Uncategorized
September 1, 2026 · ◷ 2 நிமிட வாசிப்பு

அஷேரா – 24

தலைக்குத் தோய்ந்துவிட்டு உடலைத் துவட்டியபடி குளியல் அறையிலிருந்து அற்புதம் வெளியேறினார். அவர் பயன்படுத்திய போர்வையையும் தலையணை உறைகளையும் துவைப்பதற்காகக் கூடைக்குள் அடைந்துகொண்டிருந்த அருள்குமரன் அவரை நிமிர்ந்து பார்த்தான். நெஞ்சிலும் வயிற்றிலும் அம்மிக் கல் பொளிந்த மாதிரி அம்மைத் தழும்புகள். பாவம். அம்மைப் புண்கள் ஈர முத்துக்களாக பரவியிருந்தபோது படுக்கையில் அசையக்கூட அவரால் இயலவில்லை. அவ்வளவு எரிவு. மெல்லத் தடவினாலே உடைந்து சீழ் கசியும். இதமான சுடுநீரில் நனைத்த துணியால் அருள்குமரன் ஒத்தி ஒத்தி எடுத்தான். “உன்னைச் சரியாக் கஸ்ரப்படுத்துறன்.” அற்புதம் வருந்தினார்.

“அதொண்டுமில்லை.”

“இந்தக் கைலியை உரிந்துவிட்டு பனிக்குள்ள புதைஞ்சி கிடக்க வேணும்போல கிடக்கு. அந்தளவுக்கு எரியுது.”

“இன்னும் ஒருகிழமையில எல்லாம் ஆறிவிடும்.”

“அதுக்குமுதல் ஆணி அடிச்ச மாதிரி உடம்பு முழுக்க ஓட்டை போட்டுவிடும்.”

ஒருநாள் அறைக்குள்ளிருந்து ‘தொம்..தொம்’ என்று ஏதோ சுவரில் இடிக்கிற சத்தம். அருள்குமரன் பதறியடித்துக்கொண்டு ஓடினான். அற்புதம்தான் தலையைப்போட்டுச் சுவரில் மோதிக்கொண்டிருந்தார். நெற்றி கொப்புளம்போல வீங்கிவிட்டது. பத்து நகங்களிலும் இரத்தம். அம்மைப் புண்ணைப் பிராண்டியிருக்கிறார்போல. அவரை இழுத்துக் கட்டிலில் உட்கார வைத்தான். நெஞ்செல்லாம் சீழ். “என்ன இது? ஏன் இப்பிடிச் செய்யிறீங்கள்?” அருள்குமரன் கோபத்தை அடக்கிக்கொண்டுதான் கேட்டான்.

“பின்னை என்னடா..? ஒவ்வொரு இடமாத் துரத்திக்கொண்டிருந்த காலம், கடைசியில இந்த வீட்டுக்குள்ளயும் வேலை இடத்தில எண்டாலும் விட்டு வைச்சிருந்தது. இப்ப.. இந்த ஒற்றைக் கட்டிலில.. இந்தப் பக்கம், அந்தப் பக்கம் கூட அசைய முடியாமல்.. இதென்ன மயிர்ச் சீவியம்..”

அவர் அம்மைப் புண்களுக்காக வருந்தியதைப்போல தெரியவில்லை. அதைவிடவும் பெரும் பாடுகளைக் கடந்தவர் அவர். ஆனால் திடீர் திடீரென உருவாகும் தன்னிரக்கத்தில் அழுந்துகிறபோது இப்படியான காரணங்களைச் சொல்கிறார். அவருடைய மொத்த வாழ்க்கையையுமே கிழித்துப் போட்டுவிட்டார்கள். இப்படி யோசிக்கின்றபோது அருள்குமரனுக்குப் பதற்றமாகிவிடும். கிழித்துப் போட்டுவிட்டார்களா? போட்டுவிட்டோமா? ஒருவேளை என்னுடைய அக்கறைக்கும் பரிவுக்கும் பின்னால் இருப்பது நான் குற்றமற்றவன் என்று நிறுவும் ஆதங்கம்தானா? நானா? நாங்களா? அருள்குமரன் எத்தனையோ முறை அவரிடம் “என்னை மன்னித்துவிடுங்கள்.. மன்னித்துவிடுங்கள்.” என்று கதறியிருக்கிறான். என்னையா? எங்களையா? ஆனால் அவர் “உயிர்போனாலும் உங்களை மன்னிக்கமாட்டேன்.” என்றுதான் ஒவ்வொரு முறையும் சொன்னார். அந்நேரத்தில் அவரை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட வேண்டும் என்றும் தோன்றும்.

அற்புதம் தேம்பி அழுதார். அந்தக் குள்ளமான, தடித்த மீசை வைத்திருக்கிற, தலையில் மயிர் உதிரத் தொடங்கிய மனிதன் அப்படி அழுவதைக் காண பொறுக்க முடியவில்லை. அருள்குமரன் அவரைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவர் ஒருபாடு அழுது தீர்த்தபிறகுதான் அமைதியானார். “என்னைப் பத்திரமாப் பார்த்ததுக்கு மெத்தப் பெரிய நன்றியடா. நீ இல்லையெண்டால் கஸ்ரப்பட்டிருப்பன்.” என்றார்.

“அப்பிடி எல்லாம் இல்லை. நான் இல்லையெண்டாலும் யாரோ ஒருத்தர் வந்திருக்கத்தான் வேணும். அதுக்குப் பெயர்தான் காலம். யாருக்குத் தெரியும்? அது ஒரு ஆமிக்காரனாகக் கூட இருந்திருக்கலாம்.” அருள்குமரன் புன்னகைத்தான்.

“ஆமிக்காரனோ?” அற்புதம் வெடுக் என்று கேட்டார். அவனுடைய கையைப் பிடித்து “டேய்.. இது குற்றமில்லாத உன்ர கை. அதைப்போய் ஆமிக்காரனோட ஒப்பிடுறாய்?”

கருத்துகள்

உங்கள் கருத்தை எழுதுங்கள்