“அரங்கன் வந்திட்டார்.” என்றாள் அபர்ணா. அதற்குப் பிறகும் அவள் ஏதோ பேசிக்கொண்டுதான் போனாள், சிறு சலனம் கூட இல்லாமல். அருள்குமரனுக்குத்தான் சட்டென்று இழை அறுந்துவிட்டதைப்போல தோன்றிற்று. அவன் வெறுமனே காதில் தொலைபேசியைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றான். அது எப்பிடிச் சாத்தியம்? மின்னாமல் முழங்காமல் எல்லாமுமே ஓய்ந்துவிட? வெளியே இருட்டியிருந்தது. நான்கு மணிதான். மதியத்திலிருந்து பனி வேறு கொட்டுகிறது. ஐன்னலால் வெளியே பார்த்தான். பண்ணைக்குப் போகும் வழியில் இலைகள் உதிர்ந்த மரத்தைச் சுற்றி நீலமும் ஊதாவும் பச்சையுமென வண்ண விளக்குள் ஒளிர்ந்தன. நாளைக்குக் கிறிஸ்துமஸ். அபர்ணாவோடு கறுப்பு மாதா தேவாலயத்திற்குப் போக நினைத்திருந்தான். இன்னமும் கேட்கவில்லை. தேவாலயத்திற்கு வேண்டாம், நினைவாலயத்திற்குப் போகலாம் என்றும் இடையில் ஒரு யோசனை. முன்னரும் ஒரு முறை கேட்டிருந்தான். அவள் பகிடியாக “வாராய்.. நீ வாராய்.. என்று கூட்டிக்கொண்டு போய் தள்ளிவிடப் போறியா?” என்றாள். இனி ஒன்றுமே இல்லை. சட்டென்று ஒரு நாளிலே எல்லாமுமே அமிழ்ந்து விடுமா? விம்மலான உணர்வு அவனில் குமைந்தது. எல்லாமுமே என்றால்.. என்னதான் எல்லாமுமே? தன்னைத் தானே கேட்டான். பரிவு.. அக்கறை.. கருணை.. பாசம்..
அப்படியென்றால் அன்றைக்கு அவளுடைய வீட்டில் நடந்தது..? அப்படியென்ன பெரிதாக நடந்துவிட்டது? அவள் என்னுடைய நெற்றியில் கை வைத்து வருடிக்கொண்டிருந்தாள். நான் அவளுடைய மடியில் கிடந்தேன். திடீரென்று மூர்க்கம் பெற்றவனாக அவளுடைய மார்புகளுக்கிடையில் முகத்தைப் புதைத்து நான் ஏன் அழுத்தினேன்? அவள் ஏன் கைகளால் என் முதுகைக் கோர்த்துக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்? அதற்குப் பிறகு முகத்திலும் கழுத்திலும் முத்தங்களைப் பரிமாறத் தொடங்கியது நானா? அவளா? அந்த வேகமும் மோகமும் என்னுடையதா? அவளுடையதா? ஒரு தேவ கணத்தில் சிலிர்த்துக்கொண்டே சுதாகரித்து உடல்களை விலக்கிக் கொண்டது நானா? அவளா? அதற்குப் பிறகு ஒரு வார்த்தைதன்னும் பேச முடியாமல் விக்கித்துப் போயிருந்தது எனக்கா? அவளுக்கா?
அன்றைக்கு அபர்ணா எதுவும் பேசவில்லை, அருள்குமரனும் எழுந்து வந்துவிட்டான். அவர்களை ஏதோ ஒன்று தடுத்துவிட்டது, ஆனால் நிச்சயமாக அது குற்ற உணர்ச்சி இல்லை என்று அவனுக்குத் தெரியும். அதுவே பெரிய ஆசுவாசமாக இருந்தது. அதற்கடுத்த நாட்களில் அபர்ணா கூட ஒரு சில வார்த்தைகளுடன் அதைக் கடந்துவிட்டாள். “அப்பிடியொண்டு நடந்திருக்கத் தேவை இல்லை. மறந்துவிடு.”
மற்றதெல்லாம் அன்பும், கருணையும், பரிவும் என்றால் இது என்ன? ‘வெறும் தவறுதானா?’ இருக்கக் கூடும். அதனால்தான் ‘அதை மறந்திடு.’ என்றபோது வராத குமைச்சல் ‘அரங்கன் வந்திட்டார்.’ என்றபோது வருகிறதா? அவள் அப்படிச் சொன்னபோது எனக்கு என்ன தோன்றியது? ‘அவன் ஏன் வந்தவன்?’ என்ற கேள்வி தொண்டைக் குழி வரைக்கும் வந்தது. நிறுத்தி எச்சிலை விழுங்குவதைப்போல உள்ளே தள்ளினான்.
ஒருவேளை அபர்ணாவே அரங்கனை அழைத்து வந்திருப்பாளா? அன்றையை சம்பவத்திற்கும் அவனை அழைத்து வந்ததிற்கும் தொடர்பு இருக்குமா? அவள் தனக்குத் தானே காவல் போடுகிறாளா? ஆனால் இடையில் நான்கு மாதங்கள் இருந்ததே.. அருள்குமரனால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. இதுதான் கடைசி அழைப்பா? இனி என்னைக் கண்டால் விலகிப் போவாளா? அவளைக் காணும் போதெல்லாம் நான் என்ன செய்ய வேண்டும்? யாரோபோல “வணக்கம், நல்ல நாளாகட்டும்.” என்றுதான் சொல்ல வேண்டுமா? அரங்கனோடு கண்டால் அதைக் கூடச் சொல்ல முடியாது.
அன்றைக்கு அரங்கனைப் பற்றி ஆலோசனை மையத்தில் முறையிட்டபோது அபர்ணாவுடைய குரல் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது. இன்றைக்குச் சிரத்தையே இல்லை. ‘அவன் போவான்.. வருவான்.’ என்ற மாதிரி சாதாரணமாகக் கடந்து போனாள். வேண்டுமென்றுதான் அப்பிடிச் செய்கிறாளா? உண்மையில் அவள் அப்படிச் சொன்னபோது ‘அடுத்த நிமிஷமே அவனை வெளிய போ.’ என்று விரட்டிவிட்டேன் எனச் சொல்வாள் என்றுதான் அருள்குமரன் எதிர்பார்த்தான். அவள் “அரங்கன் வந்திட்டார். நீ சொல்லு.. அற்புதம் அண்ணனுக்கு எப்பிடி இருக்கிறது?” என்றாள்.
அற்புதத்திற்கு அம்மைப் புண்கள் காய்ந்து உதிரத் தொடங்கியிருந்தன. அபர்ணா இரண்டு நாட்களுக்கு முன்னர் அழைத்தபோது கூட “ரெண்டு மூண்டு நாளில அவர் தலைக்குத் தோயலாம். நீ கவனமா இரு. திங்கட்கிழமை உன்னை வேலைக்கு வரச் சொல்லியிருக்கிறாங்கள்.” என்று சொன்னாள். இத்தனை நாட்களாக அவள்தான் காய்கறிகளையும் பாற்பெட்டிகளையும் வாங்கிவந்து படிக்கட்டில் வைத்துவிட்டுப் போகின்றாள். மூன்று நாட்களுக்கு முன்னர் இளநீர் போத்தல்களையும் வைத்திருந்தாள். உனக்கும் சேர்த்துத்தான் வாங்கியிருக்கிறேன் என்று குறும்செய்தி வந்தது.
அற்புதத்திற்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. “யாரடா இந்த அபர்ணா.. அட்சய பாத்திரத்தில பிச்சை நிறைகிற மாதிரி தந்துகொண்டே இருக்கிறாள்.” என்று கேட்டார். அவருக்கு அவள் யார்? என்ன? என்றெல்லாம் தெரியாது. பகிடியாக “கல்யாணக் கார்ட் தாறநேரம் சொல்லுவம் எண்டு நினைக்காதை.” என்று சிரித்தார். அருள்குமரன் உணர்ச்சிகளற்ற முகத்தோடு அவரைப் பார்த்தான். யாரோ இரண்டு பேரைப் பற்றி அவர் பேசுகிறார் என்பதைப்போன்ற பார்வை. அவரை நிராகரிக்கும் பதற்றமோ ஏற்றுக்கொள்ளும் துள்ளலோ இல்லாமல் வெறுமையாக இருந்த மனது இன்றைக்கு ஏன் இப்பிடி உழல்கிறது? நல்லவேளையாக இதைத் தொலைபேசியில் சொன்னாள். நேரில் என்றால் சண்டையில் முடிந்திருக்கும். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டான். ‘குளிருக்கு ஒரு கதகதப்புத் தேவையாத்தான் இருக்கு.. என்ன?’ கேலியாகக் கேட்டிருப்பான். அவள் வெடுக் என்று திரும்பி அவனைக் கூர்ந்து பார்ப்பாள். ‘ஓம்.. தேவையாத்தான் இருக்கு. அதுக்கு என்ன?’ என்று சொல்லவும் கூடும். அவனுக்கு நாக்கு குழறும். தலை கொதிக்கும். மூளையின் மடிப்புக்களில் அருவருக்கத்தக்க செதில்கள்.. கடைவாயில் குரூரமான புன்னகையை வழியச் செய்வான். ஒருநாள் யாரோ ஆதவனைப் பற்றிச் சொன்னாளே.. பதினொராம் வகுப்பில் அவளோடு படித்தவன். ‘அவன் பார்க்கிறான் எண்டு தெரிஞ்சால் அப்பிடியொரு பரவசம்.’ என்று சொன்னது ஞாபகம் வரும். ‘உனக்கு என்ன? ஆதவன், அரங்கன், அருள்குமரன்..’ முடிக்க விடமாட்டாள். யாரும் பார்க்கிறார்களா என்று அக்கம்பக்கம் தலையைத் திருப்பிவிட்டு அமிழ்ந்த குரலில் ‘வாயைப் பொத்து.’ என்பாள். வார்த்தைகளில் ஏறிய கோபத்தைத் தணித்து முகத்தில் எள்ளலைப் படரவிடுவாள். ‘நீங்கள் எதிர்பார்க்கிறதை நான் வாழ்ந்து காட்டேலாது.’

திடீரென்று மூச்சுத் திணறுவதுபோல படபடப்பு. எங்கோ காற்றில்லாத வெளியில் கேட்பதைப்போல அபர்ணாவுடைய குரல். “அற்புதம் அண்ணனுக்குச் சுகமாகிவிட்டதா எண்டு கேட்டன்.” அவள் மறுபடியும் கேட்டாள். உண்மையாகவே அரங்கன் வந்ததை அந்த இரண்டு வார்த்தைகளிலேயே கடந்து போய்விட்டாளா? அருள்குமரன் குரலைச் செருமினான். “அதைச் சொல்லத்தான் காலையில் போன் பண்ணினேன். நீதான் ஏதோ பிசியாக இருந்தாய்.” சொற்கள் முருங்கை மரத்தில் ஏறுகின்றன. இந்த உரையாடலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அபர்ணா “ம்..” என்றாள். “கையில் ஒரு வேலையாக இருந்தேன். பிறகு போன் பண்ண வேணுமெண்டு நினைச்சிட்டு மறந்துவிட்டேன்.”
அரங்கன் காலையிலேயே வந்துவிட்டாரா என்று கேட்கவேண்டும்போல தவிப்பாக இருந்தது. வேண்டாம். பேச்சை நீட்டிக்கக் கூடாது. இன்னும் இரண்டொரு வார்த்தைகளில் துண்டித்துவிட வேண்டும். “நான் திங்கள்கிழமை வேலைக்குப் போகத்தான் வேணுமா? நாலைஞ்சு நாள் கழிச்சுப் போகலாம் எண்டு நினைக்கிறன்.”
“இல்லை. நீ போ. பிறகு வேலைக்கு ஏதாவது பிரச்சனை ஆகிடும்.” அவளுடைய குரல் கட்டளை இடுகிறது. முரண்டு பிடிக்க வேண்டும்போல தோன்றியது. “அம்மை வருத்தம் எனக்குத் தொற்றியிருந்தால் இப்போதைக்குத் தெரிய வராது. ரெண்டு மூண்டு நாள் ஆகும். அதனாலை இப்போதைக்குப் போக முடியாது. நீ வேலையிடத்தில் வெள்ளிக்கிழமை வாறன் எண்டு சொல்லிவிடு.” அவள் சம்மதித்தாலும் மறுத்தாலும் கதையை இத்தோடு நிறுத்த வேண்டும்.
“உனக்குத் தொற்றியிருக்காது. நீ அவருக்குப் பக்கத்தில போகாமல் கவனமாத்தானே இருந்தனி?”
“இல்லையே.. நான்தானே அவருக்கு சாப்பாடு தீத்தினது.. உடுப்பு மாத்தினது.. குளிக்க வார்த்தது..” இதைக் கேட்கிறதுபோது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்ற நம்பினான். அதில் ஒரு திருப்தி. அது சரிதான்போல. அபர்ணா கொஞ்ச நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. அமைதி. அதை உடைத்துக்கொண்டு சொன்னாள். “நீ போ.. அல்லது போகாமல் விடு.. உன்ர விருப்பம். நான் வேலையிடத்தில சொல்ல மாட்டன். நீயே சொல்லு.”
“ஏன்? இவ்வளவு நாளும் நீதானே சொன்னனி?”
“அரங்கன் கூப்பிடுகிறார். நான் வைக்கிறன்.” அம்மைப் புண்ணை அழுத்தி உடைப்பதைப்போல அவள் தொடுதிரையை அழுத்தி அழைப்பைத் துண்டித்திருக்க வேண்டும். அருள்குமரன் நிலைகுலைந்து போனான். எதிர்பார்க்கவே இல்லை. அவளுடைய குரல் மறுபடியும் கேட்கும் என்பதைப்போல தொலைபேசியைக் காதில் வைத்தபடியே நின்றான். ‘அரங்கன் கூப்பிடுகிறார். நான் வைக்கிறேன்.’ நான்கே வார்த்தைகள். கத்தரித்து விட்டதைப்போல வைத்துவிட்டாள். கை கால்கள் நடுங்கத் தொடங்கின. பொத்தென்று தரையில் உட்கார்ந்தான். ‘அரங்கன் கூப்பிடுகிறார். நான் வைக்கிறேன்.’ அழுகை உடையப் பார்த்தது. உதடுகளைக் கடித்து நிறுத்த முயற்சித்தான். முடியவில்லை. அழுகை கீச்சிட்ட குரலில் வெளியேறியது. கண்ணீர் நிறைந்துவிட்டது. இரண்டு கைகளாலும் வாயைப் பொத்தினான். ‘அரங்கன் கூப்பிடுகிறார். நான் வைக்கிறேன்.’ தரையை ஓங்கி அறைந்தான். உள்ளங்கை நொந்தது. தவழ்ந்து நகர்ந்து சுவரில் சாய்ந்தான். மொத்தக் காற்றையும் யாரோ உறிஞ்சிவிட்டதைப்போல மூச்சுத் திணறியது. ‘அரங்கன் கூப்பிடுகிறார். நான் வைக்கிறேன்.’ நாற்றச் செதில்கள் முளைக்கத் தொடங்குகின்றன. ‘அரங்கன் கூப்பிடுகிறார். நான் வைக்கிறேன்.’ வெளிச்சத்தைக் குளிர் தின்றுவிட்டது. ‘அரங்கன் கூப்பிடுகிறார். நான் வைக்கிறேன்.’ ஒரே இருட்டு. ‘அப்பன்.. வெளிய போய்க் கொஞ்ச நேரம் நில்லுங்கோ. அம்மா மாமாவுக்கு மருந்து போட்டுவிட்டு வருகிறேன்.’
அருள்குமரன் ஓவென்று அலறத் தொடங்கினான்.
கருத்துகள்