சர்லாந்து என்ற வழியில் அமைந்திருக்கும் அதிகாரத் தரப்புகளின் குகைகளையும், மாஃபியாக்களையும் அவர்களை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமலிருக்கும் சூழ்நிலையையும் அவற்றின் நடுவே மலிந்து கிடக்கும் மரணக் குழிகளையும் பற்றியது.
இந்த அலைக்கழிவுப் பயணத்தில் சந்திக்கின்ற பயண முகவர்கள், அவர்களின் மோசடிகள், அவற்றைத் தெரிந்து கொண்டே அவற்றை மீற முடியாமல், அவற்றுக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டிய நிலைமைகள், எல்லை கடத்தற் பிரச்சினைகள், முரண்பாடுகளுக்கு மத்தியிலும் பூக்கும் காதல், அன்பு, தோழமை, நெருக்கம், மானுட நேயம் என வாழ்க்கை விதவிதமாக கோலம் காட்டிக்கொண்டே, வித்தை செய்து கொண்டேயிருக்கிறது. நாவலில் தேவாரம், அருந்தவம் என்ற இரண்டு பாத்திரங்கள் சிறிய அளவில் வருகின்றன. அதிலும் ஆகச் சிறியதொரு பாத்திரமாக அறிமுகமாகும் அருந்தவம், நாவலின் ஆன்மாவாக விரியும் அளவுக்குத் தன்னை விரித்து விடுகிறார். வாழ்க்கையில் அவர் தோற்றுப்போனவரா வென்றவரா என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு அறிவின் ஆழம் பெருகிய மானுட அடையாளமாகிறார். அவருடைய அனுபவச் சொற்கள் மட்டுமல்ல, சிதைந்த அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் உணர்வும் பல ஆயிரம் ஈழப்போராளிகளின் பொது வாழ்க்கைச் சிதைவுக்கும் கனவுகளின் கலைவுக்கும் ஒப்பானது. ஆனால், தேவாரம் அப்படியல்ல. அது முகம் தெரியாத ஒரு அதிகார மையப் பாத்திரம். அதனால் எதையும் செய்ய முடியும் என்ற ஒரு தோற்றம் உண்டு. உண்மையும் அதுதான். அதற்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். எந்த முடிச்சை எப்படி அவிழ்ப்பது என்று அறியும். அதனுடைய தொடர்போட்டங்கள் பல திசைகளிலும் ஊடுருவிச் சென்று படர்ந்திருப்பவை. சட்டரீதியான வழிமுறைகளுக்கு மாறான இன்னொரு உலகமான சட்டவரம்புகளை மீறிய தொடர்போட்டத்தில் இணைந்திருப்பது தேவாரத்தின் உலகம். இந்த உலகம் இப்படி இரண்டு வகையான பின்னல்களால் (வெளிப்படையான – இரகசியமான, சட்டரீயான – சட்டவரம்புகளை மீறிய என) ஆனதே. அதையும் திசை ஒன்பது உணர்த்தி விடுகிறது. திசை ஒன்பதைப் படிக்கும் அரசுகளும் ஐ.நா போன்ற நிறுவனங்களும் அகதிகளைக் குறித்தும் எல்லை கடத்தல்களைப் பற்றியும் எத்தகைய உள நிலைக்குச் செல்லும் என்றொரு எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் தெரியாதவையாக நடிக்கின்றனவா? என்றும் எண்ணத் தோன்றியது.
நாவல் பல கோணங்களில் தன்னை விரித்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஒரு நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் மனநிலையில் தன்னை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக யாழ்ப்பாண உள நிலையில். இளங்கோவின் ஆசிரியர் குணசேகரனுடைய அரசியல், சமூகப் பார்வைகளும் இளங்கோவின் காதலியான அமுதியின் அப்பாவைப் பற்றிய இளங்கோவின் பார்வைகளும் இதைச் சொல்கின்றன. அமுதியின் அப்பா தொடக்கம் மாஸ்கோவைப் பற்றிய விவரிப்புகள் வரையில் இடதுசாரிய அரசியலைக் குறித்த எள்ளல் நாவலில் அங்கங்கே தெறிக்கிறது. அப்படியேதான் ரூபி அக்கா என்ற பாத்திரத்தின் வழியாக பயண முகவரால் கவரப்படும் பெண்களைப் பற்றிய கதையும். இப்படி ஈழத் தமிழ் நாவல் என்பதைப் பிடிவாதமாக அழுத்திக் கொள்வதற்கான பல இடங்களையும் அது கொண்டிருக்கிறது. ஆனால், நாவல் மையப்படுத்துவதற்கு முயற்சிப்பது முக்கியமாக, அகதிகள் தஞ்சம் புக நினைக்கும் ‘திசைகள்’ எல்லாம் பாதுகாப்பான புகலிடங்கள் அல்ல; அவையும் சர்வதேச அரசியல் பகடையாட்டங்களின் களங்களே என்பதையே.
விதியின் இந்த ஆட்டத்திற்கு மிகச் சிறந்த வரலாற்று உதாரணம், நம்முடைய சொந்த வாழ்வுதான். 1980 களின் முற்பகுதியில், புதியதொரு எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் தேச விடுதலைக்காகவும், சமூக விடியலுக்காகவும் வீட்டை விட்டுப் படகேறி, ஆயுதப் பயிற்சிக்குச் சென்றவர்கள் நாம். அந்தப் பயிற்சியின்போது நம்முடைய மனங்களில் பூத்த கனவுகளும் நம்பிக்கைகளும் ஏராளம். ஆனால், நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத உலக அரசியல் விதிகளும், உள்ளூர் முரண்பாடுகளும் அந்தப் போராட்டப் பயணத்தை எதிர்பாராத விதமாகத் திசைமாற்றின. அந்தத் திசைமாற்றமே எஞ்சிய நம் வாழ்வைப் பெரும் போராட்டமாகவும் துயர்க்குழியாகவும் மாற்றியது.
இந்த நாவலை வாசிக்கும்போது, ‘திசை ஒன்பது’ என்பது உக்ரைன், போலந்து என அகதிகள் அலைந்த புவியியல் திசைகள் (எட்டு திசைகள்) மட்டும் தானா என்ற கேள்வி எழுகிறது. அது எண்பதுகளில் நாம் நெஞ்சில் சுமந்த லட்சியம் சிதைந்து, சித்தாந்த ரீதியாக நம் சமூகம் ஒன்பது திசைகளிலும் சிதறிப்போனதன் வரலாற்றுப் பெருவலியுமாகும் என்ற புள்ளியே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
அதேநேரம், மரபுரீதியாக “ஒன்பதாவது திசை” என்பது மேல்நோக்கிய திசையை, அதாவது பந்தங்களிலிருந்து விடுபடும் ‘முக்தியை’க் குறிப்பதாகவே சொல்லப்படுவதுண்டு. புவியியல் ரீதியான எட்டு திசைகளும் அடைபட்டுப்போன பிறகு, மனிதர்கள் தங்களின் உயிர் பிழைத்தலுக்காகத் தேடும் அந்த மாயமான, இறுதி விடுதலையே இந்த ‘ஒன்பதாவது திசை’ என்ற குறியீடாகவும் மாறுகிறது. ஆனால், அது மேல் நோக்கிய முக்திக்குரிய திசை இல்லை. பதிலாக இந்தப் புவியில், நரகமா சொர்க்கமா என்று தெரியாத உயிர் பிழைத்தலுக்கான இன்னொரு திசையே. இதனையே “உயிருக்குப் பயந்தோடுவதற்கான சனங்களின் உரிமையும் மரியாதைக்குரியது” எனவும், “போரால் வரும் சுதந்திரத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நான் போரே இல்லாத எங்காவது போய் விடுகிறேன்” என்றும் “இருத்தலே உயிரின் இலக்கு. எதிர்த்துப் போராடுவதைப் போலவே அச்சப்படுவதற்கும், தப்பி ஓடுவதற்கும் கூட மனிதருக்கு உரிமையுண்டு” எனவும் வருகின்ற கருத்துகள் நாவல் இருத்தலியல் தளத்தில் தன்னைக் கட்டமைக்க விளைகிறது என்பதை உணர்த்துகிறது.
‘திசை ஒன்பது’ நாவலை ஒரு பின்நவீனத்துவப் பிரதியாகவும் நாம் அணுக முடியும். நாவல் வெவ்வேறு நாடுகள், இனங்கள், காலங்களை இணைத்து ஒரு துண்டாடப்பட்ட (Fragmented) அமைப்பில் செல்கிறது. பயண நாயகனான இளங்கோவின் பார்வையில் மற்ற அகதிகளின் கதைகள் இணைவது, வாசகனுக்கு ஒரு ஒற்றை உண்மையை வழங்காமல், பலதரப்பட்ட பார்வைகளை முன்வைக்கும் ‘பல்வகைக்குரல் தன்மை’யை (Polyphony) உருவாக்குகிறது.
இதற்குச் சயந்தன் பயன்படுத்திய மொழியும் சொல்முறைகளும் அவற்றுள் நிலவும் தீவிரத்தையும் பம்பலையும் மாற்றி மாற்றி, ஒருவிதமான ரசவாதத்தை உருவாக்கியுள்ளன. இது பின்நவீனத்துவத்தின் “மொழி விளையாட்டு” (Language Game) உத்தியாகும் எனச் சிலர் வாதிடலாம். சீரியஸாகவே நகரும் கதையோட்டத்தை சட்டெனத் திருப்பி, வாசகரின் மனக் கனதியைக் குறைப்பதற்காக சயந்தன் கையாளும் இந்தப் பகடி, சில சந்தர்ப்பங்களில் துயரைக்குறைக்க முனையும் நகைச்சுவையாக மாறி ஈர்க்கிறது; சில இடங்களில் சூழலோடு பொருந்தாமல் விலகி நிற்கிறது. இந்த இருநிலையினால் தன்னுடைய நாவல்களின் ஆழ்பரப்பில் உணர்த்த விரும்புகின்ற நிஜங்களைச் சிலவேளை அவர் இழக்கவும் நேரிடுகிறது. இருப்பினும், இந்த ஊசலாட்டமே வாசகனைப் பிரதியிலிருந்து சற்று அந்நியப்படுத்தி யோசிக்க வைக்கும் உத்தியாகவும் மாறுகிறது.
‘எத்தனை கோடி துயரிலும் வாழ்வே விருப்புறு கனி’ யென நாவலின் ஒவ்வொரு பாத்திரங்களும் தம் வாழ்வை வாழ்ந்து விடவே முயற்சிக்கின்றன. ‘மரணத்திலும் வாழ்வோம்’, ‘இக்கணத்திலும் வாழ்ந்து விடு யசோதர”’ என்பதாக உத்வேகம் கொண்டெழும் நம்பிக்கையின் தாகத்தோடெழும் ஆவற் சொற்கள் நாவலின் வழியே மனதில் விரிகின்றன. மனித இயல்பென்பது ஒருபோதும் எந்த விதியின் கொடூரக் கைகளிலும் முற்றாகக் கட்டுண்டு விடுவதில்லை; அது அதை மீறவே எத்தனிக்கும் என்ற உயிரின் பேராவலை நாவல் கடத்துகிறது.
ஒரு சிறந்த கலையாக்கம் வாழ்வின் சிக்கலான முடிச்சுகளையும், அநுபவப் பிராந்தியங்களையும் இப்படித்தான் வாசகனுக்குத் திறந்து காட்டுகிறது. அவரவர் அநுபவம், நோக்கு மற்றும் சிந்தனைக்கு ஏற்பவே ஒரு பிரதியோடு வாசகர்கள் தங்களைத் தொடர்புறுத்திக் கொள்கிறார்கள். அப்படி எல்லோருக்கும் சாத்தியமான எல்லாக் கோணங்களுக்குமாகத் தன்னைத் திறந்து காட்டும் கலையாக்கப் பெறுமதியை சயந்தனின் ‘திசை ஒன்பது’ முழுமையாகக் கொண்டுள்ளது.
நன்றி – கலைமுகம் இதழ்

கருத்துகள்