கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன் யார்? “அதுக்குப் பிறகு நீ யாரோ.. நாங்கள் யாரோ.. உனக்காக நாங்கள் உரிமை கோர முடியாது. எப்பவாவது கைதிகளைப் பரிமாறும்போது கூட பட்டியலில் உன்ர பெயரைச் சேர்க்க முடியாது.” கடல் தாண்டும் முன்னர் சொல்லப்பட்டவற்றை நினைத்துக் கொண்டான். இதையே நினைத்துக் கொண்டிருந்தால் முகத்தில் காட்டிக் கொடுத்துவிடும். உண்மையில் பயப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. ஓர் ‘உறுப்பினன்’ என்பதைத் தாண்டி அவனுக்கும் எதுவும் தெரியாது. போகிறான். இனித்தான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவரும். அதுவரை அவனும் நாடு திரும்பிய ஓர் அகதிதான்.
விமான நிலையச் சடங்குகள் இலகுவாக முடிந்தன. ஒரு முஸ்லீம் குடிவரவு அதிகாரிதான் வரவேற்றார். அவனைப்பற்றி முன்னரே அறிந்திருந்தாரா இல்லையா என்பது இன்றுவரை சந்தேகமாக இருக்கிறது. அவர்தான் அவனை அழைத்துப் போக வந்தவர்களுக்குத் தகவல் சொல்லியிருக்க வேண்டும். எந்தச் சந்தேகமும் வராத கச்சிதமான தொடர்புகள். அவர்கள் அருள்குமரனை அழைத்துப்போய் மட்டக்குளிய என்ற இடத்தில் ஒரு வீட்டில் விட்டார்கள். அது வயதான தமிழ்த் தம்பதிகளின் வீடு. பிள்ளைகள் எங்கெங்கோ போய்விட தனிக் கட்டைகளாக இருந்தார்கள். கணவர் முன்னர் அரச சுங்க வரித் திணைக்களத்தில் வேலை செய்தவராம். இப்போது ஓய்வு. இரண்டு பேருமே அளவாகத்தான் பேசினார்கள், ஆனால் மரியாதையாக. அந்த அம்மா காலையில் தேநீரைப் போட்டுக்கொண்டு படியேறி அவனுடைய அறைக்கே வந்துவிடுவாள். பாவம், பருத்த உடம்பு, ஏறச் சிரமப்படுவாள். “அன்ரி.. கஸ்ரப்பட வேண்டாம். நான் வந்து எடுக்கிறன்.” என்று சொல்லித் தடுத்தான்.
இரண்டாவது வாரத்தில் பள்ளிக்கூடத்தில் சேர வேண்டியிருந்தது. ஒரு பாதுகாப்பிற்குத்தான். படிக்கிற மாதிரி நடித்தால்போதும். அங்கேயே தேசிய அடையாள அட்டையும் கிடைத்தது. பெரிய நிம்மதி. அது இல்லாமல் கொழும்பில் திரியவே முடியாது. பேருந்துகளை அடிக்கடி சோதனைச் சாவடிகளில் நிறுத்துவார்கள். பொலிஸில் பதிவு செய்த வதிவிட உறுதிப் பத்திரத்தையும் அடையாள அட்டையையும் வரிசையில் நின்று காட்ட வேண்டும். கொழும்பு அடையாள அட்டைகளை ஆமிக்காரர்கள் அவ்வளவாக நோண்டுவதில்லை. முதற்பக்கத்திலேயே ஒன்று என்ற இலக்கத்தைப் பார்த்துவிட்டுக் கொடுத்துவிடுவார்கள். யாழ்ப்பாணம் என்றால் நான்கு என்று இருக்கும். அவர்களைத் துருவித் துருவி விசாரிப்பார்கள். “ஏன் இங்க வந்தது?” “எப்ப வந்தது?” “எப்ப போறது?” ஆயிரத்தெட்டுக் கேள்விகள். அப்படியிருந்தும் குண்டுகள் வெடிக்கத்தான் செய்தன.
ஐந்தாறு மாதங்களுக்கு அருள்குமரன் பள்ளிக்கூடத்திற்குப் போவதும் திரும்புவதுமாகவே இருந்தான். அவனுக்கும் அது ஏன் என்று தெரியும். ‘சோதனைக் காலம்.’ பரவாயில்லை, ஆனால் படிப்புத்தான் அறவே மண்டையில் ஏற மாட்டேன் என்றது. இடையில் ஓரிரு வருடங்களைத் தொடராமல் திடீரென்று பாய்ந்து உயர் தர வகுப்பில் உட்கார்ந்தால் இப்படித்தான். “யாரடா உனக்கு அட்மிஷன் தந்தது?” என்று ஆசிரியர்களே கேட்டார்கள். அவர்களுக்கு அலுத்துவிட்டது. “சரி. ஒரு ஓரமாக இருந்திட்டுப் போ..” என்ற கணக்காக அவனைக் கைவிட்டார்கள். அவமானமாகத்தான் இருக்கும். ‘இரவோடு இரவாக எல்லாவற்றையும் முதலே இருந்து படித்து நாளைக்கே நான் யாரென்று காட்டுகிறேன்.’ என்று சில சமயங்களில் யோசிப்பான். அவனுக்கே சிரிப்பு வரும்.
கொழும்பு மழைக்கு நேர காலம் இல்லைப்போல. அது நினைத்த போதெல்லாம் பெய்து தொலைத்தது. மட்டக்குளிய முன்னர் கடல் முகத்துவார நிலமாக இருந்திருக்க வேண்டும், மழை பெய்தால் சேறும் சகதியுமாக ஆகிவிடும். பெரிய அரியண்டம். அன்றைக்கும் மழை ஆகாயத்தை உடைத்துக் கொட்டிக்கொண்டிருந்தது. வீட்டுக்கார அம்மா கடிதங்களை எடுத்துக்கொண்டு வந்தாள். அருள்குமரனுக்கும் ஒன்று வந்திருந்தது. மூச்சிரைக்க மூச்சிரைக்க படிகளில் ஏறி அதைத் தந்தாள்.
‘ஆடை ஏற்றுமதி விடயமாக ஒறுகொடவத்தையில் ஞாயிற்றுக்கிழமை அவந்தியைச் சந்திக்கவும்.’
அவந்தி ஒரு சிங்களப் பெண். தொன்னூற்று இரண்டாம் வருடம், யாழ்ப்பாணத்தில் ஒரு கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான ஆதரவற்ற சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறி புலிகளோடு போய்ச் சேர்ந்து கொண்டபோது அவளுக்கு வயது பதினைந்து.
0
ஞாயிற்றுக்கிழமை. அளுத்மாவத்த வீதியில் ஓரிரு பெட்டிக் கடைகளே திறந்திருந்தன. பெரிதாகச் சன நடமாட்டம் இல்லை. பேருந்துகளும் வெறிச்சோடி இருந்தன. வார நாட்கள் என்றால் பயணிகள் பிதுங்கி வெளியே தொங்குவார்கள். மண்டையைப் பிளக்கிற வெயிலில் ஒன்றையொன்றறு முந்துகிற வாகன நெரிசலும், ஒலித்துக்கொண்டேயிருக்கிற ஹோர்ன் சத்தமும், டீசல் புகையும், ஓட்டோக்களில் அலறவிடும் சிங்களப் பாடல்களும், கசகசவென்ற சனப்புழக்கமும்.. ஒரு மாதிரி எரிச்சலாக இருக்கும். நகரச் சூழல் அவ்வளவாகப் பழக்கமில்லை. நாளாக நாளாகத்தான் இயல்பாகும்.
இலங்கை வங்கிக்கு எதிர்ப் புற நிறுத்தத்தில் அருள்குமரன் நின்றான். 178ம் இலக்கப் பேருந்தில் ஏற வேண்டும், அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, இன்னமும் வரவில்லை. சற்று முன்னர் கடந்துபோன 155இல் ஏறியிருக்கலாமோ? அதிலிருந்து இரண்டொரு பேர் இறங்கினார்கள். நடத்துனன் கையை நீட்டி “மல்லி.. கொய்த யன்ன?” என்று கேட்டான். உடனேயே இவன் தமிழ் என்று புரிந்திருக்க வேண்டும். எப்படித் தெரியும்? காதை வைத்து, மூக்கை வைத்துக் கண்டுபிடித்திருப்பானோ? இல்லை. பேந்தப் பேந்த முழிக்கிற கண்ணே காட்டிக்கொடுத்துவிடும். “எங்க போறது?” என்றான். ஒறுகொடுவத்தவுக்குத்தான் போக வேண்டும், ஆனால் இந்தப் பேருந்தில் ஏற வேண்டாம். “கிரான்ட்பாஸ்.” என்று சும்மா ஒரு இடத்தைச் சொன்னான்.
“அப்ப ஏறுங்க.”
ஓ.. இதுவும் அங்கேதான் போகிறதா? “இல்லை.. பிரென்ட்ஸ் வரவேணும்.” இதில் ஏறி ஆமர்வீதிச் சந்தியில் இறங்கி இன்னொரு பேருந்து எடுத்தும் ஒறுகொடவத்தவுக்குப் போக முடியும். ஆனால் ஆமர்வீதியில் ஒரு சோதனைச் சாவடி இருக்கிறது. ஐந்து வாகனங்களில் மூன்றையாவது நிறுத்துவார்கள். இன்னொரு சாவடி மாலுகடையில் இருக்கிறது, அங்கே ஐந்துக்கு ஐந்தையும் நிறுத்துவார்கள். அந்தப் பக்கமே போகக் கூடாது.
அருள்குமரனுடைய நண்பர்கள் வந்தாலும் வருவார்கள் என்றோ என்னவோ, பேருந்து ஓரிரு நிமிடங்களுக்குக் காத்து நின்றது. பிறகு நடத்துனன் சலிப்புடன் மணிக் கயிறை இழுக்கவும் புறப்பட்டுப் போனது. நேரத்தைப் பார்த்தான். பத்து மணிக்கு இருபது நிமிடங்கள்தான் இருந்தன. அவந்தி பத்துக்கு வந்துவிடுமாறு தொலைபேசியில் சொல்லியிருந்தாள். “ஒறுகொடவத்த பஸ் ஸ்ரான்ட்டுக்குப் பக்கத்தில ஒரு ட்ரைட்டல் போன் பூத் இருக்குத்தானே.. அதில நில்லுங்க தம்பி.” அவளுக்கு சிங்களச் சாயலோடு மழலைத் தமிழ்க் குரல். அங்கே வைத்தே கடிதத்தைத் தருவாளா அல்லது வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போவாளா? அந்தக் கடிதத்தை கொட்டஹேனாவில் இருக்கின்ற தொலைத் தொடர்பு நிலையத்தில் கொடுக்க வேண்டும். அது அங்கிருந்து பதுளைக்குச் செல்லும். அப்படியே அம்பாறை.. மட்டக்களப்பு.. இதே வழியால்தான் லொறிகளும் வருகின்றன, நிரப்பிய வெடி மருந்துகளோடு!
காலடியில் கிறீச் என்ற சத்தத்தோடு ஒரு பேருந்து நின்றது. இலக்கம் 178. தாவி ஏறி ஓட்டுனருக்கு நேர் பின்னே இருந்த இருக்கையில் உட்கார்ந்தான். அங்கிருந்த இரண்டு இருக்கைகளும் புத்த பிக்குகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மதகுருமார்களுக்காக என்று எழுதப்பட்டிருந்தாலும் அவர்களைத்தான் அதிகமும் கண்டிருக்கிறான். வந்தால் எழுந்து இடம் கொடுக்க வேண்டும். இப்பொழுதே பின் இருக்கைகளுக்குப் போவது நல்லது. ஏதாவது வெற்று இருக்கைகள் இருக்கின்றனவா என்று திரும்பிப் பார்த்தான். ஒன்றிரண்டு இருந்தனதான், ஆனால் பக்கத்தில் யாராவது இருந்தார்கள். ‘இருந்தால் எனக்கென்ன?’ என்று போக தயக்கமாக இருந்தது. இப்பிடி ஒதுங்கி ஒதுங்கி இருக்கக் கூடாது. அங்கும் இங்குமாக அசைந்தவாறு ஓடிய பேருந்தின் கூரைக் கம்பியைப் பிடித்துக்கொண்டு பின்னால் சென்று உட்கார்ந்தான். பக்கத்தில் இருந்தவர் சிங்களவராக இருக்க வேண்டும். இடது கையில் வெள்ளை நிற நூல். மெல்லிய தேமாப் பூவின் வாசனை. அடிக்கொரு தடவை கண்கள் சொக்கிப்போய் தலையைத் தொங்கப் போடுவதும் திடுக்கிட்டு விழிப்பதுமாக இருந்தார். அடுத்த நிறுத்தத்தில் ஒரு பிச்சைக்காரன் ஏறினான். ஏதோ சிங்களத்தில் எழுதிய அட்டைகளை ஒவ்வொருவரிடமும் கொடுத்துவிட்டு பாடத் தொடங்கினான். அருள்குமரன் இரண்டு ரூபா நாணயக் குற்றி ஒன்றை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டான். இவன் எதைப் பாடக் கூடும்? ஓர் ஏக்கம் இழையோடுகிற குரல். அவனுடைய வாழ்க்கையைத்தான் பாடுகிறானா? வறுமையை.? நிறைவேறாத காதலை.? இவர்கள் இனவாதத்தைத் தூண்டுகிறமாதிரியும் பாடுவதாக கேள்விப்பட்டிருந்தான். அப்படியென்றால் என்ன பாடுவான்? ‘அம்மா.. தெற்கே சமுத்திரம் பொங்குகிறது. வடக்கே நிலங்களைத் தமிழர்கள் விழுங்கி விட்டார்கள். கால்களை நீட்டி நான் எப்படி நிம்மதியாகத் தூங்குவது?’ என்று சிங்கள இளவரசன் துட்டகைமுனு சிறு வயதில் தன்னுடைய தாயிடம் கேட்டானாம். அதைத்தான் பாடுகிறானா? அவன் அருகாக வந்தான். தலையைச் சரித்து கெஞ்சலாகக் கையை நீட்டினான். ஈரலிப்பான மினுங்கும் கண்கள்.. அருள்குமரன் வேறும் சில நாணயக் குற்றிகளை அவசர அவசரமாக எடுத்து அவனுடைய கையில் திணித்தான். அவன் “ஸ்துதி மாத்தயா” என்று கை கூப்பினான்.
0
கொழும்பு என்றால் உயர்ந்த கட்டிடங்கள், அகன்ற தெருக்கள், வண்ண வெளிச்சங்கள் என்றிருந்த பிரமிப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு ஒறுகொடவத்த வெள்ளத்திற்குள் மிதந்தது. அது சேரிகளாலான ஓர் ஊர். நீண்ட அஸ்பெஸ்ரோஸ் கூரைகளின் கீழே வீடுகள், மாட்டுக் கொட்டில்களைப்போல பிரிக்கப்பட்டிருந்தன. பழைய தகரங்களாலான மறைப்புகள். எங்கோ குப்பை மேட்டிலிருந்து அழுகிய நாற்றம் கசிந்தது. கால்வாய்களில் சேம்பு மதாளித்து வளர்ந்திருந்தது. ஓரிரு பன்றிகள் நிலத்தை முகர்ந்தபடி திரிந்தன. கால்வாய் அடைத்திருக்க வேண்டும், கறுத்த நிறத்தில் கழிவு நீர் வீதிக்கு ஓடி வந்தது. கால்களைக் கவனமாகப் பார்த்து வைக்கும்படி அவந்தி சொன்னாள்.
அருள்குமரன் பேருந்திலிருந்து இறங்கியபோதே அவள் பார்த்திருக்க வேண்டும். அவன் தரையில் காலை வைத்ததுமே சேறு புளிச் என்று தெறித்தது. குனிந்து ஜீன்ஸை முழங்கால் வரை மடித்துவிட்டான். நிமிர்ந்தபோது அவள் சிரித்துக்கொண்டு நின்றாள். நெடு நெடு என்ற தோற்றம். முகத்தில் கண்கள் இரண்டும் வெவ்வேறு திசைகளைப் பார்த்துக்கொண்டிருந்தன. வாக்குக் கண். அடுப்புக் கரி படிந்த சட்டை முழங்கால் அளவுக்கு நின்றது. தலைமயிரை வாரிக் குவித்து உச்சியில் கொண்டை போட்டிருந்தாள். கால்களில் தேய்ந்த செருப்பு. “வழியில ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே..” என்று கேட்டாள். தாளலயமான தமிழ். சிங்கள மழலை.
“இல்லை..” என்றான்.
“சரி.. என்னோட வாங்க.”

அருள்குமரன் அவளைப் பின்தொடர்ந்தான். சற்றுத் தூரத்திற்குத் தெருவிலேயே நடந்து அங்கிருந்து பிரிந்த பாதையில் திரும்பினார்கள். ஏதோ பழைய இரும்புக் கடைகளுக்கு நடுவிலேயே இருப்பதைப்போன்ற வழி. தாழ்வான கயிற்றுக் கொடிகளில் உடுப்புக்கள் காய்ந்தன. குனிந்துதான் கடக்க வேண்டும். எதிர்ப்பட்ட ஓரிருவர் அவந்தியைப் பார்த்துத் தலையசைத்துப் புன்னகைத்தார்கள். பொதுக் கழிப்பறை ஒன்று ஓவென்று திறந்து கிடந்தது. படிக்கட்டை முட்டிக் கொண்டு வெள்ளம். வெள்ளத்தில் உதைந்து சிறுவர்கள் விளையாடினார்கள். எங்கிருந்தோ நூடில்ஸ் அவிகிற வாசனை.
செங்கல் சுவரில் தொங்கிய தகரக் கதவைத் திறந்து அவந்தி உள்ளே வரச் சொன்னாள். நுழைந்ததுமே எட்டுக்கு எட்டடி அறை. இரண்டே இரண்டு பிளாஸ்ரிக் கதிரைகள். ஓரத்தில் சிறிய அலுமாரியின் மேலே குட்டித் தொலைக்காட்சிப் பெட்டி. அதற்கு மேலே ஒரு பூக் கிண்ணம். அருள்குமரன் உட்கார்ந்தான். நேரே கறுப்பு வெள்ளைத் திருமணப் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. இவ்வளவுதானா வீடு? பின்புறத்திலும் ஒரு வாசல். குசினி அந்தப்பக்கமாகத்தான் இருக்க வேண்டும். அங்கே யாரோ ஒரு மூதாட்டி கஸ்ரப்பட்டு இருமி முனகுகிறாள். “அவந்தி.. அவந்தி.. மெகே யென்ன”
“மம யெனவா..” சிங்களத்தில் கூட ஏற்ற இறக்கங்களோடு மழழை ததும்பத்தான் பேசுகிறாள். ஒருவேளை சிங்களப் பெண்கள் எல்லோருமே இப்படித்தான் கதைப்பார்களோ?
அவந்தி அந்த மூதாட்டியோடு பேசுவது கேட்டது. அர்த்தம் தெரியாவிட்டாலும் அவளுக்குக் கனிவு குழைந்த மொழிதான். சற்று நேரத்தில் திரும்பி வந்தாள். உச்சிக் கொண்டை அவிழ்ந்து இரு தோள்களிலும் பரவிக் கிடந்தது. “இவங்க இந்த வீட்டு மாத்தயாட அம்மா. தொன்னூறு வயசு. தசைச் சிதைவு நோயில படுத்த படுக்கையா இருக்கிறாங்க. இவங்க கூட இந்த வீட்ல பேசிட்டு இருக்கிறது நான் மட்டும்தான். அதனால மாத்தயாவும் நோனாவும் என்கூட நல்ல பச்சம். இப்ப ரெண்டு மாசமா நான் கார்மென்ட்ஸில வேலைக்கு போயிட்டு வர்றேன்தானே. நான் வந்ததும் என்னை தன்னோட கண்ணில வைச்சுக்கணும் என்று இவங்களுக்கு ஆசை.”
0
அவந்திக்குப் பன்னிரெண்டு வயது ஆகிற வரைக்கும் அவளுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அப்பா தமிழர், ஹட்டனைச் சேர்ந்தவர். அம்மா தெஹிவளையைச் சேர்ந்த சிங்களவர். அப்பாவுக்குச் சொந்தமாக நிறையத் தொழில்கள் இருந்தன. அது விடயமாக அடிக்கடி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அலைந்து திரிந்தார். அவருடைய நெருங்கிய சொந்தக்காரர்கள் இந்தியாவிலேதான் இருந்தார்கள். எப்போதாவது வீட்டுக்கு வருவார். அவருடைய ஞாபகம் என்பது அவர் கொண்டுவருகிற விளையாட்டுப் பொருட்களும் அம்மாவிற்கு விழுகிற அடி உதையும்தான். சண்டை பிடிக்கிறபோது இரண்டு பேருமே மாறி மாறிச் சிங்களத்தில் கத்துவார்கள். ஆத்திரத்தின் உச்சத்தில் “வாயைப் பொத்தடி வேசை.” என்று அப்பா, அம்மாவை உதைந்து விழுத்துவார். ‘வேசை.’ அவந்திகா அறிந்த முதல் தமிழ்ச் சொல். அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கத் தொடங்கியதுமே அம்மாவின் தாய், அத்தம்மா அவந்தியைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த பன்சலைக்குப் போய்விடுவாள். அங்கே புத்த பிரானின் கண்களில் தவழும் அமைதியையும் சாந்தத்தையும் அவந்தி ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாள். “அப்பாவை இந்தியாவிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.. அம்மாவுக்கு அமைதியைக் கொடுங்கள்” என்று மனம் அவரிடம் மன்றாடும்.
அம்மாவை நோய்கள் தாக்கின. வெகு சீக்கிரத்திலேயே அவள் இறந்துபோனாள். அதற்குப் பிறகு அப்பாவும் வருவதில்லை. அவர் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இவையெல்லாம் எண்பத்து மூன்று இனக்கலவரக் காலத்தில்தான் நடந்து முடிந்தன. அதனால்தான் அப்பா வரவில்லையா அல்லது உண்மையிலேயே தன்னில் பாசமில்லையா என்று இன்றைக்கும் தோன்றுவதுண்டு.
இனக்கலவரம்! அந்த ஞாபகங்கள் அவந்திக்கு உண்டு. தெஹிவளையில் அவளுடைய வீட்டு முற்றத்தில் நின்று பார்த்தபோது கொழும்பு முழுக்க பற்றி எரிவது தெரிந்தது. தெருவோரக் கட்டிடங்களின் மேலே பூதங்களின் நாக்குகள் மாதிரியான நெருப்பு. அத்தம்மா அவந்தியைத் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினாள். இரண்டு புறமும் கரும் புகை எழுந்து வீதியை ஓர் இருண்ட குகையைப்போல ஆக்கிவிட்டிருந்தது. “உன்னுடைய அப்பா இந்தியாவில் இருப்பதுதான் அவருடைய உயிருக்கு நல்லது.” என்று அத்தம்மா சொன்னாள். “யாராவது உன்னுடைய அப்பாவின் பெயரைக் கேட்டால், சொல்லிவிடாதே. அம்மப்பாவின் பெயரைச் சொல்லு. ரட்ணநாயக்க.”
அம்மாவிற்குத் தங்கை முறையான ஒரு தூரத்துச் சித்தியிடம் அத்தம்மா அவந்தியை ஒப்படைத்தாள். ஒரு பாரத்தை இறக்கி வைத்த உணர்வு அவளுக்கு. ஆனால் அன்றிலிருந்து சித்தி வீட்டு வேலைகளின் மொத்த பாரமும் அவந்தியின் தலையில் ஏறியது. அந்த வீட்டில் அவள் ஒரு வேலைக்காரியாகத்தான் வளர்ந்தாள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். கொஞ்சம் அசந்து படுத்திருந்தாலும் தலையில் குட்டு விழும். இரவு மொத்தக் குடும்பமும் சாப்பிட்டுவிட்டு வைத்த பாத்திரங்களைக் கழுவத் தொடங்குவாள். ஒரு சோற்றுப் பருக்கை எங்காவது ஒட்டிக்கொண்டிருந்தால் கூட சித்தி அகப்பைக் காம்பை முதுகிலேயே விசுக்குவாள். அதனாலேயே அவந்தி இரண்டு மூன்று சட்டைகளைப் போட்டுக்கொண்டு தூங்குவதும் உண்டு. அந்தச் சின்ன வயதில் அவளுக்கு வாழ்க்கையைப் பற்றி இவ்வளவும்தான் தெரிந்திருந்தது. தமிழர்களாக இருந்தால் கொல்லப்படுவார்கள். பெண்ணாகப் பிறந்தால் உதைப்பார்கள். வேலைக்காரியாக இருந்தால் அடிப்பார்கள்.
அவந்தியால் எல்லா நேரங்களிலும் வலியைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் ‘அம்மா’ என்று கதறுகிறபோது அத்தம்மா மௌனமாகக் கண்ணீர் சிந்துவாள். அவளுடைய இறுதி நாட்களில் “பெரிய பாரத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு சாகப்போகிறேன்.” என்று அரற்றிக் கொண்டிருந்தாள். அவளைப் புற்றுநோய் பீடித்திருந்தது. கழுத்தில் ஈரப் பலாக்காய் போன்ற கட்டி. ஒருகட்டத்தில் உடைந்து நிணம் வழியத் தொடங்கியது. அவளை மகரம ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் ‘போட்டுவிட்டு’ வரப்போவதாக சித்தி கத்திக் குழறிய அடுத்த நாள் அத்தம்மா செத்துப்போனாள்.
அவந்தியால் தாங்க முடியவில்லை. அத்தம்மாவின் மேலே விழுந்து புரண்டு கதறினாள். அவளுக்கொரு காய்ச்சல் என்றால் யார் இனி புறங்கையால் நெற்றியைத் தொட்டுப் பார்ப்பார்கள்? ‘ஒரு பராக்கிரமபாகு வந்து உன்னை இந்தத் துன்பக் குப்பையிலிருந்து கூட்டிப் போவான்’ என்று யார் சொல்வார்கள்? களனி ஆற்றுக்குள் விழுந்து செத்துவிடலாம்போல இருந்தது. ஒருநாள் பாலம் வரைக்கும் போய்ப் பார்த்தும் இருக்கிறாள். கீழே பெரிய கற்கள் உருண்டு புரள்வதைப்போல ஆறு உருண்டு பிரண்டு பொங்கி ஓடியது. வெள்ளை நுரைகளுக்குள் முதலைகளும் சுறாக்களும் இருக்கும் என்று தோன்றவும் பயந்துவிட்டாள். பரவாயில்லை, சித்தியின் அடியைத் தாங்கிக் கொள்ளலாம். அவள் அவந்தியை அடித்து முறிப்பதை தொழிலாகவே செய்கிறாள். உடல் முழுக்கக் காயங்கள்.. பின் நாட்களில் இயக்கத்தில் இருந்தபோது கூட அப்படிக் காயம் பட்டதில்லை அவள்.
அவந்திக்குப் பதின்மூன்று வயதாகியபோது ஒருநாள் அவள் சித்தி வீட்டை விட்டுத் தப்பி ஓடினாள். எங்கே போவதென்றுதான் தெரியவில்லை. கொச்சிக்கடையில் ஒரு தேவாலயம் இருந்தது. ஒருநாள் முழுக்க அந்த வாசலிலேயே கிடந்தாள். இரவு பசி தின்றது. அவள் பிறந்தபோது பசி, தீக்குச்சியின் குட்டி நெருப்பாக வயிற்றுக்குள் எரியத்தொடங்கி இருக்கவேண்டும். இப்போது எண்ணையூற்றிப் பற்ற வைத்த தீ. மாலை நேர ஆராதனைக்குப் பிறகு பாண் கொடுத்தார்கள். வரிசையில் நின்று வாங்கித் தின்றாள். அவளுக்கு எப்படித் தோன்றியது என்று தெரியவில்லை, வந்தவர்களிடம் பிச்சை எடுக்கக் கை நீண்டுவிட்டது. அதை யாரோ அங்கிருந்த அருட்தந்தையிடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். நீண்ட வெள்ளை அங்கியோடு அவர் அருகில் வந்தார். ‘அடிவிழப் போகிறது’ என்று கண்களை இறுக மூடிக்கொண்டாள். “மகளே.. சாப்பிட்டாயா?” அருட்தந்தைக்கு கருணையுள்ள குரல். அவந்தி தேம்பித் தேம்பி அழத்தொடங்கினாள். “எனக்குப் பயமாக இருக்கிறது. சித்தி கட்டாயம் பொலிஸுக்குப் போவாள். அவர்கள் இங்கே வருவார்கள். என் உடலில் சித்தி மிச்சம் வைத்திருக்கிற இடங்களில் எல்லாம் அடிப்பார்கள். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். எங்காவது கூட்டிப் போங்கள்.”
அதற்குச் சிலநாட்கள் கழிந்து அருட்தந்தை அவளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துப் போனார். யாழ்தேவி ரயிலில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து அவளை விட்டு விலகி ஓடும் தெருக்களையும், பாலங்களையும், நதிகளையும், வயல்களையும், காடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கண்ணில் ஆர்வம், மறுகண்ணில் மிரட்சி. ரயில் எவ்வளவு தூரத்திற்குப் போகிறதோ அவ்வளவிற்கு நல்லது. அவளைத் தேடி சித்தி வரமாட்டாள். யாழ்ப்பாணத்தில் திருச்சபைக்குச் சொந்தமான ஆதரவற்ற சிறுவர் இல்லத்தில் அருட்தந்தை அவளைச் சேர்த்துவிட்டார். அன்றிலிருந்து ஏழாவது நாள் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. சண்டை தொடங்கிவிட்டது. எவ்வளவு பெரிய நிம்மதி. இனி ஒருநாளும் சித்தியால் வர முடியாது. அவந்தி புத்தபிரானை நினைத்துக்கொண்டாள். அவருடைய காலடியில் நூறு மகிழம் பூக்களைத் தூவினாள்.
சிறுவர் இல்லத்தில் சட்டென்று எல்லோரோடும் ஒட்டிப் போக முடியவில்லை. புரியாத மொழி, தெரியாத ஆட்கள்.. அங்கிருந்த பிள்ளைகள் ‘அவந்தி ஒரு புழுந்தி, ஆவென்றால் சிங்களத்தி.’ என்று கேலி செய்தார்கள். அவளுக்குத் திடீர் என்று புழு அரித்ததைப்போல தலைமுடி கொட்டுப்பட்டது. திட்டுத் திட்டாக மண்டை தெரியும். அவளுக்கே அதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். தொற்று வருத்தம் என்று யாரும் பக்கத்தில் வருவதில்லை. அவளுடைய மண்டைக்குள் புழுக்கள் நுழைந்து கண்களால் நெளிந்துகொண்டு வருமென்று ஓங்காளித்தார்கள். தூரத்தில் நின்று கல் எறிந்துவிட்டு ஓடிப் போனார்கள். ஒருகட்டத்தில் அவந்தி அவர்களைத் தேடிப் போய் அடித்தாள். எப்போதும் கையில் ஓர் உடைந்த போத்தலை வைத்திருப்பாள். சமயங்களில் பெரிய சண்டை மூளும். அருட்சகோதரிகள் வந்துதான் தீர்க்க வேண்டும். “அவந்தி எங்களோடை கதைக்கிறேல்லை.” என்று மற்றப் பிள்ளைகள் கோள் மூட்டுவார்கள். “அவளுக்குத் தமிழ் சொல்லிக் குடுக்காதது உங்கட பிழைதான்.” என்று அருட்சகோதரிகள் சொல்வார்கள்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாதத்தில் ஐந்து தடவையாவது விமானத் தாக்குதல் நடக்கும். வாரத்தில் இரண்டு முறையாவது பலாலியிருந்து ஷெல் வீசுவார்கள். நீண்ட தூர ஆட்லறி ஷெல்கள் அவர்களுடைய தலைக்கு மேலாகத்தான் கூவிக்கொண்டு போய் வெடிக்கும். சிறுவர்கள் கத்திக் குழறிக் கூப்பாடு போட்டுக்கொண்டு பதுங்கு குழியை நோக்கி ஓடுவார்கள். அவந்தி மட்டும் அசைவதே இல்லை. கல்லுப்போல உட்கார்ந்திருப்பாள். அருட்சகோதரிகள் கத்துவார்கள். “அவந்தி ஓடி வா..” காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டாள். “எனக்கு ஒன்றும் நடக்காது.”
“ஷெல்லுக்கு தமிழ் ஆளும் சிங்கள ஆளும் ஒண்டுதான். கெதியா வா.” என்று கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டு போவார்கள்.
இப்படித்தான் இரண்டு மூன்று வருடங்கள் தீர்ந்தன. அவந்தி அப்பொழுதுவரை யாருடனும் பெரிதாக ஒட்டிக்கொள்ளவில்லை. அவள் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள், பள்ளிக்கூடத்திற்குப் புலிகள் வந்தார்கள். அவர்கள் பிரச்சாரத்திற்காக அவ்வப்போது வருவது வழமைதான். அன்றைக்கு ‘ஒப்ரேஷன் யாழ்தேவி’ என்ற சண்டைக் காணொளியை தொலைக்காட்சியில் ஓடவிட்டார்கள். அது முடிய கூட்டம் நடக்கும். அவந்தி தொலைக்காட்சியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இரட்டைப் பின்னலிட்ட அக்காக்கள்.. அவர்கள் தூக்கிச் சுமந்த ஆயுதங்கள்.. அவர்களுடைய ஆக்ரோஷம்.. ஏனென்றே தெரியவில்லை, இனம் புரியாத ஓர் ஆசுவாசம். எங்கேயோ சிறகை விரித்துப் பறப்பதைப்போல.. உள்ளே குமுறிக் கொண்டிருந்த களனி ஆறு வழிந்தோடியது. ஆழத்தில் முதலைகளும் இல்லை. சுறாக்களும் இல்லை. கூட்டத்தில் ஒரு புலிப் பெண், அவளுக்கு ஐம்பது வயது இருக்கும், “யாரெல்லாம் இயக்கத்துக்கு வாறீங்கள்?” என்று கேட்டபோது அவந்தி முதல் ஆளாக இரண்டு கைகளையும் உயர்த்தினாள்.
இயக்கத்தில் சேர்ந்த ஐந்தாவது நாளே அவந்திக்குச் சரியான குளிர்க் காய்ச்சல். கைலியைத்தான் போர்த்துக்கொண்டு படுத்திருந்தாள். பற்கள் கிடுகிடுத்தன. உடம்பு நடுங்கியது. கண்களைத் திறக்க முடியவில்லை, எரிவு. அரற்றினாள்.. ஏதேதோ வார்த்தைகள், தமிழும் சிங்களமுமாக.. யாரோ நெற்றியைத் தொட்டுப் பார்த்தார்கள். நீள விரல்களை உடைய மிருதுவான கை அது. “அதொண்டுமில்லை. நாளைக்கே மாறிடும். நான் இப்ப தண்ணியைத் தோய்ச்சு நெத்தியில ஒத்தடம் குடுத்துவிடுறன்.” என்றவளை அவந்தி திரும்பிப் பார்த்தாள். அவள் நிலாமதி.
தொன்னூற்று ஐந்தாம் வருடம் ஆனி மாதம் ஏழாம் திகதி கிளிநொச்சி உமையாள்புரத்தில் காவலில் இருந்தபோது அவந்தியின் மடியிலேயே செத்துப் போன கப்டன் நிலாமதி.
0
அவந்தி “ரீ போடுறேனே..” என்றபோது அருள்குமரன் மறுத்தான். “இல்லை, வேண்டாம் இன்னொரு நாளைக்கு.”
வாசல் கதவைத் திறந்துகொண்டு யாரோ வர பின்னாலேயே வெளிச்சமும் கொஞ்சம் நுழைந்தது. அவர் அருள்குமரனை ஏறிட்டுவிட்டு அவந்தியின் பக்கம் திரும்பினார். அவள் ஏதோ சொன்னாள். அதில் ‘மல்லி’ மட்டும் புரிந்தது. தம்பி என்கிறாள். இனிமேலும் தாமதிக்காமல் சிங்களத்தைப் படிக்க வேண்டும். இரண்டு பேர் சிங்களத்தில் கதைக்கும்போது நடுவில உட்கார்ந்திருப்பது பெரிய அந்தரம். சில நேரம் பதற்றமாகவும் இருக்கிறது. மட்டக்குளியில் கிழவி ரீச்சர் என்ற ஒரு பெண்மணி சிங்கள வகுப்புகளுக்கு நல்ல பிரபலம். அவளுக்கு தமிழும் சரளமாகப் பேச வரும். எதையும் முகத்தில் அடித்தால்போல கதைக்கின்ற சுபாவம். அருள்குமரன் அவளிடம் போய் “எனக்கு சிங்களம் எழுதவோ வாசிக்கவோ வேண்டிய தேவை இல்லை. கதைக்க மட்டும் படிப்பிக்க முடியுமா? அவசரம்.” என்று ஒருநாள் கேட்டாள். கிழவிக்குக் கோபம் வந்துவிட்டது. கம்பாயத்தை உதறிக்கொண்டு எழுந்தவள் “அதுக்கு நீ இங்க வரவேண்டாம். யாராவது ஒரு சிங்களத்தியைக் கல்யாணம் கட்டு. வெளிய போ.” என்று துரத்திவிட்டாள். இனி வேறு யாரையாவதுதான் தேட வேண்டும்.
அவந்தி ‘மல்லி’ என்று சொன்னதும், அவர் மறுபடியும் அருள்குமரனை ஏற இறங்கப் பார்த்தார். சிங்கள நாடகங்களில் வருகிற ஊர்ச் சண்டியரைப்போன்ற தோற்றம். ஏறிய நெற்றியில் படிய வாரிய முடி எண்ணைய்ப் பசையில் மின்னியது. இரு புறமும் கூரிய மீசை. வெறித்த பார்வையால் அருள்குமரனுக்குத் தலை அசைத்துவிட்டு உள்ளே போனார்.
‘இவர் யார்?’ என்பதைப்போல அருள்குமரன் அவந்தியைப் பார்த்தான். “இவர்தான் மாத்தயா.. இந்த வீட்டுக்காரர்.” அவளுடைய குரல் முன்னரை விடவும் தணிந்திருந்தது. “இந்தச் சேரிக்குள்ள மாத்தையாவும் நோனாவும்தான் பெரிய ஆட்கள். மாத்தையாக்கு எல்லா அரசியல்வாதிகளையும் தெரியும். பொலிஸ்காரங்களே பயப்படுவாங்க. எலக்சன் காலத்தில மாத்தையா யாரை சொல்றாரோ.. அவருக்குத்தான் இங்க இருக்கிற சனங்க வோட்டுப் போடுவாங்க.. என்னோட ஐடென்ரி கார்ட், பெர்த் சேர்டிபிகேட், பொலிஸ் பதிவு எல்லாம் இவர்தான் எடுத்துத் தந்தது.”
“நல்லவரா?” அருள்குமரன் சட்டென்று இடைமறித்தான்.
அவந்தி மெலிதாகச் சிரித்தாள். “அவர் ஒரு ஆம்பிளதானே.. அதில தமிழ் எண்டும், சிங்களம் எண்டும் வித்தியாசம் இல்லைத்தானே.. ஆனா ஒண்ணு. அவரோட நல்ல மனசுக்கு நானே மயங்கிக் கிட்ட வருவேன்னு எதிர்பார்க்கிறாராக்கும். அப்பிடிப் பார்த்தா அவர் நல்லவர் தானே.. என்ன..? செத்துப்போன என்னோட அத்தம்மா சொல்லுவாங்க.. எல்லா ஆம்பிளைகளுமே வாசல் கதவைத் தட்டித்தான் பார்ப்பாங்களாம். அவங்கள அங்க வைச்சே பேசி அனுப்புறதா.. உள்ள கூப்பிட்டு கதிரையில உட்கார வைச்சு பேசுறதா.. அறைக்குள்ள கூட்டிட்டுப் பேசுறதா.. இதெல்லாம் பொண்ணோட தீர்மானம்தானாம்.” அவந்தி சிரிக்கத் தொடங்கினாள். “ஆனால் பொண்ணுங்க ஒருநாளும் பேசாமல் அனுப்பியதில்லையாம்.”
அருள்குமரனுக்கு ‘குப்’ என்று முகம் கறுத்துப் போனது. அமலி அக்காவின் ஞாபகம், எங்கோ ஆழத்தில் புதைந்துகிடந்துவிட்டு எழுந்தது. ‘பெயர் அன்ட் லவ்லியின் வாசனை.’ வேர்த்துப் போனான். இரண்டு கைகளாலும் முகத்தை அழுத்தித் துடைத்தான். ‘அவந்தி என்ன செய்திருப்பாள்?’ மூளைக்குள் நாற்றச் செதில்கள். ‘அவள் கதவைத் திறந்தால் என்ன? மூடினால்தான் எனக்கென்ன?’ என்று யோசித்தும் சமாதானம் ஆகவில்லை. சஞ்சலமாகவே இருந்தது. இதுவும் நடவடிக்கைதானா..? வேண்டாம். இந்த எண்ணமே வேண்டாம். இங்கிருந்து போய்விட வேண்டும். இட்டுமுட்டான இந்த அறையிலிருந்து வெளியேறி தெருவின் பரபரப்பிற்குள் கலந்து பேருந்தில் ஏறிவிட்டால் கவனம் சிதறிவிடும். இந்த முறை 178ம் இலக்கத்தை தவிர்க்க வேண்டும். ஆமர்வீதிக்குச் செல்கிறதிலேயே ஏறலாம். அந்தச் சந்தியில்தான் ஜனாதிபதி பிரேமதாசா செத்துப் போனார். ஒரு மே தின ஊர்வலத்தில் சைக்கிள் குண்டுதாரி ஒருவன் அவருடன் மோதினான். ஏனோ தெரியாது, பிரேமதாசா நல்லவர் என்ற மாதிரியான ஓர் எண்ணம் சிறு வயதில் அவனுக்கு இருந்தது. அக்காலங்களில் அவருடைய சனசக்தித் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடு கொடுப்பதைப்போன்ற சித்திரங்களை வரைந்து பரிசுகளும் வாங்கியிருக்கிறான்.
அவந்தி உறையிடப்படாத ஒரு கடிதத்தை அருள்குமரனிடம் கொடுத்தாள். “வாங்க.. நான் ஓட்டோ பிடிச்சு விடுறேன். அதில போங்க.” என்றவள் அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் நடந்தாள்.
ஏதோ மாயம் நிகழ்ந்ததைப்போல வெள்ளம் வடிந்திருந்தது. கால்வாயில் நீர் பாயும் சத்தம். அவந்தி தெரு முனையில் நின்ற ஓட்டோக்காரனிடம் நேராகப் போனாள். தலையை உள்ளே நீட்டி ஏதோ கதைத்தாள். படுக்கையில் கிடந்த மூதாட்டியிடம் பேசியதைப்போலவே இணக்கமான குரல். அருள்குமரனிடம் திரும்பி “ஏறுங்க.” என்றாள். “அளுத்மாவத்தயில இறக்குவார். இறங்கி நீங்க நடந்து போங்க. காசு கொடுக்க வேணாம். நான் பாத்துக்கிறேன்.” புறப்பட்டபோது கையை அசைத்துக்கொண்டே நின்றாள். பதிலுக்கு ஓட்டோகாரன் தலையை வெளியே நீட்டி ‘ரஜினிகாந்த்’போல கையை விசுக்கி அசைத்து நெற்றியில் வைத்தபோது அவளுடைய முகத்தில் வெட்கம், விஷம்போல பரவியது.
அருள்குமரன் அதைப் பார்த்தான்.
0
உமையாள்புர முன்னரங்குக் காவலரண். மண் மூட்டைகளாலும் தென்னை மரக் குற்றிகளாலும் ஆக்கப்பட்ட கூண்டு. நிலாமதி ஆசுவாசமாக மண் மூட்டையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். நீட்டிய கால்களில் ஒரு குழந்தையை வளர்த்தியிருந்ததைப்போல துப்பாக்கி. வலது முழங்காலுக்குக் கீழே சீருடை கிழிந்திருந்தது. அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தாள். ‘இரவு சென்ரி மாறேக்கை முதல் வேலையாக இதைத் தைக்க வேணும்.’ நேற்று இரவிரவாகப் பேய் மழை பெய்தது. காவலரண் முழுக்கச் சேறும் சகதியும். இனி வெயில் ஏறத்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் காயும். அவளுக்குப் பசித்தது. காலை உணவு வந்துவிட்டிருந்தபோதும் இன்னமும் சாப்பிடவில்லை. பொதிகள் பிரிக்கப்படாமல் பக்கத்திலேயே கிடந்தன. பதினொரு மணி ஆகப் போகிறது.
“அவந்தி.. என்ர சிறுகுடலை பெருங்குடல் தின்னுது. உன்ர கோபத்தை ஒரு பக்கத்தில வைச்சிட்டு சாப்பிட வாறியா? இல்லையா?” என்று கேட்டாள். அவந்தி அவளைப் பொருட்படுத்தவே இல்லை. திரும்பிக் கூடப் பார்க்காமல் காவலரணுக்கு வெளியே தீவிரமாக வெறித்துக்கொண்டிருந்தாள். சும்மா நடிக்கிறாள் என்று தோன்றியது. இன்றைக்கு ‘ஒருநாள் போர் நிறுத்தம்’ என்று சாப்பாடு கொண்டுவந்தவள் சொல்லியிருந்தாள். வருடா வருடம் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நாளில் இப்படியொரு ‘மோதல் தவிர்ப்பு’ வரும். செஞ்சிலுவைச் சங்கத்தினர் எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி ஏற்பாடு செய்துவிடுவார்கள். அவந்திக்கும் அது தெரியும், என்றாலும் ‘அந்தா ஆமிக்காரன் வந்துவிட்டான்.’ என்ற மாதிரியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘நடிப்புச் சுந்தரி.’
“அப்பிடி என்னத்தையடி பாக்கிறாய்?” நிலாமதி அவளுக்கு அருகாக வந்து வெளியே பார்த்தாள். விசரி, வெறும் பனையோலை வேலியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இந்த நிலம் முன்னர் யாருக்காவது சொந்தமாக இருந்திருக்க வேண்டும். நல்ல செம்பாட்டு மண். சோலையாக மாமரங்கள். தூரத்தே எல்லையில் பனையோலை வேலி, அதைத் தாண்டி வெறும் தரிசு வயல். யாருக்கும் சொந்தமற்ற சூனிய நிலம். அப்பால் இராணுவ முன்னரங்கு நிலைகள் ஆரம்பித்தன. அவர்களும் நீண்ட மண் அணைகளும், பதுங்கு குழிகளும் என பலமாகத்தான் இருந்தார்கள்.
அணில் அரித்த மாம்பழம் ஒன்று பொத் என்று முன்னால் விழுந்தது. அவந்தி இப்போது அதை எடுக்க ஓடுவாள். அவளுக்கு மாம்பழமென்றால் அவ்வளவு ஆசை. அதுவும் கறுத்தக் கொழும்பான் என்றால் கேட்கவே வேண்டாம். அவள் யாழ்ப்பாணத்திற்கு வந்த பிறகுதான் அந்த ருசியைத் தெரிந்து கொண்டாளாம். சிறுவர் இல்லத்தில் காலையில் புட்டும் மாம்பழமும் கொடுக்கிற நாட்களில் புட்டை மட்டும் மள மளவென்று தின்றுவிட்டு மாம்பழக் கீலங்களை கடதாசியில் சுற்றி ஒளித்து வைப்பாளாம். அன்றைக்கு முழுக்க ஒவ்வொன்றாகத் தின்ன வேண்டும். அதனாலேயே அவளுக்குக் கறுத்தக் கொழும்பி என்றும் பெயர். இந்த மாம்பழக் கெடு இயக்கத்திற்கு வந்த பிறகும் தொடர்ந்தது. இந்த வளவில் கனிந்து விழுகிற மாம்பழங்களை ஒரு சாகசக்காரியைப்போல தவழ்ந்து சென்று நிலாமதி எடுத்துவந்து கொடுப்பாள். அவந்தி ஒன்றையும் மிச்சம் வைக்க மாட்டாள். ஒரு பேச்சுக்குக் கூட நிலாந்தியிடம் சாப்பிடுகிறாயா என்று கேட்பதில்லை. நிலாந்திக்கும் கனிந்த மாம்பழங்களில் ஆர்வம் இல்லை. எப்போதும் பச்சை மாங்காய்தான். “பால் ஊறுகிற மாங்காயைக் கல்லில குத்திப் பிளந்து உப்பும் தூளும் தொட்டுச் சாப்பிட்டுப்பார்.. ஐந்து ஆமிக்காரனைச் சுட்ட இன்பம். ஏறிப் பிடுங்கித் தரவா?” என்று கேட்பாள்.
“நீ ஏறி நிற்கிறநேரம், ஆமிக்காரன் உன்ர நெத்தியிலேயே சுடுவான். பரவாயில்லையா?”
இரண்டு பேரும் மாறி மாறி சிரித்துக்கொள்வார்கள். இன்றைக்குக் காலையில் கூட பகிடியும் பம்பலுமாகத்தான் ஆரம்பித்தது. அவர்களுடைய அணியில் இருந்த ஒருத்தி யாரையோ காதலிப்பதாக பொறுப்பாளருக்கு அறிவித்திருந்தாள். அவன் கடற்புலிகளில் இருக்கின்றானாம். “இந்தக் கடற்புலிக்காரங்க இரவில கூட கடல்லதான் பாயைப் போட்டுப் படுக்கிறாங்க. அப்பிடியிருக்க இவள் எங்க அவனைக் கண்டிருப்பாள்?” என்று அவந்தி கேட்டாள். நிலாமதி அதை அலட்டிக்கொள்ளவில்லை. அவந்தியைத்தான் சீண்டத் தொடங்கினாள். “அது ஏன் உனக்கு? நீ இயக்கத்துக்கு வந்து இப்பதான் மூண்டு வருசம் முடிஞ்சிருக்குது. இன்னொரு மூண்டு வருசம் போகட்டும். பிறகு கல்யாணம் கட்டலாம்.”
அவந்தி பொய்யாகக் கோபப்பட்டாள். ஈரம் ஊறிய கறையான் புற்றை அள்ளி நிலாந்தியில் எறிந்தாள். “நான் கேட்டேனா? கல்யாணம் கட்டக் கேட்டேனா?”
“சரி.. கோபப்படாதை. உனக்கெண்டு ஒரு பண்டார வன்னியன் வராமலா போய்விடுவான்?”
“அத்தம்மா சொல்லுவாங்க.. பராக்கிரமாகுதான் வருவான் என்று.”
“அடி சக்கை.. அப்படியெண்டால் பண்டாரவன்னியனுக்கும் பராக்கிரமபாகுவுக்கும் ஒரு பெரும் சண்டைக்கு இடமிருக்கு.”
அவந்தி சிரித்ததில் புரக்கேறியது. போத்தலைத் திறந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்தாள். “பண்டார வன்னியன் நல்ல வடிவா?” கண்களில் குறும்பு கொப்பளிக்கக் கேட்டாள்.
“பாத்தியே.. உனக்குப் பண்டார வன்னியன் எண்டால் யாரெண்டு சொல்லித் தரேல்லை. ஆனால் எங்களுக்குப் பராக்கிரமபாகுவைப் பற்றிப் படிக்கச் சொல்லுறாங்கள். இதனாலதான் இந்த நாட்டில..” நிலாமதி ஆரம்பித்ததுமே அவந்தி நாக்கை வெளியே தள்ளி கண்களை மேலே செருகி செத்துப் போனதைப்போல அபிநயித்தாள். “மகே.. அம்மே..” நிலாமதி இப்படி ஏதாவது கதைக்கத் தொடங்கினாலே எல்லாத் தோழிகளும் இப்படித்தான் நடித்துக் காட்டுவார்கள். ஒருமுறை ஓர் ராணுவ வீரன் இவளிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டானாம். இவள் அவனை நிற்க வைத்து வரலாறும் அரசியலும் படிப்பித்தாளாம். அவன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ‘நங்கி, தயவு செய்து என்னைச் சுட்டுக் கொல்லு.. இப்பிடிப் பேசிக் கொல்லாதே..” என்று கெஞ்சினானாம். இப்படியொரு கதையை தோழிகள் பரப்பிவிட்டிருந்தார்கள். நிலாமதிக்கு வரலாற்றில் நிறைய ஆர்வம். அவள்தான் சேகுவெரா யார் என்று அவந்திக்குச் சொன்னாள். இயக்கத்தில் இணைந்த காலங்களில் தோழிகளுடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் உண்டாகிவிடும். ‘என்ன இருந்தாலும் நானொரு சிங்களத்திதானே.. இந்த மண்ணுக்குச் சொந்தமில்லைத்தானே..’ என்று ஒதுங்கி இருப்பாள். நிலாமதிதான் ஒரே ஆறுதல். அவள் கையைப் பற்றிக்கொண்டு “உனக்குத் தெரியுமா? சேகுவெராவும் கியூபாவுக்குச் சொந்தமில்லாத ஆள்தான்.” என்று சொல்வாள். அர்த்தங்கள் சரிவரப் புரியாவிட்டாலும், கண்களில் அறிவு ஒளிருகின்ற, குட்டியான தேகத்தைக் கொண்ட, வாத்தைப்போல நடக்கின்ற அந்தப் பெண் தன்னுடைய ஆத்ம நண்பி என்பதில் அவந்திக்கு நிறையப் பெருமை.
இரவு மழையினால் விநியோக வழிகளில் வெள்ளம் நிறைந்திருக்க வேண்டும். காலைச் சாப்பாடு பத்து மணிபோலதான் வந்தது. அதைக் கொண்டு வந்தவளின் சீருடையெல்லாம் சேறு. “போலியோ மருந்து கொடுக்கிறதுக்காக இண்டைக்கு மட்டும் போர் நிறுத்தமாம்.” என்று அவள் சொன்னாள். நிலாமதி ஆச்சரியத்தோடு “அதுக்குச் சந்திரிக்கா ‘ஓம்’ எண்டு சொன்னாவா?” என்று கேட்டாள். ஏனென்றால் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு சண்டையைத் தொடங்கி ஒரு மாதமும் ஆகவில்லை.
“ஓமாம். கடலில்கூட அடிக்கக் கூடாதெண்ட நிபந்தனையோட ஓம் எண்டிருக்கிறாவாம்.”
நிலாமதிக்கு நம்பிக்கை இல்லை. “சிங்களத்தியை நம்ப முடியாது.” அவளையும் அறியாமல் வார்த்தைகள் வெளியேறின. அதற்குப் பிறகுதான் அவந்தியின் நினைவு வந்திருக்க வேண்டும். ‘ஸ்..’ என்று நாக்கைக் கடித்தாள். அவந்திக்கு முகம் ‘குப்’ என்று கறுத்துப் போனது. வைத்திருந்த உணவுப் பொட்டலத்தை ஒரே வீச்சில் தள்ளிவிட்டாள். “எனக்குப் பசிக்கல. ஒரு சாப்பாட்ட வீணாக்காமல் நீ திருப்பிக் கொண்டு போ.”
“நான் உன்னைச் சொல்லேல்ல.. சந்திரிக்காவைத்தான்..” நிலாமதி முடிக்கவில்லை, அவந்தி கத்தினாள். “சிங்களத்தியோட யாரும் இங்க கதைக்கத் தேவை இல்லை.” நிலாமதிக்கும் கோபம் வந்துவிட்டது. “எல்லாரும் எப்பவும் உன்னைப் பற்றி மட்டும்தான் கதைப்பினம் எண்டு நீ நினைக்கக் கூடாது.” என்றாள்.
சாப்பாடு கொண்டுவந்தவள் இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தாள். நிலாமதி அவளிடம் ‘வைச்சிட்டுப் போ’ என்று கண்களால் சைகை செய்தாள். அவள் போனபிறகு “சிங்களத்தியை நம்பேலாது எண்டது பிழைதான். வேணுமெண்டால் அக்காட்டைச் சொல்லி பனிஸ்ட்மென்ட் வாங்கித் தா. இப்ப சாப்பிடு.” என்று கெஞ்சத் தொடங்கினாள். நேரம் பன்னிரண்டு. அவந்தி அசையவே இல்லை.
இரண்டு சாப்பாட்டுப் பொட்டலங்களையும் கைகளில் ஏந்தி அவந்தியின் முன்னால் மன்றாடுவதைப்போல முழந்தாளில் நின்றாள் நிலாந்தி. “நங்கி.. கொஞ்சங் இரக்கம் காட்டுறது.” என்றாள். “சாப்பிட வந்தால் நான் மாம்பழம் பிடுங்கித் தருவேன்.” நாக்கை வெளித்தள்ளி கண்களைச் செருகி செத்துப் போவதைப்போல அபிநயம் செய்தாள். அவந்தி திரும்பியும் பார்க்கவில்லை.
“நான் வேணுமெண்டால் சிங்களத் தலைமைகளை ஏன் நம்பக் கூடாதெண்டு விளங்கப்படுத்தவா? சுதந்திரத்திற்குப் பிறகு காலாகாலமாக வந்த தலைமைகள் எல்லாம் தமிழரை ஏமாற்றித்தான்..”
அவந்தி வெடித்துச் சிரிக்கத் தொடங்கினாள். ‘ஐயோ நிறுத்து’ என்பதைப்போல கையெடுத்துக் கும்பிட்டாள். மறுபடியும் காவலரணுக்குள் சிரிப்பலைகள்.
சாப்பிட்ட பிறகு சற்று நேரம் ஆறியிருந்தார்கள். “இந்தக் கிழிஞ்ச ரவுசரை இப்பவே தைப்பம்.” என்று ஆயத்தமானாள் நிலாமதி. “சந்திரிக்காவின்ர புண்ணியத்தில அதையாவது செய்வம்.”
அவந்தியின் கழுத்தில் சால்வைபோல கிடந்த கைலியை வாங்கி கால்களை நுழைத்து இடுப்பில் கட்டினாள். சீருடைக் காற்சட்டையை கழற்றினாள். பச்சை, கறுப்புக் கோடுகள் மழையிலும் வெயிலிலும் வெளிறிப் போய்விட்டன. நிறைய இடங்களில் தேய்ந்து நூல்படை தெரிந்தது. முழங்கால் கிழியலைத் தைத்தால் ஐந்தாறு மாதங்களுக்குத் தாங்கும். நிலாமதி நூற்கட்டையை எடுத்தாள். அதிலேயே ஊசியும் செருகியிருந்தது. நூலின் முனையை விரலிடுக்கில் வைத்துக்கொண்டு ஊசிக்குள் நுழைக்கப் பார்த்தாள். கை அசைந்தது. கண் தடுமாறிற்று. இரண்டு, மூன்று முறை முயற்சித்தும் பயனில்லை. சலித்துக்கொண்டே அவந்தியிடம் நீட்டினாள். “ஒருக்கா கோர்த்துத் தாடி.” அவந்தி அதை வாங்கி நூலை எச்சிலில் தொட்டாள். இமைகளை விரித்து ஊசியில் பார்வையைக் குவித்தாள். அவளுக்கும் கை நடுங்குவதைப்போலதான் தோன்றியது. ஓங்கி உதறினாள். அந்த நொடியில் நிலம் பொலபொலவென்று நடுங்கிக் கொட்டுப்பட்டது. காதுக்குள் பேரிரைச்சல். கண்ணைத் திறந்தால் புகை மண்டலம். மாமரங்கள் முறிந்து விழுகிற சத்தம். கந்தக நெடி. திரும்பவும் ‘படீர்’ என்ற சத்தம். ‘ஷெல் அடிக்கிறான்.’ அவந்தி காதைப் பொத்திக்கொண்டு நிலத்தோடு குனிந்தாள். இரண்டாவது ஷெல்லின் துண்டுகள்தான் பட்டிருக்க வேண்டும், நிலாமதி ஒரு துள்ளலோடு அவந்தியில் சாய்ந்தாள். அவந்தி நிமிர்ந்தபோது அவளுடைய தொண்டை ஏறி இறங்கித் துடித்துக் கொண்டிருந்தது. இழுத்து மடியில் கிடத்தி “நிலாமதி.. நிலாமதி..” என்று கத்தினாள். கண்களில் அப்போதுதான் கடைசி அசைவு. பிறகு நிலைகுத்தியது. அள்ளித் தின்றதைப்போல வாயெல்லாம் மண். கழுத்தில்தான் காயம், அறுத்துவிட்டதைப்போல. கொளகொளவென்று ரத்தம் பாய்ந்தது. ஆவென்று திறந்திருந்த வாயிலிருந்து ‘க்’ என்ற கேவல் ஒலி வெளியேறிற்று.
அவந்தி விழுந்து புரண்டு அழுதாள். அந்தக் கணமே அவளும் செத்துப் போய்விட வேண்டும்போலத் தோன்றியது. சாவுதான் கழுத்திலேயே தொங்குகிறதே. சயனைட் குப்பியைப் பற்றினாள். ‘நிலாமதி இதுக்கு ஒத்துக்கொள்வாளா?’ பயிற்சிக் காலத்தில் நடு வெயிலில் அவந்தி துவள்கிறபோது முதுகைத் தட்டி “இதுக்கெல்லாம் சோர்ந்து போகலாமா? நீ யார் எண்டு காட்ட வேண்டாமா?” என்று சொல்கிறவள் அவள், நிச்சயமாக இந்தச் சாவை ஏற்றுக்கொள்ள மாட்டாள். ஆனால் செத்துவிட வேண்டும். முதுகில் தட்டி ‘அவந்தி எண்டால் சும்மாவா?’ என்று நிலாந்தி பாராட்டுகிற மாதிரிச் சாக வேண்டும்.
அவந்தி, ஒரு கரும்புலி ஆவதென்று அப்போதே தீர்மானித்துவிட்டாள். வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது ‘அண்ணைக்குக்’ கடிதங்களை எழுதினாள். கடற்புலிகளின் மகளிரணித் தளபதி பொபி அக்காவின் முகாம் வாசலிலேயே தவம் கிடந்தாள். “உனக்கு நீந்தத் தெரியுமாடி?” என்று பொபி அக்கா கேட்டபோது “இல்லைத்தான். ஆனா நான் இங்க வரும்போது எனக்கு துவக்குச் சுடவும் தெரியாதுதானே..” என்றாள்.
அவந்தி ஒரு கடற்கரும்புலி ஆனாள்.
0
94 ம் ஆண்டு, ‘சாகரவர்த்தனா’ என்ற கப்பலை கடலில் வைத்து பெண் போராளிகள் மூழ்கடித்தார்கள். கப்டன் அஜித் போயகொட கைது செய்யப்பட்டார். அவரை கொடிகாமத்தில் சிறை வைத்திருந்தார்கள். தொடக்க விசாரணைகளை தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பதற்காக ஒருநாள் அவந்தியை அழைத்துப் போனார்கள். அஜித் போயகொடவிற்குச் சாந்தசொரூபமான தோற்றம். அவந்திக்கு அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, கூட வந்த கஜானியும் யாழினியும்தான் “என்னடி.. சிங்களவன் இப்பிடி மிருதுவா இருக்கிறானே..” என்று அதிசயமாகப் பார்த்தார்கள்.
போயகொட கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கைலியும் சேர்ட்டும் அணிந்திருந்தார். வெண் தாடி. இலங்கைக் கடற்படையிடம் உள்ள பீரங்கிக் கப்பல்கள், அவற்றின் வலு என்று பொதுவான கேள்விகளைத்தான் கேட்டார்கள். அவந்தி சிங்களத்தில் மொழிபெயர்த்தாள். போயகொட ஒரு கணம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். புலி வரிச் சீருடையுடனும், மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலுடனும் ஒருத்தி அவரோடு அசல் சிங்களத்தில் பேசிக்கொண்டிருக்கிறாள். அவளை உற்றுக் கேட்டவர், கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தார். “மகளே.. இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நான் நம்பத்தான் வேண்டுமா?”
போயகொட சொன்ன பல தகவல்களை அவந்தியால் சிங்களத்திலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் துருவித் துருவி விளக்கம் கேட்க ஒரு கட்டத்தில் அவர் சலித்துக்கொண்டு “இதெல்லாவற்றையும் நீ புரிந்துகொள்ள வேண்டுமென்றால் உனக்குக் கடலைத் தெரிந்திருக்க வேண்டும் மகளே.” என்றார்.
அஜத் போயகொட அப்பிடிச் சொல்லிய இரண்டாவது வருடத்திலேயே அவந்தி கடலைக் கரைத்துக் குடித்துவிட்டாள். ஆரம்பப் பயிற்சிகள் முல்லைத்தீவு, வட்டுவாகல் கடலில் நடந்தன. இரவு பகல் பாராத பயிற்சி. முதல் நாள் தப்புத் தண்ணீருக்குள் இறக்கிவிட்டபோது காலுக்கு அடியில் சுறாக்களும் முதலைகளும் வந்துவிடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்தது. உண்மையில் நீந்துவது என்பது மூழ்கிச் செத்துவிடுவேன் என்ற பயத்தை இல்லாமல் செய்வதுதான். அவந்திக்கு அந்தப் பயம் அடுத்தடுத்த மாதங்களிலேயே போயிற்று. அவளால் பத்து நோட்டிகல் மைல் தூரத்தை அநாயாசமாக நீந்திக் கடக்க முடியும். கடல் மூர்க்கமாக இருக்கிறபோது களத்திலே வாள் வீசுவதைப்போல நீந்த வேண்டும். அது அமைதியாக இருக்கிறபோது பாந்தமாக விசிறுவதைப்போல நீந்த வேண்டும்.
ஒருமுறை ஆண் பெண் போராளிகளுக்கிடையில் நீச்சல் போட்டியொன்று நடந்தது. ஆண்கள் ஐந்து மைல் தூரத்திற்கு நீந்த வேண்டும். பெண்களுக்கு மூன்று மைல்போதும் என்றபோது பொபி அக்கா கொதித்து எழுந்தாள். “ஆணும் பெண்ணும் சமம் எண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஐந்து மைல்தான். இல்லையெண்டால் பிள்ளைகளைக் கடலுக்குள்ளே இறக்க மாட்டேன்.” என்று சூசை அண்ணனுடன் சண்டை பிடித்தாள். அவர் ‘சரி’ என்ற பிறகுதான் போட்டி ஆரம்பித்தது. அவந்திக்கு இரண்டாம் பரிசு.
ஒருநாள் வானம் சிவந்து போயிருந்த பின்னேரப் பொழுது. முல்லைத்தீவுக் கடலில் எங்கோ தூரத்தில் நங்கூரம் தரித்து நிற்கின்ற புலிகளுடைய கப்பலிலிருந்து ஆயுதங்களை இறக்கி எடுத்து வர வேண்டியிருந்தது. அந்தப் பணியில் ஈடுபட்ட விசைப்படகுகளின் பாதுகாப்பிற்காக அவந்தியின் அணியையும் அழைத்திருந்தார்கள். பாதையின் இருபுறமும் சரமாரியான ரோந்து. திருகோணமலையிலிருந்து கடற்படை டோராப் படகுகள் புறப்பட்டுவரக் கூடும். அவற்றை எதிர்பார்த்து புல்மோட்டையில் கடற்பரப்பில் வெடிமருந்துப் படகுகள் காத்திருந்தன. திருகோணமலையை நோக்கியிருந்த புலிகளுடைய ராடரில் ஓர் அசைவு கூட இல்லை. அமைதி.
அவந்தி அடிவானத்தைப் பார்த்தாள். ஒரு சிவத்த நாடா அடிவானக் கடலில் மிதப்பதைப்போன்ற செவ்வெளிச்சம். அலைகள் மூர்க்கமாக இருந்தன. படகு துள்ளித் துள்ளி விழுந்தது. அவளோடு இன்னும் இரண்டு பெண் போராளிகள் உடனிருந்தார்கள். படகோட்டிய அண்ணா தெப்பலாக நனைந்து போயிருந்தான். கடற்காற்று முகத்தில் அறைந்தது. கொஞ்சம் ஏமாற்றம்தான். சண்டை எதுவும் நடக்கவில்லை. பரவாயில்லை. ஆயுதங்கள்தான் முக்கியம்.
திடீரென்று ‘வோக்கி’ இரைந்தது. அதைக் கையாண்ட தோழி ”ஓமோம்.. சொல்லுங்கோ.. ஓமோம் சொல்லுங்கோ..” என்றாள். இரைச்சலில் எதிர்முனைக் குரலைக் கேட்கவில்லை. அவள் வோக்கியை அணைத்துவிட்டு “ஆயுதக் கப்பலை இந்தியன் நேவி அடிக்குதாம். உடன வரட்டாம்” என்று கத்தினாள். அவந்திக்குத் திடீரென்று ஒரு கிளர்ச்சி. படகிலேயே பொருத்தப்பட்டிருந்த கலிபர் – ஐம்பது துப்பாக்கியை ஒருமுறை கட்டியணைத்தாள். மூச்சை இழுத்து உப்பு வாசத்தை நிரப்பிக்கொண்டாள். சிங்களத்தியாகப் பிறந்து புலிகளில் சேர்ந்து இந்தியக் கடற்படையோடு முதல் சண்டை என்று தோன்றவும் ஒரு புன்னகை சிந்தியது.
படகோட்டி அண்ணா வெட்டித் திருப்பினான். கடல் சண்டை மற்றைய சண்டைகள் மாதிரி இல்லை. இங்கே பதுங்கு அகழிகள் கிடையாது. மண் மூட்டை அணைகள் கிடையாது. ஒளிந்திருந்து தாக்க முடியாது. நேருக்கு நேரான சண்டை. படகு காற்றையும் கடலையும் கிழித்தது. அதன் கூர் மூக்கு கடலை விட்டு எழுந்து நின்றது. வோக்கியில் உத்தரவுகள் வந்துகொண்டே இருந்தன. “அவங்கட ஆமிக்கு மூக்கு உடைஞ்ச காயமே இன்னும் ஆறேல்லை. இப்ப நேவிக்கும் மூஞ்சை உடையப் போகுது.” என்றான் படகோட்டிய அண்ணா. என்ன நினைத்தானோ.. திடீரென்று “வேசை மக்கள்.. நல்லா வாங்கிக் கட்டப் போறாங்கள்.” என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. அவனே திடுக்கிட்டிருக்க வேண்டும், தலையில் ஐந்தாறு முறை அடித்துக்கொண்டான். “ஐயோ.. தங்கச்சியவை.. வாய் தவறி வந்திட்டுது. மன்னிச்சுக் கொள்ளுங்கோ..” அவந்தி அறிந்த முதல் தமிழ்ச் சொல்! ஏனோ மனம் வெறுமையை உணர்ந்தது.
இதற்கிடையில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட இலங்கைக் கடற்படையின் நீருந்து விசைப்படகுகள் புலிகளுடைய பாதுக்காப்பு ரோந்தை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட்டன. அங்கேயே சண்டை ஆரம்பமாகிவிட்டது. இருட்டுக்குச் சூடு வைப்பதைப்போல இரு புறமும் நெருப்புப் பொறிகள். கடல் எது? இருள் எது? என்று தெரியவில்லை. எங்கோ தூரத்தில் ஆயுதக்கப்பல். அது தப்பித்துப் போக வேண்டும். அதிலிருந்து இறக்கிய ஆயுதங்களுடன் ரோந்து வேலிக்குள் சிறிய ரக விசைப் படகுகள். அவற்றை பத்திரமாகக் கரைக்குச் சேர்க்க வேண்டும். அதுதான் முழு வெற்றி. படகோட்டி அண்ணா அநாயாசமாக ஆங்காங்கே வெட்டித் திருப்பியும் அரை வட்டத்தில் வளைத்துச் சுற்றியும் படகை ஓட்டினான். அவந்தி கலிபர் – ஐம்பதை முழக்கினாள். ‘எவனும் கிட்ட வரக்கூடாது.’ மறுபடியும் வோக்கியின் இரைச்சல். தோழி “ஐயோ..” என்று கத்தினாள். ஆயுதக் கப்பல் மூழ்கிவிட்டதாம். அவந்திக்குத் தாங்க முடியவில்லை. முதல் சண்டையே தோற்ற சண்டை ஆகிவிட்டதா? ஆயுதங்களை ஏற்றிய இரண்டு படகுகளையும் காப்பாற்றிக்கொண்டு கரைக்குப் பின்வாங்குமாறு உத்தரவு. அது சூசை அண்ணனுடைய குரலாகத்தான் இருக்க வேண்டும்.
படகைத் திருப்பினார்கள். ஆயுதப் படகுகளைச் சூழவும் வேலிபோல அணிவகுப்பு. சண்டை பிடித்துக்கொண்டே தப்பியும் ஓட வேண்டும். கடற்படையின் நீரூந்துகள் விடாமல் துரத்தின. எதிரி தப்பிச் செல்வதற்கு எப்போதுமே ஒரு வழியை விட்டு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்குச் சாகும் வரைக்கும் சண்டை பிடிப்போம் என்ற ஓர்மம் உண்டாகிவிடும். அவந்திக்கு அப்படித்தான் இருந்தது, ஆனால் இரு படகுகளிலும் கோடிக் கணக்கில் பெறுமதியான ஆயுதங்கள். தப்பித்துத்தான் ஓட வேண்டும்.
கரையிலிருந்து மூன்று மைல் தொலைவும் இருந்திருக்காது. திடீரென்று இரண்டு ஆயுதப் படகுகளும் வெடித்துச் சிதறின. பேரொலி. இரு செஞ்சூரியன்கள் கடலில் தொம் என்று விழுந்ததைப்போல தீப் பிளம்பு மூண்டது. தீயின் ஒளியில் இரத்தம் ஊறிய உடலாகக் கடல். அவந்தி கதறிக் கதறி அழுதாள். கையாலாகாத்தனம். சோர்ந்து போய் உட்கார்ந்தாள்.
ஆயுதக் கப்பல் மூழ்கிய விவகாரத்தை புலிகள் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. வெடித்துச் சிதறிய படகுகளில் இருந்த நான்கு போராளிகளையும் தவறுதலான படகு விபத்தில் வீரச்சாவு என்றுதான் அடையாளப்படுத்தினார்கள். அது அவமானமான சாவு என்று அவந்திக்குத் தோன்றியது. அப்படி நான் சாகக் கூடாது. கரையில் எல்லோருக்கும் கையசைத்து ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட வேண்டும். அதற்குச் சற்று முன்பாகத்தான் கடற்புலிகள் கப்பலை வழிமறித்திருப்பார்கள். அவர்களுடைய குருவிப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று பாம்பு தலை விரிப்பதைப்போல பிரிந்து கப்பலை முற்றுகை இட்டிருக்கும். “அடியுங்கடா..” என்று உத்தரவு வரும். கலிபரும், ஒலிகன்னும் ஒன்றாக முழங்க கப்பல் திகைத்து நிற்கும். நான் எங்கோ ஓரிடத்தில் இரும்புத் தகடு மிதப்பதைப்போன்ற வெடிமருந்துப் படகில் கட்டளைக்காக காத்திருப்பேன். வோக்கி இரையும். ‘போய் வாருங்கள்.’ நீரைக் கிழிக்கத் தொடங்குவேன். ‘கெட்டிக்காரி.” என்று நிலாமதி என் முதுகைத் தட்டுவாள். அணியம் கப்பலின் பின் பக்கத்தைத் தொட்ட கணத்தில் வானத்திலிருந்து நிலாமதி என் கைகளைப் பிடித்து மேலே தூக்குவாள். நான் முகில்களில் காலை ஊன்றி அவளிடம் போவேன்.
அந்த நாளுக்காக அவந்தி நீண்ட காலமாகக் காத்திருந்தாள். கடைசிச் சந்தர்ப்பம் புல்மோட்டைக் கடலில் வாய்த்தது.
திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் முகாமில் இருநூறு போராளிகளுக்கு கொலரா நோய் தொற்றியிருப்பதாகத் தகவல் வந்தது. அவர்கள் அத்தனை பேரையும் தனிமைப்படுத்தி வன்னிக்கு அழைத்து வரவேண்டும். காடுகளுக்கு ஊடாக நடந்தே வருகிற வழியைப் பயன்படுத்த முடியாது. கடல்தான் ஒரேயொரு மார்க்கம். வெறும் மூன்றே நாட்களில் நோய்த்தடுப்பு ஆடை அணிந்த இருபது கடற்புலிப் படகோட்டிகளும், பத்துக் கரும்புலிகளும் தயாரானர்கள். அவந்தி, செவ்வானம் அக்காவின் அணியில் பத்தாவது கரும்புலி.
நள்ளிரவு நேரம். முல்லைத்தீவுக்கு அருகே சாளைக் கடற்கரையில் புறப்பட்ட இருபது படகுகளும் திருகோணமலைக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தன. அவந்தி இன்னும் இரண்டு போராளிகளோடு சாளையிலேயே தங்கியிருந்தாள். இரண்டாவது நாள் கட்டைப்பறிச்சானிலிருந்து கொலரா தொற்றிய போராளிகளை ஏற்றிக்கொண்டு திரும்புவதற்கு ஐந்தாறு மணி நேரம் இருக்கத்தக்கதாக அவளைக் கடலில் இறங்குமாறு தகவல் வந்தது. செவ்வானம் அக்காவின் குரல்.. “அடியே.. கவனமாப் போட்டு வா..” என்றபோது அவந்தி புன்னகைத்தாள். “சரியக்கா..” என்றாள். படகு புறப்பட்டது.
அன்றைக்கு முகில்கள் அற்ற வானம். நிறைய நட்சத்திரங்கள். நாற்புறமும் நீர் எல்லையற்று விரிந்தது. கடலைக் கிழிக்கின்ற இயந்திரத்தின் இரைச்சல், தொப் தொப் என்று அலை படகில் உதையும் சத்தம், முகத்தில் அறைகின்ற காற்று.. இவற்றை எல்லாம் தாண்டியும் ஏதோ ஒரு பேரமைதி, பூமி உருவாகிய முதல் நாள்போல. அந்தப் பேயுலகின் நீர்வெளியில் தனித்து நிற்கிறபோது ‘நான்’ என்பது ஒன்றுமே இல்லாததைப்போல அவந்திக்குத் தோன்றிற்று. நான் யார்? நானொரு மகள்.. நானொரு பேத்தி.. வேலைக்காரக் குழந்தை.. அனாதைச் சிறுமி.. சிங்களத்தி.. புலி.. கறுத்தக் கொழும்பி.. நிலாமதியின் உயிர்த் தோழி.. கடற்புலி.. கரும்புலி.. இன்னும் சொற்ப நேரத்தில் நான் என்பது ‘ஒன்றுமே இல்லாதது.’
திருகோணமலைத் துறைமுகத்திற்கு நேர் மேலே கடல் சண்டை ஆரம்பித்தது. சாகரவர்த்தனாவை மூழ்கடித்தபிறகு ‘பராக்கிரமபாகு’ என்ற கப்பலைத்தான் இலங்கைக் கடற்படை பெரும் சண்டைகளுக்குப் பயன்படுத்தியது. அன்றைக்கும் அதுதான் வந்தது. கடலுக்கு நடுவே கோட்டை மாதிரியான தோற்றம். அது வழியை மறிக்க டோராப் படகுகள் புலிகளின் படகுகளைத் தாக்கத் தொடங்கின. புலிகள் ஆக்ரோஷமாகப் போரிட்டார்கள். உக்கிரமான பதிலடி. கொலராப் பெடியங்களில் ஒரு சின்ன சிராய்ப்புக் காயம் கூடப் படக்கூடாது என்பதில் அவ்வளவு உறுதி. அவர்களைச் சுற்றி படகு அணிகள் பெட்டிபோல காவல். இப்படியேதான் முல்லைத்தீவு வரை போக வேண்டும். காவலை உடைத்துக்கொண்டு நுழைய முற்படும் டோராக்களை கரும்புலிகள் இலக்கு வைத்தார்கள். ஏற்கனவே இரண்டு டோராக்கள் வெடித்துச் சிதறிவிட்டன. அவந்தி செவ்வானம் அக்காவின் குரலுக்காக காத்திருந்தாள். அழைப்பு வந்தது. “பெருசுதான் உனக்கு.. சரியோ.. பெருசுதான். கவனம்.” பராக்கிரமபாகுவைத்தான் சொல்கிறாள். அவந்தி ‘கூய்..’ என்று கத்தாத குறை. எதையோ சாதித்துவிட்ட புளகாங்கிதத்தில் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தாள். “பாத்தியா.. பராக்கிரமபாகுதான் கூட்டிப்போக வந்திருக்கிறான்.” என்று நிலாமதிக்கு சொல்ல வேண்டும்.
நூற்றுப் பன்னிரெண்டு மீற்றர் நீளமான பராக்கிரமபாகு முப்பத்தியிரண்டு கடல் மைல் வேகத்தில் விரையக் கூடியது. 79 ரக இரட்டை 100 மில்லி மீட்டர் கலிபர் துப்பாக்கிகள், 76 ரக இரட்டை 37 மில்லிமீட்டர் கலிபர் துப்பாக்கிகள் என்று நாற்புறமும் சூட்டு வலு. அன்றைக்கு அவற்றில் ஒன்றை இயக்கிய கடற்படை வீரனுக்கு இருட்டிற்குள்ளும் ஊடுருவும் கண்கள் இருந்திருக்க வேண்டும். குளத்திற்குள் கல்லை வீசி எறிந்தால் அது நீர்ப் பரப்பில் முட்டி முட்டி எழுந்து பறப்பதைப்போல சீறி வந்த அவந்தியின் படகை அவன் எப்பிடிக் கண்டானோ தெரியாது, பார்வையாலேயே பின்தொடர்ந்தான். அவனுக்கும் அவளுக்கும் இடையில் சாவு யார் பக்கம் போவது என்ற குழப்பத்தில் இருபது செக்கன்கள் காத்திருந்தபோது கலிபர் துப்பாக்கியை இயக்கினான். குண்டுகள் அவந்தியின் வெடிமருந்துப் படகின் முனையைத் துளைத்தன. பேரோசையின் அதிர்வு அவளைத் தூக்கி எறிந்தது. தண்ணீரில் விழுந்தாள். முதற்சில நொடிகள்தான் நினைவில் இருந்தன. ஒருவேளை உயிர் பிரிகிறபோது அது வான வெளியில் சிறகடித்துப் பறப்பது இல்லையோ? உப்புத் திரவத்திற்குள் உருண்டு புரண்டு கவிழ்ந்து அடங்கிப் போகுமோ? கடற்புலிப் போராளியொருவன் நீரில் பாய்ந்து அவளுடைய தலைமுடியைப் பற்றி இழுத்துத் தூக்கிப் படகில் போட்டபோது அவளுக்கு நினைவு முற்றாகத் தப்பியிருந்தது.
அன்றைக்கு பராக்கிரமபாகு தப்பி ஓடிவிட்டது. மூன்று டோராக்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. கொலரா தொற்றிய போராளிகள் அத்தனை பேரும் பத்திரமாகத் தரையிறங்கினார்கள். யாருக்கும் ஒரு காயம் கூட இல்லை. அவர்களை அழைத்துவரச் சென்றவர்களில்தான் ஏழு பேர், கடற்புலிகளும் கரும்புலிகளுமாக கடலோடு கரைந்து போயிருந்தார்கள்.
அவந்திக்கு முதுகுத் தண்டு செயற்படாமல் போய்விட்டது. ஆறு மாதங்களாக வைத்தியசாலையிலேயே கிடந்துதான் குணமாகினாள். ஆனால் பயிற்சியோ சண்டையோ இனிமேல் இயலாது. வாழ்க்கையே வெறுத்துப் போனதுபோல ஆகிவிட்டாள். கனவுகளில் வேறு நிலாமதி அடிக்கடி வந்து ‘நீ இன்னும் புறப்படவில்லையா?’ என்று கேட்டாள். கடைசி முயற்சியாக அவந்தி இன்னொரு கடிதத்தை எழுதி ‘அண்ணைக்கு’ அனுப்பினாள். மூன்று மாதங்களில் பதில் வந்தது.
ஒரு மழைக்காலத்தில் அவந்தியும் வள்ளியாச்சி என்ற பெண்ணும் மகளும் தாயுமாக ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவிற்குப் போனார்கள். அங்கே முகாமில் சிலகாலம். அவந்தி மட்டும் அங்கிருந்து வெளியேறி ஒரு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். அது சிங்கள நகரம். அங்குதான் ஒறுகொடவத்த மாத்தையாவும் அவருடைய நோனாவும் அறிமுகமானார்கள். அவர்கள்தான் அவளுடைய பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை எல்லாவற்றையும் பெற்றுக்கொடுத்தார்கள். மாத்தையா அவருடைய முதிய தாயைக் கவனித்துக் கொள்வதற்காக அவந்தியை கொழும்பிற்கு அழைத்துப் போனார்.
கருத்துகள்