அஷேரா நாவல்
September 6, 2026 · ◷ 10 நிமிட வாசிப்பு

அஷேரா – 25

25

குளிர், பூச்சியத்திற்குக் கீழே எட்டு அல்லது பத்துக்குப் போயிருக்க வேண்டும். மோர்கார்த்தென் நினைவாலயத்திற்கு ஏறும் கருங்கல் பாதையில் கனத்த இருள். அருள்குமரன் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினான். கை கால்கள் திடீர் திடீரென்று குளிரில் உறைந்துவிடுவதைப் போலவும் கஸ்ரப்பட்டுப் பிரித்துக் கொள்வதாகவும் அவனுக்குத் தோன்றிற்று. ‘அற்புதம் குற்றமற்ற கை என்றா சொன்னார்?’ எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். எதையோ வென்றுவிட்டதைப் போல. ஆனால் அப்படி இல்லையே. அவன் விலுக் என்று அவரிடமிருந்து கையை இழுத்தான். “சாப்பிட வாடா.” என்று அழைத்தார். “இந்தா வாறன்.” குளிர் ஆடையை அணிந்துகொண்டு இறங்கி நடந்தான். தபால் நிலையத்தில் பேருந்து நின்றது. கடைசிப் பேருந்து. ஏதோ வேகத்தில் ஏறி உட்கார்ந்தான். இனி நாளை காலையில்தான் திரும்பலாம், பரவாயில்லை. அகதி முகாமில் லவகுசராசாவும் மற்றவனும் இருக்கிறார்கள். அங்கே தங்கலாம். இருக்கிறார்களா அல்லது வேறெங்காவது போய்விட்டார்களா தெரியவில்லை. பேருந்திலிருந்து இறங்கியபோது அகதி முகாமிற்குப் போகத் தோன்றவில்லை. நினைவாலயத்தை நோக்கித்தான் நடந்தான். ‘குற்றமற்ற கை.’ திரும்பத் திரும்ப அதே நினைவு. அற்புதத்திற்கு குற்றமற்ற கை. ஆராதனாவிற்குக் குற்றமற்ற கை. அம்மாவிற்குக் கூட குற்றமற்ற கை. எனக்கு? அபர்ணாவிற்கு? இன்றைக்குக் கிறிஸ்துமஸ். இன்றைக்குத்தான் அவளை நினைவாலயத்திற்கு அழைத்துப் போக வேண்டுமென்று நினைத்திருந்தான். திரும்பிப் பார்த்தான். அபர்ணா வந்திருந்தால் வெள்ளை நிறமான பஞ்சு பொதித்த குளிராடையால் தன்னை மூடியிருந்திருப்பாள். இரண்டு மூன்று அடுக்குகளில் சால்வை கழுத்தைச் சுற்றி இருந்திருக்கும். ‘அழைத்திருந்தால் வந்திருப்பாளா?’

உச்சியில் ஒரேயொரு மின்விளக்கிலிருந்து மஞ்சள் ஒளி இறங்கியது. “கவனம்.. கருங்கல் படிகள். காலைப் பார்த்து வைக்க வேணும்.” அவனையும் அறியாமல் முணுமுணுத்தான். துணுக் என்று இருந்தது. நான் யாருக்குச் சொன்னேன்?அது.. அந்த வெள்ளைக் குளிராடைக்குள் அபர்ணாவா? ஆராதனாவா? அவள் ஏன் இங்கு வருகிறாள்? அவளைக் குளக்கரையின் மருத மரக் கிளைகளில்தானே காண்கிறேன். பாவாடை சட்டையோடு கதைத்துக்கொண்டிருப்பாள்.

“அதுக்குப் பிறகு நீ அவந்தியைக் காணவே இல்லையா?”

இல்லை. ஆராதனாவிற்கு அவந்தியைத் தெரியாது. அபர்ணாதான் கேட்கிறாளா? அருள்குமரன் மறுபடியும் திரும்பிப் பார்த்தான். வெறும் இருட்டு.

அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. பேருந்திலிருந்து இறங்கியபோது பலத்த மழை. அருள்குமரன் ஓடிப்போய் தொலைபேசிக் கூண்டுக்குள் ஒதுங்கி நின்றான். அழுகிய குப்பை நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. மூக்கைத் தேய்த்துத் தேய்த்து விட்டான். தெருவெல்லாம் கால்வாயிலிருந்து பொங்கிய கழிவு நீர். முனையில் ஒரேயொரு ஓட்டோ மாத்திரம் நின்றது. வழமையாக நான்கைந்து நிற்கும். பிரியந்த தென்படுகிறானா என்று பார்த்தான். இல்லை. போன ஞாயிற்றுக்கிழமை வந்தபோதும் அவனைக் காணவில்லை. யாரையாவது ஏற்றிப் போயிருக்கக் கூடும். அவந்தியும் காலையிலேயே எங்கேயோ புறப்பட்டுப் போய்விட்டதாக வீட்டுக்கார நோனா சொன்னாள். அப்பாடி.. அவள் உயிரோடுதான் இருக்கிறாள். எங்கே போனாள்? வேறேதாவது கேள்வி இருக்கிறதா என்பதைப்போல பார்த்த நோனா உள்ளேயிருந்து கிழவி இருமுவதைக் கேட்டதும், “மம எனவா.” என்றவாறே கதவை அடித்து மூடினாள். அதிலேயே தொடர்ந்து நிற்க அந்தரமாக இருந்தது. பிரியந்தவிடம் கேட்டுப் பார்க்கலாம். அவனுக்குத் தெரிந்திருக்கும். தெருமுனைக்குத் திரும்பி வந்தான். அவனைக் காணவில்லை. வந்துவிடுவான். அருகிலிருந்த தேனீர்க் கடையில் நுழைந்து மாலு வடையும் சம்பலும் கேட்டான். மெதுவாகச் சாப்பிட வேண்டும். இன்னமும் பிரியந்த வரவில்லை. ஒரு தேனீர் கேட்டான். சூட்டை ஊதி ஊதி நேரத்தைக் கடத்தினான். இனி கடைக்காரனுக்குச் சந்தேகம் வந்துவிடும். வெளியேறி பேருந்துக்குக் காத்திருந்து ஏறினான். பிரியந்த வரவே இல்லை.

அடுத்தடுத்த நாட்களில் அவந்தியிடமிருந்து அழைப்பு வந்திருக்க வேண்டும். வரவில்லை. அதைக் கடிதத்தில் எழுதி கொச்சிக்கடையில் புகையிலைச் சிப்பங்களை மொத்தமாக விற்பனை செய்யும் ஒரு கடையில் கொடுத்தான். அங்கே அடுத்த ஞாயிறும் அவளைச் சென்று சந்திக்கச் சொன்னபோதுதான் சின்னதாக ஒரு பொறி. அதற்காகத்தான் வந்திருக்கிறான். பேருந்திலிருந்து இறங்கியபோதே பலத்த மழை.       

மழை ஓய்ந்து தருவதாகத் தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஜீன்ஸை மடித்துவிட்டு வெள்ளத்தில் இறங்கினான்.  உடல் தெப்பலாக நனைந்துவிட்டது. பேய் மழைதான். சேரி வீடுகளின் சுவர்களை அரிப்பதைப் போன்ற வெள்ளம். நடந்துபோய் அவந்தி வீட்டுக் கதவைத் தட்டினான். யாரும் திறப்பதாகத் தெரியவில்லை. மழைச் சத்தத்திற்குக் கேட்டிருக்காது. இன்னொரு முறையும் தட்டுவதற்குக் கையை ஓங்கினான். தடாரென்று கதவு திறந்தது. இன்றைக்கு வீட்டுக்காரன்தான் வெளியே வந்தான். அருள்குமரனைக் கண்ட மாத்திரத்திலேயே அவனுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். கெட்ட வார்த்தைகளால் திட்டத் தொடங்கினான். “எங்கே போய்விட்டாள் அந்த ஆட்டக்காரி.”

“அவந்தி இங்கே இல்லையா?” அருள்குமரன் தயக்கத்தோடு கேட்டான்.

“இங்க இழுத்துக்கொண்டிருக்கிற கிழவிக்குப் பீ மூத்திரம் எடுக்க என்றுதானே அவளை வவுனியாவிலிருந்து கொண்டுவந்தோம். அப்ப அவளிடம் ஒரே ஒரு சோடி உடுப்பைத் தவிர ஒன்றுமே இல்லை. இந்த வீடும் கிழவியுமாக இருப்பேன் என்றாள். இப்ப அவளுக்குக் காசு ஆசை பிடித்துவிட்டது. வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை. வேலைக்குப் போகிறேன் என்றாள். அதுகூட நான் எடுத்துக்கொடுத்த வேலை. அவள் எங்கே என்று அவர்கள் என்னைக் கேட்கிறார்கள். எங்கேயோ நல்ல காசுக்கு யாருக்கோ வேலையெடுக்க ஓடிவிட்டாள்.”

அருள்குமரனுக்கு கோபம் வந்தது. வார்த்தைகளை விடக்கூடாது. இவனுக்கு பொலிஸ்காரர்களோடு நல்ல செல்வாக்கு என்று அவந்தி சொல்லியிருக்கிறாள். முகத்திலிருந்து மழையை வழித்தான். இதற்கிடையில் நோனாவும் வந்துவிட்டாள், சத்தம் கேட்டிருக்க வேண்டும். “எதற்காக இப்பிடிக் கத்துகிறீர்கள்?” அருள்குமரனைப் பார்த்தபோதே புரிந்திருக்க வேண்டும். “அவந்தி இங்க இல்லை. அவள் போய் ஒருகிழமை ஆகிவிட்டது.” என்றாள்.

“அவளைக் காணவில்லை என்று பொலிஸில் சொன்னீர்களா?”

“நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்? ரோட்டில் எங்காவது அடிபட்டுச் செத்தால் பொலிஸ் எங்களுக்குச் சொல்லும்தானே?” வீட்டுக்காரன் திரும்பவும் தொடங்கினான்.

ஆறுதலாக இருந்தது. இவர்கள் பொலிஸிடம் போகவில்லை என்பதாலா? அல்லது பொலிஸ் இவர்களிடம் வரவில்லை என்பதாலா? அருள்குமரன் திரும்பி நடந்தான். மழை தணிந்துகொண்டு வந்தது. வெளியே வந்த சிறுவர்கள் வெள்ளத்தை உதைந்து விளையாடினார்கள். பெண்கள் கயிற்றுக் கொடிகளில் உடுப்புக்களைத் திரும்பவும் காயவிட்டார்கள். சேரியைத் தாண்டினான். அவந்தி எங்கே போய்விட்டாள்? இப்போதாவது தெரு முனையில் பிரியந்த நிற்பானா? திடீரென்று ஒரு பதற்றம். வேண்டாம். அவன் நிற்க வேண்டாம். அவன் என்றைக்குமே இங்கே இனி நிற்க வேண்டாம். ஓர் இராணுவச் சோதனைச் சாவடியைக் கடக்கிற அந்தரத்தோடு தெரு முனையைக் கடந்தான். கண்கள் அலைந்து அலைந்து தேடின.

பிரியந்த இல்லை. நிம்மதி. 

அவந்தியின் கையும் குற்றமற்றதா? நிலாமதி என்ன சொல்வாள்? அவளில் கோபப்படுவாளா? ரொக்கெட் என்ன சொல்வான்? இயக்கத்திற்கு என்று ஒரு மானம் மரியாதை இருக்கு.. இருக்கட்டும். ஆனால் அவந்தியின் கை குற்றமற்றது, அற்புதத்தைப்போல. அவளுக்கு என்னைப்போல உளைச்சல் வேண்டாம். ஏன்? எனக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறேன்?

அருள்குமரன் குன்றின் உச்சிக்கு வந்தான். குளிருக்கு உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடாக்கச் சுகமாக இருந்தது. பாதுகாப்புச் சுவரில் சாய்ந்து நின்றான். கடலுக்குள் ஒரு மண் திட்டுப்போல இருளுக்குள் இந்த நினைவாலயம். இப்போதும் பேரண்டத்தின் முன் நான் வெறும் துகள் என்று தோன்றுகிறது. ஒரு மயிர். நான்கு திசைகளிலும் ‘ஓ..’ என்று இரைய வேண்டும். ஆடைகளைக் களைந்து மல்லாந்து கிடந்து.. அபர்ணா இப்போது என்ன செய்வாள்? ஒருவேளை அவளுக்குக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியிருக்குமோ? ஆராதனாவைப்போல குழந்தைகளை விரும்புகிறவளா அவள்? இதென்ன கேள்வி? குழந்தைகளை விரும்பாதவர் யார்? ஆனால் ஆராதனா போல ஒருநாளும் வெளிக்காட்டியதில்லை. அவளுடைய வீட்டில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த அந்தக் குழந்தைப் பிள்ளையின் ஒரேயொரு படத்தைத் தவிர.

இரவு வேண்டாம். அபர்ணாவைப் பகலிலாவது இங்கே அழைத்துவரக் கேட்டிருக்கலாம். வந்திருப்பாளா? வந்திருந்தால் என்ன கதைத்திருப்பாள்? அரங்கனைப் பற்றி..? “அன்றைக்குக் குண்டு வெடிச்சதுக்கு அடுத்தநாள் அவந்தி உன்னோடு கதைச்சவள்தானே?” என்னை நானே கேட்கவேண்டிய கேள்விகளை அவளுடைய குரலில் கேட்கிறேனா? அவளும் கேட்கக்கூடும். கதை அறிகிற ஆர்வம் அவளுக்கு.   

“ம்.. கதைச்சவள்.”

“அவள் ஒரு வலிய பெண்தான்.”

“உண்மைதான். வெடிமருந்துகளோடேயே திரிந்தவள்..”

“நீயும்தானே அருள்குமரன்.”

திடுக்கிட்டான். “நான் எங்கை வெடிமருந்தோட திரிஞ்சன்?”

“இல்லையடா குமரா..” இந்தமாதிரி அபர்ணா அழைப்பதில்லையே.. இது ஆராதனா. இல்லை, அவளுக்கு அருள்குமரன் என்ற பெயரே தெரியாது. “நீயும் ஒரு குண்டுவெடிப்பில் அருந்தப்பில் உயிர் தப்பியிருக்கிறாய். அதைச் சொன்னேன்.”

“ஓ..”

“என்ன ஓ.. அண்டைக்கு நீ படம் பாக்கப் போறதுக்காக பஸ்ஸுக்கு நிண்டாய். ராகுலனும் செந்தூரனும் வரவேண்டி இருந்தது.”

“அவங்கள் வந்தபிறகு கடற்கரைக்குப் போகலாம் எண்டுதான் நினைச்சேன்.”

“ம்.. பயங்கர வெயில் அண்டைக்கு. வாகன நெரிசல். உனக்குத்தான் நெரிசலும் சத்தமும் பிடிக்காதே. அதுவும் பள்ளிக்கூடங்கள் முடியிற நேரம். பள்ளிப் பிள்ளைகளோட ரோட்டு நீளத்திற்கும் பஸ்கள்..”

அன்றைய அனலின் வெப்பம் இருளையும் குளிரையும் சீவியபடி அவனுடைய தலையில் இறங்கியது. கண்களைக் கூசச் செய்கிற வெயில். குழந்தைகள் பாட்டுப் பாடுகின்ற சத்தம்.. இவளுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. என்னை ஒவ்வொரு படியாக இவள்தான் ஏற்றிச் செல்கிறாளா? ‘வாராய்.. நீ.. வாராய்..’ 

“ஒரேயொரு மினிபஸ்.. கல்யாண வீட்டுச் சோடனைகளோடு..”

“ஐயோ.. நிப்பாட்டு. அந்த மினிபஸ்ஸில நானும் ரகு அண்ணனும் பக்கத்துப் பக்கத்தில இருந்தம். அவர்தான் ட்ரைவர். பஸ் முழுக்க வெடிமருந்து. பென்ராஎரித்ரிற்றோல் ரெற்ராநைற்ரேற் தெரியுமா? வெடிச்சால் அந்த இடமே சுடுகாடு.” அருள்குமரன் யாருக்கோ ஒப்பிப்பதைப்போல சொன்னான்.

அன்றைய நாளின் ஒவ்வொரு நொடியும் நினைவிருக்கிறது. அனல் வெயில்.  பஞ்சிகாவத்தைச் சந்தியிலிருந்து மருதானை வீதி வரைக்கும் வாகன நெரிசல். ஊர்ந்து ஊர்ந்துதான் நகர்ந்தன. பள்ளிப் பேருந்துகளில் சிறுவர்கள் ஜன்னல்களில் முகத்தை வைத்து உலகத்தை விசித்திரத்துடன் பார்த்தார்கள். நாங்கள் அந்தச் சிறிய பேருந்தை திருமணச் சோடனைகளால் அலங்கரித்திருந்தோம். பல வர்ண நிறப் பூச்சரங்கள். முகப்பில் Kennedy weds Aaraa என்ற எழுத்துக்கள். உள்ளே இருக்கைகளுக்கு அடியிலேதான் மருந்து, யாராலும் சந்தேகிக்க முடியாதபடி. ரகு அண்ணா வானொலியை இசைக்க விட்டிருந்தார். நெரிசலின் எரிச்சலிலும் ஹோர்ன் சத்தங்களிலும் இசையைக் கேட்க முடியவில்லை. இடையே குறுமறுக்காக ஓடுகிற ஓட்டோக்காரர்கள் வேறு. இவர்களைத் திட்டினால் அவந்தி கோபப்படுவாளோ என்றொரு யோசனை.

ரகு அண்ணா சரேலென்று ‘பிரேக்’ஐ அழுத்தினார். அப்போதே புரிந்துவிட்டது, முன்னாலே ஊர்ந்துகொண்டிருந்த கறுப்பு நிற ஜீப் வண்டியில் எங்களுடைய பேருந்து முட்டிவிட்டது. உண்மையில் தொட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அருகருகாகச் சின்ன இடைவெளியில் ஊர்ந்துகொண்டிருந்ததால் பெரிதாக ஒன்றும் இல்லை. பேருந்தைச் சிறிது பின்னகர்த்தினார். ஜீப்பின் இடது பின் மூலையில்தான் சிறு சிராய்ப்பு. அதுவும் உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ஜீப் வண்டியிலிருந்து ஒருவன் இறங்கிவந்தபோது பேசிச் சமாளித்துவிடலாம் என்றுதான் தோன்றியது. அவன் அரைக் காற்சட்டையும் கையில்லாத பனியனும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தான். கொழும்பு – ஏழு பகுதியில் வசிக்கின்ற பணக்காரர்களைப் போன்ற தோற்றம். நேராக ரகு அண்ணாவின் பக்கமாக வந்தான். ரகு அண்ணா சிரித்து மளுப்பப் பார்த்தார். “மாத்தையா.. சின்னக் காயம்தானே. நாங்கள் கல்யாண வீட்டுக்கு அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். நெரிசல் வேறு. மணமக்கள் காத்துக்கொண்டு நிற்பார்கள். மாத்தையா பெரிய மனதுபண்ணி எங்களை மன்னிக்க வேண்டும்.” அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த மண்டையைப் பிளக்கும் வெயிலில் வாய்ப்புக் கிடைத்தால் எல்லோரையும் கடித்துத் தின்ன வேண்டும்போலத்தான் இருக்கும். “பள்ளயா.. முதலில் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கு. நான் பொலிஸில் சொல்லப் போகிறேன்.”

போக்குவரவு தடைப்பட்டிருந்தது. பின்னால் நின்ற வாகனங்கள் ஒரே நேரத்தில் ஹோர்னை ஒலிக்கச் செய்து களேபரப்படுத்தினார்கள். ரகு அண்ணா என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தார். கண்களில் கெஞ்சல். இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது. கண்ணுக்குத் தெரிகிற பக்கமெல்லாம் பொலிஸ்காரர்கள் நிற்கிறார்கள். இங்கிருந்து போக வேண்டும். நான் பேருந்தின் கதவைத் திறந்து குதித்து இறங்கினேன். ஜீப் வண்டிக்காரனுக்கு அருகாகப் போகவும் ‘நீ யாரடா சின்னப் பையன்?’ என்பதைப்போல பார்த்தான். “மாத்தையா.. உங்கள் கோபம் புரிகிறது.” என்று ஆங்கிலத்தில் ஆரம்பிக்க அந்தப் பார்வை மறைந்து போனது. இடைமறிக்காது செவிமடுத்தான். அவனோடு கூட நடந்து சிராய்ப்புக் காயத்தைத் தடவிப் பார்த்தேன். அது ஒன்றுமே இல்லை. கீறலாகப் பெயின்ற் உரிந்திருந்தது. “மாத்தையாவிற்கு இதெல்லாம் ஒரு செலவே இல்லை, என்றாலும் முழுச் செலவையும் நாங்களே பொறுப்பேற்கிறோம்.” மூன்று ஆயிரம் ரூபாத் தாள்களை எடுத்து நீட்டினேன். அவன் வாங்குவதா விடுவதா என்பதைப்போல பார்த்துக்கொண்டு நின்றான். நிச்சயமாக வாங்கியிருப்பான், ரகு அண்ணா மட்டும் அந்த மொக்குக் காரியத்தைச் செய்யாமல் விட்டிருந்தால்.

எங்களுக்கு முன்னால் திடீரென்று வாகன நெரிசல் குறைந்தது. வெளித்த மாதிரி வீதி. ரகு அண்ணா பேருந்தை முன்னோக்கிச் செலுத்தத் தொடங்கினார். நான் திகைத்துப் போய்விட்டேன். அவரைப் பார்த்தபோது பதறுவது முகத்திலேயே தெரிந்தது. ஜீப் வண்டிக்காரனுக்குத் தலைக்கேறிய கோபம். “வேசிக புத்தா’ என்று என்னைப் பார்த்துக் கத்தியவன், பேருந்துக்குப் பின்னாலேயே ஓடிப்போய் பக்கவாட்டில் அடித்தான். “நிறுத்தடா..” ரகு அண்ணா என்னைப் பற்றிக் கூட யோசிக்கவில்லையா? பேருந்து வேகம் எடுத்தது. வண்டிக்காரனுக்கு எங்கிருந்துதான் அந்த யோசனை வந்ததோ? ஓடிச்சென்று வீதிப் பாதுகாப்பிலிருந்த பொலிஸ்காரனிடம் முறையிட்டான். பொலிஸ்காரன் சற்றும் தாமதிக்கவில்லை. மோட்டார் சைக்கிளை உதைத்து முறுக்கி நூறு மீற்றர் தூரத்தில் போய்க்கொண்டிருந்த பேருந்தை முந்திச் சென்று குறுக்காக நிறுத்தினான். பின்னாலேயே ஜீப் வண்டிக்காரனும்..

ஏதோ கனவுபோல எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டு நின்றேன். பள்ளிக்கூடப் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து என்னைக் கடந்தது. உள்ளே ஒரே சிரிப்பும் கும்மாளமும். வெளியே தலையை நீட்டி கை அசைக்கிறார்கள். காகிதத் தாள்களில் செய்த விமானங்கள் வெளியே பறக்கின்றன.  சரியாக பொலிஸ்காரனைத் தாண்டுகிற நேரம், அவன் எங்களுடைய பேருந்தினுள் ஏறினான். ஓரிரு நிமிடங்கள்தான். காலம் உறைந்ததைப்போல தோன்றிற்று. என்னைச் சுற்றிய எல்லாச் சத்தங்களும் அமிழ்ந்துவிட்டன. அந்தத் திசையையே பார்த்துக்கொண்டு நின்றேன். நூறு மின்னல்கள் வெட்டிய வெளிச்சம். பேருந்து வெடித்துச் சிதறியது.

யாராவது உதைந்து விட்டார்களா..? அப்படித்தான் பேருந்து நிறுத்தக் கண்ணாடித் தடுப்பில் மோதுப்பட்டு விழுந்தேன். கண்ணாடிகள் சில்லுச் சில்லாக நொருங்கி எனக்கு மேலேயே கொட்டுப்பட்டன. எங்கும் சா ஓலம். ரத்த வெடுக்கு. சற்று முன்னர் பாட்டுப் பாடிய குரல்களின் கூக்குரல்கள். வெடி மருந்தின் நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. வாயில் எச்சில் வழிகிறது. கையை அசைக்க நினைக்கிறேன். இயலவில்லை. மூளை திணறுகிறது. நித்திரையில் திடீரென விழிப்புத் தட்டும்போது இப்படி நடந்திருக்கிறது. அந்நேரங்களில் ‘செத்துவிட்டேனோ?’ என்று பயந்திருக்கிறேன். இப்ப உண்மையாகவே செத்துவிட்டேனா? அழுகுரல்களும், அம்புலன்ஸ் வண்டிகளின் இரைச்சல்களும் மெல்ல மெல்ல அமிழ்கின்றன. அம்மா.. ஆராதனா.. ரொக்கெட்.. பெத்தம்மா.. ராகுலன்.. செந்தூரன்.. பாபிலோனா.. அமலி அக்கா.. சரவணபவன்.. யாரோ என்னைச் செக்கில் இட்டு நெரிக்கிறார்கள். முதுகிலிருந்தும், இடுப்பிலிருந்தும், தொடையிலிருந்தும் இரத்தத்தைப் பிழிகிறார்கள். உடலைக் கவிழ்த்துக் கிடந்தேன். வலது கை வயிற்றின் கீழே சிக்கியிருந்தது. ஓர் இரவுத் திருவிழாவில் தனியே தொலைந்துவிட்டதைப்போல தோன்றியதுதான் என்னுடைய கடைசி நினைவு.

யாரது படிகளில் தடதடவென்று இறங்கிப் போவது? இருட்டென்பதால் யாரென்று தெரியவில்லை. ‘அபர்ணா..’ என்றெழுந்த குரல் அனிச்சையாக அடங்கியது. இங்கே நிற்க வேண்டாம். பயமாக இருக்கிறது. நானும் இறங்கிச் சென்றுவிட வேண்டும். ஏன் திடீரென்று வானம் வெளிக்கிறது? அதற்கிடையில் விடிகிறதா? ஏரியின் முடிவில் எழுந்த மலை உச்சிகளில் வெளிச்சம் திரள்கிறது. கீலம் கீலமான ஒளிக்கதிர்கள். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அது மேற்கு வானம் அல்லவா? ‘அம்மாவைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அம்மாவை வெறுக்கக் கூடாது.’ இப்பொழுது ஏன் இதை அபர்ணா சொல்கிறாள். ஒருவேளை அது அம்மாதானா? இந்தப் படிகள் இறங்கிக்கொண்டே இருக்கின்றனவா.. நிலத்தின் கீழே ஓர் அதளபாதாளத்திற்குள்.. இப்போது பட்டப்பகல் போல வெளிச்சம். நிமிர்ந்து பார்த்தான். வெளிச்சம் என்றால் உற்சாகம் அல்லவா? இது வெளிச்சம் இல்லை. இருட்டின் கருமை காணாமல் போயிருக்கிறது. படிக்கட்டுக்கள் தெரிந்தன. இறங்கலாம் என்று யோசித்தபோது தலைக்கு மேலே சூரியனை யாரோ துவக்கால் சுட்டுவிட்டார்கள். அது நீர் நிரப்பிய பலூன்போல ஒளியைச் சிந்திவிட்டு இருண்டு போனது. இனி எப்படி இறங்குவது? அவன் நினைவாலயத்தின் ஐங்கோணத் தூண்களுக்கிடையில் சுற்றிச் சுற்றி நடக்கலானான். இப்போது ஆராதனாவிற்கு எல்லாம் தெரிந்திருக்கும். அன்றைக்கு முப்பது குழந்தைகள் செத்துப் போனார்கள். அவளுக்குத்தான் குழந்தைகள் என்றால் போதுமே.. ‘நீயும் ஒரு குழந்தைதான்.’ என்று எத்தனை தடவைகள் சொல்லியிருக்கிறாள். என்னை நானே கொன்றேனா? இடது கையை உயர்த்தி அதையே வெறித்தான். குற்றமற்ற கை என்றா சொன்னார் அற்புதம்? இல்லை. இது நஜிபுல்லாவின் கை!

அருள்குமரன் குளிராடையைக் கழற்றி இடுப்பளவுச் சுவரில் வைத்தான். தடித்த சப்பாத்துகளிலிருந்து கால்களை விடுவித்தான். ஆழமாக மூச்சை இழுத்தான். குளிர்ந்த காற்று உள்ளே நிரவிற்று. நிச்சலனமான ஓர் அமைதி. அலையும் எண்ணங்கள் மெல்ல மெல்லத் தணிகின்றன. வெறுமையான மனம். ஒருவிதமான நிதானம். பாதுகாப்புச் சுவரில் கைகளை ஊன்றி நின்றான். கீழே, அடி ஆழத்தில் தெருவிளக்கின் சோர்வுற்ற ஒளியில் எகெரி ஏரி கரைகளில் தளும்பியது. நடுவே இருள்படுக்கையைப் போன்ற நீர்ப் பரப்பு. தொலைவில் இருளில் நிழலாக மலை முகடுகள்..

பார்ப்பதற்கு அப்படியே ஆப்கானிஸ்தானின் வரண்ட மலைகளைப் போல.. அப்பால் காடுகளும் வயல்களுமா? ஒரு கிராமம் கூட இருக்கிறது. நடுவே தப்புத் தண்ணீரோடு ஒரு குளம். எகெரி ஏரிதான் சுருங்கிக் குளமாகிவிட்டதா? இல்லை. இது ஆனைமடுவ! அந்தச் சிங்களக் கிராமம். குளக்கரையில் இரண்டு மான்கள் நிற்கின்றன. கலையும் பெட்டையும் முகத்தை முகத்தை முட்டிக்கொண்டு ஏதோ சேட்டை. குளத்தின் ஓரமாக உயர்ந்த வரப்பில் ஓர் ஓட்டோ நிற்கிறது. தண்ணீரில் பிழிந்த துண்டால் ஓட்டோவைத் துடைத்துக்கொண்டு நிற்பது பிரியந்த தானே.. உள்ளே அவந்தி உட்கார்ந்திருக்கிறாளா..? அவள் கலகலவென்று சிரிப்பது கேட்கிறது. அவள் உயிர்த்திருக்கிறாள். உயிர்த்திருக்கும்போது இந்த உலகம் ஒரு பரிசென்று அவளுக்கு இப்போது தெரிந்திருக்குமா? திடீரென்று மனம் நிறைகிறது. அவள் சிரிக்கட்டும். சிரித்துக்கொண்டே இருக்கட்டும்.

அருள்குமரனும் சிரித்தான்.

– முற்றும் –

கருத்துகள்

உங்கள் கருத்தை எழுதுங்கள்