அஷேரா நாவல்
August 28, 2026 · ◷ 4 நிமிட வாசிப்பு

அஷேரா – 23

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் தேர்தல் பிரச்சார மேடையில் குண்டு வெடித்துவிட்டது என்ற செய்தியை அருள்குமரன் பார்த்துக்கொண்டிருந்த ‘மர்மதேசம்’ தொடருக்கு நடுவில் திடீரென்று ஒளிபரப்பினார்கள். இரவு பத்து மணியிருக்கும். இப்பொழுதுதான் வீட்டுக்கார அம்மா ‘சித்தி’ நாடகம் பார்த்துவிட்டு தூங்கப் போயிருந்தாள். நல்ல வேளை, அவள் இருந்திருந்தால் பதற்றமாக இருந்திருக்கும். இப்போதுகூட அப்படித்தான் இருக்கிறது. பதற்றமா? மனச் சோர்வா? ஏதோ இனம் புரியாத மன அலைவு. புகை மூட்டமான எண்ணங்கள்.. அவன் அவந்தியைத்தான் சட்டென்று நினைத்தான். அவளுடைய முகம்தான் செய்தியைக் கேட்டதிலிருந்து அலைவிக்கிறது.  ரூபவாஹினி, சுவர்ணவாஹனி, சிரச என ஒவ்வொரு தொலைக்காட்சிகளாக மாற்றிக்கொண்டே இருந்தான். அத்தனையிலும் இதேதான் செய்தி.. நேரடிக் காட்சிகளோடு..

நீல வர்ணத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடை. அதே நிற பலூன்கள் கொத்துக் கொத்தாக கம்பங்களில் அசைகிறன. சேலையுடுத்திய வேட்பாளர் ஒற்றைக் கையை உயர்த்தி சனங்களுக்கு அசைத்தவாறே மேடையிலிருந்து இறங்கினார். அருகிலேயே ஒரு வெள்ளை நிறக் கார். அதை நோக்கி நடந்தார். அவர் திறந்திருந்த கார்க் கதவை அணுகியபோது செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆளுக்காள் முண்டியடித்தபடி எதையோ கேட்க முற்பட்டார்கள். கார்க் கதவின் பின்னால் நின்றபடி அவர்களைப் புன்னகையோடு செவிமடுத்தார். அந்த நேரத்தில் காரின் பின் பக்கத்தில் ஒரு மின்னல் விழுந்து சட்டென்று புதைந்துவிட்டதைப்போல ஒரு பொறி. அவ்வளவும்தான். அமுங்கிய மாதிரியான ஒரு வெடியோசை. கமெரா கீழே விழுந்திருக்க வேண்டும், சில மணித்துளிகளுக்கு இருட்டாக இருந்தது. சத்தங்கள் கேட்டன. அலறல்கள்.. கூக்குரல்கள்.. நாலா திசையிலும் ஓடுகிற காலடித் தடங்கள்..

இருண்ட தொலைக்காட்சித் திரையில் கடைசியாகக் காரின் பின்புறத்தில் ஒளி எங்கே தெறித்ததோ அங்கேயே அருள்குமரன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவந்தியின் முகம். நாசியில் கந்தக மணம். 

திரையில் மறுபடியும் ஒளி. காரின் கதவு பிய்ந்து கீழே கிடந்தது. திட்டுத் திட்டாக இரத்தம்.. கமெரா அங்குமிங்குமென அலைந்தது. வேட்பாளரைத் தேடுகிறதுபோல. பாதுகாவலர்கள் அவரை ஒரு குழந்தையைப்போல பொத்தி வைத்திருந்தனர். குளிருக்கு நடுங்குவதைப்போல உட்கார்ந்திருந்தார். முகத்தில் இரத்தம் ஊறுகிற துணி. வெளிச்சம் பட்டபோது வேண்டாம் வேண்டாம் என்று கை அசைத்தார்.   

அருள்குமரனுக்குத் திடீரென்று ஓர் ஆசுவாசம். ‘அப்ப அவந்தியும் உயிரோடு இருப்பாள்.’ உண்மையில் அப்படி நம்பத்தான் ஆசைப்பட்டான். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. அந்த ஒளி காற்றில் கலந்ததே.. இருந்தாற்போல அது அவந்திதானா என்ற யோசனை உதித்தது. மறுபடியும் நிம்மதியான உணர்வு. எதற்கும் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி அவளுடைய வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பார்க்கலாமா? மொக்குத் தனமான எண்ணம். நள்ளிரவு ஒரு மணி ஆகிவிட்டது. தூரத்தில் எங்கோ அம்புலன்ஸ் வண்டியின் அலறல். ஏன் எனக்கு நினைவைப் பிசைகிறது? அவளை முதன்முதலாகச் சந்தித்தபோதே இது தெரிந்ததுதானே? என்றாவது ஒருநாள் இல்லாமல் போய்விடுவாள். இன்றைக்கு முழு உண்மையாக அதை எதிர்கொள்ளும்போது தாங்க முடியவில்லை. அந்த ஒடுங்கிய முகத்தின் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை.

போன ஞாயிற்றுக்கிழமை அவளைக் கடைசியாகச் சந்தித்திருந்தான். ஒரு சிறு குறிப்புக் கூட அவள் உணர்த்தவில்லை. வேறு எதையோதான் கதைத்துக் கொண்டிருந்தாள். கார்மென்ட்ஸ் வேலை முடிந்து திரும்பும்போது சில சமயங்களில் இரவு பதினொரு மணி ஆகிவிடுமாம். நாய்கள் துரத்த சட்டையை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரே ஓட்டமாக வந்துவிடுவாளாம். அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது வீட்டுக்கார மாத்தையா எதேச்சையாக வருவதைப்போல உள்ளே வந்து ஒருமுறை பத்திரிகையையும் இன்னொருமுறை சாப்பாட்டுத் தட்டையும் எடுத்துக்கொண்டு போனான். அவந்தி கண்களால் சாடை காட்டினாள். “நோனா, அத்தம்மாவைக் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி போயிட்டாங்கதானே.. வீட்டில யாருமில்ல.. அதுதான்போல மாத்தையா குட்டிபோட்ட பூனை மாதிரி சுத்திச் சுத்தி வாறாருபோல..” கலகலவென்ற சிரிப்பு.

அவளுடைய முகபாவங்களில் இன்னமும் மாம்பழக் கீலங்களை ஒளித்துவைத்துத் தின்ற சிறுமியைத்தான் பார்க்க முடிகிறது. சிறுவர் இல்லத்தில் யாரோடும் கதைக்காமல் ஒதுங்கியிருக்கின்ற தோற்றம். சீருடையோடும் துப்பாக்கியோடும் கற்பனை செய்யவே முடியவில்லை. ஒருமுறை இதைச் சொன்னபோது “இது மட்டும் பொபி அக்காக்குத் தெரிஞ்சால்.. நீங்கள் மன்னிப்புக் கேட்கும்மட்டும் கத்துவா.. தெரியுமா?” என்றாள்.  

அருள்குமரன் புறப்படுவதற்குத் தயாராகினான். “அடுத்த கிழமைக்கு நான் பதுளை போறேன். அங்காலேயும் போவேனோ தெரியாது.” “சரி.” அவள் ஈரத் துணியால் முகத்தை அழுத்தித் துடைத்தவாறே தலை அசைத்தாள். கலைந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். அவன் கதவைத் திறந்தபோது அவளும் கூட நடந்தாள். சிரிப்பு வந்தது. “அந்த அண்ணாவின் ஓட்டோவில் ஏத்திவிடப் போறீங்கள். அப்பிடித்தானே? நீங்க நில்லுங்க. நானே ஏறிப் போறேன். ஆனால் என்னட்டைக் காசை வாங்கச் சொல்லி அவரிட்டச் சொல்லுங்க.” அவள் அதைச் சட்டை செய்யவில்லை.

“ஒரு நாளைக்குக் காசு வாங்காவிட்டால் அவர் ஒன்றும் குறைஞ்சுபோய் விடமாட்டார்.”

தெரு முனையில் அந்த அண்ணனைக் காணவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் இதே இடத்தில் பேருந்திலிருந்து இறங்கியபோது அவனைக் கண்டிருந்தான். ஓட்டோவில் சாய்ந்துநின்று யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தான். கைவிரல் இடுக்கில் இரண்டாக மடிக்கப்பட்ட சிங்களப் பத்திரிகை. புறங்கழுத்தைச் சுற்றிக் கைக்குட்டை. சிகரெட் பழக்கத்தில் கறுத்த உதடுகளும் நெடுநாள் தாடியுமாக ஓர் அலட்சியமான தோற்றம். பெயர் பிரியந்த என்று அவந்தி ஒருநாள் சொல்லியிருந்தாள். ஆனைமடுவ என்ற சிங்களக் கிராமத்தைச் சேர்ந்தவனாம். அது எங்கேயோ தொலை தூரத்தில் காடுகளுக்கும் வயல்களுக்கும் குளங்களும் நடுவில் இருந்தது.   

எல்லா நாட்களிலும் இல்லை. அவந்திக்குத் திடீரென்று தோன்றுகிற நேரங்களில் அருள்குமரனை பிரியந்தவின் ஓட்டோவில் ஏற்றி அனுப்புவாள். பிரியந்தவிற்குத் தமிழ்த் திரைப்படங்களில் நிறைய ஆர்வம் இருந்தது. புதிய படங்களைப் பற்றி ஆர்வத்தோடு கேட்பான். ரஜனி ரசிகன் போல. பாட்ஷா படத்தை பத்துத் தடவைகள் பார்த்திருந்தானாம். அவன் தலைமுடியைக் கோதுகிறபோது அருள்குமரன் அவதானித்திருக்கிறான், ரஜினியின் பாதிப்பு இருக்கத்தான் செய்தது.

அவந்தி பிரியந்தவைத் தேடினாள். அலைந்தன கண்கள். “ஒருவேளை நான் வாறதைக் கண்டவுடன் ஓசியில போறவன் வாறான் எண்டுட்டு ஓடிட்டாரோ?” அருள்குமரன் சிரித்துக்கொண்டே கேட்க அவள் ‘உர்..’ என்று முறைத்தாள். “இல்லை. ஏதாவது அவசர ஓட்டம் வந்திருக்கும். வருவார்.”

“பரவாயில்லை. நான் பஸ்ஸிலயே போறன். நீங்கள் போயிட்டு வாங்க.”

“இப்ப என்ன அவசரம்? கிணத்துக் கட்டில பிள்ளைய வளர்த்திட்டா வந்தீங்கள்?” அவளுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும்.

“இல்லை.. நீங்களும் இந்த வெயிலுக்குள்ள..” அருள்குமரன் சமாளிக்கப் பார்த்தான்.

“வெயில்.. கடல்.. காடு எல்லாம் கடந்து வந்தவள்தான். இது ஒன்றுமே இல்லை.”

அவளுடைய சிடுசிடுத்த முகம், பிரியந்த வந்தபிறகுதான் தணிந்தது. அருள்குமரன் ஏறவும் “தள்ளி இருங்க. நான் கடைக்குப் போக வேணும். உங்களோட வந்து இறங்கிறன்.” என்றபடி ஏறி உட்கார்ந்தாள். கடை வாசலில் இறக்கிவிட்டுப் போனார்கள். அருள்குமரன் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை, என்றாலும் கை அசைத்துக்கொண்டு நிற்பாள் என்று தெரியும்.

அன்றைக்குத்தான் அவளைக் கடைசியாகப் பார்த்தது. ஆனால் அடுத்த ஞாயிறும் அவளைச் சந்திக்குமாறு அவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஓ.. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. பொறி தட்டியதுபோல நிமிர்ந்து உட்கார்ந்தான். தூலமான உண்மை எதுவென்று நாளைக்கே தெரிந்துவிடும். வெளியே நிலமைகள் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும். 

கருத்துகள்

உங்கள் கருத்தை எழுதுங்கள்